MIRUTHNAIN KAVITHAI IVAL 39

cover page-df1798c8

மிருதனின் கவிதை இவள் 39

டெல்லியில் பயங்கரம்!

பாலிவுட் பிரபலங்கள் இல்லத்தில் துயரம்!

மீண்டும் ஒரு பிரபலம் தற்கொலை!

இரட்டை கொலை வழக்கில் அக்னி தீரன் என்ற பன்னிரண்டு வயது சிறுவன் போலீசாரால் கைது!

கணவன் மனைவிக்கிடையே நடந்த கருத்து வேறுபாடால் மனைவி கணவனிடம் விவகாரத்து கேட்க மனமுடைந்த கணவர் தற்கொலை!

தந்தையின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலால் மகன் தாயை கத்தியால் குத்திய அவலம்!

தடுக்க வந்த நபரை ஆத்திரத்தில் அவன் தள்ளிவிட பின்னந்தலை அடிபட்டு சம்பவ இடத்திலே அந்த நபர் மரணம்!

நாடு எங்கே செல்கிறது?

சிறுவர்கள் இது போன்ற வன்கொடுமைகளில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமே தொலைக்காட்சி தான்! என்று சீறி எழுந்த மேடை பேச்சாளர்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் ரெண்டு மூன்று நாட்களில் இதை மறந்து விட்டு புது முகநடிகையின் வெற்றி படத்தை கொண்டாட துவங்க.

தீரனின் வாழ்க்கை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் துவங்கியது. இந்தரின் மரணம் தீரனுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. தீரன் இந்தரின் மரணத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் திட்டம் போட்டு ஒன்றும் அவரை தள்ளிவிடவில்லை அது ஆத்திரத்தில் நடந்த பிழை தான் இருந்தும் தீரன் விசாரணையின் போது கூட சக்கரவர்த்தி எவ்வளோ சொல்லியும் அவன் அதை விபத்து என்று சொல்லவில்லை. ஏன் அவன் வாக்குமூலம் கூட கொடுக்கவில்லை.

அப்படியொரு அமைதி அவனிடம்! சக்கரவர்த்தி தனது செல்வாக்கு மூலமாக தண்டனை காலத்தையாவது குறைத்துவிட முடியுமா என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் ஆனால் தீரன் போலீஸ் விசாரணையில், “இந்த இரெண்டு கொலையும் நீ தான் செய்தாயா?” என்று அதிகாரி கேட்ட கேள்விக்கு.

“ஆமா” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறியவன். அதன் பிறகு அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கூறவில்லை. அவ்வளவு அழுத்தமாக இருந்தான். அவனது மனநிலையை கருத்தில் கொண்டு அவர்கள் அதற்கு மேல் அவனை விசாரிக்கவில்லை. கோர்ட்டில் அவனுக்கு தீர்ப்பு கிடைத்து அவன் போலீஸ் ஜீப்பில் அமர்ந்த பொழுது சக்கரவர்த்தி ராம் பிரசாத்தை எண்ணி மிகவும் வேதனை அடைந்தார்.

அன்று இரவு அவருக்கு உறக்கமே வரவில்லை, தனக்கு பிறகு தீரனை நன்றாக பார்த்து கொள்ளுமாறு கேட்டிருந்த ராம் பிரசாத் இறுதியாக தனக்கு எழுதிய கடிதத்தை கையில் வைத்தபடி அமர்ந்திருந்த சக்கரவர்த்திக்கு, நண்பரின் முடிவின் மீது மிகுந்த வருத்தம். எப்படி இருக்க வேண்டிய தீரனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மிகவும் மனமுடைந்து போன சக்கரவர்த்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தனது செல்வாக்கு மூலமாக தீரனுக்கு முடிந்தளவு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

வாரா வாரம் தன் கர்பினி மனைவியையும்,

தன் மகன் அஷோக் மற்றும் மகள் தாரிகாவையும் அழைத்து கொண்டு தவறாமல் வந்துவிடுவார்.

ஆறாண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளி வரும் பொழுது தீரனுக்கு தான் ஒரு அநாதை, தனக்கென்று யாரும் இல்லை என்கிற எண்ணம் வந்துவிட கூடாது என்பதற்காகவே அவர் இவ்வாறு செய்தார்.

“யாருப்பா இது?” என்று அஷோக் முதன் முதலில் தீரனை பார்த்து கேட்ட பொழுது, தன் மனைவியை அவர் ஒரு கணம் நிமிர்ந்து பார்க்க, கணவன் பார்க்கும் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த அவரது மனைவி மீனம்மாள்,

“இது தான் உன் மூத்த அண்ணன்.” என்று கணவனை முந்திக்கொண்டு தானே அறிமுகம் செய்து வைத்தவர் தீரனை கனிவுடன் பார்த்தார். ஆனால் தீரன் விலகியே இருந்தான்.

சக்கரவர்த்தி அவனது நலன் குறித்து விசாரித்த பொழுது சிறிதாய் தலையசைத்தவன் பாறை மனிதன் போல இறுக்கமாகவே அமர்ந்திருக்க, தாரிக்காவுக்கு அவனது உதாசீனம் அப்பொழுதே மிகுந்த எரிச்சலை தந்தது மேலும் அவளது தந்தையும் தாயும் தீரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவளுக்கு முதல் பார்வையிலேயே தீரன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அவன் ஒரு கொலை குற்றவாளி யாரோ ஒருத்தன் அவனை நான் அண்ணன் என்று சொல்ல வேண்டுமா? அவள் மனம் கசந்தது. ஏனோ அவளுக்கு தீரனை ஆரம்பம் முதலே பிடிக்காமல் போக அதன் பிறகு ஏதாவது சாக்கு சொல்லி அவனைக் காண வருவதை அவள் தவிர்த்து விடுவாள். பெண்பிள்ளை என்பதால் அவர்களும் அவளை வற்புறுத்த மாட்டார்கள்.

ஆனால், அஷோக் அப்படியில்லை பார்த்ததும் தீரன் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு தோன்றியது. ஏன் கண்டதும் காதல் தான் வர வேண்டுமா? நட்பும் சகோதரத்துவமும் வர கூடாதா? அவனுக்கு வந்தது. ஏன் என்றெல்லாம் தெரியாது. ஆனால் அசோக்கிற்கு தீரனை பார்த்ததும் பிடித்துவிட்டது. அது தான் அஷோக் தீரனை பற்றி கேட்ட முதல் மற்றும் இறுதி கேள்வி அதன் பிறகு அவன் எந்த கேள்வியும் கேட்கவில்லை. தாய் தந்தை சொல்லிற்கு மறுபேச்சு பேசி பழகிராத அஷோக் அவர்கள் சொன்னது போலவே தீரனை தன் தமையானாகவே பார்த்தான். முதலில் தீரனிடம் பேசவே தயங்கியவன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினான். ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்தில பத்து வார்த்தை பேசுவான்.

ஆரம்பத்தில் அஷோக் ஏதும் பேசினாலே எழும்பி செல்லும் தீரன் காலப்போக்கில் அவன் அருகில் அமர்ந்து அவன் பேசுவதை அமைதியாக கேட்பான். ஆனால், பதிலுக்கு சிறு தலையசைப்பு கூட அவனிடம் இருக்காது. ஆனாலும் அஷோக் தவறாமல் தன் தந்தையுடன் தீரனை காண வந்துவிடுவான்.

ஆறு வருடங்கள் கழித்து டெல்லி சீர்திருத்த சிறைச்சாலை கதவு திறக்க பதினெட்டு வயது இளைஞனாக ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகத்தை பார்க்கிறான் அக்னி தீரன்.

ஆறடிக்கும் மேல உயரம். கடுமையான முகம். எரிக்கும் விழிகள் என புதுவித அவதாரத்தில் காட்சி அளித்த தீரனை மகிழ்ச்சியுடன் வந்து தழுவி கொண்ட சக்கரவர்த்தியை தொடர்ந்து அவனது வரவுக்காக அவரது மொத்த குடும்பமும் காத்திருக்க தீரனின் முகத்தில் மறந்தும் கூட எந்த உணர்ச்சியும் இல்லை. எந்திர மனிதன் போல அவர்களுடன் சென்றான்.

நேத்ராவுக்கு அப்பொழுது ஐந்திலிருந்து ஆறு வயதுக்குள் இருக்கும். எப்பொழுதும் தன்னிடம் வம்பிளுக்கும் அஷோக்கை விட அமைதியாக இருக்கும்  தீரனை அவளுக்குமிகவும் பிடிக்கும்.

சக்கரவர்த்தி மற்றும் மீனம்மாள் தம்பதியர் பேருக்காக மட்டும் தீரனை மூத்த மகன் என்று சொல்லவில்லை அதை செயலாகவே ஆக்கினர்.

தீரன் வீடு திரும்பிய சில நாட்களிலே வக்கீல் மூலமாக தீரனை சட்டப்படி தனது வாரிசாக உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அவன் மீது அன்பை பொழிந்தனர். மீனம்மாள் தீரனை தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார்.

மீனம்மாள் ஒரு அற்புதமான ஜீவன். அஷோக் மற்றும் தீரன் இருவரிடமும் அவர் ஒருநாளும் வேற்றுமை பாராட்டியது கிடையாது. அவ்வளவு அன்பாக அவனை பார்த்துக்கொண்டார். என்ன, தீரன் தான் அவர்களிடம் இருந்து விலகியே இருந்தான். ஒருகட்டத்தில் அனைவரிடமும் நெருங்கிய தீரன் மீனம்மாளிடம் மட்டும் நெருங்கவே இல்லை. அது அவருக்கு வருத்தமாக தான் இருந்தது ஆனாலும் அவர் அதே அன்புடனே இருந்தார்.

தீரனை படிக்க வைப்பதற்காக சக்கரவர்த்தி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் ஆனால், அவன் தான் பிடி கொடுக்கவே இல்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கியே கடந்தவன். ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட இவர்கள் மிகவும் பதறிவிட்டார்கள். சக்கரவர்த்தியும் அஷோக்கும் தேடாத இடம் இல்லை. அப்பொழுது அவருக்கு சந்தேகம் வர அசோக்கை மட்டும் அழைத்துக்கொண்டு தீரனின் வீட்டிற்கு சென்றார்‌.

அங்கு, தீரனின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்தவர் அவனை மிகவும் சிரமப்பட்டு  அழைத்து வந்தார். தீரனை எப்படி இந்த சுழலில் இருந்து வெளிகொண்டுவருவது என மிகவும் தவித்தவர் ஒருக்கட்டத்திற்கு மேல் மனோதத்துவ நிபுணரை சந்திக்க,

அவரோ தீரனால் அவ்வளவு சீக்கிரம் இதை மறக்க முடியாது. ஆனால், அவன் மனது வைத்தால் இதில் இருந்து வெளி வரலாம். அதற்கு முதலில் அவன் வாழ்க்கை எங்கே முடிந்ததோ அங்கிருந்து தான் ஆரம்பம் ஆக வேண்டும் அவன், அவனது வீட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னவர் அவனுக்கும் சில மருத்துவ ஆலோசனையை வழங்கினார்.

ஆனாலும் தீரன் இறுக்கமாகவே இருக்க ஒருநாள் தீரனிடம் பேசிய‌ சக்கரவர்த்தி, ‌”அக்னி உன் கடந்த காலத்தை பார்த்து ஓடாத அதை எதிர்த்து போராடு அப்போ தான் நீ ஜெயிக்க முடியும்” என்றவர்,

“நீ ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நீ தான் இந்த குடும்பத்தின் முதல் வாரிசு இனி இந்த குடும்பத்தின் பொறுப்பை நீ தான் பார்த்து கொள்ள வேண்டும்.” என்று தீர்க்கமாக சொன்னவர், அவனை யோசிக்கவே விடவில்லை. மறுநாளே தன்னுடன் தன் அலுவலகம் அழைத்து சென்றார்‌. ஆறு மாதம் பயிற்சி அளித்துவிட்டு தனது கம்பெனியின் நிர்வாக பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து, “இனி நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் லாபம் வந்தாலும் சரி நஷ்டம் வந்தாலும் சரி நான் தலையிட மாட்டேன்.” என அவர் ஒதுங்கி கொள்ள.

ஆரம்பத்தில் திணறிய தீரன் பிறகு தொழிலில் முன்னேற தொடங்கினான். அவ்வளவு உழைத்தான். நிற்காமல் ஓடினான். கடந்த காலத்தை அவன் மறக்கவில்லை ஆனால் மெல்ல, மெல்ல கடந்து செல்ல பழகி கொண்டான். அதன் பிறகு அஷோக்கும் தன் படிப்பை முடித்து கொண்டு தொழிலில் தீரனுடன் இணைந்து கொள்ள. அண்ணன் தம்பி இருவரும் எதிர்காலத்தை நோக்கி ஓடினர்.

காலமும் ஓடியது. தீரனின் அணுகு முறையிலும் சிறு சிறு மாற்றங்கள் தெரிந்தது. ஆனாலும், மீனம்மாளிடம் மட்டும் அவனால் ஒட்ட முடியவில்லை. அப்படி இருந்த சமயத்தில் தான் அஷோக்குடன் ஒரே கல்லூரியில் படித்த கிரண் பாஸ்கர், அஷோக்கின் பரிந்துரையின் பெயரில் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் துறையில் வேளைக்கு சேர்ந்தான்.

நன்றாக உழைத்தான் சில சமயம் சக்கரவர்த்தியே அவனை பாராட்டும் படி நன்றாக செயல்பட்டான். ஆனால், ஏனோ தீரனுக்கு மட்டும் அவனை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் பார்வையிலும் பேச்சிலும் செயலிலும் ஏதோ இருப்பது போல நெருடலாய் இருக்கும்.

ஆனால், அவன் அதை ஒருநாளும் காட்டிக்கொண்டது கிடையாது.

இவ்வாறு சென்று கொண்டு இருக்க ஒருநாள் கிரணுடன் வீட்டிற்கு வந்த தாரிக்கா தாய் தந்தையிடம் கிரணை விரும்புவதாக கூற, ஏற்கனவே கிரண் மீது நல்ல மதிப்பு வைத்திருந்த சக்கரவர்த்தி அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கிரண் பக்கம் சொந்தங்கள் யாரும் இல்லாததால் சக்கரவர்த்தியே முடிவெடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்க, அக்னிக்கு மட்டும் அதில் தயக்கமாக இருக்க, மறைமுகமாக கிரணை பற்றி விசாரித்தான்.

ஆனால், அவன் சந்தேகப்படும்ப‌டியான எந்த தகவலும் வராமல் இருக்கவும், நாம் தான் தேவையில்லாமல் குழப்பிக்கொள்கிறோம் என்று தன் உள்ளுணர்வை புறந்தள்ளியவன், அமைதியாக இருந்த சமயம் அவனது பெர்சனல் அசிஸ்டன்ட் ரிஷி ஒருநாள் தீரனுக்கு அழைத்து நமக்கு கிடைக்க வேண்டிய முக்கிய காண்ட்ராக்ட் அனைத்தும் எதிர் கம்பெனிக்கு போவதற்கு முக்கிய காரணம் கிரண் என்றும் மேலும் கிரண் பணம் விடயத்தில் செய்த அனைத்து திருட்டுத்தனத்தையும் கூறியவன் அந்த எதிர் கம்பெனியில் கிரண் தான் மறைமுக சேர்மேன் என்பதை சாட்சியுடன் கூற,

கிரணின் துரோகம் கண்டு அதீத கோபம் கொண்ட தீரன் உடனே சக்கரவர்த்தி மற்றும் அஷோக்கிடம் உண்மையை கூற, கொதித்து போன சக்கரவர்த்தியும் அஷோக்கும் கிரணை விரட்டி அடிக்காத குறையாக கம்பெனியில் இருந்து துரத்தியவர்கள் திருமணத்தையும் உடனே நிறுத்தினர்.

இதை கேள்விப்பட்ட தாரிக்கா தான் மிகவும் காயப்பட்டு போனாள். கிரண் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றத்தையும் ஏற்று கொள்ளாதவளின் மொத்த கோபமும் அக்னி மீது தான் திரும்பியது. அந்தளவுக்கு கிரண் தாரிக்காவின் மனதை களைத்து வைத்திருக்க. விரக்தியில் இருந்த தாரிக்கா அக்னியை நடுவீட்டில் வைத்து,

“என் வாழ்க்கையை கெடுத்து எப்படி நிம்மதியா இருக்க?” என சீற அவனோ,

“கிரண் சரியில்ல தாரிக்கா அண்ணன் சொல்றதை கேளு பா” என அவள் மனம் புரிந்து தன்மையாக எடுத்து கூற, ,

அவளோ, “அண்ணனா? நீயா? அனாதையெல்லாம் என்னால அண்ணனா ஏற்றுக்கொள்ள முடியாது. ஆமா கிரணை சொல்ல உனக்கு என்ன யோகீதை இருக்கு. நீயே ஒரு அக்யுஸ்ட்.” என்று வார்த்தையை விட்டுவிட,

மறுகணம் திகு திகுவென எரியும் தன் கன்னத்தை பொத்தியபடி நிமிர்ந்தவள் தன் எதிரே பயங்கர கோபத்தில் நிற்கும் தாயை கண்டு அதிர்ந்துவிட்டாள்.

“என்னடி வாய் ரொம்ப நீளுது? யாரை பார்த்து என்ன சொல்லிட்டு இருக்க, தீரன் என் மூத்த பிள்ளை இனி அவனை பத்தி ஏதாவது தப்பா பேசின, இந்த வீட்ல உனக்கு இடம் கிடையாது. அப்புறம் அந்த கிரண் கூட உனக்கு கல்யாணம் நடக்காதுன்னா நடக்காது. இது தான் அப்பாவோட முடிவு இதுவே எங்களுடைய முடிவும் கூட, நீயும் சீக்கிரமே உன் மனசை மாத்திக்கோ.” என்று ஆக்ரோஷமாக தாரிக்காவிடம் சீரியவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட,

“தீரன் என் மூத்த பிள்ளை” என அழுத்தமாக மீனம்மாள் பேசிய வார்த்தைகளில் சிலிர்த்து போன அக்னியின் கண்கள் சட்டென்று நனைந்தது. அவரது வார்த்தை அவனது மனதை தொட்டது. அந்த நொடியே அவரது உண்மையான தாயின் அன்பை புரிந்து கொண்ட அக்னி இத்தனை நாளாக அவரை உதாசீனப்படுத்தியத்திற்காக வருந்தியவன். அவரது உண்மையான அன்பை புரிந்து கொள்ள தொடங்கினான்.

அவரிடம் ஒரேடியாக நெருங்கா விட்டாலும் முன்பு போல இல்லாமல் அவரிடம் ஒன்று ரெண்டு வார்த்தை தீரன் பேச மீனம்மாள் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.

ஆனால், அந்த மகிழ்ச்சியெல்லாம் கொஞ்ச நாட்களுக்கு தான், தாயின் பேச்சில் மனமுடைந்த தாரிக்கா யாரும் எதிர்பார்ப்பதற்குள் கிரணை திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நிற்க. தம்பதியர் இருவரும் மகளின் முடிவில் மனமுடைந்தனர். அஷோகால் தாரிக்காவின் முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சக்கரவர்த்தி தாரிக்காவிடம் கிரணை விட்டு வருமாறு எவ்வளவோ எடுத்து சொன்னார். ஆனால், அவள் பிடிவாதமாக இருக்க மகளின் முடிவில் கவலையடைந்தவர் ,

தாரிக்கா கிரண் இருவருக்கும் இனி இந்த குடும்பத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று முடிவெடுத்து தாரிக்காவுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுத்து மொத்தமாக அவளை தலைமுழுகி, தன் காலத்திற்கு பிறகும் இருவரையும் சேர்க்க கூடாது என்று உறுதியாக கூறிவிட்டார்.

அதன் பின்பு தன் மொத்த சொத்திற்கும் அடுத்த வாரிசாக தீரனை நியமித்தவர். தீரன் நிச்சயம் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அஷோக் மற்றும் நேத்ராவின் பொறுப்பையும் அவனிடமே ஒப்படைத்தார்.

அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் இன்பம் என்பது கானல் நீராக தான் இருந்தது. தாரிக்காவின் விடயத்தால் மிகவும் வேதனை அடைந்த மீனாம்மாள் நாளடைவில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட, அது சக்கரவர்த்தியையும் அவர் குடும்பத்தையும் மிகவும் பாதித்தது. மனைவி இறந்த வேதனையில் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட சக்கரவர்த்தி இரெண்டு மூன்று மாதத்திலே இறந்து விட, மொத்த குடும்பமும் வேதனையில் மூழ்கியது.

சக்கரவர்த்தியின் இறுதி சடங்கை கூட அக்னியும் அஷோக்கும் இணைந்தே செய்தனர். தந்தையின் இறப்புக்கு வந்த தாரிகாவை அக்னி எவ்வளவோ கூறியும் அஷோக் வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை. தாய், தந்தை இருவரின் இறப்புக்கும் தாரிக்கா தான் காரணம் என்று முழுதாக நம்பிய அஷோக் கிரணையும் தாரிகாவையும் தன் ஜென்ம விரோதிகளாக எண்ணினான். குடும்ப தொழில் மொத்தமும் தீரனின் மீது விழ தீரனை தொழில்முறையில் நேரடியாகவே எதிர்க்க ஆரம்பித்த கிரண் அவனுக்கு பல்வேறு இடைஞ்சல்களை கொடுத்தான்‌.

தினமும் கிரண் ரூபத்தில் புது புது பிரச்சனைகளை சந்தித்த தீரன் ஒவ்வொன்றையும் முறியடித்து தொழிலில் முன்னேறி கொண்டே இருந்தவன், தாரிகாவுக்காக கிரணை பொறுத்துக்கொண்டான்.

கம்பெனி விடயத்தில் கிரணுக்கு தன் மீது கோபம் அதனால் தான் கிரண் தன்னிடம் மோதிக்கொண்டே இருக்கிறான் என இத்தனை நாளாக எண்ணிய தீரன், இன்று பார்ட்டியில் கிரண்  தன்னிடம் நடந்து கொண்டதை எண்ணி அதிர்ந்தே விட்டான்.

“உன் அம்மா, உன் அப்பாவை ஏமாத்தின மாதிரி உன் பொண்டாட்டியும் உன்னை ஏமாத்திர போறா தீரன் உன் மனைவி மீது ஒரு கண் எப்பொழுதும் இருக்கட்டும்.” கிரண் தீரனின் காதில் சொன்ன வார்த்தைகள்! தீரனை அதிர வைத்த வார்த்தைகள்! இதோ இப்பொழுதும் அவனை தடுமாறவைக்கின்ற வார்த்தைகள்!

தீரன், சக்கரவர்த்தி மற்றும் அஷோக்கை தவிர வேறு யாருக்கும் தெரியாத உண்மை கிரணுக்கு எப்படி தெரிந்தது ? என எண்ணி, எண்ணி மிகவும் குழம்பினான் .

விஷம் போல கிரண் தீரனிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் தீரனின் கோபத்தை

தூண்டிவிட்டு அவனது சிந்தனை திறனுக்கு  விலங்கிட, மனதளவில் தளர்ந்த தீரனால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை. பழைய நினைவுகளிலேயே உழன்று தவித்தவனுக்கு ரேஷ்மா செய்த துரோகம் தான் மீண்டும் மீண்டும் கண்ணெதிரே தோன்றி அவனை பார்த்து எள்ளி நகைத்தது.

தொடரும்