MIRUTHNAIN KAVITHAI IVAL 13

cover page-8a39762f

  மிருதனின் கவிதை இவள் 13

மேகாவின் வேக நடை , அவள் எதிரே கருப்பு நிற காரின் பேனட்டின் மேலே ஏறி அமர்ந்திருந்த அக்னி தீரனை பார்த்த நொடியே சட்டென்று தடைபட்டு , அவளது மென் பாதங்கள் தரையில் வேரூன்ற அசையாமல் விழிவிரித்து நின்றாள் .

வழக்கம் போல கருப்பு நிற ஷர்ட் , கருப்பு நிற டை , கருப்பு நிற ஷூ என அவனை தவிர அனைத்துமே கருப்பாக தான் இருக்க நாடியில் கைகுற்றி ரேபன் குளிர்கண்ணாடி  அணிந்திருந்த தீரனின்   பார்வை மொத்தமும் மேகா மீதே பதிந்திருக்க , அவளுக்குள் தானாக உதறல் எடுத்தது , அவனோ அவளை பார்த்தபடியே பனெட்டில்  இருந்து கீழே குதிக்க , இவளுக்கோ இதயம்  வெளிய வந்து விழுந்துவிடும் அளவுக்கு தாறுமாறாய் அடித்து கொண்டது .

தீரன் அவளை நோக்கி நடந்து வர , மேகாவுக்கு வழமை போல கைகள் தானாக நடுங்க ஆரம்பித்திருக்க , முகத்தில் வியர்வை துளிகள் ஆங்காங்கே துளிர்க்க , மனதில் இனம் புரியாத பயம்   ஆட்கொண்டது .

“இவர் இங்க என்ன பண்ணிட்டு இருக்காரு ? நம்மளை பார்க்க தான் வந்திருக்காரா ? இப்போ நாம நிக்கணுமா? போகணுமா?” என்று முணுமுணுத்துக்கொண்டே திருதிருவென முழித்தாள் .

” ஹாய் வரு ” அவள் முன்னே தன் கைகளை அசைத்து அவள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான் .

“ஹான் ஹாய் ஹாய் ” இதுக்கே அவளுக்கு நா வறண்டது .

” எப்படி இருக்க ?” அடர்ந்த மீசைக்குள் இருந்து லேசாக எட்டிப்பார்த்த  புன்னகையுடன்  கேட்டான் .

” ஹான் நல்லா இருக்கேன் ” அவளை ஆராய்ந்து கொண்டிருக்கும் அவனது பார்வை கண்டு சங்கோஜமாக  தலை தாழ்த்தினாள் .

அதை கண்டு புன்னகைத்த தீரன் தன் ஒற்றை விரலால் அவளது நாடியை  தன்னை நோக்கி நிமிர்த்த தன் விரலை நீட்டியவன், பின்பு என்ன நினைத்தானோ சிரமப்பட்டு  தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு ,

” வரு ” என்றழைத்தான்  .

” ஹான் ” நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள் , ஏனோ ஒரு நொடிக்கு மேல் , அவளுக்குள் ஊடுருவும் அவனது பார்வையை மேகாவால்  பார்க்க முடியவில்லை,  அவனது  பார்வை அவளுக்குள் கிலியை உண்டாக்கியது ,

” வரு ” மீண்டும் அழைத்தான் , வேறு வழியில்லாமல் நிமிர்ந்து பார்த்தாள் !அவனும்  பார்த்தான்! பார்த்து கொண்டே இருந்தவன்  தன் கண்களை  அவளது விழிகளுடன்  கலக்க விட்டு  ,

” யு ஆர் லூக்கிங் ஸோ பியூட்டிஃபுள்  வரு ”  ‘நீ ரொம்ப அழகா இருக்க வரு ‘ ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து , ரசித்து கூறினான் தீரன் ! அதிர்ந்து  விழித்தாள் மேகா ! 

” தேங்க யு ” உதட்டுக்கு வலிக்காமல் கூறினாள் . ஏனோ அவன் அவ்வாறு தன்னை சொல்லியது மேகாக்கு உவப்பாக இல்லை .

” சொல்லு ?” விழிகளால்  அவளை பருகியபடியே கேட்டான் .

” என்ன சொல்லணும்?” புரியாமல் கேட்டாள் . கைகளின் நடுக்கத்தை மறைக்க தன் ஆடையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் மேகா .

”  நீ இன்னும் என் பேரை சொல்லவே இல்லை ” ஏனோ அவள் வாயால் ‘ தீரன் ‘ என  அழைப்பதை கேட்க அவனுக்கு அலாதி இன்பம் . எதையோ சாதித்த உணர்வு வரும் , கர்வத்துடன்  மீசை நுனியை முறுக்கிக்கொள்வான் .

” சாப்டீங்களா தீரன் ?” ஏதோ கேட்கணுமே என கேட்டாள் !குரலில் உயிர்ப்பு இல்லை !மேகாக்கு பயத்தில் பயப்பந்து உருண்டு நெஞ்சை  அடைத்தது .திக்கி திணறி தான் பேசினாள் .

” இல்லை பயங்கரமா  பசிக்குது ” உதட்டை பிதுக்கினான் , தன் இயல்பை தாண்டி அவளிடம் சகஜமாக உரையாட தன்னால் ஆனா முயற்சிகளை செய்தான். 

இந்த முறை  அவனது புன்னகை தவறாமல்  அவளது கண்ணில் பட்டது , பயம் மேலும் அதிகமானது ! அவன் கோபம் கொள்ளவில்லை! கத்தவில்லை ! முறைத்து  பார்க்க வில்லை! மாறாக சிரிக்கிறான் !மென்மையாக  பேசுகிறான் ! இருந்தும் மேகாக்கு  பயம் அதிகம் தான் ஆனது !அவளுக்கு ஏனோ கத்தி  சண்டை இடும்  தீரனை விட , மென்மையாக புன்னகைக்கும் தீரன் மிகவும் ஆபத்தானவனாக  தெரிந்தான் .

” கன்டீன் இருக்கு ” அவள் தயங்கியபடி சொல்லி முடிக்கும் முன்பே ,

” ம்ஹூம் ” மூக்கை சுருக்கி மறுத்தவன் அவளை நோக்கி கை காட்டி ,”  நீயே சமைச்சு தா,உன் வீட்டுக்கு போவோம்  ” என்றான் .

” என்ன ?” அதிர்ந்தே விட்டாள் .

“என்ன வரு ? வா ” உரிமையாக அழைத்தான் . இவளுக்கு தூக்கிவாரி போட்டது . 

இவனை எப்படியாவது  அனுப்ப வேண்டும் என யோசித்தவள்,

” ஹாஸ்பிடல்ல வேலை இருக்கு ” மருத்துவமனையை காரணம் காட்டி சமாளித்தாள் .

”  உன்னை வரியான்னு கேட்கல , வான்னு சொன்னேன் ” பழைய தீரன் எட்டிப்பார்த்தான் . அவனது அடி குரல்  கேட்டு மேகாக்கோ நெஞ்சில் நீர் வற்றி போன உணர்வு . மறுத்து பேசாமல் அவன் காரின் பின் சீட்டிற்கு போவதற்காக , கதவை திறக்க போன  மேகா, அது திறக்காமல் இருக்கவும் அவனிடம்,

” அன்லாக் பண்ணுங்க தீரன் ” என்று  அவன் முகம் பார்த்து  கூறினாள் .

அவனோ  அடக்கப்பட்ட கோபத்துடன் தன் கண்களாலே அவளை முன்னால் வந்து அமரும் படி சைகை  செய்ய , அவளோ அவனது பார்வை மாற்றம் கண்டு  நடுக்கத்துடன்  அவன் அருகில் வந்து அமர்ந்தவள் , வீடு வரும் வரை சிலையென அசையாமல் அமர்ந்திருந்தாள் .

‘இவனை எப்படி சமாளிப்பது ? இவ்வாறு அடிக்கடி சந்திப்பது எல்லாம் தனக்கு பிடிக்கவில்லை , இது சரியில்லை ‘என எவ்வாறு  இவனுக்கு புரியவைப்பது என மனதிற்குள் தீவிரமாக யோசித்தவள் ,

‘ என்ன ஆனாலும் சொல்லி தான் ஆகணும் ‘ என குருட்டு தைரியத்தில் அவன் பக்கம் திரும்பிய  மறுநொடி,  கார் சட்டென்று நிற்க , அவள் அவனை கேள்வியாக பார்க்க,  அவனோ அவளை பார்த்துக்கொண்டே  காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன் முதுகில் சொருகியவன்  ,

“என்ன வரு ?” என்று கேட்க ,அவனது துப்பாக்கியை பார்த்த மறுகணமே மயக்கம் வராத குறையாக அமர்ந்திருந்தவள் , எச்சிலை விழுங்கியபடி,

“ஒன்னும் இல்லை ” என்பதாய் தன் தலையை அசைத்தாள் .

” அப்போ உள்ள போகலாமா வரு” என்று அவன் கூறவும்  தான் அவளுக்கு தன் வீடு  வந்து  வெகு நேரமாவது தெரிய , அவள் ‘ என்ன செய்வது? ‘ என்று நெற்றியை நீவியபடி அமர்ந்திருக்க , அவனோ  வேகமா இறங்கி வந்து அவள் பக்க கதவை திறந்து விட , அவளும் இறங்கினாள் .

############################################

கனகராஜின் அறையில் ,

” ஆர் யு மேட் ரித்து , இன்னும் பிஸ்னஸ் கூட நீ ஒழுங்கா கத்துக்கலை,  அதுக்குள்ள கல்யாணத்துக்கு  என்ன டா அவசரம் ?” தன் சுழற் நாற்காலியில்  அமர்ந்திருந்தபடி சீறினார் கனகராஜ் .

” டாட் அதான் மேகாவோட கண்டிஷன்ஸ் சொன்னேன் தானே , ஐ லவ் ஹெர் பா ப்ளீஸ் ” சின்ன பையன்  போல தன் முன்னே நின்று கொண்டு கெஞ்சும் மகனை பார்க்க பார்க்க அவருக்கு எரிச்சலாக வந்தது .

” அவங்க அப்பா என்ன டா பண்ணிட்டு இருக்கார் “எரிச்சலாக கேட்டார் .

” பேங்க்  மனேஜர் பா , அம்மா ம்யூசிக் டீச்சர் பா , ஒரு தம்பி ஒரு தங்கச்சி காலேஜ் படிக்கிறாங்க,  சொந்த வீடு இருக்கு ,அப்புறம் அவங்க அப்பா ஏதோ சின்னதா பிஸ்னஸ் கூட பண்ணிட்டு இருக்காருன்னு கேள்வி பட்டேன் ” சேகரித்து வைத்த செய்தியை தன் தந்தையிடம் ஒப்பித்தான் ரிதுராஜ் .

” ம்ம் நடுத்தர பிச்சை காரங்கன்னு சொல்லு ” சகிக்க முடியாத வார்த்தைகளை இகழ்ச்சியுடன் கூறினார் . ரிதுராஜ் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. தந்தையை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்கின்ற முனைப்பில்  , அவர் பேசும் வார்த்தைகளை  எல்லாம் தலை கவிழ்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான் .

“மேகா ரொம்ப நல்ல பொண்ணு  பா ” மெதுவாக கூறினான் .

” ரொம்பவே நல்ல பொண்ணு தான் , ஆனா நான் ஒன்னும்  சாரிட்டி ட்ரஸ்ட் நடத்தலை , இந்த ஹாஸ்பிடல்ல உன்னை நம்பி மொத்த சேவிங்க்ஸையும்  இன்வெஸ்ட் பண்ணிருக்கேன் , கன்ஸ்ட்ரக்ஷ்ன்  பிஸ்னஸ் பண்ற கோக்குலதாஸ் பொண்ணை உனக்கு பேசலாம்ன்னு இருந்தேன் ,ஆனா நீ நம்ம ஸ்டேடஸ்க்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத  , என்கிட்ட மாசத்துக்கு வேலைபார்க்குற  வேலைக்காரிய புடிச்சிருக்குன்னு  சொல்ற” அவருக்குள் இருந்த மருத்துவ வணிகன் எட்டிப்பார்த்தான் .

” அப்பா  ப்ளீஸ் பா ” காலை  பிடிக்காத குறையாக கெஞ்சினான் .

” இப்போ நான் என்ன பண்ணனும் ?”

” அவர் அப்பாகிட்ட போய் பேசணும் டாட் “

“அதெல்லாம் முடியாது,  அந்த கூலிக்காரன்கிட்ட போய் பொண்ணை குடுன்னு கெஞ்ச முடியாது , உனக்கு வேணும்ன்னா நீயே கல்யாணம் பண்ணிக்கோ, இப்போ வெளிய போ ” பற்றுதலே இல்லாமல் கூறினார் . அவரிடம் பேசவே அவனுக்கு தயக்கமாக இருந்தது , ஆனாலும் பேச வேண்டுமே, 

“அப்பா நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன் ,  இந்த ஒரு விஷயத்துல  மட்டும்  ப்ளீஸ் ” மீண்டும் கெஞ்சினான். ‘ நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்’ ரிதுராஜ் விட்ட வார்த்தைகள் , கனகராஜின் வணிக மூளைக்கு  உயிர் கொடுக்க ,

“சிட் உட்காரு ” எதிர் நாற்காலியை  காட்டி அமர சொன்னவர் ,அவனை ஆழ்ந்து பார்த்து ,

” இப்போ நான் என்ன பண்ணனும் ?” என மீண்டும் கேட்டார் ,

” மேகா வீட்ல பேசி கல்யாணத்துக்கு  ஏற்பாடு பண்ணனும் பா “

” ஓகே நல்லாவே  பண்ணிரலாம் ,ஆனா உன் மேல , உன்னை நம்பி இதுவரை  இன்வெஸ்ட்  பண்ணின எனக்கு என்ன லாபம்  இருக்கு ரித்து ?”என்றவர்  ,

” நான் இதை பிஸினஸா பார்க்க விரும்புறேன் ” என்று கூறி ,  நான் தந்தை இல்லை , மிக சிறந்த வியாபாரி என்பதை நிரூபித்துவிட,  அவனுக்கு சுருக்கென்று வலித்தது . 

” ஆனா அப்பா ?” ரிதுராஜ் அதிர்ச்சியுடன் கேட்டான் .

“யஸ் , இஷிதா சொத்து பத்திரத்துல சையின் பண்ணி எனக்கு குடுத்தா ,  மேகா வீட்ல நான் வந்து பேசுறேன் ” என்றார் உறுதியாக , அவனோ அதிர்ந்தே விட்டான் .

” இஷிதா ஒத்துக்க மாட்டா பா  ” என்றான் .

” லாபம் இல்லாம பிஸ்னஸ் பண்ண நானும் முட்டாள் இல்லை ரிதுராஜ்  ” என்றவர் செத்தோஸ்க்கோப்பை  கழுத்தில் மாட்டிக்கொண்டு செல்ல , ரிதுராஜ்க்கு தந்தை வார்த்தைக்கு வார்த்தை பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று கூறியது கஷ்டமாக இருந்தாலும் ,தனக்காக எவ்வளவோ செய்த தந்தை,  நாம் திடீர் என்று காதல் என வந்து நின்றால் அவருக்கும் ஏமாற்றம் இருக்க தானே செய்யும்,  என எண்ணியவன் அவரது சூடு சொற்களை பொறுத்துக்கொண்டாலும் , ரிதுராஜ்க்கு   தன் காதலை ஆரம்பித்த  உடனே இத்தனை தடங்களா   ! என ஆயாசமாக வந்தது .

 #########################################

 ” என்ன சாப்பிடுறீங்க? ” மேகாவின் குரலில் ஆர்வம் இல்லை . அவளுக்கு அவன் , ‘எப்போ போவான்’ என்று இருந்தது .

” எது உன்னால சீக்கிரமா செய்ய  முடியுமோ அது “கனலை மட்டுமே கக்கிய  கண்கள்  இன்று கதை பேசியது .

“உடனேனா  எக் தான் செய்ய முடியும் , சாப்பிடுவீங்களா ?”என கேட்டாள் .

” ம்ம்ம் பட் உனக்கு புடிக்காதே ” அவனது பார்வை அவளை தாண்டி எங்கும் செல்ல வில்லை .

” சாப்பிட தான் மாட்டேன் , செய்ய தானே போறேன் , இஷிதாக்கு செஞ்சி கொடுத்திருக்கேன் ” என்றாள். 

“அப்போ ஓகே , ஐயம் வெயிட்டிங் ” என்றவன் சட்டையின் முன் இரெண்டு பட்டன்களை  திறந்துவிட்டு , டையை தளர்த்தியவன் , கை சட்டையை தன் முழங்கை வர ஏற்றி விட்டு   கிட்சன்  திண்டில்  ஏறி அமர்ந்து , நாடியில் கைகுற்றி அவள் வேலை செய்யும் அழகை பார்த்து கொண்டே இருந்தான் . 

மனதில் பொல்லாத ஆசைகள் எல்லாம் எட்டிப்பார்க்க , ஏதேதோ எண்ணமெல்லாம்  அவனது உணர்வுகளை தட்டி எழுப்ப,  அவன் விழிகளில் அவன் இதுவரை அறிந்திராத காதல்  பொங்கி வழிந்தது .

” சாப்பிடுங்க ” தட்டை அவனிடம் நீட்டியவள் அவனை விட்டு ரெண்டடி தள்ளி நிற்க , அவளது விலகலும் , ஓட்டுதல் இல்லாத பார்வையும் அவனுக்குள் ஏதோ ஒரு ஏமாற்றத்தை கொடுக்க , அது கோபமாக மாற , தட்டை கீழே வைத்தவன், அவளிடம் நெருங்கி ,

” நான் இங்க வர்றது உனக்கு புடிக்கலையா வரு ?” என கேட்டான் . ‘ ச்ச உங்களை புடிக்காம போகுமா தீரா ‘ ன்னு ஒரு தடவை சொல்லுடி என அவனது இதயம்  ஆசையில்  ஏங்கியது .

” அப்படியெல்லாம் இல்லை தீரன் சாப்பிடுங்க ” என்றாளே தவிர ‘உங்களை புடிக்கும் ‘ என்ற வார்த்தை மேகாவின் வாயில் இருந்து வரவே இல்லை ,சரி விழிகளிலாவது தெரியுதா என பார்த்தான்! அதிலும் தோல்வி தான் ! .

பயத்தை தான்டி ஒன்றும் தெரியவில்லை ! இடுப்பில் கைகுற்றி ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளியிட்டான் ,  அவனது நெருக்கமும்,  செயல்களும் அவளுக்குள் பயத்தை உண்டாக்க , மேகா தீரனிடம் இருந்து விலகி நிற்க முயற்சிக்க ,

“இந்த மாதிரி என்னை விட்டு விலகாத வரு,  எனக்கு கோபமா வருது “பற்களை நறநறத்தபடி கத்தினான் . அவனது குரலுக்கே திகில் அடைந்தவள் , பதற்றத்தில் இரண்டடி பின்னால் செல்ல , கண்கள் நீர் பொழிய ஆயத்தமானது .  

“ஐயோ வரு அழுதுட்டே அப்படி பார்க்காத டி “முகத்தை அழுத்தமாக துடைத்து தன் கோபத்தை குறைக்க முயற்சித்தவன் ,

” வரு எப்படி சொல்றது ? உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் என்னென்னல்லாமோ   தோணுது டி . உன்னை கட்டி புடிச்சிக்கணும் , கைக்குள்ளையே வச்சுக்கணும் யு , மேகா “என மூச்சை இழுத்து வெளியே விட்டவன் ,” ஐ நீட் யு  , எனக்கு நீ வேணும் , ஐ நீட் யு டமிட் ” என்றவன் கண்ணில் தான் எத்தனை காதல் !சொல்லில் தான் எத்தனை ஆக்ரோஷம் !

ஆனால் மேகாக்கோ அவன் பேச்சில் சர்வமும் ஒடுங்கிய நிலை,  அவளால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை , ஆத்திரம் பயம் என இருவேறு உணர்வுகள் அவளை படுத்தி எடுத்தது. 

“லவ் பண்றீங்களா தீரன் ” சிறு கோபத்துடன் திக்கி திணறி கேட்டாள் .

“லவ் ? நோ வரு , அதெல்லாம் கொஞ்சம் நாள் இருக்கும் , அப்புறம் அவ்வளவு தான் . ஆனா நாம அதெல்லாம் விட வேற , இது வேற மேகா சொல்ல தெரியல , நீ வேணும் அது மட்டும் தெரியுது ” அவள் காட்டிய பரிவின் விளைவு தான் இது என்று  அவளுக்கு நன்றாகவே  புறிந்துவிட்டது .

ஆனால்,  அவனுக்கு புரியவைக்க வேண்டுமே , தைரியத்தை வரவழைத்துக்கொண்டு , ” இதெல்லாம் ஜஸ்ட் ஒரு வித அட்றாக்ஷ்ன் தான் தீரன் , நான் கவனிச்சிக்கிட்டதுனால உங்களுக்கு என் மேல ஒரு ஃபீல் ” என மேகா சொல்லி முடிக்கவில்லை ,

” நோ ” அறையே அதிரும் அளவு கத்தினான் . நடுக்கத்தில் தன் காதை மூடி கொண்டாள் .

” புரிஞ்சிக்கோ டி ” பற்களை கடித்தான் .

“சாரி தீரன்  எனக்கு இதுல  எல்லாம்  விருப்பம் இல்லை  ” பயந்தால் வேலைக்காகாது  என்பதால் முளையிலே கிள்ளி எறிந்தாள் .

” அதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா தானா வரும் , நீ தான்னு முடிவு பண்ணிட்டேன் , உன் கண்ணு , அந்த உதடு , உன் முத்தம் இப்படி மொத்தமா எனக்கு மட்டும் தான் , நீ வேணும் வரு ” அதற்கு மேல் அவன் பேசிய அந்தரங்க பேச்சில் காதை மூடியவளுக்கு கோபமும் பயம் தொற்றிக்கொள்ள  ,

” ப்ளீஸ் வெளிய போங்க சார் ” கண்களில் நீர் கோர்க்க கதறினாள் .

” வரு தள்ளி போகாத ” அவனது அதிகாரமிக்க  குரல் அவளது கால்களை கட்டிப்போட அசையாது நின்றாள் .அவள் கண்களில் தெரிந்த அப்பட்டமான  பயம்  அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது .

” ஏன் இந்த பயம் ?” அவளது கண்களை பார்த்து கேட்டான் .

” ப்ளீஸ் “

” நான் வேண்டாமா ?”

” ம்ம் வேண்டாம் ப்ளீஸ் ” குரல் கம்மியது .

” ஏன் வேண்டாம் ?” உடல்  இறுகியது .

” அப்பாக்கு லவ் பண்றதெல்லாம் புடிக்காது “

” அப்பா கிட்ட பேசலாம் , ஒத்துக்கிட்டா  அவர் முன்னாடி கல்யாணம் , இல்லைனா நாம தனியா பண்ணிக்கலாம் . ஆனா கல்யாணம் நடக்கும்,  இதை தடுக்க யாரு முயற்சி பண்ணினாலும் அவங்களை முடிச்சிட்டு , உன்னை கல்யாணம் பண்ணுவேன் .நீ எனக்கு வேணும் ” தன் முடிவிலே  உறுதியாய் நின்றான்.  குரலில் அடைந்தே தீரும் ஒருவித பிடிவாதம் தெரிந்தது . ‘ அவங்களை முடிச்சிட்டு உன்னை கல்யாணம் பண்ணுவேன் ‘என அக்னி ரௌத்திர விழிகளுடன் சொல்ல மேகாவுக்கோ அவளது ரத்த நாளங்கள் உறைந்து விட்டது போல குளிர் எடுத்தது .

” எனக்கு புடிக்கலைன்னா ” அவனை எப்படியாவது விலக்கிவிடும்  நோக்கில் பயத்தை மறந்து கேட்டுவிட்டாள் .

” புடிக்கலையா என்னை ?” ‘ புடிக்கலைன்னு சொல்லித்தான் பாரேன் ‘ என்று அவளை  மிரட்டியது  அவனது குரல் .  அவளை சுட்டு பொசுக்கியது அவனது அனல் மூச்சு காற்று .

” ப்ளீஸ் என்னை விட்ருங்க ,  நான் உங்களை பேஷண்ட்டா மட்டும் தான் பார்த்தேன் சார் ப்ளீஸ் ” அவனை விட்டு தள்ளி நின்றபடி  கண்களில் கண்ணீர் தாறுமாறாய் வழிய கதறினாள் .

தலையை அழுந்த கோதினான் , கழுத்தை தேய்த்தான் , சிகரட்டை  எடுத்து பற்றவைதான் , கோபம் வந்தால் புகை பிடிப்பான் . இப்பொழுது அளவுக்கு அதிகமாகவே கோபம் வருகிறது, அதுவும் அவள்  மேல் வருகிறது.

அவள் அழ அழ இவன் கண்கள் சிவக்கின்றது ,  ஒன்று இரெண்டு மூன்று  நச்சு புகை அவன் நெஞ்சாங்கூட்டை  நிரப்பியது தான்  மிச்சம் கோபம் கொஞ்சமும் குறையவில்லை . ஓங்கி அறைய அவனது கரங்கள் பரபரத்தது ஏனோ அவளை காயப்படுத்த மனம் இடம் கொடுக்க வில்லை ,

சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதத்தவன் ,” கிட்ட வா ” ஒற்றை விரல் நீட்டி அழைத்தான் , அவள் மறுத்தாள் .

“வா ” உறுமினான் .

‘ உலகம் இப்படியே நின்றுவிட்டால் எப்படி இருக்கும் ‘ மேகாவின் மனம் அடித்துகொண்டது .

” சீக்கிரம் ” வந்து நின்றாள் .

அப்பொழுது தீரன் அவளது தாடையை அழுந்த பற்றி,  “இனிமே இப்படி பேசுவ ” என அவள் இதழ் நோக்கி குனிந்தவன் , பின்பு ஏதோ நினைத்து மேகாவிடம் இருந்து விலகி  கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு நின்றான் . 

அப்பொழுது கண்களை மூடியபடியே சட்டென்று மேகாவின் மணிக்கட்டில் தனது ஐவிரல் பதிய அழுத்தமாக பிடித்த அக்னி , பிடித்தபடி தன் பக்கம் இழுத்து,

” தள்ளி போகாதே வரு” ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து அவன் உச்சரித்தான் . அவள் அசைவற்று நின்றாள்.

“நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ வரு ” என்றவன்,  “எனக்கு நாள் , கிழமை , இது எதுலையும்  நம்பிக்கை கிடையாது ,இங்கையே இந்த நிமிஷமே உன்னை என் பொண்டாட்டியாக்க  ரொம்ப நேரம் ஆகாது , ஆனா என் வரு , சகல மரியாதையோடு மஹா  ராணி மாதிரி என் வீட்டுக்கு வரணும் , அதனால உன்னை விடுறேன் ” என்றவ தீரன்   மீண்டும்  தன்  கண்களை மூடி திறந்து  மேகாவிடம் ,

”  வரு ,பாரு டி என்னை , லுக் அட் மீ ” மேகாவை அதட்டி தன்னை பார்க்க வைத்தான் . விழிகள் நான்கும் சந்தித்து கொண்டன . அவனது பிடி இறுக மேகாவின் முகம் வழியில் சுருங்கியது .

” ஏய்  மேக வர்ஷினி  , நீ எனக்கு தான் ,எனக்கு மட்டும் தான் .  நான் , அக்னி தீரன் உனக்கு தான் , உனக்கு மட்டும் தான் . இது ஆண்டவன் இல்லை இந்த தீரன் , அக்னி தீரன் போட்ட முடிச்சு , மாத்தணும்ன்னு நினைச்சா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் வரு   ” அனல் விழிகள் மிரட்ட  , கண்ணீர்  விழிகள்   பரிதவித்தது .

தொடரும்