MIRUTHNAIN KAVITHAI IVAL 19.4

cover page-43bdf1d8

மிருதனின் கவிதை இவள் 19.4

நாளை திருமணம் என்பதால் அனைவரும் உறங்க ஆயத்தமாக , கோபாலகிருஷ்ணனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை.மேகாவின் திருமணத்தில்  எந்தவித இடையூறும் வந்துவிட கூடாது என்கிற சிந்தனையிலே ஓய்ந்து அமர்ந்திருந்தார் .

” இன்னும் தூங்காம என்ன பண்றீங்க ? ஏதும் செய்யுதா பா “சிறு பயத்துடன் கணவனின் அருகில் வந்து அமர்ந்தார் ராதிகா . மனைவியை பார்த்ததும் ஒருவித குற்ற உணர்ச்சியில் அவர் மனம் வேதனை பட்டது .

“என் மேல உனக்கு கோபமே வரலையா ராதிகா ” மனைவியின் முகம் நோக்கி வினவினார் .

” என்னை நீங்க சரியா புரிஞ்சிக்கலையேன்னு  கொஞ்சம் வருத்தம் தான் இருக்கு ,கோபம் எல்லாம் இல்லை “

” சொல்ல கூடாதுன்னு இல்லை , பிஸ்னஸ் நல்லா போனதுக்கு அப்பறம் சொல்லலாமேன்னு நினைச்சேன், இப்படி ஏமாந்து போவேன்னு நான் நினைக்கல ” என்று சொல்லும் பொழுதே அவரது குரலில் வருத்தம் தெரிய ,அது ராதிகாவை உறுத்தியது .

” கிருஷ்ணா பழசை ஏன் பேசுறீங்க  ,  நீங்க எதுவும் வேணும்ன்னு செய்யலையே , கவலை படாதீங்க நாம எல்லாத்தையும் சமாளிச்சுடலாம். அக்னி தம்பி கிட்ட பேச முடிஞ்சிதா? சம்பந்தி கிட்ட கேட்டிங்களே என்ன சொன்னாரு ? கல்யாணத்துக்கு  வருவாராமா ?”

” அவரு வேலை விஷயமா வெளியூர் போயிருக்காராம் காண்டாக்ட் பண்ண முடியலையாம் . கல்யாணத்துக்கு வருவாரான்னு தெரியலையாம் . விடு மா மேகா கல்யாணம் முடியட்டும் நாம ரெண்டு பேரும் நேரடியாக அவர் ஆபிஸ்க்கே போய் பார்த்துட்டு வந்துடலாம் . அவருக்கு நாம ரொம்பவே கடமை பட்டிருக்கிறோம் . “

” சரிங்க “

” மேகா வந்துட்டாளா ?”

” இப்போ தான் வந்தா பா ,கொஞ்சம் சோர்ந்து போய் இருந்தா, அதான் தூங்க சொல்லிட்டு வரேன். நீங்க இதை சாப்பிடுங்க  ” என்ற ராதிகா  கணவருக்கு கொடுக்க வேண்டிய இரவு வேளைக்கான மாத்திரையை உண்ண கொடுத்தார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இரவு மெல்ல மெல்ல கடந்து , திருமண நாளும் அழகாக சீக்கிரமே விடிந்திருக்க , ஆனால் விடிய விடிய எதை நினைத்தோ உறங்காமல் விழிமூடியபடி படுத்திருந்த மேகாவுக்கு உடலும் மனமும் விழித்து கிடந்தாலும் ,ஏனோ அவள் கண்களை திறக்க மனமில்லாமல்  அப்படியே படுத்திருந்தாள் .

ஆனால் ரிதுராஜோ  சீக்கிரமே எழுந்து குளித்து முடித்திருக்க , அதை கண்ட இஷிதாவுக்கு தான் தமையனை எண்ணி  ஆச்சரியமாக இருந்தது .

” ஏய்  என்னை பார்த்தது போதும் , போ சீக்கிரமா ரெடி ஆகு . நீ எழுப்புவன்னு நான் காத்துகிட்டு இருந்தா  , எனக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்  “என தன் தங்கையை  செல்லமாக கடிந்துகொண்டான் ரிதுராஜ் .

“டேய் அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவர் டா .உன் ஆர்வக் கோளாறுக்கும் ஒரு அளவில்லையாடா????”என இஷிதா சிரித்துக்கொண்டாள் .

~~~~~~~~~~~~~~`

பியூட்டி பார்லரில் இருந்து வந்த பெண் , சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்க , ஏதோ ஒருவித சிந்தனையில் ஆழ்ந்திருந்த  மகளிடம் ,

” என்னாச்சு மா யோசனையாவே இருக்க? ” என வினவினார் ராதிகா.

” இல்லை மா சும்மா தான் “

“எதை பத்தியும் யோசிக்காத , சந்தோஷமா இரு ” என்றவர் மேகாவின் நெற்றியில் முத்தம் பதித்து , அவளது  கரத்தில் புது ஆடையை கொடுத்து, அதை போட்டுகொண்டு வருமாறு   கூறியவர் , இஷிதாவை அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டு  அங்கிருந்து வெளியேறினார் .

~~~~~~~~~~~~~~~

மணமகனுக்கே உரிய அழகில் ,மேகாவை பற்றிய சிந்தனையில்  ஒருவித  எதிர்பார்ப்புடன்  ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்த ரிதுராஜ் , மேகாவின்  வரவை  எதிர் நோக்கி  அடிக்கடி    வாயிலையே பார்த்து கொண்டிருக்க,

இயற்கையான அழகுடன் செயற்கை அழகும் இணைந்துகொள்ள  , விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்த தேவதையை போல,  மணப்பெண்ணுக்குரிய  நாணம் கலந்த மெல்லிய புன்னகையுடன்   இஷிதாவின் கரம் கோர்த்தபடி   படியிறங்கி மணமேடையில் வந்து அமர்ந்தவளை கண்டதும் ரிதுராஜின் விழிகள் ஆசையோடு  தழுவி சென்றது .

” என் மேல கோபமா ? ராத்திரி கால் பண்ணினேன் நீ எடுக்கல ” மந்திரம்  உச்சரித்துக்கொண்டிருக்கும் பொழுதே இடையில்  மெதுவாய் மேகாவின் காதில் கிசுகிசுத்தான்  ரிதுராஜ் .

” வேண்டாம்ன்னு எவ்வளவு சொன்னேன் ? நீங்க தான் கேட்கல , நேத்து போலீஸ் ஸ்டேஷன் மட்டும் போயிருந்தா என்ன ஆகியிருக்கும் ” நேற்றைய நிகழ்வை நினைக்கவும் மேகாவின் குரலில் சிறு பயம் எட்டிப்பார்த்தது .

” ஸாரி டா அப்படி நடக்கும்ன்னு நான் நினைக்கல , பத்திரமா வீட்டுக்கு வந்தல்ல “

” ம்ம் . நீங்க எப்போ வந்தீங்க? “

” விசாரிக்கிறோம் ன்னு  சொல்லி படுத்திட்டாங்க ,அப்புறம் அவங்களே விட்டுட்டாங்க ” என்று மேகிவிடம் அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஐயர்,  ரிதுராஜின் கரத்தை நீட்ட சொல்லி மேகாவின் கரத்தை அவன் கரம் மீது வைக்க சொல்லி ,அவள் வைத்ததும் சிறு சடங்குகளை மேற்கொண்டார் . அந்நேரம் ரிதுராஜிடம் இருந்து சிறு முனங்கல் சத்தம்  கேட்க,  அப்பொழுது தான் கட்டு போட்டிருந்த  அவனது கரத்தை பார்த்தாள் ,” என்னாச்சு ?”என கேட்டாள் .

” ஒன்னும் இல்லை விடு, விசாரிக்கும்  போது அடிச்சிட்டாங்க ” என வெறும் வார்த்தைக்காக அவன் சொல்லிருந்தாலும் , வலியில் அவன் மிகவும் சங்கடப்பட்டான் . மேகாவுக்கும்  அவனை பார்க்க சங்கடமாக இருந்தது .

” ஸாரி மேகா , ரொம்ப நேரம் என் மேல கோபமா இருக்காத , ப்ளீஸ் இனிமே இப்படி நடக்காது  ”  மெல்லிய குரலில் கெஞ்சினான் .

” ஓகே இனிமே இப்படி பண்ணாதீங்க “என சிறு புன்னகையுடன் கூறியவள் ,அவனது வலி குறித்து விசாரிக்க ,

” அதான் நீ சிரிச்சிட்டியே பேபி ,  என் வலியெல்லாம் பிறந்து போச்சு ” என புன்னகையுடன்  ரிதுராஜ் காதல் பேச ,  உதட்டில் தவிழ்ந்த  மென்னகையுடன்  அவனை ஏறிட்டாள் . அந்த கணம் எப்பொழுதும்  தோன்றுமே  ஒருவித நெருடலான  உணர்வு ! நேற்று இரவு கூட தோன்றியதே ! அதே   அசௌகரியமான  உணர்வை அந்த நொடி மேகா உணர்ந்தாள் .

“என்னாச்சு ?” மேகாவின் முக மாற்றத்தை கண்டு புருவம் உயர்த்தி கேட்டான் ரிதுராஜ் .

” ம்ஹூம் ” தலையசைத்து மறுத்தவள்  அவனை பார்த்து புன்னகைக்க , முன் இருக்கையில்  கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த தீரனின் பார்வை மொத்தமும் கண்ணோடு கண் பார்த்தபடி  புன்னகைத்து கொண்டிருந்த ரிதுராஜ் மற்றும் மேகா மீதே இருந்தது .

நிர்மலமான  முகத்தில் உணர்ச்சிகள் அனைத்தும் துடைக்க பட்டிருக்க ,அமைதியின் திருவுருவமாய்  கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் . அவன்  அருகில் இருந்த அஷோக் நண்பனை புரியாத பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் .

தீரனின் பார்வை , அந்த நேரம்  எதற்ச்சையாக அங்கே வந்த கனகராஜின்  பார்வையில் பட , அவனது  பார்வை போன திசையை கண்டவருக்கு தலையே சுற்றி கொண்டு வந்தது , மனம் நிச்சயதார்த்தம்  அன்று நடந்த சம்பவத்துக்கு அழைத்து சென்றது ,

கனகராஜ் மேகாவை பற்றியும் , அவளது குடும்பத்தின் பொருளாதாரத்தை  பற்றியும் அவதூறாக பேசியதும் , அக்னியின் முகம் விகாரமாய் மாற ,தன் சட்டையை முழங்கை வரை ஏற்றி ,கனகராஜை வெளுத்து வாங்குவதற்காக தயாராய் நிற்பது போல நின்றவன் ,

 ” பேசணும்  வா” என கனகராஜை ஒருமையில் விழித்து ,அவரை தன் கண்கள் இடுங்க பார்த்தபடி முன்னே நடந்து செல்ல ,தீரனின் ‘ வா ‘ என்ற விழிப்பில் அதிர்ச்சியடைந்த கனகராஜ் ,

“என்ன பேசணும் ?ஏன் அவர் முகம் ஒரு மாதிரி இருக்கு ?” என  அஷோக்கிடம் கேட்டார் .

” உங்களுக்கே தெரியும் ”  என்றவன் அவரை முன்னே போகும் படி செய்கை செய்ய , தீரனின் பார்வையால் ஏற்பட்ட பதற்றத்துடன்  சென்றார் கனகராஜ் .

கனகராஜுக்கு முன்னே வந்து நின்று , மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி அவரை மேல் இருந்து கீழ் பார்த்தான் தீரன் .

தீரனின் பார்வையிலே கனகராஜுக்கு வியர்த்து வழிய ,” சார் என்னாச்சு? ” என்றார் வியர்வையை துடைத்தபடி  .

ஆனால் பதில் சொல்லாமல் தன் கையில் இருந்த சில்வர் நிற காப்பை ஏற்றிவிட்டவன் கரங்கள் அடுத்து இடியாக இறங்கியது என்னவோ கனகராஜின் கன்னத்தில் தான். அவரோ  கன்னத்தை பொத்தி கொண்டு தீரனை ‘ நான் என்ன செஞ்சேன்? ‘ என்பது போல பயத்துடன் பார்க்க ,

” வாங்குன கடன் என்னாச்சு ” கையை உதறியபடி நச்சுக்குழலை  வாயில் வைத்து, புகையை கனகராஜின் முகத்தில் ஊதியபடி கேட்டான் .

” போன  மாசம் வட்டி கட்டிட்டேன் சார் ” எச்சிலை விழுங்கியபடி கூறினார் , உள்ளுக்குள் ஒருவித அவமான உணர்வு .

” அப்போ இந்த மாசம் ” புருவம் உயர்த்தி கேட்டான் தீரன் .

” இனிமே தான் ” கனகராஜ் இழுக்கவும் ,

” ஒருவாரம் டைம், மொத்த பணமும் என் டேபிளுக்கு வந்திருக்கனும் , இல்லை நீ இருக்க மாட்ட ” என்றான் அழுத்தமாக .

” அக்னி சார் என்ன இது? நாம அப்படியா பழகிருக்கோம் , நாம புதுசா பிஸ்னஸ் எல்லாம் பண்றதா டீல் பேசினோமே, அதுக்கான  வேலை தான் இப்போ போய்ட்டு இருக்கு ,அதை நம்பி நான் நிறைய பிளான் பண்ணிருக்கேன் சார்   , இப்போ இப்படி சொல்றீங்க..” கெஞ்சினார் .

” அஷோக் டீல கன்செல் பண்ணு ” என்ற தீரன் வேகமாக நடக்க, முதலில் திகைத்த கனகராஜ் ,பிறகு அவன் பின்னாலே சென்று ,

” அக்னி சார் ப்ளீஸ் திடீர்ன்னு என்னாச்சு?பிரச்சனை எதுவா இருந்தாலும் சொல்லுங்க, ஸரி பண்ணிடலாம் , தயவு செஞ்சு டீலை மட்டும் கன்செல் பண்ணிடாதீங்க “அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் , மேல் மூச்சு வாங்க அவன் பின்னாலே சென்றார் .

வேகமாக நடந்து சென்ற தீரனின்   நடை சட்டென்று  தடைபட , மூச்சை வேகமாக இழுத்து விட்டபடி அவன் முன்னே சென்று நின்றவர் ,

” ப்ளீஸ் அக்னி சார் இந்த ப்ராஜெக்ட்ல , உங்கள நம்பி நிறைய வேலை பார்த்திருக்கேன் சார் ” சோர்வுடன் கெஞ்சினார் , அவர் பேச்சில் குறுக்கிடாமல் நாடியவை நீவியபடி அவரை அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தான் தீரன்  . 

இதுவும் அவனது இயல்பில் ஒன்று , அதீத கோபம் வந்தால்  , அவன் இப்படி தான் ,எதிராளியை பேசவிட்டோ இல்லை அவர்களது செயல்களையோ அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பான் . ஆனால் அதற்குள் அவன் பார்வை ஒன்றே எதிராளியை நடுங்க வைத்து விடும் .

அந்த மாதிரியான நேரங்களில்  அஷோகால் கூட அவன் என்ன நினைக்கிறான்? அவனது மனநிலை என்ன ? என்பதை  புரிந்து கொள்ள முடியாது .

” மேகாவை உனக்கு எவ்வளவு நாளா தெரியும் ?”

” சின்ன பொண்ணா இருக்கும் பொழுதே தெரியும் சார், என் பொண்ணோட ஃப்ரண்டு  தான் அந்த பொண்ணு “

” ஹாங் , உன் பொண்ணை உனக்கு எவ்வளவு நாளா தெரியும் ?”என்று தீரன் கேட்க , கனகராஜ் விழித்தான் .

” ம்ம்ம் ” உறுமினான் .

” பிறந்ததில்  இருந்தே  ” அவருக்கு ஏதோ ஒன்று புரிய , குரல் நலிந்தது.

” அப்போ உன் பொண்ணை பத்தியும் அப்படி தான் சொல்லுவியா ” தீரன் பார்த்த பார்வையும் அவனது கேள்வியும் கனகராஜுக்கு  நடுக்கத்தை கொடுத்தது .

“கேள்வி கேட்டா பதில் வேணும் “என தீரன் அழுத்தமாக தன் பற்களை கடித்தான் .

” ஊர்ல இப்போ நடக்குறத ,தானே சார் சொன்னேன் ” என்றார் உளறலாக ,

” ஊர்ல என்ன நடந்தா  உனக்கென்ன  ?நீ எதுக்கு மேகாவை அப்படி சொன்ன ?” காரின் பனெட்டில்     ஏறி அமர்ந்த தீரனின் விரலில் அவனது ஆறாம் விரல் துணைக்கு வந்துவிட , கனகராஜுக்கு முழி பிதுங்கியது .

“சாரி சார் இனிமே அப்படி பேச மாட்டேன் ” சரணடைந்தார் .

” அது இருக்கட்டும் , மேகாவ ஏன் அப்படி சொன்ன ?”மீண்டும்  மீண்டும் ஒரே கேள்வி கேட்டே அவரை திணறடித்தான் . தீரனின் பார்வையின் கூர்மை கனகராஜை கலங்கடித்தது.

” அது , தெரியாம சொல்லிட்டேன் சார்” அவனை சமாளிக்க முடியாமல் தடுமாறினார் .

” தெரியாம ஏண்டா சொன்ன ?” தீரனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் , ஒருமையில் சாதாரணமாக  வந்து விழுந்தது , கனகராஜ் அவமானத்தில்  தலை கவிழ்ந்தார் .

” சார் ” அவரால் பேச முடியவில்லை .

” மேகவ யாருன்னு நினைச்சு சொன்ன ? எப்படி டா நீ  அப்படி சொல்லலாம்? அவளை யாருன்னு நினைச்ச  ” விரல் இடுக்கில் தகித்து கொண்டிருந்த நச்சு குழலை  காற்றில்  சுண்டி பறக்க விட்டபடி பேண்ட்டில் இருந்து கீழே குதித்து இறங்கிய தீரன்,  கனகராஜின் குரல்வளையை நெறித்தபடி கேட்க , பேச முடியாமல் திணறியவர் கைகளை கூப்பியபடி உயிருக்காக யாசித்தார்.

அஷோக்கை பார்த்தான் ஆயிரம் இருந்தாலும் கனகராஜ் இஷிதாவின் தந்தை , இஷிதா தன் நண்பனின் காதலி , அவன் என்ன நினைக்கிறான் ?என முகத்தில் ஆராய்ந்தான். அஷோக் எதுவும் பேச வில்லை , ஆனால் அவனது உணர்வுகளை தீரனால் புரிந்து கொள்ள முடிந்தது , தன் பிடியை மெல்ல மெல்ல தளர்த்தினான் .

” நீங்க என்ன சொன்னாலும் செய்யிறேன், என்னை மன்னிச்சிருங்க அக்னி சார் , இனிமே இப்படி சொல்ல மாட்டேன் ” தன் தொண்டையை பிடித்து கொண்டு செறுமியவருக்கு பேசவே சிரமமாக இருந்தது .

” நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ , இந்த கல்யாணம் முடியிற வரைக்கும் , நான் என்ன சொல்றேனோ அது மட்டும் தான் நடக்கணும் ” என்றவனுக்கு பயத்துடன் தலையசைத்தார் .

” இனிமே உன் மகன் என் கண்ணுலையே பட கூடாது , மீறி பட்டான் இனிமே அவனை நீ என்னைக்கும் பார்க்க முடியாத படி பண்ணிருவேன் ” என மிக அழுத்தமாகவும்  அமைதியாகவும் கூறியவனை கனகராஜ் பீதியுடன் பார்த்தார் .

கைகள் தானாக தனது கன்னத்தை தடவ , இப்பொழுதும் அவன் அடித்த இடம் எரிய , தன் நினைவில் இருந்து மீண்டவர் , மீண்டும் அக்னியை பார்த்தார் அன்று போலவே அவனது பார்வை இன்றும்  பயமுறுத்தியது .

தீரனை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறார் . அரசியல் பின்புலம், பணம் பலம்  என ஜாம்பவானாக இருக்கும் தீரனை  பகைத்து கொண்டு தொழில் செய்வது இல்லை இல்லை உயிரோடு வாழ்வது என்பதே   இயலாத காரியம் . தான் இருக்கும் இடத்தில இருந்து கொண்டே பலரை ஆட்டி வைப்பவன் அவன்! அவன் முன்னே இந்த ரிதுராஜ் வேறு ?

சும்மா இருப்பானா ! மகனை எதுவும் செய்து விடுவானோ! உள்ளம் பதறியது . தன் சொல்லை மீறி இங்கு வந்தது மட்டுமில்லாமல்  மேகாவுடன் சிரித்து கொண்டிருந்கும்  ரிதுராஜ் மீது கடும் ஆத்திரம் வந்தது. காதல் என்கிற பெயரில் தேவையில்லாமல்  அக்னியின் கோபத்தை சம்பாதித்து , பிரச்சனையை இழுத்து விட்டு, அதன் வீரியத்தை அறியாமல் மேகாவை காதல் வழிய பார்த்தபடி  அமர்ந்திருந்த மகனை ஆத்திரத்துடன் பார்த்தார் .

அந்த இடத்தில் மகனை ஒன்றும் செய்ய முடியாததால் அக்னியிடம் வந்த கனகராஜ் ,” சார் அவன் ஏதோ தெரியாம ” என இழுக்க, அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த தீரன் எதுவும்  பேசாமல் அமைதியாகவே  அமர்ந்திருக்க  ,

” அக்னி தம்பி ” என்றபடி வேகமாக வந்த கோபால கிருஷ்ணன்  தீரனை  மகிழ்ச்சியுடன் கட்டி தழுவினார் . 

அப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்த  மேகா முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் , பின்பு அவளது  மனம்  அவனிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்டு , கைமாறு கருதாமல் தன் குடும்பத்திற்கு அவன் செய்த உதவிக்கு நன்றியும் கூறி,  இன்றோடு தன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சிக்கு விடுதலை கொடுத்து விடலாம் என்கின்ற எண்ணத்தில் இருக்க , இத்தனை நாட்கள் எங்கோ  சென்றிருந்தவன்  திடிரென்று இன்று வர காரணம் என்னவாக இருக்கும் என்பதை பற்றி சிந்திக்க தவறியது .

ஆனால் அக்னியை அங்கே பார்த்ததில் இருந்து இஷிதாவுக்கு மட்டும் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது ,இருந்தும் சபையில் அத்தனை பேருக்கு முன்னால் என்ன செய்துவிடுவான் என்று எண்ணியவள் ,தீரன் மற்றும் மித்ரனின் நடவடிக்கைகளை கவனித்தபடி எச்சரிக்கையுடன் இருந்தாள் .

நீல நிற அழகான லெஹங்காவில் தேவதையாக ரிதுராஜின் அருகே அமர்ந்திருந்த மேகாவின் பார்வை, அவ்வவ்பொழுது ஒருவித குற்ற உணர்ச்சியுடன் தீரனையே சுற்றி சுற்றி வர , ஆனால் தீரேனோ ஒரு நொடி கூட மேகா பக்கம் தன் பார்வையை செலுத்தவில்லை .

” ரிலாக்ஸ் அங்கிள் இந்த நிலைமையில நீங்க இவ்வளவு உணர்ச்சிவசப்பட கூடாது ” அவரது கரம் பிடித்து தன் அருகில் அமரவைத்தபடி பேசினான் தீரன்  .

” சொல்லாம கிளம்பிடீங்களே, எங்க மேல எதுவும் வருத்தமா ?” வருத்தத்துடன் கேட்டார் .

” நோ நோ அப்படியெல்லாம் இல்லை , முக்கியமான வேலை உடனே கிளம்ப வேண்டி இருந்தது , எல்லாரும் ரொம்ப டென்ஷனா இருந்தாங்க , தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு  கிளம்பிட்டேன் . உங்கள  கூட இருந்து பார்த்துக்க முடியலையேன்னு தான் ரொம்பவே வருத்தமா இருந்துச்சு “

” நீங்க இதுவரை எனக்கும் , என் குடும்பத்துக்கும் செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாம இருக்கோம் . நீங்க இதுக்கெல்லாம் வருத்தமே பட கூடாது ” அவன் கரத்தை பிடித்து கொண்டு கூறினார் .

” நன்றியெல்லாம் எதிர்பார்த்து நான் எதுவும் செய்யல அங்கிள் , ரிலாக்ஸ்சா இருங்க “

” பணத்தை எப்படியும் திரும்ப குடுத்திருவேன் தம்பி,  மேகா கல்யாணம் முடிஞ்சதும் …. ” என் அவர் ஆரம்பிக்கும் பொழுதே  ,

“இப்போ நான் உங்ககிட்ட அதை பத்தி கேட்டேனா? பொண்ணுக்கு கல்யாணம்,  எதை பத்தியும்  யோசிக்காம சந்தோஷமா இருங்க ” தன் மறுக்கரத்தால் அவர் கரத்தை பிடித்துக்கொண்டு கூறினான் . மனம் நிறைய  புன்னகைத்தார் கோபால கிருஷ்ணன் .

~~~~~~~~~~~~~~~

ஒரு சில சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்திருக்க , மணமக்களிடம்  மாற்று உடையை கொடுத்து உடை மாற்றி கொண்டு வர பண்டிதர் கூற , மணமக்கள் இருவரும்  முகூர்த்த ஆடையை மாற்றி வர ,அவரவர் அறைக்கு சென்றனர் .

மணமேடையில் ” கங்கிராட்ஸ் டா , தாலி கட்டினதும் என்னை மறந்திராத “என்று  ரிதுராஜிற்கு பின்னாடி இருந்து இஷிதா குரல் கொடுத்தாள்.

“ம்ம் ” என்று சிறு புன்னகையை சிந்தினான் , அதில் கொஞ்சமும் உயிர் இல்லாமல் இருக்க , அதை கண்டு கொண்ட இஷிதா ,

” என்னடா ஒரு மாதிரியா இருக்க என்னாச்சு ?” என கேட்டாள் .

“நத்திங் , ஒன்னும் இல்லையே ” அவன் கண்கள் மேகாவையும்,  தனது தந்தையையும்  ஒரு நொடி வருடி மீண்டது . தமையனை ஒருகணம் ஊன்றி பார்த்த இஷிதா ,

” எதை பத்தியும் யோசிக்காத டா ” என்று கூறிவிட்டு அஷோக்கை பார்த்தாள்!   முகம் கடுகடுவென இருந்தது ,’ ஓ சார் கோபமா இருக்காரா,  ம்ம்ம் முதல்ல அண்ணன் கல்யாணம் முடியட்டும் அப்புறம் உன்னை கவனிக்கிறேன் ‘ என மென்னகையுடன் தன் மனதிற்குள் கூறிக்கொண்டவள் . மேகாவின்  காதில் ஏதோ கூறி சிரிக்க அவளும் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் .

நிமிடங்கள் கடந்து  முகூர்த்த நேரமும் நெருங்கி இருக்க ,இன்னும் சில மணிநேரத்தில் மேகாவின் திருமணம் !அருகில் மணமகன் கோலத்தில் கழுத்தில் மாலையுடன் ரிதுராஜ்!  கெட்டிமேள சத்தத்தை எதிர்பார்த்து ஆவலுடன் உற்றார் உறவினர்கள் ! என்று இருக்க , கையில் அச்சத்தையுடன்  அவர்களை விட  ஆர்வமாக மணமக்களையே பார்த்தபடி நிற்கும் தீரனை கண்ட மித்ரனுக்கு பயங்கர ஆத்திரம் வர ,அவன் ,” தீரா ” என ஆரம்பிக்கவும் ,

” என்னால இந்த கல்யாணத்தை பண்ண முடியாது “என அழுத்தமாக கூறிவிட்டு  கண்களில் நீர் திரள எழுந்து சென்ற ரிதுராஜை அனைவரும்  அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர்.

ஆனால் மேகாவின் விழிகள் மட்டும் தீரனை தான் பார்த்தது , அவனது விழிகளும் அவளை தான் பார்த்தது . அவமானத்தில் அவளது கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது .   அவள் மனம் அடிவாங்கியது , அவள் காயப்பட்டாள்!  வலியில் அவள் இதழ்கள் துடித்தது . தேகம் நடுங்கியது ! அவளது முகத்தில் தோன்றிய மாற்றத்தை தீரன் நன்றாக  கவனித்தான்  . அவனது  இதழ்களில் இப்பொழுது திருப்தியான புன்னகை  மலர்ந்தது .

நிராகரிப்பு ! ஏமாற்றம் ! நம்பிக்கை துரோகம் ! வலி ! இதை தானே நீ எனக்கு கொடுத்தாய் ! அன்று எனக்கும் அப்படி தானே வலித்தது ! – என்ற அவன் மனம்  ,அவளது வலியை ஆனந்தமாய்  உள்வாங்க , அவள் கொடுத்ததை வட்டியுடன், அவளுக்கே திருப்பி கொடுத்து , நான் தேர்ந்த வணிகன் என்பதை தீரன் நிரூபிக்க .சாபம் பெற்ற சிலை போல நின்றிருந்தாள் மேகா .

தீரனின் இதழில் தவிழ்ந்த புன்னகையை கவனித்த அஷோக் ,” டேய் ” என நண்பனை பார்க்க ,  தீரன் அப்பொழுதும் எதுவும் பேசாமல் மௌனமாய் நிற்க  , தீரனின் இந்த மௌனமும் , அவன் இதழில் தவிழ்ந்த மர்ம புன்னகையும்  அஷோக்கையே கலங்கடித்தது .

~~~~~~~~~~~~~~~~`

” என்ன நடக்குது இங்க ? “மேகாவுடைய தந்தையின் குரல், சபையில் நிலவிய சலசலப்பை  உடைத்து கொண்டு சீறி ஒலித்தது . அவமானத்தில்  கண்ணீருடன் நிற்கும் மகளை அவரால்  பார்க்க முடியவில்லை .

” கொஞ்சம் பொறுமையா இருங்க பா ” என்ற ராதிகா , கனகராஜை பார்த்தார் ,

” என்ன அண்ணா இது ?மாப்பிள்ளை என்ன சொல்லிட்டு போறாரு , எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் ,  மாப்பிள்ளைக்கிட்ட என்னனு கேளுங்க ” என கேட்கும் பொழுதே துக்கத்தில் அவர் தொண்டை அடைத்தது .

” தள்ளு ராதிகா ” மனைவியை தள்ளியபடி முன்னே வந்த கோபாலகிருஷ்ணனின் விழிகள் கனகராஜை கேள்வி கேட்டது .

~~~~~~~~~~~~~~~~~~~~~`

” உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதும் பிரச்சனையா ?” தனிமையில் ராதிகா மகளிடம் கேள்வி கேட்டார் .

” இல்லை மா ” அழுதபடி மேகா கூறினாள் .

” இல்லைன்னா என்னடி அர்த்தம் “

” அக்காவை ஏன்மா திட்ற ?” மயூரி அக்காவிற்காக  பரிந்து பேச , ராதிகாவோ  மகளின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடுமோ  என்கின்ற பயத்தில் ,

” அவர் வேற எதுவும் சொன்னாரா ?”என கேட்டார் .

” இல்லை மா “

” நீ ஏதும் சண்டை போட்டியா ?”

” இல்லைம்மா நல்லா தான் பேசினாரு ” மேகா கலங்கினாள் !  மகளின் கலக்கம் கண்டு ராதிகாவின் தாய் உள்ளம் பதறியது . அழும் மகளை கட்டி தழுவிக்கொண்டார்  .

~~~~~~~~~~~~~~~~~~~

ஒருபுறம் ” என்னடா நினைச்சிட்டு இருக்க ” என தமையனின் சட்டையை பிடித்து இஷிதா சீறிக்கொண்டிருக்க ,

“உங்க பையன் என்ன பேசிட்டு போறான் ?” மரியாதை தேய்ந்தது , என் மகளை  அழவைத்த உன் மகனுக்கு என்ன மரியாதை ? வேண்டி கிடக்கு என்றது அவரது குரல் .

” அதான் கேட்ருப்பீங்களே “வெகு நிதானமாக சொன்ன கனகராஜின்  குரலில் உதாசீனம் எட்டிப்பார்த்தது .

” கனகராஜ் ” என்று சீறிய கோபால கிருஷ்ணன் கனகராஜின் சட்டையை பிடிக்க முற்பட , அவரை பிடித்து கொண்ட  தீரன் ,

” பொறுமையா பேசிக்கலாம் அங்கிள் ” என்றான், அவன் பார்வை கனகராஜை சந்தித்தது . 

” கோபால கிருஷ்ணன் அவன் அப்படி பேசினது எனக்கே ஷாக் தான் , எவ்வளவோ பேசிட்டேன் கல்யாணம் பண்ண மாட்டேன்னு உறுதியா சொல்றான் .நான் என்ன பண்றது ?” அக்னி பார்த்த பார்வையில் கனகராஜின் குரல் தானாக தாழ்ந்து பணிந்தது .   அனைத்தையும்  செய்து விட்டு ஏதும் அறியாதவன் போல நிற்கும் தீரனை பார்க்க கனகராஜிக்கு கோபமாக வந்தது , இருந்து ஒன்றும் செய்ய முடியாமல்  நிற்கும் தன் கையறுநிலையை எண்ணி அமைதியாக  நின்றார் .

 ” என்ன சொல்றீங்க அண்ணா ? இப்போ போய் இப்படி சொல்றீங்களே ?”கோபம் வந்தாலும் பொறுமையாக கேட்டாள் ராதிகா ,  அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது .

” அவன்  முடியாதுன்னு சொல்றான் நான் என்ன பண்றது? ” கையை விரித்தார் .

” போய் பேசி உங்க பையன என் பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லுங்க ” ராதிகாவின் குரலில் இப்பொழுது கோபம்  எட்டிப்பார்த்தது .

கோபால கிருஷ்ணன் மனைவியை அதட்டிவிட்டு ,  கனகராஜிடம்  ,” உங்க  பையனையும்  உங்க  வீட்டு ஆளுங்களையும் கூட்டிட்டு முதல்ல இங்க இருந்து கிளம்புங்க ” கடுமை ஏறிய குரலில் கத்தினார் .

” என்ன பண்றீங்க ? அவங்ககிட்ட பொறுமையா பேசுங்க, போக சொல்றீங்க , உங்க பொண்ணுக்கு என்ன பதில் சொல்லுவீங்க  ” கணவனிடம் முறையிட்டார் .

” பேசி ! என்ன பண்ண போற ?இனிமே அவனே வந்து என் கால்ல விழுந்து கெஞ்சினாலும் , என் பொண்ணை அவனுக்கு தர மாட்டேன் ” என்றவர் கனகராஜிடம் ,

” நல்லா கேட்கோங்க உங்க பையனை விட பெட்டரான மாப்பிள்ளையா பார்த்து  என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் . இதே மேடையில  என் பொண்ணு கல்யாணம் நடக்கும் . உங்க பையனை அப்படியே பொத்தி பத்திரமா வச்சுக்கோங்க,  என் கண்ணுல அவன் பட கூடாது  ” என்ற கோபால கிருஷ்ணனிடம் ,

” தாராளாமா பண்ணி வைங்க , என் பையனை  பாதுகாக்க  எனக்கு தெரியும் ” என்ற  கனகராஜ்  அங்கிருந்து கிளம்பவும்,  மேகாவின் அறைக்குள் ரிதுராஜ் நுழைவதை கண்ட கோபால கிருஷ்ணன் ,” நில்லு டா ” என்றபடி வேகமாக சென்று அவனது சட்டையை பிடித்து ” எங்க டா போற? வெளிய போ டா ” என கத்தினார் .அவனோ மிக பொறுமையாக ,

” அங்கிள் உங்க கோபம் புரியுது, மேகாவை மட்டும் ஒரே ஒரு தடவை பார்க்க அலோ பண்ணுங்க, ஸாரி சொல்லிட்டு போயிடுறேன் ” என்று கூற ,

” இவ்வளவும் பண்ணிட்டு என் பொண்ணு கூட உனக்கென்னடா பேச்சு? ” என கன்னம் அதிர கத்தியவர் அவனை அறைய தன் கையை ஒங்க , அதைக்கண்ட கனகராஜ் அவரை தடுக்க முற்பட , அதற்குள் முந்திக்கொண்ட அக்னி அஷோக்கிடம் அவர்களை வெளியே அழைத்து செல்லுமாறு தன் கண்களாலே செய்கை செய்து விட்டு  ,கோபாலகிருஷ்ணனை  மிக சிரமப்பட்டு அங்கிருந்து தனியே  அழைத்து சென்றான் .

நடந்த எதையுமே அவரால் மறக்க முடியவில்லை , நினைக்க நினைக்க முகம் சிவந்து ரத்தம்கொதித்தது . ஆத்திரமும் , கோபமும் அவர் நெஞ்சை அடைத்தது . வேதனை , காரிருள்  போல அவரது மனதை ஆட்கொள்ள , மிகவும் துடித்தார் . தலை கவிழ்ந்தபடி வெகு நேரமாக அமர்ந்திருந்தவர்  தலை நிமிர்ந்த பொழுது அங்கே அக்னி தான் நின்றிருந்தான் . மேகாவின் கண்ணீரை கண்டு வராத கலக்கம்  , உடைந்து போய் அமர்ந்திருக்கும் கோபாலகிருஷ்ணனை   பார்க்கும் பொழுது வந்தது . அக்னியின் மனம் இப்பொழுது உறுத்தியது . எதுவும் பேசாமல் அமைதியாக  நின்றான் .

” அக்னி ” மிகவும் பலவீனமான குரலில்  மெல்ல அழைத்தார் .

” சொல்லுங்க அங்கிள் “

” மறுபடியும் உங்க முன்னாடி உதவி   கேட்டு தான் நிக்கிறேன் தம்பி , எனக்கு வேற வழி தெரியல ” தடுமாற்றத்துடன்  பேசினார் .

கோபாலகிருஷ்ணனின்  தடுமாற்றத்தை உணர்ந்தவன் உடனே அவர் முன்பு மண்டியிட்டு,  அமர்ந்த நிலையிலே  அவரது கரங்களை ஆதரவாக பிடித்துக்கொண்டு ,

” தயங்காம கேளுங்க , என்னால முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன் ” ஏனோ அவரது கலக்கம் அவனை வெகுவாய் பாதித்தது .

”  நீங்க யாருன்னு முழுசா எனக்கு தெரியாது,  உங்க ஸ்டேட்டஸ் எனக்கு தெரியாது , இப்போ நான் கேட்க போறது சுயநலமா கூட உங்களுக்கு தோணலாம் ” என்று அவன் முகத்தை பார்த்து கூறியவருக்கு ,  மனதில் எண்ணியதை சொல்ல சிறு அவகாசம் தேவைப்பட்டிருக்க வேண்டும் போல, சட்டென்று தலை கவிழ்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

ஆனால் அவன் தான் தேர்ந்த வணிகன் ஆகிற்றே அவர் சொல்லாமலே அவர் கேட்க போகும் விடயத்தை கணித்துவிட ,அழுத்தக்காரன் ! அமைதியாகவே இருந்தான் .

மீண்டும் அவன் முகம் பார்த்தார் ,

” கேளுங்க அங்கிள் ” அவர் தயக்கம் உணர்ந்து ஊக்கப்படுத்தினான் .

” என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவீங்களா தம்பி ” மனதில் அழுதிக்கொண்டிருந்த விடயத்தை கேட்டுவிட்டு,  பதில் வேண்டி அவன் முகம்  பார்த்தார் .

” எதை வச்சு என்னை தேர்ந்தெடுத்தீங்க ?”

“உன்னை நம்புறேன் பா ,என்னைவிட என் பொண்ணை நீ நல்லா பார்த்துக்குவன்னு என் மனசு சொல்லுது ” விழிகளில் நம்பிக்கை மிளிர கூறினார் .

தீரன்  என்ன ஆசை பட்டானோ , எதற்காக  இவ்வளவும்  செய்தானோ , அது அவன் யாசிக்காமலே , அவன் முன் இருக்கின்றது .  இவன் தலையசைத்தால் போதும் . எத்தனை மகிழ்ச்சியான தருணம் இது  ! நியாயப்படி இவன்,  இந்த தீரன் என்கிற தேர்ந்த வணிகன்   மகிழ்ந்திருக்க வேண்டும்  , ஆனால் கலங்கினான் ! ஒருவேளை அந்த தேர்ந்த வணிகனுக்குள் மனிதன் இருந்திருப்பானோ ? அது அவனுக்கே வெளிச்சம் ! ஆனால் கலங்கினான் ! தன்னவளின் கண்ணீருக்கு கலங்காதவன்  , ஒரு தந்தையின் நம்பிக்கை நிறைந்த வார்த்தையில்  கலங்கினான் !

~~~~~~~~~~~~~~~~~~~~~~

” மேகா எங்க ?”அறையின் வாசலில் கரங்களை பிசைந்தபடி நின்றிருந்த மனைவியை பார்த்து வினவினார் .

” ரூம்ல இருக்கா “

“இப்போ எப்படி இருக்கா ?”

” ரொம்ப அழுதா, நாம கஷ்டப்படுவோம்ன்னு  , ரொம்ப வெளி காட்டிக்க மாட்டிக்கிறா ” என்றார் ராதிகா .

விழிகளை அழுத்தமாக மூடி திறந்தவர் , மகளின் அறைக்குள் சென்றார் .ஜன்னலை வெறித்தபடி இலக்கில்லாமல்  நின்றிருந்தாள் மேகா ,

” மேகா ” அவர் அழைத்ததும்  திரும்பி பார்த்தாள் . மகளின் வீங்கிய கண்களும் , சிவந்த முகமும்  கோபால கிருஷ்ணனை வருத்தியது,  ‘ எப்படி இருந்த என் மகள் சில மணி துளியில் இப்படி சோர்ந்துவிட்டாளே!  ‘ மனம் அடித்துக்கொண்டது.

” இங்க வா டா ” அழைத்ததும்  ஓடி வந்து தந்தையின் மார்பில் சாய்ந்து அழ துவங்கினாள் .

” நோ டா, நீ அப்பாவோட  சந்தோசம்  , எப்பவும் நீ அழவே கூடாது , அப்பா இருக்கேன் டா ” மகளை தேற்றும்  பொழுதே அவரும் அழுதார் .

” ப்ளீஸ் பா அழாதீங்க ” தந்தையின் கண்ணீரை துடைத்தபடி தன் கண்ணீரையும் துடைத்தாள் .

” செல்லம் அப்பாவை நம்புறியா டா ” மகளின் தலையை வாஞ்சையுடன்  தடவி கொண்டே கேட்டார் .

” ஆமா பா ” வேகமாக தலையசைத்தாள் .

“அப்பா  என்ன பண்ணினாலும் உன் நல்லதுக்கு தான் டா பண்ணுவேன் “

” தெரியும் பா “

” அப்பா உன்கிட்ட கேட்காம ஒரு முடிவு எடுத்திருக்கேன் டா , சரி சொல்லுவியா மா “

” கண்டிப்பா பா ” தந்தை எந்த விதத்திலும்  காயப்பட்டுவிட கூடாது என்கின்ற  அக்கறையில் வேகமாக தலையசைத்தாள்  மேகா .

“அக்னி ரொம்ப நல்லா பையன் மா ” அவர் சொல்லும் பொழுதே மேகா பயந்து போய் தந்தையை பார்த்தாள் .

” நோ பா ” அவரது கை வளைவில்  இருந்து பின்னால் சென்றாள் .

” மேகா “

” அப்பா ப்ளீஸ் எனக்கு கல்யாணமே வேண்டாம் ,கடைசி வர உங்க பொண்ணாவே இருந்திர்றேன் ப்ளீஸ் ” அக்னியின் பெயரை கேட்டதுக்கு மேகாவின் கரங்கள் பயத்தில் வேகமாக நடுங்க ஆரம்பித்தது .

” மேகா உன் பயம் புரியுது , ரிதுராஜ் விஷயம் மாதிரி இதுவும் ஆகிரும்ன்னு நீ பயப்படுற,  ஆனா அக்னி ரொம்ப நல்லா பையன் மா . அப்பாக்கு ஒரு சான்ஸ் குடு ” தந்தையை இயலாமையுடன் நோக்கினாள்.

” ஆனா அப்பா “

” அப்போ அப்பா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா டா “

” நிறையவே இருக்கு பா “

” அப்போ அக்னியை கல்யாணம் பண்ணிக்க சரி சொல்லுடா ,அவன் உன்னை நல்லா பார்த்துக்குவான் .எதை பத்தியும்   யோசிக்காம சரி சொல்லு டா ” ஒரு நொடி அவனுடன் கழிப்பதே  கடினம் ,இதில் வாழ்க்கை முழுவதும் அவனுடன் என்றால் ? எப்படி முடியும் ” இதயம் இப்பொழுதே வேகமாக துடிக்க துவங்கியது .

~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்க நிற பட்டுத்தி நகைகள்  மேனியை அலங்கரிக்க,  தங்கக் கரையிட்ட  வெள்ளை நிற பட்டு வேஷ்டி மற்றும் சட்டையில் கூடுதல் ஆண்மையின்  திருவுளமாய் கம்பீரத்துடன்   குருக்கள்   கூறிய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்த   அக்னி தீரனின்  அருகே வந்து அமர்ந்தாள் மேக வர்ஷினி  . கருமமே கண்ணாக சிரத்தையுடன்  மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்த  தீரனை ஒரு கணம் பார்த்தாள் . தந்திரக்காரன்  ! தன்னை புரட்டி போட்டுக்கொண்டிருக்கும்  ஒவ்வொரு  உணர்வுகளையும்  தனக்குள்ளே  அழகாய் மறைத்தவன் எதுவும் அறியாதது போல மிக இயல்பாக அமர்ந்திருந்தான் .

அவளுக்கோ அவனை பார்த்ததும்  கண்களில் கண்ணீர் திரை யிட்டிருந்தது.

‘ நல்லதோ கெட்டதோ  இனி உன் வாழ்க்கை பயணம் , இவனுடனே ‘ என்றது மனம்  , கண்ணை கட்டிக்கொண்டு வந்தது .  வயிற்றில் இருந்து உருண்டு வந்த பயப்பந்து  அவள் நெஞ்சை அடைக்க ,கண்ணீரை துடைத்தபடி அமர்ந்திருந்தாள் .

” தீரா  தாலி ” என தன் சட்டை பையில் இருந்த டப்பாவை  அஷோக் புன்னகையுடன் வேகமாக எடுக்க , தன் பார்வையாலே  நண்பனை அடக்கிய அக்னி அதை உள்ளே வைக்கும் படி கண்களால் செய்கை செய்ய .  அஷோக் அதிர்ச்சியுடன் நண்பனை பார்க்க , தன் முன்னால் எரிந்து கொண்டிருக்கும் அக்னி குண்டத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்த தீரனின் முகம் அதை விட உக்கிரமாய் தகித்தது .

” இது கொஞ்சமும் சரி இல்லை அஷோக் ” என கண்கள் கலங்க கூறிய இஷிதாவுக்கு தமையனை எண்ணி கோபம் இருந்தாலும் அதை விட அதிகமாக தோழியை குறித்து மிகவும் கவலை பட்டாள்,அஷோக் எதுவும் பேச வில்லை .

“கெட்டி மேளம் , கெட்டி மேளம் ” என ஐயர் சப்தமாக கூற , ஐயர்  கொடுத்த தாலியை கையில் ஏந்திய தீரன் , ஒரு கணம் கண்களை மூடி திறந்து , மேகாவின்  வெண்கழுத்தைச் சுற்றி அவளது இடது புற தோள் வளைவில் முகம் வைத்தவாறே  திருமாங்கல்யத்தை கட்டினான்.

முதல்  இரெண்டு முடிச்சு  போட்ட  தீரன் மூன்றாவது முடிச்சையும் யாருக்கும்  விட்டு கொடுக்காமல்  தானே போட்டு ,பிறர் கவனம் கவராது அவளது செவி மடலருகே தன் இதழால் உரசியவாறே,”பீ ப்பிரிப்பர் ஃபார் எவெரிதிங் ” என  விஷமமாய் கூறி இறுக்கமாக அமர்ந்திருக்க , அவனது குரலை இவ்வளவு அருகில் கேட்ட மாத்திரத்திலேயே மேகா விதிர்விதிர்த்துப் போனாள் .

தொடரும்

நாளை

தன் சட்டையின் பொத்தானை போட்ட படியே மேகாவை தன் பார்வையாலே உள்ளே வருமாறு செய்கை செய்த தீரன் .

” நான் உன் புருஷன் தானே ?இல்லை அதுல எதுவும் சந்தேகம் இருக்கா ” கண்களாலே இருவருக்கும் இருக்கும் இடைவெளியை  அளந்தபடி கூறினான் .   அவன் தன்னை அவன் அருகில் வருமாறு  அழைக்கிறான் என்பதை  உணர்ந்த மேகா வேகமாக அவன் அருகில் சென்று நின்றாள் .

சட்டையின் பொத்தானை முழுவதும் போட்டவன் வலது கை மணிக்கட்டை அவள் முன்பு காட்ட , அவள் அவனை புரியாத பார்வை பார்க்க ,

மணிக்கட்டின்  பக்கம் உள்ள பொத்தானை பார்த்த தீரன்  அவளை பார்த்து கண்களால் செய்கை செய்ய , அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட மேகாவுக்கு  தயக்கமாக இருந்தது .

கணவன் தான்,  இருந்தாலும் அவனிடம் மனம் ஒத்து நெருங்கி உறவாடும் மனநிலைக்கு இன்னும் வராதவளுக்கு அவன் காட்டும் நெருக்கம் தயக்கத்தை கொடுக்க , கைகளை பிசைந்தபடி  அவள் அப்படியே நிற்க , அவள் தயங்குகிறாள்  என்பதை  அவள் உடல் மொழியிலே கண்டவன்  ‘ என்கிட்ட என்ன தயக்கம் ?’ என்று எண்ணியவன் ,தன் தாடை இறுக , போட்டிருந்த  சட்டை பொத்தான்களை தன் வலது கை விரல்களால்  , மேகா பார்க்க அவளது விழிகளின் மாற்றத்தை பார்த்து கொண்டே  ஒவ்வொன்றாக  கழட்டினான் .

அவளுக்கு ஐயோ என்றானது !

உடனே வேகமாக அவனது வலது மணிக்கட்டின் பொத்தானை மாட்டுவதற்காக அவள் நெருங்கவும் , சட்டையை கழற்றி அவளிடம் நீட்டியவன் கரங்களை தன் வெற்று மார்புக்கு குறுக்கே கட்டியபடி நிற்க ,  அவன் நிற்கும் கோலம் கண்டு அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது .

இப்பொழுது மேகாவையும்  அவளது கரத்தில் இருக்கும் சட்டையையும் பார்த்தான் .  அவளே சட்டையை அவனுக்கு போட்டுவிட வேண்டும் என்றது அவனது பார்வை . மேகாவின் கண்கள் கலங்கிவிட்டது .