MIRUTHNAIN KAVITHAI IVAL 27

cover page-e241665d

மிருதனின் கவிதை இவள் 27

மேகாவின் கரங்களின் இருந்த மெஹெந்தி வடிவமைப்புகளை  ரசனையுடன் பார்த்து கொண்டிருந்த  தீரனின் முகத்தில் திடிரென்று மாற்றம் ஏற்பட்டது.

முதலில் திகைத்தான் ! பின்பு அவன் முகம் விகாரமாய் மாற , அவளது கரங்களை அழுத்தமாக பற்றி , தன் விரல் நகங்கள் பதியும் படி இறுக்கமாக பிடித்துக்கொண்ட தீரன்  மேலும் கீழும் மூச்சு  வாங்க , உடல் மொத்தமும் வியர்வையில் நனைந்திருக்க ,   தன் கண்கள் இடுங்க , மேகாவை  உக்கிரமாக  பார்த்தான் .

அவனது வதனத்தில் இருந்த சிவப்பு , அவன் கோபம் எல்லையை கடந்து கொண்டிருப்பதை  உணர்த்த , ‘ ஒரு நொடியில் பொழுதில் அப்படி என்ன ஆகியிருக்கும்?ஏன் இப்படி இருக்கார் ? ‘ என ஒன்றும் புரியாமல் முழித்த மேகாவுக்கு , அவனது முக மாற்றம் கிலியை உண்டாக்க , அவன் அழுத்தி பிடித்து கொண்டிருப்பது  வேறு கடுமையான வலியை தர,

” ப்ளீஸ் வலிக்குது தீரன் ” பொறுத்து பொறுத்து பார்த்தவள்  வலி தாங்க  முடியாமல் கூறிவிட்டாள் .

உடனே எங்கிருந்து தான் அத்தனை ஆத்திரம் அவனுக்கு வந்ததோ , மேகாவை பார்த்து முறைத்தவன் , அவளது கையை வீசாத குறையாக வேகமாக உதறி தள்ள  மணிகட்டுப்பகுதி  சுவற்றில் மோதி  ,”அம்மா “என வலியில் மேகா கத்தியே விட்டாள் .

சதை பற்று குறைவான பகுதி என்பதால்  எலும்பில் அடிபட , அவன் அழுத்தி பிடித்ததை விட ,இந்த வலி உயிர் போனது . இப்பொழுது வரை அவனது கோபத்திற்கு காரணம் புரியாது , மேகா கணவனை பார்த்தாள் .விழிகளில் அனல்பறக்க  பார்வையாலே எரித்தான்.

‘நல்லாதானே இருந்தார்  திடீர்ன்னு ஏன் இப்படி ?  கடவுளே ! என்ன செய்ய போறார்?   ‘ – என தனக்குள்ளே பேசிகொண்டவள்  தொண்டையில் நீர் வற்றி போக மிரட்சியுடன் அவனை பார்த்தாள் . அசுரன் போல ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்து கொண்டு பார்த்தே   மிரட்டினான் .

அவனது பார்வையிலே  தேகம்  வெளிறி போக , இதயம் வேறு தன் பங்கிற்கு  பந்தய குதிரையை போல வேகமாக துடிக்க , வலுவிழந்த கால்கள் நிற்க தெம்பில்லாமல் நடுங்க , பீதியோடு அவனை நோக்கினாள்.

அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கினான் . அவனது கோபத்திற்கான காரணத்தை  அறிந்துகொள்ளும்  நோக்கத்தில்,

“என்னாச்சு தீரன் ?”காற்றுக்குரல் அவனது காதை எட்டுவதற்குள்  ,அவளது மணிக்கட்டை தன் முழு பலத்தையும் கொடுத்து அழுத்தமாக பிடிக்க , மேகா  வலியில்  முகம் சுணங்கி ,

” வலிக்குது தீரன் ” என சொல்லவும் . இன்னும் அழுத்தி பிடித்து ,

” எனக்கும் தான் டி ” என்றவன் ,  கையை அவள் பக்கம் திருப்பி காட்டி , “என்னடி இது ?”என்று கேட்டான் .

மேகாக்கு அவன் என்ன கேட்கிறான் என்று புலப்படாமல் இருக்க ,அவனை அவள் புரியாமல் மலங்க மலங்க பார்க்கவும் ,

” ஏய் ஏய் இப்படி பார்க்காத ,இந்த  நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம் ,டோன்ட் ஆக்ட் லைக் பேபி “ஆக்ரோஷமாக  சீறியவன் ,”இது என்னதுன்னு உனக்கு தெரியல  ,நீ ஒன்னும் தெரியாத பாப்பா  இதை நான் நம்பனும் ” நக்கலாக கேட்டான் .

உடனே கையை கவனத்துடன் பார்த்தாள் .  மெஹெந்தி போட்ட அன்று பார்த்தது .அதன் பிறகு   இப்பொழுது தான் அதை கவனித்தாள் .’ இது இன்னுமா அழியவில்லை ‘என்ன செய்வதென்று புரியாமல் இயலாமையுடன் விழித்தாள்  .

மணிகட்டுப்பகுதியில் மேகா என்று மெஹெந்தியால் எழுத்துயிருக்க நடுவில் சிறு இதயம் வரைந்து அருகில் ரித்து என்று எழுதியிருந்தது . அன்று இது சாதாரணமான  ஒன்றாக தெரிந்தது, இன்று தீரனை கணவனாக ஏற்ற பின்பு  ,இதை பார்த்து மிகவும் சங்கடப்பட்டாள்  .   அதுவும் தீரனின்  அழுத்தமான பார்வை முன்பு மிகவும் வேதனை அடைந்தாள் . ரிதுராஜின் பெயரை  தன் கரத்தில் பார்க்கும் பொழுது அவளுக்கே சங்கடமாக இருக்க  ,அவனால் எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும் ?  அதுவும் தீரனுக்கு !

கண்களை மூடி  திறந்து தன்னை நிலைப்படுத்தியவளுக்கு ,   அவன் பார்வையும்  அவன் கேள்விகளும் ,ஏதோ அவள் செய்ய கூடாத பாவத்தை செய்து , இவனிடம் கையும் களவுமாக  மாட்டியது போன்ற ஒரு பிம்பத்தை கொடுக்க, தவறே செய்யாமல் அவனிடம் பார்வையாலே மன்னிப்பை யாசித்துக்கொண்டிருந்தாள்.

” இதை ஏன் இன்னும் அழிக்காம வச்சிருக்க ?” அவன் குரல் அவளை கலவரப்படுத்தியது .

” அது வந்து இது ” அவனது ருத்திர தாண்டவத்தை கண்டு அவள் பேச முடியாமல் திக்கினாள்.

” ஏன் அழிக்க மனசு வரலையோ ?” குரூரமாக கேட்டான் . திகைத்து விழித்தாள் .’ மனசு வரலையோவா ? இவர் என்னை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார் . நான் ஏதோ ரிதுராஜின் நினைப்பாகவே இருப்பது போல கூறுகிறார் , ‘ கண்கள் குளமானது ,மனதளவில்  மிகவும் காயப்பட்டாள் .அவனது சொற்கள் அவளை வலிக்க அடித்தது .

” தீரன் ” அவனது குத்தல் பேச்சை பொறுக்க முடியாமல்  , அவனிடம் பேசி  தன்னிலையை புரியவைப்பதற்காக  அழைத்தாள் ,

அவளது தோள்களை அழுந்த பிடித்து சுவற்றுடன் சாய்த்து ,தன் முகத்தை அவளது முகத்துக்கு நேராக கொண்டுவந்து ,

” என்ன ?” அவளது கண்களை பார்த்து கர்ஜித்தான் . இருவரின்  பார்வையும் ஒன்றோடு ஒன்று சந்தித்தது .  புரிந்து கொள்ளும்  படி அவள் பார்வை கெஞ்சியது .  அவளது பரிதாபிமான  முகத்தை  பார்த்தான் . அடிவாங்கிய அப்பாவி குழந்தை போல அழுது கொண்டிருந்தாள் . அந்த நிலையிலும் மனைவியின் கண்ணீர்   வழிந்த முகம் தீரனின்   மனதை அசைத்தது , தீரன் தடுமாறினான் ! ஆனால் அடுத்த  நொடியே , ரிதுராஜ் தன்னை கண்டு எள்ளலாக சிரிக்கும் பிம்பம் கண்முன் தோன்ற அவளது கரத்தை கையோடு பிடித்து இழுத்து விடுவது போல இறுக்கமாக பிடித்தவன்  அவளை கீழே தள்ளினான் . பிடிமானம் இல்லாமல் அப்படியே கீழே சரிந்தாள் .

அந்நேரம் பார்த்து அவளது அலைபேசி ஒலித்தது முதலில் விட்டுவிட்டான் ஆனால்  மீண்டும் ஒலிக்கவும்  எடுத்து பார்த்துவிட்டு மேகாவிடம் காட்டினான் சிரித்த முகமாக ரிதுராஜின்  புகைப்படத்துடன்  ரித்து கால்லிங் என்ற பெயரை தாங்கி கொண்டு ஒளிர்ந்து அடங்கியது அலைபேசி . மேகாவுக்கோ  கண்கள் இருட்டி கொண்டு வந்தது . மீண்டும் திசை தெரியாத காட்டில் சிக்கி கொண்ட உணர்வு .

” இன்னும் ரித்து டார்லிங்கோட   போட்டோ உன் போன்ல இருக்கு, காண்டாக்ட் லிஸ்ட்ல  ரித்து இன்னும் இருக்காரு , அவன் சம்பந்தப்பட்ட எதையுமே நீங்க அழிக்கலை  “வேண்டுமென்றே ரிதுக்கு  அழுத்தம் கொடுத்து  தீரன் கேட்ட கேள்வியில் ,  இவளுக்கு சர்வமும் ஒடுங்கியது .

“ப்ளீஸ் ” கெஞ்சினாள் .

தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான் , மேகாவின் அலைபேசி  மீண்டும் ஒலித்தது .  இந்த முறை புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது . வேதனையுடன் அவளிடம் காட்டினான்.  பேன்சியான எண்ணை பார்த்த கணமே அவளுக்கு அது தீரன் என புரிந்து விட,  தீரனின் மனநிலையை  புரிந்து கொண்டவள்  ,அவனிடம் பேசி அனைத்தையும்  சரி செய்யும் வழி தெரியாமல் திணறினாள்  .

‘ அவனுக்கு ரித்து  , அதுவும் புகைப்படத்துடன் , ஆனால் எனக்கு ? என்  அலைபேசி எண்ணை கூட அவள் அலைபேசியில்  பதிய வில்லையே ?’ ரிதுராஜின் பெயரை பார்த்த கணம் கோபத்தில் சிவந்த அவன் முகம் இப்பொழுது, தன்னவளின் அலைபேசியில் தன் பெயருக்கு கூட அனுமதி இல்லையே என வேதனையில் தவித்தது . ஏதோ ஒன்று நெஞ்சை வேகமாக பிடித்து அழுத்தியது . மாரடைப்பு  வந்தது போல  இதயம்   வலித்தது. சாதாரண வலி இல்லை , யாரோ பலமாக அடித்தது போல பயங்கரமாக வலித்தது. இதில் ரிதுராஜின் சிரித்த முகமாக இருந்த புகைப்படம் வேறு இவனை பார்த்து எள்ளி நகைக்க, ” மேகா ” என உச்சஸ்தாதியில் கத்தியவன் தலை முடியை இறுக்கமாக பிடித்து கொண்டு சுவற்றுடன் சாய்ந்து நின்றான்  .

” தீரன் ப்ளீஸ் ” ஏனோ அவளுக்கு  அவன் படும் அவஸ்தையை பார்க்க முடியவில்லை , மெல்ல அழைத்தாள் .

” ஏன் மேகா ?” பொறுமையான குரலில்  பூகம்பம் ஒளிர்ந்திருப்பதை  மேகவால் உணர முடிந்தது . ஆனால் ‘ ஏன் ?’ என்றால் என்ன கேட்கிறான் .  இருந்த கலவரத்தில் , ஒருபுறம் அவன் கேள்வி  புரியாமல் இருக்க, இன்னொருபுறம் அவன் கேள்வி கேட்கும் விதத்திலும்,   அவன் பார்க்கும் பார்வையிலும் கலக்கம் அடைந்த மேகா  பதில் சொல்ல முடியாமல் திணற , மாட்டிக்கொண்டதால்  தான் இந்த தடுமாற்றம் என தவறாய் புரிந்து கொண்ட தீரனின் தாடை இறுகியது .

” ஏன் அவன் உனக்கு கால் பண்ணிருக்கான் ?இது எத்தனை நாளா நடக்குது ?” அவனது அனல் பார்வை  அவளுக்குள் பாய்ந்து அவளது இதயத்தை பொசுக்கியது .

“தெரியாது ,  ஆனா இன்னைக்கு ஏவிவினிங் கால்  ” என ஐந்து வார்த்தைகள் பேசுவதற்குள் மேகா சுவாசத்திற்காக  வாயை வாயை திறக்க ,   கண்களில் கொலைவெறியுடன் அவளை பார்த்தவன் , அவளது விரலை பிடித்து  ரேகை வைத்து  அலைபேசிக்கு உயிர்கொடுத்து   கால் ஹிஸ்டரியை  பார்த்தான்.  ரிதுராஜின் அழைப்புகள்  அனைத்தும் மிஸ்ட் காலாய் கிடந்தது . அவன் தான் அழைத்திருக்கிறான் ,  மேகா ஒருவார்த்தை கூட பேசவில்லை  நிம்மதியாக இருந்தது . ஆனால் ஏன் இதை நம்மிடம் அவள் சொல்லவில்லை ? ஏன் மறைத்தாள்? தீரனின் ரெத்தம் கொதித்தது .

” இதை ஏன் என்கிட்ட சொல்லலை ? ஏன் மறைச்ச? ” அதட்டினான் .

” மறைக்கணும்ன்னு இல்லை, ஆனா  சொன்னா… ” அவள் தடுமாறினாள் .

” சொன்னா என்ன ?உங்க ரித்துவ ஏதாவது பண்ணிருவேன்னு  , நீங்க சொல்லல அதானே ?அவ்வளவு அக்கறை ” பல்லை கடித்தான் . ‘ஆமாம் அக்கறை தான் ! இதை சொல்லி தீரன் கோபத்தில் ரிதுராஜை ஏதாவது செய்துவிட்டால் ?இதனால்  தேவையில்லாமல் தீரனுக்கு பிரச்சனை வருமே, இதற்கு முன்பு வேறு ,ஆனால் இப்பொழுது இவன் இவளது கணவனே , இவனது நல்லது கெட்டது அனைத்திலும் மேகாவுக்கும் பங்கு இருக்கிறதல்லவா ,அமைதியாக செல்லும் வாழ்க்கையில் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணியவள் , தீரனின் கோபமும் அறிந்து , உண்மையில் தீரனின் மீதுள்ள அக்கறையில் தான் , அதை சொல்லாமல் தவிர்க்க நினைத்தாள் . ஆனால் இவன்   திரும்ப திரும்ப தன்னை ரிதுராஜுடன்  தொடர்புகொண்டு பேசுவதை  ஏற்று கொள்ள முடியாத மேகா,

” ப்ளீஸ் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல தீரன் “சிறு கோபத்துடன் கூறினாள் .

” ஏன் உண்மைய சொன்னா கோபம் வருதோ ?”அலட்சியமாக  கேட்டான் . வலியுடன் அவனை பார்த்தாள் .

” அவன் உன்னை வேண்டாம்ன்னு அவமானப்படுத்திட்டு விட்டுட்டு போய்ட்டான் , ஆனா நீ இன்னும் அவனையே நினைச்சிட்டு இருக்க ” என கேட்டான் அடிக்குரலில் .

“நோ ” உடனே மறுத்தாள் .

” அப்போ ஏன் அவன் போட்டோ உன் போன்ல இருக்கு ? “

” அது முன்னாடி உள்ளது “

” ஏன் இன்னும் ரிமூவ் பண்ணல ? ஏன் அவன் நம்பரை டெலீட் பண்ணல ?  ஏன் உனக்கு கால் பண்ணிருக்கான் ?ஏன் என்கிட்ட மறைச்ச ?ஏன் கைல உள்ள அவன் பேரை அழிக்கலை ” ஏன் ஏன் ஏன் இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு ஏதோ குற்றவாளியை போல மேகாவிடம் குறுக்கு விசாரணை நடத்தினான் .

” மறந்துட்டேன் ” கேவலுடன் கூறினாள் .

“இல்லை ” தலையை குறுக்காக ஆட்டியவன் ” அவனை மறக்க முடியலைன்னு சொல்லு, உன் மனசில இருந்து அவனை  தூக்கி போட முடியலைன்னு சொல்லு , அதனால தான் அவன் நியாபகங்களை  அழிக்க முடியலைன்னு  சொல்லு  ” விஷத்தை கக்கினான் .

” நோ இல்லை  ”  அவன் சொன்ன பழியை  கேட்டு  துடித்து போனாள் .

” ஆஹான் “தீரனின் உதடுகள்  இகழ்ச்சியில் விளைந்தன ,

”  நான் சொல்லவருவதை  …”,

“ஏய் உண்மைய சொல்லு , இல்லை செத்திடுவ” அவளது பேச்சில் குறுக்கிட்டு உறுமினான் .

” தீரன் ப்ளீஸ் நம்புங்க நான் ” அழுதாள் ,

” அழுது அழுது நடிக்காத  யு ப்ளாடி டாமிட் ” உச்ச குரலில் கத்தியவன் கண்ணாடி டீபாயை  தூக்கி எறிய, அது சுவற்றில் மோதி உடைந்த நிலையில் கீழே விழுந்தது .

அவனது கோபத்தின் தீவிரம் மேகாவுக்கு  படபடப்பை ஏற்படுத்த , அடக்க முடியாமல் பீறிட்டு  வந்த அழுகையை கட்டுப்படுத்த  ,தன் கைகளால் தன் வாயை இறுக்கமாக  மூடி கொண்டாள்.விழிகளில் இருந்து நீர் அனுமதி இன்றி வடிந்தது . வாயை இன்னும்  இறுக்கமாக மூடி விம்மலை  அடக்கிக்கொண்டாள் . இதயமே துடிப்பதை நிறுத்தி விடுவது போல இருந்தது,  மூச்சு முட்டிக்கொண்டு வந்தது .

” நான் அவனை ஏதாவது செஞ்சிருவேன் பயப்படுற, உன்னால அவன் சார்ந்த எதையுமே அழிக்க முடியல , ஏன்னா யு லவ் …” உணர்வுகளற்ற குரலில் ஆரம்பித்தவனால் ஏனோ அதை முடிக்க முடிவில்லை , திரும்பி நின்று கொண்டான் , விழியோரம் தொடுக்கில் இருந்த ஒற்றை கண்ணீரை விழ விடாமல் சுண்டி விட்டான் .

” தீரன் ப்ளீஸ்  நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு பேசுறீங்க , நான் உண்மையாவே மறந்துட்டேன் “

“சரியா புரிஞ்சிக்கிட்டதுனால தான் பேசுறேன் .அதான் அன்னைக்கே சொன்னியே , என்ன ஆனாலும் நான் உன்னை லவ் பண்ண மாட்டேன்னு  , இதுக்கு பேர் காதலை இல்லைன்னு , எதையும் நான் மறக்கல “முகமும் குரலும் இறுகி போய் இருந்தது .சில நொடிகள் கடந்த ,பிறகு முகத்தை அழுத்தமாக தடைத்தவன் ,”ஆல்ரைட் ” சாதாரண  வார்த்தை தான் ஆனால், அது அவன் சொன்ன தோரணையில் அவளது உடல் உதறியது .

சட்டை பையை துளாவினான்,  கிடைக்க வில்லை ! தன் அறையில் எதையோ தேடினான் ! கிடைத்து ! நச்சு குழலை  தன் வாயில் வைத்து புகைக்க துவங்கினான் .முதல் நாள் இரவுக்கு பிறகு இன்று தான் மீண்டும் புகைக்கிறான்  , மேகாவுக்காக  விட்டுவிட வேண்டும் என்று அவன் நினைத்த  பழக்க வழக்கங்களில் இதுவும்  ஒன்று  , வேலையில் இறுக்கமான தருணங்களில் புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும், அப்பொழுதெல்லாம்  வலெட்டில் இருக்கும் மனைவியின் படத்தை  தன் உதட்டில்  வைத்து   தன் இறுக்கத்தை குறைத்து கொள்பவன் , நேரில் பார்க்கும் பொழுது அழுத்தமான முத்தம் பதிக்க , அவனது மொத்த அழுத்தமும் பறந்துவிடும் .

ஆனால் இன்று நிலைமை வேறே , என்ன செய்ய?   விட்டதை எடுத்து கொண்டான் . .

”  அழிக்கிறேன் ! எல்லாத்தையும்  ஒன்னு விடாம அழிக்கிறேன் ” புகையை வெளியே இழுத்துவிட்டபடி கூறினான். மேகாவுக்கு அடிவயிறு கலங்கியது .

அவள் எதுவும் பேசவில்லை அமைதியாகவே  இருந்தாள் .

“ஏய் கெட் அப் எழுந்து நில்லு ” அவன் போட்ட அதட்டலில்  விரட்டி அடித்துக்கொண்டு  எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என்கிற நிலையில் எழுந்து நின்றாள் .

” இந்தா உன் போன் ” என்றான் . வாங்கி கொண்டு அவன் முகத்தை பார்த்தாள் .

” டெலீட் பண்ணு , ஏய் என்ன பார்க்குற?  அவன் சார்ந்த எல்லாத்தையும் டெலீட் பண்ணு, உன் கையால அதை பண்ணு. நான் பார்க்கணும் , ம்ம் நடக்கட்டும் ” கால்மேல் கால் போட்டபடி துரிதப்படுத்தி, தன் பார்வையாலே அவளை துளைத்து கொண்டிருந்தான் .

அவன் அனுப்பிய மெசேஜ் , நிச்சயதார்த்த புகைப்படங்கள்  என ஒவ்வொன்றாக டெலீட் பண்ணி கொண்டிருந்தாள் . பதற்றத்தில் கைகள் நடுங்கியதால்  டெலீட் பண்ண நேரம் எடுக்க ,’ ஏன் இவ்வளவு நேரம்  ?ஓ மனசு வரலையோ ?’ குத்தினான்   உதட்டை கடித்து கேவலை அடக்கிக்கொண்டு , ஒன்றை கூட விட்டுவிட கூடாது  , மீண்டும் அவனது விஷம் நிறைந்த பேச்சுகளை கேட்க தெம்பில்லை  என்பதால் நிதானமாக பார்த்து பார்த்து அழித்தாள் . அதற்குள்  மூன்று சிகெரெட்டையும்  நான்கு  க்ளாஸ் மதுபானத்தையும்  முடித்திருந்தவன் ,

சட்டென்று அலைபேசியை அவள் கரத்தில் இருந்து பறித்து  கலரியை பார்த்து கொண்டே வந்தான்,  ” ஓ போன் புல்லா ரித்து சார் தான் இருக்காரு ” நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்து  குத்தலாக கூறியவனின் விழிகள்  , அதில் இருந்த ஐந்நூறு புகைப்படத்திற்கு  மத்தியில் ஏதவது ஒரு ஓரத்தில் தன் புகைப்படமும்  இருக்குமா என்று சிறு ஏக்கத்துடன்  பார்த்தது  , ஏமாற்றத்துடன்  அடுத்த கிளாஸை வாயில் சரித்தவன் ,அலைபேசியை  அவள் முகத்தில் விட்டெறிந்து ,

” ம்ம் சீக்கிரம் ,  டெலீட் பண்ணு ”  அவமதித்தான் .கத்தி அழ வேண்டும் போல தோன்றியது . வடிந்த கண்ணீரை கூட துடைக்காமல்  தலை கவிழ்ந்த நிலையில் அவனிடம் அலைபேசியை நீட்டினாள் . அவள் முகத்தை பார்த்தபடி அலைபேசியை வாங்கியவன் , கையிலிருந்த  அலைபேசியை பளிங்கு தரையில் ஓங்கி அடித்தான் பேட்டரி , மூடி , கண்ணடி திரை என அனைத்தும் உடைந்து சிதறியது . உடல் அதிர நின்ற மேகாவுக்கு கண்ணீர் கரைபுரண்டது .அப்பொழுதும் அவள் நிமிர்ந்து பார்க்க வில்லை . அடுத்து என்ன செய்வானா ? என்ற பயம்  அவனை நிமிர்ந்து நோக்கும்  தைரியத்தை பறித்திருந்தது .

இப்பொழுது அவனது பார்வை அவளது கரத்தின் மேல் படிந்தது ,

” ரெண்டு நிமிஷம் டைம் இது தடம் தெரியாம ஆகிருகனும் ” கட்டளையான குரல்  ‘செய்’ என்றது .

ரெண்டு நிமிடத்தில் எப்படி அழிக்க முடியும் ?  என்ற சிந்தனை இல்லாமல்  அவனும்  சொல்ல  , அவளும்  செயலாகிக்கொண்டிருந்தாள் .

” போச்சா ?”அவன் விரல்களுக்கு  நடுவே புகைந்து கொண்டிருந்த   நச்சு குழலின் கங்கை   விட தீரனின் கண்கள் அனலாய் கொதித்தது .

” இல்லை ” குரல் உள்ளே சென்றது தலையை இடவலமாக  ஆட்டினாள் . இவள் தேய்த்து தேய்த்து அவளது கரம் சிவந்தது  தான் மிச்சம்  , ஆனால் இப்பொழுது முன்பை விட கொஞ்சம் மங்கலாக  தான் காட்சியளித்தது . உத்துப்பார்த்தால் தான் தெரியும்  , இவனும் பார்த்தான் இவன் கண்ணுக்கு மட்டும் மேகா பெயருக்கு பக்கத்தில் இருந்த ரித்து என்னும்  அவனது பெயர்  பூதாகரமாக தெரிய , எதில் இருந்தோ தப்பிப்பது போல படாரென்று   கண்களை மூடி கொண்ட தீரனுக்கோ மூளைக்கு செல்லும் ரத்த குழாய்கள்  எல்லாம் வெடித்து சிதறுவது போல இருந்தது ‘ கடவுளே ‘ தலையை தன் இரெண்டு கைகளால் பிடித்துக்கொண்டபடி தலை கவிழ்ந்து  கண்மூடிய நிலையில் அமர்ந்தான் . 

அப்பொழுதும்  அதுவே தெரிய , சில நொடிகள் கழித்து விழி  திறந்தவனுக்கு அவளது கரத்தை  பார்க்க பார்க்க அவ்வளவு ஆத்திரம் வந்தது . உடனே அவளது கரத்திற்கு  அழுத்தம் கொடுத்து பிடித்தவன்  மணிக்கட்டு பகுதியை  மேல் தோல் பிய்ந்துவிடும் அளவிற்கு வேகமாக அழுத்தி தேய்த்தான். ‘ முட்டாள்தனமாக நடந்துகொள்ளாதே ‘ என மனசாட்சி எவ்வளவு கண்டித்தாலும்  அவன் மனம் அதை ஏற்கவில்லை .

“தீரன் ” மேகவோ வலியில் துடித்தேவிட்டாள்.

“நோ இது  உன் கையில இருக்க கூடாது , நோ நோ விடமாட்டேன் , அழிக்கிறேன் எல்லாத்தையுமே அழிக்கிறேன்  ! முதல்ல அவன் பெயரை அப்புறம் அவனை ” என்றவன் எதையோ சிந்தித்தபடி அரையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான் , அலைபேசியை  எடுத்தான் யாருக்கோ அழைப்பு விடுத்தான் .ஏதேதோ பேசினான் .இவனது நடவடிக்கைகளை பார்த்த மேகாவுக்கு உதறியது .’ ஏதோ செய்ய போகிறான் ‘ உள்ளுணர்வு எச்சரிக்கை விடுக்க பீதியுடன் நின்றிருந்தாள் .

 

-தொடரும்