MIRUTHNAIN KAVITHAI IVAL 30

cover page-372be540

MIRUTHNAIN KAVITHAI IVAL 30

மிருதனின் கவிதை இவள் 30

கான்பரன்ஸ்  ஹாலின்  அந்த நீளமான  மெசஜைக்கு  நடுநிலையாக  கோர்ட் சூட் அணிந்த நான்கு பேர் அமர்ந்திருக்க , சிறிது சிறிது இடைவெளி விட்டு, வட்ட வட்ட மேஜையில்   வெவ்வேறு கம்பெனியில்  இருந்து இந்த லண்ட்  டீலை கைப்பற்ற  வந்திருந்த அனைவரும் தனி தனி குழுக்களாக  அமர்ந்திருந்தனர் .

அங்கே தன் மனைவியுடன் வந்திருந்த  கிரண் பாஸ்கரும்  , தீரன் மற்றும் அஷோக் அமர்ந்திருக்கும் மேஜைக்கு நேர் எதிரே அமர்ந்திருக்க , அஷோக் இருவரை பார்த்து தீவிரமாக முறைத்து கொண்டிருக்க  , தீரனின்  பார்வை ஓர் கணம் தாரிக்காவின் மீது கனிவுடன் படிந்து மீண்டது . ஆனால் தாரிக்காவோ  அஷோக்கை  தான் சிறு ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் .

பின்பு சிறிது நேரத்தில் ஏலம்  ஆரம்பிக்க , இருபது கோடியில் ஆரம்பித்த ஏலம் நூறில்  வந்து நின்ற சமயம் , ஒரு சில கம்பெனிகள்  ஏலத்தை  விட்டு கொடுத்திருக்கும் நிலையில் , தீரன் நூற்றி பத்து கோடி என்று கேட்க . தீரனை முறைத்தபடி  கிரண் ,

“நூற்றி இருபது  கோடி” என்று கேட்கும் பொழுதே , கிரணின் அசிஸ்டன்ட் ‘இதுக்கு மேல  வேண்டாம் சார்  அமவுண்ட் இந்த ப்ராஜெக்ட்டோட  ஃபண்டை  தாண்டி போகுது ‘ என அவனது காதில் கூற , பாஸ்கரின் கண்கள்  மொத்தமும் வன்மமாக தீரனின் மீது தான் இருந்தது .

” நூற்றி முப்பது ” தீரனின் ஆள்காட்டி விரல் மட்டும் உயர்ந்திருக்க  அவனது பார்வை  முழுவதும் , கையில் இருந்த டேபிள்  சிசிடீவி மூலமாக தெரிந்த ,  தோட்டத்தில்  சோகமே உருவாய் அமர்ந்திருக்கும்  மனைவியின்  மீது தான் இருந்தது .

 அவன் கிரணை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை , ஆனால் கிரணின் கண்களில் தெரிந்த  வெறி  அவனுக்குள் பல வருடமாய் எரிந்து கொண்டிருக்கும்  பலி உணர்வை  காட்டியது .

” நூற்றி நாற்பது ” தீரனை  எரித்துவிடுவது போல பார்த்தபடி கிரண்  கூறினான் , கிரணின் அசிஸ்டன்ட்  தாரிக்காவை பாவமாய் பார்க்க , தாரிக்கா கிரணின் காதில் ஏதோ கூறினாள் . ஆனால் அவனது கவனம் மொத்தமும்  தீரனை வீழ்த்துவதில் தான்  இருந்தது .

” நூற்றி ஐம்பது ” தீரன் .

” நூற்றி எழுபது ” என கிரண் சொல்லிக்கொண்டிருக்கும்  பொழுதே ,

ப்ளூடூத் வழியாக ” மேகா இப்போ என்ன  பண்ணிட்டு இருக்கா “என கேட்டுக்கொண்டிருந்த தீரன் பேச்சுக்கு இடையே  ,

” நூற்றி ஏழுபதி ஐந்து ” என இங்கே சொல்லிவிட்டு,   மீண்டும் அலைபேசியில் தொடர்ந்தான் ” மேம் லன்ச் சாப்பிடுறாங்க சார் “

” ஓகே மதியம்  கொடுக்க வேண்டிய டேப்லெட் குடுத்துட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க கிவ் மோர் லக்விட்ஸ் “மெதுவான குரலில் கட்டளையிட்டான் . மனைவி தோட்டத்தில் இருந்து உள்ளே சென்றதும் , பணிப்பெண்ணுக்கு அழைத்திருந்தான்  .

அவளது விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டான் .எங்கே சென்றாலும் எண்ணம் முழுவம் அவள் மீது  தான் ,ஆனால் அதை காட்ட தான் தெரியவில்லை .

” நூற்றி என்பது ” என்றான் கிரண், ” சார் இதோட ஸ்டாப் பண்ணுங்க  கம்பெனி ஃபண்டை  நெருங்கிடுச்சு , இனிமே கேட்க முடியாது  லாஸ் ஆகிடும் ” கிரணின் அசிஸ்டன்ட் நிலைமை கைமீறுவதை தன் முதலாளியிடம் எடுத்து கூறினான் .

” இருநூறு ” என்று  தீரனை முந்திக்கொண்டு அஷோக் கூற , அவனை  புருவம் சுருக்கி பார்த்த தீரன் அவன் காதில் , ” இதுக்கு மேல கேட்காத  மித்ரா ,நூற்றி என்பது தான் நாம பிக்ஸ் பண்ணினது .அதுக்குமேல கொடுக்கிறதுக்கு அது வொர்த் இல்லை   ” என்றான் .

” இருநூற்றி  இருபது ”  என்ற கிரணை  எரிச்சலுடன் பார்த்த  தீரன் , அஷோக்கை பார்க்க,  அவனோ தீரன் தடுப்பதற்குள் ,” லாஸ்ட் அண்ட் பைனல் டுபிப்டி சி(250  c ) ” என்று கூறி சாய்வாக அமர்ந்து  கிரணை இகழ்ச்சியுடன்  பார்த்து புன்னகைக்க  , தீரனுக்கு அஷோக் மீது பயங்கர  கோபம் வர , கிரணோ  டேபிள் மீது இருந்த அலைபேசியை எடுத்து கொண்டு வேகமாக  அந்த அறையை விட்டு கிளம்பினான் .

தீரனுக்கு அஷோக்கின்  முடிவில்  விருப்பம்  இல்லை தான் , இருந்தும்  அந்த இடத்தில் அதை காட்டிக்கொள்ள  விரும்பாதவன்,  கம்பெனியின் தலைமை பொறுப்பில் இருப்பதால் டாக்யூமென்ட்ஸில்  தன் கையெழுத்தை   போட்டுவிட்டு,  மற்றும் இதர சம்பிரதாயங்களையும்  முடித்து  கொண்டு வெளியேறிய தருணம் ,

” என்ன மிஸ்டர் கிரண் பாஸ்கர் விஷ் பண்ண மாட்டிங்களா ” என அஷோக் கிரணை சொடக்கிட்டு அழைத்து  வம்படியாக வம்பிழுக்க , கிரணை கண்டாலே வெறுக்கும் தீரனுக்கு  அவனிடம் நேரத்தை விரயமாகிக் கொண்டிருக்கும்   நண்பனை  பார்த்து கோபம் தான் வந்தது .

“கங்கிராட்ஸ் ” போனால் போகட்டும் என கிரண் தீரனை அழுத்தமான பார்வை பார்த்தபடி வாழ்த்துக்கள் கூற , தீரனோ அவனது முகத்தை கூட பார்க்க வில்லை .

” எவ்வளவு அசிங்கப்பட்டாலும்  திரும்ப திரும்ப எங்க கூட போட்டி போட்டு கேவலமா தோற்று போறியே உன்னை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு ,சும்மா இருந்தா  கம்பெனி பக்கம் வா  ,க்ளர்க் போஸ்ட் காலியா தான் இருக்கு  ” என அஷோக் கேலியாக சொன்னதும் , கிரண் அஷோக்கை நோக்கி தன் கரங்களை நீட்ட அஷோக்கை தள்ளிவிட்டு இடையில் வந்து கிரணின் கரங்களை பிடித்து கொண்ட தீரன் ,

“கனவுல கூட  இப்படி யோசிக்காத ,விளைவுகள் மோசமா இருக்கும் ” என்றவன் தாரிக்காவை ஒருகணம் பார்த்துவிட்டு கிரணிடம் ,

“நான் அமைதியா இருக்கேன் தான், ஆனா நான் நேசிக்கிறவங்களை  என்னைக்கும் மறக்க மாட்டேன்  . ஸோ யாரவது  அவங்களை  காயப்படுத்தினாங்கன்னா ? அவங்களை அதை விட கொடுமையா  காயப்படுத்துவதை  தவிர எனக்கு வேற வழியில்லை ” என்று எச்சரித்துவிட்டு   அஷோக்கை அழைத்து கொண்டு சென்றவன்  ,மீண்டும் திரும்பி கிரணை பார்த்து,

” ஒரு சஜஷன்  சொல்றேன் கிரண் ,கேம் எப்பவுமே நம்ம திறமைக்கு உட்பட்டவங்க கூட தான் விளையாடனும் . ஏன்னா எதிராளி உன்னை விட வலவீனமானவனா இருந்தா, ஜெய்கிறதுல சுவாரசியம் இருக்காது . ஒருவேளை ,எதிராளி உன்னை விட திறமைசாலியா இருந்தா ? இதோ ” என்று கிரணின் முகத்தை தன் விரலால் சுட்டிக்காட்டிய தீரன் ” தோல்வியோட வலி ரொம்ப அதிகமா இருக்கும் ” என்ற விட்டு  அங்கிருந்து கிளம்ப ,

” என் வெற்றி உன் தோல்வில இல்ல தீரன், உன் அழிவுல தான் இருக்கு சீக்கிரம் இந்த கேமை முடிக்கிறேன் ” என்று எண்ணிய   கிரணின் இதழ் இகழ்ச்சியாக  வளைந்தது .

!!!!!!!!!!!!!!!!!!

” தள்ளியிருந்தே  என்னை  ஆட்டிவைக்க  இவனால் மட்டும் தான் முடியும் , அவ்வளவு கோபம் இருக்கு ஆனா   அவன் குரலை கேட்டா அழுகை தான் வருது ” என தன் முன்னே  இருக்கும் உணவு பதார்த்தங்களையும்  , மாத்திரையையும் பார்த்து தீரனை மனதிற்குள் திட்டியவள் , ஒவ்வொன்றையும்  உண்ண இயலாது வயிற்றிற்குள் திணித்தாள் .

!!!!!!!!!!!!!!!!!!!!!

” நீ இன்னைக்கு பண்ணினது சுத்தமா சரி இல்லை . ஒன் ஏய்ட்டி(180 ) தான் நாம பிளான் பண்ணிருந்தோம். ஆனா நீ  செவென்ட்டி சி  எக்ஸ்ட்ரா கொடுத்திருக்க , இட்ஸ் அ க்ரேவ் மிஸ்டேக் ” கொஞ்ச நேரத்திற்கு  முன்பு முடித்த  கோப்பை டேபிளில் வீசியபடி தீரன் சீறினான்  .

” ஓகே அவன் தோற்றுப்போனான்ல  அது  போதும்  டா , கூட இருபது சி கூட கொடுத்திருக்கலாம் “

” என்ன பேசுற டா நீ , நாம   இன்வெஸ்ட் பண்ணிருக்கோம் , இப்போ பாரு இதுல உள்ள அமவுண்ட்ட நாம மத்த ப்ராஜெக்ட்ல ஈடுகட்டணும் .  இது பெரிய தலைவலி  தெரியுமா “

” பண்ணிக்கலாம் தீரா , ஆனா நான் முடிவு பண்ணிட்டேன் கிரணை இனி சும்மா விட மாட்டேன்.  எப்போ உன் மேல கைவைக்கிற அளவுக்கு வந்துட்டானோ  அவனை சும்மா விட மாட்டேன், “

” அஷோக் “

“என்னடா  நீ அதை ஈஸியா எடுத்திருக்கலாம்  .ஆனா என்னால  அப்படி எடுத்துக்க முடியல  .அந்த ஷூட்டவுட்ல உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா ?என்னால நினைச்சு கூட பார்க்க முடியல . அவனை ஏதாவது செய்யலாம்ன்னு சொன்னேன் , ஆனா நீ  அவன் மேல  கைவைக்க கூடாதுன்னு சொல்லிட்ட வேற எப்படி தான் என் கோபத்தை நான் தீர்த்துகிறது , இனி என் டார்கெட் அவன் தான் .  அவன் வாழ்க்கையில இனிமே தோல்வி மட்டும் தான் பார்ப்பான் .  ரோட்ல நிக்கட்டும் அப்போ தான் நம்மல ஏமாற்றியதுக்கு அவளுக்கும்  புத்தி  வரும் ” என்ற அஷோக்கின் மனதிற்குள் தாரிகாவுடன் கழித்த இன்பமான நிகழ்வுகள் வந்து செல்ல , எதுவும் பேசாமல் அஷோக் அங்கிருந்து சென்றுவிட்டான் .

!!!!!!!!!!!!!

” கொஞ்சம் பொறுமையா இருங்க கிரண் இவ்வளவு கோபம் வேண்டாம் ” ஆத்திரத்தில் கிடைக்கும் பொருளையெல்லாம்,  தூக்கி எறிந்து கொண்டிருக்கும் கணவனை எப்படி தடுப்பது என புறியாது தாரிக்கா பதறி கொண்டிருக்க  , கிரண் வெறி பிடித்த மிருகம் போல கத்தி கொண்டிருந்தான் .

” எப்படி பொறுமையா இருக்க , ஜஸ்ட் செவென்ட்டி சீல  நான் தோற்று போய் நிக்கிறேன் , அவனுங்க பணத்திமிருல ஆடிட்டு இருக்கானுங்க ” ஏற்பட்ட தோல்வியின் வலி அவனது வார்த்தையின் ஆக்ரோஷத்தில் தெரிந்தது .

” விடுங்க பா இது இல்லைன்னா , நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்  எனக்கு உங்க உழைப்பு மேல நம்பிக்கை இருக்கு  நீங்க நிச்சயம்  முன்னுக்கு  வருவீங்க  ” என்ற தாரிக்காவை  எரிச்சலுடன்  பார்த்தான் .

மாலையில் இல்லம் திரும்பிய தீரன் நேராக தன் அறையை நோக்கி செல்ல , கதவு திறக்கும் அரவம் கேட்டதும் சட்டென்று உறங்குவது போல மேகா தன் கண்களை மூடிக்கொண்டு படுத்து கொண்டாள் .

நேற்று நடந்த சம்பவத்திற்கு  பிறகு மேகா  முடிந்தளவு  தீரனின் கண் பார்வையில் இருந்து விலகியே  இருக்க  விரும்பினாள் .  அவன் ஏற்படுத்திய  காயங்களை  விட , அவன் விட்ட வார்த்தைகள் அவளது ஆழ்மனதை போட்டு மிகவும் அழுத்தியது .

அவன் மீது அவள் கொண்ட பயமும் இன்னும் அதிகரித்திருந்தது . அவனுக்காக  அவள் மனதில் துளிர்த்த நேசத்தை தான்   அவனே பிடுங்கி  எறிந்துவிட்டானே . இனி  மீண்டும்  எப்படி அவனுடன் இயல்பாக பழக முடியும் ?

போதாக்குறைக்கு  அவன் தன்னிடம் பேசினால் தன் மனதில்  உள்ள  ஆதங்கத்தையும்  கோபத்தையும் காட்டிவிட வேண்டும் என இவள் மனம் ஒருபுறம் நினைத்துக்கொண்டிருக்க , மறுபுறம் அவன் குரலை கேட்ட  உடனே  மேகா உடைந்து    அழுதுவிட , நியாயப்படி கோபம் கொள்ளவேண்டியவனிடம்  இப்படி அழுது வடியும்  தன் மனதை புரிந்துகொள்ள முடியாமல்  மிகவும் குழம்பியவள் , மீண்டும் இவனை நம்பி  ஏமாற்றமைடைந்து  இவனது அமில வார்த்தைகளை  தாங்கிக்கொள்ள  தெம்பில்லை .

ஆக  இவன் இப்படி தான் , ஒரு  நேரம் அன்பை மழையென பொழிவான்  மறு கணமே வார்த்தைகளை விஷம் போல துப்புவான் . இனி  மீண்டும் இவன் மாயவலைக்குள் சிக்கி கொண்டு  தவிக்க கூடாது என தனக்குள்ளே மந்திரம் போல சொல்லி கொண்டவள் ,

அவனை பார்த்தால் தானே பேசவேண்டி வரும் , இனி பார்க்கவே கூடாது என  அவனை தவிர்க்க  ஆரம்பித்து , நத்தை போல தன்னை தன் கூட்டுக்குள்ளே அடைத்துக்கொண்டு  தீரனை விட்டு தள்ளியே இருந்தாள். 

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் தன் அலைபேசி ,வாலெட் என  அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு கழுத்தை இறுக்கிக்கொண்டிருக்கும்  தன் டையை தளர்த்தியவன் , மெல்ல மனைவியின்  அருகில் வந்து  ,விடியற்காலையில்   இருந்தது போல காய்ச்சல் எதுவும் இருக்கிறதா என அவளது நெற்றியை தொட்டு பார்த்தான் , ‘நல்ல வேலை காய்ச்சல் இல்லை ‘ நிம்மதி பெருமூச்சு விட்டவனுக்கு மனைவியின் உடல் மொழியில் இருந்தே அவள் உறங்கவில்லை என்பது புரிந்துவிட , அவளை தொந்தரவு செய்யாமல்  டேபிளில் இருந்த களிம்பை எடுத்து மெதுவாக  அவளது கரங்களில் பூசிவிட்டவன் , தன் தொடுகைக்கு மனைவியிடம்  தெரிந்த சிறு சிறு அசைவுகளை மட்டும் பார்த்துவிட்டு  குளியலறைக்குள் புகுந்து கொண்டான் .

 அவன் உள்ளே சென்றது தான் தாமதம் சோர்வுற்ற உடல் படு என்று சொன்னாலும்  அவனை பார்க்க கூடாது என முடிவெடுத்திருந்த மேகா தளர்ந்த நடையுடன் தோட்டத்திற்கு  வந்து புகுந்து கொண்டாள் .

எண்ணம் முழுவதும் அவன் மீது தான் இருந்தது , இதோ இங்கு வந்து அரைமணிநேரமாவது  கடந்திருக்கும் மனம் ஒருகணம் கூட அவனை நினைக்காமல் இல்லை  .  இப்படி சொல்லிவிட்டானே என ஆதங்கப்பட்டாவது அவள் உள்ளம்  அவனை நினைத்து கொண்டு இருக்க  மேகாவுக்கே  தன்னை எண்ணி வியப்பாக இருந்தது .

மேகா  தோட்டத்தில் உலாவி வரும்பொழுது இதோ தங்களின்  அறையின் பால்கனியில் நின்றபடி  தினமும் காலையில்  உடற்பயிற்சி செய்தபடியும்  , மாலையில்  அவன் எப்பொழுதும் பருகும் ப்ளாக் காபியை சுவைத்துக்கொண்டும்   எங்கோ பார்த்தபடி இவளை  நோட்டமிடுவான்  , அவளும்  பல நாட்கள்  அவன் பார்க்காத நேரம் ,’ தோட்டத்தில கூட நிம்மதியா இருக்க முடியல  ,யாரை பார்த்துட்டு இருக்கனான்னே தெரியல  ‘ என  சலித்துக்கொண்டே அவன் கண்ணை தப்பி இரெண்டு மூன்று முறை பார்த்துவிடுவாள் . இங்கு வந்து விரலை விட்டு எண்ணிவிடும்  இத்தனை நாட்களில் இது அவர்கள் இருவரின் தினசரி வாழ்க்கையில்  நடக்கும் நடைமுறையில் ஒன்று.

” காஃபி குடிச்சிட்டு இருப்பான் ” என்றவளின்  கண்கள் தானாக பால்கனி பக்கம் நோட்டம் இட , அங்கு அவன் நிற்பதற்கான  எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்க ,

” நல்லது அப்படியே அவனும் நம்மளை தொந்தரவு  பண்ணாம  ஒதுங்கியே இருக்கட்டும் ” என்று சொல்லிக்கொண்டவள்  , வாக்கியத்தை முடிப்பதற்குள்  வார்த்தைக்கு வார்த்தை  பால்கனியை  நோட்டமிட்டுவிட்டு   நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி புல்தரையில் நடக்க துவங்க ,

” இங்க தான் ,இங்க ஓரமா வச்சிருங்க ” என வண்டியில் இருந்து   வந்து இறங்கிய  பொருட்களை  வீட்டின் மேற்பார்வையாளர்    எங்கே வைப்பது என பணியாட்களுக்கு  அறிவுறுத்திக்கொண்டிருக்க , வீட்டிற்கு போடும் இலகுவான ஆடைக்கு மாறியிருந்த தீரன்  கையில் ஆவி பறக்க இருக்கும் காஃபியை சுவைத்தபடி  அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான் . தன்னவளையும்  தான் !

தொலைவில் நடை பயின்று  கொண்டிருந்த மேகா , தீரனை கண்டுவிட , அவளுக்குள் ஒருவித படபடப்பு உடனே அவன் பார்வை படாத இடத்திற்கு  சென்று மறைந்து விட வேண்டும் போல் இருக்க , உள்ளே செல்லலாம் என்றாலும் அவனை  கடந்து தான் செல்ல வேண்டும்  என்ற நிலையில் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தவள் , என்ன ஆனாலும் அவனை பார்க்க கூடாது என்னும் முடிவுடன்  ,உன் வரவு ஒன்றும் என்னை பாதிக்கவில்லை என்பது போல  செடி கொடிகளை பார்வையிட்டுக்கொண்டிருக்க , அங்கே வந்த தோட்டக்காரர் மேகவிடம் ஏதோ சொல்லி முன்னே அழைத்து சென்றார் .

அங்கே புதிதாக பல வகையான வண்ணத்தில் சிறிய சிறிய தொட்டியில் இருந்த  மலர் செடிகளை காட்டி எதை எங்கே நடுவது  என அவர் கேட்க ,

” அது உங்க இஷ்டம் அண்ணா ” என்றாள் .

“ஆனா மா சார் உங்க கிட்ட கேட்டு தான் பண்ண சொன்னாங்க ” என்று அவர் கூற , இப்பொழுது ஒவ்வொரு செடிகளை பார்வையிட்டவள் கண்களில் மகிழ்ச்சியை  தாண்டி அவ்வளவு வியப்பு .

அங்கே இருந்த அனைத்தும் அவளுக்கு பிடித்த வண்ணங்கள் கொண்ட வாசனை மலர்கள் . அதுவும் அவளுக்கு பிடித்த விதத்தில் , அதாவது அதன் செடியுடன் தொட்டியில் அழகாக இருந்தது  .

மேகாவை பொறுத்தவரை   மலர்களை அலங்காரங்களுக்கு பயன்படுத்துவது  இல்லை அதை   தலையில் சூடி கொல்லவதெல்லாம்  விட  அதை அதன் இடத்தில் வைத்து  பார்த்து ரசிப்பது  தான்  மிகவும் பிடிக்கும் .  ஆனால் இந்த  விடயம்  அவளை தவிர வேறு யாருக்கும் தெரியாத பொழுது தீரன்  எப்படி அறிந்தான் ? மிகவும்  வியந்தாள் !  ‘ என் முகம் காட்டும் உணர்ச்சிகளை வைத்து அகம் படிப்பது சரி   . என் அகம்  மட்டும்  அறிந்த ரசகசியத்தை  எப்படி அவனால் கண்டறிய முடிந்தது ‘ இந்த கேள்விக்கு விடை தெரியாமல் மிகவும் தவித்தவ  மேகாவுக்கு   தீரனின் வித விதமான பரிணாமங்களை  கண்டு மயக்கம் வரவில்லை அவ்வளவு தான்! பின்பு  மலர்களை சிறு புன்னகையுடன் வருடினாள் .

ஆனால் மறு நொடியே  இவ்வளவு மகிழ்ச்சி வேண்டாம்  நேற்று அவன் செய்தது மறந்து விட்டதா மேகா? இன்று மலரை உன் கையில் கொடுப்பான்  , நாளை  முள்ளை உன் விழியில் வை என்பான் , நிச்சயம் இதிலும் ஏதாவது இருக்கும் .கவனம்! என மனம் எச்சரிக்கை விடுக்க , சட்டென்று தன் கையை  எடுத்து கொண்டவள்  முகத்தில் கடுமை !

” மா என்ன பண்ணனும் ” என  தோட்டக்காரரின் குரலில் சுயம் பெற்றவள் . அவரிடம் என்ன செய்ய வேண்டுமோ அதை  பற்றி கூறியவள் ,தானும் வெள்ளை நிற ரோஜா செடி ஒன்றை  எடுத்து , சில உபகாரணங்கள் கொண்டு   நிலத்தில் நட்டு வைக்க அரம்பித்தாள் .

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த தீரன் நிச்சயம் அறிவான், மனைவி இந்நேரம் எங்காவது ஓடி மறைந்திருப்பாள் என்று ? ஆனாலும் தன் அறையில் அவளது சுவடுகள் இருக்கிறதா  என தேடியவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி பால்கனிக்கு சென்று   கீழே தோட்டத்தில் நடை பயிலும் மனைவியை பார்த்தான் . பார்த்து கொண்டே இருந்தான் .

அப்பொழுது தான் அவனுக்கு அழைப்பு வர , உடைமாற்றி கொண்டு தனது காஃபி கப்புடன் கீழே வந்தவன் , மனைவிக்காக  அவன் வாங்கிய பூ செடிகளை வீட்டின் மேற்பார்வையாளரிடம்   சொல்லி தோட்டத்தில்  வைக்க சொல்ல , அவை ஒவ்வொன்றும்  வண்டியில் இருந்து தோட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டுக்கொண்டிருந்தது .

அவற்றை பார்வையிடும்  சாக்கில் அங்கே நின்றிருந்த தீரன் , மனைவியின்  முகபாவத்தை பார்க்கும்  ஆவலில் இடை இடையே  மனைவியை நோட்டமிட , அவள் மறந்தும் கூட அவனை பார்க்காமல் செடி கொடியை பார்த்து கொண்டிருக்க ,இவனுக்கு அதில் பெரிய ஏமாற்றம் தான் .

இருந்தாலும்  அவ்வளவு எளிதாக அவளை விட்டுவிடுவானா என்ன ? தோட்டக்காரனை  அழைத்தவன் மேகாவிடம் கேட்டு அவள் விருப்பப்படி அனைத்தையும்  நேர்த்தியாக  ஒழுங்குபடுத்த  சொல்லி அனுப்ப ,

அவளும் வந்தாள்  . இருந்த பூக்களையெல்லாம் பார்த்தாள் .  சந்தோஷத்தை தாண்டி  முகத்தில் அப்படி ஒரு வியப்பு . அதே வியப்புடன் சிறிது நேரம் சிந்தித்தவள், பின்பு புன்னகையுடன்  செடியை வருடினாள் . இவனும் புன்னகையுடன்  அதை ரசித்தான் . ஆனால் அதெல்லாம் சில நொடிகளுக்கு  தான் . அவளது முகத்தில் மீண்டும் புன்னகை மறைந்து ஒருவித இறுக்கம்  குடியேற , தோட்டக்காரரிடம்  ஏதோ ஏதோ பேசியவள் , பின்பு தானே ஒரு செடியை எடுத்து நிலத்தில்  நட்டுவைத்து கொண்டிருந்தாள் .

சில நொடிகள் தள்ளி நின்று அவள் செய்வதை பார்த்து கொண்டிருந்தவன் , வேகமாக  அவள் அருகே சென்று ,

” பிளான்ட் பண்ணிட்டு இருக்கியா? ” என   சிறிய  மண்வெட்டி ஒன்றை  எடுத்து அவளுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அவள் தோள்களை உரசியபடி அவள் அருகில் முட்டி போட்டு அமர்ந்து கொண்டான் .

இதை சற்றும் எதிர் பாராத மேகாவின் மனதிற்குள் அவனது நெருக்கம் ஒருவித நடுக்கத்தையும்  கோபத்தையும்  கொடுக்க  , அவள் விலக பார்க்கவும்  ,

” இந்த செடி ரொம்ப அழகா இருக்குல்ல,  வைட் ரோஸ் உன்னோட மனசு மாதிரி ” என மொக்கையாக  காதல் வரி என்ற பெயரில் சம்பந்தம் இல்லாமல் ஒன்றை கூறி  செடியை பார்க்கும் சாக்கில் அவளது கரத்தை பிடித்து  அவள் எழுந்து கொள்ளாமல் அப்படியே அமரவைத்தான் .

செய்வதெல்லாம் செய்துவிட்டு  எதுவுமே  நடக்காதது போல இது என்ன பேச்சு?மேகாவுக்கு  முணுக்கென்று  கோபம் வந்து  நுனி மூக்கு சிவந்துவிட , தன்  கரத்தை அவனது பிடியில் இருந்து விடுவித்து கொள்ளும்  முயற்சியில்  மேகாவின்  கரம் தவறுதலாய் முள்ளில்  பட்டுவிட ,’ ஸ்ஸ் ‘ என  அவள் முனங்கவும்  பதறியவன் ,உடனே அவளது கரத்தை பிடித்து,

 ” ப்ச் பார்த்து பண்ண கூடாதா பாரு முள்ளு குத்திருச்சு ” என தன்னவளின்  கரத்தை மென்மையாக பற்றி  சிறிய முள்ளை மெதுவாக அவளுக்கு நோகாமல் எடுத்துவிட்டவன் ,

”  வலிக்குதாடா ” என கேட்டபடி அவள் முகம் பார்த்த தருணம்  . மூக்கு நுனி சிவக்க அவள் பார்த்த பார்வை அவன் மனதை போட்டு அழுத்தியது .

” வலிக்குது ” அவன் கண்களை பார்த்துக்கொண்டே நிதானமாக கூறினாள் . அவள் கண்களில்  திரண்ட கண்ணீர் அவளது இமைகளை உடைக்க காத்திருக்க .  அவள் சொன்ன வலியின் அர்த்தம் உணர்ந்தவன் நேற்று நடந்த  சம்பவத்தை  எண்ணியபடி  அசைவின்றி அமர்ந்திருக்க .மேகா விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள் .

தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!