MIRUTHNAIN KAVITHAI IVAL 6

cover page-aca0139d

மிருதனின் கவிதை இவள் 6

தன் தாயிடம் பேசிட்டுவிட்டு ஹாலில் உள்ள சோஃபா மீது சோர்ந்து அமர்ந்த மேகாவுக்கு அக்னியின் விடயத்தை மறைத்தது  என்னவோ மனதிற்குள் சஞ்சலமாகவே இருந்தது .

தாய் , தந்தையரின் நம்பிக்கையை பொய்த்து விட்டுவிட்டோமோ  என்று எண்ணியவளுக்கு குற்ற உணர்வாக இருக்க,  ஏனோ தன் தாயிடம் மேகாவால் வழமை போல சகஜமாக பேச முடியாமல் போக  , ஏதோ பேசவேண்டும் என்று பேசியவள் வேலை இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்திருந்தாள் .

அவளது மனதிற்குள் மிகவும் குழப்பமாக இருந்தது , வீட்டில் இதை மறைத்தது உறுத்தினாலும் தந்தைக்கோ தாய்க்கோ உண்மை தெரிந்தால் அன்றோடு தன் வேலைக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள் என்பதை எண்ணி பயந்தவள்  , என்ன  ஆனாலும் உயிரை தானே காப்பற்றினேன் ,அதில் தவறில்லை என தன் குற்ற உணர்வுக்கு  சிறிது நேரம் விடை கொடுத்தவள்  . ஒரு மருத்துவராக நாம் செய்தது சரியே என தன் செயலை நியாயப்படுத்தி  சரி தவறை பிரித்து பார்க்க தவறி போனாள் .

இப்படியே சிந்தித்தபடி அமர்ந்திருந்த மேகாவுக்கு இரெண்டு  நாட்கள் கண்முழித்து கிடந்ததன் விளைவாக உறக்கம் வந்து தலைகோத அப்படியே  சோஃபாவிலே சரிந்தபடி உறங்கிப்போனாள்.

அப்பொழுது  திடிரென்று  கேட்ட காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து சாடாரென்று எழுந்தவள் , யாரென்று பார்ப்பதற்காக குறை தூக்கத்துடன்  வாசலுக்கு  செல்ல,  அங்கே நீல நிற சீருடையில் நின்ற ஆடவனை பார்த்து புன்னகைத்தவள் ,

” வாங்க அண்ணா , உள்ள கொண்டு வந்து வச்சிடுங்க நான் கார்டும் பைசாவும்  எடுத்துட்டு வரேன்  ” என வடமொழியில் அவள் பேச , மேகாவை பார்த்து புன்னகைத்தபடி சிலிண்டரை உள்ளே வைத்தவன் காலி சிலிண்டரை அவள் சொல்ல வெளியில் எடுத்துவந்து தன் வண்டியில் ஏற்றிவிட்டு , கார்டில்  பதிந்து கொடுத்து விட்டு அவளிடம் இருந்து பணம் வாங்குவதற்காக காத்திருக்க  அவளும் அவன் அருகே நின்றபடி பர்சில் இருந்து அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்து கொண்டிருந்தாள் ,

அப்பொழுது திடிரென்று  சுவற்றில் தன் தலை மோத தரையில் விழுந்து கிடந்தான்  அந்த சிலிண்டர் காரன் . அங்கே  ருத்ர மூர்த்தியாய்  நின்றிருந்தான் அக்னி  தீரன் .

“அண்ணா என்னாச்சு ?” என்றபடி கீழே விழுந்து கிடந்தவனை எழுப்பி விட நெருங்கிய மேகாவை,

” ஏய் தள்ளி போ ” என தனது கணீர் குரலால் கட்டிப்போட்ட தீரன் , சற்று இறங்கி இருந்த தன் முழு கை  சட்டையை தன் முழங்கை வரை இழுத்துவிட்டபடி நடந்து  வந்து கீழே விழுந்து கிடந்தவனின் மார்பிலே ஓங்கி மிதிக்க அடிவாங்கியவனின் உயிர் பாதியானது .

தீரனின் ருத்ர தாண்டவத்தை கண்ட மேகாவுக்கு,  காரணம் சொல்லாமல் அவன் நடந்துகொள்ளும் விதம் பார்த்து பயமும்,   சிறு கோபமும்  ஒன்றாய் வர , அடிவாங்குபவன் செத்துவிட கூடாது என்பதற்காக  பயம் சுமந்த குரலில் ,

” தீரன் ப்ளீஸ் ” என அழைத்தாள்.

அடுத்தநொடியே அவளை திரும்பிப்பார்த்தவன் ,” என்னடி “என்றான் காட்டமாக .

“அந்த அண்ணாவை விடுங்க அக்னி ப்ளீஸ் ” கண்ணில் நீர் சுரந்தது .

” ….”எதையோ முணுமுணுத்தபடி பற்களை கடித்தவன் அவள் விழிகளை  பார்த்தபடி அந்த நபரை அடி நொறுக்கினான் .

அந்த நபரின் அலறல் சத்தத்தில் பயந்தவள் ,

” ஐயோ அக்னி ஏன் இப்படி வெறிபுடிச்ச மாதிரி நடந்துக்குறீங்க ? ப்ளீஸ் விடுங்க ” என அவனது காலை பிடித்து கெஞ்சாதா குறையாக அவள் கெஞ்ச ,

அவளை அழுத்தமாக முறைத்தவன் கீழே கிடந்தவனின் தலை முடியை  வலிக்கப் பற்றி ,

” என்ன தைரியம்  இருக்கனும் உனக்கு ?” என்று அவனது கண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்ட,

” ஐயோ என்னை விட்ருங்க சார் “என அவன் பயத்தில் தொடர்ந்து அலற , தீரனின் செயலில் விதிர்விதிர்த்து போன மேகவோ அக்னியை தடுக்கும் வழி தெரியாமல் தவித்தாள் . ஆனால்  இனி ஒரு நொடி தாமதித்தால்  கூட அவன் உயிர் போவது நிச்சயம்  என அவளது மூளை அவளுக்கு நடக்க போகும் விளைவை எடுத்து கூற , தைரியத்தை வரவழைத்தபடி  , அந்த நபரை மறைத்து கொண்டு அக்னிக்கு எதிரே வந்து  நின்றவள் ,

” அக்னி என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? முதல்ல துப்பாக்கியை கீழ போடுங்க ” முகம் சிவக்க கத்தினாள் . அவன் பார்க்க மேகாவின் முதல்  கோபம் சிறு குழந்தையின் கோபம் போல ரசிக்கும்படியாக இருக்க ,  இதுவரை அவன் பார்த்த மேகாவுக்கும் இப்பொழுது பார்ப்பவளுக்கும் சிறு வித்யாசம் இருக்க,  அதை ரசித்தவன்  , 

” முதல்ல உன் ட்ரெஸை ஒழுங்கா போடு ” என அவளை ஓரமாக தள்ளிவிட்டு  பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தவனை இகழ்ச்சியாக  பார்த்தவாறு அக்னி நெருங்க,

” அக்னி  அவரை விடுங்க ” கெஞ்சினாள்.

” ஏய் அவன் சரி இல்லை டி ” எடுத்து கூறினான்.

“அதுக்கு கொலை பண்ணிருவீங்களா ?” நாசி துடிக்க கேட்டாள் .

” ஏய் எதிர்த்து பேசாத ” கோபத்தை அடக்கியபடி கூறினான் .

” முதல்ல துப்பாக்கியை கீழ போடுங்க , அவர் மேல உள்ள தப்பை சொல்லுங்க, அதை விட்டுட்டு இப்படி முரட்டுத்தனமாக நடந்துக்காதீங்க”

அக்னியின் கண்மூடித்தனமான கோபத்தை பற்றி  நன்கு  அறிந்தவள்,  அசம்பாவிதம் ஏதும் நடந்துவிட கூடாது என்கிற பயத்தில் தன்னையும் அறியாமல் அவனிடம் கோபம் கொண்டாள்.

” தப்….பை சொல்…லனுமா ” என கோபத்தில் அவளை நெருங்கி அவளது பின்னங்கழுத்தை தன் ஒற்றை கையால் பற்றியவன் ,

” உன்னை இங்க பார்த்தான் டி ” என தன் ஒற்றை விரலால் பெண்ணவளின் மறைக்கப்பட்ட பாகத்தை  தொட ,நெருப்பென கொதித்தவள் பட்டென்று அவன் கையை தட்டிவிட்டு  தன் ஆடையை சரி செய்து கொண்டு , எந்த ஒரு பெண்ணுக்கும்  வரும் இயல்பான கோபத்துடன் அக்னியின் விழிகளை ஏறிட்டாள் .

இதுவரை அவனை ஈர்த்த அவளது அஞ்சிய அஞ்சன விழிகள்,  அவளது அப்பாவித்தனம் என அனைத்தையும் தாண்டி இன்று இந்த நொடி அவளது ஒழுக்கம் தீரனை மிகவும் ஈர்த்தது . இதுவரை அவன் பார்த்த பெண்களில் மேகா மிகவும் வித்யாசமாக தெரிந்தாள் , அவளை சுவாரசியமாக  பார்த்தான் .

 அவனது பார்வையில் தெரிந்த மாற்றம் கண்டு  ஒருவித படபடப்புடன் நின்ற மேகாவுக்கு, அக்னியின் இதுபோன்ற காட்டுத்தனமான  நாகரிகமற்ற  செயல் ஒருவித எரிச்சலை  உண்டாக்கியது .

முதன் முதலாக  அக்னியை காப்பாற்றி  தவறு செய்துவிட்டோமோ  என  யோசித்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது .

ஒரு அந்நிய ஆணின் தொடுகையில்  வரும் இயல்பான கோபம் தான் மேகாவுக்கும் வந்தது . அந்த நபர் பார்த்ததை தாண்டி அக்னியின் தொடுகை மேகாவுக்கு  அதீத கோபத்தை கொடுத்தது,  மேலும்  ஆடையை சரி செய்யாமல் அவன் முன்பு நின்ற தன் சுதாரிப்பின்மையை எண்ணி  தன்னையே மனதிற்குள் திட்டிகொண்டவள் கலக்கமான மனநிலையில் கண்களில் கண்ணீர் வடிய நின்றாள்.

அக்னியின் எண்ணத்தில் தவறில்லை என்றபோதிலும்  ஏனோ அவனது செயலை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை , இதயத்தின் கொதிப்பு மெல்ல மெல்ல அடங்கியிருக்க ,

சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட  மேகா   , அரை உயிராய்   கிடந்த அந்த சிலிண்டர் காரனை அருவருப்பான  பார்வை ஒன்று பார்த்தவள் ,

” இந்தாங்க பைசாவை புடிங்க , உயிர் வேணும்ன்னா கிளம்புங்க இங்க இருந்து ” என்று கூற, வெட்கத்தில் கூனி குறுகியவன்  அக்னியின் பஸ்ம மாக்கும் பார்வையை கண்டு பயந்தபடி நொண்டி கொண்டே   உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து செல்ல போக , அக்னியின் இரும்பு கரங்களோ அவனை விடமாட்டேன் என்பதுபோல அவனது கழுத்தை வளைத்து பிடிக்க ,மேகாக்கு தான் பொறுமை எங்கோ பறந்து போனது ,

” அக்னி உங்க கூட  என்னால முடியல , ப்ளீஸ் விடுங்க அவரை, அவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கு , செத்து போய்ட போறாரு ” என்றாள் ஆதங்கத்துடன் .

” அதுக்கு ” என்று ஏளனமாய் சிரித்தவனை கண்டு எரிச்சல் அடைந்தவள்  ,

” ஓ காட் இது என் பிரச்சனை நான் பார்த்துகிறேன் ப்ளீஸ் அவரை விடுங்க அக்னி ” அவளது கதறல் எதுவும் அவன் காதில் விழாதது போல மரம் போல் அசையாமல் நின்றான் .

“ஏன் சார் இப்படி இருக்கீங்க ? உங்களுக்கு ஒரு உயிரை எடுக்கிறது அவ்வளவு சாதாரணமா போச்சா ?

எதுக்கு எடுத்தாலும் துப்பாக்கிய தான் தூக்குவீங்களா ?

அன்பு , பொறுமை . மனிதாபிமானம் ,  குடும்பம் , பாசம் இது எதுக்குமே உங்களுக்கு அர்த்தம் தெரியாதா ? இல்லை அதெல்லாம் உங்க ரத்தத்திலேயே இல்லையா ?

உங்க வீட்ல,  உங்க அப்பா அம்மா இதெல்லாம் சொல்லி தந்து உங்கள வளர்க்கலையா , ஒரு நிமிஷம் அவங்க இருக்காங்களா ?இல்லை அவங்களையும் கொலை பண்ணிடீங்களா !

அதுசரி எப்படி இருப்பாங்க ? அவங்க இருந்திருந்தா நீங்க ஏன் இப்படி இருக்க போறீங்க ?ஆக எல்லாரும்  உங்கள மாதிரியே குடும்பம் இல்லாம கொலைவெறி புடிச்சு ,மனுஷத்தனம்  இல்லாம மிருகம் மாதிரி அலையனும் அப்படித்தானே ?

பொண்ணுங்க கிட்ட நடந்துக்க தெரியல  ,    மனுஷங்களை மதிக்க தெரியல விட்டா எல்லாரையும்  உங்கள மாதிரி  அனாதையா  ஆக்கிருவீங்க ச்ச ” அந்த நபரை காப்பற்ற வேண்டும் என்கின்ற முனைப்பில் மேகா அவளையே அறியாமல் அதீத  வலி நிறைந்த  வார்த்தைகளை  அவன் மீது  கொட்டிவிட ,

அவனது கழுத்தை பிடித்திருந்த தீரனின் கரங்கள் தானாகவே அவனிடம் விலகிக்கொள்ள , அந்த நபர் தப்பித்தோம்  என்று தன் குரலை செறுமியபடியே  அங்கிருந்து சென்றுவிட  , அக்னி மேகாவை பார்க்க , கோபப்பட்டு அடிப்பான் என அவள் அவனை சிறு அச்சத்துடன் பார்க்க ,அவனோ மறுபேச்சு இல்லாமல் அமைதியாக  அறைக்குள்  நுழைந்தான் .

அவனது இயல்புக்கு மீறி அவன் அமைதியாக சென்றதும்,  தான் விட்டெறிந்த   கடின வார்த்தைகளை நினைத்து பார்த்த மேகாக்கு தன் மீதே கோபம் வந்தது , தன் இயல்புக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் தன் சுயத்தை தொலைத்து அக்னியிடம் தான் பேசிய சூடு சொற்களை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள்.

‘அவன் அப்படி தான் ! காயப்படுத்துவது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல!   கோபம் வந்தால் துப்பாக்கியை தூக்கிவிடுவான்! தெரிந்த ஒன்று தான்,  ஆனால் நீ ? எதிரிக்கு கூட நன்மை நினைக்கும் உன் பண்பு எங்கே  ? அவன் துப்பாக்கியால் கொன்றான்  ! நீ வார்த்தையால் கொன்றுவிட்டாய் ! ‘ என்று மனசாட்சி அவளை கேள்வி கேட்க , கவலையோடு  அமர்ந்திருந்தாள் .

‘ கொலைகாரன் , அரக்கன் , ராட்சசன்,மிருகம் ‘ இது எல்லாம் பழக்கபட்ட வார்த்தைகள் இல்லை இல்லை பழக்கப்படுத்திக்கொண்ட  வார்த்தைகள் ஆனால்

‘ அனாதை ‘என்னும் வார்த்தை ! 

எளிமையான மூன்றெழுத்து சொல் தான் !

ஆனால் வலிமையான ஆயுதமே !

கத்தியின்றி , தோட்டாயின்றி  , வெட்டறுவாள் இன்றி வெறும் மூன்று எழுத்துக்களால் ஒருவனை உயிரோடு வதைக்க முடியுமா ?இதோ முடிகிறதே !

அக்னி தீரனின் இறுக்கமான இரும்பு முகத்திற்கு பின்னால் ஆயிரம் வலிகள் மற்றும் கொடுமரமான நினைவுகள் என அனைத்தும் அவனை கொஞ்சம் கொஞ்சமாய் கொத்தி தின்க,  சிறு வயதில் இருந்து அனாதை ! அனாதை ! என அவனை துரத்தும் அந்த வார்த்தையின் வீரியம் தாங்காமல் தன் எதிரே இருக்கும் பொருளை அடிக்க , கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது .

இன்று அனாதை என்று சொன்னவளே நாளை அவனது தாயாகவும்,  காந்தையாகவும் ,தாரமாகவும் அவனுக்கு அனைத்துமாகவும்,  இந்த தீரனின் மேகாவாகவும் , மிருதனின் கவிதையாகவும் மாறுவாளா ?

-தொடரும்