MIRUTHNAIN KAVITHAI IVAL 42

cover page-03fbf994

MIRUTHNAIN KAVITHAI IVAL 42

மிருதனின் கவிதை இவள் 42

தீரனின் வரவை எதிர்ப்பார்த்து ஆவலுடன் ஹாலில் காத்திருந்த மேகாவிடம் அவளது தோழி திவ்யா வந்திருப்பதாக செக்யூரிட்டி வந்து சொல்ல அவளை உள்ளே அனுமதிக்குமாறு கூறிய மேகா, தன் எதிரே சிறு பதற்றத்துடன் வந்த தோழியை வரவேற்று,

“என்னாச்சு வீட்டுக்கெல்லாம் வந்திருக்க?” என்று கேட்க.

“ஏன் நான் வர கூடாதா?” என்றாள் பதற்றத்தை மறைத்தபடி,

“ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லை சொல்லு.”

“ஒரு ரிப்போர்ட்ல உன் சைன் வேணும் அதான்.” என்றவள் இயல்பாக ஏதோ பேசிக்கொண்டிருக்க, மேகா வீட்டிற்கு வந்தது துவங்கி பரபரப்புடன் கிட்செனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்த அவளது நடவடிக்கை ஒவ்வொன்றையும் கவனித்து வந்த நேத்ரா அவள் ஹாலில் மலர்ந்த முகத்துடன் யாருக்கோ காத்திருப்பதையும் பின்பு தன் தோழியுடன் ஏதோ சிரித்து பேசுவதையும் கவனித்தவள் வேண்டுமென்றே கீழே வந்து தொலைக்காட்டிச்சியை ஆன் செய்தாள்.

‘பிரபல தொழிலதிபர் அக்னி தீரனின் மனைவி மேகவர்ஷினி தன் கணவனை விட்டுவிட்டு தன் முன்னாள் காதலனை கரம் பிடிக்க போவதாக தனது இணையதள பக்கத்தில் தானும் தன் காதலனும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்…’ என மேகா ரிதுராஜ் கண்ணோடு கண்பார்த்தபடி இருந்த பழைய நிச்சயதார்த்த புகைப்படத்தை போட்டு தடித்த எழுத்தில் மேகா மற்றும் தீரனை மீடியா காரர்கள் தொலைக்காட்சி சேனலில் செய்தியாக்கியிருக்க . தொலைக்காட்சியில் அதே செய்தியை ஏற்ற இறக்கத்துடன் படித்து கொண்டிருந்தாள் அந்த செய்தி வாசிக்கும் பெண்.

‘இந்த தகவலை குறித்து நிருபர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அக்னி தீரனின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் பேச மறுத்துவிட்டார். மேலும் தகவலுக்கு டெலி நியூஸுடன் இணைந்திருங்கள்’ என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, மேகவோ தன் கால்கள் துவள கீழே மயங்கி சரிய திவ்யா தான் உடனே பிடித்து கொண்டாள்.

அலுவலகத்தில் தீரனால் நிலைகொள்ளவே முடியவில்லை. அவன் உள்ளம் உலையென கொதித்து கொண்டிருந்தது. தன் தொழில் சம்பந்தமாக பல வதந்திகளை சாதாரணமாக கடந்து வந்த தீரனால் இந்த பிரச்சனையை அவ்வளவு எளிதாக தூக்கி எறிய முடியவில்லை.
மேகாவுடன் ரிதுராஜ் இருக்கும் புகைப்படத்தையும் மேகாவின் பெயருடன் ரிதுராஜின் பெயரை சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருந்த செய்தியையும் பார்க்க பார்க்க தீரனுக்கு தன் உடம்பில் தீ பற்றி எரிவது போல உடலெல்லாம் தகித்தது. அவனால் சகிக்க முடியவில்லை.

போதாக்குறைக்கு அவனை சந்திக்காமலே அவனிடம் விளக்கம் கேட்காமலே அவன் பேச மறுப்பு தெரிவித்தான். என்னும் செய்தி வேறு ஒளிபரப்பாக தீரனுக்கு பொறுமை சுத்தமாக பறந்திருந்தது.

அனைவரும் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள் தீரன் பல்லை கடித்தான். இதில் மாறி மாறி ஒலிக்கும் அலைபேசி சத்தம் வேறு அவனது பொறுமையை சோதிக்க மிகவும் கடினப்பட்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ஆனால், இந்த அமைதியெல்லாம் எத்தனை நொடிக்கோ?

கண்டிப்பாக மேகாவால் இப்படி ஒரு இழிவான காரியத்தை செய்யவே இயலாது என காதல் கொண்ட அவன் மனம் அடித்து கூறியது. மேகாவின் அக்கவுண்ட்டை ஹேக் செய்திருக்கிறார்கள். ஆக இது மேகாவை நோக்கி வீசப்பட்ட கத்தி இல்லை இது என்னை மட்டுமே குறிவைத்து எய்யப்பட்ட கத்தி எங்கே அடித்தால் நான் வீழ்வேன் என தெரிந்து அடித்திருக்கிறார்கள். இல்லை இல்லை அடித்திருக்கிறான்.

பார்ட்டியில் நான் அடித்ததிற்கான எதிர்வினை தான் இது. ‘கிரண்’ என கத்தியபடி கண்ணாடி டேபிள் அதிர ஓங்கி குத்திய தீரனுக்கு இப்பொழுது மட்டும் கிரணை எதிரே கண்டால் இரு விரல் கொண்டே அவனது நெஞ்சை பிளந்துவிடும் அளவு ஆக்ரோஷம் உள்ளுக்குள் எழுந்தது.

அப்படியென்ன என் மீது வன்மம்? என் மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்து விட்டுருக்கிறான்? அதுவும் ரிதுராஜுடன் சம்பந்த படுத்தி கடவுளே என தலையை பிடித்துக்கொண்டவனுக்கு இதை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு ஆத்திரம் வந்தது.

பிரச்சனை எதுவாக இருந்தாலும் என்னிடம் மோதாமல் இதென்ன இழிவான செயல் ச்ச பல்லை கடித்தான். அவன் விரல் இடுக்கில் நச்சு குழல் தகித்து கொண்டிருந்தது.

இதை விட கூடாது என்ன ஆனாலும் சரி மேகாவின் பெயரை கலங்க படுத்தியத்திற்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த இழிவான செயலில் யாரெல்லாம் உண்டோ அத்தனை பேரையும் எழ எழ அடிக்க வேண்டும். ஒருவரையும் விட போவதில்லை.

ஆனால், இப்பொழுது ஆத்திரப்பட்டால் அது மேகாவை தான் பாதிக்கும் அவள் காயப்படுவாள்! அதை அவனால் அனுமதிக்க முடியாது. ஆக என்ன செய்வது? என்ற சிந்தனையுடன் அமர்ந்திருந்தவனின் புருவ மத்தியில் யோசனை சுருக்கங்கள்!
கிரணை வெகு சாதாரணமானவனாக மதிப்பிட்டத்திற்காக தன் மீதே கோபம் கொண்டான்.

இப்பொழுது தீரன் நினைத்தால் கிரணை ஒருவழி செய்து விட முடியும் ஆனால் தாரிக்கா? அவள் ஒருத்திக்காக மட்டும் தான் இத்தனை நாட்களாக கிரண் செய்த அனைத்தையும் பொறுத்து போகிறான். போதாகுறைக்கு இப்பொழுது என்ன செய்தாலும் அதற்கான எதிர்வினை இதை விட படு மோசமானதாக இருக்க கூடும். தன்னை பற்றி கவலை இல்லை ஆனால் தன் செயலுக்கான விலை மேகாவாக இருந்தால் இல்லை இல்லை. இந்த செயலை செய்தது யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்க போவது உறுதி.

ஆனால், இப்போதைக்கு மேகாவை இதில் இருந்து பாதுகாப்பாக அவள் காயப்படாமல் வெளியே கொண்டு வர வேண்டும். வந்த பிரச்சனையை சுவடே இல்லாமல் அழிக்க வேண்டும். எப்படி? மேகாவாக முன்வந்து மீடியாவில் மறுப்பு தெரிவிக்க வேண்டும் அதை தவிர வேறு வழியில்லை. ஆனால், நிச்சயம் தீரனே அதற்கு அனுமதிக்க மாட்டான்.

மீடியாவை பற்றி அவன் அறியாததா. கண்டவனும் கண்ட கண்ட கேள்விகளை கேட்பான் அவர்கள் முன்பு என் மனைவியை நிறுத்த வேண்டுமா? நோ நெவர் என்னவளை கேள்வி கேட்க எவனுக்கும் உரிமை இல்லை. என உறுதியாக இருந்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்பதே மிகவும் குழப்பமாக இருந்தது.

இத்தனை குழப்பத்திற்கு இடையே பல அலைபேசி அழைப்பு வேறு, இவன் பேச வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள் நன்றாக புரிகிறது. பேசுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் இவன் வார்த்தைக்கு எதிர் வாதமே இருக்க கூடாது என்பதை தாண்டி ஒருவருக்கும் பேச தைரியம் வர கூடாது.

ஆக அனைவரின் வாயையும் அடைக்க வேண்டும். அதற்கு பிரச்சனையை சரி செய்ய வேண்டும். பிரச்சனையை சரி செய்தபின்பு தான் மீடியாவை எதிர்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தவனுக்கு,
மேகாவை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது. இந்நேரத்துக்கு அவள் காதிற்கு விடயம் போயிருக்கும் பாவம் நிச்சயம் துடித்து போயிருப்பாள்.

என்னை தேடுவாள். அவளை எப்படி சமாதானம் செய்வது? அழைத்து பேசுவோமா? வேண்டாம். இந்த இடையூறை சரி செய்யாமல் அவளை சந்திக்க கூடாது. என உறுதி கொண்டவன் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்னும் சிந்தனையில் அமர்ந்திருக்க.

வீட்டில் மேகாவின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

“இதை நான் பண்ணல நேத்ரா.”

“நான் எதுவுமே செய்யல திவ்யா.”

மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்ததில் இருந்து இதோடு ரெண்டு மூன்று முறை சொல்லியவளுக்கு அழ கூட தெம்பில்லை அவ்வளவு சோர்வாக காணப்பட்டாள். மேகாவின் நிலையை கண்ட நேத்ராவுக்கு மனதிற்குள் ஒருமாதிரியாக ஏதோ ஒன்று அழுத்தியது. தவறு செய்ததின் தாக்கம் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலித்தது. திவ்யா தான் மேகாவை அணைத்தபடி தைரியம் சொல்லி கொண்டிருந்தாள்.

“நீங்க பொறுமையா இருங்க அண்ணி பார்த்துக்கலாம்.” நேத்ரா வேறு என்ன ஆறுதல் கூறுவாள். குற்றம் புரிந்த மனம் தான் ஒருபுறம் வெதும்பி கொண்டிருக்கிறதே. மேகாவின் கரத்தை பிடித்தபடி ஆறுதல் கூறியவளுக்கு ஒருகட்டத்திற்கு மேல் அவளது அப்பாவி முகத்தை பார்க்க முடியவில்லை.

மேகாவின் மனம் தீரனை மிகவும் நாடியது. கூடவே அவன் என்ன செய்வானோ என்கிற பயமும் உள்ளுக்குள் நிறையவே இருந்தது. அவனை பார்த்து இது நான் செய்யவில்லை என்று உடனே சொல்லி அவனுக்கு புரியவைக்க வேண்டும். மேகாவுக்கு இந்த நொடி இந்த உலகத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை. யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் தன்னவன் தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் தான் அவள் இருந்தாள்.

கிரணின் அலுவலக அறையில்,

“சார் சத்தியமா எனக்கும் இந்த நியூஸுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இது அபாண்டமான பொய் யாரோ வேணும்னே பண்ணிருக்காங்க.” என்ற ரிதுராஜை பார்த்து நக்கலாக புன்னகைத்த கிரண் பாஸ்கர்.

“ஃபோட்டோல போஸ் கொடுத்துட்டு இப்போ இல்லைன்னு சொல்ற பொய் சொல்லாத மேன் நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்.” அதே நக்கலுடன் கேட்க,

“சார் என்ன பேசுறீங்க இது சத்தியமா பொய்யான நியூஸ், மேகா என்னுடைய பாஸ்ட் அவ்வளவு தான். யாரோ மேகாவோட நேமை டேமேஜ் பண்றதுக்காக இப்படி பண்ணிருக்காங்க.” என்ற ரிதுராஜுக்கு அவ்வளவு கோபம் வந்தது. மேகா தீரனின் மனைவி என்றாலும் ஒருகாலத்தில் அவன் காதலித்த பெண் அல்லவா அவளை அனைவரும் இவ்வாறு தவறாக பேசுவதை அவனால் ஏனோ ஜீரணிக்க முடியவில்லை.

“வந்த நியூஸை சொன்னேன். நீ ஏன் டென்ஷன் ஆகுற ரிலாக்ஸ் மேன். தப்பான நியூஸ்ன்னா தொடச்சு போட்டுட்டு போயிட்டே இரு.” என கிரண் சாதாரணமாக கூற. ரிதுராஜ்க்கு மேகாவை எண்ணி மிகவும் கவலையாக இருந்தது.

“எப்படி சார் ஈஸியா எடுத்துக்க முடியும். அதுல நானும் இருக்கேன் சார் கோபமா வருது எங்களுக்கு வேண்டாதவங்க தான் இப்படி பண்ணிருக்காங்க நான் இதை சும்மா விட மாட்டேன் கண்டிப்பா அந்த சேனல் மேல கேஸ் போடுவேன்.”

“அந்த சேனல் மேல கேஸ் போட்டு எதுக்கு. நியூஸை நல்லா பாருங்க ரிதுராஜ் மேகாவே தான் இந்த போஸ்ட் போட்ருக்காங்க. கேஸ் போடணும்னா நீங்க மேகா மேல தான் போடணும்.” என்ற கிரணின் வஞ்சக பார்வை ரிதுராஜ் மீது அழுத்தமாக பதிந்திருக்க, இதை கேட்ட ரிதுராஜ் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள், கிரண் கூறுவது உண்மை தானே இந்த செய்தியை பொறுத்த வரை யாரையும் எதுவும் சொல்ல முடியாதே. இதற்கு முழு பொறுப்பும் மேகா தான் ஏற்றாக வேண்டும்.

ஆம், கிரணின் தயவால் மேகாவின் சமூக வலை தள அக்கவுண்ட்களை ஹேக் செய்த நேத்ரா மேகாவின் அக்கவுண்டில் இருந்து அவள் வெளியிடுவது போல் அல்லவா இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறாள். ஆக வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அனைவர்க்கும் இது மேகா செய்தது போல் அல்லவா இருக்கும்.

ரிதுராஜ்க்கே இப்பொழுது என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. அவனிடம் இந்த செய்தியை குறித்து கேட்ட அனைவரிடமும் தீர்க்கமாக மறுத்துவிட்டான். ஆனால் மேகா பாவம் அவள் என்ன பாடு படுகிறாளோ என அவனால் அவளை பற்றி நினையாமல் இருக்க முடியவில்லை.
முடிந்தளவு தன்னாலான எந்த உதவி வேண்டுமானாலும் அவளுக்கு செய்ய வேண்டும் என முடிவெடுத்தவன் கிரணிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல, கிரண் அடுத்த கணமே நேத்ராவுக்கு தான் அழைப்பு விடுத்தான்.

!!!

“என்னாச்சு ரிஷி.” அழைப்பை ஏற்றதும் இதை தான் தீரன் கேட்டான். எதிர் தரப்பில் என்ன சொல்லப்பட்டதோ முகம் சிவ்வென்று சிவந்துவிட,

“நீ வரவேண்டாம் நான் பார்த்துக்குறேன் நீ அங்கையே இரு நான் சொல்லும் பொழுது செய்.” என்றவனின் ஜாகுவார் சாலையில் சீறி பாய்ந்தது.

டெலி நியூஸ் தொலைக்காட்சி சேனல் அலுவலகத்திற்குள் நுழைந்த தீரன் தனக்காக முன்பே காத்திருந்த அஷோக்கை ஒரு கணம் பார்த்துவிட்டு அவனுடன் நேரே சேர்மேனின் அறைக்குள் நுழைந்தான்.

“அக்னி ஜி நீங்க இங்க?” ஆஜானுபாகுவான தோற்றத்தில் ரௌத்திரம் பொதிந்த கண்களுடன் தன் முன்னே நின்றவனை பார்த்து ஒருவித தயக்கத்துடன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றார் சேர்மேன் சூரஜ் பஹாட்டாச்சாரியா.

தீரனோ தன் அலைபேசியை தட்டி அதில் இருந்த மேகா பற்றிய செய்தியை ஓட விட்டவன்,

“இந்த நியூஸை கொடுத்த ரிப்போர்ட்டர் இப்போ இங்க வரணும்.” என்றான்.

சூரஜோ, “என்னாச்சு சார் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்க, அவரை அழுத்தமாக பார்த்த தீரன்,

“என்ன பிரச்சனைன்னு உனக்கு தெரியாது?” என்று தீரன் நிதானமாக கேட்கும் பொழுதே சூரஜின் இதயம் நின்று துடித்தது.

தீரனை பற்றி அவன் அறியாதது இல்லை. ஆனால், கிரண் பாஸ்கர், வீட்டு பிரச்சனை என்பதால் தீரன் எதுவும் செய்யமாட்டான் மீறி ஏதும் வந்தால் தான் பார்த்து கொள்வதாக கூறியதால் மட்டுமே இந்த செய்தியை இவர்கள் வெளியிட்டார்கள். எப்படியும் தீரனின் ஆபிஸ் பிஆர்ஓ வந்து தங்களை பார்ப்பான் பணம் கொடுப்பார்கள் மாலை செய்தியில் மன்னிப்பு வேண்டி ஒரு நியூஸ் போட்டால் அனைத்தும் முடிந்தது என வழக்கமாக சினிமா உலகத்தினர் மற்றும் மற்ற பெரிய இடத்தை சார்ந்தவர்கள் போல காதும் காதும் வைத்தபடி பிரச்சனை மறைந்து விடும் என்று இவனும் பணத்திற்கு ஆசைப்பட்டு இதை செய்துவிட்டான்.

ஆனால், இப்படி தீரனே அசுரன் போல தன் கண்கள் இடுங்க தன் எதிரே வந்து நிற்பான் என அவன் கொஞ்சமும் நினைக்க வில்லை. இப்பொழுது தீரனை பார்க்கவே உள்ளுக்குள் நடுக்கம் பரவியது. அதை விட கிரணை எண்ணி இன்னும் பயமாக இருந்தது.

உண்மையை கூறினால் அவன் தன்னை விட்டுவைக்க மாட்டான். கூறாவிட்டால் இவன் என்ன செய்வான் என்றே தெரியவில்லை. ஆக மாட்டிகொண்டாயிற்று சேதாரம் இல்லாமல் உயிர் தப்பித்தால் போதும் என நின்றிருந்த சூரஜ்.

“உக்காருங்க சார் எதாவது கூலா குடிச்சிட்டே பேசலாம்.” என அவர் ஆரம்பிக்க, படாரென்று மர நாற்காலியை அவர் அருகே தூக்கி எறிந்தவன்,

“செத்துடுவ வர சொல்லுடா.” தீரனின் நிதானம் காற்றில் பறந்தது. தீரனை அதிர்வுடன் பார்த்த சூரஜ் மறுகணமே,

“வர சொல்றேன் சார்.” என பதறியவன் ரிபோட்டரை அழைக்க, அவனும் இரெண்டு நிமிடம் கழித்து உள்ளே வந்தான்.

உள்ளே வந்தவனோ ருத்ரமூர்த்தியாய் நின்ற தீரனையும் அருகே பத்து பேர் வந்தாலும் அசராமல் அடிப்பேன் என்னும் தோரணையில் இறுக்கமாக நின்றிருந்த அஷோக்கையும் பார்த்தபடி சூரஜிடம் வந்து,

“என்ன சார்?” என பவ்வியமாக கேட்க, அவனை சொடக்கிட்டு தங்களின் அருகே வருமாறு அஷோக் அழைக்க சூரஜை பார்த்தவன் அவர் போகுமாறு சைகை செய்யவும் அவர்கள் அருகில் வந்தவன்,

“என்ன சார்?” என கேட்க, அஷோக்கை தாண்டி அந்த ரிப்போர்ட்டர் முன்னே வந்து நின்ற தீரன்,

“நான் யாருன்னு தெரியுமா?” என கேட்க அவனை முந்தி கொண்டு,

“சார் அவன் புதுசு.” என சூரஜ் சொல்ல அவரை தன் பார்வையாலே அடக்கிய தீரன்,

“சொல்லு தெரியுமா?” என கேட்டான்.

‘இல்லை’ என‌ தன் தலையை மட்டும் ஆட்டினான் ரிப்போர்ட்டர் வெற்றி.

உடனே தீரன் தன் அலைபேசியில் இருந்த மேகாவின் படத்தை காட்டி,

“இவங்களை தெரியுமா?” என கேட்க.

“தெரியும் சார் இந்த பொண்ணு தான் இன்னைக்கு…” என ஏதோ இகழ்ச்சியாக தன் இதழை வளைத்தபடி பேச போக, மேகாவும் தீரனும் அணைத்தபடி நின்றிருந்த அடுத்த படத்தை தீரன் காட்ட அதை பார்த்த ரிப்போர்ட்டரோ முகம் வெளிற சூரஜை காண தீரனோ,

“மேகவர்ஷினி புருஷன் அக்னி தீரன்.” என அழுத்தி சொல்ல, ரிப்போர்ட்டர் வெற்றிக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது.

“யார் சொல்லி இந்த நியூஸ் போட்ட?” நிறுத்தி நிதானமாக தீரன் கேட்க. வெற்றியின் பார்வை சூரஜை உதவிக்கு அழைக்க, அவரோ சொல்லாதே என்பதாய் தன் கண்ணை காட்டியவர் அசையாமல் நிற்க.

இவனோ, “என்ன கேட்குறீங்க ஒன்னும் புரியல சார்.” என சமாளிக்கும் பொருட்டு எதுவுமே அறியாதவன் போல பேச, பொறுமையை இழந்த அஷோக் அவனது சட்டையை பிடித்து,

“என்னடா ஓங்கி விட்டேனுவை உயிரோட இருக்க மாட்ட. யார் சொல்லிடா செஞ்ச?” என சீற,

“என்ன சார் மிரட்டுறீங்க மீடியாவோட பவர் தெரியாம பேசிட்டு இருக்கீங்க.” பதிலுக்கு அவன் விரல் நீட்டி எச்சரிக்கை விடுக்க,

“ஓ என்ன சார் செய்வீங்க உங்க பவரை தான் கொஞ்சம் காட்டுங்களேன்.” என்ற அஷோக் நீட்டியிருந்த அவன் விரலை பிடித்து அவன் கரத்தையும் சேர்த்து முறுக்கி முதுகு பின்னால் அழுத்தி பிடிக்க, அவன் வலியில் கத்தியே விட்டான்.

இதை பார்த்த சூரஜ்க்கு கை கால் உதற,

“அஷோக்” என்ற தீரனின் அழைப்பில் வெற்றியை இறுக்கமாக பிடித்திருந்த தன் கரத்தை விட்ட அஷோக் அவனை விட்டு சற்று தள்ளி வந்து நின்று கொண்டான்.

“யார் சொல்லி நியூஸ் போட்ட சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்.” தீரனின் அழுத்தமான குரலில் இருந்த தாராளமான அமைதி நடக்க இருக்கும் விளைவை தெளிவாக விளக்க, சூரஜ் தான் மிகவும் திணறினார்.

“சார் பேசிட்டு இருக்கும் போதே மேல கை வைக்கிறீங்க இது சரி இல்லை நான் நினைச்சா…” அவன் சொல்லி முடிக்கும் முன்,

“நினைச்சா, ம்ம் நினைச்சா என்னாடா பண்ணுவ கொன்னு போட்ருவேன்.” என அஷோக் தன் புருவம் தூக்க, வெற்றி தடுமாறி இரண்டடி பின்னால் சென்றான்.

“சார் கொலை மிரட்டல் விடுறீங்க இதுக்கு என்ன தண்டனை தெரியுமா, இப்போ கம்ப்ளெயிண்ட் பண்ணினேன்.” சொற்கள் பிதற்ற வார்த்தைக்கு வார்த்தை வெற்றி சூரஜை பார்த்தபடி பேச,

“ஓ கம்ப்ளெயிண்ட் கொடுத்திருவ, எங்க கொடுத்து தான் பாரேன்.” என அஷோக் அவனுக்கு அறைகூவல் விட,

அவனோ, “சார் கண்டிப்பா இதையும் எழுதுவேன் என் பவர் தெரியாம என்கிட்ட மோதிட்டு இருக்கீங்க.” என நடுக்கத்தை மறைத்தபடி கூற,

“கம்ப்ளெயிண்ட் கொடுக்க கை வாயெல்லாம் ரொம்ப முக்கியம் வெற்றி.” என்றான் அஷோக்.

இவ்வாறு அஷோக் வெற்றியிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்க எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இவர்களின் சம்பாஷணையை கவனித்து கொண்டிருந்த தீரனின் பார்வையே சூரஜ் மற்றும் வெற்றியை பயங்கரமாக மிரட்டியது.

உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட அவனது முகத்தில் இருந்து எதையுமே சூரஜால் கணிக்க முடியவில்லை. ஆனால் இங்கே வரும் முன்பே ஓரளவு அனைத்தையும் கணித்து வைத்திருந்த தீரனுக்கு வெற்றியின் பார்வை உறுதியளிக்க தீரனின் பார்வை மொத்தமும் சூரஜ் மீது தான் நிலைகுத்தியிருந்தது.

“சொல்ல போறியா இல்லையா?” அஷோக் வெற்றியை நோக்கி தன் கரத்தை நீட்டும்போழுதே, சூரஜின் அலைபேசி ஒலிக்க, அஷோக்கை பார்த்து வேண்டாம் என்பது போல கையசைத்த தீரன் சூரஜிடம்,

“எடுத்து பேசுங்க முக்கியமான கால்லா இருக்க போகுது.” என்று கூறியபடியே நச்சுக்குழலை பற்றவைத்து கொண்டே டேபிள் மீது ஏறி அமர்ந்த சில நொடிகளில் சூரஜ் கதறியபடி தீரனின் காலை பிடித்திருந்தார்.

“என் பொண்ணை எதுவும் பண்ணிராதீங்க சார்.” என கெஞ்சியவரை எழுந்து நிற்க சொன்ன தீரன்,

“எத்தனை நாளா எனக்கு எதிரா திட்டம் போட்டுட்டு இருந்தீங்க மிஸ்டர் சூரஜ்.” என்று தீரன் நச்சு புகையை வெளியிட்டபடி கேட்க, சூரஜ் அரண்டு விட்டார்‌.

“அக்னி சார் என்ன இப்படி சொல்லிடீங்க நான் போய் அப்படி…” என கும்பிட்டவரை தன் கரம் உயர்த்தி நிறுத்துமாறு செய்கை செய்தவன்,

“எனக்கு இதுக்கெல்லாம் டைம் இல்லை.” என்று சொல்லி,

“இதை செஞ்சது நீங்களா இருந்தாலும் கண்டிப்பா பேக்ரவுண்ட் சப்போர்ட் யாரவது இருக்கனும் யாரது?”

“சார் ஒரு சோர்ஸ் மூலமா நியூஸ் வந்தது.”

“நியூஸ் வந்தா உடனே போட்ருவியாடா.” அஷோக் அவனை அடிக்க பாய தன் கண்களாலேயே அவனை அடக்கிய தீரன்.

“அப்போ யாரு என்ன நியூஸ் கொடுத்தாலும் நீங்க போட்ருவீங்க அப்படி தானே.”

“சார் அது…” பதில் சொல்ல முடியாமல் அவர் தயங்க தீரனோ,

“சரி வெற்றி இங்க வா.” என வெற்றியை அழைத்த தீரன்,

“நான் உனக்கு சூப்பரான ஹாட் பிரேக்கிங் நியூஸ் சொல்றேன் அது இப்பவே உங்க சேனல்ல வரணும்.” என்றவன்.

“பிரபல ஹோட்டலில் ரைட், டெலி நியூஸ் சேனலின் உரிமையாளரின் மகள் விப…” தீரன் சொல்லி முடிக்க வில்லை,

“சார்” என்ற சூரஜின் குரலில் அவ்வளவு கோபம். அவரை ஏளனமாக பார்த்த தீரன்,

“ஏன்டா உன் வீட்டு பொண்ணுக்கு வந்த ரெத்தம் என் வீட்டு பொண்ணுக்கு வந்தா தக்காளி தொக்கா?” என கேட்க, வாயடைத்து நின்ற சூரஜ்க்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

“என்னை மன்னிச்சிருங்க புத்தி கெட்டு போய் செஞ்சிட்டேன் என் பொண்ணை எதுவும் பண்ணிராதீங்க.” என்று கெஞ்சியவரை அற்பமாய் பார்த்த தீரன்,

“என்னை என்ன உன்னை மாதிரின்னு நினைச்சியா, எந்திரிடா…” என சீறிய தீரன்,

“தப்பான இடத்தில கை வச்சிட்ட சூரஜ் பட்டாச்சாரியா இனிமே அனுபவிப்ப விட மாட்டேன் ஒருத்தனையும் விடமாட்டேன் உன்னையும் விடமாட்டேன் உன் பின்னாடி இருக்கானே அவனையும் விடமாட்டேன்.” என கொஞ்சமும் இரக்கமில்லாத குரலில் தீரன் கர்ஜிக்க,

“சார் யாருன்னு சொன்னா என் உயிருக்கு…”

“டேய் அழிச்சிருவேன்.” சூரஜை இடை நிறுத்தியபடி கர்ஜித்த தீரனின் உறுதியான குரலில் செய்தே தீருவேன் என்னும் வெறி தெரிய, இனி எதுவும் செய்ய முடியாது என்கிற நிலையில் சூரஜ் அனைத்தையும் கூறினார்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!