MIRUTHNAIN KAVITHAI IVAL 18.1

cover page-41a7f271

மிருதனின் கவிதை இவள் 18.1

இரவு வேளையும் , அதிகாலை பொழுதும் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் அந்த ஏங்காத வேளையில் வழமை போல கண்விழித்தவள், குளித்து முடித்து , காதில் ஹெட் செட் மூலமாக இளையராஜாவின்  மெல்லிசையில் spb மற்றும் வாணி ஜெயராமின் தேனூறும் குரலுக்கு சொந்தமான,   அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான பாடலில் ஒன்றான,

‘ஒரே நாள் உன்னை தான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல் ஆடுது ‘ என்ற பாடலை  கண் மூடி ரசித்தபடி , கையில்  சூடான காஃபி கப்புடன்  புல்லவெளியில் படர்ந்திருந்த  பனித்துளியின்  சிலு சிலிர்ப்பை தன் பாதத்தில்  உணர்ந்தபடி நடை பயின்று கொண்டிருந்தாள்  மேகா.

ஆரோக்கியம் ,  கட்டுக்கோப்பான உடல் இது அனைத்தையும் தாண்டி , அவனுடைய வேலை சுமை , அவனின் மன பாரம் , அவனது அடையாளம் என அனைத்தையும் சொற்ப நேரத்திற்கு மறந்து , இதமான மன அமைதிக்காக தீரன்  தன்னை ஈடுபடுத்தி கொள்வது உடற்பயிற்சியில் தான் . சொல்ல போனால் அவனது மன அழுத்தத்திற்கு வடிக்கட்டி தான் இந்த உடற் பயிற்சி .

மேகாவின் இல்லத்தில் ஜிம் வசதி இல்லாததால் தன் அலைபேசியில் பிற மொழி பாடல்  ஒன்றை  கொஞ்சம் சத்தமா ஒலிக்க விட்டபடி தன் அறையின்  பால்கனியில் நின்று உபகரணங்கள் இல்லாத சில உடற்பயிற்சிகளை செய்ய துவங்கியவன் ,அது முடிந்ததும்  பால்கனியில் போடப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் தன் கைகளை ஊன்றியபடி  கிழக்கு  வானை நோக்கி நின்றிருந்தான் தீரன் .

தகிக்கும்  அக்னி பிழம்பாய் கீழ் வானில் இருந்து பகலவன்  உதயமாவதை பார்த்திருந்தவனின்,  மனமும் அந்த சூரியனை போல தகித்து கொண்டிருக்க , அவனது மனதில் பற்றியெரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல , நேற்று இரவு ரிதுராஜுடன்  மேகா கை கோர்த்தபடி  நின்றிருந்த  நினைவு  அவனுள் தகித்துக்கொண்டிருக்க , ஏதோ ஒரு உந்துதலில் கீழே பார்த்தவனின் கண்ணில் பட்டது என்னவோ  கண்களை மூடி கன்னக்குழி விழ புன்னகைத்து கொண்டிருந்த மேகா தான் . சினத்துடன் அவளை ஏறிட்டான் .

அவளது கூந்தல் இடை தாண்டி பறந்து விரிந்திருக்க இப்பொழுது அவனது  ஆக்ரோஷ விழிகளில் ரசனை குடியேற , பால்கனி சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டவன் தன் கைகளை கட்டியவாறு அவளை பார்வையிட துவங்கினான் .   

ஒப்பனைகள் ஏதும் இன்றி  இயற்கையோடு இயற்கையாக கலந்தபடி ஓவியமாய்  நின்றிருந்தவளது அழகு தீரனின்  மனதில்  பதிந்து  அவனது இளமையை எழுப்பியது .

உச்சு துவங்கி நுனி வரையிலான அளவான நெளிவில்  இருந்த  கூந்தலின் அழகு,  அவனது இதயத்தை கொள்ளை எடுக்க , அக்கணமே  பெண்ணவளை  ஆராயும்  ஆராய்ச்சியாளனாக மாறி போனான் ஆணவன்.

” என்ன அக்கா காலையிலே உன் ஆள் கூட ரொமான்ஸா ” மேகாவை பின்னால் இருந்து அணைத்தபடி இன்னும் உறக்கம் கலையாத குரலில் கேலி செய்தாள் மயூரி .தங்கையின் கேலி பேச்சில் சிரித்தவள் ,

” மியூசிக் கேட்டுட்டு இருந்தேன் டி ,அவ்வளவு தான் ” என்றபடி ஹெட் செட்டை கழற்றி விட்டு புல்தரையில் அமர , மேகாவின் மடியில் தலைவைத்து படுத்து கொண்ட மயூரி,

” அப்போ ரொமான்டிக் மூட்ல இருக்கன்னு சொல்லு ” என்றாள் விழிகளை மூடிய நிலையில் .

” அதெல்லாம் எதுவும் இல்லை டி, ம்யூசிக் கேட்டது ஒரு குத்தமா ” தங்கையின் சிகையை கோதியபடி சலிப்பாக கூறினாள் மேகா .

” ஒத்துக்க மாட்டியே , ஆமான்னு சொன்னா தான் என்ன ? கல்யாண பொண்ணுன்னா இப்படி தான் ஏதாவது கலாய்ப்போம்  , கொஞ்சமாவது வெக்கபடுறியா ம்ம் எப்பப்பாரு ரோபோ மாதிரி ” சலித்து கொண்ட மயூரின்னு  தலையில் நங்கென்று கொட்டிய மேகா ,

” வாய் கூடிப்போச்சு டி உனக்கு ” என்க ,

” ஆ வலிக்குது அக்கா ” என தன் தலையை தேய்த்தபடி எழுந்தவள் மேகாவின் தோள் மீது  சாய்ந்து கொள்ள ,

“ஏய் தூக்கம் வந்தா உள்ள போய் தூங்க வேண்டியது தானே ” என்ற மேகாவின் கரத்தில் இருந்த காஃபி கப்பை பறித்த மயூரி ,” நம்ம மதர் இந்தியா எங்க தூங்க விடுறாங்க , மேகா பாரு எவ்வளவு பொறுப்பா காலையிலே எந்திச்சி குளிச்சிட்டான்னு  திட்டி திட்டியே என்னை எழுப்பி விட்டுட்டாங்க ” தாயை புகார் கூறியபடி  காஃபியை அருந்த போக ,

” ஏய் நான் குடிச்சது டி , ஆறி வேற போயிருக்கும் ” என மேகா சொல்லும் பொழுதே மீதம் இருந்த மொத்த காஃபியையும் குடித்திருந்த மயூரி  ,

” இருக்கட்டும் எல்லாம் உன் கல்யாணம் வரைக்கும் தான், அப்புறம் இந்த சான்ஸ் எல்லாம் எங்களுக்கா கிடைக்கும் ” என அவள் மடியில் படுத்துக்கொண்டு  கண்ணடிக்க ,

தங்கையின் கையில் வலிக்காது போல கிள்ளியவள் ,

” ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லை ,கல்யாணம் ஆனாலும் நீ என் தங்கச்சி தான் ,எப்பவும் என்கிட்ட உனக்கு உரிமை உண்டு “என்றாள்.

” பாப்போம் பாப்போம் ” என்ற  மயூரி  ட்ராக் சூட்டும்,  டீ ஷர்ட்டும் அணிந்து கொண்டு கையையும் காலையும் அசைத்தபடி  வந்த விக்ரமை பார்த்து விழி விரித்தவள் ,

” அக்கா இது என்ன அதிசயமா இருக்கு ?என் கைய கொஞ்சம் கிள்ளேன்” என்றாள் ஆச்சரியமாக ,

விக்ரமோ ,” குட் மார்னிங் அக்கா ” என்று கூறி மயூரியை பார்த்து ,” குட் மார்னிங் சோம்பேறி ” என்றவன் மயூரி பார்க்க கைகளையும்  உடம்பையும்  வளைக்க ,

” டேய்  நீயே கடைஞ்செடுத்த சோம்பேறி , நீ என்னை சொல்றியா ” என்ற மயூரி விக்ரமை வம்பிழுக்க ,

” ஏய் என் தம்பிய ஏதாவது சொல்லாம உனக்கு இருக்க முடியாதாடி ” என்ற மேகாவின் கையோடு தன் கையை அடித்துக்கொண்டவன் ,

” எங்க நான் ஏட்  பேக்ஸ் எல்லாம்  வச்சு  அழகா ஆகிருவனோன்னு அவளுக்கு என் மேல பொறாமை அக்கா ,வேஸ்ட் கேர்ள் ” என்று கேலியாக  சிரித்த விக்ரம்   தன் பணியை தொடர .

அலைபேசியில் அழைப்பு வரவும் ,” ஆமா டி கல்யாணம் தான் திடீர்ன்னு பிக்ஸ் ஆகிடுச்சு ” என்றபடி  மேகா அலைபேசியுடன்  ஒதுங்கி விட , ‘ என்னையா வேஸ்டுன்னு சொல்ற ‘ என விக்ரமை முறைத்த மயூரி சுற்றும் முற்றும்  தேடிவிட்டு கையில் கிடைத்த சேற்றை எடுத்து அவன் சட்டை மீதே அடித்து , விழுந்து  விழுந்து  சிரிக்க  , ஆத்திரம் கொண்ட விக்ரமோ மயூரியை பார்த்து, 

” ஏய்  உன்னை   இன்னைக்கு விட  மாட்டேன்  டி  ”  என்றவன்  பதிலுக்கு சேற்றை கையில் எடுக்க , ” முடிஞ்சா  புடிச்சுக்கோ  ” என்று  ஓடியவளை  துரத்திய விக்ரம்  பதிலுக்கு  மயூரி   மீதும்  சேற்றை  எடுத்து  வீச . 

அது அவளது முகத்திலே பட , அதை கண்டு அவன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க , முகத்தில் உள்ளதை துடைத்து கீழே போட்டவள் இரெண்டு கைநிறைய சேற்றுடன் அவனை துரத்த,  அவனோ மேகாவின் பின்னால் ஒளிந்து கொண்டு மேகாவை உதவிக்கு அழைக்க ,முதலில் பதறியவள் பின்பு சுதாரித்து கொண்டு ,

” மயூரி அதை கீழே போடு  “என்றாள் .

“பாரு அவன் என் மூஞ்சிலே அடிச்சிட்டான்  , மரியாதையா  என்கிட்ட சாரி கேட்க சொல்லு “

” டேய் சாரி கேளுடா “

” சாரி கேட்டா அடிக்கமாட்டாளான்னு கேளு ” என விக்ரம் மேகாவின் தோளை பிடித்தபடி கேட்க ,

” அடிக்க மாட்டா டா , நீ கேளு ” என்றவள் ,” அவன் சாரி கேட்பான்,  நீ அதை கீழே போட்டுரனும் ஓகே மயூரி ” என்ற மேகா  மயூரியை பார்த்து குறும்பாக கண்சிமிட்ட ,  பதிலுக்கு தலையசைத்த  மயூரி,

“சரி சரி உன் தொம்பிய சாரி சொல்ல சொல்லு , நான் ஒன்னும் பண்ண மாட்டேன் ” என மிடுக்காக கூற ,  விக்ரம் சாரி சொன்ன மறுகணம் ,மேகா விலகி கொள்ள , மயூரியின் கரத்தில் உள்ள சேறு விக்ரமின் முகத்தை அலங்கரித்தது .

அதை பார்த்து மேகா ,மயூரி    இருவரும்  விழுந்து  விழுந்து  சிரிக்க  , அவர்கள்   தன்னை  ஏமாற்றியதை  அறிந்த  விக்ரம் ,

” அக்கா யு டூ  ப்ருட் ” என்றவன் கையில் கிடைத்த தண்ணீர் டியூபை எடுக்க , மயூரியோ ,

” அக்கா நீ காலையிலே குளிச்சிட்டல “என ஒரு மார்க்கமாய் கேட்க ,

” ஆமா டி ” என மேகா சொல்லிய மறுகணம்  மயூரி தன் ஒரு கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சேற்றை மேகா மீது வீச .

” மயூ என்ன பண்ணி வச்சிருக்க? உன்னை நில்லு டி ” என சிரித்தபடி தன் பங்கிற்கு சேற்றை எடுத்த மேகா ,  தன்  மீது  சேற்றை  அடித்துவிட்டு   ஓடி  சென்ற  மயூரியை   துரத்தியபடி  ஓடி வர , கல் தடுக்கி  தன்  கையில்  இருந்த  சேற்றை   மயூரிக்கு பதிலாக அக்னி மீது  பூசியபடி  கீழே  விழப்போனவள் , எப்படியோ தன்னை நிலைப்படுத்திக்கொண்டு விழாமல்  நின்றிருக்க .

” கம் ஆன்  அக்கா ”  என்று  தன்  கையில்  தண்ணீர்  ட்யூபை  வைத்தபடி    மேகாவை  உற்ச்சாகப்படுத்திக்கொண்டிருந்த  விக்ரம்   , சிரித்து கொண்டிருந்த  மயூரி என அவர்கள் இருவரும்   இதை கண்டு  அதிர்ச்சியில்   உறைந்து  நின்றனர் .

அக்னி   வீசிய  கனல்  பார்வையில்  ,  மிரண்டு  போய்  அசையாமல்  அதே  இடத்தில்  நின்றாள்  மேகா , அதே  பார்வையை  வீசியபடி   முகற்றில்  சேறு  வடிய  ,  மேகாவை  இன்னும்    நெருங்கினான் அவன் .

அவன் நெருங்க நெருங்க , மேகாவுக்கு  தான்  இதயம்  தாறுமாறாய்  அடித்து கொண்டது . மேலும்  கீழுமாய்  மூச்சு  வாங்க  நின்றவளுக்கு ,அவனது அனல்  வீசிய  விழிகள்  அச்சுறுத்தியது  . தீரனை  ஏறிட்டு  பார்க்கவே  பயந்தாள்  ஆனாலும்   ஏனோ  ஆழதுளைக்கும்   அவனது  பார்வை  மட்டும்  உயிர்  வரை  தொட்டு வருவதாய்   உணர்ந்தாள்  .

இதோ ஒரே எட்டில் நெருங்கிவிட்டான்  ,

” என்ன  செய்ய  போகிறான்  ???”  இதயம்  அடித்துக்கொண்டது  .நூலளவு   இடைவெளி  இருந்தும் ஏனோ   , மந்திரத்துக்கு  கட்டுப்பட்டது   போல  அவன்  விழிகளையே  பார்த்துக்கொண்டிருந்தாள் , சேருபடிதிருந்தும்   அவள் முகத்தில்  தெரிந்த  கலவரம்  அவன் கண்ணில் பட்டுவிட   அது அவனை  கலங்கடித்தது  .

” இத்தனை நிமிடம் நான் பார்த்து ரசித்த  அவளது  குழந்தைத்தனம் ,  புன்னகை , முகத்தில் இருந்த பிரகாசம் இதெல்லாம் எங்கே ?  ஏன் என் முன்பு மட்டும் அவள் இயல்பாக இருக்க மறுக்கிறாள் ? ஏன் பயப்படுகிறாள்  ? ”  ‘அவளது பயத்தை நேற்று நீ தானே ரசித்தாய், இப்பொழுது மட்டும் என்னாயிற்று  ?’என மனசாட்சி கேட்டாலும்  ஏனோ  அவனுக்கு  இந்த நொடி மேகாவின் முகம் மாற்றம்  பிடிக்கவில்லை  . 

” என் கிட்ட  உனக்கு  என்ன  பயம்? ஏன் நீ நீயா இருக்க மாட்டிக்கிற   ”  தீரனின் விழிகள்  கேட்டது  ! பதிலுக்கு  கிடைத்தது  அதே  மருண்ட   பார்வை  ,   உள்ளுக்குள்  வலித்தது  .  பயத்தில்   துடித்துக்கொண்டிருந்த   அதரத்தை   நிறுத்த   துடித்த  தன்  இதழ்களை  கண்டித்தவன் . இடைவெளியே  இல்லாது  இன்னும் அவளை  நெருங்கி  வர  . அவனது நெருக்கத்தை கண்டு பயந்தவள்,  நிலை தடுமாறி பின்னோக்கி விழ போக , தன் வலக்கரம் கொண்டு அவளது இடையை தாங்கியவன் அவள் விழுந்து விடாமல் தன்னோடு இறுக்கமாக பிடித்து கொண்டான் .

தீரனை மிக நெருக்கத்தில் கண்ட  மேகாவிற்கு சித்தமும் முடங்கி போக பதற்றத்தில்    விழிகளை  மூடிக்கொண்டாள்  .

அவனோ  அவளது மூடிய விழிகளை பார்த்தபடி , சற்று  எட்டி  விக்ரமின்   கரத்தில்  இருந்த  தண்ணீர்  ட்யூபை  வாங்கி  தன்னோடு  சேர்த்து மேகாவையும்   நனைத்தான்  .  அவனிடம்  இருந்து இதை  சற்றும்  எதிர்பார்க்காதவள்  விழித்திருக்க , திடிரென்று விடாமல்  கொட்டிய  நீரால்  தடுமாறியவள் ,அவனது  மேல்  சட்டையை   நன்கு  பற்றியபடி  அவனோடு  ஐக்கியமாக  . 

தீரேனோ தன் விழிகளை  மேகாவின்  விழிகளுடன்  உறவாடவிட்டவன்  அவளுக்குள் மூழ்கிவிட , பொல்லாத எண்ணங்கள்  எல்லாம் அவனது  உள்ளத்தில் தோன்ற , அவன் மேனி சிலிர்த்தடங்கியது .

அவன்  முறைக்க வில்லை ! ஒருவார்த்தை கூட பேச வில்லை  இருந்தும்  அவள் கண்கள்  கசிந்தன  !  கொட்டும்  நீரிலும்  அறிந்துகொண்டான்  அவளவன் ! துடைக்க  துடித்தன  கரங்கள்  ! துணிந்துவிட்ட  நேரம்  ! மேகாவின் விரலில்  மினுமினுத்த  ரிதுராஜ் அணிவித்த மோதிரம்தீரனின் கண்ணில் பட  , இத்தனை நேரம் மறைந்திருந்த  கோபம்  மீண்டும்  வந்து  ஒட்டிக்கொள்ள  ,

‘ நெவர் மேகா  ‘ உதடுகள்  அவனையும் மீறி  ஏதோ முணுமுணுக்க   , தன்  கரத்தில்  இருந்த   ட்யூபை வீசி அடித்தவன் , அதே கோபத்தோடு    தன்  மார்பில்    பதித்திருந்த   அவளது    கரத்தை   ஒரே  ஒரு  பார்வை  தான்   பார்த்தான் !  தீ  தெறிக்கும்  பார்வை  அது  ! சற்றென்று  கரங்களை  நீக்கினாள்  மேகா . அவள் கரங்களை நீக்கிய மறுகணம் ,உடனே அங்கிருந்து வேக நடையிட்டு சென்றிருந்தான் தீரன் .

சென்று விட்டான் !அவன் இங்கில்லை !

மனம் பலமுறை சொல்லி  அவளை ஆறுதல் படுத்தியது ! ஆனாலும் அசையாமல் அதே இடத்தில் நின்றாள் !  அவளை சுற்றி புதிதாய் ஏதோ ஒரு சங்கடமான உணர்வு  என்னவென்று சற்றென்று  உணர முடியவில்லை . ஆனால் அந்த உணர்வு அவளை மீண்டும் மீண்டும் சங்கடப்படுத்தியது , விடாமல் துரத்தியது . மீண்டும் யோசித்தவள்  அதிர்ந்தே விட்டாள் !அதிர்ச்சி என்றால் அப்படியொரு பேர் அதிர்ச்சி .

அவனது  அருகாமை  நினைக்கும் பொழுதே மனம் படபடத்தது  “அவன் தான் அணைத்தான் என்றால் நீ விலகியிருக்க வேண்டாமா ?   ச்ச என்ன தைரியத்தில்  அவனுடன்  அத்தனை நெருக்கமாக நின்றாய் ?”தன்னை தானே குற்றம் சுமத்திகொண்ட மேகாவுக்கு, அவளது மனம் ஆறவே  இல்லை .

இது போதாதென்று மேலும் ஒரு சிந்தனை அவளை நிலைகுலைய செய்தது ,  அவனது    வாசம் ! அவனது ஸ்பரிசம் !என சிந்திக்க துவங்கியவளுக்கு,

அவனது வாசனை , அவளுடைய சவாசத்திற்குள் கலந்து அவளது நெஞ்சம் எங்கும்  வேகமாக பரவிக்கொண்டிருப்பதை போல உணர்ந்தாள் ! ஒரு நொடி ஒரே ஒரு நொடி ஏதோ அவனே தன் மீது படர்ந்திருப்பது போன்ற   எண்ணம் தோன்றிவிட  உடல் அதிர , நடுங்கியே விட்டாள் !

” எவ்வளவு கீழ் தரமான  எண்ணம் இது ! ச்ச்  ஒரு கணம்    என்றாலும்  நான் எவ்வாறு  அப்படி  நினைக்கலாம்  ?  மேகா ஏன் இப்படி எல்லாம் யோசிச்ச ?  ” அவள் மீதே ஒருவித அருவருப்பை   உணர்ந்தாள் !  மேகாவின் கை கால்கள் எல்லாம்  வெடவெடுக்க தொடங்கியது .

உடனே சற்றும் சிந்திக்காமல் , தன் முகம்  ,கழுத்து, உடம்பு  என தன்  உடல் பாகங்களை தன் கரம்  கொண்டே அழுத்தமாக துடைத்தாள் . நகம் பட்டு கழுத்தில் ரத்தம்  கசிந்ததை  கூட அறியாமல் துடைத்தாள்!  துடைத்து கொண்டே இருந்தாள்.

” அக்கா என்னாச்சு ?” விக்ரமும் மயூரியும்  மேகாவின் விசித்திர நடவடிக்கையில்  குழம்பி அவளை அழைக்க , அவர்கள் குரல் எதுவும் அவளது செவியில் எட்ட வில்லை .

சுற்றும் முற்றும் பார்த்தாள் !  வேகமாக குனிந்து  தண்ணீர் ட்யூபை எடுத்தாள், சடசடவென  தண்ணீரால் தலை முதல் தன் மொத்த மேனியையும்  நனைத்தாள் .  இரெண்டு, மூன்று, நான்கு என நிமிடங்கள் அதன் போக்கிலே கழிய, மேகா அப்படியே  தண்ணீரில் தொப்பலாக நனைந்தபடி  நின்றாள் .

ஏதேதோ எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடியது . தன்னிலை மறந்து நின்றிருந்த   மேகாவை. தங்கை மற்றும் தமையனின் தொடுகை சுயநினைவுக்கு கொண்டு வர . முதலில் அவர்கள் தன் தோளை தொட்டதும்  பயந்தவள் , பிறகு அவர்கள் முன்பு இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொள்ள , மயூரியும் விக்ரமும் மேகாவின் இந்த நடவடிக்கையில் மிகவும் குழம்பி போனார்கள் .

என்ன தான்  மேகா அக்னியை மறுத்தாலும் ,வேண்டாம் என ஒதுக்கி தள்ளினாலும் , அவளது  எண்ணம் முழுவதையும் தீரன் அவளது அனுமதி இன்றி, அவள் அறியாமலே ஆக்கிரமிக்க துவங்கினான் .

நாளை

” உக்காரு ” தீரனின் அதிகார பார்வை அவளை உட்கார வைத்தது .

” ஆமா ,நீ உன்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க? ஹாங் , அழகி ,பேரழகி ,தேவதை ” இகழ்ச்சியில்  தீரனின் இதழ் வளைந்தது , “நத்திங்,  யு ஆர் ஜஸ்ட் நத்திங் மேகா , யா  நான் உன்னை நேசிச்சேன் ,  கல்யாணத்துக்கு  ப்ரோபோஸ் பண்ணினேன்,  நீ என்னை ஏமத்தின , நான் கோபப்பட்டேன் , அதெல்லாம் முடிஞ்சிருச்சு , இப்போ நீ வேற வாழ்க்கைக்குள்ள போக போற , ஆமா  அன்னைக்கு உன்கிட்ட  ரூடா நடந்துக்கிட்டேன் தான் ,  ஆனா அதுக்கப்புறம்  என் சைட்ல இருந்து உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சா  ம்ம்ம் சொல்லு “அதட்டினான் .

” நோ ” அவள் தலை அனிச்சையாக  அசைந்தது .

” இங்க பாரு மேகா உன் உணர்ச்சிகளை என்னால புரிஞ்சிக்க முடியுது,  பட் நீ நினைக்கிற மாதிரி  உன் மேல நான் ஆசை பட்டு,   இருபத்திநாலு  மணிநேரமும்  உன் பின்னாடியே சுத்தி சுத்தி வர்ற அளவுக்கு  நீ ஒன்னும்  தேவ கன்னி கிடையாது . உனக்கு என்னை மறக்கிறது கஷ்டம் தான் ,  இருந்தாலும்  நீ  என்னை மறந்துட்டு   உன் பியான்ஸே ரிதுராஜ் மேல போகஸ்  பண்ணி தான் ஆகணும் ” என்றது அவனது குரல் ‘பண்ணிருவ’என சவால் விட்டது அவனது கபடம் நிறைந்த விழிகள்.

”  ஓகே என்ஜாய் யுவர் ட்ரின்க் ” என்றவன் திருப்தியான புன்னகையுடன் வெளியேறினான் . ‘ நான் எப்போ இவனை  நினைச்சேன் , இவனை மறக்க கஷ்டப்படுறதுக்கு ?’  மேகா அதிர்ந்து விழித்தாள்

தொடரும்