மிருதனின் கவிதை இவள் 40.2
“உங்ககிட்ட தனியா பேசணும்” அவன் முகம் பார்த்து கூறினாள்.தீரன் தன் கண்களை விரித்து கரத்தை பிசைந்து கொண்டிருந்த ரிஷியை பார்த்து,
“வீட்டுக்கோ போ” என உத்தரவிட்டான். மறுகணம் தலையசைத்து திறந்திருந்த கதவை சாற்றிவிட்டு அவன் சென்றுவிட, அதை உறுதி செய்த மேகா, நீண்ட பெருமூச்சை வெளியிட்டு, தீரனை பார்த்து ,
“காத்துகிட்டு இருக்கேன் தீரன், ரொம்ப நேரமா உங்களுக்காக.” துயரம் நெஞ்சை அடைக்க விழிநீரை உள்ளே இழுத்தபடி கூறினாள். அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“ஏன் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை? தப்பே செய்யாம இன்னும் எவ்வளவு தான் என்னை தண்டிக்க போறீங்க?” அடக்கிய ஆதங்கம் அத்தனையும் வார்த்தைகளாக வெளிவந்தது. அவனிடம் பதில் இல்லை. மீண்டும் அதே மௌனம்.
“முகத்தை கூட பார்க்க மாட்டிக்கிறீங்க அப்படி என்ன கோபம்? அவ்வளவு வெறுப்பா என் மேல” மூச்சு வாங்க அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவள்,”பேசுங்க தீரன்.” என்றாள் ஆவேசத்துடன்.
அவனிடம் பதில் இல்லை அவள் முகத்தை கூட அவன் பார்க்க வில்லை ,
“பேசுங்க.” மேகாவின் மெல்லிய குரல் சற்று உயர்ந்தது மூச்சை இழுக்கும் வேகம் கூட அதிகரித்தது.
“பேசுங்க.” அவன் மௌனம் கண்டு பெண்ணவளின் குரல் இன்னும் உயர்ந்தது.
“என்ன பேசணும்?” தீரனின் தடித்த உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.
“என்னை பார்த்து பேசுங்க, என் முகத்தை பாருங்க, என்னை பாருங்க தீரன்.” பற்களை கடித்தபடி கத்தினாள். அவனிடம் அசைவில்லை.அவள் முகத்தை பார்க்க மறுத்தான்.
“என் முகத்தை பாருங்க.” அவன் வதனம் பிடித்து வலுக்கட்டாயமாக தன் முகத்தை பார்க்க வைத்தாள். அவன் பார்த்தான்! அவன் பார்வையில் இருந்த நெருப்பு பெண்ணவளை சுடவில்லை போல, நீர் வழிய அவனது பார்வையை எதிர் நோக்கினாள்.
அவ்வளவு தான்! அதற்கு மேல் அவளால் தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் இழுத்து பிடிக்க முடியவில்லை, தவிப்புடன் அவனை பார்த்தாள். நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போல வலித்தது. மேகாவின் உதடுகள் துடித்தது. அவன் பார்வையும் அவளை விட்டு அகலவில்லை. அவளை பார்க்க பார்க்க நெஞ்சு குழிக்குள் ஏதோ ஒன்று அவனுக்கு வலித்தது.
‘இத்தனை பாடு படுத்துவதற்காகவா அவளை தேடி சென்று திட்டமிட்டு கரம்பிடித்தாய்’ மனசாட்சி கேள்வி கேட்டது ‘இல்லை தான்,ஆனால் மனதிற்குள் பயமாகவே இருக்கிறதே’ சிறு குழந்தையாய் உள்ளுக்குள் புழுங்கினான் .
அதற்கு மேல் அவள் பார்வையை அவனால் சந்திக்க முடியவில்லை விருட்டென்று அவளது கரத்தை தட்டிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்,அவளை ஒருகணம் பார்த்துவிட்டு வேகமாக சென்று ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பிடித்துக்கொள்ள, தீரனின் நிராகரிப்பை மேகாவால் தாங்கிக்கவே முடியவில்லை. ஏன் எதற்கு என்று காரணமும் சொல்லாமல் என்ன இது? தலை அப்படி வலித்தது.
கோபம் ஆத்திரம் கண்ணீர் என அனைத்தையும் தாண்டி ஆழ்மனதில் சட்டென்று ஒருவிதமான வித்யாசமான எண்ணம் அவளுக்கு தோன்றியது. தரையில் அமர்ந்திருந்தவள் வேகமாக எழுந்து அவன் அருகில் சென்றாள்.
தீரனுக்கு தன் மீதே கோபம், தொழிலில் பல முடிவுகளை துணிந்து எடுத்தவனுக்கு எதிர்காலத்தை எண்ணி அவ்வளவு பயமாக இருந்தது.
மேகாவின் காதல் புரியாமல் இல்லை. ஆனால் அவனால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. கடந்த காலத்தை மறக்க முயற்சிக்கிறான். ஆனால் கிரண் பற்றவைத்த நெருப்பு அவன் நெஞ்சுக்குழிக்குள் எரிந்து கொண்டே இருந்தது. இந்த பிரச்சனை எளிதான விடயம் அல்ல. வேரறுக்க வேண்டும், இல்லையென்றால்? அவனே மேகாவை காயப்படுத்த வாய்ப்புள்ளது.
கிரண் பிரச்சனையை சரி செய்து, மனதளவில் தான் தெளிவு பெறாமல் மேகாவை நெருங்கினால் அவளை நிச்சயம் காயப்படுத்த போவது உறுதி. அதை எண்ணி பயந்து தான் விலகி செல்கிறான்.
இதனால் அவள் பாதிக்கப்படுகிறாள் தெரியாமல் இல்லை. தெரிந்தே தான் விலகி நிற்கிறான். ஆனால் அவள் இவ்வளவு வருந்துவாள் என அவன் எண்ணி பார்க்கவில்லை. நிறைந்த கண்களும் சோர்ந்த முகமாக தன் முன்னே தன் ஒற்றை பார்வைக்காக ஏங்கி நின்றவளை கண்டதும் நெஞ்சுக்குழிக்குள் அழுத்தியது.
அவன் கொண்ட கர்வம் அங்கையே உடைந்தது. கடந்த காலம் என்ன கடந்தகாலம்? கிரண் என்ன பெரிய கொம்பனா? உனக்காக ஒருத்தி உருகுகிறாள் இதை விட உனக்கு வேறு என்ன வேண்டும். அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அவளை கட்டி அணைத்துக்கொள் என காதல் மனம் அதட்டாமல் இல்லை.
ஆனாலும் காலம் முழுவதும் தன் கடந்த காலத்தை மறந்து மேகாவை காயப்படுத்தாமல் அவனால் அவளுடன் நிம்மதியாக வாழமுடியுமா? தொழிலில் இருக்கும் மன உறுதி உறவுகள் என்று வரும் பொழுதும் தனக்கு இருக்குமா? அவனுக்கே தெரியவில்லை. கல் எறியப்பட்ட குளம் போல அவ்வளவு குழப்பத்தில் இருந்தான் தீரன்.
‘போதும் தீரா மேகாவிடம் இருந்து விலகி இரு இதுவே அனைவருக்கும் நலம்’ என்று எண்ணியவன் சட்டென்று அவள் பிடித்திருந்த கரத்தை விலக்கிவிட்டு எழுந்து நின்றான்.
அடிவாங்கிய அப்பாவி குழந்தை போல அவனை பார்த்தாள். ஏதோ ஒன்று அவன் இதயத்தை துளைத்தது வேகமாக சென்று ஜன்னல் கம்பிகளை அழுத்தமாக பிடித்து கொண்டான்.
இதையெல்லாம் சகிக்க முடியவில்லை செத்து தொலைந்தால் என்ன? என்று எண்ணும் அளவிற்கு தீரனின் மனம் கனத்தது.
ஓரக்கண்ணால் அவளை பார்த்தான் சட்டென்று எழுந்து நின்றாள்.
புரிந்துவிட்டது நிச்சயம் அவள் இன்று விடமாட்டாள் சண்டையிட போகிறாள். உடைந்து விழுபவள் போல இருந்து கொண்டு அவள் குரலில் உள்ள வேகமும் அவள் பார்க்கும் பார்வையும், நிச்சயம் எனக்கும் பொறுமை ஒரு கட்டத்திற்கு மேல் இருக்காது. சென்றுவிடு தீரா இழந்த வரை போதும். என்று எண்ணியவன் அறையை விட்டு செல்வதற்காக அடுத்த அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள். அப்படியே நின்றுவிட்டான். சண்டையிடுவாள் கேள்வி கேட்பாள் என இவன் எண்ணியிருக்க ஆனால் அவளோ!
எழுந்த வேகத்தில் முன்னே வந்தவள், அவன் சட்டையை பற்றி தன் பக்கம் இழுத்து அவன் இதழில் முத்தம் பதித்தாள். ஆழமாக அழுத்தமாக . அவன் ஆச்சரியத்துடன் அவளை பார்த்தான். ஆனால் அவள் அவனை விட்டு விலக வில்லை, இதை அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை.
மது வாடையும் நச்சு குழலின் மணமும் மேகாவை பாதிக்கவில்லை. அத்தனை காதலுடன் அவனது நிக்கோட்டின் படிந்த இதழில் இளைப்பாறி கொண்டிருந்தாள். சட்டென்று நிமிர்த்து அவன் முகத்தை பார்த்தாள். அவன் அப்படியே நின்றிருந்தான். கொஞ்சமும் அவனை பொருட்படுத்தாமல் அவன் நெற்றி துவங்கி கன்னங்கள் என மாறி மாறி இதழ் பதித்தவள், அப்படியே அவன் மார்பில் முகம் புதைக்க. தீரன் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
இளகிய தேகத்தை சிரமப்பட்டு இறுக்கமாக வைத்து கொண்டான். ஏனோ அவளது அதீத நெருக்கம் அவனுக்குள் தீவிர பயத்தை கொடுத்தது என்பது தான் நிதர்சனமான உண்மை. இரும்பு மனிதன் போல நின்றான். இவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்து கொண்டு வந்தது. ‘அப்படியென்ன இறுக்கம்? தன்னை அணைக்க கூட வில்லையே’ என துக்கம் தாளாமல் அவன் நெஞ்சிலேயே விழுந்து விம்மி அழுதாள்.
“செத்துரலாம் போல இருக்கு தீரன் சத்தியமா. ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க, ஏன் பா என்னால முடியல.” ஏக்கமும் தவிப்புமாய் அழுது கொண்டே திக்கி திணறி கூறினாள். அதுவரை அடைத்து வைக்கப்பட்ட கண்ணீர் மடைதிறந்த அருவியாய் கொட்டி அவன் மார்பை நனைத்தது. கல் மனிதன் போல உணர்வின்றி நின்றான்.
“ஏதாவது பேசுங்க தீரன் என் லவ் உங்களுக்கு புரியலையா என்னை ஏன் கஷ்டப்படுத்துறீங்க.” தொடர் விம்மலுக்கு இடை இடையே வார்த்தைகள் கோர்வை இன்றி வந்து விழுந்தது.
“ல…….வ்” கண்களை மூடி ஆழமாக மூச்செடுத்து, வார்த்தையை இழுத்து கூறி விரக்தியாக சிரித்தான். முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து, வேதனையும் வலியும் அவன் வதனத்தில் தெரிந்தது.
ரேஷ்மா, ராம் பிரசாத் மற்றும் இந்தரின் முகம் தான் அவன் மனக்கண் முன் தோன்றியது சட்றென்று முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன் தன் உணர்ச்சிகளை மறைக்கும் பொருட்டு அவளை விட்டு விலகி திரும்பி நின்றான்.
‘திடிர்னு என்னாச்சு?’ மேகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் விரல்கள் நடுங்கியது ஏதோ தேடினான். வேறு என்ன நச்சு குழலை தான். சில நொடிகள் முயற்சியில் கிடைத்து விட பற்றவைத்தவன் புகையை இழுத்து வெளியிட்டான். நெற்றியில் வியர்வை முத்துக்கள் பூத்திருக்க புருவத்தை நீவினான். தலையை கோதினான். என்ன தான் ஆச்சு இவனுக்கு? புரியாமல் மேகா தான் திணறினாள்.
“தீரன்… தீரன் என்னை பாருங்க” வலுக்கட்டாயமாக அவன் வாயில் இருந்த நச்சு குழலை பறித்து வெளியே போட்டவள் அவன் கரம் பிடித்து தன் முகம் பார்க்க திருப்பினாள்.
“ஏதோ சொன்னியே என்ன சொன்ன?” அவளை கூர்மையமாக பார்த்தபடி வினவினான்.
‘என்ன சொன்னேன் என்றால்? எதை கேட்கிறான்.’ சத்தியமாக அவளுக்கு புரியவில்லை.
“ஏன் வித்யாசமா நடந்துக்குறீங்க என்னாச்சு என்கிட்ட சொல்லுங்க.” அவன் கரம் பிடித்துக்கொண்டே கேட்டாள்.
“ஏய் ப்ச் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே அது” கரம் அசைத்து கேட்டான்.
“என்கிட்ட பேசுங்க என்னை ஏன் அவாய்ட்…” அவள் சொல்லி முடிப்பதற்குள்,
“ப்ச்” கரம் அசைத்து மறுத்தவன், “அதுக்கப்புறம்.” என்றான். உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது கூறியிருப்போமோ என்ன வார்த்தையை விட்டோம் நிச்சயம் தவறாய் ஏதோ கூறியிருக்கிறோம் இப்பொழுது பயத்தில் மேகாவின் இதயம் அடித்து கொண்டது.
“தீரன்…”
“சொல்லு” அதட்டினான்.
“என் லவ்” சிறு பயத்துடன் ஆரம்பித்தாள்.
“ஹான் அதான் அதே தான் சொல்லு சொல்லு சொல்லு.” முகம் பளிச்சிட தன் காதை அவளது உதட்டின் அருகே கொண்டு சென்று கேட்டான்.
“என் லவ் உங்களுக்கு புரியலையா?” அவன் முகம் பார்த்து கூறினாள்.
“என்னை லவ் பண்றியா?”அவளை பார்த்தபடி கேட்டான்.
“ஆமா தீரன் ஐ லவ் யு” முதன் முறை அவனிடம் தன் காதலை அவன் விழி பார்த்து வார்த்தையால் கூறினாள்.
அவனும் அவளை தான் பார்த்தான். அவனது பார்வை அவள் விழி வழியே ஊடுருவி அவள் இதயத்தை தேடியது. அவள் வார்த்தையில் உண்மை இருக்கிறதா? அவள் இதயத்தில் நான் இருக்கிறேனா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது.
“தீரன்” அவனது தோள் பற்றி உலுக்கினாள். கனவில் இருந்தவன் போல,
“ஹான்” என்றான்.
“என்ன சொன்ன?” மீண்டும் கேட்டான்.
“ஐ… லவ் யு” குரல் அவன் செவியை அடைந்த மறுநொடி காற்றில் கரைந்தது.
“கம் அகைன்” அவள் விழிகளை உற்று பார்த்தபடி வினவினான்.
“ஐ லவ் யு”
“கேட்க நல்லா இருக்கு மேகா சத்தமா சொல்லு”
“ஐ லவ் யு”
“ம்ம்ம் இன்னும்”
“ஐ லவ் யு”
“ஐ லவ் யு” மீண்டும் விரக்தியாக சிரித்தவனின் முகத்தில் சோகத்தின் படலம்.
“என்னாச்சு தீரன் ஏன் வித்யாசமா நடந்துக்குறீங்க” அவனிடம் பதில் இல்லை.
“தீரன்” அவனது முகத்தை தன் கையில் ஏந்தியபடி அவனை பார்த்தாள். அவனது முகவாட்டம் அவளை பலமாய் தாக்கியது. எதுவாக இருந்தாலும் சரி செய்துவிட வேண்டும் இனி தன்னவனின் முகத்தில் இந்த சோகத்தை தான் பார்க்க கூடாது என்ற எண்ணம் அவள் குரலில் நிறைந்திருந்தது.
“தீரன்! அக்னி தீரன் பெரிய பிஸ்னஸ் மேன் பணக்காரன் இதெல்லாம் தானே காதலிக்கிற என்னை நீ காதலிக்கல மேகா. என்னோட மனசு என்னுடைய ஆன்மா என்னுடைய உணர்ச்சிகள் அதை நீ காதலிக்கல மேகா” சிவப்பு திரவத்தை வாயில் சிரித்தபடி விரக்தியாக சிரித்தான்.
“நோ இல்லை” கண்ணீருடன் மறுத்தாள்.
“யஸ்”
“யஸ்”
“யஸ்” ஆமோதித்தான் முதலில் அழுத்தமாக பின்பு சத்தமாக பிறகு மெல்லிய குரலில் பரிதாபமாக பின் சத்தமில்லாமல் தலையை மட்டும் அசைத்தான்.
“தீரன்”
“டிவோர்ஸ் பண்ணிட்டு போயிரு” அவள் முகம் பார்க்காமல் திரும்பி நின்றான்.
நாசியை உறிஞ்சிய படி மாட்டேன் என்பது போல தலையை மட்டும் அசைத்தாள்.
” போய்டு “
” முடியாது ” அழுத்தமாக கூறினாள்.
“போய்டு மேகா “
“எங்க?”
“என்னை விட்டு தூரமா…”
“போகலைன்னா…?”அழுதாள்
“நீ செத்துடுவ மேகா. ஐ மே கில் யு கொஞ்சம் கொஞ்சமா உன்னை கொன்னுருவேன்.”
“யு காண்ட்.” என்றவளின் உதடுகள் துடித்து கண்களில் இருந்து நீர் வடிந்தது. காயம்பட்டிருந்த அவளது நெற்றியை வருடியபடி அதில் அழுத்தமாக இதழ் பதித்தவன், “இந்த காயம் நான் கொடுத்தது மேகா.” என்றான் உடைந்து போன குரலில்.
“வலிக்கல.” உதட்டை கடித்து வலியை பொறுத்து கொண்டாள். நிறம் மாறி வருவாய் இருந்த அவளது வலது கரத்தில் உள்ள காயத்தை வருடியவன் மெதுவாய் அதில் இதழ் பதித்து,
“இதுவும் நான் கொடுத்தது தான்.” என்றான். எவ்வளவு முயற்சித்தும் அவன் கண்களில் வழிந்த கண்ணீரை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“எல்லாத்தையும் மறந்திறலாம் தீரன், புதுசா வாழலாம்.” அவனது முகத்தை தன் கையில் ஏந்தி அவன் நெற்றியில் இதழ் பதித்தபடி கூறினாள். சுகமாய் கண்களை மூடி அவளது இதழின் மென்மையை உணந்தவன், கண் மலர்ந்து அவள் முகம் பார்த்தான், அவளும் பார்த்தாள்.
“ஐ வார்ன் யு லீவ் மீ, உன்னை எச்சரிக்கிறேன் போய்டு.” என்றவனின் குரலில் துளியளவும் கடுமை இல்லை. கண்கள் மட்டும் நனைந்திருந்தது. அது என்னை விட்டு போய்விடாதே என ஏங்கி தவித்தது .
“ம்ஹூம்” தலையை அசைத்து மறுத்தாள். அவளது இடையை தன்னுடன் இறுக்கி அணைத்தபடி அவள் முகம் நோக்கி, “ஐ வில் பிரேக் யு.” என்றான், உடைந்த குரலில்.
“இட்ஸ் ஓகே ப்ரேக் மீ.” என்றவளின் இதழும் தீரனின் இதழும் நூலளவு இடைவெளியில் இருக்க இருவரின் மூச்சு காற்றும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.
“ஏன் அன்னைக்கு என்னை காப்பாத்தின? குண்டடி பட்டு சகட்டும்ன்னு விட்ருக்கலாமே ” அவளது கரங்கள் இரண்டையும் எடுத்து முத்தம் பதித்து அவன் நெஞ்சோடு பாதுகாப்பாக வைத்துக்கொண்டான்.
“ஐ லவ் யூ தீரன்.” மிதக்கும் விழிகளும் அஞ்சன விழிகளும் சந்தித்தன.
“நோ பொய். நீ ஒரு அழகான பொய் மேகா. யு வில் லீவ் மீ.” கோபத்துடன் ஆரம்பித்தவனின் வார்த்தைகள் ஏக்கத்தில் முடிந்தது.
“என் கண்ணை பாருங்க உண்மையை தான் சொல்றேன் உங்களுக்கும் தெரியும், ஐ ரீயலி லவ் யு.”
“பொய்” தன்னவளின் நெற்றியுடன் நெற்றி முட்டியவனின் பதில் மட்டும் முரணாய் வந்தது. அவனது ஐவிரல்களும் அவளது ஐவிரலுடன் இறுக்கமாக பிணைந்திருந்தது. உன்னை விட மாட்டேன் என்பது போல அவ்வளவு உறுதியாக இருவரின் விரல்களும் இணைந்திருந்தது. அவன் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் முரணை ரசித்தவளின் கரம் அவன் நெற்றியில் புரண்டு விழுந்த முடி கற்றையை ஒதுக்கி மெல்ல நகர்ந்து அவனது ரோமங்கள் அடர்ந்த தாடியை வருடியது. தீரனின் மனதில் உள்ள கனம் குறைந்து அது எங்கோ பறப்பது போல உணர்ந்தான். கண்களை இறுக்கமாக மூடி ரசித்தான்.
“தீரன்…” மெல்ல அழைத்தாள்.
மேகாவின் கன்னத்தில் இதழ் பதித்து,
“ம்ம்…” என்றான் தீரன் அவனது விழிகள் மூடி தான் இருந்தது.
“ஐ லவ் யு.” சட்டென்று கண்களை திறந்தான். அவன் அவளது விழிகளில் உண்மையை தேடினான். அவளோ அவனது அனல் விழிகளில் காதலை தேடினாள்.
“த்தீர…ன்” அவனது கவனத்தை ஈர்த்தாள்.
“ம்ம்…” அவனால் பதில் பேச முடியவில்லை.
“உங்களை விட்டு என்னால போக முடியாது, என்னை போக சொல்லாதீங்க.” அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
“பயமா இல்லை?” அவள் தலையை வருடியபடி கேட்டான்.
“இல்லை.” மறுப்பாக தலையசைத்தாள்.
“ஏன்?”
“உங்களால இந்த உலகத்துல யார வேணும்ன்னாலும் ஹர்ட் பண்ண முடியும் ஆனா என்னை மட்டும் முடியாது.”
“என்னை நம்பாத மேகா.” என்றவன் அவளது வலது கரத்தை காட்டி ” நீ கதற கதற உன்னை காயப்படுத்தினேன் மேகா வலிய என்னைக்கும் மறக்க கூடாது ” என்றவனின் சட்டை பட்டனை அவன் தடுக்க தடுக்க திறந்தவள் அவனது இடப்புற மார்பை சுட்டி காட்டி ” எனக்கு வலிய கொடுத்துட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இல்லையே ” என்றவள் பல இடத்தில் அவன் மார்பில் வடுவாக இருந்த காயத்தை வருடி அதிலே எண்ணில் அடங்காத முத்தங்களை பதித்தவள் அவன் அசையாது இறுக்கமாக இருப்பதை பார்த்து அவன் நெஞ்சில் இருந்து விலகி சற்றென்று அருகில் இருந்த மதுபான பாட்டிலை டேபிளில் தட்டி உடைத்தவள் அதை அவன் கையில் கொடுத்து அவன் கரம் பிடித்து கூர்முனை கொண்ட பாட்டிலை தன் கழுத்தை நோக்கி கொண்டு வந்து ,
“கில் மீ.” என கத்த, சட்டென்று அவள் பிடியில் இருந்து தன் கரத்தை உறுவிக்கொண்டவன் பாட்டிலை கீழே எறிந்து , “ஐ காண்ட் என்னால முடியாது.” என்று கத்தினான். உடனே அவனது முகத்தை தன் கரங்களில் தாங்கியவள்,
“ஏன்?” என கேட்டாள் தன் விழியை அவனது விழியுடன் கலக்க விட்டபடி. அவனோ அவளது கண்களை ஆழமாக பார்த்தபடி அவளது விழிகளில் இதழ் பதித்தவன்.
“ஏன்னா நீ என் உயிர்.” என்றான்,அவளது நாசியில் இதழ் பதித்து, “நீ என் மூச்சு” என்றான்,
அவளது கன்னத்தில் இதழ் பதித்து. “நீ என் சந்தோஷம். நீ என் துக்கம். நீ இல்லாம நான் இல்லை.” என்றவனின் விழிநீர் அவளது கன்னத்தில் வழிந்த மறுகணம் அவனது சட்டையின் காலரைப் பற்றி தன் பக்கம் இழுத்தவள் தன்னவனின் இதழை தன் இதழுடன் பிணைத்து கொள்ள , நீண்ட நெடிய ஆழமான முத்தத்தில் அவளது உயிரை மொத்தமாக தனக்குள் இழுத்து கொள்ளும் வேகத்தில் அவள் இதழை ஆக்கிரமித்திருந்தவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள் வர , சட்டென்று தன்னவளிடம் இருந்து விலகியவன் ,
” போய்டு நீ என்னை ஏமாற்ற பார்க்கிறாய் ” என மீண்டும் பழையதையே பேச , மேகா தான் தீரனின் நொடிக்கு நொடி மாறும் முரணான குணங்களை கண்டு திணறினாள்.
” போக மாட்டேன் தீரன் புரியாம பேசாதீங்க ” அவளது குரலில் கோபமும் ஆற்றாமையும் எட்டி பார்த்தது.
“ஏன்…?”அதே கேள்வி போதை விழிகள் மிதக்க கேட்டான்.
“பிகாஸ் ஐ லவ் யு”அழுத்தம் திருத்தமாக கொஞ்சமும் அசராமல் திடமாய் பதில் கூறினாள். திணறினாள் தான் ஆனால் அவளுக்கு அலுப்பு தட்டவில்லை ஏதோ பாதுகாப்பற்ற குழந்தை போல மீண்டும் மீண்டும் கேட்கும் தன்னவனின் நிலை கண்டு மேகாவுக்கு கோபத்திற்கு பதில் வருத்தம் தான் வந்தது .
“என் பணத்தை பார்த்து வந்திருக்கும், அது போகும் போது உன் காதலும் போய்டும்.” விரக்தி விரக்தி குரல் மொத்தமும் விரக்தி.
“நோ உங்களை மட்டும் பார்த்து வந்த காதல் இது. எது போனாலும் மாறாது.”
” என்னை பார்த்தா? என்கிட்ட திட்டு வாங்கி திட்டு வாங்கி பைத்தியமாகிட்ட”
“உங்க காதல்ல பைத்தியமாகிட்டேன் தீரன்.” அவன் முகத்தை பார்த்தபடி கூறினாள்.
“மேகா நீ நினைக்கிற மாதிரி நான் கிடையாது. ரொம்ப மோசமானவன் நான் இரக்கமற்றவன்.”
“இட்ஸ் ஓகே தீரன் நான் பார்த்துகிறேன்” அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.
“நோ எல்லாம் கை மீறி போய்டுச்சு. இனிமே முடியாது. போய்டு என்னை விட்டு தூரமா. போய்டு இல்லைனா செத்துடுவ”
“தீரன்”
“லீவ்”
“நோ நோ நோ அப்பாவி மாதிரி என்னை பார்க்காத, இந்த தீரன் ஏமாற மாட்டான். யு காண்ட் லவ் மீ. உன்னால என்னை லவ் பண்ணவே முடியாது.” டேபிளை தட்டி அடித்து கூறியவன் அப்படியே சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
“ஏன்?” அவன் முன்னால் வந்து அமர்ந்து மண்டியிட்டு கேட்டாள். நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்,
“ஏன்னா… ஏன்னா” என தன் முகத்தை அழுத்தமாக துடைத்தவன்,
“ஏன்னா நீ என் அம்மா மாதிரி. என் அம்மா என் அப்பாவை ஒருநாளும் காதலிச்சது கிடையாது. எப்படி நீ என்னை நேசிக்கவே இல்லையோ அப்படி தான் என் அம்மா என் அப்பாவை நேசிக்கவே இல்லை.” விரக்தியாக கூறி சிரித்தவன் சற்றென்று அவள் முகம் பார்த்து,
“உனக்கு ஒன்னு தெரியுமா என் அப்பா என்னை மாதிரி கிடையாது. ரொம்ப ரொம்ப மென்மையானவர். ரொம்ப நல்லவர் யாரையும் காயப்படுத்த மாட்டார்.” என்றவன் நீண்ட பெரு மூச்சை வெளியிட்டு,
“மேகா என் அப்பா எப்படி இறந்தாங்க தெரியுமா?” மீண்டும் அவள் முகம் பார்த்தான். இல்லையென்று தலையசைவளின் பார்வை மொத்தமும் அவன் மீது.
“வா என் கூட நான் காட்றேன்” என்றவன் அவளது கரத்தை பிடித்தபடி போதையில் தன் கால்கள் தடுமாற அந்த இருட்டு அறைக்குள் நுழைந்தான்.
முதன் முதலாய் மேகாவுடன் அங்கே சென்றான் .
மெல்லிய வெளிச்சத்தில் அறையின் பரிமாணம் மேகாவின் பார்வையில் விழுந்தது.
அறை முழுவதும் ஒட்டடையும் தூசியும் படிந்தபடி வித விதமான அழகான புகைப்படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. அது அத்தனையிலும் தீரன் இருந்தான் அவன் அருகில், ஒருவர் அவனை ஒத்த முக அமைப்பில் இருந்தார் அருகில் ஒரு பகுதி மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. ஒரு நீளமான டேபிள் அதில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள்.
அறையில் வித விதமான இசை கருவிகள். ஆனால் அறையின் நடுவில் நீளமான மிகப்பெரிய பியானோ ஆங்காங்கே காய்ந்த ஒரு விதமான நிறத்தில் கறை படிந்திருந்தது மெல்லிய வெளிச்சத்தில் அவளால் அந்த கறை எதனால்? அது என்னவென்று கிரகிக்க முடியவில்லை.
மேகாவின் உள்ளத்திற்குள் பயத்தையும் தாண்டி பல கேள்விகள் எழுந்தது. தீரனை பார்த்தாள், பியானோவையே வெறிக்க பார்த்து கொண்டிருந்தவன் மெதுவாய் அதன் அருகே சென்று,
“இதோ இங்க தான்” அவன் குரல் கனத்திருந்தது.
“இந்த பியானோவை வாசிச்சிகிட்டே.” பியானோவின் முன்பு இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், நொடிகள் கழிய கழிய வாசிக்க தொடங்கினான்.
அவ்வளவு அழகாகவும் இனிமையாகவும் வாசித்தான். அவன் எதிரே அமர்ந்து இமைகளை மூடியபடி ரசித்தாள். வாசிப்பின் வேகம் நேரம் ஆக ஆக கூடியது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்தியவன். அவளை பார்த்தப்படி,
“இப்படி தான் நானும் கண்ணை மூடி ரசிச்சிகிட்டு இருந்தேன்.” என்ற அவனது குரலில் சட்றென்று விழித்தவள் அவனையே பார்க்க அவனோ மேலும் தொடர்ந்து,
“நான் பார்க்க… நான் பார்க்க என் அப்பா” தீரனின் குரல் கரகரத்தது,
“என் அப்பா என் கண்ணு முன்னாடியே கத்தியாலேயே” என்றவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்பதை யூகித்தவள் பதறியப்படி தீரனை பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“கழுத்தை அறுத்துகிட்டாரு மேகா நான் வேகமாக வர்றதுக்குள்ள கத்தியால” அவனால் பேச முடியவில்லை, அவனது ஒற்றை கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது,
“என் முகமெல்லாம் ரத்தம்” மூச்சுவாங்க அழுதான்.
“தடுக்க முடியாம போய்ட்டேன் … தடுக்க முடியாம போய்ட்டேன்” என மீண்டும் மீண்டும் வெறிபிடித்தவன் போல கத்தினான். அதிர்ந்து போனவள், அவனை ஆசுவாசப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்ய தன் நிலையில் இருந்து கொஞ்சமும் மாறாதவன் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான். அழுதுகொண்டே கூறினான்.
“ஐயோ அழுகிறானே?” இவள் மனம் வலித்தது.
“என் கண்ணு முன்னாடி, துடி துடிச்சு செத்து போய்ட்டாரு. அவரு ஏன் என்னை தனியா விட்டுட்டு போனாரு? அவரு போயிருக்க கூடாது தானே?” சிறுபிள்ளையை போல அவளிடம் கேட்டான். இவளும் அழுதாள். மேகாவின் உடல் அதிர்ந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தவளால் அவனை சமாளிக்க முடியவில்லை.
தீரனுக்கு பழைய நினைவுகள் அவன் முன்பு தோன்றி அவனை அழுத்தியது. கண்களை மூடி திறந்தவன் அவள் முகம் பார்த்து,
“ஏன் என் அப்பா அப்படி செத்தாங்க தெரியுமா?” அவள் கண்களை பார்த்து கேட்டான்.
“ஏன்?” உணர்வுகளை தொலைத்த முகத்துடன் வினவினாள்.
“ஏன்னா என் அம்மா என் அப்பாவை வெறுத்தாங்க ரொம்ப மோசமா வெறுத்தாங்க உன்னை மாதிரி. நீ என்னை வெறுக்குற மாதிரி” என்றான் தெளிவாக.
“தீரன் ப்ளீஸ்.” ‘நான் உங்களை வெறுக்கலை’ என்று சட்டென்று அவளால் சொல்ல முடியவில்லை வார்த்தைகள் மரத்து போயிருந்ததால் வாயில் இருந்து சொற்கள் வர மறுக்க, கண்ணீர் தான் வடிந்து கொண்டே இருந்தது.
“என் அம்மா யாரை நேசிச்சாங்க தெரியுமா? இந்தர், நம்பர் ஒன் ஆக்டர். அத்தனை வருஷம் கழிச்சும் அவங்களால அவங்களோட முதல் காதலை மறக்க முடியல. அவன் கூட என் வீட்ல என் முன்னாடி…” முகத்தை அருவறுப்பாக சுளித்தவன்,
“அப்போ எனக்கு என்ன வயசு தெரியுமா?”
‘ம்ஹும்’ தெரியாது என தலையசைத்தாள்.
“பன்னிரண்டு வயசு. அந்த ஆள் கூட பெட்ரூம்ல” என கண்களை மூடி திறந்த தீரன்.
“நான் அவங்கள என்ன செஞ்சேன்னு கேளேன்.” முகம் இப்பொழுது கோர ரூரபமாய் காட்சியளித்தது. மிரட்சியுடன்,
“என்ன செஞ்சீங்க?” என கேட்டாள்.
“கொன்னுட்டேன். கத்திய எடுத்து குத்தி குத்தி குத்தி முடிச்சிட்டேன்” இதை கேட்ட மேகாவின் கண்கள் அகல விரிந்து கொள்ள,
இவனோ, “அந்த இந்தர் அவனையும் தான். தடுக்க வந்தான் தள்ளிட்டேன் போய்ட்டான்.” என்று எக்களமாக சிரித்தான். மேகாவின் இதயம் தாறுமாறாக துடித்தது.
“இந்த கை” என தன் வலது கரத்தை பார்த்த தீரன்,
“கறை ஒரே ரத்த கறையா இருக்கு மேகா.” என்றவன் தன் முகத்தை அழுத்தமாக தேய்த்து,
“என் மனசு முழுக்க ரணமாகி இருக்கு ரொம்பவே வலிக்குது. நிறைய இழந்துட்டேன். துரோகம் வலி என்னை துரத்துது பன்னிரண்டு வயசுல இருந்து ஓடுறேன் இன்னும் ஓடுறேன் அது என்னை விடாம துரத்திட்டே இருக்கு.” என புலம்பியவன் மேகாவை பார்த்து அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து,
“நீ ஏன் அழுற. சந்தோஷமா இரு எவ்வளவு பணம் வேணுமோ எடுத்துக்கோ என்ஜாய் யுவர் லைஃப்” என்றவன்,
“உனக்கு ஒன்னு தெரியுமா மேகா நீ, யு ஆர் நாட் குட். நீ அப்படியே என் அம்மா மாதிரி. நீ என்னை நேசிக்க போறதே இல்லை ஆனா” என நிமிர்ந்து அவள் விழிகளை இறுக்கமாக பார்த்தவன்,
“ஆனா நான் ராம் பிரசாத் கிடையாது நான் தீரன். அக்னி தீரன்” என கத்தியவன்,
“ரிதுராஜோட நிழல் உன் மேல் பட்டா கூட வெட்டி போட்ருவேன்.” கடினமான குரலில் விரல் நீட்டி கடுமையாக எச்சரித்தான்.
மேகா எதுவுமே பேச வில்லை கண்களில் நீர் வடிய அவன் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்தது.
அவள் கண்களில் கண்ணீர் கண்ட மறு நொடி அவன் முகம் கனிந்தது,
“மேகா எவ்வளவு அழகா இருக்க, ரொம்ப ரொம்ப அழகா இருக்க, உன்னை பார்த்துட்டே இருக்கனும், உன் கண்ணு,” என நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன்,
“பெண்களோட கண்கள் ரொம்ப மோசமானது. வசியம் பண்ணுது, அடிமையாக்குது, அப்புறம் துரோகம் பண்ணுது, நோ நோ என்னை எதுவும் பண்ண முடியாது மயங்கமாட்டேன் மயங்கமாட்டேன் மயங்கவே மாட்டேன்.” என அவளது துடிக்கும் இதழ்களை பார்த்தபடி கூறியவன், தன்னவளின் வதனத்தை தன் புறங்கையால் வருடி அவளது மென் இதழை தன் இதழ் கொண்டு லேசாக உரசி அப்படியே அன்னை மாடி சாயும் குழந்தையாக அவளது மடியில் சரிந்தவன்.
“மயங்க மாட்டேன். நான் மயங்க…” என மீண்டும் மீண்டும் உளறியபடி அவள் மடியில் தலைவைத்து இளைப்பாற, கண்களில் நீர் வடிய அவனை பார்த்தவள், அவனது அகன்ற நெற்றியை மறைத்திருந்த முடியை ஒதுக்கி குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அவள் விழிநீர் மூடிய அவனது இமையில் இருந்து வெளி வந்த விழி நீருடன் கலக்க, வாஞ்சையுடன் தன்னவனின் சிகையை மேகா மென்மையாக வருடினாள்.
தொடரும்