MIRUTHNAIN KAVITHAI IVAL 14.1

cover page-baf8ce93

மிருதனின் கவிதை இவள் 14.1

கனகராஜ் பெண்பார்க்கும் படலத்தின் பொழுது சொன்னது போல , சென்னை ஷெல்டர்  பீச் ரிசார்ட் வெள்ளை மட்டும் தங்க நிறத்திலான ஆடம்பர அலங்காரத்தில் ஜொலித்தது . வெள்ளை நிற ரோஜா மலர்கள் , ஆங்காங்கே  தங்கநிறத்திலான செயற்கை அலங்கார வேலைப்பாடுகள் ,  மின்மினி போல மிளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் , காதில் தேனூறிய  கடல் அலைகளில் சங்கீதங்கள் என கடல் அலைகள் வந்து வந்து மோதும் தூரத்தில் அமைக்க பட்டிருந்த அந்த மேடை  பூரண சந்திரனின்  ஒளியில் ரம்மியமாக காட்சியளித்தது .

அங்கே  நெருங்கிய உறவினர்கள்  மற்றும்  நண்பர்கள் சூழ்ந்திருக்க ,மேடையில்  தங்க நிற பட்டுப் புடவையில் எழில் ஓவியமாய் மேகா நிற்க , அவள் அருகில் அவளது கரங்களை கோர்த்தபடி  முகத்தில் மகிழ்ச்சி ததும்ப  ரிதுராஜ் நின்றிருந்தான் .

“பதட்ட படாம ரிலாக்ஸ்சா இரு மேகா ” என மேகாவின் அருகில் நின்ற இஷிதா , அன்று அக்னி தன் விருப்பத்தை கூறி மேகாவை மிரட்டிவிட்டு சென்றதில் இருந்து இப்பொழுது வரை அவளுக்க தைரியம் கொடுத்துக்கொண்டிருக்கிறாள் .

” ம்ம்ம் ஆனா பதட்டமாவே இருக்கே ” மெல்லிய குரலில் கூறியவளுக்கு மணப்பெண்ணுக்குரிய  கலையை மீறி   , ஒருவித கலக்கம் இருக்க தான் செய்தது .

” அங்க என் அண்ணனை பாரு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்னு ? நீயும் கொஞ்சம் சிரிச்சு சந்தோஷமா இரு டி ” பற்களை கடித்தபடி இஷிதா மேகாவிடம் கூறினாள் .

” ம்ம் சரி ” என்றவளால் முழுமையாக சிரிக்க முடியவில்லை.

” மேகா உனக்கு ஏன் இப்படி வியர்க்குது ? வா என்கூட ” என்றவள் ரிதுராஜை  பார்த்து ,

” வாஷ் ரூம் கூட்டிட்டு போய்ட்டு வந்திறேன் ” என்றவள் மேகாவை அழைத்து கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கினாள் .

அப்பொழுது ,” எங்க மா போறீங்க? ” என்றபடி மேகாவின் தாய் ராதிகா  அவர்களிடம் கேட்க ,

” ரெஸ்ட் ரூம் போகணும் மா ” என்றாள் மேகா

” இப்போ தான் போகணும்னா ?”.

” இப்போ தான் ரெஸ்ட் போனும் போல இருக்கு நான் என்ன பண்றது ?” என்று இதழ் பிதுக்கிய மகளை பார்த்து புன்னகைத்த ராதிகா ,

“சின்ன புள்ளையாவே இரு , சரி போ , வரவேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்களாம், இன்னும் ஒருத்தர் தான் வரணுமாம் அவரும் கிட்ட வந்துட்டாராம் ,அவர் வந்ததும் ஸ்டார்ட் பண்ணிருவாங்க லேட் பண்ணிராதீங்க டி  ,அப்புறம் சம்பந்தி கோச்சுக்க போறாங்க  ” என்றவர் , தோழிகளுடன்  கதைத்து கொண்டிருந்த தன் சின்ன மகளை அழைத்து ,

” மயூரி போ போய் விக்ரம்  வெளிய உன் அப்பா கூட கெஸ்ட்  ரீஸிவ் பண்ணிட்டு இருப்பான் . அவன் கிட்ட பந்தி ரெடியாகிடுச்சான்னு  பார்க்க சொல்லு ” என்றவர் , அய்யர் அழைக்கவும் அவர் அருகில் சென்றார் .

                                                                                                                                                                                     ~~~~~~~~~~~~~~

” ஏன் டி இப்படி நடுங்கிட்டு இருக்க? ” என்று கேட்டபடி மேகாவின் முகத்தில்  ஆங்காங்கே கண்ணாடி முத்துக்களாய் சுரந்திருந்த  வியர்வை  துளிகளை  மேக் அப் கலையாமல் ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள்  இஷிதா .

” அவனை ஏமாத்திட்டோம் டி ” சொல்லும் பொழுதே அக்னியின்  கோரமுகம் கண் முன்னே வந்து சென்றது .

” நீ என்ன அவனை காதலிச்சா ஏமாத்திட்ட ” கோபத்துடன் வினவினாள் இஷிதா .

“இல்லை இல்லை ” வேகமாக தலையசைத்து மறுத்தாள் மேகா .

” அப்புறம் என்ன ? ஏய் துப்பாக்கியோட வந்து லவ் பண்ணலைன்னா,   எல்லாரையும் கொலை பண்ணுவேன்னு சொன்னா யாருக்கு தான் பயம் வராது , அந்த நேரம் அந்த சைக்கோ கிட்ட இருந்து தப்பிக்க அப்படி சொல்லிட்ட , அதுவும் நீயா சொல்லலையே , நான் சொல்லி தானே சொன்ன  ,விடு பிரச்சனை வந்தா என் பேரை சொல்லு ” என்று இஷிதா வெளியே தைரியமாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் தீரன் மற்றும்  மித்ரனை எண்ணி பயந்து தான் கிடந்தாள் .

” அவர் கிட்ட ரிதுராஜ் கூட எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்குன்னு சொல்லி , கால்ல விழுந்திருந்தா விட்ருப்பாரோ  ” நகத்தை கடித்தபடி சந்தேகமாக மேகா கேட்டாள் .

“ம்ம்,  தூக்கிட்டு போய் அப்பவே கல்யாணம் பண்ணிருப்பான் இடியட்” என்று கத்திய இஷிதா , தன்னை  ஆசுவாசப்படுத்திக்கொண்டு ,

” அவன் உன்னை கடைசியா  பார்க்கும் பொழுது பிஸ்னஸ் விஷயமா  ரெண்டு இல்லை மூணு வாரத்துக்கு வெளிநாடு போறேன்னு தானே சொன்னான் “

“ஆமா “

“அப்புறம் என்ன ? அவன் இன்னும் டெல்லிக்கே வந்திருக்க மாட்டான் ,ஸோ ரிலாக்ஸ் , அவன் ஊருக்கு வரும்போது உனக்கு கல்யாணமே ஆகியிருக்கும் டி , இன்னொருத்தரோட வைஃப் கிட்ட  மிஸ் பிஹேவ் பண்ற அளவுக்கு அக்னி சீப் கிடையாது ”  என இஷிதா பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர்களது அறையின் கதவு தட்டப்பட , கதவை திறந்த இஷிதா   வாசலில் நின்றிருந்த விக்ரமிடம்  ,

” என்னடா ” என கேட்டாள் .

” வர வேண்டியவங்க  எல்லாரும் வந்துச்சாம் , அக்காவை எல்லாரும் கூப்பிடுறாங்க அக்கா ” என்றான் மேகாவின் தமையன் விக்ரம் .

” கூட்டிட்டு வரேன் நீ போ ” என்று அவனை அனுப்பி கதவை சாற்றிய இஷிதா மேகாவிடம் ,

 “என் அப்பாவை எனக்கு சுத்தமா புடிக்காது ஆனாலும் நான் அவர்கிட்ட பேசினேன். யாருக்காக பேசினேன் ? உனக்காக பேசினேன் . எதுக்கு ஒருவரத்துல அவசர அவசரமா கல்யாணம் வைக்கணும்ன்னு என் அப்பாகிட்ட கண்டிஷன் போட்டேன் ?எல்லாம் உன் சந்தோஷத்துக்காக தானே, அப்போ நீ இப்படி டல்லா இருந்தா நல்லாவா இருக்கு . ஸோ ஹாப்பியா இரு டி  ” என இஷிதா மேகாவை தேற்றினாள் .

“கண்டிஷனா !என்ன கண்டிஷன் ? என் கல்யாணத்துக்கு உன் அப்பாகிட்ட ?ஏன்  கண்டிஷன் போட்ட? ” என மேகா இஷிதாவை பார்த்து கேட்க ,

” அது வந்து அது , கல்யாணம் நல்ல படியா , சீக்கிரமா முடிஞ்சா , நான் அவர்கிட்ட பேசுறேன்னு கண்டிஷன் போட்டேன் “என இஷிதா கனகராஜ் சொத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டதை மறைத்து மேகாவிடம் சமாளித்தாள் .

“இப்படியாடி  உன்  அப்பாகிட்ட நடந்துக்குவ ?பாவம் டி அங்கிள் ” என மேகா கனகராஜ்க்காக பணிந்து பேசவும் ,

“பாவம் பார்த்து தான் நீ இப்போ இப்படி நிக்கிற ” என்ற இஷிதா , முகம் வாடி போய் நின்ற மேகாவிடம் ,

” மேகா  கல்யாணத்துக்கு  இன்னும் ஒருவாரம் தான் டி  இருக்கு , ஸோ இப்ப இருந்து ஒவ்வொரு நிமிஷத்தையும் , என்ஜாய் பண்ணு , டென்ஷனே  எடுத்துக்காத, எல்லாம் நான் பார்த்துகிறேன்  ” என்று நம்பிக்கை கொடுக்க , இஷிதா கொடுத்த நம்பிக்கையில் சற்று  நிதானம் அடைந்த மேகா மகிழ்ச்சியுடன்  மேடையை நோக்கி வந்தாள் .

மணமேடையில் ஐயர்   மணவோலையைப் படிக்க , கனகராஜும் , கோபால கிருஷ்ணனும் வருகை தந்திருந்த சொந்தங்கள் முன்பு ,   கையோடு நிச்சய தாம்பூலத்தை மாற்றிக் கொண்டனர்.

பின்பு   கனகராஜின்  துணைவி வீனா ,மேகாக்கு போட வேண்டிய மோதிரத்தை மணமகனிடம்   கொடுக்க அதை வாங்கிய ரிதுராஜ் மேகாவின் மென்   விரல் பற்றி நிச்சய மோதிரத்தை காதலாக அணிவித்தான்  .

அவன் அணிவித்த மோதிரத்தை மென்னகையுடன் பார்த்த மேகாக்கு  , திடிரென்று ஏதோ ஒரு நெருடல் !

மனதிற்குள் ஒருவிதமாய் உறுத்தியது !

ஏன் என்று தெரியவில்லை ?

ஏனோ அந்த உணர்வை ஒதுக்கியும்  வைக்க முடியாமல் போக , மெதுவாய் தன் தலை உயர்த்தி குறிப்பிட்ட திசை நோக்கி திரும்பியவளை,  தன் கரம் பிடித்து தடுத்து  ,

” பார்க்காத மேகா ” என்ற இஷிதாவின் குரல் நடுங்கியதும் , ஒரு கணம் தோழியின் முகம் பார்த்த மேகா மீண்டும் அந்த திசையை பார்த்தாள் . முதுகுத்தண்டு சில்லிட  பனிசிலை போல உறைந்து   நின்றாள் .

ஆங்காங்கே  சுற்றி கொண்டிருந்த கோபோ லைட்டிங் ஒளி,  தன் மேல் விட்டு விட்டு பட,  அகோர அரக்கனை போல கண்கள் சிவக்க மேகாவை பார்த்து கொண்டிருந்தான்  அக்னி தீரன் . அவன் முகம் ரத்தமென சிவந்துகிடக்க , தலையில் ஆரம்பித்து அவன் உடல் மொத்தமும் விரல் விட்டு எண்ணும் நொடி பொழுதில்  வியர்த்து கொட்டியது .

‘ இவன் இங்கே எப்படி ? ஐயோ என்ன செய்வானோ? சொன்னது போல அனைவரையும் கொன்று விடுவானா ! நான்  என்ன செய்வேன்? ‘ என்ன செய்வது என ஒன்றுமே புரியவில்லை மேகாவிற்கு. அவளுக்குள் ஊடுருவி அவளது உயிரை பஸ்மமாக்கும் அவனது உக்கிர பார்வையை பார்க்கவே மேகாவுக்கு அச்சமாக இருந்தது.

அந்நேரம் பார்த்து மேகாவின் தாய் ராதிகா மேகாவிடம் மோதிரத்தை நீட்டி ,

” மாப்பிள்ளைக்கு போட்டு விடு மா ” என்று கூற , மேகவோ அக்னியின் பார்வையில் நடுங்கியபடி அமைதியாக நிற்க ,

இதுவரை நன்றாக இருந்த மேகாவின் முகத்தில் திடிரென்று தோன்றிய கலவரத்தை கண்ட ரிதுராஜ் ,

” மேகா என்னாச்சு ?ஏன் ஒரு மாதிரியா இருக்க,?ஆர் யு ஓகே? ” என கேட்டான் . ஆனால் மேகா அவனை பார்க்க வில்லை .

” மேகா ” மீண்டும் அழைத்தான் , இந்த முறையும் அவளது கவனத்தை தீரனே சிறைவைத்திருக்க , மேகாவின் கவனம் ரிதுராஜிடம் திரும்ப வில்லை .

“மேகா என்னாச்சு ?” இந்த முறை அவளது நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பி கேட்டான் ரிதுராஜ் .

தீரனின் விழிகள் தானாக மூடிக்கொண்டன . அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போல வலித்தது .

” ஹான் சொல்லுங்க ”  புரியாமல் விழித்தாள் .

“என்னாச்சு மா ? லூக்கிங் வொரிட் ”  ‘கவலையா தெரியிற ‘கவலையுடன் கேட்டான்.

” இல்லை …யே  ஐயம் ஓகே ” தடுமாறினாள் .

” எல்லாம் ஓகே தானே ?வேற எதுவும் இல்லையே ?எதுவா இருந்தாலும் சொல்லு ” என்றான் ரிதுராஜ் அவளது கரங்களை   பிடித்தபடி .

அதுவரை கண்மூடி இருந்துவிட்டு , அப்பொழுது பார்த்து   விழி திறந்த தீரனின் கண்களில்  மீண்டும் இந்த காட்சி பட்டுவிட , ” —– ” எதையோ சொல்லி பற்களை நறநறத்த தீரனின் ,  உள்ளங்கை  அவனது விரல் நகங்கள்  அழுத்தியதில்  ரத்தம் கசிய ஆரம்பிக்க  , இருந்தும் தன்  கைவிரல்களை இன்னும் அழுத்தமாக மடக்கியவன்   வலிக்க வலிக்க இறுக்கமாக இறுக்கி  பிடித்தபடி நின்றிருந்தான் .

 ” எல்லாம் ஓகே தான்,  நல்லா இருக்கேன் ” என்ற மேகாவின் பார்வை மீண்டும் தீரனின் விழிகளிடம் சரணடைந்தது . மன்னிக்க வேண்டி யாசித்தது. தன்னை விட்டுவிடும் படி கெஞ்சியது .

தீ தெறிக்கும் கண்கள் , கனலை கக்கும் விழிகள் , உக்கிர பார்வை ,  எரிக்கும் கண்கள் என இப்படி ஏகப்பட்ட வரிகளை கதை புத்தகங்ளில்  படித்து சிலிர்த்திருந்த மேகா  , இன்று தான் அதை நேரில் கண்டாள் . பலமுறை  தீரனின் தகிக்கும் விழிகளை கண்ட மேகாவுக்கு இன்று அவன் பார்வையில் தெரிந்த உக்கிரம் மிகவும் புதிது .

தொடரும்