MIRUTHNAIN KAVITHAI IVAL 51.1

cover pic-71fd252b

மிருதனின் கவிதை இவள் 51.1

வீட்டிற்குள் நுழையவே தாரிகாவுக்கு அவ்வளவு  தயக்கமாக இருந்தது. இதே இந்த வீட்டின் வாசலில் வைத்து தானே மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற பொழுது அவளது தந்தை இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றார், தாய் கதறி அழுதாள், தமையன் தன் முகத்தை கூட பார்த்து உள்ளே சென்றானே, ஆனால் தீரன் அந்த நேரத்திலும் தனக்காக பேசினானே தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தன் தந்தையிடம் கெஞ்சினானே. அவனை என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் நினைத்து பார்க்கவே சங்கடமாக இருந்தது, முன்பு தீரனை பேசிய பேச்சுகள் எல்லாம் இப்பொழுது அவளுக்கு நினைவில் வந்து சாட்டையடி போல மனதை கசக்கியது.  தயக்கத்துடன் அப்படியே நின்றவளை மேகா தான் சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்தாள்.

நேரம் கடக்க கடக்க வந்ததிற்கு நேத்ரா ஓரளவு சரியாகிருந்தாள், இப்போதைக்கு அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு மன உளச்சல்  மேகா மற்றும் தீரனை எதிர் கொள்ளவது,  விஷாலின் மரணத்திற்கு பழிவாங்குகிறேன் என்ற பெயரில் கிரணுடன் கூட்டு சேர்ந்து கொண்டு என்னவெல்லாம் செய்துவிட்டாள்.

செய்யும் பொழுது சுயநலமாக இருந்துவிட்டாள் இப்பொழுது தன்னலமற்ற தன் தமையன் மற்றும் அண்ணியை பார்க்க  பார்க்க குற்ற உணர்வு வருத்தி எடுத்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உள்ளம் சொன்னாலும் செய்வதை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா என்று மேகா திரும்ப கேட்டால் என்ன செய்வது என்று யோசித்தே யாரையும் பார்க்காமல் தலை குனிந்த நிலையில் அமைதியாக ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தாள். ஆனால் மேகா அதையெல்லாம் நினைக்க கூட இல்லை, அவளது எண்ணம் தீரனை எப்படி எதிர்கொள்வது என்பதில் நிலைத்திருக்க, வந்ததில் இருந்து எதையோ பறிகொடுத்தது போல இருக்கும் தாரிக்காவை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது.

சொல்லப்போனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தாரிக்கா தான், காதல்  என்று நம்பி கானலில் விழுந்து இப்பொழுது கண்ணீருடன் நிற்கிறாள்.

தாரிக்கா மிகவும் உடைந்து போய் காணப்பட்டாள், எதிர்காலம் குறித்த கேள்வி அவள் முன்னால் பூதாகரமாக வந்து அவளை வெகுவாய் அச்சுறுத்தியது.

முக்கியமாக கிரண்! நேற்று வரை அவளில் பாதி! அன்பான கணவன்! ஆனால் இன்று?ஒரே நாளில் எல்லாம் மொத்தமும் தலைகீழாக மாறிவிட்டதே, அவள் எடுத்த முடிவு தான் ஆனாலும்  பெண்ணவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பாக போலீஸ் படை, புடை சூழ கையில் விலங்கோடு வந்த கிரணை பார்த்த பொழுது அவளது நெஞ்சம் அடைந்த துயரத்தை அவள் மட்டுமே அறிவாள்.

ஒரு நொடியாவது தன்னை பார்த்துவிட மாட்டானா! என்று எவ்வளவு ஏங்கினாள்?  அவனும் பார்த்தான்!

காதல் பார்வை இல்லாவிட்டாலும் சிறு குற்ற உணர்வாவது அவனிடம் தெரிகிறதா இருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்தாள்! ஆனால் அவனோ அவளை அலட்சியமாக பார்த்து ஏளனமாய் இதழை வளைத்தவன் அவளை  யாரோ போல பார்த்துவிட்டு  தலை நிமிர கடந்து சென்றான். அந்த கணமே உடைந்துவிட்டாள்.

ஏன் இவ்வளவு பெரிய ஏமாற்றம். அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்? என் வாழ்க்கையை அழிக்க அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும் பொய்யா. அவள் மனம் குமுறியது.

கணவன்  கெட்டவன் என்று தெரிந்தும் அவளால் சட்டென்று கடந்து வர முடியவில்லை. ஏமாற்றத்தின் வலி அவளது மனதை மிகவும் ரண படுத்தியது.

ஆணோ பெண்ணோ திருமணம் பந்தம் மட்டும் சரியாக அமையா விட்டால் அதை விட கொடுமையான வலி வேறொன்றும் இல்லை, அதனால் ஏற்படும் மன காயத்தை மட்டும் அவ்வளவு  சீக்கிரம் சரி செய்துவிட முடியாது , காலம் மாறும் பொழுது காயம் ஆறிவிடும் தான் ஆனால் மறைந்துவிடுமா? என்றால் பதில் காலத்தின் கையில் தான் இருக்கிறது.

ஒருக்கட்டத்துக்கு மேல் தனிமை தேவை பட மேகாவிடமும் இஷிதாவிடமும் ஓய்வெடுப்பதாக கூறிவிட்டு எழுந்து கொண்ட தாரிக்கா நேராக நேத்ராவின் அறைக்கு சென்றுவிட, தோழிகள் இருவருக்கும் தாரிக்காவை பார்க்க பரிதாபமாக இருந்தது.

தங்கையின் நிலையை பற்றி எண்ணி எவ்வளவு துன்பப்படுவான் என்று இஷிதா தன்னவனுக்காக வேதனை பட, மேகாவும் தீரனை தான் நினைத்து கொண்டிருந்தாள்.

அங்கிருந்து நேராக ஆதிலை சந்திக்க அஷோக்குடன் சென்ற தீரனுக்கு, தலை கை கால் என முக்கியமான பாகங்களில் எல்லாம் கட்டு போட்டப்படி சற்று சாய்வாக படுத்து மாத்திரையின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்த ஆதிலை பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது. அவனை தொந்தரவு செய்யாது, மருத்துவரை சென்று பார்த்து அவனது உடலை நிலை குறித்து விபரம் கேட்டு கொண்டவன். அவனுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்குமாறு கூறி, அவனுக்கான  சிறப்பு கவனிப்பு முறையையும் ஏற்பாடு செய்து அவனது பாதுகாப்புக்கு இரெண்டு பவுன்சர்களையும் ரிஷியை வைத்து ஏற்பாடு செய்தவன், நாளை வந்து அவனை பார்ப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பவும் அவனை தடுத்த அஷோக்,

“உன் கையையும் பார்த்துட்டு போய்டலாம்” என்று சொல்லும் பொழுதே அவர்களிடம் வந்த ரிஷி தீரனிடம்,

“சார் மேம் கால் பண்ணினாங்க  உங்களுக்கு கைல ட்ரீட்மெண்ட் பார்த்தாச்சான்னு கேட்குறாங்க” என்று சொல்லவும் அஷோக் தீரனை பார்த்து சிரிக்க அவனை முறைத்த தீரன் ரிஷியிடம்,

“ஆமான்னு சொல்லுங்க” என்றவன் தனக்கான மருத்துவ சிகிச்சையை பார்த்துவிட்டு அப்பொழுது தான் நினைவு வந்தவனாய்,

“டேய் அஷோக் இந்த கலவரத்துல உன்னை மறந்துட்டேன் டா , நீ நல்லா இருக்கல்ல அடி  ஏதும் இல்லையே” என தன் கட்டுபோட்டிருந்த கையாலே தீரன் அவனை ஆராய முற்பட,

“டேய் டேய் பார்த்து டா அந்த கைய பத்திரமா வை, டாக்டர் ரெஸ்ட் கொடுக்க சொல்லிருக்காங்க கைய கால வச்சிட்டு சும்மா இரு” என்றவனிடம்,

“அதெல்லாம் இருக்கட்டும் நீ ஓகே தானே” என சிறு பதற்றத்துடன் வினவிய தீரனிடம்,

“ஓகே டா எனக்கு ஒன்னும் இல்லை, நம்ம பசங்களும் ஆரியன் டீமும் நேரத்துக்கு வந்ததுனால பெரிய அடி இல்லை, அந்த கம்பெனிக்குள்ள ஒருத்தன் சுட  வந்தான் ஆனா நேரத்துக்கு நம்ம பசங்க வந்துட்டாங்க, அவங்க வரலைன்னா நானும் இதே ஹாஸ்ப்பிட்டள்ள ஒரு பெட்ல கையில ட்ரிப்ஸ்சோட படுத்திருப்பேன்” என்றவனை பார்த்து தன் கனல்விழி இடுங்க முறைக்கவும்,”சும்மா தான் இனி அப்படி பேசல” என இவன் சமாதானம் செய்ய ,

“ஆமா கேட்கணும்ன்னு நினைச்சேன் ஆரியன் கிட்ட நான் இன்பார்ம் பண்ணினேன், நம்ம பசங்களுக்கு யார் சொன்னது அவங்க எப்படி அங்க வந்தானுங்க நீ சொன்னியா” என்ற தீரனின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவன் தங்களை நோக்கி வந்த ரிஷியை காட்டி,

“சார் தான் சொல்லிருக்காரு நாம இருந்த பதட்டத்துல நமக்கு அதெல்லாம் தோணவே இல்லை ரிஷி தான் பசங்களுக்கும் லொகேஷன் அனுப்பி அவங்களையும் உடனே அங்க மூவ் பண்ண வச்சிருக்கான்” என்றதும் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட தீரன் ரிஷியின் தோளை தட்டி,

“தேங்க்ஸ் டா இத்தனை வருஷமா  என் கூடவே இருக்க, நான் சொன்னதையும் செய்யிற நான் சொல்லாததையும் செய்யிற உனக்கு என்ன வேணுமோ கேளுடா” என்றவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்த ரிஷி,

“எனக்கு என்ன வேணுமோ அதை நான் கேட்காமலே பண்ணி கொடுக்கிறீங்க இதுக்கு மேல என்ன பாஸ் வேணும்” என்றவன்,

“ஆரியன் சார் கால் பண்ணினாரு உங்களை மீட் பண்ணனும்ன்னு சொன்னாரு  என்கொய்ரி இருக்காம் நான் நாளைக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கேன் பாஸ், இப்போ  நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க பாஸ், நம்ம பசங்க மூணு  பேருக்கு மட்டும் கொஞ்சம் அதிகமா காயமாகியிருக்கு நான் அவங்களுக்கு என்னன்னு பார்த்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்” என்று முதலாளி சொல்லாமலே அனைத்து வேலையையும் நேரத்துக்கு செய்பவனை மெச்சுதலுடன் பார்த்தவன்,

“பசங்களை நான் நாளைக்கு வந்து பார்க்குறேன், நீ அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம கூட இருந்து பார்த்துக்கோ” என்ற தீரன் ரிஷியின் தோளை தட்டிவிட்டு அஷோக்குடன் வெளியேறினான்.

!!!

இருண்ட வானத்தில் மிளிரிய நிலவொளியில் தென்றல் காற்று முகத்தில் வீச கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த  காருக்கு வெளியே கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு நின்றிருந்த தீரன், அஷோக் இருவரின் மனமும் ஒவ்வொரு விதமான சிந்தனையில் சிக்கி இருந்தது.

“ம்கூம்” தன் தொண்டையை செருமி முதலில் நிலவியிருந்த மௌனத்தை களைத்த தீரன்,”என் மேல ஏதாவது கோபமா?” அஷோக்கின் எண்ணவோட்டத்தை சரியாக கணித்து வினவினான்.

இடவலமாக தன் தலையை அசைத்தவன் நிமிர்ந்து தீரனின் முகம் பார்த்து,

“கோபம் இல்லை சின்ன வருத்தம் இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லிருந்தா நான் இன்னும் கவனமா இருந்திருப்பேன், மேகாக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது. நீயும் தனியா கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.”என்று சொல்லி திரும்பி நிற்க அவன் குரலில் இருந்த வருத்தம் தீரனுக்கு என்னவோபோல் இருக்கவும் அஷோக்கின் தோள் மீது தன் கரம் வைத்த மித்ரன் அவன் திரும்பி பார்க்கவும்,

“சொல்ல கூடாதுன்னு இல்லைடா நான் ஏதாவது சொல்லப்போய் அவசரத்துல நீ ஏதாவது செஞ்சு உனக்கு ஏதாவது ஆகிருமோன்னு தான் உன்கிட்ட சொல்லல, எல்லாத்துக்கும் மேல் உண்மை முழுசும் தெரிஞ்சிக்கிட்டு எல்லார்கிட்டயும் பேசிக்கலாம்ன்னு இருந்தேன் அதுகுள்ள எல்லாமே நடந்து போச்சு, சாரி” என்ற தீரனின் அடிபட்ட கரத்தை வருடியவன்,

” ரொம்ப வலிக்குதா” என்று கேட்க இல்லை என்றவனின் பார்த்து மெலிதாய் சிரித்த அஷோக்,

“அதான் எல்லாம் சரியாகிடுச்சே அப்புறம் ஏன் எதையோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்க தாரிக்காவுக்காக  கில்டியா ஏதும் ஃபீல் பண்றன்னா இப்போவே சொல்றேன் அது அவசிய மற்றது  தீரன், அவளுக்கு நடந்த எதுக்குமே நீ பொறுப்பு கிடையாது, மோரோவர்  அவன் வேண்டாம்ன்னு நீ எவ்வளவோ எடுத்து சொன்ன , நீ மட்டுமா? அப்பா சொன்னாரு அம்மா எவ்வளவு அழுதுருப்பாங்க, நான் சொன்னேன் ஆனா எதையுமே கேட்காம  அவ எடுத்து முடிவுக்கு நீ எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது”

“ம்ம் அப்படி சொல்றது உன் பெரிய மனசு, ஆனா கிரண் அந்த மாதிரி செஞ்சதுக்கு காரணம் நான் தானே. அவன் என்னை ஏதாவது செஞ்சிருக்கலாம், தாரிக்காவோட வாழ்க்கையை இப்படி கெடுத்துட்டானே அதான் என்னால தாங்கிக்கவே முடியல” என்று தன் தழுதழுத்த குரலில் கூறிய தீரனிடம்,

“இது எதிர் பார்த்தது தானே , அப்பா தான் சொன்னாரே இப்போ நாங்க வேண்டாம்ன்னு நீ போற ஆனா ஒருநாள் இதே வீட்டு வாசலுக்கு யாரும் இல்லாம நிற்கதியா வந்து நிப்பன்னு, அவர் சொன்னது போலவே வந்துட்டா நம்மளை மீறி தவறான ஒருத்தனை நம்பி போனா, இப்போ அதுக்கான வினையை அனுபவிக்கிறா இதுல வருத்தப்பட என்ன இருக்கு வீட்டுக்கு போலாம்” என விறுவிறுவென நடந்த அஷோக்கின் கலங்கிய கண்களும் அவனது கருப்பு நிற ஷூவில் பட்டு தெறித்த கண்ணீரும் அவன்  தன் தங்கையின் வாழ்க்கையை பற்றி எவ்வளவு வருத்தத்தில் இருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல, என்னதான் “இதுல வருத்தப்பட என்ன இருக்கு?”என்று அஷோக்  சொன்னாலும் அவன் இந்நேரம் அதீத வருத்தத்தில் இருப்பான் என்பதை தீரன் நன்கு அறிவான்.

வீட்டிற்குள் வந்ததுமே தீரனை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு அஷோக் தன் அறைக்குள் புகுந்து கதவை சாற்றிக்கொள்ள, இறுகிய முகத்துடன் செல்லும் அஷோக்கை வெறித்தபடி நின்றிருந்த தீரன், தன் நெற்றியை நீவியபடி படியேறி தன் அறைக்கு சென்றவன் தனக்காக காத்திருந்த மனைவியின் முகத்தை கூட பார்க்காது நேராக சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டு கதவை வேகமாக அடித்து சாற்ற, அந்த சத்தில் கண்மூடி திறந்த மேகாக்கு தன்னிடம் பேசினால் நிச்சயம் தன்னை காயப்படுத்திவிடுவோம் என்பதற்காகவே தன்னை தவிர்க்கிறான் என்று மேகாவுக்கு நன்றாக புரிந்திருந்தது! மேகா அறியாத அக்னியா! எதிர்பார்த்த எதிர்வினை என்பதால் பெருமூச்சுடன்  தீரனுக்கு உணவை எடுத்து வர  கீழே சென்றாள்.

வழமை விட நேரமே குளித்துவிட்டு வந்தவன், மனைவி அறையில் இல்லாததும் தனக்கு உணவை எடுத்துவர தான் சென்றிருப்பாள் என்று சரியாக கணித்தவன் மனம் கேளாமல் தானே கீழே செல்ல கிளம்பியவன், ஒருகணம் யோசித்துவிட்டு நேத்ராவின் அறைக்கு வந்து கதவை திறந்தான், உள் தாழ்ப்பாள் போடாததால் கதவும் திறந்து கொள்ள சிறு தயக்கத்துடன் உள்ளே எட்டிப்பார்த்தான். டேபிள் விளக்கின் வெளிச்சத்தில் தளர்ந்த கொடிகள் போல ஒரு பக்கம் நேத்ரா உறங்கிக்கொண்டிருக்க மறு பக்கம்  தாரிக்கா படுத்திருந்தாள்.

தான் அணிந்திருந்த காலணியின் சத்தத்தில் அவர்கள் எழும்பி விடுவார்களோ என எண்ணியவன் தன் பாதணிகளை கழற்றி வெளியே வைத்து விட்டு உள்ளே நுழைந்தான்.

நேத்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

“இப்பொழுதாவது புரிந்து கொண்டாளே” என நிம்மதி பெருமூச்சுடன் அவளது முகத்தை மறைத்திருந்த சிகையை காதோரம் ஒதுக்கி விட்டவன் விலகியிருந்த போர்வையை நன்கு போர்த்திவிட்டு, தாரிக்கவிடம்  வந்தவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது, அழுகையில் கரைந்திருப்பாள் போல முகம் முழுவதும் கண்ணீரின் தடம் இருந்தது. காலில் ஏதோ மிதிப்படவும் கீழே பார்த்தான் மாத்திரையின் அலுமினிய கவர் கிடந்தது, எடுத்து பார்த்தான் மேகாவிடம் இருக்கும் தலைவலி  மாத்திரை, சில முறை அஷோக் கேட்டு வாங்கியிருக்கிறான்.

தலை வலி தாங்காமல் கேட்டிருக்க கூடும், மேகா தான் கொடுத்திருப்பாள். தலைவலிக்கு மாத்திரை போட்டாயிற்று மன வலிக்கு? துக்கம் தொண்டையை அடைத்தது வாஞ்சையுடன் அவளது சிகையை கோதினான். கண்ணீர் வந்துவிடுவது போல இருக்கவும் வேகமாக அங்கிருந்து வெளியேறி வீட்டை விட்டு சென்றான். அவன் நேத்ராவின் அறைக்குள் நுழையும் பொழுதே பாத்திருந்த மேகா அவன் வீட்டை விட்டு செல்லவும்,

“தீரன் சாப்பாடு” என அழைத்தபடி அவன் பின்னால் வர,  சட்டென்று நின்றவன் திரும்பி கூட பார்க்காது,

“உனக்கான காரியங்களை மட்டும் பார்த்துக்கோ, எனக்கு வேண்டியதை நான் பார்த்துக்குவேன்” என கத்தரித்தார் போல பேசிவிட்டு விறுவிறுவென வெளியேறி இருந்தான்.

குரலில் அப்படி ஒரு கோபம் அவனுக்கு, இருக்காமல் பின்ன சில நொடிகள் தாமதித்திருந்தாலும் அவள் உயிரே போயிருக்கும் அல்லவா, கிரணின் பிடியில் தன் மனைவி என்று நினைக்கும் பொழுதே எவ்வளவு பயந்தான் என்று அவனுக்கல்லவா தெரியும்.

அங்கே வந்து சேருவதற்குள் அவன் அடைந்த பதற்றம் இதுவரை தீரன் அனுபவித்திராத ஒன்றாயிற்றே! அதுவும் அவர்களின் கைப்பிடியில் சிக்கிக்கொண்டு மேகா கதறியதை பார்த்தவனுக்கு உயிர் உருவியது போல் அல்லவா வலித்தது.

எத்தனை வேகம் எத்தனை ஆக்ரோஷம் சுற்றி இருந்த ஒருவரையும், அவர்கள் வைத்திருந்த ஆயுதம் எதையும் கண்டுகொள்ளாதவன் மின்னல் வேகத்தில் அல்லவா செயல் பட்டிருந்தான்.

கடவுள் அருளில் ஒன்றும் ஆகவில்லை தான், ஒரு வேலை ஆகிருந்தால் தாங்கிக்கொள்ள முடியுமா அவனுக்கு! இது அனைத்திற்கும் காரணம் மேகாவின் அலட்சியமும் தன் பேச்சை கேட்காமல் தன்னிடம் சொல்லாமல் சென்றது தான் என்று கோபத்தில் இருப்பவன், எங்கே பேசினாலோ பார்த்தாலோ கோபத்தில் ஏதும் பேசி அவளை காயப்படுத்திவிட கூடாது என்பதற்காக அவளை தவிர்த்து இருந்தான். போதாக்குறைக்கு தாரிக்காவின் எதிர் காலத்தை குறித்த கவலை வேறு அவனை நிலை குலைக்க தனிமை தேடி சென்றுவிட்டான்.

மணி பன்னிரெண்டை நெருங்கி மறுநாளும் வந்து ரெண்டு மணி கடந்திருந்த நிலையில் கால்கள் தள்ளாட வந்த தீரன் நேரே சென்று தன் தந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டவன் அவரது புகைப்படத்தின் முன்பு நின்று,

“தாரிக்காவோட வாழ்க்கையை எப்படி பா சரி பண்ண போறேன்”என வாய்விட்டே கேட்டவன் முகத்தை மூடிக்கொண்டு தரையில் அமர, மெல்லிய தளிர்விரல்கள் அவனது சிகையை மென்மையாக வருடியது! அவள் தான், என நிமிராமலே உணர்ந்து கொண்டான் அவளை  அப்படியே அவளது இடையோடு கட்டிக்கொண்டு அவளது வயிற்றில் முகம் புதைத்தான், அடிபட்ட  குழந்தை தாயின் மடியை நாடுவது  போல தன்னவளை நாடினான் ! 

அவனது முதுகு தண்டு குலுங்கியது, அழுகிறான்! அவன் கண்ணீரை தன் மணிவயிற்றில் உணர்ந்தவளுக்கும் மனம் பாரமானது , மெதுவாக அவனை அன்னையாக மடி தாங்கியவள் எதுவும் பேசாமல் தலையை மட்டும் கோதி கொண்டே இருந்தாள். அவன் தடுக்கவும் இல்லை அவளிடம் பேசவும் இல்லை இருவருக்கும் அந்த இரவு மட்டும் அல்ல அடுத்தடுத்து வந்த நாட்களும் மௌனமாகவே கடந்தது.

தாரிக்காவுக்கு வேண்டி வீட்டிலும் யாரும் அன்று நடந்த சம்பவத்தை பற்றியோ கிரணை பற்றியோ பேசிக்கொள்ளவில்லை, தாரிக்காவின் பழைய அறையும் சுத்தம் செய்ய பட்டதால் தாரிக்காவும் யாரிடமும் பெரிதாக கதைக்கவில்லை உணவு உண்ணும் வேளையை தவிர மற்ற நேரம் எல்லாம் தன் அறையிலே அடைந்து கிடக்க அவளது மனநிலையை உணர்ந்து எல்லாரும் அவளுக்கு தனிமை கொடுக்க அதேநேரம் கிரண் பாஸ்கரின் கேசும் ஒருபக்கம் சென்று கொண்டிருந்தது.

இப்படியே நாட்கள் நகர ஒரு நாள் காலை தீரன் கட்டில் மேல் அமர்ந்து அடிபட்ட தன் கரத்தில் இருந்த கட்டை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, அதை கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்த மேகா வேகமாக சென்று அவன் கரத்தில் இருந்த மருந்தை பறித்து அவனுக்கு தானே கட்டுப்போட முனையவும் விருட்டென்று தன் கரத்தை விலகிக்கொண்டவன்,

“உனக்கு எத்தனை தடவை சொல்றது நான் பார்த்துகிறேன்னு” என்று சொல்லிவிட்டு கஷ்டப்பட்டு தானே மருந்திட, மேகாவுக்கு தான் அழுகையாக வந்தது. அடிபட்ட நாளில் இருந்து இப்படி தான் செய்கிறான் அவளை காயத்தை தொட கூட விடுவதில்லை. பொறுத்து கொண்டு அமைதியாக சென்றவளுக்கு இன்று கண்ணீர் வந்துவிட,

“நான் கட்டு போட கூடாதா” என கேட்க,

“ஆமா போட கூடாது” என்றவன், “புதன் கிழமை போக வேண்டிய ஸ்கேன், இருந்த கலவரத்துல ஸ்கிப் ஆகிடுச்சு இன்னைக்கு பேசி பிரைவேட் டைம் வாங்கிட்டேன் கிளம்பி ரெடியா இரு”என்று கூறி உடை மாற்றும் அறைக்குள் நுழைய போகவும் அவனை தடுத்தவள்,

“அப்படி நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்னு இப்படி அவாய்ட் பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேட்டவளை அனல் தகிக்க பார்த்தவன்,

“அடீங் பேச வேண்டாம்ன்னு பார்க்கிறேன் என்னை பேச வைக்காத” என்றவனின் கரம் பிடித்து தடுத்தவள்,

“பரவாயில்லை திட்டினாலும் வாங்கிக்கிறேன் அப்படியாவது பேசுங்க, இப்படி தள்ளி வைக்கிற அளவுக்கு நான் என்ன பண்ணினேன் தீரன்” என்றவளை இந்த முறை,

“அடிச்சேன்னா” என  அடிக்கவே கை ஓங்கியவன்  அவளது மிரண்ட பார்வை பார்த்து தன் கரத்தை கீழே போட்டு தன் பொறுமையை முற்றிலும்  தொலைத்தவனாக,

” என்ன பண்ணினேன்னா கேட்குற அன்னைக்கு மட்டும் நான் வர கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் என்ன ஆகிருக்கும்ன்னு இப்போ நினைச்சாலும் வலிக்குது டி, உன்னை என் முன்னால கடத்தும் பொழுதே செத்துட்டேன் தெரியுமா, உன்னை என்ன சொன்னேன் நான் வர்ற வரைக்கும் வீட்டை தாண்டி போக கூடாதுன்னு சொன்னேன் தான அப்புறம் ஏன் டி போன? சரி என்கிட்ட கேட்ருக்கலாம்ல, இதுல ஃபோன் பண்ணினா அட்டென்ட் கூட பண்ண மாட்டிக்கிற இதுல என்ன தப்பு செஞ்சேன்னு கேள்வி வேற, ஏன் இதெல்லாம் தப்பா தெரியல” என்று ஆவேசமாக கேட்டான்.

அவளுக்கோ கண்களில் இருந்து நீர் நில்லாமல் கசிய கன்னத்தை துடைத்து கொண்டவள்,

“சாரி ஒரு டெலிவரி கேஸ் அதான் போனேன் சொல்லிருக்கணும் மறந்துட்டேன், ஃபோன் எடுக்காதது தப்பு தான் எவ்வளவு சாரின்னாலும் கேட்குறேன் ப்ளீஸ் பேசுங்க தீரன்” என்றவள் அவன் அமைதியாக நிற்பதை பார்த்து அவன் அருகில் வந்து அவனது காயம் பட்ட கையை பார்த்து ,

“வலிக்குதா” என மென்மையாக  வருட,”வலிக்காம இருக்க நான் என்ன இரும்பு மனிதனா, ரொம்பவே வலிக்குது” என்றவன் எதை சொல்கிறான்  என்று புரிந்து கொண்டவள், அவன் அருகில் வந்து அவனது வெற்று மார்பை மெதுவாக வருடியவள் அவன் மார்பிலே முத்தமிட்டு,”சாரி” என்று சொல்லி அவன் முகம் பார்க்க தன் நெஞ்சில் அவளது கண்ணீரை உணர்ந்தவனுக்கு அவளது கண்ணீர் ஏதோ செய்ய, அவளை அப்படியே அணைத்து கொண்டவன்,

“ரொம்ப பயந்துட்டேன் டி இப்போ கூட அதை நினைச்சு பார்க்க முடியல, உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்துச்சு  நான் செத்தே போயிருப்பேன் டி” என்று அவளது விழிகளை தன் விழிகளுடன் உறவாட விட்டபடி சொல்ல,

“என் மேல அவ்வளவு உயிரா” என்ற அவளது கேள்விக்கு அமைதியாக அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல்  விலகி செல்லவும் அவனை பின்னால் இருந்து அணைத்திருந்தவள், பக்கவாட்டாக எட்டி அவன் முகம் பார்த்து,”சாரி பா” என்று சொல்ல, அப்பொழுதும் அவளை தன்னிடம இருந்து விலக்கி நிறுத்தியவன்,

“இதுக்கெல்லாம் மன்னிக்க மாட்டேன்” என்று சொல்லவும் மென் சிரிப்புடன் அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள் அவனது கண்களை பார்க்க அவனோ இல்லை என மறுப்பாக தலையசைத்தவன் தன் இதழ் மீது விரல் வைத்து காட்ட, அவன் கேட்டதில் தன் முகம் சிவக்க தீரனின் கழுத்து வளைவில் தன் முகத்தை வைத்து கொண்டாள் மேகா.

தீராத தாபத்தால் முகமெங்கும் ஒருவருக்கொருவர் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டு வந்த இருவரும் ஒரு சேர  இதழை அடைந்து அடுத்த கணமே அணைத்து கொண்டனர்.

தீரனோ மேகாவின் இடையை பற்றியிருந்த கையால் அழுத்தம் கொடுக்க,அவளோ அவனது கழுத்தில் தன் கரத்தை மாலையாக கோர்த்து தன் பக்கம் இழுத்து தன் தேகத்துடன் இன்னும் அழுத்தி பிடித்து கொண்டாள். தங்களின் சுயம் துறந்து பக்கவாட்டாக சிரம் சாய்ந்திருந்த நிலையில் பிணைந்திருந்த இருவரின் இதழும் அவர்கள் பரிமாறிக்கொண்ட முத்தமும் அத்தனை ரம்மியமாக இருந்தது.

பிறகு மெல்ல விலகியவனின் ஒருகரம்  அவளது இடையை வளைத்து பிடித்திருக்க அவனது இதழ்கள் இப்பொழுது அவளது கழுத்தடியில் தஞ்சம் புகுந்தது. அவன் அள்ளி கொடுத்த ஈர முத்தங்கள் ஒவ்வொன்றையும் அவளது தேகத்தில் இருந்து வெளியேறிய அனலே விழுங்கிக்கொண்டது. சிலிர்த்தெழுந்த உணர்வுகளை சிறை பிடிக்க இயலாது  தவித்தவன், மீண்டும் அவளது இதழோடு  தன் இதழை  புதைத்து  முத்தமிட்டபடியே தன்னவளை தன் கையில்  ஏந்தி இதழ்களுக்கு ஓய்வுகொடுக்காது அப்படியே தன் மடியில் அமரவைத்து கொண்டு முத்தமிடுவதை தொடர்ந்தான்.

ஆகா! முத்தங்களில் தான் எத்தனை வகை! கலாப காதலனாய் மாறி தன்னவளுக்கு ஒவ்வொன்றையும் செய்முறையில் உணர்த்தினான்.

முத்தம்! முத்தம்!! முத்தம்!!! தனது உயிரானவளுக்கு முத்தத்தையே பரிசாக வழங்கினான் தீரன்.

ஆவேசமாக பல! நிதானமாய் சில! காதலோடு சில! மோகத்துடன் பல! என இலக்கணம் பாராது  எண்ணிக்கையில்லா முத்தங்களை கர்ணனாக வாரி வழங்கி, கள்வனாக தனக்கு வேண்டியதை திருடி கொண்டு, அவள் மறுத்து சிணுங்கும் நேரங்களில் சர்வாதிகாரியாக தனக்கானதை தட்டி பறித்தவன், இறுதியாக அவள் உயிர் தீண்டி துவண்ட பொழுது  தன்னவளை தன் நெஞ்சில் ஏந்தி  தலைகோதி நெற்றி முத்தம் வைத்து அரவணைத்து கொண்டான் அன்பு கணவனாய்! அழகு காதலனாய்!

தன் உள்ளம் கவர்ந்த பெண்ணே அரவணைக்கும் தாயாய்,  அடம் பிடிக்கும் குழந்தையாய்,   நல்ல தோழியாய், அன்பு காதலியாய், காதல் மனைவியாய் கிடைத்தால் அது ஆணின் அதிர்ஷ்டமாம். அக்னி தீரனை அதிர்ஷ்டக்காரனாக மாற்றியிருந்தாள் அவனது மேக வர்ஷினி.