MIRUTHNAIN KAVITHAI IVAL 4

cover page-5ef63dd3

             மிருதனின் கவிதை இவள்

                    4

மேகாவை ஒரே ஒரு கணம் பார்த்தவன் , அடுத்த நொடியே அவளை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிரித்து மறைவான தூணில் இருந்து வெளியே தள்ளிவிட்டான் .

அவளோ  அலறி கொண்டு தரையில் விழுந்தாள். மறு நொடியே எதிரிகளின் கவனம் முழுவதும் மேகா மீது விழ , அக்னி தன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விடுவான் என கொஞ்சமும் நம்பியிராத மேகாவோ தலையை தரையோடு அழுத்தியவாறு குனிந்திருந்து கதற தொடங்கினாள் . கை கால்கள் எல்லாம் கழன்று விழாத குறையாக நடுங்க,  அவளை அழுத்தமான காலடிகளோடு நெருங்கிய எதிரிகள் அனைவரின் துப்பாக்கியும்  அவளை நோக்கி இருக்க, மறுகணமே அக்னியின் கண்ணசைவில் மேகாவை சூழ்ந்திருந்த எதிரிகள் அனைவரும்  சுதாரிக்கும் முன்பே  மளமளவென சுடப்பட்டனர் .

எதிராளிகளின் வலது புறம்  அஷோக் ,  அவனுக்கு நேர் எதிரே அக்னி மற்றும் மேலே அவர்களது கையாள் என மூவரும் அவர்களை வட்டமிட்டு கண்ணிமைக்கும் நொடியில் சுட்டுத்தள்ள மேகாவை தாக்க இருந்த அனைவரும் உயிரை பிரிந்த ரத்த வெள்ளத்தில் மண்ணில் சரிந்தனர்.

” வெல் பிளனிங்  தீரா ” என்ற அஷோக் அந்த கையாளுடன் ,  இன்னும் எதிரிகள் மிச்சம் இருக்கீறார்களா  என ஆராய்ந்தபடி  வெளியேற .

தரையோடு சுருண்டு கிடந்த படி அழுது கொண்டிருந்த மேகாவின் அருகில் வந்த அக்னி தீரன் ,

” ஹேய் சீக்கிரம் எழுந்திரு ” அவளது நடுக்கத்தை பார்த்தபடியே அதட்டினான் .

அவனது மிரட்டலில் மேலும் நடுங்கியவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

கலைந்த கேசம் சரிந்து  விழுந்து அவளது வதனத்தை மறைத்திருக்க முகத்தில் விழுந்த கூந்தலின் திரை மூலமாக அவளது அதிர்ந்த பார்வை அவனது கனல் விழியை நோக்கியது , அவனும் அவளை தான் பார்க்கிறான் ,  பார்த்தபடியே அவள் முன்பு குனிந்து தன் துப்பாக்கியால் அவளது முகத்தை மறைத்திருந்த கேசத்திரையை விலக்கி காதோரம் சொருகியவன் ,தன் பார்வையை கணப்பொழுது கூட அவளிடம் இருந்து விலக்காமல்  பார்த்துக்கொண்டே இருந்தான் . அந்த பார்வை ஓராயிரம் கதை சொன்னது . ஆனால் அந்த  பார்வை எல்லாம் விரல் எண்ணும் நொடி கணக்குகள் தான் , மறுகணமே  தன் இயல்பை அடைந்த அக்னி ,

” ஏய் சீக்கிரம் எழுந்திரு ,என்ன உயிர் வேண்டாமா ? இவனுங்களுக்கே உன்னை தத்து கொடுத்திடவா? ” என கத்தியவன் , கதறிக்கொண்டிருந்தவளின் கரம் பிடித்து வேகமாக எழுப்பி , பின்வாசல் வழியாக அவளை இழுத்து கொண்டு வந்தான் .

பின்பு மேகா வந்த  காரின் அருகே வந்தவன் , கதவை திறந்து  அவளை வலுக்கட்டாயமாக அவளது தலை மேல் கைவைத்து , அந்த அவசரத்திலும் அவளுக்கு தலையில் அடிபட்டுவிடாமால் பாதுகாப்பாக  உள்ளே பிடித்து தள்ளாத குறையாக தள்ளியவன் , ட்ரைவரை பார்க்க , அவனது பொல்லாத பார்வையில் அவன் என்ன கண்டானோ ,

” பத்திரமா விட்ருவேன் சார் ” என நாலாபக்கமும் தலையசைத்தான் .

அடுத்த கணம் மேகாவை பார்த்தவன் , அவளை பார்த்தபடியே கதவை சாற்றும் தருணம்  ,

” நீங்க ” என கண்களில் பயத்துடன் தன்னை பார்த்து கேட்டவளை பார்த்துக்கொண்டே   கதவை அடித்து சாற்றியவனின் உடம்பில் தொடர் தோட்டாக்கள் சீறி பாய்ந்தது .

இதை கண்ட மேகா அதிர்ச்சியோடு அவனை பார்க்க , அவனோ தன் கையில் இருந்த துப்பாக்கியால் தன்னை சுட்டவனை வீழ்த்தியவன்   அவளது விழிகளை பார்த்து கொண்டே  கீழே விழ போக உடனே கதவை திறந்து வெளிய வந்தவள் , அவனை தாங்கி பிடிக்க ,மறுநொடி ரத்தம் வழிய அவள் நெஞ்சோடு சாய்ந்து கண் மூடினான்  அக்னி தீரன் .

அவன் பாரம் தாங்காமல் அவனோடு தரையில் வீழ்ந்த மேகா  அடுத்த என்ன ? என்று ஸ்தம்பித்து நிற்க , அப்பொழுது அவளுக்குள் இருந்த மருத்துவர்  முழித்து கொள்ள , அடுத்த  நொடியே அவனது நாடி துடிப்பை பரிசோதித்தாள் .

“மேகா மேடம்  வாங்க போய்டலாம் ” என ட்ரைவர் பதற்றத்தில் மேகாவை அழைக்க ,

“அண்ணா வாங்க வந்து இவரை தூக்குங்க , என்னால தனியா தூக்க முடியாது ” என ட்ரைவரை உதவிக்கு அழைக்க அவளை பார்த்து கொண்டே நின்றவன்,

” அம்மா இவங்க எல்லாரும் பெரிய பெரிய புள்ளிங்க , இவங்களை பத்தி நிறையவே கேள்வி பட்ருக்கேன் , பெரிய இடத்து விவகாரம் ,ஆபத்து நிறைய இருக்கும் நமக்கு இந்த வம்பு வேண்டாம் வந்துருங்க ” என்றவனிடம்,

“இருந்துட்டு போட்டும் அண்ணா, அதுக்காக இந்த நிலைமையில அப்படியே விட முடியாது,   உயிர் இருக்கு  வாங்க, சீக்கிரமா ட்ரீட்மெண்ட் குடுக்கணும்  ப்ளீஸ் ” என மேகா கெஞ்ச,

சில நொடிகள் மேகாவின் கலங்கிய விழிகளை பார்த்தவன் ,

” நீங்க எழுந்து  வாங்க என் கூட,  கனகராஜ் சார்க்கு நான் தான்  பதில் சொல்லணும்  , வாங்க என் கூட,  இதுக்குள்ள மாட்டிக்கிட்டா நாமளும்  நம்ம உசுர விட வேண்டியது தான் ” என்றவன் மேகாவின் கரத்தை பிடித்து கொண்டு அங்கிருந்து செல்ல , தரையில் கிடந்தவனை பார்த்தபடி அவனுடன் சென்றவள்  என்ன நினைத்தாளோ,

” அண்ணா கைய விடுங்க ப்ளீஸ் ” என அவனிடம் இருந்து தன் கரத்தை எடுத்தவள் ,

“இது தப்புண்ணா வந்து ஹெல்ப் பண்ணுங்க நேரம் கடத்த கடத்த அவர் உயிருக்கு தான் ஆபத்து ” பதற்றத்துடன் கூறினாள்,

”  மன்னிச்சிருங்க மா எனக்கு என் உயிர் முக்கியம் ” என்றவன்  விட்டால் போதும் என்று  அங்கிருந்து ஓட ,

” அண்ணா ப்ளீஸ் தனியா விட்டுட்டு போகாதீங்க ” என்றவள் குரல் காற்றில்  மறைந்து போனது .

நேரம் நள்ளிரவை தொட்டிருக்க பதற்றத்தில் கை கால்கள் நடுங்க அமர்ந்திருந்த மேகாவிடம் ,

” என்னடி நடக்குது ? யார் டி இவன் ?”தண்ணீர் பாட்டிலை நீட்டியபடி   வினவினாள் அவளது தோழி இஷித்தா  .

” ப்ளீஸ் எதுவும்  கேட்காத இஷு ” என்றவள்  மடமடவென தண்ணீரை தன் வாயில் சரிக்க ,” ஏய் மேகா பார்த்து ” என்று இஷித்தா  சொல்லும்பொழுதே   பாதி தண்ணீர் மேகாவின்  ஆடையை நனைத்தது .

“சாரி டி “என்றவள் நகத்தை கடித்துக்கொண்டு தன் அறையின் வாசலையே பார்த்தபடி நிற்க , இஷித்தாவோ குறுக்கும் நெடுக்கும் வாசலை அளந்து கொண்டிருந்தாள் .

அப்பொழுது இஷித்தாவின்  அலைபேசி அலற அதை எடுத்த இஷித்தா  ,

” ஏய் உன் அப்பா தான் டி ” என மேகாவை நோக்கி அலைபேசியை நீட்ட ,

” முடியாது டி படபடப்பா இருக்கு நீயே பேசு ” என்று மேகா வாங்க மறுக்க , அழைப்பை  எடுத்த இஷித்தா  ,

” அப்பா எப்படி இருக்கீங்க?? “

” நல்லா இருக்கேன் டா ” என்றார் மேகாவின் தந்தை கோபால கிருஷ்னன்.

” சென்னைல அம்மா  தம்பி தங்கச்சி எல்லாரும் எப்படி இருக்காங்க ??”

” எல்லாரும் நல்லா இருக்காங்க மா , நீ எப்படி இருக்க  ?”

” நல்லா இருக்கேன் பா “

” கொஞ்சம் இருமா ராதிகா உன்கிட்ட பேசணும்னு சொல்றா ” என்றவர் அலைபேசியை தன் அருகில் பதற்றத்துடன் நிற்கும் தன் மனைவி ராதிகாவிடம் கொடுக்க ,

” இஷித்தா  மேகா எங்க இருக்கா ? அவ  ஃபோன்க்கு ரொம்ப நேரமா முயற்சி பண்றேன் எடுக்க மாட்டிக்கிறா , அவ உன் கூட தானே இருக்கா கொஞ்சம் குடு மா ” என்று கேட்டார் .

” மா மேகாக்கு இன்னைக்கு ஹாஸ்பிடல்ல நைட் டூட்டி , ரெண்டு சர்ஜெரி இருக்கு மார்னிங் தான் வருவா ” என்றாள்.

” என்ன வீட்ல இல்லையா ! அவளை நான் இன்னைக்கு லீவ் தானே போட   சொன்னேன் . வெளிய போக கூடாதுன்னு சொன்னேன் தானே ப்ச் பேச்சை கேட்கவே மாட்டிக்கிறா கொஞ்சம் அவ வந்ததும் பேச சொல்லுமா  ” என்றவரிடம் நலம் விசாரித்துவிட்டு இஷித்தா   வைத்துவிட ராதிகாவுக்கு தான் ஒரே சஞ்சலமாக இருந்தது .

” ஏய் சும்மா ஜோசிய காரன் சொன்னதை நினைச்சு புலம்பிட்டு இருக்காம போய் தூங்கு ” என்றவர் ,

” விக்ரம்,  மயூரி உங்களுக்கு தனியா சொல்லனுமா போங்க போய் தூங்குங்க நாளைக்கு காலேஜுக்கு போகணும்ல போங்க ” என தன் மகனையும் மகளையும் அதட்டியவர் , ஹாலில்  உள்ள லைட்டை அணைத்து விட்டு தன் அறைக்கு சென்றார் .

*****************************************************************************

” என்ன மேகா ? உங்க அம்மா  என்னலாமோ சொல்றாங்க “என்ற இஷித்தாவை பார்த்து ,

“ப்ச் அது ஒன்னும் இல்லை டி ,இன்னைக்கு சந்திராஷ்டமம் ,  நான் இன்னைக்கு கவனமா வீட்லையே இருக்கனும்ன்னு ஜோசியர் சொன்னாராம் மீறி போனா தேவை இல்லாத பிரச்சனை வருமாம் ” என்றவள் தன் அறையின் கதவையும் இஷித்தாவையும் திரும்பி திரும்பி பார்த்து ,” ஆமா டி அவர் சொன்னது போலவே நடந்திருச்சு ” என மேகா  பதற ,

“அட நீவேற  இதே ஜோசியர் தான் நீ பெரிய ஐபிஸ் ஆபிசர் ஆகி ரவுடிகளை  எல்லாம் சுட்டு தள்ளுவன்னு சொன்னாரு எங்க தோசை கூட ஓழுங்க சுட மாட்ற ” என்ற தன் தோழியை பார்த்து செல்லமாக முறைத்த மேகா ,

” பயமா இருக்கு டி பொழைச்சிருவான்ல ” என கேட்க ,

” டென்ஷன் ஆகாத டி அதெல்லாம் பொழைச்சிருவான் ” என மேகாவுக்கு  ஆறுதல் சொன்ன இஷித்தா   ,’ நீ அவன் பொழைக்கிறதை  பத்தி கவலை படுற நான் அவனால உனக்கு வேற பிரச்சனை வருமோன்னு  கவலை படுறேன் ‘ என மனதிற்குள் தன் தோழியை குறித்து கவலை கொண்டாள்.

அப்பொழுது  அறையில் இருந்து வெளியே வந்த கனகராஜ் மேகாவை  உள்ளே அழைத்து  கதவிற்கு தாளிட்டவர் ,

” புல்லெட்ஸ் ரிமூவ் பண்ணியாச்சு  உயிருக்கு ஆபத்து இல்ல மா  ,இப்போதைக்கு மயக்கத்துல தான் இருப்பாரு  கண் முழிச்சதுக்கு  அப்புறம் தான் மத்தது பார்க்க முடியும் ,அவர் கண் முழிச்சதும் அவங்க ஆளுங்க வந்து கூட்டிட்டு போய்டுவாங்க , அதுவரை கூடவே இருந்து கவனமா பார்த்துகோங்க , ஹார்ட் பீட் மானிடர் பண்ணிட்டே இருங்க .இந்த நியூஸ் வெளிய யார்கிட்டையும் சொல்ல வேண்டாம், மெடிக்கல் நீட்ஸ் எல்லாம் இங்க வர்ற மாதிரி நான் அரேஞ் பண்ணி தரேன் “என கதவை திறக்க போனவர்  அவளிடம் திரும்பி ,

” நீயே கூட இருந்து அவரை பார்த்துக்கோ மேகா, கொஞ்ச நாளைக்கு ஹாஸ்ப்பிட்டல் வர வேண்டாம் ” என்றவர் அவளது பதிலை எதிர்பார்க்காமலே  கதவை திறந்து கொண்டு வெளியேற , மேகவோ செய்வதறியாது , அடிபட்டு சுயநினைவின்றி  மெத்தையில் கண்மூடி கிடந்தவனை பார்த்து தன் கரங்களை பிசைந்து கொண்டு நின்றாள் .

கனகராஜ் வெளியேறியதும் அவரை முறைத்தபடியே உள்ளே நுழைந்த இஷித்தா  ,

” கதவை மூடிட்டு என்னடி பேசினீங்க ” மேகாவிடம் தாறுமாறாய் கத்தினாள்  .

” ஏய் இஷு ப்ளீஸ் கத்தாதே ” என காதை மூடிய மேகா , தீரனுக்கு போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்திவிட்டு கதவை லேசாக சாத்தியபடி இஷித்தாவுடன் வெளியே வந்து கனகராஜ் கூறிய அனைத்தையும் கூறினாள் .

” அவர் சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டியா மேகா?  இப்படி தலையை ஆட்டிட்டு வந்து நிக்கிற ” மீண்டும் கத்தினாள் .

” இஷு  ப்ளீஸ் ” இஷித்தாவின் அதட்டலில் மேகாவின் முகம் தான் வாடிவிட்டது.

” என்ன ப்ளீஸ்?  மேகா புல்லட் ஷாட் நடந்திருக்கு , நியாயப்படி இதை பத்தி போலீஸ்க்கு தகவல் குடுக்கணும் “

” ஆனா சார் யார்கிட்டையும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னாரு டி  “

” அவர் சொல்வாரு டி ஆயிரம் , எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டுவியா ஸ்டுபிட் . அவருக்கு வேண்டப்பட்ட ஆளுன்னா அவர் தான் வச்சி பார்க்கணும் உன்னை பார்க்க சொல்லிருக்காரு .”

“சார் சொன்னா ஏதாவது காரணம் இருக்கும் டி எல்லாத்துக்கும் மேல அவனை பாரு பேச்சு மூச்சில்லாம படுத்திருக்கான் இந்த நிலைமையில அவனை எங்க கொண்டு போறது “

” அப்போ மடியில வச்சு கொஞ்சு இடியட் ,  உள்ள படுத்திருக்கிறவன் யாருன்னு நினைச்ச அக்னி தீரன் பெரிய பைனான்ஷியர் அரசியல்வாதிங்க  தொடங்கி பெரிய பெரிய பிசினஸ்மேன்  எல்லாரும் இவன் கைக்குள்ள . பார்க்கிற  தொழில் பைனான்ஸ் ஆனா பக்கா ரௌடி ,அவனை சீண்டாத வரைக்கும் ஒன்னும்  இல்லை ,தப்பி தவறி யாரும் அவன் வழியில போனா கொலை கூட பண்ணுவான் ,அப்படிப்பட்ட இவனையே இப்படி படுக்கவச்சி இருக்கான்னா  இவனோட  எதிரி எப்படி பட்டவனா இருப்பான்னு நீயே கற்பனை பண்ணிக்கோ ” என முழுபக்கத்து வசனத்தை இஷித்தா  பேசிவிட்டு மேகாவை பார்க்கும் பொழுது அவளது கண்கள் பயத்தில் கலங்கி இருந்தது .

“மேகா ஏண்டி அழுது தொலைக்கிற ?இப்போ பயந்து ஒன்னும் ஆகப்போறதில்லை இதை நீ அவனை கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் அது எல்லாத்துக்கும் முன்னாடி உனக்கு இன்னைக்கு டே ஷிப்ட் தானே முடிச்சிட்டு வீட்டுக்கு வர்றதை விட்டுட்டு அவர் சொன்னார் இவர் சொன்னாருன்னு ஏன் கண்ட இடத்துக்கும் போன? “

“சார் சொல்லும் பொழுது எப்படி போகாம இருக்கிறது “

“இப்படியே அப்பாவியாவே இரு எல்லாரும் உன் தலையில மிளகா அரைச்சிட்டு போகட்டும் முட்டாள் முட்டாள் ” என்றவள் நீண்ட பெருமூச்சை வெளியிட்டு ,

” இப்போவே அவர் வீட்டுக்கு போறேன்,  இவனை அவர் கூட்டிட்டு போகட்டும் அது தான் சரி ” என்றவள் தன் பைக் சாவியை எடுக்கவும் அவளை தடுத்த மேகா

” இஷு ப்ளீஸ் எனக்காக நீ சண்டை போடாத “

” மேகா உன் அப்பாவி சுபாவத்தை அவர் யூஸ் பண்ணிக்க நினைக்கிறார்  அது உனக்கு புரியுதா டி “

” அவர் ஏண்டி அப்படி பண்ண போறார் , இப்படி நடக்கும்ன்னு அவரே எதிர் பார்த்திருக்க மாட்டார் டி “

” இல்லை அவர் தெரிஞ்சே உன்னை மாட்டிவிட்டுருக்காரு, அவரை எனக்கு நல்லா தெரியும் அவருக்கு பணம் தான் முக்கியம் ச்ச “

” இஷு ப்ளீஸ் டென்ஷன் ஆகாத பார்த்துக்கலாம் , அவன் இருக்கிற நிலைமையில அங்க இங்கன்னு மூவ் பண்ணினாலும் அவன் உயிருக்கு தான் பிரச்சனை வரும், சோ பொறுமையா இரு  முதல்ல அவன் கண்முழிகட்டும்  அப்புறம் பேசிக்கலாம் “என மேகா இஷித்தாவை சமாளிக்க அவளோ ,

” மேகா கனகராஜை நம்பாத “என்றாள் உறுதியாக ,

“அவர் உன் அப்பா டி இவ்வளவு வெறுப்பு வேண்டாம் இஷு ” கெஞ்சுதலாய் கேட்டாள் மேகா .

” ஹீ டோன்ட் டீசெர்வ் திஸ் ” என்றவள் தன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு ,”சரி வா வந்து என் கூட தூங்கு “என அவள் மேகாவை அழைக்க ,அவள் அசையாமல் நிற்பதை பார்த்து இஷித்தா ,

” என்னடி “கடுப்புடன் கேட்டாள்.

“அவருக்கு  உடம்பெல்லாம் ரத்த கறையா இருக்க டி க்ளீன் பண்ணனும் “தயங்கியபடி கூறினாள் மேகா .

” அம்மா அன்னை தெரேசாவே போங்க மா போய் உங்க அவருக்கு ஆயா வேலை பாருங்க , மேகா ஒன்னு சொல்றேன் , இறக்கப்படுறதுல  தப்பில்லை ஆனா ஏமாளியா இருக்கிற பார்த்தியா அது பெரிய தப்பு  ” என எரிச்சலுடன் கத்தியவள் வேகமாக அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாற்ற மேகாவுக்கு தான் கஷ்டமாக  இருந்தது .

மேகாவுக்கு இஷித்தாவின் கோபமும் தெரியும் அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அன்பும் தெரியும் ஆனாலும் இயற்கையாகவே மென்மையான குணம் கொண்ட மேகவால் ஏனோ இது போன்ற அதட்டல்களையும் கோபத்தையும்  தாங்கிக்கொள்ள முடிவதில்லை  .

இன்று நடந்த சம்பவம் பற்றி வீட்டில் உள்ளவரிடம் மறைத்ததை நினைத்து வருந்திக்கொண்டிருந்தவளுக்கு  தீரனின் நினைவு வர தன் அறைக்குள் சென்றவள் , அவனது இதயத்துடிப்பை சரி பார்த்துவிட்டு சமையல் அறைக்கு சென்று வெந்நீர் வைத்தவள்  மீண்டும் தன் அறைக்கு வந்து அவனது உடலில் காய்ந்திருந்த குருதியை  சுத்தம் செய்தாள் .

பின்பு நாற்காலியை அவன் அருகில் இழுத்து போட்டு அதிலே அமர்ந்து கொண்டவளுக்கு இன்று நடந்த சம்பவம்  அனைத்தும் கண்முன்னே காட்சிகளாய் வந்து வந்து போக, அச்சம் கொண்ட மங்கைக்கு  தூக்கம் தான்   ஏனோ  வர மறுக்க தீரனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் .

இப்படியே மேகா , இஷித்தாவின் முறைப்புக்கு நடுவே சுயநினைவு இன்றி படுக்கையில் இருந்த அக்னியை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டிருக்க  அவன் இங்கே வந்து   இரெண்டு நாட்கள் கழிந்திருந்தது .

இப்பொழுது அவனது உடம்பில் சின்ன சின்ன அசைவுகள் எப்பொழுதாவது தென்பட மேகாவுக்கு தான் நிம்மதியாக இருந்தது .அப்படியிருக்க  அன்று ஒருநாள்  காலையில் வழக்கம் போல எழுந்த மேகா  காலை கடன்களை முடித்துவிட்டு  தன் அறைக்கு வர அவளது  கண்ணில் அக்னி  மயக்கமாக இருப்பதால் அவனுக்கு பொருத்தப்பட்டிருந்த கத்திட்டர் தென்பட அருகே வந்தவள் நிறைந்திருந்த  பையை பார்த்து ,

” அச்சோ பார்க்காம இருந்துட்டேனே பேக் நிறைச்சிருச்சே ” என்றவள் நிறைந்திருந்த பையை  மாற்றிக்கொண்டிருக்க , அப்பொழுது தான் மயக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல முழித்து கொண்டிருந்த அக்னிக்கு தெரிந்தது என்னவோ ஒரு பெண் குனிந்தபடி தன் அருகில் ஏதோ செய்து கொண்டிருந்த காட்சி தான் .

அவனோ தான் இருக்கும் நிலை உணராமல் அடிபட்ட தோளை இறுக்கமாக பிடித்தபடி எழ முயற்சிக்க  உடல் வலியின் காரணமாக எழுந்து கொள்ள முடியாமல் தடுமாறினான்.

அப்பொழுது மெத்தை உள்வாங்குவதை கவனித்த மேகா,

” சார் பார்த்து பார்த்து நான் வரேன் ” என அவன் அருகில் சென்றவள் அவனை அணைத்து பிடித்து மெத்தையில் அமர உதவினாள்.

முழுவதுமாக சுயம் பெற்றவன் எழுந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருக்க  சட்டென்று நிமிர்ந்து அவளை பார்த்தவன் தன் இடையோடு சுற்றிருந்த அவளது கரத்தை பார்த்து புருவம் உயர்த்த அவன் பார்த்த பார்வையில்  அரண்டவள் சட்டென்று தன் கையை எடுத்து கொள்ள ,அவளை பார்த்துக்கொண்டே ,

” அஷோக்” என கத்திய அக்னி மீண்டும் கீழே விழ போக சட்டென்று தாங்கி பிடித்து அவனை அமரவைத்தவள் ,

” கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க ” என தன் நா குளறி உளறி மேகா சொல்லி முடிக்கவும் அவளது கழுத்தை நெரித்தவன் ,

” ஏய் அஷோக் எங்க ?என் கன் என் மொபைல் எங்க ?” விழிகளில் தீ தெறிக்க சீறினான் .

“அங்… ” அவனது அழுத்தத்தில் மூச்சு தடைபட பேச முடியாமல் தடுமாறினாள் .

” என்ன ?” பிடியின் அழுத்தத்தை கூட்டியபடி சீறினான் .

“…..” விரிந்த கண்கள் பொருள் இருக்கும் திசையை காட்ட தன் நிலை உணராது அதை எடுக்க முனைந்தவன் வலியில் தடுமாற ,

” ப்ளீஸ் நான் எடுத்து தாரேன் ” என்றவள் அவன் அழுத்திய தன் கழுத்து பகுதியை தடவிக்கொண்டே அவனது பொருட்களை அவனிடம் நீட்ட கிட்டத்தட்ட அவள் கையில் இருந்து பொருட்களை பறித்தவன் அவளை பார்த்து ,

” போ ” என அதட்டிவிட்டு அலைபேசியில் பேசி முடித்த பின் நிமிர்ந்து பார்க்க அங்கே மேகாவோ பதற்றத்தில் தன் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் .

அவனோ அவளை கடுமையாக முறைத்தவன் ,

” ஏய் உன்னை போக சொன்னேன்ல ” என எறிந்துவிழ  ,

” அது இதை க்ளீன் பண்ணணும் ” என திக்கி திணறி  பேசியவளின் பார்வை சென்ற திசையை பார்த்தவனுக்கு கோபத்துடன் சேர்ந்து ஒருவித சங்கடமும் ஆட்கொள்ள மேகா தடுப்பதற்குள்  சட்டென்று கத்திடரை பிடித்திழுத்து  தரையில் எறிய , நிறைந்திருந்த பை கீழே விழுந்து சிதற , முன்பின் தெரியாத பெண் முன்பு தான் இருக்கும் நிலை கண்டு மிகவும் சங்கடப்பட்டவன் நெற்றியை நீவ அவன் மனதை படித்தவள்  அவன் அருகே வந்து ,

” மிஸ்டர் அக்னி ரிலாக்ஸ்,  லெட் மீ  க்ளீன்,  நீங்க ப்ளீஸ் கொஞ்சம் உக்காருங்க ” பயம் தான் ஆனாலும் அவனிட மென்மையாக பேசி அவன் கரம் பிடித்து அமரவைத்தாள் .

வார்த்தைக்கு வார்த்தை அவளை கடித்து துப்புபவன் ஏனோ அந்த நிமிடம் அவளிடம் எதுவுமே பேசவில்லை , ஆதிசயம் தான்! ஆச்சரியம் தான் !ஆனால் நடந்தது .

அக்னியை அமரவைத்த மறுகணமே  அந்த இடத்தை முகத்தில் எந்த வித அருவருப்பும் இன்றி சுத்தம் செய்தாள் .ஆனால் அதை பார்த்த அக்னிக்கு  தான் மிகவும் சங்கடமாகி விட , ஒரு நொடி உறைந்த நிலையில்  அவளை பார்த்து கொண்டிருந்தவன் மறு  நொடியே முகத்தில் கடுமையை தத்தெடுத்துக்கொண்டான்   .

அந்த நேரம் அவனை நிமிர்ந்து பார்த்த மேகா , பயந்தபடி வேகமாக சுத்தம் செய்து முடிக்க , அப்பொழுது இஷித்தா  யாரிடமோ சண்டை போடும் சத்தம் அறையில் இருந்த இருவருக்கும் கேட்க , அக்னி யார் அது என்பது போல மேகாவை புருவம் சுருக்கி  பார்த்தான் .

அந்நேரம் அவர்கள் இருக்கும் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அஷோக்கை பார்த்து ,

” டேய் சொல்லிகிட்டே இருக்கேன் உன் இஷ்டத்துக்கு உள்ள வர , வெளிய போடா ” என  திட்டியபடி அவன் பின்னாலே அறைக்குள் நுழைந்தாள்  இஷித்தா  .

தொடரும்