MIRUTHNAIN KAVITHAI IVAL TEASER 1

cover page-941979dc

மிருதனின் கவிதை இவள்

டீசர் 1

அது ஒரு இரவு வேளை மருத்துவமனையில்  டூட்டி டாக்டராக  இரவு பணியில் இருந்த மேகவர்ஷினியிடம்   அவளது தலைமை மருத்துவர் ,

“ஒரு கேஸ் வந்திருக்கு மேகா,ஆனா எனக்கு ஒரு சர்ஜெரி இருக்கு .என்னால இப்போ ஹாஸ்ப்பிட்டல் விட்டு  வர முடியாது . ஸோ நீங்க போய் அட்டென்ட் பண்ணுங்க.ட்ரைவர் கூட்டிட்டு போவாரு ,நீங்க கொஞ்ச போயிட்டு வந்துருங்க ” என்றார்.

அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு  அவளும் அவர் சொன்ன இடத்திற்கு சென்றாள்.

அங்கே அவள் வந்ததும்  துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவன் அவளை நோக்கி வந்து அவளது அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்து விட்டு உள்ளே அனுப்ப மேகாவுக்கு ஆரம்பமே திகிலாக தான் இருந்தது . சிறு தயத்துடன் உள்ளே செல்ல மேகாவை , ஒருவன் ஒரு இருட்டறைக்கு  அழைத்து சென்றான் .

அங்கே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க அதை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒருவன் தன் கால்களால் அவன் மார்பில் மீண்டும் மீண்டும் மிதித்து கொண்டிருந்ததை கண்டு  அதிர்ந்த மேகா,ஓடி சென்று  அவனை தடுக்க , சினம்கொண்டவன்  தன்னை அழைப்பது  ஒரு பெண் என்பதை மறந்து அவளது இரு தோள்களையும் பற்றி  தூக்கி சுவற்றுடன் சாய்த்தான் .

அவனிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை  எதிர்பார்காதவள் அவனது இந்த  திடீர் செய்கையில் திகைத்தாள் ! சுவற்றில் அவளை சாய்த்து தன் வலிய கரங்களால் அவளது இரு தோள்களையும் பிடித்து சிறைவைத்திருக்க மூச்சு காற்றுகள் மோதிக்கொள்ளும் இடைவெளியில் அவளது பார்வை அவனை சந்தித்தது .

ஆறடி உயரம் ! அவளை விட இருமடங்கு வளர்ந்த ஆஜானுபாகுவான உருவம் ! ஜெல் இல்லாமலே  பளபளத்த  அடர்ந்த கருங்கேசம் ! அகன்ற நெற்றி ! ஆளை எரிக்கும்  கனல்  விழிகள் ! கூர்மையான புருவங்கள் ! விடைத்திருந்த நேர் நாசி ! அதற்கு கீழே நுனியில் முறுக்கப்பட்ட  அழகு மீசை ! அளவான தாடி ! என கம்பீரமாக நின்றிருந்தான் …ஆனால் ? என்ன வார்த்தை சொல்லவது ?என யோசித்த தன் மனதிடம்,   ‘அதான் அவன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே’

‘ காட்டுமிராண்டி! ‘ மெல்ல அவளது உள்ளம் சொல்லியது .

திகைப்பு  சற்றும் குறையாமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளை  விடுவித்தவன் சொடக்கு போட்டு அவளது கவனத்தை  தன் பக்கம் ஈர்த்தான் அவளது காட்டுமிராண்டி.

“யாரு நீ ?” அவனது கணீர்  குரல் அவளை மிரட்டியது.

“டா….க்….டர் மேக…..வர்…. ஷினி ” அவளது நா மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ள  , தன் பெயரையே சொல்ல முடியாமல் தடுமாறியபடி உளறினாள்.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்க ??” என  வினவியவனின் கவனத்தை தன் வசமாக்கியது அவளது முகம்  ! அழுந்த பிடித்தால் சிவந்துவிடும் வெள்ளை நிறத்தில்  அழகாய் ஜொலித்த  வட்ட முகம் ! அஞ்சனம் தீட்டாத பெரிய கரு விழிகள் ! செதுக்கி வைத்த நேர் நாசி ! சாயம் பூசாமலே சிவந்திருந்த இதழ்கள் ! அழகாய் விரித்துவிடப்பட்ட கற்றைக் குழல் ! அவனது குரூர  பார்வை  அப்பாவையை விட்டு அகலவில்லை .

“ட்ரீட்மெண்ட் குடுக்க வந்திருக்கேன்” இதோடு நான்காவது முறை கூறிவிட்டாள் … ஆனால் அது எதுவும் அவன் காதில் விழவே இல்லை …  தன் பார்வையாலே அவளை விழுங்கிக்கொண்டிருதான் … அவனது பார்வையை கண்டவளின் இதயம் தரிக்கட்ட குதிரையாக வேகமாக ஓடியது.

அப்பொழுது அவர்களிடம் வந்த அஷோக் ,

“டாக்டர் கனகராஜன் அனுப்பினது நீங்க தானே ? ” என மேகாவிடம் வினவினான் .

“ஆமா” என்றாள்.

“அவரு ஏன் வரல?” அவனது கணீர் குரல் அவளிடம் கேள்வி கேட்டது .

” அது ” தெரிந்த பதில் தான் , இருந்தாலும் அவனது  குரலை கேட்ட மறுநொடி அவளது மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள்ளே சூழ் கொள்ள … “அது அது ” தவிர வேற எதுவும் பேச முடியாமல் திணறினாள்.

“அக்னி  அவருக்கு முக்கியமான சர்ஜரின்னு சொன்னாரு… வேறை யாரவது அனுப்பட்டுமான்னு கேட்டாரு … நான் தான் அனுப்ப சொன்னேன் .. அவங்களை ட்ரீட் பண்ண விடு ”  என்று  அஷோக்  கூறியதும் அவளை விட்டு விலகி அக்னி தள்ளி நின்று சிகரெட்டை எடுத்து தன் வாயில் வைத்து புகைத்த படி அவளை ஆராய்ந்தான் .

“இவருக்கு  தலையில  பெருசா அடிபட்டிருக்கு …. இங்க வச்சு ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது … என்னால முடிஞ்ச முதல் உதவிய பண்ணிருக்கேன் … எவ்வளவு சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல்க்கு கொண்டு போறோமோ   அவ்வளவு  நல்லது … நான் அம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்” கண்களில் சிறு பதற்றத்துடன் அஷோக்கை பார்த்து கூறினாள் மறந்தும் அவளது பார்வை அக்னியை சந்திக்கவில்லை .

“அதெல்லாம் வேண்டாம் ”  அதே குரல்! அவளை மிரட்டும் அதே குரல் ! அவனே தான் , உள்ளம் சொல்லியது திரும்பி பார்த்தாள்  .

அவளுக்கு மிக அருகில் அக்னி தன் கண்களில் தீ தெறிக்க உச்சகட்ட கோபத்தில் புகையை நன்கு இழுத்து  முடித்துவிட்டு சிகரெட்டை காலில் போட்டு மிதித்த படி  நின்றிருந்தான் . சிகரெட்டின் நாற்றத்தால் மேகாவுக்கு குமட்டிக்கொண்டு வர பொறுக்க முடியாமல் முகம் சுளித்தவள் ,

“முடியாதுன்னா என்னா சார் அர்த்தம்  ?ஹாஸ்ப்பிட்டல் போகலைன்னா அவரு செத்துருவாரு” பயம் தான் ஆனாலும் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தால் , அக்னியை பார்ப்பதை  தவிர்த்து அஷோக்கிடம் முறையிட்டாள் .

“நீ டாக்டர் தானே உன்னால   என்ன முடியுமோ அதை பண்ணு . அவன் இப்போ பேசணும்  அதுக்கு என்ன பண்ணணுமோ அதை மட்டும் பண்ணு ” என்றான் அக்னி தீரன் . இல்லை கட்டளையிட்டான் . அவனது அனல் வீசும் பார்வையை கண்டதும் நடுங்கியவள் ,

“ஆ…னா சார் … சரியான ட்ரீட்மெண்ட் குடுக்கலைனா  ரொம்ப கஷ்டம் ” திக்கி திணறினாள் .

” சரி அப்போ சரியான ட்ரீட்மென்ட் குடுங்க சிம்பிள் ” என்றான் அவளை இன்னும் நெருங்கியபடி .

அவன் நெருங்கியதும் மேகாவின்  பதட்டம் மேலும் அதிகரிக்க … அவளது உடல் வெடவெடவென்று நடுங்கியது .

“சீக்கிரமா ட்ரீட்மென்ட் பாரு ” அதட்டினான் .

“இதோ பார்க்கிறேன் ” தலையையும் சேர்த்து அசைத்தாள் .

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”  காட்டுமிராண்டி  கண்களை உருட்டினான்  .

” ட்ரீட்மென்ட் குடுத்துட்டு தான் சார் இருக்கேன் இதோ இப்போ முடிஞ்சிரும் ” பயத்தில்  உளற  முடியாமல்  தடுமாறினாள்  .

” ம்ம் சீக்கிரம் ” மேகாவின் இதயம் ‘ டம் டம் ‘என வேகமாக அடித்துக்கொண்டது .

” ஆச்சா ” மேலும் மேலும் அவளை கலவரப்படுத்தினான் .

” ஹான் ” என்றவளுக்கு கரங்கள் மோசமாய் நடுங்க ,மிகவும் சிரமப்பட்டு  மருந்தை சிரிஞ்சில்  ஏற்றினாள் .

” ஏய் ! என்ன பண்ற ?” சீறியபடி அவளை நெருங்கினான் ! பார்வையாலே அச்சுறுத்தினான் .!

“மயக்க ஊசி …. போடணும் ! அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் ” பதில் சொல்ல முடியவில்லை மூச்சடைத்தது …இதயம் ‘ டமார் டமார் ‘ என்று அடித்துக்கொள்ள.’ கிடு கிடு கிடு ‘ என்று மொத்த உடம்பும் ஆடியது .

“யாரை கேட்டு இதெல்லாம் பண்ற …? ” மேகாவிடம் அக்னி கத்தினான் .

” அக்னி அவங்களை ட்ரீட்மெண்ட் பார்க்க விடு ” என்று அஷோக் கூற ,

” நீ வாய மூடு …” என சட்டென்று  இவளிடம் இருந்து அவனிடம் பாய்ந்தவன் . அஷோக்கை அடக்கி விட்டு அவளிடம் திரும்பி ,

” ஏய் முதல்ல உன் ஆட்டத்தை கொஞ்சம் நிறுத்து ”  அவளது நடுங்கும் கரங்களை எரிச்சலுடன் பார்த்தபடி கத்தினான் .

” காங் …அது …” ஆடிப்போனவள் …. முயன்று தன் நடுக்கத்தை நிறுத்தினாள் .

” மயக்க மருந்தெல்லாம் போட வேண்டாம் … ” எச்சரித்தான் !

” அப்போ இதை என்ன பண்ணட்டும் ?” பயத்தில் அவனிடமே கேட்டாள்.

” ஹான் … உனக்கு குத்திக்கோ ” சீறினான் … பொம்மையை போல தலை ஆட்டியவள் …  அவன் பார்த்த தீ பார்வையில்  பயந்து போய் தன் கையிலே குத்திக்கொண்டாள் .  அவன் அதிசயமாக  அவளை பார்க்க மெல்ல மெல்ல தன் கண்கள் சொருக தரையில் விழப்போனாள் மேகா ஆனால் அக்னி தீரனின் முரட்டு கரங்கள் அவளை ஏந்தியது .