MIRUTHNAIN KAVITHAI IVAL 19.3

cover page-c377cc1e

மிருதனின் கவிதை இவள் 19.3

அன்று ஞாயிற்றுக்கிழமை தீரனின் அறையில் ,

” எப்படி நடந்துச்சு ?” மடிக்கணினியின் திரையை பார்த்து பற்களை கடித்தபடி ஆங்கிலத்தில் பேசிய தீரனின்  வார்த்தையில்   இருந்த மென்மை ,அவனது முகத்திலும் குரலிலும் இல்லாமல் இருக்க , அவன் எதிரே  இருந்த  மேலாளர்களுக்கு ,  தொடு திரையில் தெரிந்த அவன் முகத்தை பார்ப்பதற்கு கூட பயமாக இருந்தது .

” எப்படியோ நாம கொடுக்கிறதை விட அதிகமா தரேன்னு சொல்லிருக்காங்க சார்  , அதான் ப்ராப்பர்டி நம்ம கைய விட்டு போச்சு ” என அவர் விளக்கம் கொடுக்க , தீரனின் தீ  பார்வையில் இருந்த வெப்பத்தை அவர்கள் அவன் அருகில் இல்லாமலே உணர்ந்தனர் .

” ஓ அவ்வளவு தெளிவா எல்லாரும் வேலை பார்க்கிறீங்க , இப்படி ஒரு கேவலமான எக்ஸ்ப்ளனேஷனை கொடுக்க உங்களுக்கு வெட்கமா இல்லை  ” அவர்களிடம் பதில் இல்லை, தலை கவிழ்ந்தார்கள் .

“இது தான் லாஸ்ட் வார்னிங் இனிமே இப்படி ஒரு தப்பு நடக்க கூடாது ” என தாறுமாறாய் கத்திய தீரன்,  அவர்களை விரட்டிவிட்டு கணினியின்  திரையை அடித்து மூடியவன் ,தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான் .

அன்று மருத்துவமனையில்  இருந்து அப்படியே கிளம்பிய தீரன்,  இங்கு வந்து இன்றோடு மூன்று நாட்கள் கடந்துவிட்டது  . நிலுவையில் உள்ள அணைத்து பணிகளையும்  இழுத்து போட்டு செய்கிறான் , மூன்று நாட்களும் உறக்கம் என்பதை மறந்து மீட்டிங் மீட்டிங் என்று இருக்கிறான் . இருந்தும்  அவனது மனநிலையில் ஒரு மாற்றமும் இல்லை .  அங்கிருந்து  கிளம்பும் பொழுது எப்படி நிம்மதி இல்லாமல் இருந்தானோ , அதே போல தான்  இந்த நொடி வரை  நிம்மதி இல்லாமல்  தவிக்கிறான்  .

மேகாவின்  அருகில் ரிதுராஜ் ! அவனது கரங்களுக்குள்  அவளது கரம் ! காட்சிகள் கண் முன் வந்து வந்து அவனை துரத்துகிறது .

வேலையில் சுத்தமாக  நிதானம் இல்லை ! சின்ன தவறுக்கு கூட அவ்வளவு கோபம் வர, அவனுக்கே அவனது அடங்காத மனம் மீது ஆத்திரம் வந்தது.

“மேகா “உச்சஸ்தாதியில்  கத்தியபடி தன் அறையில் உள்ள பொருட்களை தீரன் தட்டிவிட,  கண்ணாடி பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்து சுக்கல் சுக்களாக சிதறியது .

” உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டா டா , ஏன் அவளை பத்தியே யோசிக்கிற?  தீரா…  ” என கத்தியவன் தன் கரங்களை சுவற்றில் குத்தி தன்னை தானே காயப்படுத்தினான் .

மேகாவை பிடிக்கவில்லை ! அவளது முகத்தில் கூட விழிக்க பிடிக்கவில்லை ! அவள் மீது அத்தனை கோபமும் ஆத்திரமும் மனம் முழுவதும் விரவி கிடக்கின்றது. ஆனாலும் அந்த பரிதாபமான  முகம்  இன்னும் அவனை பாதித்தது, கண் முன் வந்து வந்து இம்சித்தது . ஒரு மனம் வேண்டாம் என நெட்டிதள்ள  ,ஆனால் ஒரு மனமோ அவள் வேண்டும் என பிடிவாதம் பிடிக்க , தலையில் உள்ள நரம்புகள் எல்லாம் வெடித்து சிதறிவிடுவது போல அவனுக்கு  வலித்தது . ஆக  மேகாவை எண்ணி  கத்தி கத்தி தீரனுக்கு  தலைவலி வந்தது தான் மிச்சம் .

     ****************

அதே நேரம் சென்னையில்,

” பார்த்து உள்ள வாங்க பா ” ராதிகா ஆரத்தி எடுக்க , மேகாவின் கரங்களை பிடித்து கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்தார்  கோபால கிருஷ்ணன் .

ஹாஸ்பிடலில்  அவர் கண்முழித்தும்  அவரது கண்கள் முதலில்  மயூரியை தேட , ” அப்பா ” என்ற அவளது குரலை கேட்டதில் இருந்து  அவரது   உடல் நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட , மருத்துவர்களின் அறிவுறுத்தலின்  படி கோபால கிருஷ்ணன்  இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .

” கல்யாணத்தை வேணும்ன்னா தள்ளி போடலாமா பா ” மாத்திரையை கொடுத்தபடி கூறினாள் மேகா .

” இல்ல மேகா , குறிச்ச தேதியில கண்டிப்பா உன் கல்யாணம் நடக்கணும் , என் ஃப்ரண்ட் நிலவன் எல்லாத்தையும்  பார்த்துகிறேன்னு  சொல்லிட்டான் . நீ கவலை படாத எல்லாம் நல்லா பண்ணிரலாம் ” என்றார் .

” ஆனா அப்பா உங்களுக்கு இப்படி இருக்கும் பொழுது ” என இழுத்த மேகாவை ,

” ப்ச் அப்பா மேல நம்பிக்கை இல்லையா ” என அழுத்தமாக அவர் கேட்க ,

” அதெல்லாம் இருக்குப்பா “என்றாள் அவசரமாக .

“அப்போ தேவை இல்லாத எதையும் யோசிக்காத ” என்றவர் ,”  அக்னிக்கிட்ட பேச முடிஞ்சிதா மா ?அவரை பத்தி ஏதும் தெரிஞ்சிதா  ?அஷோக் தம்பி ஏதும் சொன்னாரா “? என எதிர்பார்ப்புடன் மகளின் முகத்தை பார்த்தார் .

மயூரி எந்த பிரச்சனையும் இல்லாமல் இல்லம் திரும்பிவிட்டாள் , என்னும் செய்தி கிடைத்த மறு நொடி அவர் தேடியது தீரனை தான் .மருத்துவமனையில்  இருக்கு பொழுதே  அவனை பற்றி கேட்ட  தந்தையிடம்   அவர்  முக்கியமான வேலை காரணமாக  டெல்லி சென்றுவிட்டார் என மேகா பதில் கூற , கோபாலகிருஷ்ணனை தொடர்ந்து அவளது மொத்த குடும்பமும் , ஏன் ரிதுராஜ் உட்பட அக்னி திடிரென்று யாரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்லாது சென்றதை பற்றி கேள்வி எழுப்ப  , மேகாவுக்கு தான்   எரிச்சலாக வந்தது .

அதிலும் அவளது தந்தை விடாமல் அவனை பற்றியே விசாரிக்க  ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் தந்தையிடம் ,

” இங்க உங்களுக்காக , நாங்க எல்லாரும் துடிச்சிட்டு இருக்கோம் ,நீங்க ஏன்பா அவரை பத்தியே கேட்குறீங்க ? அவர் ஒன்னும் நமக்கு  முக்கியம் இல்லை , இப்போதைக்கு உங்க உடம்பை மட்டும் பார்த்துக்கோங்க ” சிறு கோபத்துடன் பேசிவிட ,  அதற்கு அவர்  கூறிய பதிலில் பேச முடியாமல் உறைந்து நின்றவள் இன்று வரை , அவனை சந்தேகப்பட்டுபேசியதற்காக குற்ற உணர்ச்சியில்  மிகவும் வேதனை படுகிறாள் .

” ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் பா அவரை ரீச் பண்ண முடியல ”  மேகாவின் குரல் குற்ற உணர்ச்சியில்  நலிந்து ஒலித்தது .

” அவர்கிட்ட ஒரு நன்றி கூட நான் சொல்லல மேகா, அதான் ஒருமாதிரி நெருடலா இருக்கு ”  என்ற  தந்தையிடம் எப்படியும் அக்னியுடன் பேச ஏற்பாடு செய்வதாக கூறியவள், தண்ணீரை  அருந்த கொடுத்து , ஓய்வெடுக்க  அறிவுறுத்திவிட்டு வெளியே வந்த மேகா  அக்னிக்கு தான் உடனே தொடர்பு கொண்டாள் .வழமை போல  ஸ்விச் ஆஃப்  என்ற பதிவு செய்யப்பட்ட செய்தியே வர , மனம் சோர்ந்து நாற்காலியில் சென்று அமர்ந்தாள் .

அன்று நடந்த அனைத்தும் அவள் மனதில் படம் போல ஓடியது . தான் விட்ட வார்த்தைகளை எண்ணிப்பார்த்தாள் ! அவன் செய்த உதவிகளை எண்ணி பார்த்தாள் !

இத்தனை நாளாக அக்னி மீதே குற்றம் சுமத்திருந்த  அவளது மனம் , இப்பொழுது அவளை நோக்கி சுட்டு விரல் நீட்டியது .

” என்னையே நினைத்துக்கொண்டு இருக்காமல் ரிதுராஜை பற்றி யோசி ” என்று தீரன் சொன்ன மறு   நொடியில்  இருந்து எதாவது ஒரு வகையில் மேகா தீரனை நினைத்து கொண்டு தான் இருக்கிறாள் , இல்லை இல்லை பெண்ணவளை நினைக்க வைக்கிறான் அந்த மாயாவி !

இத்தனை நாளாக அவனை திட்டி திட்டி நினைத்து கொண்டிருந்தவள் , இப்பொழுது அவனை ஒரு  முறையாவது  பார்த்து மனதார மன்னிப்பு கேட்டுவிட மாட்டோமா என்கின்ற குற்ற உணர்ச்சியில் அவனை நினைத்து வேதனை படுகிறாள்.

*********************************

வெகு நேரம் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த தீரன், கதவு தட்டும் சத்தம் கேட்டு உள்ளே வரும்பபிடி அனுமதி கொடுக்க , உடைந்த பொருட்களையும்  தீரனையும் பார்த்தபடி உள்ளே நுழைந்த அஷோக் ,

“ஏன் டா உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற ?” சிதறி கிடந்த பொருட்களை அடுக்கியபடி வினவினான் .

” அதெல்லாம் விடு  டா , என்ன விஷயமா வந்த ,அதை சொல்லு ?” நாற்காலியில் தலையை நன்கு பின்னால் சாய்த்து , அமர்ந்து  கொண்டு கேட்டான் தீரன் .

” ரெட்டி கால் பண்ணிருந்தாரு,  மேகா அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணியாச்சாம் , அவரோட ஹெல்த் இப்போ நல்லா   இருக்காம் “தலைப்பு செய்தியை வாசிப்பது போல வாசித்த அஷோக்கின் பார்வை மொத்தமும் அக்னியின் மீது தான் இருந்தது .

“ம்ம் ” பேப்பர் வெயிட்டை உருட்டியபடி ம்ம் கொட்டினான் தீரன் .

” அவர் உன்னை பார்க்கணும்ன்னு  ரொம்ப ஆசை படுறாரு , இன்னைக்கும்  மேகா நம்ம ஆபிஸ்க்கு  கால் பண்ணிருக்கா டா  ,  இப்போ என்ன பண்றது ? “

” இதுவரை என்ன சொன்னியோ அதையே சொல்லு ” என்ற தீரன்  கணினியில் மூழ்கிவிட ,

” மேகாவை ஏண்டா அவாய்ட் பண்ற ?” என்ற அஷோக்கிடம் ” ஃபைலை  மெயில்  பண்ணிட்டேன் செக் பண்ணிட்டு மேல் பண்ணிடு ” என்ற தீரனின் முகம் நிர்மலமாக இருக்க , அஷோக் தான் மிகவும் குழம்பினான் .

” கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச  நாள் தான் டா இருக்கு ”  என அஷோக் ஆதங்கத்துடன்  கூறினான் .

” ம்ம்ம் நல்லா கிஃப்ட்டா  வாங்கிரு டா ” தன் விழிகளை கணினியின் திரையில் இருந்து அகற்றாமல் கூறினான் தீரன்  . தீரனின் பதில் அஷோக்கின் கோபத்திற்கு தூபம் போட ,

“நல்லா ஹனிமூன் பேக்கேஜா  போட்டு கொடுக்குறேன்  இன்னும் நல்லா இருக்கும் ” என அஷோக்  பற்களை கடித்தான் .

” போரா போறா ஐலண்ட் பிக்ஸ் பண்ணு  ”  அஷோக்கின் விழிகளை பார்த்தபடி கூறிய தீரனின் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளுக்கான சுவடும் இல்லாமல் இருக்க ,

” போரா போறா ஐலண்ட் தானே” என பற்களை நறநறத்து தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட  அஷோக், ”  பண்ணிறேன் டா ” என கூறிவிட்டு கோபமாக வெளியேறினான்.   

தீரனின் பேச்சுக்கும்   , அவனது செயலுக்கும் இருக்கும் மலை அளவான வித்யாசத்தை உணர்ந்த அஷோக் ,  தீரனின் எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள முடியாமல் மிகவும் திணற , இத்தனை ஆண்டுகள் தீரனுடனே இருக்கும் அஷோக்கிற்கே தீரன் ஒரு புரியாத புதிராய் தான் தெரிந்தான் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கோபாலகிருஷ்ணனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஹல்தி  , மெஹந்தி போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் அதீத ஆடம்பரம் இல்லாமல்
எளிமையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்க , கோபால கிருஷ்ணனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரும் பம்பரமாய் சுழன்றனர் , ரிதுராஜும்  தன்னால் முடிந்த உதவியை அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் செய்து வந்தான் .

இப்படியே நாட்கள் மிக வேகமாக பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் கடந்திருக்க,   திருமணத்திற்கு முந்தைய நாளும் வந்தது, காலையில்  ஹோட்டலில்  ஹால்டி  கொண்டாடியவர்கள்  , மறுநாள்  திருமணம் என்பதால் ஏற்கனவே முடிவு செய்தபடி பெண் வீட்டாரும்  மாப்பிள்ளை வீட்டாருடன்  ஹோட்டலிலே தாங்கிக்கொள்ள , நேரம் மெதுவாய் கடந்து  இரவு வேளையும் வந்தது .

ஹோட்டல் நயகராவின்  ரூஃப் டாப் பார்ட்டி ஹால்  சிவப்பு  நிற  ரோஜா , சிவப்பு   நிற  மெழுகுவர்த்தி  என காண்போரின்  மனதில் ரிச் அண்ட் ரொமான்டிக்கான உணர்வை அள்ளிக் கொடுத்தது. ஒருபக்கம்   டிஜேவின் இசைக்கேற்ப   நவநாகரீக உடை அணிந்த இளவட்டங்கள்   நடனம் ஆடிகொண்டிருக்க , இசையின் இனிமை அவனது கவனத்தை ஈர்க்க முனைந்தாலும்  அவன் கண்கள் சரணடைந்திருந்தது  மேகாவிடம் தான் .

” என்ன மேடம் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிடீங்களா? ” கண்களை சிம்மிட்டி மேகாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான் ரிதுராஜ் .

” ஹான் ” பதற்றத்துடன்  அவனை நோக்கியவளுக்கு யாரோ தன்னை நோட்டமிடுவது போல மனதிற்குள் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது .

” என்னாச்சு டியர் ஒருமாதிரி பதட்டமாகவே இருக்க “

” ஒன்னும் இல்லை ரிதுராஜ் …” என  மேகா ஆரம்பிக்கவும் ,

“ப்ச் எத்தனை தடவ சொல்றது,  ரித்து சொல்லுன்னு . என்னை தான் பேபி செல்லம்ன்னு  கூப்பிட மாட்டிக்கிற, அட்லீஸ்ட் என் பெயரையாவது செல்லமா சுருக்கி சொல்லலாமே பேபி ” என கண்ணடித்து சிரித்தான் .

” அது வந்து ரித்து அப்பாக்கு உடம்பு சரியில்லல , அதான் ஒரு மாதிரியாவே  இருக்கு ” என்றவளுக்கு மீண்டும் ஒரு சங்கடமான உணர்வு , சுற்றி தன் கண்களை சுழலவிட்டாள். தீரன் இங்கே தான் எங்கோ இருக்கிறான் என அவளது ஆள் மனம் சொல்லியது .ஆனால் அறிவோ அவன் டெல்லி சென்று நாள் ஆகிவிட்டது ,’நீ ஏன் தொட்டதுக்கு எல்லாம் அவனையே சந்தேகப்படுகிறாய் ‘ என கேள்வி கேட்டது .

“மறுபடியும் என்ன பா ?” அவளது பதற்றத்தை உள்வாங்கிக்கொண்டு கேட்டான் .

“அது வந்து ” உண்மையும் சொல்ல முடியாமல் மழுப்பவும் முடியாமல் தடுமாறினாள் .

” மேகா என்னாச்சு ?”

” வீட்டுக்கு போவோமா  மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு “

” ஏன் பா வீட்ல சொல்லிட்டு தானே வந்திருக்கோம் “

“ஆன அம்மா சீக்கிரமா வர சொன்னாங்க , கல்யாணத்தை நாளைக்கு வச்சிட்டு இப்படியெல்லாம் வெளிய வர கூடாதாம் “

“என் கூட தானே வந்திருக்க , ஆண்டிகிட்ட நான் பேசிக்கிறேன் “

” ம்ம் “

” மேகா கொஞ்சம் சிரிச்சு சந்தோஷமா இரு , இந்த நொடிய என்ஜாய் பண்ணு , இன்னைக்கு மட்டும் தான் நாம சிங்கிள் லைஃபை என்ஜாய் பண்ண முடியும் ” அவளது நடுங்கும் கரங்களை தன் கரங்களுக்குள் வைத்தபடி  கூறினான் .

இதயம்  திடிரென்று வேகமாக அடிக்க துவங்க,  மீண்டும் அதே நெருடல் , ஆனால் இந்த முறை முயன்று ரிதுராஜிடம் இயல்பாக  இருப்பது போல காட்டிக்கொண்டாலும்  , மேகாவின்  ஆள் மனம் , ‘ அது தீரன் தான் ‘ என சொன்னதையே மீண்டும் மீண்டும்  சொல்லியது. ஆனாலும் மனம் சொன்னதை புறக்கணித்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். 

” மேகா “

” ம்ம்ம் சொல்லுங்க “

” மேகா நாளைக்கு நமக்கு கல்யாணம் எப்படி ஃபீல் பண்ற “

” ம்ம் நல்லா ஃபீல் பண்றேன் ” மெல்லிய மென்னகையுடன் கூறினாள் . அவளது முகத்தையே சிறிது நேரம் பார்த்த ரிதுராஜ் , 

” ஐ லவ் யு பேபி ” தன் விழிகளை அவளது விழிகளுடன் கலக்க விட்டபடி  காதலோடு கூறினான் .

” தேங்க யு ” மீண்டும் உதட்டில் இலவச இணைப்பாக  ஒட்டவைத்த புன்னகை ஒன்று  ஒட்டிக்கொண்டது .

” தேங்க யு வா ! உன்கிட்ட ஒருத்தங்க ப்ரோபோஸ் பண்ணினா தேங்க்யூ வா சொல்லுவ ” அதிர்ச்சியுடன் விழி விரித்தான் .

” வேற என்ன சொல்லணும் ?” புரியாமல் கேட்டாள் .

” பதிலுக்கு ஐ லவ் யு ஸோ மச்ன்னு  சொல்லி  கட்டி புடிக்கலாம் , முத்தம் கொடுக்கலாம் ஏன் மொத்தமும் கொடுக்கலாம் ” கண்களை சிமிட்டி சரசம் பேசினான் .  ஏனோ அதை அவளது மனம் ரசிக்க வில்லை.

தலை குனிந்தபடி நின்றவளுக்கு இதய துடிப்பின் வேகம் மட்டும் சிறிதும் குறையவில்லை .

” மேகா ” ரிதுராஜின் குரல் குலைந்தது .

” சொல்லுங்க “

” ஒரே ஒரு தடவை ஐ லவ் யு ன்னு சொல்லேன் “

” இப்போதைக்கு அதெல்லாம்  வேண்டாமே ரித்து ,எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாமே “

” ஐ லவ் யு  வெறும் மூணே வார்த்தை , அதை சொல்றதுக்கு  கல்யாணம் வர வெயிட் பண்ணனுமா,   இது கொஞ்சம் ஓவரா இல்லை? “

” ‘ஐ லவ் யு ‘ உங்களுக்கு எப்படின்னு தெரியல ஆனா எனக்கு அது ஒரு அழகான உணர்வு  , நமக்கா தோணனும் , எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க  ப்ளீஸ் “

” ம்ம்ம் உனக்கு தோணும் பொழுது நீ சொல்லு , ஆனா எனக்கு இப்போ தோணுது ” என்றவன் வாய் நிறைய தன் காதலை கூறி சிரிக்க , அவளும் புன்னகைத்தாள் .

“இந்த ம்யூசிக் , இந்த ரோஜா பூவோட வாசனை இதையெல்லாம் பார்க்கும் பொழுது உனக்கு என்ன தோணுது மேகா”என மென்மையாக அவளது கரத்தை பிடித்தவனின் கண்கள் காதலில் மிதந்தது .

” ரித்து  வீட்டுக்கு ”  என மேகா ஆரம்பிக்கவும் ,

” மேகா ப்ளீஸ் இந்த மொமெண்ட்டை  ஸ்பாயில் பண்ணாத ” என்ற ரிதுராஜ்  அவளது கண் பார்த்து ,”ரொம்ப நேரமா கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் பட் என்னால முடியல ” என்றவன் மேகா சுதாரிப்பதற்குள்  அவளது இதழை நெருங்க , அவனை தடுப்பதற்காக  மேகா  தன் கரத்தை உயர்த்தவும்  தான்  தாமதம்  ,அந்த இடம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு  கீழ் வந்தது .

திடிரென்று  அங்கே போலீஸ் வந்ததும் அனைவரும்  அங்கும் இங்குமாய் ஓட , ரிதுராஜ் பதற்றத்தில் நிற்க , மேகாவுக்கு பயத்தில் கண்கள் குளம் கட்டியது .    

” இங்க ட்ரக்ஸ் பார்ட்டி நடக்குறதா நியூஸ் வந்திருக்கு,  ஸோ எல்லாரும் எங்களுக்கு கோஆப்பரேட் பண்ணுங்க ” என்று சீருடை அணிந்த காவலாளி கூறவும் திடுக்கிட்ட மேகாவுக்கு கைகால்கள்  அனைத்தும் நடுங்க ஆரம்பிக்க ,

” என்ன இதெல்லாம் ?பயமா இருக்கு,  நாம எதுவும்  செய்யலன்னு போய் சொல்லுங்க ” என்ற மேகாவுக்கு பதட்டம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை .

” கொஞ்சம் இரு மேகா அப்பாக்கு  கால் பண்றேன், பயப்படாத  ” என்றான் ரிதுராஜ் .

” மேகா எங்க போற ?”என ரிதுராஜ் மேகாவின் கரத்தை பிடிக்க ,

” சொல்ல போறேன் , நம்ம மேல எந்த தப்பும் இல்லைன்னு ” என்ற மேகா  அவனது கையை விட்டுவிட்டு , போலீசிடம்  பேச  செல்லவும் , ஒரு பெண் அதிகாரி ,

” மேம் இங்க ட்ரக்ஸ்  கிடைச்சிருச்சு ” என மோலி என படும் பார்ட்டி ட்ரக் பாக்கெட்டை  எடுத்து காட்ட , அத்தனையும்  சீஸ் செய்யப்பட்டதுடன்  அவர் அனைவரையும் வண்டியில் ஏற்றுமாறு கட்டளையிட்டார் .

அப்பொழுது மேகா ,” மேம் ” என ஆரம்பிக்கவும் , மேகா சொல்ல வருவதை காதில் வாங்காமல் ,” இந்த பொண்ணை வண்டியில ஏதுங்க ” என அந்த அதிகாரி மேகாவின் கரத்தை பிடிக்க, திடுக்கிட்டவள் ,

“மேம்  என்ன பண்றீங்க? என் கைய விடுங்க “என கதறியவளுக்கு  கோர்வையாக பேச முடியவில்லை,   கண்ணீரில் கரைந்தாள் .

” அதெல்லாத்தையும் அங்க வந்து சொல்லு , முதல்ல வண்டியில ஏறு ” என காக்கிசட்டை அணிந்திருந்த பெண் அதிகாரி மேகாவின் கரம் பிடித்து இழுக்க , அவளுக்கு இப்பொழுதே நிலத்திற்குள் புதைந்து விடலாம் போல இருந்தது .

“மேம் நான் சொல்றதை கொஞ்சம் ” என்ற மேகாவின் கெஞ்சல்கள் எதுவும் அவரது காதில் விழவில்லை , வலுக்கட்டாயமாக  அவளது கரம் பிடித்து இழுத்தார் ,

” மேம் ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க “என ரிதுராஜ் பதறியபடி அந்த அதிகாரியை தடுக்க முற்பட , ஆண் காவலர் ஒருவர் ரிதுராஜின் சட்டையை பிடித்து இழுத்து சென்றார் . அவமானத்தில் கூனி குறுகி நின்ற மேகாவின் குளம் கட்டிய கண்கள் ஆறாக பெருகியது .

” ஐயோ என்னை விடுங்க ” அவளால் முடியவில்லை  , வெடித்து கதறிவிட்டாள் .  ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த பெண் அதிகாரியோ மேகாவை முரட்டுத்தனமாக  பிடித்து  உள்ளே ஏற்ற முனைய,  அந்த நேரம் அந்த பெண் அதிகாரியை  நோக்கி வந்த ஆண் காவலர் அவரை தனியே அழைத்து ஏதோ பேசினார் .

தொடரும்