MIRUTHNAIN KAVITHAI IVAL 38

cover page-a7781311

மிருதனின் கவிதை இவள் 38

கையில் கிடைத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கிழித்து அதில் இருந்த தன் தாயின் படத்தை மட்டும் கசக்கி, கசக்கி எறிந்த தீரனின் நிலை குத்தியிருந்த கண்கள் மட்டும் நீரால் நிறைந்திருந்தது.

தன் அறையின் ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பிடித்திருந்த ரேஷ்மாவின் மனமும் கூட இறுக்கமாகவே தான் இருந்தது. அவளது மனம் அவள் கடந்து வந்த வாழ்க்கை பாதையை நோக்கி பயணித்தது.

அவள் இருபது வயது பெண். அவளுக்கு பதினெட்டு வயதில் ஒரு தங்கை. தந்தை ஆட்டோ ட்ரைவர், தான் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்துவிடுவார். தாய் சினிமாவில் க்ரூப் டான்சர் எப்பொழுதாவது அரிதாக சினிமாவில் சின்ன சின்ன வேடம் கிடைக்கும் ஆக இதில் வரும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தார். விவரம் தெரிந்த நாளில் இருந்தே நிம்மதியாக மூன்று வேலை உணவு உண்டது கிடையாது.

ஆசைப்பட்ட ஆடை உடுத்தியது கிடையாது. விருப்பம் இருந்தும் குடும்ப வறுமை காரணமாக கல்லூரி சென்று படிக்க முடியவில்லை. அப்படியிருக்க தாய்க்கு அடுத்து குடும்ப பாரத்தை தன் தோளில் சுமக்க வேண்டிய நிலையில் இருந்த ரேஷ்மாவுக்கு தங்கையையாவது நன்கு படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை!

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய? எப்படி குடும்பத்தின் தரத்தை உயர்த்துவது? என்று எண்ணி கொண்டிருந்தவளுக்கு எப்படியாவது பாலிவுட்டில் மட்டும் கால் பதித்துவிட்டால் தங்களின் அனைத்து கஷ்டமும் மாறிவிடும் என்கின்ற எண்ணம் தோன்ற, தாயின் உதவியுடன் அனைத்து புரொடக்ஷ்ன் ஹவுஸ் வாசலுக்கும் தங்களின் கால்கள் நோவ ஏறி ஏறி இறங்கினாள். நாட்கள் போக போக தனியாகவே தன் கனவை நோக்கி பயணித்தவளுக்கு அவளை போலவே கனவுகளை சுமந்து கொண்டு பட வாய்ப்புக்காக தவம் இருக்கும் இந்தருடன் பழக்கம் ஏற்பட, இருபத்தைந்து வயதான இந்தரும் ரேஷ்மாவும் மிகவும் நட்புடன் பழகி வந்தனர்.

அந்த சமயம் ஒரு பெரிய பட்ஜெட் படம் ஒன்றிற்கு அஸ்சிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்த்துக்கொண்டே சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த இந்தர் வறுமையில் வாடும் ரேஷ்மாவுக்கு உதவும் பொருட்டு அங்கே தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக ராம் பிரசாத்தின் ஸ்டுடியோவில் அவருக்கு அசிஸ்டண்டாக வேலை வாங்கி கொடுத்திருந்தான்.

வாழ்க்கையில் நிறைய சம்பாதிக்க வேண்டும். தங்கையை படிக்க வைக்க வேண்டும். தாயை ராணி போல பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆடை, விரும்பிய உணவு என ஏகப்பட்ட கனவுகளுடன் சினி உலகத்திற்குள் வந்த ரேஷ்மாவின் கனவுகள் அனைத்தும் ஒரு நாள் ராம் பிரசாத் அவளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்கும் வரை எட்டாக்கனியாக தான் இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை அவள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்ட நாள் என்றால் மிகை இல்லை.

வழமை போல தன் பணிகளை முடித்த ரேஷ்மா  ராமிடம் சொல்லிவிட்டு செல்வதற்காக அவரது அறைக்கு வெளியில் நின்று சத்தம் கொடுக்க, இது போன்ற நேரங்களில் வழமையாக ஒரு சிறு தலையசைப்பு மற்றும் புன்னகையுடன் அவளை போக சொல்லும் ராம் என்றுமில்லாமல் உள்ளே வரும்படி சொல்ல ரேஷ்மா யோசனையுடன் உள்ளே சென்றாள்.

அவள் அழகான பெண் தான் ,வியப்படையும் அளவிற்கு அவள் ஒன்றும் பேரழகி இல்லை, பெருமையடையும் அளவுக்கு அவளிடம் செல்வமும் இல்லை ,சொல்லி கொள்ளும் அளவிற்கு   பெரிய படிப்பும் இல்லை.

ஆனால் அவரோ அப்போதிருந்த திரை துறையில் பேர் சொல்லும் அளவுக்கு பெரிய இசையமைப்பாளர். நன்கு படித்தவர், செல்வ செழிப்பை பற்றி சொல்லவே தேவை இல்லை முப்பத்தைந்து வயதானாலும் அவரது ஆளுமைக்கு குறைவில்லை.

எத்தனையோ முன்னணி நடிகைகள் அவரது இனிமையான குரலுக்கு ஈர்க்கப்பட்டு அவரை திருமணம் செய்ய காத்திருக்கும் சமயத்தில், தன் மீது அவருக்கு எப்படி காதல் வந்தது? என்று மிகவும் குழம்பினாள்.

“என்னை திருமணம் செய்து கொள்வாயா?” கையில் மலர் செண்டுடன் தன் முன்னே மண்டியிட்டு அவர் கேட்கவும் மிகவும் ஸ்த்தம்பித்து போன ரேஷ்மாவுக்கு அந்த நொடி என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் அவள் அவரை நிராகரிக்கவும் இல்லை.

“எனக்கு டைம் வேணும்.” என்றவள் வேறு எதுவும் பேசாமல் மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து சென்றவள், மறுநாள் காலை தன் மனதில் இருந்த நெருடல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு தன் இதயத்தை கல்லாக்கிக்கொண்டு, அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்க.

அவர்களது திருமணம் அவரது முறைப்படி சிறப்பாக முடிய, திருமண வரவேற்பு கோலாகலமாக நடந்து முடிந்தது.

ரேஷ்மா தன் வாழ்நாளில் இதுவரை அவள் அனுபவித்திராத அனைத்து சந்தோஷத்தையும் ராம் பிரசாத் அவளுக்கு வழங்கினார். ரேஷ்மாவுக்கு என்று புது கார், நினைத்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் வரலாம். வீட்டில் இருந்த படியே தனக்கு பிடித்த பிஏ ஆங்கில லிட்ரேச்சர் படித்து சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றாள். டான்ஸ் க்ளாஸ், வுமன்ஸ் கிளப் என ரேஷ்மா ஒரு சுகந்திர பறவை போல பறந்து திரிந்தாள்.

அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த சமயம் திடிரென்று ராம் பிரசாத்தின் தந்தை மாரடைப்பில் மறைந்து விட அவரது இறப்பு ராமை மிகவும் பாதித்தது. அவரிடம் ஏற்பட்ட பாதிப்பு அவரது தொழிலிலும் மெல்ல மெல்ல பிரதிபலிக்க துவங்கியது.

ஆரம்பத்தில் பகட்டான வாழ்க்கையை ருசி பார்த்து பழகிய ரேஷ்மாவுக்கு போக போக கணவரின் தொழிலில் ஏற்பட்ட சறுக்கலும் பொருளாதார வீழ்ச்சியும் மிக பெரிய அதிருப்த்தியை கொடுத்தது.

போதாக்குறைக்கு தன் தந்தையின் மறைவுக்கு பிறகு தொழிலை கவனிக்காமல் குடிபோதைக்கு அடிமையான ராம் பிரசாத் மீது கடும் கோபம் கொண்ட ரேஷ்மாவுக்கு மீண்டும் வறுமையில் சிக்கிக்கொள்வோமோ என்கின்ற அச்சம் ஆட்டிப்படைத்தது.

குழந்தை பிறந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பிய ரேஷ்மா அடுத்த ஆண்டே தீரனை பெற்றெடுக்க அது ராம் பிரசாத்தின் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை ஒருகட்டத்திற்கு மேல் தன் நிலையில் இருந்து கீழ் இறங்கியவர் குறைந்த பட்ஜெட் படத்திற்கு இசை அமைக்க துவங்கினார்.

அதில் பெரிய வருமானம் வராததால் ரேஷ்மாவால் முன்பு போல ஆடம்பரமாக வாழ முடியவில்லை. அது ஒருபக்கம் மன உளைச்சலை கொடுக்க, ராம் பிரசாத்தும் தீரன் வளர வளர அவன் எதிர்காலத்திற்காக ஓட துவங்கியவர் மனைவியுடன் பெரிதாக நேரம் செலவழிக்காமல் போக, திருமண விடயத்தில் மிக பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று ரேஷ்மா என்னும் அளவிற்கு கணவரின் விலகல் அவரை மிகவும் பாதித்தது.

அப்பொழுது தீரனுக்கு ஒரு பத்து வயது இருக்கும். நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்னும் வரிசையில் இருந்த ராம் பிரசாத்தை பலரும் மறந்திருந்த சமயம் அது. ஒரு திரைப்படத்தின் வெற்றிவிழாவிற்கு அவருக்கும் அழைப்பு வந்திருக்க அவரும் ரேஷ்மாவுடன் அங்கே சென்றார்.

அந்த சந்திப்பு இருவரது வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ராம் பிரசாத் தன் நண்பரும் படத்தின் ஃபைனான்ஷியருமான சக்கரவர்த்தி ராத்தூருடன் பேசிக்கொண்டிருக்க தனிமையில் விட பட்ட ரேஷ்மாவின் அருகில் வந்த அந்த படத்தின் நாயகன் இந்தர், “ஹாய் ரேஷு எப்படி இருக்க?” என முகத்தில் சிறு வலியுடன் கேட்டான்.

“ஹே இந்தர் வாழ்த்துக்கள் உங்க படம் பார்த்தேன் அருமையா நடிச்சிருந்தீங்க!” மனத்தாரா பாராட்டினாள்.

“தேங்க் யூ” உற்சாகம் இல்லாமல் பதிலளித்தான் இந்தர்.

“உங்க வைஃப் இறந்ததுக்கு அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல அட்லீஸ்ட் ரஞ்சித்க்காகவாவது பண்ணிக்கலாமே‌.” என்ற ரேஷ்மாவை அடிபட்ட பார்வை பார்த்த இந்தர்.

“ம்ம்ம் என் மனசுக்கு புடிச்ச மாதிரி யாரும் கிடைக்கல.” என்றான்.

“ஓ” என்றவளுக்கு அவனிடம் அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாமல் போக அவள் அமைதியாக இருக்க,

“நீ எப்படி இருக்க?” என்று மீண்டும் கேட்டான்.

அவளோ மெல்லிய புன்னகையுடன், “எனக்கென்ன நான் நல்லா இருக்கேன்.” என்று சொல்ல, அவளையும் சக்கரவர்த்தியின் அரவணைப்பில்,

 “ரேஷ்மா டார்லிங்.” என போதையில் உளறிக்கொண்டு தள்ளாட்டத்துடன் நடந்து வந்த ராம் பிரசாத்தையும் ஒருகணம் இறுக்கமாக பார்த்த இந்தர்,

“ரொம்ப நல்லா இருக்க போல…” என பல்லை கடித்தவன். எதுவும் பேசாமல் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்து விட, ரேஷ்மா விரக்தியாக புன்னகைத்தாள்.

அடுத்த நாள் காலை ராம் பிரசாத்தின் வீட்டின் வெளியே தன் பிஎம்டபிள்யூ காரை நிறுத்தினான் இந்தர்.

போனை எடுத்து , “ஹாய் ரேஷ்மா இந்தர் பேசுறேன். உன் வீட்டுக்கு வெளியே இருந்து தான் பேசுறேன்.” என்றான்.

“ஓ… என்ன விஷயம்?” என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க.

“கொஞ்சம் பேசணும்.” என்றான்.

“ராம் வீட்ல இல்லை.” என்றாள்.

“தெரியும் நான் உன்னை பார்க்க தான் வந்திருக்கேன்.” என்றான். அவளுக்கு தயக்கம் தான் ஆனாலும் அவள் கதவை திறந்ததும், உள்ளே வந்தவன்,

“எப்படி இருக்க ரேஷ்மா?” என மீண்டும் கேட்டான். இந்த முறை குரல் உடையும் நிலையில் இருந்தது.

“நான் சந்தோஷமா தான் இருக்கேன் இந்தர்.” அவள் சொல்லி முடிக்கவில்லை,

“எனக்கு உண்மை வேண்டும்.” என்றவன்

“இதுக்காக தான் என்னை விட்டுட்டு இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டியா? உன்னை பாரு, நீ இப்படி வாழ வேண்டியவளா? உன் கனவு என்னாச்சு?”

“இந்தர் நான் நல்லா தான் இருக்கேன்.”

“ஆனா நான் சந்தோஷமா இல்லை ரேஷ்மா, உன்னை பார்த்ததுல இருந்து என் தூக்கமே போச்சு ஏன் என்னை விட்டுட்டு ராமை கல்யாணம் பண்ணிகிட்ட? முடியல ரேஷ்மா பத்து வருஷம் ஆச்சு இன்னும் என்னால உன்னை மறக்க முடியல, உன்னை மறக்கணும்ன்னே கல்யாணம் பண்ணினேன் அவளும் போய்ட்டா நானும் என் பையனும் தனியா இருக்கோம்”

“அதுக்கு தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க இந்தர்.”

“எனக்கு நீ வேணும் ரேஷ்மா, பணத்துக்காக தானே காதலிச்ச என்னை விட்டுவிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட இப்போ பாரு என்கிட்ட நிறைய பணம் இருக்கு, இன்னும் நான் சம்பாதிப்பேன் என்கிட்ட மறுபடியும் வந்திரு ரேஷ்மா.” கெஞ்சினான்.

“இந்தர் ப்ளீஸ் என்னை சங்கடப்படுத்தாதீங்க.”

“நீ இன்னும் என்னை காதலிக்கிறன்னு எனக்கு தெரியும் ரேஷ்மா.”

“வெளிய போங்க.” என்றாளே தவிர அவன் சொன்னதை அவள் மறுக்கவில்லை.

“சரி போறேன் யோசிச்சி பாரு என் மனசு உனக்கு புரியும்.” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட ரேஷ்மாவின் மனம் தான் சலன பட துவங்கியது.

ஆரம்பத்தில் இந்தர் தன்னிடம் நெருங்கும் பொழுதெல்லாம் கணவனையும் மகனையும் மனதில் வைத்து உறுதியாக அவரை தவிர்த்து வந்த ரேஷ்மாவால் முழுவதுமாக இந்தரை ஒதுக்க முடியவில்லை.

அதுவரை சின்ன சின்ன படங்களுக்கு மட்டும் இசையமைத்து கொண்டிருந்த ராமுக்கு சக்கரவர்த்தியின் தயாரிப்பில் உருவாக இருந்த  ஆல்பம் ஒன்றிற்கு  இசை அமைக்கும் வாய்ப்பு வர, அது ராம் பிரசாத்தின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு இந்தர் தானே தன் சொந்த தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அதுக்கு ராம் பிரசாத்தே இசையமைக்க வேண்டும் என்று அவனே அவரை தேடி வந்து நட்புக்கரம் நீட்ட, அவ்வளவு பெரிய நடிகர் தன்னை தேடி வந்து பேசியதில் நெகிழ்ந்து போன ராம் பிரசாத், இந்தரின் நோக்கம் புரியாமல் அவருடன் தொழில் தாண்டி நட்புடன் பழக ஆரம்பிக்க துவங்கினார்.

ராமை பார்க்கும் சாக்கில் அடிக்கடி அவர் வீட்டுக்கு வரும் இந்தரை ரேஷ்மாவால் தவிர்க்க முடியவில்லை. தவறான பேச்சு இல்லை என்றாலும் அவன் குரலில் இருக்கும் நெருக்கம் ரேஷ்மாவை பலமுறை சலன படுத்தியது.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத ரேஷ்மா ராம் இல்லாத நேரம் படம் விடயமாக வீட்டிற்கு வந்திருந்த இந்தரை வேண்டுமென்றே தவிர்க்கும் பொருட்டு பயங்கரமாக திட்டி அனுப்பிவிட்டாள்.

கிட்ட தட்ட ஒருவாரம் இந்தரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவன் அவளை தொடர்புகொள்ளவேயில்லை. அடிக்கடி ஏதாவது சாக்கு சொல்லி வீட்டுக்கு வருபவன் ஒருவாரம் அவளை எட்டி கூட பார்க்கவில்லை என்றதும் ரேஷ்மாவின் மனம் அவனை தேட துவங்கியது.

அப்பொழுது தான் அவளுக்கு ராம் பிரசாத் மூலமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை காட்சியின் பொழுது இந்தருக்கு விபத்து ஏற்பட்டது தெரியவர மிகவும் துடித்து போனாள். ராமுடன் இந்தரை காண சென்ற ரேஷ்மா அன்று இந்தரின் நிலை கண்டு துடித்த தன் மனதை தன் கணவன் முன்பு காட்டிக்கொள்ளாமல் இருக்க பெரும் பாடு பட்டார்.

அன்று கணவனுடன் சென்றவள் மறுநாள் கணவனுக்கு தெரியாமல் இந்தரை காண சென்றாள். இருவரும் பலவருடம் கழித்து மனம் விட்டு பேசினார்கள். அவளே அவனை பார்த்து கொண்டாள். அவனை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள்.

அந்த நேரம், தான் ஒருவனுக்கு மனைவி பத்து வயது மகனுக்கு தாய் என்பதை வசதியாக மறந்து போன ரேஷிமாவின் மனமும் வாழ்க்கையும் அந்த இடத்தில் இருந்து தடம் மாறி ஓட துவங்கியது.

இந்தர் ரேஷ்மாவின் அந்தரங்க காதல் லீலைகள் ராமின் கண்களை தப்பி நடந்து கொண்டு இருக்க, ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் இனி பிரிந்து வாழ முடியாது என்கின்ற அளவுக்கு இருவரும் நெருங்கமான சமயம் ரேஷ்மாவின் கர்பம் இந்தர் மற்றும் ரேஷ்மா இருவரின் உறவில் பெரிய பூகம்பத்தையே கிளப்பியது.

இந்தரால் ரேஷ்மாவின் வயிற்றில் வளரும் ராம் பிரசாத்தின் வாரிசை ஏற்று கொள்ளவே முடியவில்லை. உடனே அந்த கருவை அவன் அழிக்க சொல்லி உத்தரவிட, முதலில் தயக்கம் கொண்ட ரேஷ்மா இந்தரின் வற்புறுத்துதலால் ராமுக்கு தெரியாமல் இந்தரின் மறைமுக உதவியால் தன் கருவை கலைத்தாள்.

ஆனால், இந்தர் அதோடு நிறுத்தவில்லை சீக்கிரமே ராமிடம் விவாகரத்து பற்றி பேச சொல்ல ரேஷ்மா தான் மிகவும் குழம்பினாள். அவருக்கு ராம் மீது பெரிய காதல் எல்லாம் இல்லை என்பதால் அவரை பிரிவது அவருக்கு பெரிய விடயமாக தெரியவில்லை. ஆனால் தீரன் அவன் மனநிலை எப்படி இருக்கும் அவனை காயப்படுத்தாமல் இந்த திருமண பந்தத்தில் இருந்து வெளி வர வேண்டும் என்று தான் ரேஷ்மா மிகவும் கவலைப்பட்டார்.

ஆனால் இந்தர் அதையெல்லாம் ஏற்கவே இல்லை. விவாகரத்து விடயத்தில் அவன் உறுதியாக இருக்க, இந்தரை விடமுடியாது என்பதில் தீர்க்கமாக இருந்த ரேஷ்மாவும் சீக்கிரம் இது குறித்து ராமிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அப்படியான சமயத்தில் தான், வெளியூரில் நடந்து வந்த ஒரு இசை விழாவிற்கு மூன்று நாள் பயணமாக ராம் பிரசாத் அங்கே செல்லவேண்டியிருக்க, ரேஷ்மாவுடன் தனிமை எப்பொழுது கிடைக்கும் என்று ஆவலாக எதிர்பார்த்திருந்த இந்தருக்கு ராமின் பயணம் வசதியாக அமைந்துவிட, இந்தரும் ராமின் வீட்டிலேயே தங்க இருவரும் எந்த வித தடையும் இன்றி தங்களின் காதல் லீலைகளை நிம்மதியாக அரங்கேற்றி கொண்டிருந்த சமயம்,

எதிர்பாராத விதமாக தீரனின் வருகை இந்தருக்கு ஏமாற்றாத்தை கொடுக்க, அவன் முன்பு தன் வீட்டிற்கு செல்வது போல சென்றவன் அன்று இரவு மீண்டும் ரேஷ்மாவை சந்திக்க வர, பிடிவாதமாக உள்ளே வந்தே தீருவேன் என்று நிற்கும் இந்தரை சமாளிக்க முடியாமல் ரேஷ்மாவும் அவனை அனுமதிக்க, அவர்கள் அரங்கேற்றிய அந்தரங்கத்தை தீரன் பார்க்க நேரிட மகன் முன்பு இப்படி ஆகிவிட்டதே என்று இப்பொழுது ரேஷ்மா தான் அவமானத்தில் கூனி குறுகிப்போனார்.

ராம் பிரசாத்தின் செல்வாக்கு மற்றும் திருமணத்திற்கு முன்பு தன் குடும்பத்தின் தரத்தை உயர்த்துவேன் என அவர் கொடுத்த வாக்கு இந்த இரண்டிற்காகவும் தன் காதலை கொன்று மனதை கல்லாகிக்கொண்டு இதயத்தில் துளியளவு கூட காதல் இல்லாது ராமை திருமணம் செய்து கொண்ட ரேஷ்மாவுக்கு திருமண வாழ்க்கை ஒன்றும் அவர் கற்பனை செய்துகொண்டது போல் அமையவில்லை.

ஆம் கொடுத்த வாக்கின் படி ரேஷ்மாவின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை ராம் பிரசாத் செய்தார் தான். ஆனால், துரதிஷட்டவசமாக ஏற்பட்ட அவரது தந்தையின் மரணம் ராமின் மொத்த வாழ்க்கையையும் நிலைகுலைய செய்ய, அவரது செல்வாக்கும் அவர் செல்வமும் கொஞ்சம் கொஞ்சமாக உரு தெரியாமல் அழிந்து போக அதனுடன் ரேஷ்மாவின் கனவுகளும் சேர்ந்து அழிந்து போனது தான் நிஜம்.

ரேஷ்மா இனி என்ன நடக்கும் என்பதை எண்ணி கவலையில் இருக்க, தீரனோ அழுகையில் கரைந்தபடி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.

மறுநாள் காலை உணவு உண்ண அவனது தாய் எவ்வளவோ அழைத்தும் ஒரு வார்த்தை கூட பேசாமல், பச்சை தண்ணீர் கூட பல்லில் படாமல் இறுக்கமாக அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த தீரன் மதியம் உணவுக்கும் வெளியே வரவில்லை.

ம்யுசிகள் ஃபங்ஷனிர்காக வெளியூர் சென்றிருந்த அவனது தந்தை ராம்பிரசாத் காலையில் வர வேண்டியவர் ஃபிளைட் தாமதம் காரணாமாக சாயங்காலம் வீட்டிற்கு வர, தீரன் அப்பொழுதும் அறைக்குள்ளேயே முடங்கி இருக்க, ரேஷ்மாவுக்கு தான் பதற்றமாகவே இருந்தது. மகனின் இந்த நடவடிக்கையில் குழம்பியவர் அதை பற்றி மனைவியிடம் வினவினார்.

“என்னாச்சு மா ஸ்கூல்ல ஏதும் பிரச்சனையா?”‌ என கேட்டார் ராம்.

“தெரியல ஆனா ரூம்லையே இருக்கான்.” தடுமாற்றத்துடன் ரேஷ்மா பதில் கூறினார்.

“தீரன்” ஹாலில் அமர்ந்திருந்தவர் மகனை அழைத்தார். அவன் அப்பொழுதும் அறையை விட்டு வெளி வராமல் இருக்க, யோசனையுடன் மனைவியை பார்த்தவர்,

“உன்கிட்ட எப்படி பேசினான்?” மனைவி நீட்டிய காஃபியை வாங்கியபடி வினவினார்.

“நல்லா தான் இருந்தான்.” என்ற ரேஷ்மாவுக்கு அதற்கு மேல் வார்த்தை வராமல் இருக்க, சிந்தனையுடன் மகனின் அறையை பார்த்தவர் மனைவி கொடுத்த காஃபியை அப்படியே டேபிளில் வைத்துவிட்டு கரங்களை பிசைந்தபடி நின்றிருந்த மனைவியை ஒருகணம் பார்த்தவர் மகனை காண அவன் அறைக்குள் செல்ல,ரேஷ்மாவுக்கு பதற்றமாகவே இருந்தது.

அப்படியே தலைகவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்த தீரன் தன் தந்தை வந்தது தெரிந்தும் அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் அப்படியே அமர்ந்திருக்க, உடைந்த கண்ணாடி துண்டுகள், ஆங்காங்கே கசங்கிய நிலையில் கிடந்த புகைப்படங்கள் உடைந்த நிலையில் கிடந்த தொலைக்காட்சி பெட்டி சிதறி கிடந்த புத்தங்கள் என அலங்கோலமாக கிடந்த அறையை கவனித்தபடி தீரனின் அருகே வந்து அமர்ந்த ராம் பிரசாத்,

 “தீரன்” என மென்மையாக அழைத்து அவனது தலையை கோதிய மறுநொடி தீரன் தன் தந்தையை இறுக்கமாக அணைத்து தேம்பி தேம்பி அழ துவங்கினான்.

சில நிமிடங்கள் கழித்து மகனின் அறையை விட்டு கரங்கள் நடுங்க, தளர்ந்த நடையுடன் வெளியே வந்த ராமால் நிலைகொள்ளவே முடியவில்லை. கோபம் ஆதங்கம் என உணர்ச்சிக்குவியலில் மாட்டிக்கொண்டவரின் உடல் வியர்வையில் குளித்திருக்க, நடு காலில் வந்து நின்றபடி மனைவியின் பெயரை சொல்லி ராம் பிரசாத் கத்தினார்.

சில நொடிகளில் வீட்டில் பூகம்பமே வெடித்தது, கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிவிட,  வீடே தலைகீழாக மாறியது.

கோபத்தில் ராம் பிரசாத் மனைவியை அடித்துவிட, எதிர்ப்பாராத நேரத்தில் விழுந்த முதல் அடியை வாங்கி கொண்ட ரேஷ்மா அடுத்த அடி அடிக்க ராம் கை ஓங்கியதும் கரத்தை தட்டிவிட்டவர், பதிலுக்கு கத்திவிட,

“தப்பு செஞ்சிட்டு உனக்கு கோபம் வேற வருதா?” பதிலுக்கு கத்தினார்.

“ஆமா தப்பு தான் இப்போ என்ன அதுக்கு?” ரேஷ்மாவிடமிருந்து திமிராக பதில் வந்தது.

“நமக்கு பையன் இருக்கான் ரேஷ்மா அவனை பத்தி யோசி. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம பேசுற.” தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் ‘ஆமா இப்போ என்ன அதுக்கு’ என கேட்பவளிடம் என்னவென்று கோபம் கொள்ள என்று எண்ணியவர் கோபத்தை கைவிட்டு பொறுமையாக பேசினார்.

“அதுக்கு, எனக்கு வெறும் முப்பத்தைஞ்சு வயசு தான் ராம் , எனக்கு புடிச்ச மாதிரி வாழணும்ன்னு எனக்கு ஆசை இருக்காது?”

“இப்போ உனக்கு என்ன குறை?”

“எல்லாமே” எரிச்சலுடன் கத்தினாள்.

“புரியல?”

“உங்களுக்கு புரியவைக்க எனக்கு விருப்பம் இல்லை. ஐ நீட் டிவோர்ஸ்.” முகத்தை அழுத்தமாக துடைத்தபடி கூறினாள்.

“டிவோர்ஸ் ஆர் யு மேட்? நமக்கு பன்னிரண்டு வயசுல பையன் இருக்கான். இப்போ போய் இப்படி பேசுற, சி எல்லாத்தையும் மறந்திறலாம். புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் நமக்கு இருந்த ஃபைனான்சியல் பிரச்சனையும் தீர்ந்திருச்சு நாம பழைய மாதிரி சந்தோஷமா வாழலாம்.” மனைவி தவறு செய்தாலும் அவரை பிரிந்துவாழ அவருக்கு ஏனோ விருப்பம் இல்லை.

“என்னால உங்க கூட வாழ முடியாது ராம், நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே என் வாழ்க்கை இந்தர் கூட தான்.” உறுதியாக கூறினாள். ராமால் ஒருவார்த்தை பேச முடியவில்லை இதயம் கனத்தது.

“ஒரு குழந்தைக்கு அம்மா நீ”

“அதையே சொல்லாதீங்க.”

“நம்ம காதலை நீ எப்படி மறந்த?”

“நான் எப்பவுமே உங்களை லவ் பண்னினது இல்லை ராம், அந்த நேரம் என் சூழ்நிலை உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மத்தபடி உருகி காதலிச்சு ஒன்னும் உங்க கூட தான் வாழல. இதுக்கு மேல புடிக்காத வாழ்க்கையை என்னால வாழ முடியாது ராம். இனிமே என்னால இந்த சிக் லைஃபை சகிச்சிக்க முடியாது. ஐ நீட் டிவோர்ஸ். மிச்சம் உள்ள வாழ்க்கையை நான் நேசிக்கிறவர் கூட வாழ விரும்புறேன்.”

” நான் சொல்ல வார்த்தை ஏன்  புரிஞ்சிக்க மாட்டிக்கிற?” பொறுமையிழந்த ராம் பிரசாத் சீற,

“உங்க கூட வாழ்ந்த வாழ்க்கை எனக்கு மூச்சு முட்டுது ராம். அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க? “பதிலும் அவருக்கு கத்தினார் .

“அப்போ நம்ம கல்யாணத்துக்கு மதிப்பே இல்லையா ?”

“ப்ளீஸ் ஒரு தாலி கட்டிட்டு என் உயிரை வாங்காதீங்க.” என்றவள்,

 “இது தானே உங்க பிரச்சனை?” என தன் தாலியை எடுத்து காட்டி ராம் தடுப்பதற்குள் தன் கழுத்தில் ராம் கட்டிய தாலியை கழுத்துவழியாக கழற்றியவள் அதை அவரது முகத்தில் ஆக்ரோஷமாக வீசி விட்டு விறுவிறுவென மாடிக்கு சென்றுவிட, ரேஷ்மா தாலியை கழற்றி வீசியதில் மொத்தமாக உடைந்து போன ராம் பிரசாதால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

நம்பிய நண்பனும் நேசித்த மனைவியும் செய்த துரோகம் அவரை வெகுவாய் பாதித்தது. திக்பிரம்மை பிடித்தது போல இருந்தவர் வலியை மறக்க போதையை நாடினார்.

இதை அனைத்தையும் தன் அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த தீரன் தான் அந்த சிறுவயதிலே மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டான். 

மனைவியின் வார்த்தைகளில் மிகவும் காயப்பட்டு போன ராமால் அவ்வளவு சீக்கிரமாக அதில் இருந்து வெளி வர முடியவில்லை. உலகத்தையே வெறுத்தவர் ,பழையதை சிந்தித்தபடி அமர்ந்திருந்தார் .

தஞ்சாவூர் மாவட்டம் சிங்கவன ஜமீன் கோகுலப்ரதாப் மற்றும் மீனாவதி தம்பதியருக்கு ஒரே மகனாய் பிறந்தவர் தான் தீரனின் தந்தை ராம் பிரசாத். பிறக்கும் பொழுதே தாயை இழந்தவரை கோகுலப்ரதாப் தான் தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் வளர்த்தார்.

முன்னோர்களின் ஆடம்பர ஒழுக்கமற்ற வீண் செலவுகளால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்வ செழிப்பு இல்லாவிட்டாலும் பதின்வயதில் இருந்தே ராம் தனது குடும்ப பாரம்பரியத்தை உணர்ந்து அதன்படி பொறுப்போடு நடந்து ஒழுக்கத்தையும் கடைபிடித்தார்.

சிறு வயதில் இருந்தே இசை மீது அதீத நாட்டம் கொண்ட ராம் பிரசாத் பள்ளி படிப்பிலும் சிறந்து விளங்கியவர் பள்ளி தேர்வில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஏனோ அவருக்கு இசையின் மேல் இருந்த பிரியம் அவரை அது சார்ந்த துறையின் பக்கமே ஈர்க்க, தன் தந்தையிடம் அதை பற்றி கூறினார்.

கோகுலப்ரதாப்க்கு பெரிதாக அதில் விருப்பம் இல்லாவிட்டாலும் ஒரே மகனின் ஆசைக்கு தடை விதிக்காதவர் மகனின் எண்ணத்திற்கு பச்சை கொடி காட்ட, டெல்லி ஸ்கூல் ஆஃப் ம்யுசிக் சொசைட்டியில் தன் இசை பயணத்தை தொடர்ந்த ராம். படி படியாக இசை துறையில் முன்னேறினார்.

பாலிவுட்டில் கால்பதித்து ஓரளவு சம்பாதிக்க துவங்கியதும் டெல்லியில் தந்தையின் பெயரில் மாளிகை போன்ற வீட்டை கட்டிய ராம் தந்தையுடன் டெல்லியில் குடி புகுந்தார்.

ஆரம்பத்தில் தங்களின் பூர்வீகத்தை விட்டுவிட்டு அந்நிய ஊரில் வசிப்பதில் மிகவும் சங்கடப்பட்ட கோகுலப்ரதாப் நாளடைவில் மகனின் வளர்ச்சியை பார்த்த பூரிப்பில் டெல்லி வாழ்க்கைக்கு மகனுக்காக பழகிக்கொண்டார்.

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த சமயம் தன் மகனுக்கு தங்களின் பூர்வீக ஊரிலே தன் சொந்த பந்தத்தில் உள்ள காயத்ரி என்னும் பெண்ணை மணமுடிக்கலாம், மகன் தன் விருப்பத்தை மறுக்கமாட்டான் என்று எண்ணியவர் அதை குறித்து ராமிடம் பேசாமலே தன் உறவுக்காரரிடம் பேசி வரும் கோவில் திருவிழாவுக்கு பரிசம் போடலாம் என வாக்கு கொடுத்துவிட,

இந்த செய்தி ராமின் காதை எட்டியபொழுது குடும்பத்தில் பெரிய பிரச்சனை நடந்தது. டெல்லி வாழ் இந்திய பெண் மற்றும் தனது பெர்சனல் அஸ்சிஸ்டன்டுமான ரேஷ்மாவை ஒருதலையாக காதலித்து வந்த ராமால் தந்தை பார்த்த பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இனியும் தாமதித்தால் சரிவராது என்பதை உணர்ந்த ராம், எடுத்து கூறினால் எப்படியும் தந்தை தன் விருப்பத்திற்கு தடை கூற மாட்டார் என்று நம்பிக்கை கொண்ட ராம், மறுநாளே ரேஷ்மாவிடம் தன் விருப்பத்தை கூறினார்.

அவளும் மறுநாளே சம்மதம் தெரிவிக்க உடனே அவளை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு வந்த ராம் தன் காதல் விவகாரத்தை கூறி ரேஷ்மாவை அறிமுகப்படுத்த, அதிர்ச்சியடைந்த கோகுலப்ரதாப் சிறிதும் யோசிக்காமல் உடனே மறுத்துவிட்டார்.

தமிழ் பாரம்பரியத்தில் ஊறி போன கோகுலப்பிரதாப்பிற்கு வேறு இனத்து பெண்ணான ரேஷ்மாவை தன் குலத்திற்கு மருமகளாக ஏற்க மனம் வரவில்லை. மொத்தத்தில் ஏனோ ரேஷ்மாவை அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை மகனிடமும் தெளிவாக கூற இதை எதிர்ப்பார்க்காத ராம் மிகவும் மனம் உடைந்து போக,

அங்கே தான் தந்தை மகனுக்கிடையே முதல் விரிசல் விழுந்தது.

கோகுலப்ரதாப் தன் முடிவில் வீம்பாக இருக்க, இறுதியில் ராமின் பிடிவாதம் வெல்ல, வழக்கம் போல தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மகனின் மகிழ்ச்சிக்காக திருமணத்திற்கு சம்மதித்த கோகுலப்ரதாப் மனதளவில் மிகவும் உடைந்து போனார்.

என்னதான் திருமணம் அவர்களின் குடும்ப வழக்கப்படி சொந்த ஊரிலே உள்ள சிவன் பார்வதி சந்நிதானத்தில் நடந்தாலும் மகன் தன் விருப்பத்திற்கு மதிப்பளிக்கவில்லையே என்று மனதளவில் மருகியவர், அவர்களின் திருமணத்திற்கு பின் டெல்லிக்கு இனி வருவதில்லை என்று தீர்க்கமாக கூறி தஞ்சாவூரிலே தஞ்சமடைய, தந்தையின் முடிவு ராமுக்கு வேதனையாக  இருந்தது.

ஓரளவுக்கு மேல் அவராலும் தன் தந்தையின் முடிவை மாற்ற முடியவில்லை. ஆகவே, வருடத்திற்கு இரெண்டு, மூன்று முறை தஞ்சாவூர் சென்று தந்தையை பார்த்து விட்டு வருவார். எப்படியும் பேரன் பேத்தி பிறந்தால் தந்தையின் மனம் மாறும் என்ற நம்பிக்கையில் இருந்த ராமின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக அலைபேசியில் வந்த கோகுலப்ரதாபின் திடீர் மரண செய்தி அவரை நிலை குலைய செய்தது.

எப்படியும் தந்தை மனம் மாறி தன்னுடன் வந்துவிடுவார் அவருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற கற்பனையில் இருந்த ராமிற்கு தந்தையின் மரணம் பேரிடியாக அமைந்தது. தந்தையின் இறப்பை ஏற்க முடியாமல் தவித்தவர் அவரது இறுதி சடங்கை தங்களின் வழக்கப்படி முடித்துவிட்டு தந்தையே போன பிறகு அவரது சொத்தை ஏற்க மறுத்தவர், தங்களின் பூர்வீக சொத்தையும் தந்தை வாழ்ந்த வீட்டையும் தங்களது முன்னோர்கள் கட்டிய கோவிலுக்கே ஒப்படைத்தவர் அதன் பிறகு தஞ்சாவூர் பக்கம் போகவே இல்லை.

சொல்ல போனால் அவருக்கு அங்கு செல்ல தைரியம் இல்லை. இறுதி வரை தந்தைக்காக தான் எதுவும் செய்ய வில்லையே என வேதனை அடைந்தார். தன்னால் தான் தந்தை இறந்துவிட்டார் என மிகவும் துயருற்ற ராம் அதை மறக்கவே குடிக்க துவங்கினார்.

வருடம் கழித்து அக்னியின் பிறப்பு அவரை ஓரளவு தேற்றியிருந்தாலும் தந்தையின் இழப்பு ராமின் ஆழ்மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பிரதிபலிப்பு, அவரது தொழில் அடிவாங்க துவங்க நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்த ராம், படிப்படியாக நலிய துவங்கினார்.

அப்படியான நேரத்தில் தான், திரைப்பட வெற்றி விழாவில் எதிர்பாராத விதமாக அவரது நெருங்கிய நண்பரும்  ஃபைனான்ஷியருமான சக்கரவர்த்தி ராத்தூரை சந்திக்க நேரிட, ஒருகாலத்தில் கம்பீரமாக இருந்த ராமின் தற்போதைய நிலையை கண்டு கவலை கொண்ட சக்கரவர்த்தி ராம் பிரசாத்திற்கு உதவ தானே முன்வந்தார் ஆனால் ராமோ,

“வேண்டாம் சக்கரா.” என திட்டமாக மறுத்துவிட,

“உண்மையாவே என்ன உன் நண்பனா நினைச்சா நீ இதை செஞ்சி தான் ஆகணும். ஒருகாலத்துல சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் எப்படி  இருந்தேன். அப்போ நீ மட்டும் எனக்கு உதவி செஞ்சி என்னை வழிநடத்தலைன்னா நான் எப்படியோ இருந்திருப்பேன். இப்போ நான் வாழ்ந்துட்டு இருக்கிற வாழ்க்கை ஒருகாலத்துல நீ எனக்கு கொடுத்தது. அப்போ நீ செஞ்ச உதவியை நான் ஏத்துக்கிட்டேன் . இப்போ நீ மட்டும் ஏன் என்னை பிரிச்சு பாக்குற. இவ்வளவு பிரச்சனை சந்திச்சிருக்க என் நியாபகம் உனக்கு இல்லைல இப்போ மட்டும் உன்னை இந்த பார்ட்டிக்கு கூப்பிடலைனா அப்படியே இருந்திருப்ப.அப்பாவோட இறப்புனால மியூசிக்ல நீ விருப்பம் காட்டலைன்னு நான் நினைச்சேன் ஆனா இப்படி பணத்துக்கு கஷ்ட படுவன்னு நான் நினைக்கவே இல்லை ராம் . நீ நான் சொல்றதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் ” என்று விடாப்பிடியாக நின்ற சக்கரவர்த்தி,

அதன்படி தான் பணம் முதலீடு செய்து ஒரு பத்து பாடல்கள் கொண்ட ஆல்பம் ஒன்றை ராம் பிரசாத்தையே வைத்து தயாரிக்க அது இளசுகள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற ராம் பிரசாத்துக்கு அதன் பிறகு நிறைய திரைப்பட வாய்ப்புகள் குவிய துவங்கியது. மீண்டும் பாலிவுட்டில் தான் விட்ட தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டவர் நேரம் காலம் இன்றி தன் குடும்பத்திற்காக ஓட துவங்கினார்.

வார்த்தைகளுக்கு வர்ணம்பூசி இந்தர் காட்டிய ஸ்நேகத்தை உண்மை என்று நம்பி அவன் எண்ணம் தெரியாமல் அவரை நண்பனாக எண்ணி தன் வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் அதுவே அவர் வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிட, தனது ம்யுசிகள் அறையில் மதுபானத்துடன் அமர்ந்திருந்தவர் தன் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார்.

தந்தையின் கண்ணீரை கண்ட தீரனின் மனம் வெதும்பியது. தந்தையை அந்த நிலையில் காண முடியாமல் மிகவும் தவித்தான்.

தந்தைக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் அறையின் வாசலிலே தந்தைக்காக தவம் கிடந்தவன் ஒருகட்டத்துக்கு மேல் முடியாமல் மெதுவாக தன் தந்தையை காண அறைக்குள் நுழைந்தான்.

வெள்ளை பியானோ மேல் தலை சாய்த்து படுத்திருந்தார் . கண்களில் இருந்து ஈரம் மட்டும் கசிந்து கொண்டே இருந்தது. அருகில் செல்ல தயங்கியபடி வாசலிலே நின்றான். மகனின் வருகையை அவர் உணர்ந்திருந்தாரோ என்னவோ சட்டென்று நிமிர்ந்து பார்த்தார் .அழுதழுது வீங்கிய முகத்துடன் நின்றிருந்தான்.

‘வா’ என தன் கரம் அசைத்து தன் அருகே வருமாறு அழைத்தார் ராம் பிரசாத்.

தேம்பலுடன் அருகே சென்றான்‌. சில நொடிகள் மகனின் முகத்தை பார்த்தவரால் அதற்கு மேல் முடியாமல் போக மகனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு ராம் பிரசாத் அழுது தீர்த்துவிட , தந்தையின் கண்ணீரை பார்த்த தீரனும் அவருடன் சேர்ந்து அழுதான். நேரம் போவதே தெரியாமல் மகனை அணைத்தபடி வெகு நேரமாக இருந்த ராம் பிரசாத்.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தீரனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தவர் தன் முகத்தை அழுத்தமாக துடைத்துவிட்டு பியானோ மீது ரேஷ்மா தூக்கியெறிந்த மாங்கல்யத்தை பார்த்து அதை கையில் எடுத்தவர், மனம் பாறாங்கல்லாய் கனக்க நிமிர்ந்து தீரனின் கண்களை பார்த்தார்.

ஒருவித பரிதவிப்புடன் தன்னை பார்த்து கொண்டிருந்த மகனின் பரிதாபமான விழிகள் அவர் மனதை அசைத்தது‌ . ஒருகணம் தன் கண்களை மூடி திறந்தவர், அவனது கரங்களை மென்மையாக வருடியபடி இறுக்கமாக பிடித்து கொண்டவர்,

“தீரா இது நம்ம பரம்பரையோட அடையாளம்.” என்றபடி மாங்கல்யத்தை அவனது கரத்தில் கொடுத்தவர்,

“நான் என் அப்பாவையும் காப்பாத்தல, நம்ம பரம்பரையோட அடையாளத்தையும் காப்பாத்தல. தீரா வாழ்க்கையில எந்த முடிவையும் நீ தயங்காமல் எடுக்கலாம் ஆனா கல்யாணம் மட்டும் அப்படி கிடையாது. திருமண விஷயத்துல மட்டும் என்னைக்கும் அவசர பட கூடாது நிறுத்தி நிதானமா யோசிச்சு முடிவெடுக்கணும். எந்த பொண்ணை பார்த்தா உன் மனசு துடிக்குதோ, எந்த பொண்ணு உன்னை விட, உன் பணத்தை விட, உன் மனசை நேசிக்கிறாளோ, எந்த பொண்ணு நீ எந்த நிலையில இருந்தாலும் உன்னை அப்படியே ஏத்துகிறாளோ, எந்த பொண்ணை பார்த்தா அவ இல்லாம உன்னால வாழ முடியாதுன்னு தோணுதோ, அவ தான் உனக்கானவ, அப்படி ஒருத்திய பார்க்கும் பொழுது அவ கிட்ட உன் மனசோட சேர்த்து இதையும் குடு, அவ இன்பத்திலையும் துன்பத்திலையும் உன் கூடவே இருப்பா, எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் உன்னை விட்டு எப்பொழுதும் போக மாட்டாள்.” என்று இன்னும் பல அறிவுரைகளை கூறிய தந்தையை விழிவிரித்து பார்த்து கொண்டிருந்த தீரன்,

” இப்போ ஏன் பா இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க?” என கேட்க,

விரக்தியாக சிரித்தவர்

“எல்லாத்துக்குமே காரணம் இருக்கு தீரா, எப்பொழுதும் தைரியத்தோடையும் தன்னம்பிக்கையோடையும் இருக்கணும்.” என்றவரிடம் ஆமோதிப்பதாக தலையசைத்தவன் அறியவில்லை, இதுவே அவன் தந்தை அவனுடன் இருக்கும் இறுதி தருணங்கள் என்று.

நேரம் கடந்தது மகனுடன் நிறைய பேசினார் அவனுக்கு பிடித்த பாடல்களை பாடினார், அவனும் பாடினான் அவர் மீட்டிய இசையும் அவரது குரலில் இருந்த அழுத்தமும் என்றுமில்லாமல் அவன் மனதை மிகவும் ஆழமாக தொட்டது கண் மூடி ரசித்தான்.

தீரனின் கண்கள் காரணமே இல்லாமல் கசிந்து கொண்டிருக்க, அடுத்த நொடியே தீரன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்த தீரனின் உடல் நடுங்கியது. அகல விரிந்த விழிகள் சிவந்திருக்க,

“அப்பா…” என்று தன் கன்னம் அதிர, அவன் கதறி துடித்ததில் அவனுடைய துக்கம் வெளிப்பட்டது.

கண்ணாடி பெட்டிக்குள் மலர் மாலைகளுக்கு நடுவே ராம் பிரசாத் ஆழ்ந்த நித்திரையில் கிடந்தார். ராம் பிரசாத்தின் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏன் ரேஷ்மாவே இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை. அவள் கண்கள் கூட கசிந்தது.

அவரது இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அயப்படுத்தப்பட்டிருக்க, தீரனால் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே முடியவில்லை மிகவும் அழுத்தமாக காணப்பட்டான். அவனது கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை அந்த அளவுக்கு இறுக்கமாக இருந்தான். சக்கரவர்த்திக்கே ஆச்சரியமாக இருந்தது.

“கடைசியா வந்து உன் அப்பா முகத்தை பாருபா.” சக்கரவர்த்தி ராத்தூர் தான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவனை கரம் பிடித்து அழைத்து வந்தார். உணர்வே இல்லாமல் அவரது இழுப்பிற்கு இசைந்தபடி சென்றான்.

கண்ணாடி பெட்டியை நெருங்க நெருங்க அவனது கால்கள் வலுவிழந்து துவண்டது. நெஞ்சுக்குழிக்குள் ஒருவித அழுத்தம் பிறந்தது. ஏதோ ஒன்று அவன் தொண்டையை அழுத்தி பிடித்தது , மூச்சு முட்டிக்கொண்டு வர, இப்பொழுது அவன் கண்கள் கரித்து கொண்டு வந்தது. கண்ணாடி பெட்டியை நெருங்கினான். ராம் பிரசாத் நீண்ட நித்திரையில் கண்மூடி படுத்திருந்தார். அவன் இதயம் வேகமாக துடித்தது.

“ஏன் பா? ஏன் பா? ஏன் இப்படி செஞ்ச?” ஓங்கி ஒலித்த அவனது ஓலத்தை கண்டு அனைவரின் நெஞ்சமும் அவனுக்காக துடித்தது. கண்ணாடி பெட்டியின் மீது விழுந்தபடி துடித்து கதறினான்.

“எனக்காக வாழ்ந்திருக்கலாமே எனக்காக வாழ்திருக்கலாமே இப்படி விட்டுட்டு போய்ட்டியே” திரும்ப திரும்ப கதறினான். சக்ரவர்த்தி தான் அவனை அணைத்து பிடிக்க முயற்ச்சித்தார், ஆனால் முடியவில்லை.

“எல்லாம் அவளால தானே? எல்லாம் அவளால தானே?” கண்ணாடி பெட்டியில் தன் தலை வைத்து முட்டியபடி கதறியவனின் பார்வை ரேஷ்மாவை தேடியது. அந்த நொடி அவன் பார்வையில் தெரிந்த ஆக்ரோஷம் கண்டு சக்கரவர்த்தியே அதிர்ந்து விட ரேஷ்மா நடுங்கியே விட்டார். அதை பார்த்த யாரும் அவனை சிறுவன் என்று சொல்ல மாட்டார்கள் அப்படியொரு அசுர பார்வை அது.

கண்கள் பளபளக்க ரேஷ்மாவை நோக்கி சீறி பாய்ந்தவன் கண் இமைக்கும் நொடியில் அவர் தன் தாய் என்பதை மறந்து அவரது கழுத்தை இறுக்கமாக பிடிக்க ரேஷ்மா சுவாசத்திற்காக ஏங்கினார், இதை கண்டு ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்த சக்கரவர்த்தி ஓடி போய் அவனை பிடிக்க முயல அதற்குள் இந்தர் தீரனை பிடித்து இழுக்க அவனை தள்ளிவிட்டு ஆவேசமாக ரேஷ்மாவிடம் பாய்ந்தவன் கண்ணிமைக்கும் நொடியில் அருகில் இருந்த டைனிங் டேபிள் நாற்காலியால் தன் தாயின் தலையை தாக்கினான்.

ரேஷ்மா ரெத்த வெள்ளத்தில் தரையில் விழவும் சக்கரவத்தி மற்றும் சில ஆண்கள் ஓடி வந்து அவனை பிடிக்க முயற்சிக்க புயலுக்கு அணைகட்ட இயலுமோ என்கின்ற நிலையில் அனைவரின் முயற்சியும் தோல்வியில் முடிய, கொஞ்சமும் யோசிக்காமல் அவன் பழம் வெட்டும் கத்தியை தன் கையில் எடுக்கவும் பதறிய இந்தர் அவன் கரத்தில் இருந்த கத்தியை பறிப்பதற்காக மீண்டும் ஓடி வந்து தீரனை பிடித்துக்கொள்ள,

பயங்கர ஆக்ரோஷமான சத்தத்துடன் அவரை பிடித்து மிக வேகமாக தள்ளிவிட்டவனின் கரத்தில் இருந்த கத்தி ரேஷ்மாவை நோக்கி பாய , அந்த இடமே ரெத்த வெள்ளமாக, “ஐயோ கடவுளே” என பலவிதமான குரல்கள் ஓங்கி ஒலிக்க, உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் நிதானமாக தாயின் சடலத்தின் அருகே  தரையில் மண்டியிட்டு அமர்ந்த தீரனின்  விழிகளில் நீர் வற்றி போயிருந்தது.

உணர்வுகள் மறித்து போயிருந்த கண்களில் மறந்தும் கூட கண்ணீர் இல்லை .அவ்வளவு அழுத்தமாக காணப்பட்டான் . பன்னிரண்டு வயது சிறுவனுக்கு அத்தனை பேரையும் எதிர்த்து இப்படி ஒரு கொடூரமான காரியம் செய்ய எப்படி முடிந்தது? என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் .சக்கரவர்த்திக்கு தீரனை எவ்வாறு கையாள்வதென்றே புரியவில்லை , அவர் அறிந்த வரை தீரன் மென்மையான பொறுப்பான சிறுவன் .ஆனால் இன்று அவன் ஆடிய ருத்ரதாண்டவம் , பைனான்ஸ் உலகில் ஜாம்பவானான சக்ரவர்த்தியையே உறைய வைத்தது . சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்தியவர் வேகமாக வந்து தீரனை அணைத்து பிடிக்க அவனோ உடல் தளர அப்படியே சக்கரவர்த்தியின் கரங்களில் மயங்கி சரிந்தான் .

அன்பு, காதல், நட்பு, இதெல்லாம் எத்தனை நேர்மையானதோ சில சமயங்களில் மிகவும் ஏமாற்ற கூடியது. சில வேளைகளில் அது கொலையும் செய்யும். ஏனென்றால் உங்களுக்குப் பிடித்தமான மற்றும் நெருங்கிய நபர்களின் துரோகம் மிகவும் கொடூரமானது. நெருக்கமான நபரின் துரோகம் மிகுந்த வேதனையை கொடுக்கும்.

நண்பருடன் கள்ளக்காதல்! கணவன் தற்கொலை !

கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை கொன்ற தாய்!

ஆண்நண்பர்களுடன் நள்ளிரவு வெளியே சென்ற இளம்பெண் கற்பழித்துக் கொலை!

“பச்சை துரோகம்” அடங்காத தாய்… ஆவேசம் அடைந்த பண்ணிரண்டு வயது பிஞ்சு… அனைவரையும் உறைய‌வைத்த சம்பவம்!

இப்படி எத்தனை செய்திகள், முகநூலையோ நாளிதழையோ திறந்தால் நம் மனதை கவ்விக்கொள்கின்றது!

இது போன்ற துரோகம் நிறைந்த துக்கமான சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்ன? முறையற்ற உறவும்! கூடா நட்பும்!

அருவருக்கத்தக்க விதத்தில் முறைகேடான உறவுகளை வளர்த்துக் கொண்டு, விருப்பமே இல்லாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக சிறிதும் பின்னால் வரும் விளைவை பற்றி சிந்திக்காமல் திருமண பந்தத்தில் இணைவது! சுயலநலத்துடன் முடிவெடுப்பது! என தனிமனித சுயநலமே இது போன்ற துயரமான சம்பவங்கள் நடப்பதற்கு காரணம்.

ஆசையில் ஈர்க்கப்பட்டு காமத்தில் கசிந்து துரோகம் செய்து பின் அது க்ரோதமாக மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வலம் வரும் அவலம் வேறெங்கும் இல்லை. கலாச்சாரம், கற்பு நெறி என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவில் தான் இத்தனை கேவலங்களும் நடக்கின்றது.

மனைவியை பிடிக்க வில்லையா? கணவனை பிடிக்கவில்லையா? நேரடியாக அமர்ந்து பேசிவிட்டு முறையாக பிரிந்தபிறகு தனக்கென பிடித்த வாழ்க்கையை தேர்தெடுப்பது தானே அறம் ! அதை விட்டுவிட்டு ஒரு உறவில் இருந்து கொண்டு எதோ ஒரு காரணத்திற்காக நம் இணைக்கு துரோகம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.

இதோ ரேஷ்மா தன் கணவனுக்கு செய்த துரோகம் அவருக்கே திரும்பி, இப்பொழுது வாழவேண்டிய சிறுவன் ரெத்த கரையுடன் அல்லவா நிற்கிறான். அக்னி போன்ற எத்தனை பேர் வாழவேண்டிய பருவத்தில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு இருக்கிறார்கள்.

ஆடம்பரமான இந்த பூவுலகம் என்னும் புதைகுழியில் சேர்த்து வைத்த செல்வம் கரைய கரைய காதலும் கரைந்து அன்பு பாசம் எல்லாம் மலையேறிவிடும் என்பதை உணராத ராம் பிரசாத் தன் ஆருயிர் மனைவி எது போனாலும் தன்னை விட்டு செல்ல மாட்டாளென்று நம்பினார்.

ஆனால், காலம் அவருக்கு நீ கொண்டது காதல் அல்ல கானல் என்று உணர்த்த, அடி பெண்ணே என்னை ஏன் மறந்தாய் என்று கண்ணீரில் கரைந்தார்.

தாயின் முகம் காணாதவர் தாரத்தில் தாயை கண்டார். வறுமையில் பிறந்தவள் பணமே எல்லாம் என்றாள். அவரை வேண்டாம் என்று பிரிந்தாள்.

நீயில்லாமல் நான் மட்டும் வாழ்ந்து என்ன செய்ய போகிறேனடி. எவ்வளவு நம்பினேனடி இறுதியில் எல்லாமே பொய் என்று நீ உறுதிபடுத்தி விட்டாயடி. உன் காதலும் நின்

சத்தியமும் பொய்த்ததடி. இனி வாழ்ந்து என்ன செய்ய போகிறேன் என்று அவர் மரணத்தை முத்தமிட.

தீரனின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. சரி ரேஷ்மா தான் தவறிவிட்டார். ராம் பிரசாத் தீரனுக்காகவாவது உயிரோடு இருந்திருக்க வேண்டுமல்லவா? அவர் இருந்திருந்தால் அவன் கத்தி எடுத்திருக்க மாட்டானே இதோ சுயநலமாக ஒரு முடிவை எடுத்துவிட்டு அவர் நிம்மதியாக சென்றுவிட்டார் . இப்பொழுது பழியும் பாவமும் இவன் தலையில் அல்லவா விடிந்து விட்டது.

“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அரனொன்றோ ஆன்ற ஒழுக்கு.”

வள்ளுவர் பேராண்மை என்று குறிப்பிடுவதன் மூலம் ஆண்மையின் சிறப்பு ஒரு ஆண்மகனுக்கு கொடுக்கும் பெருமையை விட பிறருடைய மனைவியின் மீது ஆசைப்படாமல் வாழ்வதே பெருமை என்று ஆணுக்கு எடுத்துரைக்கிறார்.

“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்த்தொழுகு வார்.”

சந்தேகப்படாமல் நல்லவர் என்று நம்பி வீட்டுக்குள் அனுமதித்தவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர் என்கிறார் வள்ளுவர். அதாவது நம்பியவர் வீட்டிலேயே அவருக்கு துரோகம் செய்து அவரது மனைவியிடம் இச்சைகொள்ளும் ஆண் செத்த பிணத்திற்குச் சமம் என்கிறார். எப்படி வெளியில் இருந்து பிணத்தை வீட்டுக்குள் அழைத்து நாம் வைத்துக்கொள்வதில்லையோ அதே போல அத்தகைய துரோக குணம் கொண்ட ஆண்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்பதே இதன் பொருள்.

இவ்வாறு ஆணின் பேராண்மையை எடுத்துச் சொன்ன வள்ளுவர் பெண்ணின் கற்பு பற்றிய சிறப்பையும் எடுத்துச் சொல்லுகிறார்.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.”

கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்கவை உலகில் வேறென்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார் வள்ளுவர். கற்புடன் வாழ்வேன் என்ற உறுதியுள்ள பெண்ணே உலகில் வேறு எல்லா விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று கற்புடன் வாழ்வதன் உயர்வை பெண்ணுக்குச் சொல்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”

தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

ஆணோ பெண்ணோ கற்பு இருவருக்கும் சமம். தாய் தந்தை ஒழுக்கத்தை பின்பற்றி தங்களின் கடமையை உணர்ந்து பொறுப்புடன் வாழ்ந்தால் இல்லறம் சிறக்கும் பிள்ளைகளின் வாழ்க்கை சீராக அமையும்.

சிறு துளியோ பெருங்கடலோ துரோகம் துரோகம் தான் அது என்றுமே துயரப்படுத்தும்!

அறிந்தோ அறியாமலோ அதற்கு மட்டும் நீ என்றும் காரணம் ஆகாதே!

தொடரும்