MIRUTHNAIN KAVITHAI IVAL 34

cover page-4d41769e

மிருதனின் கவிதை இவள் 34

” எவ்ளோ ஆச்சு ” என்று கேட்டபடி தன் கையில் இருந்த ஏடிஎம் அட்டையை  நேத்ரா கடைக்காரனிடம் நீட்டவும்  ,

” நான் பே பண்றேன் ” என்று சொல்லியபடி  கிரண் பாஸ்கர் தன்  கார்டை நீட்ட , முதலில் அதிர்ந்தவள் ! பின்பு ,

” வேண்டாம்  எனக்கு நான் பே பண்ணிக்குவேன் ” என்றாள் சற்று கறாராக .

” ப்ச் ஏன் மா நான் பே பண்ண கூடாதா ” என்று உரிமையான குரலில் கூறிய  கிரண் பாஸ்கர் ,நேத்ரா தடுக்க தடுக்க அவளுக்கு  உரிய பில்லுக்கு  தானே பணம் செலுத்த , நேத்ராவுக்கு தான்  கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது . சுற்றும் முற்றும் பார்த்தவள் பொருளை வாங்கி கொண்டு அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அங்கிருந்து நடக்க , அவளை விடாது அவள் பின்னால் சென்ற கிரண் ,

” என்ன நேத்ரா என்கிட்ட எதுவுமே பேச மாட்டியா ?” என்றான்.

” என்ன பேசணும் , நான் உங்க கூட  இப்படி பேசிட்டு இருக்கிறது தெரிஞ்சா அவ்வளவு தான். பில் செட்டில் பண்ணிட்டா மட்டும் எல்லாம் சரியாகிறது  ” என்றவள் ,  அவன் கையில் பணத்தை திணித்துவிட்டு நடக்க , எரிச்சலுடன் அவள் பின்னால் சென்றவன் ,

” நான் நீங்க எல்லாரும் வேணும்ன்னு நினைக்கிறேன் ” எரிச்சலை மறைத்து கொண்டு கவலையாக  இருப்பது போல தத்ரூபமாக  நடித்தான் .

” அது நடக்காது ” தன்மையோடு கூறினாள் .

” காதலிச்சது அவ்வளவு பெரிய குற்றமா “

” கம்பெனில  நிறைய மோசடி பண்ணிருக்கீங்கன்னு அப்பா சொன்னாங்க “

” அது என் மேல உள்ள பொறாமையில்  தீரன் என் மேல போட்ட போலி புகார் “

” அதெல்லாம் எனக்கு தெரியாது ” என்று சொல்லிவிட்டு அவள் நடக்க ஆரம்பிக்க  ,

“தாரிகா   ரொம்ப ஃபீல்  பண்றா ” என்றதும் நேத்ராவின் நடை அப்படியே நின்றுவிட்டது  .

” நானும் தான் !ஆனா அண்ணன்களை  மீறி என்னால எதுவும் செய்ய முடியாது “இப்பொழுது நேத்ராவின் கண்களில் நீர் படலங்கள் .

” அவளுக்கு  மறுபடியும்  அபார்ட் ஆகிடுச்சு  ” நேத்ரா எதுவுமே பேச வில்லை ,

” ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கா நீ வந்தா அவ மைண்ட் கொஞ்சம் மாறும்   ” என்ற கிரண் ” உன்னை நான் வற்புறுத்தல, இதுக்கு மேல உன் இஷ்டம்  ”  என்றவன் அவளது முகத்தை கூட பார்க்காமல்  வழக்கமான  விஷம புன்னகையுடன்  அவளை கடந்து செல்ல . நேத்ராவுக்கு இப்பொழுதே தாரிக்காவை  பார்க்கவேண்டும்  போல இருந்தது .

!!!!!!!!!!!!!!!!!!!

காப்பகத்தில் இருந்து  வந்து இன்றோடு  ஒருவாரம் கடந்திருக்க தீரன் ஒருமாதிரி   இறுக்கமாகவே காணப்பட்டான் . 

அதை ஆரம்பித்தில் இருந்தே கவனித்து வந்த மேகா , வருடங்கள் கடந்தும்   தந்தையின்  இறப்பு  தீரனை இவ்வளவு பாதிக்கிறது என்றால் தன் தந்தை மீது எவ்வளவு  நேசம் வைத்திருப்பான் என்று  எண்ணியவள், அவனை தேற்றி இதில் இருந்து எப்படியாவது அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்   என மிகவும்   கவலை பட்டாள் .

ஆனால் எப்படி ? என்ன தான் இப்பொழுது அவன் மீது நெஞ்சம் முழுவம்  காதல் நிறைந்திருந்தாலும்  முதலில் மேகாவுக்குமே தீரனிடம்  நெருங்க கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது  . ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் தயக்கத்தை  விடுத்தவள் முன்பு போல  அவனை பார்த்தால் தலைகுனிந்து கடக்காமல்  சிறு புன்னகை பிறகு குட் மார்னிங்  குட் நைட்டுடன் கடக்க பழகினாள் .

பிறகு அவனுக்கு தன் கையால் உணவு சமைத்து கொடுப்பது , அவன் உண்ணும் பொழுது அருகில் இருந்து பரிமாறுவது என கொஞ்சம் கொஞ்சமாக  அவனை நெருங்கியவள் . நாட்கள்  கடக்க கடக்க  தன் தயக்கத்தை  மொத்தமாக விடுத்து அவனே தன் உலகம் என  சுற்றி சுற்றி வர ஆரம்பித்தாள் . அவன் அலுவலகம்  செல்லும் பொழுதே மருத்துவமனைக்கு கிளம்பி  சென்றுவிடுபவள்  , அவன் வீட்டிற்கு வருவதற்குள்  அவனுக்கு முன்பாக வந்து அவனுக்காக காத்திருப்பாள் .

அவனை அவனாக ஏற்றுக்கொண்ட மேகா  அவனுக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காது துவங்கி அனைத்தையும்  தெரிந்து கொண்டு அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள்  . முக்கியமாக அவனுக்குள் இருக்கும் வலியை நீக்கி  எப்படியாவது  அவனுக்கு   மகிழ்ச்சியையும்  நிம்மதியையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணியவள் அதற்காக எல்லா முயற்சியும்     செய்தாள் .  வீட்டில் இருக்கும் பொழுது கொஞ்ச நேரம் அவன் தனிமையில்  இருந்தாலும் தன் வேலைகளையெல்லாம்  ஒதுக்கி வைத்துவிட்டு அவனுடன் தன் நேரத்தை கழித்தாள்.  அவனது முகம் கொஞ்சம் வாடினாலும்  இவள் மிகவும் வருத்தப்பட்டாள் .

இரவில் சில நேரம்  உறக்கம் வராமல்  பால்கனியில்  எங்கோ வெறித்தபடி நிற்பான்  . முதலில் அது போன்ற நேரங்களில்   தன் உறக்கத்தை  விடுத்து  அவன் அருகில் இடைவெளி விட்டு  தானும்  சென்று நிற்பவள்  .

இப்பொழுது  இந்த ஒருவாரத்திற்குள் தீரனுடன் கைகோர்த்து தோள் சாய்ந்து  நிற்கும் அளவுக்கு  மேகா  நெருங்கியிருந்தாள்.  அவனது மன அழுத்தத்தின் காரணத்தை தெரிந்து கொள்வதற்காக  அவனிடம் பல முயற்சிகள் செய்தாலும் அதையெல்லாம் சீண்டலும் சிணுங்கலுமாக  மாற்றவிடுபவன்  , அவளிடம்  மனம்விட்டு மற்றும் பேச வில்லை . ஏனோ  அது அவனால் முடியவில்லை .அதில் அவளுக்கும்  வருத்தம் தான் , இருந்தாலும்  தன் முயற்சியை அவள் கைவிடாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

காப்பகத்தில்  இருக்கும் பொழுதே மேகாவின் பார்வை தன்னையே தொடர்ந்துக் கொண்டிருப்பதைக் கண்ட அக்னிக்கு அந்த கணம்  வியப்பாக இருந்தாலும்,  ஒரு பக்கம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது  . 

முதலில்,  டைவர்ஸ் கேட்டுவிட்டாளே என்று  மனைவியின் மீது கொஞ்சம் வருத்தத்தில் அவளை நெருங்காமல்  இருந்தவன் . பின்பு தன்னையே சுற்றி சுற்றி வரும் மனைவியின்  நேசத்தை ஒதுக்க முடியாது .  தன்   வருத்தத்தை தனது ஆழ்மனதின் ஒரு ஓரமாக தள்ளிவிட்டு,  அவள் கொடுத்த காதலை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டான் .அவனுக்கும் அந்த நேரம் அவளது அருகாமை மிகவும் தேவைப்பட்டது .

ஆரம்பத்தில் எல்லாம் தன்னை கண்டாலே எங்கையாவது  சென்று மறைந்து கொள்ளும் மனைவி, இப்பொழுது புன்னகையுடன் தன்னை சுற்றி சுற்றி வருவதை மிகவும் ரசித்தான்.

இதில் எப்பொழுது    தன்னை கண்டாலும்   அந்திவானமாய் சிவக்கும் தன்னவளின்  முகத்தை காணும்  பொழுதெல்லாம் தனக்குள் முளைக்கும்  பொல்லாத ஆசையை சிரமப்பட்டு  கட்டுப்படுத்திக்கொள்பவன் தனிமையில் ,தேக்கிய மொத்த காதலையும் கொட்டி தீர்த்துவிடுவான் .

மனைவி   தோட்டத்தில் நடைபயிலும்  பொழுதெல்லாம்  தானும் அவளது கைகளுடன் கைகோர்த்தபடி  நடப்பது . அவள் சமையல் அறையில்  இருந்தாள் என்றால் தானும் அவளுக்கு உதவுகிறேன்  என்ற பெயரில் ஏதாவது வம்பிழுப்பது  என தன்னவளை  தன்னோடு முடிந்தளவு நெருக்கமாக பிணைத்து கொண்டான் . மனைவி தன் மீது அன்பாக இருக்கிறாள் ! தனக்காக யோசிக்கிறாள் . தன் வருத்தம் அவளை பாதிக்கிறது  என்பது எல்லாம்  தீரனுக்கு மேகா மீது இருக்கும்  அன்பை இன்னும் அதிகரிக்க செய்தது   .

மேகா என் டை, மேகா என் வாட்ச்  , மேகா என் ஃபைல்  மேகா மேகா மேகா இது தான் காலையில் எழுந்தத்தில் தொடங்கி  பொழுது சாயும்  வரை  தீரனின்  வாயில் இருந்து வரும் மந்திர  வார்த்தைகள் . தீரனுக்கு எதுக்கெடுத்தாலும்  மேகா  வேண்டும் . மேகாவும் அதை மிகவும் ரசித்தாள் . ஆபிசில் இருந்து வரும்பொழுது அவள் இல்லையென்றால் இவன் முகம் விழுந்துவிடும் . மேகா இல்லையென்றால் தீரன் இல்லை ,தீரன் இல்லை என்றால் மேகா இல்லை  என்னும் அளவிற்கு இருவரின் உலகமும் ஒருவரை ஒருவர் சார்ந்தே சுழன்றது .

ஆனாலும்  இன்னும்  அவனது முகத்தில் இருக்கும்  குழப்பம் ,அது  மேகாவை மிகவும் பாதித்தது . எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள் . ஆனாலும் அவனது குழப்பத்திற்கான காரணம் மற்றும்  அவளால் அறிந்து கொள்ளவே முடியவில்லை  . இதோ இன்றும் கூட  ஆபிசில் இருந்து  வீட்டிற்கு வந்து  டீவி முன்பு அமர்ந்திருந்தவனின்  கண்கள்    ஸ்க்ரீனில் நிலைத்திருக்க, எதையோ சிந்தித்தபடி  மிகவும் குழப்பமாக இருந்தான் .

மேகா எவ்வளவோ பேச்சு கொடுத்து பார்த்தாள். ஆனால், ‘ஒன்றும் இல்லை வேலையில் பிரச்சனை’ என்று கூறி அவளை சமாளித்தவனுக்கு இரவு வெகுநேரமாகியும்  உறக்கமே வரவில்லை .

நேராக நேத்ராவின் அறை வரை வந்த தீரன்,  பின்பு  எதையோ சிந்தித்து அவளிடம் பேச வேண்டும் என்கின்ற தன் எண்ணத்தில் இருந்து பின்வாங்கியவன் , எதுவும் பேசாமல் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான் .

இப்பொழுது கிரண் ரூபத்தில் முளைத்திருக்கும் இந்த புது பிரச்சனையை எப்படி சமாளிப்பது என மிகவும்  குழம்பினான் . பிஸ்னஸ் என்றால் தைரியமாக முடிவெடுத்துவிடுவான்  ஆனால் உறவுகள்  என்று வரும் பொழுது  , அவன் எடுக்கும் முடிவு யாரையும் பாதித்தும்  விட கூடாது , அதே நேரம் பிரச்சனையையும்  வளரும் முன் சரி செய்ய வேண்டும் . அஷோக்கிடம்  சொல்லலாம் என்றால் அவ்வளவு தான் . கிரண் ,தாரிகா என்று வரும் பொழுது அவனுக்கு பொறுமை சுத்தமாக இருக்காது .ஆத்திரத்தில்  ஏதாவது செய்து  வேறு விதமான பிரச்சனை வந்தால் அது இன்னும் தலைவலி .

ஆக என்ன செய்யலாம்? என புருவ மத்தியில்  முடிச்சிட  தீவிர யோசனையில்  இருந்த தீரனின் நெற்றியை ,அவன் பின்னால்  இருந்து இருக்கரங்கள் மெதுவாகவும் மென்மையாகவும்  பிடித்துவிட , அவ்வளவு நேரம்  இறுக்கமாக இருந்த தீரன்  பிறகு  தன் கண்களை  மூடி அந்த  கரங்களின் ஸ்பரிசத்தை  உணர்ந்து   லேசாக புன்னகைத்தபடி  அப்படியே பின்னால்  சாய ,

” அச்சோ என்ன பண்றீங்க , நான் விழுந்துருவேன் ” என மேகா கத்தவும் அவள் விழுந்துவிடாமல் இருக்க, தன்  இடது கரத்தால்  வளைத்து தன் பின்னால் நின்றவளை அப்படியே தன்னுடன்   சேர்த்து பிடித்து கொண்டவன் .

” தூங்கலையா ?” என்றான் இன்னும் தன் கண்களை பிரிக்காமல் .

“நீங்க அங்க இல்லை அதான்  தேடி வந்தேன் ” தன் கன்னத்தை அவனது முதுகில் வைத்தபடி கூறினாள் .

” ஓ ” ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டான் .

” ஏதோ பிரச்சனை சொல்ல மாட்டேங்கறீங்க ” பிரச்சனை என்னவென்று தெரிந்தால் தன்னால் முடிந்த தீர்வை கொடுக்கலாம்  என்ற ஆவலில்  கேட்டாள் .

” அதெல்லாம் எதுவும் இல்லை  ” இயல்பாக இருப்பது போல சமாளித்தான் .

” பொய் சொல்றீங்க நீங்க ,சொல்ல வேண்டாம்ன்னா ஓகே ” என்று விலகப்பார்த்தவளை  ,

” நோ பேபி என்ன ஆனாலும்  என்னை விட்டு மட்டும் போகாத ” என அவளது கரம் பிடித்து தடுதப்படி  கூறியவனின்  வார்த்தையில் இருந்த தவிப்பு அவளது இதயத்தை தொட்டது .

” ஏனாம் ” தன்னிடம் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டானாம்  ,ஆனால் கூடவே இருக்க வேண்டுமாம்  சிறு உடலுடன்  கேட்டாள் .

” அது அப்படி தான் ” அவளை முன்பக்கமாக  இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கமாக  அணைத்தபடி கண்ணோடு கண் பார்த்து  கூறினான் .

” ஓ ஒருவேளை போய்ட்டா ” விழிகளை விரித்தபடி கேட்டாள் .

” தேடிவந்து கட்டம் கட்டி தூக்குவேன் ” அவளது மூக்கை பிடித்து ஆட்டி நெற்றியோடு நெற்றி முட்டினான்

” நான் அவ்வளவு முக்கியமா? ” அவன் வாயால் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஆச்சரியத்துடன்  வினவினாள்.

” ரொம்பவே ” என்ற ஒற்றை வார்த்தையில் அவன் அவளது உள்ளதை சிலிர்க்க வைக்க , பெண்ணவளோ சற்று எம்பி  அவனது கன்னத்தில் இதழ் பதித்து  , ஒற்றை முத்தத்தில்  அவனது ஆண்மையை சிலிர்க்க வைக்க அதன் பிறகு நடந்த அனைத்திற்கும் இருவருக்கும் சம பொறுப்பு .

!!!

காலையில் மேகா விழிக்கும் பொழுது தீரன் அலைபேசியில் யாரிடமோ  தீவிரமான உரையாடலில் இருக்க , சில நொடிகள் நின்று கணவனை பார்த்தவள் பின்பு எதுவும் பேசாமல் குளித்துவிட்டு  வெளியே வரும் பொழுது  ,அவன் மெத்தையில் அமர்ந்தபடி தீவிர யோசனையில் இருந்தான் .

” என்னாச்சு ?” மேகாவின் குரலில் நிமிர்ந்தவன் ,

” நத்திங் மா ” என்றான் .

” அப்போ சொல்ல மாட்டிங்க ” சிறு கோபத்துடன் கேட்டாள் .

” இருந்தா தானே சொல்ல முடியும் “எதில் இருந்தோ தப்பித்து ஓடுபவன் போல  பேருக்கு புன்னகைத்தபடி நழுவியவன் , சீக்கிரமே  அலுவலகம்  சென்றுவிட்டு , மாலை  அலுவலகம் சென்று திரும்பும் பொழுது தோட்டத்தில் அமர்ந்திருந்த மேகா , தீரனின் கார்  வருவது தெரிந்தும் எட்டிக்கூட  பார்க்காமல் அப்படியே இருக்க , ஒரு கணம் நின்று பார்த்த தீரன் , தன் அறைக்கு சென்று உடை மாற்றிய பின்பும் மேகா வராமல்  பணிப்பெண் காஃபியை கொண்டுவந்து கொடுக்கவும்  அவனுக்கு  என்னவோ போல் ஆகிவிட்டது  .

இத்தனை நாட்களில் முயல் குட்டி போல  தன்னையே சுற்றி சுற்றி வந்த மனைவியின் இந்த திடீர் விலகல் தீரனுக்கு வருத்தத்தை கொடுத்தது . சிறு விலகல் தான் அதுவே அவனுக்கு எதையோ இழந்தது போல தவிப்பை கொடுக்க . ஏனோ அவனால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . நேராக கீழே வந்தவன் ,

” மேகா ” என்று அழைத்தான் .

” என்ன? ” முகம் பார்க்காமல் சிறு கோபத்துடன் கேட்டாள் . குரலில் தன்னிடம் ஏன் அவன் பிரச்சனைகளை சொல்ல மறுக்கிறான் என்ற ஆதங்கம் இருந்தது .  அவளது  அழகு கோபத்தையும் ,செல்ல திமிரையும்  ரசனையோடு   பார்த்தான் . இதழ்கள் லேசாக வளைந்தது .

” அழகி “கிசுகிசுப்பாக  கூறினான் . உடனே அவளது முகம் சட்டென்று சிவந்துவிட , அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை  பார்த்தான் . அவளும் பார்த்தாள் . பார்த்தே அவளது முகத்தை இன்னும் சிவக்கவைக்க,

” உங்களை ” உடலாக  அவன் நெஞ்சில் குத்தினாள் . காதலோடு அவளை அணைத்து பிடித்துக் கொண்டு அவளது கண் பார்த்தான் . அவளது பார்வை ” ஏன் என்னிடம் சொல்ல கூடாதா ?” என்றது .

!!!!!!!!!!!!!!

தாரிக்காவிற்கு  அபார்ஷ்ன்  ஆகிவிட்டது  என்னும் செய்தியை கேட்டதில் இருந்து நேத்ராவுக்கு தாரிக்காவின் நியாபகமாகவே இருக்க, வீட்டில் உள்ள அனைவரும் வெளியேறிய பிறகு , ஒருவழியாக  தைரியதை வரவழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் கிரணின்  வீட்டு வாசல் வரைக்கும் வந்துவிட்டவள் , காலிங் பெல்லை அடிக்காமல் தயங்கியபடியே நிற்க , அந்த நேரம் எதற்ச்சையாக  கதவை திறந்த தாரிகா வாசலில் நேத்ராவை கண்டு கண்களில் நீர் திரள,

” எப்படி நேத்து இருக்க ” என  இறுக்கமாக கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் . நேத்ராவுக்கும்  கண்ணீர் வர சகோதரிகள்  இருவரும் வருடங்கள்  கழித்து சந்தித்ததில்   ஒரே அணைப்பிலே தேக்கி வைத்த  மொத்த உணர்ச்சிகளையும்  பொழிந்துகொண்டிருக்க  ,

” நேத்ராவை  உள்ள அழைச்சிட்டு வா தாரிகா ” என்ற கிரணின் குரலில் அணைப்பில் இருந்து முதலில் விலகிய  தாரிகா  நேத்ராவை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள் .

” எப்படி டி இருக்க ? அஷோக்  எப்படி இருக்கான்?  ” தாரிக்காவின் குரல் தழுதழுத்தது .

” இருக்காங்க  ” உற்சாகம் இல்லாமல் கூறினாள் நேத்ரா .

” இன்னும் கோபமாகத்தான்  இருக்காங்களா ” தாரிக்கா சோகத்துடன்  கேட்டாள் .

” அஷோக் பத்தி தான் தெரியும்ல அவன் மனசு மாறுவதெல்லாம்  நடக்காத காரியம் “

” அப்புறம்,  ஒருத்தி வந்திருக்காளே  ஆளு எப்படி ?” ஏளனம் நிறைந்த குரலில் வினவினாள் .

” மேகாவா “

“ம்ம்”

” பெருசா ஜட்ஜ் பண்ண முடியல , பார்க்க அப்பாவி மாதிரி இருக்கா ஆனா சரியான அழுத்தக்காரி . அக்னி அண்ணாவையே பின்னால சுத்த வச்சிட்டா .ஆனா என்கிட்ட நல்லா தான் இருக்கா ” என்ற நேத்ராவை கிரண் புருவம் சுருக்கி பார்க்க ,

“அது என்ன அண்ணா ? அவன் என்ன நம்ம கூட பிறந்தவனா . அம்மா ,அப்பா அஷோக் தான் அந்த அனாதைய  தலையில தூக்கி வச்சு ஆடுனாங்க  ,நீயும்  ஏன் ?” என்ற தாரிக்காவின் முகம் அஷ்டகோணலாக மாற ,

” கூட பிறக்காட்டாலும்  அக்னி ” என்று நேத்ரா ஏதோ கூற வரவும் ,அவளை தாரிக்கா முறைக்கவும்

” சரி நீ எப்படி இருக்க அக்கா ” என நேத்ரா  மாற்ற , இருவரும்  ஒருவரை ஒருவர் நலம்  விசாரித்துக்கொள்ள  அவர்களது சம்பாஷணை தொடர்ந்தது  .

வருடங்கள் கழித்து சந்தித்ததால் சகோதரிகள் இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசி கொண்டிருக்க , அப்பொழுது தற்செயலாக   மணி பார்த்த நேத்ரா,

” அச்சோ டூ ஹவர்ஸ் ஆச்சா,  நான் அப்போ கிளம்புறேன், ஹாஸ்ப்பிட்டல் வேற போகணும்  “என நேத்ரா   எழுந்துகொள்ள ,

“என்ன அவசரம் உக்காரு  ,ஈவினிங் போகலாம் ” என்ற தாரிக்காவை  ஒருவழியாக சமாளித்த நேத்ரா அங்கிருந்து எழுந்து நிற்க  அப்பொழுது ,

” வெயிட் பண்ணு நேத்ரா நான் ட்ராப் பண்றேன் ” என்ற கிரணிடம் ,

” இல்லை வேண்டாம் நான் காரை மால்ல உள்ள பார்க்கிங்கில்  நிப்பாட்டிட்டு அங்கிருந்த  ஆட்டோல தான் வந்தேன் ,ஆட்டோ வெயிட் பண்ணுது, நான்  அதுலயே போயிடுறேன் . வீட்ல தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும் ,  ”  என்ற நேத்ரா தாரிகாவிடம்  உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு  கூறிவிட்டு  கிளம்ப ,

” சரி வா வாசல் வர வரேன் ” என்ற கிரண் தாரிக்காவிடம் சொல்லிவிட்டு,  நேத்ராவுடன்  நடந்து வந்தவன்  ,

” நீ இப்படி இருப்பன்னு  நான்  கொஞ்சம் கூட நினைக்கல நேத்ரா ” என்ற கிரணின் குரலில் நேத்ராவின் நடை தடைபட  அவனை கேள்வியாக பார்த்தாள் .

” எப்படி உன்னால அவனை அண்ணன்னு சொல்ல முடியுது , அக்னி பண்ணினதை ஈஸியா மன்னிப்பன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை    “

நேத்ராவால் பதில் சொல்லவே முடியவில்லை , குற்ற உணர்ச்சியாக இருந்தது .

” விஷால் விஷயத்துல  தீரன் பண்ணினது பெரிய குற்றம்  . அவனை நான் மன்னிக்க மாட்டேன் நீயும் மாட்டன்னு நம்புறேன் . இந்த விஷயத்துல தீரனை பழிவாங்க உனக்கு எப்போ எந்த உதவி வேணும்னாலும்   நீ என்கிட்ட தயங்காம  கேட்கலாம் ” என்று உணர்வு பூர்வமாக பேசி அவளை அக்னிக்கு எதிராக தூண்டிவிட  ,அவனை ஒரு  கணம் திகைப்புடன் பார்த்தவள் பின்பு சுதாரித்துக்கொண்டு ,

” நான் ஏன் பழிவாங்கணும்  ” என்ற நேத்ரா  அதற்கு மேல் எதுவும்  பேசாமல்  விறுவிறுவென  கிரணின் வீட்டை தாண்டி உள்ள  மெயின் ரோட்டிற்கு வந்தவள் சாலையை கடப்பதற்காக  வலது புறம் பார்க்கவும்  அங்கே காரின்  கதவருகில்  சாய்ந்து  நின்றபடி அலைபேசியில் யாரிடமோ உரையாடி கொண்டிருந்த அக்னியை பார்த்து  கைகள் நடுங்க செய்வதறியாக  திகைத்து நின்றாள் .

இது தான் அக்னி ! மனதிற்குள் ஆயிரம் போராட்டங்கள் , பிரச்சனைகள் இருந்தாலும் அவனது ஒரு கண் எப்பொழுதும் அவனது வட்டத்துக்குள் இருப்பவர்கள் மேல் இருக்கும். அது ஏன் என்றால்? அது ஒருவித பொறுப்புணர்வு ! அதையும் தாண்டி தாரிக்கா , அசோக் மற்றும் நேத்ராவின்  தந்தையும் ,  தனக்கு வளர்ப்பு தந்தையுமான  சக்கிபாய்  என்று அழைக்கப்பட்ட   சக்கரவர்த்தி ராத்தூர்க்கு அவன்  செய்து கொடுத்த சத்தியம் !

ஆக பொறுப்புணர்வும் சத்தியமும் மட்டும் தானா ? என்றால் இல்லை , அதையும் தாண்டி அவர்கள் மேல் அவன் கொண்ட நேசம் !

குடும்பம், இளமை என அனைத்தையும் இழந்து விட்டு அனாதை போல தனிமையில் கிடந்தவனுக்கு அன்பை கொடுத்த அந்த குடும்பத்தின் மேல் அவன் கொண்ட, அவன் காட்டிகொள்ளாத , உண்மையான நேசம் !

தீரன்  எதுவுமே பேச வில்லை, மிகவும் நிதானமாக காணப்பட்டவன்  , நேத்ராவுக்காக தன் காரின்   கதவை திறந்து   அவளை உள்ளே ஏறுமாறு  கூறினான் .

வீட்டிற்கு  வரும் வரை கூட அவன் எதுவுமே  பேச வில்லை , நேத்ரா தான் ஒருவித படபடப்பிலே இருந்தாள். நொடிகள் யுகம் போல கடக்க ஒருவழியாக  இல்லம் வந்ததும் , காரின் கதவை திறந்து கொண்டு நேத்ரா செல்லவும்  ,

” நேத்ரா ஒரு நிமிஷம் ” என அழைத்த தீரன் , அவளிடம் சில புகைப்படங்களை நீட்டி ,

” இது நீயும் ,கிரணும் விஷாலோட செமெண்டரில  சந்திச்சது , இது மால்ல சந்திச்சது , ஏன்னு கேட்க மாட்டேன் .ஆனா ஒன்னு சொல்றேன் நேத்ரா , கிரண் என்னைக்குமே  நம்ம பேமிலி  கிடையாது  ! இது நான் எடுத்த முடிவு இல்லை உன் அப்பா எடுத்த முடிவு அதை என்னைக்கும் மறந்திராத . கிரண் ,தாரிகா மூலமா  கம்பெனிக்குள்ள வர பார்த்தான் .அது நடக்கல  இப்போ உன் மூலமா வர பார்க்குறான் .  ” என்பதை  சொன்ன தீரன் , நேத்ராவின்  தலையை  வாஞ்சையுடன்  தடவி ,

” நீ ரொம்ப இன்னொசென்ட் நேத்ரா , யாரையும்  நம்பிருவ  ,ஆனா இந்த உலகம்  நீ நினைக்கிற மாதிரி கிடையாது ” என்று சொல்லிக்கொண்டிருக்கும்  பொழுதே நேத்ராவின் அலைபேசி கிரணின் பெயரை தாங்கி ஒலிக்க ,அதை புருவம் சுருக்கி  பார்த்த தீரன்  ,நீண்ட பெருமூச்சை வெளியிட்டு ” அவன் கூட பேசும் பொழுது , தீரன் உயிரோட இருக்கிற வரைக்கும் எந்த நரியும்  இந்த குடும்பத்துக்குள்ள வர முடியாதுன்னு நான் சொன்னேன்னு சொல்லு ” என்று கூறிவிட்டு  தீரன்  வேகமாக தன் காரை எடுத்துக்கொண்டு  அங்கிருந்து சென்றுவிட ,நேத்ராவுக்கு  கொஞ்ச நேரத்துக்கு  எதுவுமே ஓட வில்லை .

தொடரும்