mem2-9

மறந்துபோ என் மனமே(2) – 9:

அன்றிரவு அவளுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது “சுஷி. ஐ ஹவ் பிளான்ஸ் ஃபோர் திஸ் வீகென்ட் (I have plans for this weekend). நாளைக்கி மார்னிங் கிளம்பறோம்” அவன் சொல்ல “என்ன வீகென்ட் ட்ரிப் ஆஹ்…? எங்க எங்க?” ஆவலுடன் கேட்டாள்.

“அது சர்ப்ரைஸ். ஆனா am sure… இத நீ கண்டிப்பா என்ஜோய் பண்ணுவ. புது அனுபவமா இருக்கும்” என கண்சிமிட்டினான்.

“ஐயோ ஏன்டா சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்னு சொல்லி டென்ஷன் ஏத்துற. பக்கத்துலயா? தூரமாவா?”

“ரொம்ப தூரமும் இல்ல ரொம்ப பக்கமும் இல்ல” என்றான் சிரித்துக்கொண்டு.

“உன்ன….” என்று அடிக்கச் சென்றவள் “எவ்ளோ நாள் ஆச்சு நான் ட்ரிப் போய். எங்கயாச்சும் போறது நல்லது தான். இங்கயே இருந்தா செம்ம போர். சரி சீக்கிரம் தூங்கிடலாம் அப்போ… நீயும் தூங்கு” என்றபோதுதான் புரிந்தது, அவன் படுக்க மற்றொரு அறையில் படுக்கைக் கூட இல்லை என்று.

“ஐயோ நான் உனக்கு பெட் ஃபிரேமும் (bed frame) பெட்டும் வாங்கணும்னு நெனச்சேன். டென்னிஸ் கிளப் போனதுல மறந்துட்டேன்”

“அது ஒகே. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. முடிச்சிட்டு சோபாலயே படுத்துகிறேன்” என்றான்.

அதற்கு சரி என்றவள் அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் உறங்கிவிட்டாள். அன்றைய தினம் வேர்க்க விறுவிறுக்க ஆடியதால் ஏற்பட்ட களைப்பு.

சோபாவில் சாய்ந்த க்ரிஷ்… இன்றைக்கு அவள் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிற்குக் குறைவாக எடுத்துக்கொண்டதை நினைத்து சிறிது நிம்மதியானான்.

பின்பு அடுத்தநாள் எடுத்துக்கொள்ளவேண்டிய சில முக்கியமான பொருட்களை எடுத்துவைத்துவிட்டு சோபாவிலேயே படுத்துகொண்டான்.

அதிகாலையில் எழுந்து வெளியே வந்தவள் அவன் சோபா பத்தாமல் உடலைக் குறிக்குக்கொண்டு படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு…

‘ட்ரிப் போய்ட்டு வந்தவுடனே முதல் வேல… போய் பெட் வாங்கணும்’ என நினைத்துக்கொண்டு கீழே விழுந்திருந்த கம்ஃபோர்டெர் எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டுவிட்டு காலை அலுவல்களைச் செய்யத் தயாரானாள்.

சிறிது நேரம் கழித்து, அவன் இன்னும் எழவில்லை என்றவுடன் “டேய் க்ரிஷ் எந்திரி. ட்ரிப் அது இதுன்னு சொல்லிட்டு நல்லா தூங்கிட்டு இருக்க? எந்திரி” என எழுப்ப… எழ விருப்பமில்லால் எழுந்தான்.

“அதென்ன பேக் பண்ணி வெச்சுருக்க க்ரிஷ்? மசாலா ஐடெம்ஸ்’லாம் எடுத்து வெச்சுருக்க?”

அவன் தூக்கக் கலக்கத்தில் “அங்க சமைக்கணும்ல அதுக்குத் தான்” என்றான் கொட்டாவி விட்டுக்கொண்டு.

“என்னது அங்கேயும் போய் சமைக்கணுமா?” வருத்தத்துடன் அவள் கேட்கும்போது ஏதோ பொறித்தட்ட… “டேய் ட்ரெக்கிங் இல்லை கேம்பிங் பிளானா? என்னால நேத்து விளையாண்டதே செம்ம கால் வலி. நடக்கலாம் முடியாது” என்றாள் முடியாது என்பதுபோல் தலையாட்டி.

“அதெல்லாம் இல்ல. இது வேற. சரி நான் போய் ரெடி ஆகிட்டு வரேன்” சொல்லிவிட்டு சென்றவன் சிறிது நேரத்தில் தயாராகிவந்தான். இருவரும் புறப்பட்டனர்.

“சொல்லு க்ரிஷ் எங்க போறோம்னு???” மறுபடியும் நச்சரிக்க ஆரம்பித்தாள்.

“இன்னும் ஒரு மணிநேரம். உனக்கு தெரிய போகுது” என்றான் சளைக்காமல்.

“அப்போ பக்கத்துல தான் போறோம். ரொம்ப எக்ஸைட்டிங்’ஆஹ் இருக்கு க்ரிஷ். எவ்ளோ நாள் கழிச்சு ஒரு ட்ரிப்.  அதுவும் நம்ம ரெண்டு பேரும்” முகத்தில் மலர்ச்சியுடன் கூறினாள்.

“ஹ்ம்ம். உனக்கு பிடிக்கும்னு நினைக்கறேன். பாப்போம்” என்றான் சிறிய புன்னகையுடன்.

சிறிய இடைவேளைக்குப் பின்னர் “நம்ம லாஸ்ட் ட்ரிப் உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரில க்ரிஷ். ஆனா எனக்கு இன்னும் ஒவ்வொரு நிமிஷமும் ஞாபகம் இருக்கு” என்றவள் சற்று நிறுத்தி…

“ஆமா… நீ ஹார்வர்ட் (Harvard) போனப்புறம் என் ஞாபகம் உனக்கு வரவே இல்லல” அவனைப் பார்த்து சின்ன வருத்தத்துடன் கேட்க… அந்தக் கேள்வியை எதிர்பார்காதவன் சற்று நேரம் அமைதிகாத்தான்.

அவ்வப்போது அவளையும் சாலையையும் பார்த்து கார் ஓட்டிக்கொண்டே…

“ஞாபகம் வராம எப்படி இருக்கும் சுஷி? என்னோட ட்ரீம் காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சாச்சு. அங்க படிக்கிறேன்… ஆனா அத நினச்சு சந்தோஷப்படக்கூட முடியாதளவுக்கு ஃபீல் பண்ணிருக்கேன்… உன்கூடப் பேசாம இருந்ததை நினச்சு” என்றவன் முகம் இறுகியது.

“ஆனா உன் ஞாபகம் வர்றப்பலாம் நமக்குள்ள நடந்த சண்டை ஞாபகம் வரும். அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு… எனக்காக நான் கேட்ட கோர்ஸ் என்ரோல் (enroll) பண்ணிக்குடுத்தாரு. அத ஸ்பாயில் பண்ணக்கூடாதுன்னு அகாடமிக்ஸ்’ல ரொம்ப இன்வால்வ் ஆனேன்”

ஸ்டியரிங் வீலை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு “எனக்குப் பிடிச்ச ஃபுட்பால் ஆடினா உன் ஞாபகம் வரும்ன்னு ஃபுட்பால்’ல விட்டேன். Peoria அடிக்கடி வந்தா உன் ஞாபகம் வரும்ன்னு, என்னோட லீவு’கு நான் Peoria வராம… பாரு, அப்பாவை என்னபார்க்க வரச்சொன்னேன்”

இப்போது அவள் முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள்.

“அப்புறம் நீ… உன் ஸ்டடீஸ்’காக மிச்சிகன் (Michigan) போன. அப்புறம் தான் நான் Peoria வர ஆரம்பிச்சேன். அப்புறம் நீ படிச்சு முடிச்சு திரும்பி வந்த. அதுக்கப்புறம் உனக்கே தெரியும்”

“அத விடு. உனக்கு என் ஞாபகம் வரவே இல்லையா சுஷி ஒரு தடம் கூட?” அதே இறுக்கத்துடன் மனதில் வலியுடன் கேட்டான்.

விரக்தியுடன் புன்னகைத்தாள். பின், “நான் முன்னாடியே சொன்னேன்… உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்ன்னு. உன்னோட இடத்த… நீ இல்லாத இடத்த நிரப்ப… நான் செய்த எல்லாமே தப்பாகிப்போனது தான் மிச்சம்… ராம் உள்பட”

அவளின் எண்ணங்கள் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்த… கண்களில் கண்ணீர் துளிர் விட… ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.

‘அதற்கு மேல் பேசி அவளைக் கஷ்ட்டப்படுத்த வேண்டாம்’ என்று அவன் அமைதியாக இருந்தான்.

இருவரின் இடையில் மௌனமே நிலவியது. பின்னணியில் ஒரு பழைய Whitney Houston பாடல் மட்டும் அதன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தது.

சிறிதுநேரம் கழித்து, அவள் அதே மனநிலையில் இருப்பதைப் பார்த்தவன் கார் ஓடிக்கொண்டே அவள் கையைப் பற்றிக்கொண்டு…

“நம்ம லாஸ்ட் ட்ரிப் நீ மறக்கலன்னு சொன்னன்ல. இந்த ட்ரிப்’பும் நீ மறக்க முடியாத அளவுக்கு இருக்கும்ன்னு நினைக்கறேன்” அவளைப் பார்த்துச் சொன்னவன் காரை நிறுத்தினான்.

அதுவரை ஏதோ நினைவுடன் இருந்தவள்… அவன் பேசியதைக் கேட்டு புன்னகைத்துவிட்டு வெளியே பார்க்க… அவர்கள் வந்த இடத்தைப் பார்த்து கண்கள் விரிந்தது. அசந்து போனாள்… அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

“க்ரிஷ் ஏதோ சிந்தனைல இருந்தேன்… இத எதையுமே பாக்கல. வாவ்…” ஆச்சர்யம் கலந்த வியப்புடன் காரில் இருந்து இறங்கினாள்.

அடர்ந்த மரங்களின் நடுவே ஓர் அழகிய வீடு. வீட்டைச் சுற்றியும் பச்சைப் பசேல் எனச் செடிக் கொடிகள். நடந்து செல்ல சிறிய பாதை… அதன் ஓரத்தில் அளவாக வளர்ந்த செடிகள் அதில் பூக்கள்.

அந்த காலத்து அமெரிக்க பாணியில் கட்டப்பட்டிருந்தது. வீட்டின் முன்புற சுவற்றில் பல வண்ண நிறத்தில் பூசப்பட்டிருந்தது அங்குள்ள வண்ண மலர்களுக்கு ஒற்றுபோகும் விதமாய். வீட்டின் வெளிப்புற சுவரில் அங்கங்கே கொடிகள் படர்ந்து இருந்தது.

“என்னால சுத்தமா நம்ப முடில க்ரிஷ்… இவ்ளோ அழகான இடத்துல இருக்கோம்ன்னு” துள்ளி குதித்துக்கொண்டு அதே அர்ச்சர்யத்துடன் உள்ளே சென்றாள்.

அவளின் முகத்தில் ஆச்சர்யத்தைப் பார்த்து ரசித்தவன், அவள் பின்னே உள்ளே சென்றான் காரில் இருந்து சிலப் பொருட்களை எடுத்துக்கொண்டு.

உள்ளே சென்ற சுஷி வீட்டின் மற்றொரு பக்கக் கண்ணாடிக் கதவைப் பார்க்க… இன்னும் ஆச்சர்யத்தில் திகைத்தாள். கதவைத் திறந்தவுடன், அந்தப் பாதை அழைத்துச்சென்றதோ ஒரு ஏரியின் கரைக்கு.

ஏரியின் கரை அருகே நின்று எதிரே இருந்த ரம்மியமான அழகை ரசித்துக்கொண்டே திரும்பி உள்ளே வந்தாள்.

அங்கே க்ரிஷ் வருவதைப் பார்த்து ஓடிச்சென்று “க்ரிஷ் சூப்பரா இருக்கு… இப்படி ஒரு இடத்தை எப்படி கண்டுபிடிச்ச? என்ன ஒரு லொகேஷன்” என்றவள் கன்னத்தில் வைத்து…

“இதை நான் எதிர்பாக்கவே இல்ல. இந்த மாதிரி ஒரு இடத்துக்கு ட்ரிப் வருவோம்னு” ஆச்சர்யத்துடன் சொல்லிக்கொண்டே மறுபடியும் பின் புறம் ஏரியின் அழகைப் பார்க்கச் சென்றாள்.

“ஹலோ க்ரிஷ். Welcome back to our paradise” ஒரு நடுத்தர வயது புதிய மனிதன் அங்கே வந்து நிற்க “ஹலோ நேத்தன். விக்டர்…” என்று க்ரிஷ் ஆரம்பிக்கும்முன்…

“எஸ், விக்டர் சொல்லிருந்தாரு நீங்க இன்னிக்கி வருவீங்கன்னு. எல்லா ரூம் ஓபன்ல தான் இருக்கு. இது மெயின் டோர் அண்ட் பேக் டோர் கீ. நான் அவுட் ஹவுஸ்’ல தான் இருப்பேன். ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க” என்றவுடன் “Sure” என்றான் க்ரிஷ்.

விக்டர் க்ரிஷின் பழைய பாஸ். க்ரிஷின் தந்தை விக்ரமும் விக்டரும் நண்பர்கள்.

சரியாக சுஷி பின் வழியாக உள்ளுக்குள் வரும்போது… அவளை பார்த்த நேத்தன்… க்ரிஷிடம் திரும்பிப் புன்னகையுடன் “யுவர் கேர்ள் ஃபிரன்ட்?” என கேட்க…

“ஹ்ம்ம். தேங்க்ஸ் நேத்தன். ஏதாச்சும்னா கால் பண்றேன்” சுருக்கமாக முடித்தான் க்ரிஷ்.

அதற்கு சரி என்பது போல் தலையசைத்துவிட்டு… பக்கத்தில் வந்த சுஷியைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றான் நேத்தன்.

“யாரு க்ரிஷ் அது? ஏன் என்னப்பாத்து ஒருமாதிரி சிரிச்சுட்டே போறாரு?”

“ஹி இஸ் நேத்தன். அவர் தான் இந்தக் கெஸ்ட் ஹவுஸ் கேர் டேக்கர் சுஷி”

“ஓ ஒகே. ஆமா இங்க fishing பண்ண முடியுமா?” எனத் திரும்பி அந்த ஏரியைப் பார்த்து அவள் கேட்க… “Why not? fishing, boating, swimming எல்லாம் பண்ணலாம்” என்றான்.

“வாவ், அப்போ நாளைக்கி உனக்கு என்னோட ஸ்பெஷல் ஃபிஷ் ஃபிறை (fish fry)” என்றாள் புருவத்தை ஏற்றி இறக்கி சிரித்துக்கொண்டே.

“நம்ம திரும்ப பத்திரமா ஊருக்கு போகவேண்டாமா?” என அவன் நகைக்க… அவள் அவனை அடிக்கச் சென்றாள்.

அவள் கையைப் பற்றிக்கொண்டு “சரி இங்கயே என்ன சுத்திட்டு. மேல போய் பாக்கலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு மேலே சென்றான்.

மேல ஒரு பெரிய முகப்புடன் மூன்று அறைகள். அந்த முகப்பின் ஒரு பக்கத்தில் பால்கனி இருக்க… முதலில் உள்ளே சென்ற சுஷி “க்ரிஷ்” என்று சத்தமாகக் கூப்பிட அவனும் அங்கே வந்தான்.

அந்த பால்கனியில், இரு இருக்கைகள் மற்றும் ஒரு சிறிய நீச்சல் குளம் அதுவும் அங்கிருந்த மலைகளைப் பார்த்தவண்ணம். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை முழுவதும் பச்சை நிறமாகக் காட்சி அளித்தது.

அங்கு வந்த க்ரிஷ்… அவள் ரசிப்பதைப் பார்த்து புன்னகையுடன் கதவில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

“இங்க தான் இருக்கியா… யாருதுடா இந்த ப்ராபர்ட்டி? இவளோ அழகா இருக்கு” ஆச்சர்யத்துடன் கேட்க… “என்னோட பழைய பாஸ்’து. முன்னாடி New York வந்தப்ப, இங்க ஒரு ட்ரிங்க் பார்ட்டி’கு வந்துருக்கேன்” என்றான்.

“சூப்பரா இருக்கு க்ரிஷ்” அதே ஆச்சர்யத்துடன் கூறினாள்.

“இன்னும் பேஸ்மென்ட்’ல shuttle கோர்ட், கேரம், snooker, Foosball டேபிள்’லாம் இருக்கு. பக்கத்துல ஒரு நேச்சர் பார்க் கூட இருக்கு. சோ போர் அடிக்காது” என்றான் புன்னைகை மாறாமல்.

எதிரில் இருந்த பசுமையைப் பார்த்து ரசித்துக்கொண்டே “அதெல்லாம் எதுக்கு சொல்லு க்ரிஷ்? இங்கயே, இந்த க்ரீனரி’ய பார்த்துட்டு, எதுவும் செய்யாம சும்மாவே உட்கார்ந்துருக்கலாம். அவளோ அழகான இடம் இது” கைகள் இரண்டையும் விரித்துகொண்டு… அவள் மேல் பட்ட சில்லென்ற காற்றை, ஆழ உள்ளிழுத்துக்கொண்டாள்.

அங்கே இருந்த ஒரு சேரில் உட்கார்ந்த க்ரிஷ்… ஸ்விம்மிங் ஃபூல்’லில் இருந்த தண்ணீரை அவள் மேல் தெளித்து… “அப்படிலாம் உன்ன விட முடியாது சுஷி. திங்கள் மதியம் தான் கிளம்பறோம். சோ இந்த ரெண்டு நாள் வெறும் கொண்டாட்டம் தான்” என்றான் சிரித்துக்கொண்டே…