MIRUTHNAIN KAVITHAI IVAL 40.1

cover page-3b275e3f

மிருதனின் கவிதை இவள் 40.1

இரவு கடந்து பொழுதும் புலர்ந்து விட்டது முந்தின இரவு ஏற்பட்ட பதற்றம் மட்டும் இன்னும் மேகாவுக்கு தீரவில்லை.

ஒருவித நடுக்கத்தில் தான் இருந்தாள். ஆனாலும் மனம் தன்னவனை மிகவும் நாட பொழுது விடிவதற்குள் ஒன்றில்லை, ரெண்டில்லை, பலமணிநேரம் வலுவிழந்த கால்கள் பின்ன அந்த அறையின் வாசலிலேயே அவன் கதவை திறக்கும் அரவத்திற்காக காத்து கிடந்தாள்.

விடாமல் கேட்ட பியானோவின் இசை தான் அவளது காதை நிரப்பியதே தவிர, அவன் கதவை திறக்கவே இல்லை. ஒருகட்டத்தில் அஷோக் தான் மேகாவின் நிலை கண்டு வருந்தி தீரனுக்கு சற்று அவகாசம் கொடுக்குமாறு கூறி மேகாவை அவள் அறையில் ஓய்வெடுக்குமாறு கூறினான்.

மேகாவும் உறக்கத்தை மறந்து இதோ இந்த நொடி வரை தீரனை பார்த்து விட மாட்டோமா! என்னும் ஏக்கத்துடன் சோஃபாவில் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு வாசலை பார்த்தபடி குறுகி அமர்ந்திருந்தவளின் இரு கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது.

அழுகையில் கரைந்து கொண்டிருந்தவளின் மனதை வருடுவது போல தீரனின் பூட்ஸ் காலின் சத்தம் அறையின் வாசலில் கேட்டது. உடனே சோஃபாவில் இருந்து எழுந்து கொண்டவள் கலைந்திருந்த சிகையை சரி  செய்து கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை வேகமாக துடைத்தவள் புன்னகை மாறா முகத்துடன் தன்னவனை காண அவன் எதிரே வந்தாள்.

உணர்வற்ற முகத்துடன் அவளை ஏறிட்டவன் கண்டும் காணாதது போல அவளை தாண்டி சென்று குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, அவன் நடத்தைக்கான காரணம் புரியாமல் மிகவும் வருத்தப்பட்டாள்.

பத்து, பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன், இவள் இருப்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கோட்டை மாட்டிக்கொண்டு ஸ்ப்ரேயை பறக்க விட்டு கொண்டு இருக்க, மணியை பார்த்தாள் ஆறை காட்டியது.

இவ்வளவு சீக்கிரமாகவா என்று எண்ணியவள், கணவனையே பார்த்தாள். ஒரு கணமாவது நிமிர்ந்து தன்னை பார்க்கமாட்டானா? என அவளது மனம் பரபரத்தது. தவறி கூட அவன் நிமிர்ந்து பார்க்க வில்லை. நேற்று அவன் காட்டிய காதலுக்கும் இன்று இவன் நடந்து கொள்ளும் விதத்திற்கும் மலையளவு வித்யாசம் இருந்தது.

ஆனாலும், ‘அதான் உன் மேல கோபம் இல்லைனு சொன்னானே அப்புறம் என்ன? நேற்று உள்ள பிரச்சனையில அப்படி இருக்கான். அவன் பேசாட்டா என்ன நீ போய் பேசு.’ தனக்கு தானே ஊக்கப்படுத்திக்கொண்டவள்,

மெதுவாக அவன் அருகே நெருங்கி,

“அதுக்குள்ள கிளம்பிடீங்க?” என்று பேச்சை ஆரம்பித்தாள். அவள் ஏதோ சுவற்றிடம் பேசுவது போல இவன் அவள் பேசும் எதையும் காதில் வாங்காமல் வேகமாக மணிக்கட்டில் கை கடிகாரத்தை அணிந்தவன் காதில் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டு கார் சாவியை எடுக்கவும் அதிர்ச்சியுடன்,

“தீரன்” என அழைத்தபடி அவன் முன்னே வந்தவள், சட்டென்று அவனது கரத்தை பிடிக்கவும். ஒரு பார்வை, ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான்.

‘எட்டி நில்…’ என்றது அந்த அகோர பார்வை. இதே பழைய மேகாவாக இருந்தால் மறுகணம் விலகி நின்றிருப்பாள் ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே, அதுவும் கடந்த சில தினங்களாக அவனுடன் உயிரோடு உயிராய் கலந்து, இன்பமாய் சிரித்து மகிழ்ந்து காதல் வயப்பட்டு இருக்கும் மேகாவால் அப்படி சட்டென்று பின்வாங்க முடியவில்லை. ஒருவித படபடப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

‘ஏன்டா என்னை விட்டு விலகி விலகி போற?’ நிறைந்திருந்த விழிகள் உரிமையுடன் அவனது ஆக்ரோஷ விழிகளை சந்தித்தது. தன்னவளின் பார்வையை சந்திக்க முடியாமல் தீரன் ஒரு கணம் தயங்கினான். ஒரே ஒரு கணம் தன்னவளிடம் விழுந்த தன் மனதை மீண்டும் இழுத்து பிடித்துக்கொண்டவன்,

“என்ன?” என்றான் சீற்றமாக.

“ம்ஹூம்” இடவலாக தலையை அசைத்தவளுக்கு அவன் கேட்ட தோரணையில் கண்கள் கரித்துக்கொண்டு வர பேச்சே வரவில்லை. அவள் அப்படியே நிற்க அவனோ எதுவும் பேசாமல் அப்படியே கடந்து சென்றான். மேகாவின் மனம் மிகவும் அடிவாங்கியது. அவளுக்கு தீரனின் இந்த பாராமுகம் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது.

எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் மேகாவை சீண்டாமல் அவன் ஒருநாளும் பணிக்கு சென்றது கிடையாது. அலமாரியில் உடை எடுக்கும் சாக்கில், தலைத் துவட்டும் சாக்கில் என இப்படி ஏதோ ஒரு வகையில் அவனது பார்வையோ, பேச்சோ, இதழோ என அவளுடன் அவன் இருக்கும் சமயம் அவளை தீண்டாத பொழுதென்பதே கிடையாது.

அவனுடன் கழித்த ஒவ்வொரு பொழுதையும் எண்ணி பார்த்தவளுக்கு மனம் பயங்கரமாக கனத்தது. இதே ஆரம்ப காலமாக இருந்திருந்தால்,

‘போய் தொலையட்டும் நிம்மதி’ என்று இருந்திருப்பாள். ஆனால், இப்பொழுது காதல் கொண்ட மனமானது மற்ற நாட்களை விட இன்று ஏனோ உடையவனை மிகவும் நாட, அவன் பாராமுகம் அவளை மிகவும் வருத்தியது.

 !!!

மெத்தையில் கிடந்த புகைப்படத்தையும் அலைபேசியையும் வெறித்தபடி அமர்ந்திருந்த நேத்ராவின் இதயம் வேகமாக அடித்து கொண்டது. செய்ய போகும் காரியத்தால் வரப்போகும் ஆபத்தை எண்ணி மிகவும் பயந்தாள்.

நேற்று இரவு எப்பொழுது இந்த கவரை பிரித்து பார்த்தாளோ அப்பொழுதே அவளது உறக்கம் எங்கோ சென்றிருந்தது. அதற்கு மேல் நேத்ராவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மறுநாள் விடிந்ததும் கிரணை தொடர்பு கொண்டாள்.

ஆனால், அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதோ மறுபடியும் அலைபேசியில் அவன் எண்ணை அழுத்தியவள் அவனுக்காக காத்திருக்கிறாள்.

தன் அறையின் மெத்தையில் தலையிலும் முகத்திலும் சிறு சிறு பிளாஸ்டருடன் படுத்திருந்த கிரணின் கரத்தில் இருந்த அலைபேசி விடாமல் ஒளித்து கொண்டிருக்க அவன் இதழ்கள் வன்மமாய் விரிந்து கொண்டது.

நேத்ரா எதற்காக தனக்கு அழைப்பு விடுகின்றாள் என்பதை சரியாக கணித்திருந்த கிரண் கொஞ்ச நேரம் அவளை காக்க வைத்துவிட்டு அழைப்பை ஏற்றான்.

“இந்த ஃபோட்டோஸெல்லாம்…” என அவசரமாக ஆரம்பித்த நேத்ராவின் குரல் தயக்கத்தில் சில நொடிகள் நிற்க.

“லுக் நேத்ரா நீ என்ன சொல்ல வரனு எனக்கு தெரியும், உனக்கு அவன் இரக்கம் பார்த்தானா? இல்லைல அப்புறம் ஏன் நீ அவனுக்கு பார்க்குற.” அவளை முந்திக்கொண்டு இவன் பேசினான்.

“ஆனா மேகாவை இதுல இழுத்து விடணுமா என்ன?” மனதுக்குள் தவறாய் படவும் தன் கருத்தை கூறினாள்.

“இதை பத்தி ஏற்கனவே பேசியாச்சு திரும்ப, திரும்ப என்னால பேச முடியாது. உனக்கு விஷால் சாவுக்கு தீரனை பழிவாங்கணுமா வேண்டாமா?” விஷால் பெயரை கூறி நேத்ராவை கிரண் பலவீனப்படுத்த,

“பழிவாங்கணும்.”

“அப்போ சொன்னதை செய். வேற எதுக்கும் தீரன் அசைய மாட்டான். மேகாவோட இழப்பு தான் அவனை கதறவைக்கும்.”

“என்ன இழப்பா நோ அவ உயிருக்கெல்லாம் எதுவும் ஆக வேண்டாம் அவங்க பிரிஞ்சா போதும்.” என்று பதறியவளிடம் சத்தமாக சிரித்தவன்,

“நான் ஒன்னும் காண்ட்ராக்ட் கொலைகாரன் கிடையாது. அது என் வேலையும் கிடையாது, நீ தாரிகாவோட தங்கச்சி, ரொம்ப வருத்தப்பட்ட உனக்கு உதவி பண்றதுக்காக தான் இவ்வளவும் பண்றேன். மத்தபடி மேகா தீரன் எப்படி போனா எனக்கென்ன” அனைத்திற்கும் காரணம் நீ தான் என மொத்த பழியையும் சுவடே இல்லாமல் அவள் தலையில் இறக்கியவன்,

“சி நேத்ரா உனக்காக தான் நானே இறங்கி ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கேன். அதை செயல் படுத்துவதும் செய்யாமல் விடுவதும்  உன் இஷ்டம். உனக்காக பாதை தான் அமைத்து தர முடியும் அதில் செல்வதும் செல்லாமல் இருப்பதும் உன் விருப்பம் தான். நீ கேட்டு தானே நான் உனக்கு உதவி பண்றேன். ஆனா இப்போ ஏதோ நீ இவ்வளவு யோசிக்கிற. அப்போ விஷால் மேல உள்ள காதல் அவ்வளவு தானா?” விஷால் பெயரை சொல்லி அவள் சிந்தனையை பலவீனப்படுத்திய கிரண் நேத்ராவை மேலும் சிந்திக்க விடவில்லை.

விஷாலின் சிரித்த முகமும் அவனுடன் கழித்த இனிமையான தருணமும் அவள் கண்முன் வந்து செல்ல அமைதியாக அழைப்பை அனைத்தவளுக்கு அடுத்து என்ன செய்ய என மனம் மிகவும் குழப்பம் அடைந்தது.

!!!

காலையில் இருந்து யாரிடமும் முகம் கொடுத்து பேச வில்லை. வீட்டில் உண்ணவில்லை. வழிய வந்து பேசிய தன்னையும் தவிர்க்கிறான் ஆனால் வேலையில் மட்டும் மும்முரமாய் இருக்கிறானே என தீரனை கண்டு மிகவும் குழம்பிய அஷோக்கால் வழமை போல தீரனின் மன ஓட்டத்தை கணிக்க முடியவில்லை.

நேற்று என்ன நடந்தது? ஏன் கிரணிடம் தீரன் அவ்வளவு வன்மையாக நடந்து கொண்டான்? என மிகவும் யோசித்த அஷோக் கண் முன் வந்து நின்றது என்னவோ ரிதுராஜ் தான். ரிதுராஜை கிரண் அழைத்து வந்ததால் தான் தீரன் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டான் என எண்ணியவன், அடுத்த நொடி இஷிதாவுக்கு தான் அழைப்பு விடுத்தான். அவனால் இப்பொழுது யோசிக்க முடியவில்லை முக்கியமாக மேகாவின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஏதாவது செய்து பிரச்சனையை சரி செய்ய எண்ணியவன் மறுகணமே இஷிதாவை தொடர்பு கொண்டான்.

காலை துவங்கி மீட்டிங் ப்ரெசெண்டேஷன் என அனைத்து வேலைகளையும் ரோபோ போல செய்த தீரனின் செயலில் வழக்கமாக இருக்கும் நிதானம் மட்டும் இல்லாமல் இருக்க, அதை கவனித்த ரிஷி,

“ஆர் யு ஓகே சார்?” மெல்ல பேச்சு கொடுத்தான்.

அதுவரை மடிக்கணினியிலேயே மூழ்கியிருந்த தீரன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து, “என்ன?” என்றான்.

‘நான் எப்படி இருந்தா உனக்கு என்னடா?’ என்பது உள்ளடங்கி இருந்தது அவன் கேட்ட தோரணையில். அவன் பார்வையில் நெஞ்சில் நீர் வற்றி போக நின்றிருந்த ரிஷி, “ஒன்னும் இல்லை சார் யு ஆர் லுக்கிங் வொரிட்” தைரியத்துடன் கூற,

“சோ” தீரன் புருவம் உயர்த்தினான்.

“நத்திங் சார்”

“அவுட்” என தீரன் கத்த, ரிஷியோ அமைதியாக நிற்க,

“என்னடா?” என தீரன் கர்ஜிக்கவும்,

“இந்த டாக்யூமென்ட்டை என்ன சார் பண்றது?” என திக்கி திணறி ரிஷி கூற, அவனை அழுத்தமாக பார்த்தபடி அதை அவன் கையில் இருந்து வாங்கிய தீரன் முகம் அதிர்ச்சியை வெளிப்படுத்திய மறுகணமே அவன் கரம் அதை கழித்து கசக்கி எறிந்திருக்க,

“வேற டாக்யூமென்ட் ரெடி பண்றேன் சார்” என்ற ரிஷிக்கு தீரன் சிறு தலையசைப்பை மற்றும் வழங்க ரிஷி வெளியேறினான்.

வெளியே ஒன்றுமில்லாதது போல காட்டிக்கொண்டாலும் இதோ அவன் மனதிற்குள் இருக்கும் குழப்பம் அவன் வேலையில் பிரதிபலித்துவிட்டதே.

வேலை விடயத்தில் எவ்வளவு தெளிவுடன் இருப்பவன். ஆனால், இன்று தான் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கிரண் பாஸ்கரின் பெயரை அல்லவா கிறுக்கி உள்ளான். எத்தனை பெரிய கவனக்குறைவு? தவறுதலாக டாக்யூமென்ட் சரி பார்க்காமல் அனுப்ப பட்டிருந்தால், பண நஷ்டத்தை தாண்டி எவ்வளவு பெரிய அவமானம்? அடுத்தவர் சிரிக்கும் படியல்லவா ஆகியிருக்கும். தீரனுக்கு தலையே வெடித்துவிடுவது போல வலித்தது.

“உன் அம்மா, உன் அப்பாவை ஏமாத்தின மாதிரி உன் பொண்டாட்டியும் உன்னை ஏமாத்திர போறா தீரன் உன் மனைவி மீது ஒரு கண் எப்பொழுதும் இருக்கட்டும்.” கிரண் தீரனின் காதில் சொன்ன வார்த்தைகள்! தீரனை அதிர வைத்த வார்த்தைகள்! இதோ இப்பொழுதும் அவனை தடுமாறவைக்கின்ற வார்த்தைகள்! இது போன்ற வார்த்தைகளை கேட்கும் பொழுது யாருக்கும் கோபம் வரும் .

என்ன சிலர், ஏதோ மனநல பாதிக்கப்பட்டவன் பிதற்றுகிறான் என முறைப்புடன் அதை கடந்து செல்லலாம் . ஆனால் தீரனை பொறுத்தவரை அந்த வாக்கியத்தில் அவனது மொத்த கடந்தகாலமும் அடங்கியிருக்கிறதே. அவனால் எவ்வாறு பொறுமையாக கடக்க முடியும்?

வெறும் வாய் வார்த்தைகளிலோ செவிவழியாகவோ ஒரு விடயத்தை கேள்விப்படுவதை விட கண்ணால் அதே விடயத்தை பார்க்கும் பொழுது எவ்வளவு ரண கொடூரமாக இருக்கும்.

தீரன் அந்த வலியை அனுபவித்தவனாயிற்றே சொல்ல போனால் இன்று இந்த நொடி வரை அது அவன் மனதின் ஒரு ஓரத்தில் கிடந்து அழுத்தி கொண்டு தானே இருக்கின்றது.

கொஞ்ச காலங்கள் அதை விட்டு வெளி வந்திருந்தான் ஆனால் இன்று அதை கூறியது மட்டுமில்லாமல் அவன் மனைவியையும் அந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு கிரண் பேசியது தீரனை இப்பொழுதும் கொதிக்க செய்கிறேதே. அதை என்ன செய்ய ?

சரி இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், கிரண் என்னவும் பேசட்டும். ஆனால், தீரன்? அவன் என்ன நினைக்கிறான்? அதுவே இங்கே முக்கியம். ஒருவேளை அவனும்? ச்ச இருக்காது அவனால் அவ்வாறு எண்ண முடியுமா? மாட்டான். ஆனால் அவன் வாழ்க்கையில் வாங்கிய அடி அத்தகையதே? ஒருவேளை அவன் கிரண் கூறியது போல எண்ணிவிட்டால் அதுவே அவன் வாழ்க்கைக்கு அழிவு காலமாய் ஆகிவிடுமே.
தீரனின் மனதில் என்ன இருக்கிறது? அவன் என்ன நினைக்கிறான்? ஏன் மேகாவை விட்டு விலகி செல்கிறான்? இது போன்ற கேள்விக்கான பதில் தீரனிடம் தான் உள்ளது. அவன் மனம் திறக்காத வரை அவன் மனதை படிக்க இயலாது .

விஷம் போல கிரண் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் தீரனின் கோபத்தை தூண்டிவிட்டு அவனது சிந்தனை திறனுக்கு விலங்கிட, மனதளவில் தளர்ந்த தீரனால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை.

பழைய நினைவுகளிலேயே உழன்று தவித்தவனுக்கு ரேஷ்மா செய்த துரோகம் தான் மீண்டும், மீண்டும் கண்ணெதிரே தோன்றி அவனை பார்த்து எள்ளி நகைத்தது. தாயின் துரோகம் ஒருவகையான வலி என்றால் தந்தையின் மரணம் கொடூரமான வேதனை. மனம் வலித்தது.

அனைத்திற்கும் மேல் மேகா, ஒரு மனம் அவளது அருகாமையை நாடினால் மறு மனமோ யாரையும் நம்பாதே ஏமாந்தது போதும் என அனைவரையும் வெறுக்க சொல்லுகிறதே. வீட்டில் இருந்து தப்பித்து இங்கு வந்து அடைந்து கொண்டான். ஆனால் வேதனை இங்கும் இவனை விடாமல் துரத்துகிறதே. அவனால் ஓட முடியவில்லை. இந்த வலி உடனே தீர வேண்டுமே ஆனால் எப்படி? மருந்து எங்கே கிடைக்கும் மனம் தவியாய் தவித்தது.

‘அட முட்டாள் மானிடா யாரிடம் இருந்து எங்கே ஓடுகிறாய் உன் மருந்தே அவள் தானே அவள் முகம் பாரு கவலையெல்லாம் எங்கோ போய்விடுமே. உன்னவளின் ஒற்றை முத்தத்தை விடவா அருமருந்து உனக்கு வேண்டும். அவள் அணைப்பு போதுமே உன் வலி எல்லாம் பறந்து செல்ல.’ என அவனுக்குள் இருக்கும் மனசாட்சி ஒருபக்கம் கத்தி கொண்டு இருக்க,

எங்கே இவன் காதில் அது விழுந்தால் தானே, இவன் தான் கிரணின் வார்த்தைகளில் விழுந்து தன் சுயத்தை தொலைத்து அலைகிறானே. சிந்தனைகள் எங்கெங்கோ முட்டி மோத அதற்குமேல் அலுவலகத்தில் இருக்க முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

பல்வேறு சிந்தனைகளின் உழன்று தவித்த தீரனின் இறுக்கமான பிடியில் சிக்கிக்கொண்ட கார் சாலையில் காற்றைக்‌‌ கிழித்துக் கொண்டு பறந்தது.அவனால் அதற்கு மேல் முடியவில்லை. எதையோ தேடி திரிந்தவன் இறுதியில் எங்கோ விழுந்த கதையாக பாரில் வந்து தலைக்கவிழ்ந்து அமர்ந்தான்.

ஏதோ மொடா குடிகாரன் போல கணக்கில்லாமல் மதுபானத்தை உள்ளே சரித்தான். கண்கள் மிதக்க துவங்கியது. மனம் லேசாக பறந்தது. குடித்தால் தான் இவனுக்குள் இருக்கும் காதலன் முழித்து கொள்வானே மனம் மனைவியை நாட அலைபேசியின் திரையை தடவினான்.

திறந்ததும் கேலரி முழுவதும் அவனவளின் பிம்பம் தான் நிரம்பி வழிந்தது. மேகாவை வித விதமாக புகைப்படம் எடுத்து தன் மனதை போல தன் அலைபேசியிலும் நிரப்பியிருந்தான்.

தொடுதிரைக்கே எண்ணிக்கையில்லா முத்தங்களை வாரி வழங்கினான். மறுகணம் மண்டைக்குள் கிரண் உட்கார்ந்து கொள்ள இப்பொழுது வலி நிறைந்த கண்களுடன் அலைபேசியை வெறித்தான்.

‘என்னை உண்மையாவே காதலிக்கிறியா மேகா? இல்லை போய்டுடி போய்டு.’ அதன் பிறகு அத்தனையும் பிதற்றல்கள் தான். போய்டு, போய்டு என்று நூறு முறை உளறினான் என்றால், அதை விட இருமடங்காக தொடு திரையில் தெரிந்த தன்னவளின் புகைப்படத்தை வருடி முத்தமிட்டிருப்பான்.

தீரன் அலுவலகத்தில் இருந்து நிதானம் இல்லாமல் வேகமாக கிளம்பும் பொழுதே அவனது பாதுகாப்பு கருதி பின்தொடர்ந்த ரிஷி. பாருக்கு வெளியே அவன் வருகைக்காக வெகு நேரமாக காத்திருக்க, பவுன்சர்களின் உதவியுடன் சிறு தள்ளாட்டத்துடன் நடந்து வரும் தீரனை கண்ட ரிஷிக்கு கவலையாக இருந்தது. ஓடி வந்து தீரனை பிடித்து கொண்டான்.

‘என்றுமில்லாமல் இப்படி சுயம் இழந்து குடிக்கும் அளவிற்கு அப்படி என்ன பிரச்சனை?’ என்று எண்ணிய ரிஷி,

“என்னாச்சு பாஸ்” உண்மையான அக்கறையுடன் கேட்டான்.

“ஹாங்” நிமிர்ந்து விரக்தியாக சிரித்தான்.

“அஷோக் சாருக்கு கால் பண்ணவா?” தீரனின் நிலைமையை கண்டு நிஜமாக பதறினான். இந்த இடத்தில் ரிஷியின் விசுவாசம் தான் பேசியது.

“நோ யாரும் வேண்டாம்.” தன் கையையாட்டி ஒரேடியாக நிராகரித்த தீரன் தடுமாறி காருக்குள் ஏறினான்.

“சார் நானே ட்ரைவ் பண்றேன்.” ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருக்கும் தீரனை கண்டு பதறியபடி கூறினான்.

“வேண்டாம் உன் வேலைய பார்த்துட்டு போ.” என்ற தீரன் ஸ்ட்டியரிங்கை அழுத்தமாக பிடித்து கொண்டு அப்படியே சரிந்தான்.

!!!

காலையில் செல்லும் பொழுது மணி என்ன? இப்பொழுது என்ன? இன்னும் வீட்டிற்கு வரவில்லை. மேகாவுக்கு தீரனை நினைத்து ஆதங்கமாக வந்தது.

‘அப்படியென்ன கோபம்? சொன்னால் தானே தெரியும் ஆயிரம் இருக்கட்டும் இது என்ன பழக்கம் பேசி தீர்க்காமல் எங்கோ சென்று ஒளிந்து கொள்கிறான். குடித்திருப்பானா என்ன? டிரைவரும் வீட்டில் அல்லவா இருக்கிறார். கோபத்தில் வண்டி ஓட்டி ஏதாவது நடந்தால்? ஐயோ…’ மேகாவுக்கு தலை சுற்றி கொண்டு வந்தது. உடல் சோர்வும் மன வலியும் ஒன்று சேர்ந்து மேகாவை படுத்தி எடுத்தது.

“மேகா வந்து சாப்பிடு.” என பலமுறை அழைத்த அஷோக் இப்பொழுதும் வந்து அழைத்தான்.

“அவர் வரட்டும் அண்ணா.” மறுத்துவிட்டாள்.

“ரிஷிகிட்ட பேசினேன் அவன் கூட தான் இருக்கான் மேகா நீ வா வந்து சாப்பிடு. பார்க்கவே ஒரு மாதிரி இருக்க மா”

“அவர் வரட்டும் அண்ணா.” பசி வயிற்றை கிள்ளியது இருந்தும் இன்று என்ன ஆனாலும் சரி அவனிடம் பேசி விட வேண்டும் அதன் பிறகு தான் எதுவும் என பிடிவாதமாக இருந்தவள் மீண்டும் மறுத்துவிட, மனம் கேளாமல் அவன் தான் அவள் அறைக்கு பாலை மட்டும் அனுப்பி வைத்தான்.

மணி பத்து ரிஷி வண்டியை ஓட்ட தீரன் ஏதேதோ பேசியபடி வந்தான்.

“சார் மேம் கால் பண்றாங்க” தயங்கியபடி விடாமல் அடிக்கும் அலைபேசியை தூக்கி காட்டினான்.

“எடுக்காத எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அப்புறம் என்னை விட்டுட்டு போயிருவா.” விழிகள் மிதக்க உளறி கொட்டினான்.

அலைபேசி மறுபடியும் சிணுங்கியது இப்பொழுது ரிஷியின் அலைபேசி எடுத்து காதில் வைத்தான்,

 “தீரன் எங்க?” எடுத்த எடுப்பில் மேகாவின் வார்த்தைகள் சூடாக வந்தது.

“மேம் சார் என் கூட தான் இருக்காரு.” தயங்கியபடி கூறினான்.

“அவர் இப்போ இங்க வரணும்.” அழுத்தமான குரலில் கட்டளையாக கூறியவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“யஸ் மேம்” என்றவன்.

“சார் வீட்டுக்கு போவோமா?” பாவமாக கேட்டான்.

“நோ அங்க தவிர வேற எங்க வேணும்னாலும் போ.” சீட்டில் நன்கு சாய்ந்து  கண்மூடியபடி கூறினான் .

‘இது என்னடா வம்பா போச்சு?’ இந்த பக்கம் தீரன் மறுக்க அந்த பக்கம் மேகா முறைக்க என முழித்த ரிஷி தான் கணவன் மனைவிக்கிடையே மாட்டிக்கொண்டு மத்தளம் போல இருபக்கமும் அடி வாங்கினான்.

தீரனின் வருகைக்காக தன் அறையின் பால்கனியில் நின்றபடி மேகா காத்திருக்க, ரிஷியிடம் ஏதோ போதையில் பேசியபடி நுழைந்த தீரன் தன் எதிரே மேகாவை கண்டதும் ரிஷியை இறுக்கமாக பார்த்தவன்,

“எங்கடா கூட்டிட்டு வந்திருக்க?” என கேட்க தீரனை பார்க்க பார்க்க மேகாவுக்கு வருத்தமாக இருக்கவும், அவனை அவள் பிடிக்க போக, உடனே விலகியவன் ரிஷியின் உதவியுடன் தன் அலுவல் அறையில் சென்று அடைந்து கொள்ள,மேகாவுக்கு மிகவும் சித்ரவதையாக இருந்தது.

“இங்க ஏன்டா கூட்டிட்டு வந்த?” அறைக்குள் நுழைந்ததும் ரிஷியிடம் காட்டுக்கத்து கத்தினான்.

“சார் நேரம் ஆச்சு, நீங்களும் அப்செட் ஆஹ் இருந்தீங்க அதான்” மழுப்பினான்.

சட்டென்று நிமிர்ந்து அவனை இறுக்கமாக முறைத்தவன், “உன்கிட்ட நான் கேட்டேனா, நான் என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சிருக்க யு” என்று சீரியவன்.

“போ போய் வெளிய நில்லு ஒருத்தரும் உள்ள வர கூடாது அது தான் இன்னைக்கு உனக்கு ட்யூட்டி அதிக பிரசங்கி” என கத்தினான்.

‘ரெண்டு நாள் கூட நிக்கிறேன் சார் ஆனா உங்க வைஃப் தொல்லை தான் தாங்கவே முடியல சார்’ என மனதுக்குள் புலம்பியவன் அமைதியாக வெளியே சென்று சுவற்றில் சாய்ந்து நிற்க, உள்ளே தீரனுக்கு மனைவியின் அழுத முகத்தை கண்டதும் ஏறிய போதை இறங்கிவிட மீண்டும் மதுபானத்தையும் கையில் நச்சு குழலையும் ஏந்தியபடி அமர்ந்தவன் பழையதை யோசிக்க துவங்கினான்.

உள்ளே நுழையும் பொழுதே முகத்தில் அடித்த மதுபானத்தின் நெடி அவன் எவ்வளவு குடித்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல. மேகாவின் மனம் வலித்தது. ‘இவன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்?’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை. ‘இவனை புரிந்து கொள்ளவே முடியாதா? படுத்துகிறானே எப்படியும் போய் தொலை.’ என விடவும் முடியவில்லை.

‘சரி இப்பொழுது என்னிடம் பேசுவதற்கு என்ன? மீண்டும் சென்று அடைந்து கொண்டால் என்ன அர்த்தம்?.

விட கூடாது என்ன ஆனாலும் சரி இன்றே பேசிவிட வேண்டும் என்னை அவன் ஒதுக்கும் அளவுக்கு அப்படி என்ன தவறு செய்து விட்டேன்? ஒரு நாள் குழைகிறான் ஒருநாள் யாரோபோல் பார்க்கிறான் என்ன நினைத்து கொண்டிருக்கிறான்? குடித்துவிட்டு வரும் அளவுக்கு என்ன கஷ்டம்?’ ரெத்த அழுத்தம் மேகாவுக்கு ஏகத்துக்கும் எகிற. அவன் வருவான் என காத்திருந்து பார்த்தவள் தன் பொறுமையை இழந்து வேகமாக அவன் அலுவலக அறைக்கு சென்றாள்.

“சார் பிசியா இருக்காங்க மேம்” கரம் நீட்டி தடுத்தபடி பதிவு செய்யப்பட்ட ரோபோ போல ரிஷி சொல்ல, மேகாவுக்கு பொறுமை எங்கோ பறந்தது.

“நான் அவர்கிட்ட பேசணும் வழி விடுங்க” பற்களை கடித்தபடி கூறினாள்.

“சார் மீட்டிங்ல இருக்காங்க மேம் ரொம்ப முக்கியமான மீட்டிங்.” என இயலாமையுடன் கூறினான் பாவம் அவன் தான் என்ன செய்வான். கணவன் மனைவி சண்டையில் இவன் உறக்கம் போயிற்றே.

“நான் அவரை பார்க்கணும்.” என அழுத்தமாக கூறியவள் சிறு புயலென அவன் தடுக்க தடுக்க கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து மூச்சு வாங்க தன்னவனை பார்த்தாள். விரல்களுக்கு நடுவே புது விரல் போல வெண்குழல் ஒருபக்கம் புகைந்து கொண்டிருக்க,கண்ணாடி டேபிளில் நானும் இருக்கிறேன் என காலி மதுபான பாட்டில்கள் அலங்காரமாய் அமர்ந்திருக்க . கண்களை மூடிய நிலையில் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

 

தொடரும்