MIRUTHNAIN KAVITHAI IVAL 29

cover page-e7f3f964

மிருதனின் கவிதை இவள் 29

” நான் வந்தேன்னு வை ” என  அஷோக் சீற , அவன் அனைத்தையும்  கூறி முடித்திருந்தான். ரிஷி சொன்னதை கேட்ட  அஷோக்கின் இதயம்  ஒரு நொடி நின்று துடித்தது. ,

” தீரனுக்கு ஒன்னும் இல்லையே ” பதற்றத்துடன் கேட்டான் , அஷோக் இப்படி கேட்டதும் மேகாவின் இதயம் வேகமாக துடிக்க ,   பரிதவிப்புடன்  அஷோக்கை பார்த்தாள் . அவனோ   கண்களாலே ஒன்றுமில்லை  என ஆறுதல் கூறிவிட்டு ,

” இப்போ அவனை எங்க ? “

” வீட்ல இருப்பாரு சார்  “

” வாட் “

” அவரை நான் வீட்ல விட்டுட்டு வந்து ஒரு அரைமணிநேரம் ஆகிருக்குமே , ஏதாவது பிரச்சனையா சார் “

” இல்லை , நீ அந்த லாரி இஷ்யூ  இன்டேன்ஷனலா நடந்ததா இல்லை  ஆக்சிடென்டலான்னு செக் பண்ணு ” என்ற அஷோக் , அழைப்பை வைத்துவிட்டு மேகாவை  பார்க்க அவள் பார்வையில் இருந்த தவிப்பை பார்த்து ,

” பயப்படாத மேகா  எந்த பிரச்சனையும் இல்லை அவன் வீட்ல தான் இருக்கானாம் “என்றான் .

“ஆனா இங்க  வரலையே ” என்ற மேகாவிடம் , ” சரி நான் பார்க்குறேன் ” என்றவன் , செக்யூரிட்டி கார்ட்ஸை அழைத்து , தீரன் வந்துட்டானா  என விசாரிக்க ,

” ஆமா சார் நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் ரிஷி சார் ட்ராப் பண்ணிட்டு போனாங்க “

” ஓ அதுக்கப்புறம் வெளிய போனானா “

” இல்லை சார் “

“ஓகே நீ போ ” என்றவன் ,” வெளியவும்  போகல ஜிம்லயும் இல்லை , மாடியிலையும்  இல்லை, வேற எங்க இருப்பான் ?” என்ற சிந்தனையில் இருக்க , மேகவோ ,

” மாடியில ஏதோ சாங் கேட்குது ” என்று சொல்லவும்  அதை உணர்ந்த மித்ரன்  ,

” நேத்ரா நீ ரூம் போ , மேகா நீ ரெஸ்ட் எடுமா, அவன் வந்தாலும் எதுவும் பேசிக்க வேண்டாம் ” என்றவன் அவர்களை அனுப்பிவிட , எந்த பிரச்சனையும் இல்லை என்றதில் நிம்மதி அடைந்த மேகா ,அதற்கு மேல் எதையுமே  சிந்திக்கவில்லை, போதாக்குறைக்கு உடல் சோர்வும் சேர்ந்துகொள்ள தன் அறைக்குள் சென்றுவிட  , அஷோக் தான் ஒருவித பதற்றத்துடன் மாடி ஏற , 

 சில வருடங்களுக்கு முன்பு இந்த அறையில் இருந்து தீரன் தன்னை தானே காயப்படுத்தி கொண்டு  கதறியதிற்கு   பிறகு  யாரும் தீரனை அங்கு விடுவதில்லை  .

தீரனும்  வேலை, பொறுப்பு  ,பணம் சம்பாதிப்பது  என தன் மனதை திசை திருப்பியிருந்தவன் , அங்கு பெரிதாக சென்றது இல்லை . சில நேரம் அதீத மனஅழுத்தம்  ஏற்படும் பொழுது தன்னையும்  மீறி அந்த அறையின் வாசலில் நின்று  வெறித்து பார்ப்பவன் , உள்ளே சென்றது கிடையாது .

அனைத்திற்கும்  மேலாக அவனை நிழல் போல பின்தொடரும்  அஷோக்  தீரனை தனியே விட்டதும் கிடையாது . அதன் பிறகு இன்று தான் தீரன் அந்த அறைக்குள் சென்றிருக்கிறான் . நினைக்கவே அஷோக்கின் உள்ளம் தவித்தது . பழைய சம்பவத்தை  எண்ணி பார்த்த அஷோக் இன்றும் அதே போல தன்னை தானே காயப்படுத்தி  கொள்வானோ என மிகவும் பதறியவன்  உள்புறமாக  தாழிடப்பட்டிருந்த  அந்த அறையின் கதவை தன் கரங்கள் வலிக்கும்  வரை தட்ட துவங்கினான் .

!!!!!!!!!!!

பப் வாசலில் இருந்து நடந்து தன் காரின்  அருகில் வந்த ரிதுராஜ் , தன் காரின் கதவை திறந்து கொண்டிருக்க ,சாலையில்    படு வேகமாக  கார் ஒன்று தன்னை நோக்கி வருவதை கண்டதும் அவன்  அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நிற்க ,

இன்னும் கொஞ்ச நேரத்தில் அடித்து தூக்கிவிடும்  தூரத்தில் வந்து கொண்டிருந்த தீரனுக்கோ  திடிரென்று உடல் வியர்வையில் குளித்துவிட ,இதயத்தில் ஒருவித படபடப்பு   .

பிஸினஸில்  தன்னையோ , தன்னை சார்ந்தோரையோ   தாக்குபவர்களை  சிறிதும்  யோசிக்காமல் பதிலுக்கு இவனும் தாக்கியிருக்கிறான் .  ஆனால் அது அத்தனைக்கும் அவனிடம் ஏதோ ஒரு நியாயம் இருக்கும் .

இது போல தனிப்பட்ட முறையில் வஞ்சம் வைத்து தாக்குவது என்பதை நினைக்க நினைக்க தீரனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது .

போதாக்குறைக்கு’ உங்களுக்கு உங்க மேலையே சந்தேகம் .நீங்க இப்படி பண்றது என்னை இல்லை நம்ம உறவை அவமானப்படுத்துற மாதிரி’ என்ற மேகாவின் வார்த்தைகள் ! மெய் சுடும் என்பார்களே ?ஒருவேளை  சுட்டிருக்கும் போல , வார்த்தைகளில் மறைந்திருந்த  அர்த்தம் உணர்ந்தவன் திகைப்படைந்தான் .

உண்மையில் தீரனுக்கு மேகா மீதோ ரிதுராஜ் மீதோ சந்தேகம் என்பதை தாண்டி ,அவனுக்கே  அவன் மீதே சந்தேகம். சந்தேகத்தை மீறி  ஒருவித பயம் .

தன்னுடைய   கடந்த காலம்  சரியாக இல்லை ,  மற்ற ஆண்களை போல வசீகரமான தோற்றம் இல்லை ,தாடி அடர்ந்த முகத்தில் தவறுதலாக  கூட புன்னகை  இல்லை  ,பெண்களிடம் பழக தெரியவில்லை , மறந்தும்  மென்மை இல்லை , முக்கியமாக பட்டப்படிப்பு  இல்லை .

ஆனால் ரிதுராஜ் இவனை போல  ஒன்றும் பன்னிரண்டு வயதில் கத்தியை எடுத்து விட்டு சிறைச்சாலைக்கு செல்லவில்லையே, பார்க்க  வசீகரமாக இருக்கிறான் , வெள்ளை நிறம் , சிரித்த முகம் , அதிர்ந்து கூட பேச தெரியாது , முக்கியமாக வெளிநாட்டில்  படித்தவன் .

ஆக அவனை பார்த்த கணமே இவன் தன்னைவிட மேகாவுக்கு பொருத்தமானவன் என எண்ணிய தீரனுக்கு அப்பொழுதே மேகாவை இழந்துவிடுமோ  என்ற பயம்  அவனை ஆட்டிப்படைக்க . கூடவே அவனது கடந்த கால கசப்பான அனுபவமும்  அவன் மனதை சிறை செய்ய , எங்கே தன் குணம் பிடிக்காமல் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற எண்ணம் வேறு ஆழ்மனதில் உருவாகிவிட , இது தான் அவனுக்கு ரிதுராஜ் மீதான  அதீத கோபத்திற்கு  வழிவகுத்தது .

அதை   தெரிந்தோ தெரியாமலோ மேகா சொல்லிவிட திகைப்பில் இருந்து மீலாது  அதே அசுர  வேகத்தில் வந்த தீரன் கடைசி நேரத்தில், ஸ்ட்டியரிங்கை ஒடித்து  திருப்பிய கணம்  அவனுக்கு   நேர் எதிரே  லாரி ஒன்று வேகமாக வர ,

” சார் , ஏய் ” ரிஷி , ரிதுராஜ் , இன்னும் பலரின் குரல்கள் ஒன்றாக கேட்க  , மேகாவின் முகத்தை எண்ணியபடி  நொடி கூட தாமதிக்காது ஆக்சிலேட்டரை  வேகமாக அழுத்தியவன் நேரே சென்று சாலையோர  சைன் போர்டை  இடித்து தள்ளி மரத்தில்  முட்டி நின்றான் .  ஒரு நொடி ஒரே ஒரு நொடி தாமித்திருந்தாலும் என்னவாகியிருக்கும் என்று நினைக்கும் பொழுதே தீரனுக்கு  மேகாவின் முகம் தான் வந்து போனது .உயிர் போவதை பற்றி அவன் ஒருநாளும் பயந்தது கிடையாது ஆனால் மேகா ? அவளுடன் வாழ்ந்த இந்த நான்கு நாட்கள் அத்தனையும் வசந்தம்  அல்லவா,  மறித்து போயிருந்த  உணர்வுகளுக்கு உயிர் கொடுதளவளாயிற்றே.அவளை விட்டு செல்வதா? நினைக்கவே முடியவில்லை ,கரங்கள் தானாக நடுங்க  ஆரம்பிக்க .  மேகாவை பற்றி சிந்தித்தபடியே  ஸ்ட்டியரிங்கில்  தலை கவிழ்ந்தான்.

கண் இமைக்கும்  நொடியில்  நடந்தேறிய  நிகழ்வில் ரிதுராஜுக்கு  ஏறிய போதை மொத்தமும் இறங்கியிருக்க , ரிஷியோ தன் முதலாளிக்கு  என்ன ஆனதோ என்று பதறியே விட்டான் .

ரிஷியின்  கார்  தீரனின் வீட்டு   வாசலை  அடைந்த  பொழுது  காவலாளி  நன்கு  குறட்டை  விட்ட  படி  தூங்கிக்கொண்டிருக்க , அவரிடம்  இருந்து  எந்தவித  அசைவும்  இல்லாமல்  போகவே  இரெண்டு  மூன்று  முறை  ஹாரன்  அடிக்கும் சத்தத்தில்  சற்றென்று  முழித்தவன்  , தீரனை   பார்த்து  பதறிப்போய்   சல்யூட் அடித்தான் ,

” சாரி   சார்  ”  முகத்தில்  பயம்  அப்பட்டமாய்  தெரிந்தது .

” இருக்கட்டும்  இருக்கட்டும் , அட்லீஸ்ட்  நீயாவது  நிம்மதியா  தூங்குறியே  ,  தூங்கு  தூங்கு ” அசட்டு  சிரிப்புடன்  அவன் கூற அவரோ கலவரத்துடன்  கதவை திறந்தார் .

” சார்  நான் வேணும்னா  உங்களை  வீட்டுக்கு  குள்ள அழைச்சிட்டு  போகவா  ”  ரிஷி அக்கறையோடு  கேட்டான்.

”  நீ  அழைச்சிட்டு  போறியா . ஏன்  நான்  தண்ணியடிச்சிருக்கேன்னு   சொல்லிகாட்டுறியா  ”  பற்களை கடித்தான் .தீரனின் பேச்சே அவனது போதையின் அளவை காட்டியது .

”  இல்லை  சார்  அப்படி  இல்லை  ,கொஞ்சம்  சோர்வா  இருக்கீங்க     அதான்  “

” கேட்டேனா  உன்கிட்ட ” என அவனிடம் சீறியவன் சிறு தள்ளாட்டத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான் .

மேலும் மேலும் மேகாவை காயப்படுத்திவிட கூடாது என்பதற்காக அவள் மீது கோபம் குறையும்  வரை வீட்டுப்பக்கமே போக கூடாது என்று தான் எண்ணியிருந்தான் . ஆனாலும் மேகா பேசிய வார்த்தைகள் , ரிதுராஜுக்காக   தன்னிடம் அவள் கண்ணீர் வடித்த நினைவுகள் என அனைத்தும் அவன் மனதிற்குள்  அவ்வப்போழுது வந்து வந்து  இம்சித்து கொண்டே இருக்கே  ,  நான் நிம்மதி இல்லாத பொழுது அவள் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணியவன் அவளை  விட கூடாது, இனி இப்படி அவள் பேச கூடாது நான்கு  கேள்விகள் கேட்டே ஆக வேண்டும்  என்று எண்ணியவன்  வீட்டிற்கு வந்துவிட  இப்பொழுது உள்ளே செல்லாமல்   தன் அறையின் வாசலில் நின்றபடி  மேகாவை  பார்த்தான் .

தரையில் அமர்ந்திருந்த  நிலையில்  தலையை  மெத்தையில்  வைத்தபடி அமர்ந்திருந்தாள்  மனைவி . கன்னத்தில் தன் ஐவிரல் ,கையில் தான் கொடுத்த காயம் என பார்க்கவே பரிதாபமாக  இருந்தவளை  பார்க்க பார்க்க அவன்  மனம்  மிகவும் வலிக்க ஆரம்பிக்க , உள்ளே சென்று மேலும் அவளை காயப்படுத்த விரும்பாதவன் அப்படியே அவளை பார்த்து கொண்டே நின்றான் .

ஆயிரம் காரணங்கள் நீ சொன்னாலும் , இதில்  மேகா மீதும்  எந்த தவறும் இல்லையே . மெஹெந்தி போடுவது இயல்பான ஒன்று . அதுவும் மணப்பெண்கள் மணமகனின் பெயரை கையில் எழுதி கொள்வதும் மிகவும்  இயல்பு , இவள் ஒன்றும்  உன்னை  காயப்படுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு எழுதவில்லையே .

ரிதுராஜ் தானே அழைத்திருந்தான், உன் மனைவி ஒன்றும் அவனுக்கு அழைத்து பேசவில்லையே , அலைபேசியில்  உன் பெயரை பதியவில்லை ,உன் புகைப்படம் இல்லை என ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் , வருத்தம் தான் !ஆனால் என்ன செய்வது ?நடந்து முடிந்துவிட்டதே, இனி நடப்பதை  தனக்கு ஏற்றது போல மாற்றிக்கொள்வது தானே சரி .

மெஹெந்தி  இன்னும் இரெண்டு நாட்களில்  அதுவே  தடம் தெரியாமல்  மறைந்து போய்விடும்   . அதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா ?இத்தனை கொடூரமான தண்டனையா ?

ஆனால்  பார் நீ ஏற்படுத்திய காயம், அது காலத்துக்கும்  அழியாதே , என்ன செய்ய போகிறாய் ?

இதோ மேகாவை வலிக்க வலிக்க காயப்படுத்தியாயிற்று ,மனம் நிம்மதியடைந்ததா ? இல்லையே. முன்பை விட இப்பொழுது நெஞ்சுக்குழிக்குள்  இன்னும் மோசமாக வலிக்கிறதே . ஆண் என்றால் நீ என்ன வேண்டுமானாலும்  செய்வாயா ?  தலைகவிழ்ந்து கொண்டவன் , நிமிர்ந்து மீண்டும் மனைவியை பார்த்தான்   .

வலிக்கும் போல  அழுது கொண்டே இருந்தாள் . ‘அப்படியானால் இன்னும்  தூங்க வில்லையா ?’ இவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது . கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாமோ ? .

இப்பொழுது எண்ணி எதற்கு , அதான் இதுவரை கொடுத்த அழகான தருணம் மொத்தத்தையும் ஒரே நொடியில் அளித்துவிட்டாயே . இனி என்ன செய்ய போகிறாய் ?என மனசாட்சி கேட்க அப்படியே கண்களை மூடி வருத்தத்துடன்  நின்றிருந்தான்

எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு தான் , மீண்டும் ரிதுராஜின் முகம் வந்து அவனது மூளையை சூடாக்க , இன்னும் கொஞ்சம் நேரம் நின்றாலும்  மேகாவை காயப்படுத்திவிடுவோம்  என்று உணர்ந்தவன் முதலில் சென்றது ஜிம்மிற்கு தான் . ஆனால் பன்ச் பேகை துவங்கி  ட்ரேட்மில்  என்று எதுவும்   வேலைக்காக வில்லை மனம் சூழலில்  சிக்கிய படகு போல  அவனை படுத்தி எடுத்தது ,   தன் ஆழ்மன போராட்டமும்  எண்ணங்களும்  மேகாவை மேலும் மேலும் காயப்படுத்தி விடுமோ  என மிகவும் பயந்தான் . மேகாவும் வேண்டும்  , அவளை தன்னோடு இணக்கமாகவும் வைத்துக்கொள்ள தெரியவில்லை. ஆக  பைத்தியம் பிடித்துவிடுவது போல இருக்க,எங்கையாவது  சென்று ஒழிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது .   வெகு ஆண்டுகளுக்கு  பிறகு எந்த அறையில்  தன் மகிழ்ச்சி மற்றும் தன் குழந்தை பருவத்தை  தொலைத்தானோ அங்கே சென்றான் .

அறையின் கதவில் கைவைக்கும் பொழுதே இதயம் தாறுமாறாய் அடித்துக்கொண்டது , கன்றி  சிவந்திருந்த   அவன் முகத்திற்கு  பின்னால்  ஆயிரம்  வலிகள் ,   இடைவிடாது   அவனை  கொத்தி   தின்றது  . கோபம்  பாதி  வேதனை  பாதி   என்று   தன்னை  புரட்டி  போட்டுக்கொண்டிருக்கும்    உணர்வு  கலவையில்  சிக்கி  தவித்தான்  தீரன் .

பல ஆண்டுகள் அழுது  அழுது   அலுத்து  போன  விழிகள் , இப்பொழுது  கண்ணீருக்கு  பதிலாய்  ஆத்திரத்தையே  அள்ளி  கொடுக்க  ,துக்கம்  நெஞ்சை  பிழிந்தெடுக்க   கிளர்ந்தெழுந்த   ஆறாத சினத்துடன் உள்ளே  சென்று  தாழிட்டு  கொண்டான்  .

தாழிட்ட  இருட்ட  அறைக்குள்   புதைக்கப்பட்ட   பல  நினைவுகள் அவன்  முன்   துள்ளி  குதித்து  வந்து  அவனை  கொஞ்சம்  கொஞ்சமாய்  வதைக்க துவங்கியது .

சிரிப்பு   கோபம்  துரோகம்   துக்கம்  பயம்     என்று  மாறி  மாறி   மாயாஜாலம்   காட்டிய   உணர்வுக்குழியில்  இருந்து  மீள  இயலாது  மிகவும் தவித்தான்  . ‘ ஓ ‘ வென்று கத்த வேண்டும் போல இருந்தது .

” எனக்கு சந்தோஷமே கிடையாதா ” என கத்தினான் .

விழிகளை  அழுந்த  மூடி  பார்த்தான்  முடியவில்லை  , அதே  போராட்டம்  . வான்  பிளக்க   முடிந்த  வரை  கத்தினான் ,   எதிரொலியே   அவனை  புரட்டிப்போட்டது  .

பழைய  நினைவுகளுடன்  இன்று நடந்ததும் இணைத்து கொள்ள ,

” ஏன் பா விட்டுட்டு போனீங்க , ஓடிக்கிட்டே இருக்கேன் என்னால முடியல ” கத்தினான் . அவனது  செவியில்  எதிர்ரொளித்த   மேகாவின் வார்த்தைகள் , கடந்த கால நினைவுகள் என அனைத்தும்   தீரனை மிருகமாக்கியது  .  ஆத்திரம்  தீரும்   வரை  தன்  கரங்களை  சுவற்றில் அடித்து காயப்படுத்தினான்  . உடல்  வலுவற்று  போகும் வரை காயப்படுத்தினான் .இருட்டு  அறைக்குள்  அவன்  விழிகளுக்கு  மட்டும்  தென்ப்பட்ட  ஆங்காங்கே  கரை படிந்திருந்த   பியானோ   முன்பு  சர்வமும்   அடங்கிப்போக   மண்டியிட்டு   கதறி  அழுதான்  .

ஒரு  நேரம்  மேகாவுக்காக வாதாடிய மனம், அடுத்த கணமே அவள் மீது தான்  தவறு என சொல்லியது , எது எதையோ  மேகாவுடன்  தொடர்பு படுத்திகொண்டு பிதற்றினான் ,

” நோ இல்லை ” பைத்தியம்  பிடித்து கொண்டது போல கத்தினான் . தலையே வெடித்து சிதறிவிடுவது போல இருந்தது.

பூட்டிருந்த  அறையின் கதவை   தட்டியபடி  இருந்த அஷோக்கின் விழிகள் நண்பனின்  நிலை கண்டு நனைந்தது .

!!!!!!!!!!!!!!!

வெகுநேரமாக அலைபேசியையே ஒருவித எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவனது அலைபேசி சினுங்க, அதை எடுத்து கொண்டு மனைவிக்கு தெரியாமல் பால்கனிக்கு  சென்றவன் ,

” வாட் இதை சொல்ல தான் கால் பண்ணிருந்தியா? ” மெல்லிய சத்தத்தில் பல்லை கடித்தான் .

” ட்ரை பண்ணினோம் சார் பட் “

” போனை வை  ” என்று   பாஸ்கர் சீறி கொண்டிருக்க,

“என்னாச்சு இந்த நேரத்துல யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க  ” என்றபடி வந்த மனைவியை ‘ ப்ச் சும்மா ஆபிஸ் விஷயம் ‘ இது உனக்கு தேவையில்லை என்பதை புன்சிரிப்புடன் கூறி அணைத்துக்கொண்டான் பாஸ்கர் .

!!!!!!!!!!!!

நொடிகள்  நகர  நகர தீரனின்   நிலைமை  மோசமாகிக்கொண்டே  போனது  . இதற்கு மேலே அவனை தனியாக  விட கூடாது என்று எண்ணிய அஷோக் கதவை இன்னும் வேகமாக  தட்ட  , உள்ளே தீரன் கையில்  கிடைத்த  பொருட்களை  எடுத்து  சரமாரியாக   வீச துவங்கி இருக்க , அஷோக்குத்தான் மிக சிரமப்பட்டு கதவை  உடைக்காத குறையாக  திறந்து கொண்டு உள்ளே சென்று நிலைகுலைந்த  நிலையில் இருக்கும் நண்பனை தாங்கி பிடித்து கொண்டான் .

” என்னடா பண்ணிட்டு வா உன் ரூம்க்கு போ “

” நோ அவ இருப்பா ராட்சசி டா அவ  பைத்தியம் புடிக்க வைக்கிறா. என்னை ஹர்ட் பண்ணிட்டே இருக்கா   ” என்ற தீரன் கண்களை மூடிய நிலையில்  சோர்வுடன் அப்படியே  சரிந்து அமர்ந்தான் .

” அதுக்காக இங்கையே இருக்க போறியா “

” ம்ம் இது தான் என் ரூம் , இந்த இருட்டு அறை தான் எனக்கானது அஷோக் . நான் சந்தோஷமா வாழணும்ன்னு நினைச்சாலும் ,இந்த உலகம் வாழ விடாது. இங்கையே இருக்கேன் , தயவு செஞ்சு போய்டு உன்கிட்டையும் போராட எனக்கு தெம்பில்லை ” என்றவன் அப்படியே கண்மூட,  தீரனை தனியே விட மனம் வராமல் அஷோக்கும் வேறு வழி தெரியாமல் வாசல் அருகே அமர்ந்து கொண்டான் .

அஷோக்கிற்கோ  பிரச்சனை தீவிரமானது  என்பது புரிந்துவிட்டாலும் ,  கணவன் மனைவிக்கிடையில்  வரவும்  முடியாமல் , நண்பனின் நிலையை காணவும் முடியாமல், மேகாவுக்கு தீரன் கொடுக்கும் துன்பத்தை சகித்து கொள்ளவும் முடியாமல் மிகவும் திணறி போனான் .

அஷோக்கிடம் தனக்கு தனிமை வேண்டும் என்று கூறி அதே இருட்டறையில்  அமர்ந்திருந்த தீரனால் வெகு நேரம் மனைவியை பார்க்காமல் இருக்க முடியவைல்லை .சில நாட்களாக  அவளது அருகாமையிலே உறங்கி பழகியவனுக்கு உறக்கம்  வர  மறுக்க ,ஒருமுறையாவது பார்த்தால் தான் அடங்குவேன் என  அடம்பிடிக்கும் மனதை அடக்க வழி தெரியாமல்  தன் அறைக்குள் நுழைந்தான் .

தீரன் எழுந்து செல்வதை பார்த்து கொண்டிருந்த அஷோக்கிற்கு தீரனின் மனநிலை நன்றாக புரிந்திருந்தாலும்  அவன் மனக்கவலையை  எப்படி சரி செய்வது என்று தான் தெரியவில்லை .

தலை சற்று சரிந்திருக்க அமர்ந்திருந்த நிலையிலே  உறங்கி கொண்டிருந்தாள் மேகா .கரத்தில் இருந்த காயத்தை பார்த்தான் , வலியை தன் இதயத்தில் உணர்ந்தான் . எழுந்து சென்று  மெடிக்கல் பாக்ஸை  சத்தம் வராமல் உருட்டியவன் , ஒரு கலிம்போடு அவள்  அருகில் அமர்ந்து அவளது வலது கரத்தில் மருந்திட்டான் .   அவளது மென்கரத்தை மென்மையாக தாங்கிக்கொண்டவன்  வழக்கம் போல அவளது காதில்  பேச தொடங்கினான் .

“ஏன் வரு உனக்கு என்னை புடிக்கல ? என் காதல் ஏன் உனக்கு புரியவே இல்லை ? ஒருவேளை நானும் ரிதுராஜ் மாதிரி  இருந்திருந்தா  உனக்கு என்னை புடிச்சிருக்குமோ ? நான் என்னை பண்றது? என்  வாழ்க்கை நார்மலா அமையலையே  , அதன் பிறகு நானும் அதை அமைத்துக்கொள்ளவில்லையே , ஆனா இப்போ மொத்தமா மாற தயாரா இருக்கேன் , ஆனா அது உன் கண்ணுக்கு தான் தெரிய  மாட்டிக்குது ” என்று அவளது காயம் பட்ட கன்னத்தில் மென் முத்தம் பதித்தவன் ,

” ஒரே ஒரு வார்த்தை  என் மனசுல நீ தான் இருக்கன்னு சொல்லிருந்தா இவ்வளவு பிரச்சனையே  இல்லையே டி”  என்றவன்  மேகாவை தன் இருகைகளாலும் ஏந்தி கட்டிலில் கிடத்த, சிறு செருமளுடன்  அவள் தன் உறக்கத்தை தொடர , அவள் அருகில் நின்றபடி அவளையே பார்த்து கொண்டிருந்தவன் , பின்பு அவளது அருகில் வந்து தானும் படுத்து கொண்டான் .

!!!!!!!!!!!!!!!!

தலையை  பிடித்தபடி காலை மேகா கண்விழிக்கும் பொழுது . உடம்பு அடிபட்டது போல வலிக்க ,அறையில் இருந்த நிசப்தம்  தீரன் இங்கு இல்லை  என்பதை சொல்ல  ,மணியை பார்த்தாள்,

” இவ்வளவு நேரம் ஆகிடுச்சா, ஒரு மீட்டிங்கும்  ரெண்டு அப்பாயின்மென்டும்  இருக்கே  ” என்று பதறியவள்  , அலைபேசியை  தேடும் பொழுது தான் நேற்றைய  சம்பவங்களை  எண்ணியவள்,

” போனும் இல்லை ,எப்படி கால் பண்றது ” என்ற சிந்தனையுடன்   லேண்ட் லைன்னில் பேசலாம் என முடிவெடுத்தவள்   மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்து தனக்கு உதவியாக இருக்கும் பெண்ணை தொடர்புகொண்டாள் ,

” குட் மார்னிங் மேம் “

” குட் மார்னிங் ,இன்னைக்கு உள்ள மீட்டிங்கை ரீஷெட்யூல் பண்ணுங்க ” என மேகா  ஆரம்பிக்கவும் ,

” எல்லாம் பண்ணியாச்சு மேம் ,உங்க ட்யூட்டிகூட திவ்யா மேம்க்கு அசைன் பண்ணியாச்சு  ” என்று மேகாவின்  அசிஸ்டன்ட் முந்திக்கொண்டு பதில்  சொல்ல ,

“ஏற்கனவே பண்ணியாச்சா ? ஆனா நான் சொல்லவே இல்லையே ” ஆச்சரியத்துடன் வினவினாள் ,

” மேம் காலையிலே  அக்னி சார் கால் பண்ணி உங்களுக்கு கொஞ்சம் உடம்பு  சரியில்ல  சோ டூ டேஸ்க்கு வர மாட்டீங்கன்னு சொல்லி , உங்க ஷெட்யூல்ஸ் எல்லாத்தையும்  கேட்டு ரீஷெட்யூல் பண்ண சொல்லிட்டாங்க   ” என்று சொல்ல ,

” ஓகே ” கசப்பாக புன்னகைத்தவள் !பெரிதாக வியக்கவில்லை இது போன்ற காரியங்களை அவனை தவிர யார் செய்ய முடியும் , எழுந்த சந்தேகத்தை   அப்பெண் தீர்த்துவிட்டாள் அவ்வளவே .

“உங்க ஹெல்த் எப்படி இருக்கு மேம்   “

” பீலிங் பெட்டெர் “

” டேக் கேர் மேம் ” என்றவளிடம் சிறு புன்னகையுடன் அழைப்பை வைத்தவள் , உடல் சோர்வுடன்  குளியல்  அறைக்குள் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மேகாவுக்கு சூடாக ஏதாவது குடித்தால்  நன்றாக இருக்கும் என்று தோன்ற , சிரமத்துடன்  அறையின் கதவை திறந்த மறுகணம்  அவள் முன்பு வந்த பணிப்பெண் ,

“மேம்  நீங்க ரெஸ்ட் எடுக்கணும் ” என்று கூற , மேகா சிறு எரிச்சலுடன் பார்க்க , அடுத்த நிமிடம் உணவு ட்ரேயுடன்  அந்த  பணிப்பெண் அறைக்குள் நுழைய,  மேகாவுக்கு கோபம் தான் வந்தது .

” எனக்கு பசிக்கல எடுத்துட்டு போங்க “

” சாரி மேம் ,நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு,  இந்த டேப்லெட் போட்டுக்கணும்   , அப்புறம் இந்த ஆயின்மென்ட்  அப்லே பண்ணிக்கிட்டு ரெஸ்ட் எடுக்கணுமாம் , சாரோட ஆடர்” என்றாள்.  ‘ எதிர்பார்த்தேன் ‘ என்ற முகபாவனையுடன்  பெருமூச்சை வெளியிட்ட மேகா , எப்படியும்  நம் உணர்வுகளுக்கு இங்கு மதிப்பில்லை  வாதாடி என்ன பயம் என்று எண்ணியவள் ,

” சரி வச்சிட்டு போங்க ” என்றாள் .

” சாரி மேம் லேட் ஆகிடுச்சாம்  சோ சாப்பிட்டு முடிகிற வரை வெயிட் பண்ணனும்  , சார் ரிப்போர்ட் பண்ண சொல்லிருக்காங்க ” என்று சொல்லிவிட்டு ஒரு ஓரமாக சென்று தலைகவிழ்ந்து நிற்க ,  மீண்டும் விரக்தியாக  புன்னகைத்த  மேகா , சாப்பிட்டு முடித்துவிட்டு கட்டிலில்   தலை சாய்த்து அமர , அவள் முன்பு ஒரு  பார்செல்லை நீட்டிய பணிப்பெண், மேகா கேள்வியாக பார்க்கவும் ,

“சார் குடுக்க சொன்னாங்க ” என்று சொல்லிவிட்டு அவள் வாங்குவதற்காக  காத்திருக்க , சிறிதுநேர தயக்கத்திற்கு பிறகு வாங்கினாள்.

பணிப்பெண் பாத்திரங்களை  எடுத்துக்கொண்டு வெளியேறியதும் ,  அந்த பார்செல்லை திறந்து  பார்த்தவள் அதில் இருந்த புத்தம் புது அலைபேசியை  எடுத்து பார்த்தாள் .

தீரன் நேற்று செய்ததும்  , இறுதியில் அலைபேசியை   தூக்கி எறிந்து உடைத்ததும்  நினைவிற்கு  வர , ஒரு நடுக்கம்  உடலில் பரவியது ,  அலைபேசியை மெத்தையில் பட்டென்று  போட்ட மேகா கண்களை மூடிய நிலையில் அமர்ந்திருக்க  , அப்பொழுது பார்த்து அலைபேசி சிணுங்கவும் எடுத்தவள்  அமைதியாக இருக்க , எதிர் தரப்பிலும்  அதே அமைதி .

அழைத்தது  அவன் தான் தன் இதயம் வேகமாக துடிப்பதில்  உணர்ந்து கொண்டாள்  .

இன்னும் பயத்தோடு தான்  இருக்கிறாள்   எதிரொலிக்கும்  மூச்சு காற்று  அவளது நிலையை அவனுக்கு உணர்த்தியது .ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சுரீரென்று  பாய்ந்தது , கண்களை இறுக்கமாக மூடி திறந்தான் .

ஆயிரம்  சொன்னாலும்  நீ நடந்து கொண்டவிதம்  தவறு , கோபத்தில் என்ன வேண்டுமானாலும்  செய்வாயா ? இது தான் உன் ஆண்மையா  என அவன் மனசாட்சி  மீண்டும்  கேட்க , குற்றஉணர்ச்சியில்  சில நிமிடம் மெளனமாக இருந்தான்  .

விடியற்காலையில்  மேகாவின் முனங்கல் சத்தத்தில் எழுந்தவனுக்கு  அவள் உடல் காய்ச்சலில் கொதித்த பொழுது  ஒன்றும் ஓட , அந்த நொடியே  அவனுக்குள் மிச்சம் இருந்த கோபத்தையம்  அவனுக்குள் மனைவியின் மேல் ஆழமாய் வேரூன்றி இருந்த நேசம்  கொன்றுவிட , தான் செய்ததை எண்ணி நெற்றியில் அறைந்தவன் , உடனே மருத்துவரை வரவைத்திருந்தான் .

பின்பு  அவளை அணைத்தபடி மாதிரியை  விழுங்க செய்தவன் , காய்ச்சல் குறையும் வரை கண்விழித்து அவள் அருகில் அமர்ந்து அவளை பார்த்து கொள்ள , காய்ச்சல் முழுவதும்  இறங்கிய பிறகும் அவன் உறங்க வில்லை . இப்பொழுது கூட அவளது உடல் நிலை குறித்து விசாரிக்க தான் அழைப்பு விடுத்தான்  .

 ஆனால் இது எதுவும்  அறிந்திருந்தாத மேகா அவன் மீது கொண்டு வருத்தத்தினால் , அவன் ஏதாவது பேசட்டும் நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவள்  சமயம் எதிர்பார்த்து அமைதியாக இருக்க .

குற்றஉணர்ச்சியில்  சிக்கிக்கொண்ட தீரனும்  எப்படி ஆரம்பிப்பது  என்னும் தவித்தபடி இருக்க.

அவனுக்கும்  பேச முடியவில்லை .அவளும் பேச தயாராக  இல்லை . ஆக இருவரில் யாரவது தொடங்க  வேண்டும் அழைத்தது இவன் தான் , இவன் தான் பேச வேண்டும் . மூச்சை இழுத்து வெளியிட்டவன் ,

” போன் பார்த்தியா ” ஆரம்பித்தான் .

“——————” மௌனம்

” உனக்கு தான் . புடிச்சிருக்கா  ?”

“——————–“பதில் இல்லை   மூச்சு விடும் சத்தம் மட்டும் அவனுக்கு  அதிகமாக கேட்டது . கோபப்படுகிறாள் !

” சாப்பிட்டியா ?” இப்பொழுது இவன் குரல் தாழ்ந்தது .

“—————-” மேகாவுக்கு தொண்டை குழிக்குள்  ஏதோ ஒன்று அழுத்தியது போல வலித்தது .

” உடம்பு எப்படி இருக்கு ” இவனுக்கும்  உள்ளே வலித்தது .

“——————–“உதட்டை  கடித்து  கேவலை அடக்கிக்கொண்டாள் .

” ரொம்ப வலிக்குதா வரு “நெஞ்சை நீவியபடி கேட்டான் .  வாயை மூடி கொண்டு  அழுவாள் போல மூச்சு விடும் சத்தத்திற்கு இடையே வெளிப்பட்ட சிறு சிறு கேவல்கள் அவள் வலியை இவனுக்கு சொல்லியது . இவனுக்கும்  வலித்தது  .

” பதில் சொல்லு மேகா “

“————————” அதே மௌனம் , இதுபோல தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் , தன்னை  பொருட்படுத்தாமல்  அலட்சியப்படுத்துவெதெல்லாம்  ,தீரனுக்கு பிடிக்காத ஒன்று . நேற்று அவன் சொல்ல சொல்ல பேச கூடாததை பேசி அவனை  கோபப்படுத்தினாள் . இன்று மௌனமாய் இருந்து அவனை படுத்துகிறாள் . முன்பும் மேகா தீரனுடன் பெரிதாக எல்லாம் பேசியது கிடையாது ஆனால் கேட்கும் கேள்விகளுக்கு ம்ம் ஆம் என்றாவது ஏதாவது கூறுவாள் இன்று அதுவும் இல்லை என்றதும்  அவனுக்கு  கோபம் வர ,

” பேசு மேகா ” அதட்டினான் .

” எனக்கு டயர்டா இருக்கு” நலிந்த குரலில் பட்டென்று கூறினாள் .  உன்னிடம் பேச பிடிக்கவில்லை  என்றது அவளது குரல் , இவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட , சில நொடிகள்  அவளுது மூச்சு விடும் சத்தத்தை  கேட்டுவிட்டு  அலைபேசியை வைத்துவிட்டான் .

அவன்  ஏதாவது  கேட்டால் பதிலுக்கு பேசிவிட வேண்டும் என்று  இருந்த மேகாவுக்கு, ஏனோ அவன் குரலை கேட்டதும் கண்ணீர் வர , அவன் அழைப்பை வைத்த மறுகணம் ‘ ஓ’ என்ற  கதறலுடன் அழுதுவிட்டாள்.

” தீரன் மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு ” என்று அஷோக்  அழைக்கவும் ,

” ஒன்னு பேசி வெறியைக் கூட்டுறா , இல்லைன்னா பேசாம வெறியை கூட்டுறா ” என்ற தீரன் ,  மீட்டிங் ஹாலிற்குள் நுழைந்தான் .

தொடரும்