MIRUTHNAIN KAVITHAI IVAL 35

cover page-6f574b2d

மிருதனின் கவிதை இவள் 35

பால்கனி கம்பியை இறுக்கமாக பிடித்த படி நேத்ரா, கிரணின் இல்லத்திற்கு சென்றதை எண்ணி பார்த்து கொண்டிருந்த தீரனின் முகம் பாறையாக இறுகியிருக்க, அவனது தோள் மீது தன் கரம் வைத்த மேகா,

“வேண்டாம் தீரன், அவ்வளவு கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம் விட்டுடுங்க பா.” என்றாள், கணவனின் இறுக்கமான முகம் கலக்கத்தை கொடுக்க, அவனை சங்கடப்படுத்த விரும்பாது அவ்வாறு கூறினாள்.

“மேகா உன்கிட்ட சொல்ல வேண்டியது நிறையா இருக்கு, ஆனா என்னால…” என்ற தீரன் அதற்கு மேல் பேச முடியாமல் தயங்க, உடனே அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டவள்,

“இட்ஸ் ஓகே நீங்க சொல்லவே வேண்டாம். உங்கள விட எனக்கு வேற எதுவுமே முக்கியம் இல்லை. எதுக்கும் தளராதீங்க பிரச்சனை எல்லாமே சீக்கிரம் சரியாகும். நீங்க சரி பண்ணுவீங்க நான் எப்பவும் உங்க கூட இருக்கேன்.” என்றவளை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டான் தீரன்.

மனைவியிடம், இத்தனை ஆண்டு காலமாக தன் மனதை அழுத்தி கொண்டிருக்கும் அனைத்தையும் கூறி தன் மொத்த சுமையையும் அவளிடம் இறக்கிவைத்து அவளை கட்டிக்கொண்டு அழவேண்டும் என்று தான் அவனும் நினைக்கிறான்,

குறைந்தபட்சம் நேத்ராவை பற்றியாவது கூற வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் எப்படி முடியும்? நேத்ராவை பற்றி கூற வேண்டுமானால் கிரணை பற்றி கூற நேரிடும் அவனை பற்றி கூறினால் தாரிகா, அஷோக் அவர்களுடன் தனக்கு எப்படி உறவானது என்பதை கூறவேண்டும், இதை கூறினால் தன் கடந்த காலம் அதை கூற வேண்டுமே அதை நினைத்தாலே மூச்சு முட்டிக்கொண்டு வர அவனால் எப்படி மனம் திறந்து சொல்ல முடியும்?

ஆக இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தவன், மனைவி கொடுத்த நம்பிக்கையில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாலும் அவன் எண்ணம் முழுவதும் நேத்ரா எந்த வித சிக்கலிலும் சிக்கிவிட கூடாது என்பதில் தான் இருந்தது.

!!!

தீரன் அன்று நடந்த பிஸ்னஸ் டீலை வெற்றிகரமாக கைப்பற்றியதால் அவர்களை சிறப்பிக்கும் விதமாக அந்த டீலை நடத்திய நிறுவனம் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தது. பார்ட்டியில் நிச்சயம் கிரண் இருப்பான் என்பதால் மேகாவையும், நேத்ராவையும் தவிர்த்துவிட்டு தானும் அஷோக்கும் மட்டும் செல்ல வேண்டும் என முடிவெடுத்தான்.

!!!!!!!!!!

“எனக்கு பயமா இருக்கு.” நேத்ராவின் குரல் பதற்றத்தில் ஒலித்தது.

“பயந்தா உன் இலக்கை அடைய முடியாது நேத்ரா.” என்றான் கிரண்.

“என்னால பார்ட்டிக்கு வர முடியும்ன்னு தோணல.”

“வரமா எப்படி? வெளியிலையும் மீட் பண்ண முடியல அப்போ எப்படி நான் அதை உனக்கு கொடுக்கிறது.”

“ஆனா அண்ணனை மீறி எப்படி?”

“எப்படியாவது வர முயற்சி பண்ணு, தீரனும் மேகாவும் பிரியணும்ன்னா பார்ட்டிக்கு வா.” என்றவன் தன் அழைப்பை அணைத்துவிட, நேத்ராவிற்கு தான் பதற்றமாக இருந்தது.

!!!!!!!!!

மறுநாள் காலை மெத்தையில் அமர்ந்தபடி  கோப்பை புரட்டிக்கொண்டு இருந்த மனைவியிடம்,

“வரு இன்னைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டி இருக்கு நானும் அஷோக்கும் ஆபிஸ்ல இருந்தே அங்க போயிருவோம், எனக்காக வெயிட் பண்ணாத டின்னர் முடிச்சிரு.” சட்டையின் பொத்தான்களை போட்டபடி தீரன் கூற,

“நீங்க மட்டும் தான் பார்ட்டிக்கு போறீங்களா?” சிறு ஏக்கத்துடன் வினவினாள்.

“ஆமா பா” என்றதும் தன் கையில் இருந்த கோப்பை கட்டிலில் வைத்துவிட்டு அவனிடம் வந்தவள்,

“ஆபிஸ் பார்ட்டி தானே பா நானும் வரட்டா?” அவனது சட்டை பொத்தானை ஒவ்வொன்றாக போட்டபடி அவன் முகம் பார்த்து கேட்டாள். பதில் சொல்லாமல் அப்படியே தன் நெற்றியை நீவியபடி நின்றிருந்தான்.

“ப்ளீஸ் உங்க கூட இதுவரை வெளிய வந்ததே இல்லை ப்ளீஸ்.” என்று கண்களை சுருக்கி ஆசையாக கேட்டாள், மறுக்கவா தோன்றும். ஆனாலும் வேறு வழி தெரியாமல் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு ஒரே ஒரு பார்வை பார்த்தான்.

“ப்ளீஸ் பா. ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” தீரன் இவர்களை ஏன் தவிர்க்கிறான் என்ற காரணம் தெரியாமல் அவனுடன் ஒன்றாக வெளியே செல்ல வேண்டும் என்ற ஆவலில் அவன் முடியாது என மறுத்தும் என்றுமில்லாமல், இன்று அவள் அவனது கரத்தை பிடித்து கொண்டு கெஞ்சி கேட்க,

தீரனோ, “இது என்ன பிடிவாதம்?அதான் வேண்டாம்ன்னு சொல்றேன்ல, ரொம்ப இடம் கொடுத்துட்டேன் அதான் ஓவரா போற, வைக்க வேண்டிய இடத்துல வச்சா தான் சரி வரும்.” என சட்டென்று கத்திவிட, மேகாவின் முகம் விழுந்துவிட்டது. அவனது கரத்தில் இருந்த தன் கரத்தை நீக்கியவள், விடுபட்ட சட்டை பட்டனை போட்டு விட்டு  அங்கிருந்து அமைதியாக சென்று கட்டில் மீது அமர்ந்துகொள்ள, ஒருமுறை அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் வேகமாக வெளியேறி தயாராக இருந்த உணவை பேருக்கென்று உண்டு விட்டு அலுவலகம் புறப்பட்டான். கண்களில் நீர் திரள அவன் முதுகை வெறித்தபடி நின்றாள் மேகா.

‘வேண்டாம் என்று கூட ஒரு முறை அன்பாக கூறியிருந்தால் சரி என்று சொல்ல போகிறேன். அதற்காக என்னவெல்லாம் பேசிவிட்டான்? இடம் கொடுத்துவிட்டானாம் பொல்லாத இடம்.

வைக்க வேண்டிய இடத்தில வைக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்?’ மனதிற்குள் பொருமினாள். ‘என்னை காயப்படுத்தாமல் பேசவே இவனுக்கு வராதா? இவன் மாறவே மாட்டானா?’ என இவள் புலம்பும் பொழுதே அலைபேசி சினுங்க, ‘இப்போ என்ன சொல்ல போறானோ?’ என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றாள்,

“ஏன் சாப்பிடல?” அவளது அழைப்பு ஏற்கப்பட்டதும் கேட்டான்.

“எனக்கு ரொம்ப இடம் கொடுக்காதீங்க தீரன், சாப்பிடுறேன் சாப்பிடலை அதை பத்தியெல்லாம் கவலை படாதீங்க என்னை வைக்க வேண்டிய இடத்துல வைங்க, இல்லைனா ஓவரா போயிருவேன்.” என்றாள் கோபத்தை தாண்டி வந்த ஆதங்கத்துடன்.

தீரன் உடனே மௌனமாகிவிட்டான். அவனால் எதுவுமே பேச முடியவில்லை. அவன் பேசுவான் என எதிர்பார்த்தவள் அவனிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றதும்,

“அவ்வளவு தானே கேட்க வேண்டியதை கேட்டாச்சா?” தழுதழுத்த குரலில் இருந்த துக்கம் அவனை தாக்கியது.

“ஹான் அதுக்கு தான் கால் பண்ணினேன்.”

“ஓகே வைக்கிறேன்.”

“மேகா” என்று அழைப்பை துண்டிக்க போனவளை சட்டென்று தடுத்தான்.

“சொல்லுங்க.”

“வேலையா இருந்திருப்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.”

“ஃப்ரீயா தான் இருக்கேன்.”

“இருந்தாலும்…”

“இருந்தாலும்…”

“இருந்தாலும் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.”

“அதுக்கு?”

“அதுக்கு சா… சா… சாரி.” அவளுக்கு புரிந்துவிட்டது இப்பொழுது  பேசினத்துக்கு தான் இந்த ‘சாரி’ என்று. ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ்வளவு பேசிட்டு, இப்போ சாரி கேட்க அவ்வளவு வருத்தம், திட்டும் பொழுது நேரடியா திட்டுவாரு, சாரியை சுத்தி வளைச்சு தான் கேட்பாரு , நாம உடனே பல்லை காட்டணும் ஹ்ம்’

“ஓகே” என்றவள் கோபத்துடன் அழைப்பை துண்டிக்க, தீரன் தான் மேகாவை எண்ணி மிகவும் வருத்தப்பட்டான். இதற்கு முன்பு மேகாவை பேசியிருக்கிறான், காயப்படுத்திருக்கிறான், ஆனால் அதற்காக, ‘எப்படி அவளை சமாதானம் செய்ய போகிறோம்?’ என்றெல்லாம் தயங்கியது கிடையாது. எதுவுமே நடக்காதது போல நேரே செல்வான்,

அவளை கட்டாயப்படுத்தியாவது தன்னுடன் இணக்கமாக்கி கொள்வான். மன்னிப்பெல்லாம் கேட்டு, சமாதானமெல்லாம் ஒருநாளும் செய்தது கிடையாது. ஆனால் இன்று மனைவியை எவ்வாறு சமாதானம் செய்வது என்று மிகவும் யோசித்தான். அவனுக்கு இதெல்லாம் மிகவும் புதியதாக இருந்தது. மிகவும் கொடுமையாக இருந்தது.

சிறிது நேரம் அவனை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தவள் மருத்துவமனை செல்ல தயாராக, கதவை திறந்து கொண்டு திடீரென்று நுழைந்தான் தீரன். அவனை எதிர்பாராத மேகா ஒருகணம் திகைத்தவள். ‘இப்போ தான் பேசினான், கார்ல கூட ஏறினானே அதுக்குள்ள வந்து நிக்கிறான்’ என சிந்தித்தவள் அவனை கண்டுகொள்ளாமல் தன் தலையை சீவிக்கொண்டிருக்க. வேண்டுமென்றே எதையோ மும்முரமாக தேடுவது போல அவளை இடித்து கொண்டு ட்ரெஸிங் டேபிளின் ட்ராக்களை இழுத்து இழுத்து மூடி குடைந்து கொண்டிருக்க, அவள் எரிச்சலோடு அவனை பார்க்க அவனோ, “ஒன்னு வச்சேன் அதை காணும்.” என அவளையே உரசி கொண்டு சுத்தி சுத்தி வர,

“தேடுங்க கிடைக்கும்” என பல்லை கடித்தவள் தயாராகி வேகமா நடக்க, மேகா செல்வதை கண்டவன்,

‘இவளுக்காக வந்தா இவ, அவ இஷ்டத்துக்கு கிளம்புறா.’ என எண்ணியவன் மறுநொடியே அவளை பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்திருந்தான்.

‘அலுவலகம் கிளம்பியவன் தனக்காக தான் வந்திருக்கிறான். பார்க்கும் பொழுது நன்றாக தான் இருக்கிறது ஆனால் அவன் வார்த்தைகள் வலிக்கிறதே!’

‘இல்லை இந்த முறை மன்னிக்க கூடாது முதல்ல விலகணும்’ என மூளை எச்சரிக்கை விடுக்கவும் மேகா அவனிடம் இருந்து விலக முற்பட,

“மேகா” என்றவனின் அணைப்பு இன்னும் இறுக்கமாக, அவளது கண்களில் நீர் கோர்த்தது.

“லேட் ஆகிடுச்சு ஹாஸ்ப்பிட்டல் போகணும்.” என்றாள்.

“எனக்கும் தான்.”அவள் கழுத்தில் வாசம் பிடித்தபடி இன்னும் தன்னுடன் பிணைத்து கொண்டான்.

“எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க.” மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

“பண்ணட்டும்” அதை விட மெல்லிய குரலில் அவளது காதில் கிசுகிசுத்தான்.

‘இவனை என்ன செய்ய? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ்வளவு பேசிட்டு இப்போ எதுவுமே நடக்காத மாதிரி இப்படி குழையிறான். இதெல்லாம் பண்ணுவான் ஆனா ஒரு சாரி மட்டும் கேட்க மாட்டான்.’ என்று எண்ணியவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக இறங்கியது.

“என்னாச்சு மேகா?” எல்லாம் பேசிவிட்டு என்னாயிற்று என்று அவன் கேட்கவும், கோபம் கொண்டவள் வலுக்கட்டயாமாக அவனிடம் இருந்து வெளி வந்து,

“நான் உங்களுக்கு முக்கியமே இல்லை தீரன். உங்களை பொறுத்தவரை இந்த ரூம்ல இருக்கிற டேபிள் சேர் மாதிரி நானும் ஒரு ஜடம் அவ்வளவு தான். ஐயம் நத்திங் டூ யு.” வழிந்து கொண்டே இருக்கும் கண்களை துடைத்தபடி கூறினாள்.

அதிர்ந்து மனைவியின் முகம் பார்த்தான். ‘நான் எப்போ அப்படி சொன்னேன்?’ என்று எண்ணியவனுக்கு, இப்பொழுதுதான், தான் விட்ட வார்த்தைகள் அவள் மனதை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறது என்பது புரிந்தது. இதையெல்லாம் அவன் யோசித்து பேசவில்லை.

கோபம் வந்ததும் ஏதேதோ பேசிவிட்டான். இப்பொழுது வருத்தமாக இருந்தது.

“அப்படியெல்லாம் நினைச்சு நான் பேசல கோபத்துல ஏதோ பேசிட்டேன் பேபி நிஜமா தான் சொல்றேன்.” கெஞ்சினான். இவளுக்கு அழுகை தான் வந்தது. உடனே அவளது கண்ணீரை துடைத்தவன்.

“ப்ளீஸ் அழாதடி, நிஜமா மனசில இருந்து நான் எதுவும் பேசல சாரி டி. நீ எப்படி எனக்கு முக்கியம் இல்லாம போவ, நீ தான் எனக்கு எல்லாமே.” அவளது முகம் தாங்கி கண்களை பார்த்து கூறினான்.

அவனிடம் இருந்து விலகியவள் இல்லை என்பது போல் தலையசைத்து, “நம்ப மாட்டேன். அதெப்படி சும்மா சொல்லுவீங்க? நான் நம்பவே மாட்டேன், யு ஹேட் மீ.” அழுதுகொண்டே மறுத்தாள்.

“என்னை நம்புடி.” தவிப்புடன் கேட்டான்.

“உங்களுக்கு என்னை புடிக்கல, ஆழ்மனசில என் மேல் இன்னும் கோபம் இருக்கு.” என்று படபடப்புடன் இன்னும் ஏதேதோ கூறினாள். உடல் நடுக்க கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

“லூசாடி நீ?” அவளை வேகமாக இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவளது முதுகை வருடினான். அவளது படபடப்பு மெல்ல மெல்ல அவனுக்குள் அடங்கியது. அவளும் தான்.

!!!

திருமணம் முடிந்த பிறகு முதன் முறையாக தீரனுடன் மகிழ்ச்சி பொங்க செல்லும் இந்த பயணத்தை மேகா மிகவும் ரசித்தாள்.

காதில் அவளுக்கு பிடித்த பாடல் இசைக்க, அருகில் அவளவன், அவளுக்கு வேறு என்ன வேண்டும். புதிதாய் காதல் வயப்பட்ட பதினாறு வயது பெண்ணை போல ஆனந்தத்தில் அவள் உள்ளம் துள்ளி குதித்தது.

‘எனக்காக அவன் முடிவையே மாற்றிக்கொண்டானே, என்னிடம் மன்னிப்பு கூட கேட்டானே. எல்லாம் எனக்காக.’ வியப்பு ஒரு பக்கம், பூரிப்பு ஒரு பக்கம் ஒருவித பரவசத்துடன் அமர்ந்திருந்தாள். வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது.

இதழில் நீங்காத புன்னகையுடன் அருகில் காரை ஓட்டிக்கொண்டு வரும் கணவனை பார்த்து கொண்டே வந்தாள்.

“என்னாச்சு பார்வை எல்லாம் பயங்கரமா இருக்கு” சாலையை பார்த்தபடியே கேட்டான்.

“ஏன்?” எதிர் கேள்வி கேட்டவளை புரியாமல் பார்த்தான்.

“ஏன் உங்க முடிவை சேஞ் பண்ணிடீங்க?”

“இந்த சிரிப்புக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்.” என்றவனின் கரத்தை காதலோடு பிடித்துக்கொள்ள, அப்பொழுது அவனது அலைபேசி சிணுங்கவும் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தவன், சொல்லு ரிஷி” என்றான்.

“சார் எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணியாச்சு. கிரண் பாஸ்கர் பார்ட்டிக்கு வரமாட்டார்.”

“சூப்பர்டா பார்ட்டியில மீட் பண்ணலாம்.” என்றவன் அழைப்பை அணைக்க, அவன் முகம் முன்பை விட‌‌ மிகவும் பிரகாசமாக இருந்தது.

“என்னாச்சு திடீர்ன்னு ரொம்ப ஹாப்பியாகிடீங்க?” மனதில் தோன்றியதை கேட்டுவிட்டாள்.

“நல்ல நியூஸ்.” புன்னகையுடன் கூறினான்.

“அதான் என்ன?”

“சொன்னா உனக்கு புரியாது மேகா.” வண்டியை ஓட்டியபடியே பதில் கூறினான்.

இது தான் தீரனிடம் பிடிப்பதில்லை. எதையுமே பகிற மாட்டான். எவ்வளவு நெருக்கமாக அவன் காட்டிக்கொண்டாலும் ஆழ்மனதால் தீரன் மேகாவிடம் இன்னும் நெருங்க வில்லை. அவள் அழுதால் இவனால் தாங்க முடியவில்லை. இவள் வருத்தம் அவனை பாதிப்பது எல்லாம் சரி தான் ஆனாலும் ஆழமாக அவன் அவளிடம் இன்னும் ஒன்றவில்லை.

அவன் பக்கம் ஏதோ ஒன்று குறுக்கே நிற்கின்றது. அது அவன் பார்க்கும் தொழில் அதன் பிரச்சனைகளா? இல்லை அவன் இயல்பே இதுதானா? அவள் முகம் சட்டென்று வாடியது.

“அதெல்லாம் புரியும் நீங்க தான் சொல்ல மாட்டீங்க.” குழந்தை கோபத்துடன் மூக்கு நுனி சிவக்க முணுமுணுத்தாள். ஆசையாக ரசித்தான்.

“ஹனி” குழைந்தான்.

“ஒன்னும் வேண்டாம் விடுங்க, உங்க துக்கத்தை தான் என்கிட்ட ஷேர் பண்ணிக்கவே மாட்டிக்கிறீங்க. உங்க சந்தோஷத்தை ஷேர் பண்றதுல என்ன இருக்கு?” என்று அவனிடம் இருந்து தன் கரத்தை எடுத்து கொண்டவள் முகத்தை திருப்பிக்கொள்ள,

“ஆனா நான் கொஞ்சம் வித்யாசமா ஷேர் பண்ணுவேனே  ஹனி.” கண்களில் குறும்புடன் கூறினான்.

‘ஹான் வித்யாசமாவா?’ அவள் யோசிப்பதற்குள் அவன் தன் மகிழ்ச்சியை தனது பாணியில் பகிர்ந்துகொள்ள,

‘அச்சோ நான் என்ன கேட்டேன் இவர் என்ன பண்ணிருக்காரு.’ என தன் இதழை மெதுவாக வருடியவளின் முகம் புது ரத்தம் பாய்ந்தது போல குபீரென்று சிவந்துவிட உள்கன்னத்தை கடித்த படி அமர்ந்திருந்தாள்.

அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. ஒரு வித கூச்சத்தில் இருந்தவள், இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டபடி,”இப்படி தான் எல்லார்கிட்டயும் உங்க சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்குவீங்களா?” என சிறு உரிமை கோபத்துடன் கேட்டாள்.

“ஆமா ஹனி” என்றவன் அவள் நிமிர்ந்து பார்க்கவும்,

“உன்கிட்ட மட்டும்…” என்று பட்டென்று கண்ணடித்தான். மேகா தான் தீரனின் இந்த அவதாரம் கண்டு திணறிவிட்டாள்.

அவளது திணறலை புன்னகையுடன் ரசித்தவன், “நான் ஒழுங்காவே ஷேர் பண்ணல ஹனி.” என்று சற்று நெருங்கி வந்தவனை, தன் கரம் வைத்து தள்ளியவள்,

“கார் பா யாரும் பார்க்க போறாங்க.” என்று சொல்ல.

“வெளிய இருந்து பார்த்தா உள்ள தெரியாது.” என்றவன் தான் நினைத்ததை நிறைவேற்றிய பின்பே அவளை விட.

“நீங்க சரியே இல்லை. இனிமே கேட்டா பாருங்க” என்றவள் வெட்க புன்னகையுடன் திரும்பிக்கொள்ள,

இப்பொழுது அவளது கரத்தை தன் கரத்திற்குள் வைத்துக்கொண்டவன், பார்ட்டி ஹால் வந்தும் அவளது கரத்தை விடவில்லை.

முதலில் மேகா மற்றும் நேத்ராவை அழைத்து செல்ல வேண்டாம் என்று எண்ணியிருந்தவன். மேகா ஆசைப்படவும், காலையில் நடந்த சம்பவத்தை நினைவு கொண்டு அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத தீரன் அனைவருடனும் பார்ட்டியில் கலந்து கொண்டான்.

மனைவியுடன் முதன் முதலாக ஜோடியாக கலந்துகொள்ளும் முதல் விருந்தினர் கூட்டம் என்பதால் மகிழ்ச்சியுடன் மனைவியின் கரம் கோர்த்தபடி உள்ளே நுழைந்த தீரன் மேகாவிடம், “இது பக்கா பிஸ்னஸ் பார்ட்டி வரு, உன் ஃப்ரண்ட்ஸ் கூட போற மாதிரியெல்லாம் இருக்காது சோ கொஞ்சம் போர் அடிச்சாலும் கண்ணை காட்டு போய்டலாம்.” என்றான்.

“நீங்க இருக்கும் பொழுது எனக்கு ஏன் போர் அடிக்கும்.” என்றவளை மனநிறைவுடன் பார்த்தவன், அஷோக் மற்றும் நேத்ராவுடன் பார்ட்டி ஹாலில் வலம் வர, அவனது சந்தோஷ புன்னகை எல்லாம் நக்கல் சிரிப்புடன் தங்களை நோக்கி வந்த கிரண் பாஸ்கரையும், அவனுடன் வந்தவனையும் கண்டதும் காணாமல் போக, மேகாவுக்கு சர்வமும் ஒடுங்கிவிட்டது.

தொடரும்