MIRUTHNAIN KAVITHAI IVAL 32(b)

cover page-eb588593

மிருதனின் கவிதை இவள் 32(b)

இதோ தீரனின் முகம் பார்த்து இன்றோடு  நான்கு நாள் ஆகிவிட்டது  . இனி அவனை நினைக்கவே கூடாது என்று முடிவெடுத்த மறுக்கணத்தில் இருந்து அவனை ஏதாவது ஒரு வகையில் நினைத்து கொண்டு தான் இருக்கிறாள் .

நேற்று அவள் ரிதுராஜை பார்க்க மறுத்த பிறகு இன்று அவனிடம் இருந்து எந்த தொந்தரவும் இல்லை என்பதே மேகாவுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்திருக்க ,

மருத்துவமனையில் இன்று தன் பணி முடிய கொஞ்சம் நேரம் ஆக , வழக்கத்தை விட நேரம் கடந்து தன் இல்லம் திரும்பியவளுக்கு தொடர் வேலையால் ஏற்பட்ட  உடல் அலுப்பு  படுக்க சொல்ல,   கண்களை மூடி அப்படியே படுக்கையில் சரிந்தாள் .

என்ன  பயன் உறக்கமும் இல்லை ,கனவும் இல்லை .  மீசையை முறுக்கிக்கொண்டு முறைத்தபடி தீரன் தான் தோன்றினான் .மனம்  மீண்டும் அவனை எண்ணி நிலை இல்லாமல்  துடித்தது . மணியை பார்த்தாள் நள்ளிரவை காட்டியது ,

‘ வீட்டுக்கு  வந்திருப்பாரா? ‘ எழுந்து வந்து கீழே எட்டிப்பார்த்தாள் , அலுவலக அறை இருட்டி கிடந்தது . அவன் அங்கே இருந்தால் விடியும் வரை சிறு வெளிச்சம் அந்த அறையில் எப்பொழுதும் இருக்கும் . அது தான் அவன் வந்ததுக்கான  அறிகுறி .

‘ இன்னுமா வரல , ஆபிஸ்ல இருக்காரா ?வெளியில இருக்காரா  ? ட்ரைவர் கூட போனாரா  இல்லை தனியா போயிருப்பாரா , எங்க போயிருப்பாரு ?ஒருவேளை அன்னைக்கு மாதிரி ‘ என  எண்ணும் பொழுதே மனம் அன்று அஷோக்,  தீரன் நூலிழையில் ஆக்சிடெண்டில் இருந்து உயிர் தப்பியதை பற்றி கூறியது நினைத்து பார்க்க இதயம்  தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது .

‘ இல்லை இல்லை அப்படியெல்லாம் இருக்காது ‘ பலமுறை சொல்லிக்கொண்டாள் .

சற்று நேரத்திற்கு முன்பு வரை அவனை பற்றி எண்ண கூடாது என்று சொன்னவளின் வார்த்தை தண்ணீரில்   கரையும்  உப்பை போல இருந்த சுவடு இல்லாமல் மறைந்துவிட , நொடிக்கு இரெண்டு தடவை அவனை பற்றியே  சிந்தித்தவள் அவனது அலைபேசிக்கு  முதன்முறையாக  அவளே  அழைப்பு விடுத்தாள், விடுத்தாள் ,விடுத்தாள் என விடுத்துக்கொண்டே இருந்தாள் , ரிங் போய் கட் ஆகி கொண்டே இருந்தது , இப்பொழுது மேகாவின்  முகத்தில் வியர்வை அரும்பி அவளது பதற்றத்தை சொல்லியது .

“நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன் விவாகரத்து கொடுங்க என்றேன் . தீயென்றால் சுட்டுவிடுமா என்ன?இல்லை நான் கேட்டதும் தான் இவன் கொடுக்க போகிறானா? இல்லை நான் தான் ” என்றவளுக்கு இப்பொழுது குரல் லேசாக கமறியது, பேச முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் .

” இவன் என்னவெல்லாம் என்னை பேசிருக்கிறான் , இவன் பேசலாம் ஆனால்  நான் பேச கூடாது ” மீண்டும் அழைப்பை விடுத்துக்கொண்டே கூறியவளுக்கு அவன் அழைப்பை எடுக்கவில்லை என்றதும் கண்கள் குளமானது .

பேசி சிரித்து மகிழவில்லை என்றாலும்  இங்கே வந்த இத்தனை நாட்களில் விருமாண்டி போல முறைத்தபடி தன்னோடே இருந்த  கணவனின் இறுகிய முகத்தை  மனம்  இன்று மிகவும் தேடியது.

அவள் தான் என்ன செய்வாள்? அவனால் அவள் உள்ளத்தில் உருவான பாரத்தை  அவனிடம் அன்றி வேறு யாரிடம்  அவளால் இறக்கிவைக்க  முடியும் ? அவளும் பாவம் தானே ?அவன் விதைத்த வார்த்தைகள் ஒன்றும் சாதாரண  ஒன்று அல்லவே, அப்படியே  கடந்து செல்ல . கொட்டி தீர்க்காட்டால் , ஒருநாள் அதுவே விருட்சமாக வளர்ந்து அவர்கள் உறவுக்கு இடையே பிளவை  ஏற்படுத்திவிட  கூடுமே  . இரெண்டு சொட்டு கண்ணீர் அவளது கன்னத்தை நனைத்தது .

இவன்குணம் தெரிந்தது  தானே,  கொஞ்சம் பார்த்து பேசியிருக்கலாமோ ?என்ன வாழ்க்கை இது?  தன் வயதை ஒற்ற தன்னுடன் வேலை பார்க்கும், எத்தனை தோழியர் நிம்மதியாக இருக்கின்றனர் . ஏன்  என் தந்தையும் தாயும் , அப்பா  எவ்வளவு கோபக்காரர் ?எவ்வளவு கண்டிப்பானவர் ?ஆனால் ஒருநாள் கூட அம்மாவிடம்  கை நீட்டி கூட பேசியதில்லையே ? நமக்கு மட்டும் ஏன் ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் வரும் போகும் , வாழ்க்கையில் அதெல்லாம் சகஜம்  தான். ஆனால் இங்கே  நித்தமும்  போர்க்களத்தின் பீதியோடு அல்லவா நொடிகள் நகர் கின்றது .

சில நேரம் பேபி பேபி என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறான்  .அடுத்த நொடியே காலில் போட்டு மிதிக்கிறான்  .  இவனை எந்த வகையில் சேர்த்துக்கொள்வது ? என்றவளிடம்   இவனை வகைப்படுத்தவே  முடியாது இவன் தனி பிறவி ” என்றது மனம் . ஆக புலி யாருக்காகவும் தன் கோட்டை அழித்துக்கொள்ளாது. இவன் மாறவே மாட்டான் மாற்றவும்  முடியாது ,   இவனை என்ன தான் செய்வது ?எப்படி தான் இவனை சமாளிப்பது ? எத்தனை முறை  அழைக்கிறேன்  எடுத்து பேசினால் தான் என்ன ?மேகாவுக்கு பைத்தியம் பிடிக்கவில்லை தலையை பிடித்துகொண்டாள் .

வந்து   திட்ட கூட செய்யட்டும் . இப்படி ஒரே வீட்டில் இருந்து கொண்டு முகத்தை கூட பார்க்காமல் ,இன்று எங்கோ சென்றுவிட்டு அலைபேசியையும் எடுக்காமல் ,எங்கே இருக்கிறேன், என்றும் சொல்லாமல்  ,இந்த கொடுமையை தாங்க முடியவில்லையே .  இத்தனை நாட்களில்  முகத்தை பார்க்காவிட்டாலும்  நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிடுவானே இன்று என்னாயிற்று ?

யாரிடம் கேட்பது ? அஷோக் அண்ணாவிடம் கேட்போம்  வேண்டாம் வேண்டாம் ஒவ்வொரு முறையும்  தங்கள் இருவருக்கும்  இடையே நடக்கும்  பிரச்சனைகளை , அவரிடம் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுவதில் ஏனோ மேகாவுக்கு பிடித்தமில்லை .

இப்பொழுது என்ன தான் செய்வது . கண்களில் இருந்து கண்ணீராக வந்தது .’ ஏதாவது ஆகிருக்குமா என்ன ?இவன் குணத்திற்கு தான் அனைவருடனும்  முட்டிக்குமே.  முதல் நாள் சந்திப்பை எண்ணி பார்த்தாள் . குண்டடி பட்டு ரெத்தவெள்ளத்தில் அவன் கிடந்த கோலம் இப்பொழுதும் அவளை நடுங்க செய்தது . நொடிக்கு நொடி பதற்றம்  அதிகமானது . பால்கனிக்கு சென்று வாசலை  பார்த்தபடி கால்கடுக்க நின்றிருந்தாள் கண்களில் கண்ணீர் வற்றாமல் வந்து கொண்டிருந்தது .

சிரித்து பேசி மகிழ்ந்தது இல்லை , கொஞ்சி கெஞ்சி கொண்டாடியதில்லை , கூடலின் முன்பு  மட்டும் பேபி பேபி என்று ஏதாவது கேட்டு கொஞ்சம் பேசுவான் . இவள் பதில் சொல்வதற்கு முன்பு அவனே சொல்லிக்கொண்டு தன் தேடலை தொடங்கிவிடுவான் . அவன் முகம் பார்த்து அவன் காதலை இவள் உணர்ந்ததில்லை ,இவனும் உணர்த்தியதில்லை . கூடலின் முடிவில் இவள் உறங்கிவிடுவாள் .  ஆக அவர்களின் பேச்சுவார்த்தையும்  ஒருநாளைக்கு இரெண்டு வரி தாண்டினால் அபூர்வம் .

 கண்கள் பார்த்து எதுவும் பேசியதில்லை . எப்பொழுதாவது இருவரின்  கண்களும் பின்னிக்கொள்ளும் சில நொடிகள் தான் ,அதற்கே இவளுக்குள் ஏதோ செய்யும். சாக்கு சொல்லி ஓடி விடுவாள் .

என்னதான்  அவன் அவளை  எவ்வளவு முறைத்தாலும்,  அவளிடம் எவ்வளவு கத்தினாலும்  ,அவ்வளவு  சண்டை போட்டாலும் காலை விழிப்பு  அவனது வாசத்தை நுகர்ந்தபடி அவனது கைஅணைப்பில்  தான் . ஒரு நொடி விலகினாலும்  ஒரு அதட்டல் போட்டு இறுக்கமாக அணைத்துவைத்துக்கொள்வான் . ஆக தூங்கும் பொழுதும் அவளை பதற்றத்தில் தான் வைத்திருப்பான் .

ஆனால் அது கொடுத்த பாதுகாப்பு . அவன் இல்லாத இந்த தனிமை  அவளுக்கு கொடுக்கவில்லை போல . இப்பொழுது  அவன் இங்கே இல்லை , கத்த ஆளிலில்லை ,இவளிடம் சண்டையிட ஆளில்லை ,நியாயப்படி இவள் மகிழ்ந்திருக்க வேண்டுமே,  ஆனால் பெண்ணவளின் மனம் அவனை தேடி அலைந்தது   . எப்பொழுதும் இருக்கும் இந்த அறையே  இன்று அவளை விழுங்குவது போல அச்சம் காட்டியது .  மீண்டும் அவனது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள் இந்த முறை அழைப்பு ஏற்கப்பட ,”தீரன் ” என மேகா ஆரம்பிக்கவும் ,

” மேகா நான் அண்ணன் பேசுறேன் டா ” என்றான் அஷோக்.

“அஷோக் அண்ணா அவரு இன்னும் வீட்டுக்கு வரல ” குரல் பதற்றத்தை தாங்கி இருந்தது .

” கொஞ்ச வொர்க் மா , நைட் வர லேட் ஆகும் ,நீ வொரி பண்ணிக்காத ” என்ற அஷோக் ஒரு குட் நைட்டுடன் அழைப்பை வைத்துவிட , மேகாவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது .

” ஏன் இதை இவன் சொல்ல மாட்டானா ?இதை போல இவன் அழைத்து நான் வேற யாரையாவது பேச சொல்லிருந்தால் எப்படி இருக்கும் ?” அழுதுகொண்டே புலம்பினாள் . ஏதேதோ சொல்லி அழுதாள் . துக்கம் நெஞ்சை அடைப்பது போல இருந்தது . நியாயப்படி  கோபப்படவேண்டியனை  எண்ணி இப்படி அழுது  கரைகிறாள். ஏன் என்ற காரணமும்  அவளுக்கு  புரியவில்லை .

முழுதாக  ஒரு மாதம் கூட  முடியவில்லை ,சொல்லி  மகிழும் படியாக  எந்த மகிழ்ச்சியான தருணமும்   அதிகப்படியாக  ஒரு நாளுக்கு  மேல் தங்கியது இல்லை . அத்தனை பாடு படுத்திருக்கிறான் .ஆனாலும் ஏன் இத்தனை தவிப்பு ?போகட்டும் என்று விட்டும் தொலைய முடியவில்லையே ஏன் ?தலையை  பிடித்து கொண்டாள் . அவன் மீது அவ்வளவு அன்பை வைத்து விட்டோமா  என்ன ? நம்ப முடியவில்லை  ! மறுக்கவும்  முடியவில்லை ! ஆனால் நெஞ்சை ஏதோ ஒன்று  வேகமாக அழுத்தியது ஒருமாதிரியாக  வலித்தது . அழுது கொண்டே இருந்தாள் .

அவனுடன் கழித்த ஒவ்வொரு பொழுதுகளையும் எண்ணி பார்த்தாள் ! கண்களின்  விளிம்பில் கண்ணீருடன் மெல்லிய புன்னகை இதழோரம் எட்டிப்பார்த்தது   . ஒருவித பரவச உணர்வு ! எங்கோ பறப்பது போல இப்படி ஏதேதோ தோன்றியது .முறைத்துக்கொண்டு  விறைப்பாக திரியும்  அவன் முகத்தை ஒரு நொடி பார்க்க வேண்டும் போல தோன்றியது .  அழுகையுடன் சிரித்துக்கொண்டாள் .

இத்தனை நேரம் காரணம் தேடிய மனதை   கண்டுகொள்ளாமல்  ஓரம் கட்டியவள் . இப்பொழுது காரணம் எல்லாம் தேட வில்லை  . மனதில் தோன்றிய உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொண்டாள் . அதை அதன் கற்பனைக்கே  விட்டுவிட்டாள் .

ஒவ்வொன்றாக எண்ணியபடி கட்டிலில் தலைசாய்த்து அமர்ந்திருந்த  மேகாவின் இடது கரத்தின் விரல்கள் தானாக அவளது வலது மணிக்கட்டின் பக்கம் வருடியது . மெல்லிய கீற்றாய் சிறு வருத்தம்  நெஞ்சை தழுவியது ஒரு பெருமூச்சை  வெளியிட்டவளின் கண்கள் இப்பொழுது கலங்க வில்லை .  இதுவரை அவனை நினைத்தாலே வரும் பயம் இப்பொழுது வரவில்லை .இதழ்கள் லேசாக வளைய அப்படியே  கண்மூடினாள் .

!!!!!

 இனி அவள் முகத்தில் கூட விழிக்க கூடாது என்ற முடிவை எடுத்து இன்றோடு  நான்கு நாட்கள் ஆனது . காலை பொழுதில் வேலை வேலை என அதிலே மூழ்கிவிடுபவன், இரவு வேளையில்  வீட்டில் இருக்கும் அலுவலக அறைக்குள்  அடைந்து கிடப்பான் .வீட்டிலே இருந்து கொண்டு மேகாவை பார்க்காமல் இருப்பது நரக வேதனையாக இருக்கும் .  மனம் மனைவியின்  அருகாமைக்காக  ஏங்கும் பொழுது  அவ்வளவு அழுத்தமாக இருக்கும் .

ஒரு முறையாவது பார்க்க வேண்டும்  என்று தோன்றும் பொழுது கோபத்தை ஒதுக்கிவிட்டு அறையின் வாசல் வரை வந்துவிடுவான். ஆனாலும்  அவள் பேசியதை எண்ணிப்பார்ப்பவன்  எங்கோ சென்ற  கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு,  மேகாவை பார்க்காமலே  அலுவலக அறைக்குள் சென்று அடைந்து கொள்வான் . சில நேரம் தன்னவளிடம்  இருந்து தவராகவாவது தனக்கு ஒரு அழைப்பு வரதா  , தன் அறையின் வாசல் பக்கம்  அவள் தலை தெரியாதா, தன்னை    வந்து பார்க்க  மாட்டாளா என்று மிகவும் ஏங்கினான் .

‘ அவ்வளவு தான் ! அவளை பார்க்க வேண்டும் என்று தனக்கு இருக்கும் ஏக்கம் , அவளுக்கு ஒரு தடவை கூட வரவில்லையா ?சொன்னது போலவே என்னை வேண்டாம் என்றே முடிவு செய்துவிட்டாளா ?’ மனதிற்குள் புழுங்கினான் . இது என்ன வாழ்க்கை ஏனோதானோவென்று  தீரனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை .

அவளை காணமால் எனக்குள் தோன்றும் வெறுமையும், நான் படும் அவஸ்தையும் அவளுக்குள் ஏன் தோன்றவில்லை ?அவளால் என்னை ஏன் நேசிக்க முடியவில்லை ? அவளுக்கு இறுதி வரை என்னை பிடிக்கவே பிடிக்காதா ? ‘ கடவுளே  ‘ உள்ளுக்குள் மருகினான் .

‘ ரிதுராஜ்  இவன் என்னை நிம்மதியாகவே வாழவிடமாட்டானா ‘ வாயில் வந்தபடி அவனை திட்டித்தீர்த்தவன்  .

‘டைவர்ஸா கேட்குற இருக்கு டி . உனக்கு உன்னை சும்மா விட மாட்டேன் டி ‘ என சொல்ல மட்டுமே முடிந்தது .தலையை அழுத்தமாக கோதி கண்களை மூடி நின்றவனின் அலைபேசி சிணுங்கவும்  அதை எடுத்து கூட பார்க்காதவன் , தொடர்ந்து அழைப்பு வரவும்  எடுத்து பார்த்தான் .

சிரித்தமுகமாக  மேகா தெரிந்தாள் , தலைகால் புரியவில்லை . கனவு போல இருந்தது . 

‘ இத்தனை நாள் கழிச்சு இப்போ தான் மேடம்க்கு  என் நியாபகம்  வருதோ ?’ மகிழ்ச்சியை தள்ளிவிட்டு   கோபத்தை தத்தெடுத்து கொண்டான் .

‘ டேய் இப்போ தான அவ பேச மாட்டாளான்னு ஏங்குன, அதுக்குள்ள என்னடா உனக்கு ‘ என கேட்ட மனசாட்சியை  முறைத்து ஓட விட்டவன் .

‘ டைவர்ஸா  கேட்குற, வாய் கூடிப்போச்சு ,பயம் விட்டு போச்சு, இனிமே பேச யோசிக்கணும் ‘ மனதை கல்லாக்கிக்கொண்டு விடாமல் அடிக்கும் அலைபேசியை  பார்த்துக்கொண்டே  நின்றான் . அப்பொழுது ” இன்னும் வீட்டுக்கு போகலையா ” என கேட்டபடி அங்கே வந்த அஷோக் தீரனை முறைத்து ,
” எடுத்து பேசு டா ” என்றான் .

பதிலுக்கு அவனை முறைத்தவன் , ” வேலையா இருக்கோம்ன்னு சொல்லு” என்றான் அழுத்தமாக ,

” தீரா “

” சொல்லுடா “

” ப்ச் ” என சலித்தபடி நெற்றியை நீவிய அஷோக் மேகாவிடம் பேச ,

‘ தீரன்  …  அஷோக் அண்ணா அவரு இன்னும் வீட்டுக்கு வரல ‘ ஸ்பீக்கர் வழியாக கேட்ட மேகாவின் தழுதழுத்த குரல் தீரனின் மனதை பிசைந்தது .  எத்தனை நாட்கள் கழித்து கேட்கிறான் இந்த குரலை மெல்லிசை போல அவனை தாலாட்டியது . கண்களை மூடி இதயத்தை அழுத்தி பிடித்து கொண்டான் .

” நீ மேகாகிட்ட இப்படியெல்லாம் நடத்துகிறது எனக்கு  சுத்தமா புடிக்கலை தீரன் ” தொண்டைக்குள் சிக்கிய முள் போல பல நாள் அழுதிக்கொண்டிருந்ததை  இன்று என்ன ஆனாலும் பரவியில்லை என கூறிவிட்டான் அஷோக் .

” இப்படியெல்லம்ன்னா எதை சொல்ற “

” எல்லாத்தையும் தான் ” அஷோக் அழுத்தி சொன்ன விதமே எதை குறிப்பிடுகிறான்  என்பது புரிந்து போக ,

” என்ன உன்கிட்ட காம்ப்லேயின்ட் பண்ணினாளா  ” தீரனின் முகம் சட்டென்று இறுகியதும்,

” அப்படி செஞ்சிருந்தா  ரொம்ப நல்லா இருந்திருக்குமே , அவ தான் வாய திறக்க மாட்டிக்கிறாளே ” என்ற அஷோக் அன்று நடந்தவற்றை கூற ,

” அவ உங்க கிட்ட அப்படி சொன்னா ! நம்புற மாதிரி ஏதாவது சொல்லுடா ” என்ற தீரனின் இதழ் ஒரு நொடி  லேசாக வளைந்தது .

” நிஜமாத்தான் டா  சொல்றேன் , உன்னை விட்டே கொடுக்க மாட்டிக்கிறா , இப்போ கூட நீ செஞ்சதுக்கு உனக்கு ஓங்கி ஒன்னு கொடுக்கணும்ன்னு தான் ஆத்திரம் வருது ,அப்புறம் உன் வைஃப் என் ஹஸ்பண்டை ஏன் அடிசீங்கன்னு சண்டைக்கு வந்துட்டா அதான் அமைதியா இருக்கேன்  ” அஷோக் கேலி குரலில் கூறினாலும்  அவனது குரலில் இருந்த வருத்தம்  தீரனுக்கு புரிய, குற்ற உணர்வில்  அமைதியாக இருந்தான் .

”    “

” உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல ?ஆனா நீ  கைநீட்டினது ரொம்ப தப்பு தீரா , அன்னைக்கு  அவளோட முகத்தை பார்க்க எப்படி இருந்துச்சு தெரியுமா ? ஒருவேளை அவங்க வீட்ல உள்ளவங்க பார்த்தா எவ்வளவு கஷ்டப்படுவாங்க , ஒரு செயலை செய்யுறதுக்கு முன்னாடி யோசிச்சு பண்ணு தீரா , பிஸ்னஸ்ல ஓகே ,ஆனா குடும்ப வாழ்க்கையில  கோபம்  வாழ்க்கையே  அழிச்சிரும் . நமக்கு பெரியவங்கன்னு  யாரவது இருந்தா சொல்லி கொடுப்பாங்க  இப்போ வீட்ல நீ தான் அந்த ஸ்தானத்துல இருக்க , நீயே இப்படி  இருந்தா ? எங்களை கொஞ்சம் நினைச்சு பாரு . உனக்கே புரியும் ” என்ற அஷோக் ,

” ஒழுங்கா வீட்டுக்கு போ  , எப்பவும் போல இரு , மேகா உன்னை மிஸ்  பண்ணிட்டு இருக்கா டா ” அதுவரை தலைகவிழ்ந்த  நிலையில் இருந்த தீரன் இந்த கடைசி வரியை கேட்டு நம்பாத பார்வை ஒன்றை பார்க்க , அஷோக்கோ,

”  மிஸ் பண்ணாம தான் இவ்வளவு தடவை கூப்பிட்டாளா ,இப்போ எல்லாம் சரியா சாப்பிடுறது கூட இல்லை  , அவ உன்னை ரொம்ப தேடுறா  , என்கிட்டையும் கேட்க முடியாம ரொம்பவே தவிக்கிறா , நல்ல  பொண்ணு ,நல்ல வாழ்க்கை ,கெடுத்துக்காத தீரன் இதுக்கு மேல உன் வாழ்க்கைக்குள்ள  நான் ரொம்ப நுழைய முடியாது. சோ அட்லீஸ்ட் ஒரு போனாவது பண்ணி பேசு  ” என்ற அஷோக் அங்கிருந்து சென்றுவிட,

“மிஸ் பண்றளா !அவளா ? ஒருவேளை இருக்குமோ ம்ம்ம்  ” மனதிற்குள் ஜில்லென்று இருக்க , மனைவியின் பதிவு செய்யப்பட்ட குரலை கேட்டான் ,மனதிற்குள் இதமாக இருக்க , உடனே வீட்டுக்கு கிளம்பிவிட்டான் .

கண்களை மூடிய நிலையில் படுத்திருந்தாள் .

‘ ஏன் வரு அப்படி சொன்ன ‘ தலையை மெல்ல வருடியபடி பேசினான் .

‘  டைவர்ஸ் வேணும்ன்னா என்னடி அர்த்தம் , நான் உனக்கு வேண்டாமா ? என்னை விட்டு போய்டுவியா  ?” குரலில் அத்தனை  உருக்கம்  இருந்தது .

‘ நீ வேணும் மேகா, எப்பொழுதும் இந்த தீரனுக்கு நீ வேணும் டி ” மென்மையாக  கன்னத்தில் இதழ் பதித்தவன் .

‘ ஐ லவ் யு வரு ‘ என காதில் காதல் பேசிவிட்டு தன்னவளை தன் கைவளைவுகளுக்குள்  அணைத்து வைத்துக்கொண்டு உறங்கியவன் . அதிகாலை பொழுதில் சீக்கிரமே எழுந்து கொண்டு தன் கைவளைவில் தூங்கும் மனைவியின்  நெற்றியில் மென்முத்தம் பதித்துவிட்டு , நேரே அந்த இருட்டு அறையின் வாசலில் தான் வந்து நின்றான் .

வாசலிலே நிற்கும் பொழுதே கடந்த கால காட்சிகள் பிம்பமாய் அவன் முன்பு தோன்ற மிகவும் கலங்கினான் .
பின்பு  அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே  சென்ற தீரன் தன் தந்தையின்  படத்தை பார்த்தபடி அப்படியே  நிற்க , அவனது தோள் மீது கைபோட்ட அஷோக்,

” போகலாம் ” என அவனை அழைத்து கொண்டு வெளியேறினான் .

மார்ச் பதினாரு  இந்த தேதியில் எப்பொழுதும் தீரனின் மனத்தில் ஒருவித வெறுமை இருக்கும் , அது சில நேரம் அந்த மாதம் முழுவதும்  தொடரும் . ஆனால் இன்று மனைவியின்  அருகாமை கொடுத்த ஸ்பரிசம் ,அவனது மனதில் இருந்த இறுக்கத்தை சற்று தளர்த்திருக்க கண்களை மூடிய நிலையில்  அந்த பயணத்தை தொடர்ந்தான் .

” மேகாகிட்ட சொல்லிருக்கலாமே டா ” என்ற அஷோக்கிடம்.

” சொன்னா எல்லாத்தையும்  சொல்லணும்  மித்ரன், அவ கிட்ட பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை , உண்மைய சொல்ற தைரியம் இல்லை    ” என்றபொழுதே  தீரனின் குரல் கறகறக்க , அதற்கு மேல் அஷோக்கும் பேசவில்லை தீரனும் பேசவில்லை மௌனமாகவே அவர்களின் பயணம் கடந்தது .

!!!!!!!!!!

வாரணாசி  என்று அழைக்கப்படும்  காசி , கங்கை கரையோரத்தில் ,

“தோப்பனார் பேரு சொல்லுங்கோ ” என தலை நரைத்த   பண்டிதர் வினவ ,

கண்களை மூடி திறந்த கிரண், ” ராகவேந்திரன் ” என தன்  கண்களில் ஜெனித்த ஒற்றை கண்ணீருடன் கூறும்பொழுதே அவன்  உடலில் தெரிந்த இறுக்கம் அவனது  உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும்   பழிவெறியை  சொல்லியது . சில மந்திரங்களை  உச்சரித்த  பண்டிதர் பூஜை சம்பிரதாயங்களை  முடித்துவிட்டு ,

” இதை நதியிலே கரைச்சிட்டு , மூணு தடவை  ஜல ஸ்நானம் பண்ணிட்டு ஆத்மா சாந்திக்காக  பகவானை வேண்டிக்கோங்க ” என்று பண்டிதர் சொல்ல , அவர் கொடுத்ததை வாங்கி கொண்டு தண்ணீருக்குள் முங்கினான்.

குண்டு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு  நிசப்தமாக  இருந்த ஷம்ஷன் காத்  மயானத்தில் தன் தந்தையின் சமாதி   முன்பு கண்களில் நீர் திரள  உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக நின்றிருந்த  தீரன் .
கோபம் , துக்கம் , துரோகம் , ஏமாற்றம் என இனம்பிரிக்க முடியாத ஒரு கலவையான உணர்வோடு போராடி கொண்டிருந்தான் . தந்தையை  மிகவும்  நேசிக்கிறான்  , ஆனால் அவர் மீது கோபம்  ,அவர் செய்த செயலை ஏனோ அவனால் இன்று வரை ஏற்று கொள்ளமுடியவில்லை . கிட்டத்தட்ட  பதினெட்டு  வருடங்களுக்கு  மேல் ஆகிவிட்டது இன்று வரை அவரது இறப்பை தீரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

எந்த நேரம் வேணுடுமானாலும்  உடைந்துவிடும்  நிலையில் இருந்த தீரன் உணர்வுகளை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான் .

தான்  பார்க்க மரணத்தை தழுவிய தந்தையின் முகம் கண்முன்னால்  வந்து போனது ,அந்த காட்சியை இப்பொழுது நினைத்தாலும் அவன்  உடலில் ஒருவித நடுக்கம் பரவியது .

தீரனுக்கு அப்பொழுது பன்னிரண்டு வயது ,குவாலியறில்  தீ  சிந்தியா  ஸ்கூல் எனப்படும் இந்தியாவிலே முதன்மையான பள்ளிக்கூடத்தில் ,அனைத்திலும்  முதன்மையாக திகழும் , ஏழாம் வகுப்பு படிக்கும்  பண்பான மாணவன் .

தாய் தந்தையருக்கு தீரன் ஒற்றை மகன் . அவனை பொறுத்தவரை  தாய் தந்தையரின் சொல்லே  வேத வாக்கு, அதிலும் தந்தை மீது எப்பொழுதும் தனி அன்பு உண்டு . அவன் மனம்விட்டு  பேசும்  ஒரே ஆள் அவன் தந்தை தான் .
போர்டிங் ஸ்கூலில் படித்தாலும்  எப்பொழுதும் அமைதியாக அனைவருடனும்  சகஜமாக பழகும்  தீரனுக்கு நண்பர்கள் என்று யாரும் குறிப்பிட்டு கிடையாது , ஆக தீரனுக்கு   தோழன்  ,  ஆசிரியர்  , ஹீரோ என எல்லாமே அவன் தந்தை தான் . அவனது தந்தையும்  எவ்வளவுக்கு  எவ்வளவு  கோபக்காரரோ அவ்வளவுக்கு அவ்வளவு  பாசம் மிக்கவர் . 

அவருக்கு இருக்கும் ஒரே ஒரு மைனஸ் என்றால் அது குடிப்பழக்கம் தான் . ஆனால் அதை கூட ‘ அப்பா ட்ரின்க் பண்ணாதீங்க எனக்கு அது பிடிக்கல ‘ என தீரன் சொன்ன ஒரே காரணத்திற்காக தினமும் குடிப்பவர் , வாரத்திற்கு ஒரு நாள் என மாற்றிக்கொண்டார் .

அன்று மார்ச் பதினாலு பள்ளியில் முக்கியமான  பொறுப்பில் இருக்கும் நபர் மாரடைப்பு  காரணமாக  திடீர் என்று இறந்துவிட , அடுத்த இரெண்டு நாட்களும் வார நாட்களாக  வர  ,ஹாஸ்டலில் இருக்க விருப்பம் உள்ள மாணவர்கள் இருக்கலாம்  , வீட்டிற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம்  என்ற   பள்ளி  நிர்வாகம்  மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்க  ,
மார்ச் பதினாறு  அன்று தாய் தந்தையின் திருமண நாள் வருவதால் , இதுவரை அவர்களின் திருமண நாளில் அவன் கலந்து கொண்டதே இல்லை என்பதால், வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தவன்  , இதுவே  தன் வாழ்க்கையில் தான்  சிரிக்க போகும் கடைசி நாள் என்பதை அறியாமல் தன் தாய் தந்தையர்க்கு  இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக தான் வரும் விடயத்தை முன்பே சொல்லாமல் பள்ளி ஏற்பாடு செய்த   வாகனத்தில் மகிழ்ச்சியுடன் தன் வீடு திரும்பினான் .

அதன் பிறகு  அவன் வீட்டில் அவன் அனுபவித்த ஒவ்வொரு நொடியும் நரக வேதனை தான் . எந்த ஒரு சிறுவனும் அனுபவிக்க  முடியாத பல துன்பங்களை எல்லாம் அவன் சந்தித்தான் .

ஆனால் கடைசி வரை தந்தையை அவன் இழக்க நேரிடும் என்று அவன் கனவிலும் எண்ணி பார்க்கவில்லை . ஏன் அவர் இறப்பதுக்கு முன்பு கூட அவன் கையை பிடித்து கொண்டு  நன்றாக தானே பேசினார் .

அந்த காட்சிகள் எல்லாம் அவன் கண்ணில் நிழல் படமாக அவன் முன்பு தோன்ற , ‘என்னை விட்டுட்டு நீங்க போயிருக்க கூடாது பா’ அன்று இதே இடத்தில  எரிந்து கொண்டிருக்கும்  தன் தந்தையின் சவத்திற்கு முன்பு சொன்னது போல ,இன்றும் அவனது உதடுகள் முணுமுணுக்க அவன் கண்களில் இருந்து வந்த ஒற்றை நீர் துளி அவனது தந்தையின்   சமாதியில்  அவரது முகம்   பதித்த கல்வெட்டில் பட்டு தெறித்தது .

தொடரும்