MK 21

eiS8VZ63923-954ebefe

MK 21

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 21

சில நேரங்களில், வாழ்வில் விதி எனும் சதி இப்டி ஒரு கடினமான நிலையில் மற்றவர்களை தள்ளி வேடிக்கை பார்ப்பதை தான் முழு நேர பணியாய் செய்கிறது.

அதிலும் வெற்றியின் நிலை இப்போது மிகவும் மோசமானதும் கடினமானதும் கூட .

பெண்டுலம் (ஊசல்) போல் அங்கும் சென்று நிற்க முடியாமல் இங்கும் செல்ல முடியாமல் வாழ்க்கை எனும் கடலில் நீச்சலடிக்க தெரியாமல் கதறிக் கொண்டிருக்கிறான்.

” மச்சான் இப்போ என்ன டா பண்றது ? வெளிய‌ போனா ரெண்டு பேரையும் பார்க்க வேண்டி வருமே “

” காதலியா மனைவியா மச்சான் ” கெளதம் நக்கல் கேள்வி கேட்க

” செருப்பு ..”

” செருப்பை காதலிச்சியா என்ன இல்ல கல்யாணமே பண்ணிக்கிட்டியா மச்சான் ” பயந்த நிலையில் இருந்த வெற்றியை கடுப்படிக்க தொடங்கினான் கௌதம்.

” பேசுவ டா மச்சான் நீ! இன்னும் நல்லாவே பேசு ” புருவங்கள் சுருங்க சொன்னவன் அவன் முதுகில் ஒன்று வைத்து வலியில் பேச முடியாமல் செய்து விட்டான் வெற்றிமாறன்.

” இப்போ என்ன பண்றது மச்சான் ” நண்பனின் உதவியை நாடினான் வெற்றி.

” போய்டு அந்த சைடு “

” மச்சான் நல்ல ஐடியா கொடுத்திருக்க . நீ என்ன பண்ணிடு அந்த பக்கம் உன் தங்கச்சியை கவனி , இங்க நான் இவக்கிட்ட பொறுமையா பேசி புரியவைக்க பார்க்குறேன் ” என்று ஐடியா சொன்னவன் இசை புறம் நோக்கி மெல்ல அவன் கால்கள் நகர்ந்தது.

ஆக்ஸஸ் கார்ட் பயன் படுத்தி வெளியே இசையை காண வந்தவன் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை.

ஆனால் இசையின் முகத்தில் சந்தோஷம் தவிப்பு காதல் பிரிவின் துயரம் என பல வகையான உணர்வுகளை பிரதிபலித்தது .

” மாறா பேபி..” மனதுக்குள் அழைத்ததை இன்று ஆசையாய் அவன் முன் அழைத்தாள் இசை.

” ம்ம்..” கடினப்பட்டு வரவழைத்த சிரிப்பை கொண்டு பொய்யாக சிரித்தான் வெற்றி.

” எப்படி இருக்கீங்க மாறா பேபி?” அவனின் ஆரோக்கியத்தை அறியும் பொருட்டு மேலிருந்து கீழ் வரை அவனை பார்த்தாள்.

” என்ன பேசவே மாட்டேங்கிறீங்க ?”

“……..”

” சாரி பேபி ! அன்னைக்கு நான் பேசினது எதுவுமே உண்மை கிடையாது. என் அண்ணன் வந்திட்டான் அந்த சூழ்நிலையை எப்டி கையால்றதுனு தெரில . அதான் ஏதோ ஒரு பொய்ய சொல்லி கிளம்பவேண்டியதா போயிடுச்சி “

“…..”

” ஏதாவது பேசுங்க மாறா பேபி..” அவன் தாடையை பிடித்து இசை கெஞ்ச , அதனை தட்டி விட்டான் வெற்றி.

” கோபமோ என் பேபிக்கு “கொஞ்சலான குரலில் அத்தனை மிருதுவாய் கேட்டாள்.

” முதல இப்போ எதுக்கு இங்க வந்தன்னு சொல்லிட்டு கிளம்பு ” சிடுக்கென சொன்ன வெற்றி அவனுக்கு பக்கவாட்டில் இருக்கும் வழியாக கௌதம் நிற்கும் இடத்தை  பார்க்க முயன்றான்.

” ப்ளீஸ் பேபி ! நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளுங்களேன். நான் உங்க மேல என் உயிரையை வச்சிருக்கேன்.”

” ப்ளீஸ் இசை நீ இதை பத்தி தான் சொல்ல வந்தேன்னா இதோ இது தான் வழி” என அவளுக்கு பின்புறமாக இருந்த வழியை காண்பித்து சொன்னான்.

” இப்படிலாம் பேசாதீங்க மாறா எனக்கு அத்தனை கஷ்டமா இருக்கு. நான் அந்த மாதிரி நடந்துக்க ஒரு காரணம் இருக்கு. நீங்க கொஞ்சம் பொறுமையா அதை கேளுங்க ” என அவனின் வலக்கரத்தை பிடிக்க முயல அதனை தடுத்திருந்தான் வெற்றி.

” ப்ளீஸ் மாறா…” கண்கள் கலங்கி விட்டது பெண்ணவளுக்கு.

ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டவன் ,” சரி சொல்லு இசை.என்ன சொல்லணுமோ சொல்லிட்டு கிளம்பு ” விட்டோத்தியாக பதில் கூற , அதுவே பாவைக்கு ஒரு வித சந்தோஷத்தை கொடுத்திருந்தது.

” இங்க வேணாம் நாம வெளிய போய் பேசலாம்” என்க

” கொஞ்சம் இங்கேயே வெயிட் பண்ணு நான் வந்தறேன் ” என்று உள்ளே சென்றவன் பின் அவளை கூப்பிட்டு கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு காஃபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான் வெற்றி.

********

இங்கே வெளியே வந்த கெளதம் ஃபோன் பேசுவது போல் பாவனை காட்ட துவங்கினான்.

இனியாவோ கௌதம் இருப்பதை பார்த்து விட்டு அவனிடம் சென்றாள்.

” ஹாய் மா! ஒரு நிமிஷம் ஃபோன் பேசிக்குறேன் ” என்றதும் இனியாவும் தலையசைத்து பேசுமாறு சைகை மொழி புரிந்தாள்.

” ஹான் இப்போ சொல்லுங்க சார். வெற்றி இப்போ தான் ஒரு மீட்டிங்னு ஹெட் கூட பேசிட்டு இருக்கான். நீங்க கொஞ்சம் நேரம் கழிச்சு பேசுங்களேன் ” என்று இல்லாத ஃபோனை வைக்க , கௌதம் பேசியதை கேட்டு முகம் சுருங்கியது பாவைக்கு.

” எப்படி மா இருக்க ,எங்க இந்த பக்கம் ?” கௌதம் கேட்க,

” சும்மா அவருக்கும் உங்களுக்கும் மதிய சாப்பாடு கொண்டு வந்தேன் அண்ணா “

” காலையிலே அரக்க பறக்க சீக்கிரமே வேலைக்கு போனதா சொன்னானே மா அவன் “

” ஆமா அண்ணா ஒரு மீட்டிங் இருந்தது . அதான் சீக்கிரமா போக வேண்டியதா போச்சி , அப்றம் அவரு வேற காலையில எதுவும் சாப்பிடலையா அதான் ப்ர்மிஷன் போட்டு வீட்டுக்கு போய் சமைச்சு எடுத்துட்டு வரேன் ” பார்வையை சுழற்றியபடியே சொன்னாள்.

அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட கௌதமிற்கு கஷ்டமாக தான் இருந்தது .

தன்னை அண்ணா என்று பாசமாய் உரிமையோடு அழைத்த முதல் தங்கை இனியா தான் . அவளது வாழ்க்கை இப்டி கேள்வி குறியாய் நிற்பதை நினைத்து மனம் கவலைகொண்டது .

” அவரு பிசியா அண்ணா ?”

” ஆமா மா . ஹெட் கிட்ட ஏதோ ஒரு நியூ ப்ராஜெக்ட் டிஸ்கஷன்ல இருக்கான் மா . எப்போ முடியும்னு தெர்ல நீ வேணும்னா இருந்து பார்த்துட்டு போறியா ” அக்கறை கலந்த பயத்தோடு கெளதம் கேட்கவே , மறுத்து தலையசைத்தாள் .

“இல்ல அண்ணா இதை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க நான் வீட்டுக்கு கிளம்புறேன் கொஞ்சம் வேலை இருக்கு ” என்று அவன் கையில் சாப்பாட்டு பையை கொடுத்து விட்டு வருத்தத்தோடு வெளியேறினாள் .

அவள் சென்றதும் கெளதம் வெற்றிக்கு அழைத்து பார்க்க , அதுவோ முழு அழைப்பு போய் கட்டானது .

‘போன் எடுக்குறதுக்கு இவனுக்கு என்னவாம் . படுபாவி காதலிய பார்த்ததும் பொண்டாட்டி நண்பன்னு எல்லாரையும் மறந்துட்டு போய்ட்டான் ‘ திட்டிய படியே வெற்றிக்கு ஒரு மெசஜை தட்டி விட்டான் .

நோட்டிபிக்கேஷன் சௌண்டை கேட்ட இசை ,” ஏன் மாறா ஃபோன் அடிச்ச போதும் நீங்க எடுக்கல இப்போ ஏதோ நோட்டிபிக்கேஷன் வந்த போதும் நீங்க ஃபோன் எடுக்காம இருக்கீங்க. ஏதாவது இம்பார்டண்டா இருக்க போகுது ” அவனது முகத்தில் தெரிந்த வாட்டத்தை கண்டு கேட்டாள்.

” அதெல்லாம் ஒன்னும் இல்ல. ப்ரெண்ட் தான் கால் பண்ணினான். சும்மா தேவையில்லாததை பேசுவான் நீ விடு ” விட்டோத்தியாக பதில் கூறிய வெற்றி இசையோடு மதிய உணவை உண்ணலானான்.

” யாரு கௌதம் அண்ணாவா ?”

” ஆமா அவனையும் உனக்கு தெரியுமா “

” ஏன் தெரியாம போக போகுது சொல்லுங்க. உங்களை பத்தி தெரிஞ்சிக்கிறது தான் என் முதல் வேலையே . அதுனால தான் காலேஜ் முடிச்சும் கூட நான் பெங்களூர் போகல . அங்க போய்ட்டா உங்களை என்னால பார்க்க முடியாம போய்டுமே”

” இவ்வளவு காதலிக்கிற நீ எதுக்கு லெட்டர்ஸ் அனுப்பி சொல்லணும் , நேரடியாவே சொல்லி இருக்கலாமே “

” எல்லாமே ஒரு பயம் தான் பேபி. என் காதலை சொல்ல போய் நீங்க வேணாம்னு சொல்லிட்டா அதை தாங்குற சக்தி எனக்கு சுத்தமா இல்லை. அன்னைக்கு நீங்க கல்யாணம் பண்ணிக்கலாமா கேட்ட போது உலகத்தையே வென்ற ஒரு சந்தோஷம் , ஆனா அதை காட்டவோ சொல்லவோ முடியாத நிலை. அன்னைக்கு மட்டும் அண்ணா வராம இருந்திருந்தா , இன்னைக்கு நமக்கு இப்டி ஒரு நிலை வந்திருக்காது ” தன் வருத்தத்தை அவள் வார்த்தையால் வெளிப்படுத்தினாள்.

” பசங்க எல்லாரும் எப்போதும் உண்மையான அன்புக்கு அடிமை இசை ” என்று கூறி கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்தவன் அவள் டேபிள் மேல் வைத்திருந்த இடது கை மேல் அவனது கையையும் வைத்து தட்டி கொடுத்தான்.

அதில் மெல்லிய புன்னகை புரிந்த இசை ,” நமக்குள்ள தேங்க்ஸ் ஏதும் சொல்ல கூடாது தான் இருந்தாலும் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். என்னைய புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்பவே தேங்க்ஸ் பேபி ” என்று அவன் பிடித்த கையை இவள் விடாது பிடித்துக் கொண்டாள்.

” சரி இசை , உடம்பை பார்த்துக்கோ . எந்த உதவினாலும் என்கிட்ட தயங்காம கேளு மா நான் செய்றேன். இப்போ எனக்கு நேரமாகிடுச்சி நான் கிளம்பனும் ” சிறிது தயங்கி தயங்கி பேசியவன் எழுந்து கொண்டான் .

” உங்க கிட்ட தான் உரிமையா கேட்க முடியும் பேபி. கைக்கு எட்டாதுனு நினைச்ச கனி நீங்க , ஆனா இப்போ என் கைக்குள்ள . எனக்கு இதை எப்டி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு கூட தெரியல ” என்றவள் அவனை அணைத்து விடுவித்தாள்.

பேசிய படியே இருந்த இசை , நொடி பொழுதில் அவனை அணைத்து விடுவிட்டத்தில் ஸ்த்தம்பித்து போனான் வெற்றி .

***********

இரவு ஷோ முடித்து வீட்டிற்கு வந்தவனிடம் இனியா ஏதும் பேசவில்லை. அவன் முகத்தில் தெரிந்த சோர்வை தாண்டிய எதுவோ ஒன்று அவனிடம் பேச இவளை விடவில்லை.

பேசாமல் படுக்க சென்றவளை பார்த்து புருவன் உயர்த்திய வெற்றி ,” ஏன் உன் முகம் டல்லா இருக்கு?” அக்கறையோடு கேட்க ,

” இல்லையே நான் நல்லா தான் இருக்கேன் “

” இல்லையே என் சில் கிட்ட ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுது . அது எங்க மிஸஸ்.வெற்றிமாறன் ” கேள்வியாய் அவளை நோக்க , அவளோ புரியாது முழித்தாள்.

” என்ன மேடம் இப்டி முழிக்கிறீங்க ? இதை நான் கொஞ்சம் கூட உங்கக்கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் பண்ணலை ” அவளை வேண்டுமென்றே சீண்டினான்.

” உண்மையா நீங்க எத சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல. எனக்கு ரொம்பவே டையர்டா இருக்கு நான் என்னோட ரூமுக்கு போறேன். அப்புறம் டைனிங் டேபிள எல்லாமே எடுத்து வச்சிருக்கேன் சாப்பிடுங்க ” என்று அவனது பதிலை கூட எதிர்பாராமல் அறையை நோக்கி நடந்தாள்.

இனியாவின் செய்கைகள் ஏனோ வெற்றியின் கண்களுக்கு வினோதமாக தெரிந்தது.

” சில்…” உருக்கமான குரலில் நேதத்தின் அஸ்திவாரத்தை கொண்டு அழைக்க , அவளோ திரும்பி பார்த்து என்னவென்று சைகையால் கேட்டாள்.

” ஒன்னும் பிரச்சினை இல்லையே ?” பெண்ணவளின் மாற்றம் ஆடவனை பதற செய்தது.

” இல்லையே தடியன் சார் . ஏன் கேக்குறீங்க?”

” உன்னோட வெல்கம் ஹோம் அண்ட் தரு மிஸ்ஸிங் டா “

” எதையுமே மிஸ் பண்ணிட கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன் . வருங்காலத்துல சொல்ல முடியாம போயிடுச்சின்னா ” என இனியா அடுத்த சொல்ல முடியாது நிறுத்த ,

” போயிடுச்சின்னா..” கோபமாக அவள் முடித்ததில் இவன் தொடங்கி வைத்து கண்ணகிக்கு போட்டியாக நின்றான்.

” நான் என்ன சொல்ல வந்தேனா , இன்கேஸ் நான் ஊருக்கு போகிட்டா இதையெல்லாம் மிஸ் செய்ய கூடாதுல அதான் நிறுத்திட்டேன் ” அவன் கோபத்தை குறைக்கும் பொருட்டு கூறினாளோ அல்லது பதிலே அது தானோ , பாவையவளை தவிர்த்து யாரும் அறியோர்.

” நீங்க எந்த விதமான ஆணியையும் இப்போ எடுக்க தேவையில்ல ,அது அங்கேயே இருக்கட்டும் . வருங்காலத்த நினைச்சு நிகழ்காலத்தை கோட்டை விடாத இனியா. உனக்கு எது வேணும்னாலும் நீயா வாய திறந்து சொன்னா தான் புரியும். சும்மா மனசுக்குள்ள ஒன்னு நினைச்சிட்டு வெளிய ஒன்னு பேசுறதுல ஒரு பிரியோஜனமும் இல்லை ” வெற்றி பேச இனியாவோ சிலைப்போல் அசைவின்றி நின்றிருந்தாள்.

இனியாவிடம் பதில் ஏதும் இல்லாது போக , ” புரிஞ்சிதா ?” வார்த்தைகளுமே அவனின் கோபத்தை பிரதிபலித்தது.

” ஹான் புரிஞ்சிது ” என இனியா மண்டையை நாலாபுறமும் ஆட்டினாள்.

“குட் ! இப்போ போ ” கோபம் குறையாது கூறினான்.

” ஒரு நிமிஷம் நில்லு ” என்றதும் சடன் பேர்க் போட்டு நின்றாள் இனியா.

” சாப்பிட்டியா ?”

திருட்டு முழி ஒன்றை வெற்றிக்கு கொடுத்தவள் ,” அது…” என ஆரம்பிக்க தொடங்கவும் வெற்றிக்கு இருந்த கோபம் அதிகமானது.

” உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா. அட்வைஸ் பண்றது எல்லாம் மத்தவுங்களுக்கு மட்டும் தான் இல்லையா ” கோபத்தின் உச்சத்தை தொட்டது வெற்றிக்கு.

” ப்..ப..பசிக்கல அதான் சாப்பிடல ” அவனது கோபத்தில் மிரண்டவளுக்கு வார்த்தைகள் தடுமாற தொடங்கியது.

” வா சாப்பிட” அதிகாரமாய் அழைத்தான்.

” இல்ல வேணாம்”

” பச் , பேசாம வந்திடு . எனக்கு யாரையும் அடிச்சு பழக்கமில்லை உன்னை அடிக்க வச்சிடாத ” மிரட்டலோடு மட்டுமில்லாது கைபிடித்து கதிரையில் அமர வைத்து அவனே ஊட்டியும் விட்டான்.

ஏப்பம் என்று ஒன்று வந்த பிறகே அவளை படுக்க அனுப்பியது. அதுவரை அவனோடு கூடவே வைத்து கொண்டான் வெற்றிமாறன்.

இனியா செல்லவும் இசையிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

பார்த்த வெற்றிக்கு பயம் தொற்றிக் கொண்டது.

‘ சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்’ என்று ஆங்கிலத்தில் மெசேஜை தட்டிவிட்டு சில மணி துளிகள் கழித்து மெதுவாக இனியாவின் அறைக்குள் நுழைந்தான் வெற்றி.

அவள் தூங்கிவிட்டாளா என்று ஆராய்ந்து பார்த்தவன் , தூங்கிவிட்டாள் என்று தெரிந்ததும் அவள் பக்கத்தில் ஓரமாய் அமர்ந்து கொண்டான்.

‘ ஏன் சில் இப்படி பண்ற , உன் மண்டைக்குள்ள அப்டி என்ன தான் ஓடுது சொல்லு‌ . நீயா சொல்லாமா எனக்கு எப்டி மா தெரியவரும் . நீ என்ன விட்டு விலகி போற மாதிரி எனக்கு ஒரு ஃபீல் டா . இப்டி இருக்காதே சில் , இது உன்னையும் காயப்படுத்தி என்னையும் காயப்படுத்துது டா ‘ மனதினுள் அவளிடம் பேசியவன் அவள் தலையை கோதி விட துவங்கினான்.

அடுத்த சில மணி நேரங்களுக்கு அவளோடவே நேரத்தை கழித்தவன் , எழுந்து வெளியே போகும் வேளையில் திரும்பி வந்து அவனது முதல் அச்சாரத்தை அவளது நெற்றியில் முத்தமொன்றாக பதித்தான்.

உறங்கி கொண்டிருந்தவளின் கனவிலும் கூட அவன் அவளது நெற்றியில் இதழொற்றி அணைத்து கொண்டான்.

வெளியே வந்த வெற்றி , இசைக்கு தான் முதல் வேலையாக அழைத்தான்.

” சொல்லு இசை ! என்ன இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க? “

” ஏன் நான் கால் பண்ண கூடாதா பேபி ?”

” அப்டிலாம் ஒன்னுமில்லை. நீ கால் பண்ணலாம் திடிருன்னு கால் பண்ணியா அதான் கொஞ்சம் பயந்துட்டேன் “

” சாரி பேபி. உங்களை பார்த்துட்டு போனதுல இருந்தே உங்க ஞாபகம் தான் அதான் ஃபோன் பண்ணேன் “

” ம்ம்ம் “

” இன்னைக்கு உங்க ஷோ ரொம்பவே நல்லா இருந்தது பேபி “

” தேங்க்ஸ் ! நீ சாப்டியா , டேப்லெட்ஸ் எல்லாம் கரக்டா போட்டியா அதை முதல சொல்லு ” அக்கறையுடன் வெற்றி கேட்கவே , சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று மகிழ்ந்தாள் பெண்ணவள்.

” சாப்ட்டேன் பேபி , டேப்லெட்ஸ் எல்லாம் கூட போட்டாச்சி. இனி டேப்லெட்ஸ் எல்லாம் தேவையே இருக்காது , இப்போ தான் நீங்க கூடவே இருக்கீங்களே அதுவே எனக்கு போதும் “

” ம்ம் சரி நீ போய் தூங்கு “

” குட் நைட் மாறா பேபி அண்ட் லவ் யூ ” ஆசையாய் தன் காதலை வார்த்தைகள் மூலம் சொல்ல

” குட் நைட் இசை “

” லவ் யூ கிடையாதா ?”

” சரியான நேரம் வரும்போது என் காதலை சொல்வேன் இசை. நீயில்லாம என் காதல் வெளிப்படாது ” வெற்றி கூற இசையின் முகத்தில் ஏமாற்றத்தின் அச்சாரம்.

” பச் போங்க மாறா பேபி. ஆசையா இருந்தேன் நீங்க திருப்பி சொல்லுவீங்கன்னு இப்படி ஏமாத்திட்டீங்களே “

” சரி விடு. இப்போ போய் நீ தூங்கு மணி ஆகிடுச்சு பாரு ” என உறங்க சொல்லிவிட்டு மொபைலை வைத்தவன் பெருமூச்சு விட்டான்.

*************

ஒரு மாதம் கழித்து .,

ஷாப்பிங் மாலில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த வெற்றி இனியாவிடம் பேசிக் கொண்டிருந்தவன் இசை வருவதை பார்த்து அவள் எதையோ கூற வருவதை கூட பொருட்படுத்தாது ” சரி பார்த்து வீட்டுக்கு போ இனியா ” என்று சொல்லி வைத்து விட்டான்.

அவன் பக்கத்தில் வந்தமர்ந்த இசை அவனது கையை தன் கையோடு கோர்த்தவள்” பேபி இந்த ஒரு மாசமும் எனக்கு அத்தனை அத்தனை சந்தோஷத்தை கொடுத்திருக்குது தெரியுமா “

” அப்டியா சந்தோஷம் டா “

” இந்த நேரம் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்பவே ஸ்பெஷல் பேபி . ஐ காண்ட் எக்ஸ்பிரஸ் ஹௌ ஐ ஃபீலிங்க் நவ்னு ” முகமெங்கும் பூரிப்போடு கூறினாள் இசையாழினி.

“ம்ம் “

” ஆனா ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு . நான் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது லவ் யூ சொல்றேன் ,ஆனா நீங்க இன்னவரைக்கும் ஒரு தடவையாது லவ் சொல்லியிருக்கீங்களா ” முகத்தை தூக்கி கொண்டு இசை சொல்ல மெலிதான புன்னகை மட்டுமே புரிந்தான்.

” இப்டி ஸ்மைல் பண்ணியே ஆல கவுத்திட வேண்டியது “

” சரி ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சதா இசை கிளம்பலாமா ?”

” போலாம் பேபி . ஷாப்பிங் எல்லாம் ஓவர் “

” சரி வா ” என்றவன் அவள் தங்கியிருக்கும் இடத்தில் விட்டுவிட்டு ஸ்டுடியோவிற்கு சென்றான்.

அங்கே சென்றால் கௌதம் ஹாயாக கால்லை ஆட்டியபடி இருக்கவும் வெற்றிக்கு கோபம் சுற்றென்று ஏறியது.

” டேய் ! நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?” கோபமாய் கேட்க

” இது என்ன கொடுமையா இருக்கு. நானே இப்போ தான் அப்பாடான்னு வந்து உட்கார்ந்து இருக்கேன். அது பிடிக்கலையா உனக்கு “

” அப்போ சரி இனியாவை வீட்ல கொண்டு போய் விட்டுட்டல அது போதும் ” அவனுமே பக்கத்தில் இருந்த இருக்கையில் சாய்வாக அமர்ந்தான்.

” நான் எங்கடா கொண்டு போய் அவளை விட்டேன். வரேன்னு சொன்னதுக்கு அவளுக்கு வேலையிருக்கிறதா சொல்லி அவரை வந்து கூட்டிட்டு போக சொல்றேன்னு சொன்னாளே டா. அதான் நான் இங்க இருக்கிற வேலையை‌ பார்த்தேன் ” என்று சொன்னதும் பட்டென்று எழுந்து கொண்டான் வெற்றி.

” அப்போ நீ போகலையா ?”

” இல்லையே மச்சான். இப்போ நீ தங்கச்சியை தானே வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வர , இல்ல வேற எங்கேயும் போய்ட்டு வரியா” கேள்வியாக நண்பனை நோக்கினான்.

வெற்றியோ நெற்றியை நீவிக்கொண்டவன் ,” இல்ல மச்சான் இசை கூட வெளிய போய்ட்டு வரேன் ” என்றதும் இப்போது கோபம் கொள்ளும் முறை கௌதமிடமானது.

” அறிவில்ல உனக்கு பொண்டாட்டிய விட யாரோ ஒருத்தி தான் முக்கியமா போச்சில உனக்கு “

” இப்போ உன்கிட்ட திட்டுவாங்க எனக்கு நேரமில்லை டா. நான் போயாகணும் அங்க அவ தனியா இருப்பா” என்று அவசரம் அவசரமாக அவ்விடத்தை விட்டு சென்றான்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் அவளது ஆஃபிஸ் இருக்கும் இடத்தை அடைந்தவன் , அங்கு சென்று இனியாவை பற்றி கேட்க உள்ளே செல்ல கால் எடுத்து வைக்கும் போதே இனியா ரோவுடன் வெளி வந்தாள்.

” வெற்றி வந்துட்டாங்க பாரு ” என ரோவிடம் கூறிய படி அவனை நோக்கி நடையிட்டாள் இனியா .

” ஏன் அண்ணா லேட் ? உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணி பார்த்துட்டு , சரி நானே விடுறேன்னு சொல்லி அவளை கிளப்புனேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க ” ரோஷினி வெற்றியை பார்த்து சொல்ல

” சாரி மா கொஞ்சம் வேலையா இருந்துட்டேன் அதான் லேட்டாகிடுச்சி ” தன்நிலை விளக்கம் கொடுக்க

” பிடிங்க உங்க மனைவிய ஒரே வெற்றி புராணம் தான் அண்ணா‌ காதே வலிக்குது ” என அவளை அவனின் புறம் தள்ளிவிட்டாள் ரோஷினி.

தள்ளிவிட்டதில் அவன் மீதே மோதிய இனியா உடனே விலகப் பார்க்க , அவனோ விடாது அவளை தன் கைவலைவிலே வைத்து கொண்டான்.

” சரி மா நீ பத்திரமா போ . வீட்டுக்கு போனதும் மெசேஜ் போடுமா ” என்றவன் இனியாவை அழைத்து சென்றான்.

நேரமாகவும் அவளை கீழே இறக்கி விட்டவன் ,” சாரி சில் கொஞ்சம் பிசியா இருந்துட்டேன் அதான் நீ என்ன சொல்ல வரேன்னு கூட கேக்காம வச்சிட்டேன் ரியலி சாரி “

” இட்ஸ் ஓகே தரு. வேலையா இருக்கவும் தானே ஃபோனை கட் பண்ணீங்க இல்லன்னா சரியான நேரத்துக்கு வந்துருப்பீங்க . பரவால்ல உங்களுக்கு வேலைக்கு நேரமாச்சு பாருங்க நீங்க கிளம்புங்க ” என்று அவனை அனுப்பி வைத்து விட்டு மேலே சென்றாள்.

இவையாவும் எட்டு மணிப்போல் நடந்திருக்க , வேலை முடித்து வீட்டிற்கு வந்த வெற்றியின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தது.

அதிலும் கையில் துணிப்பையோடு இருந்த இனியாவை கண்டு கோபம் கொப்பளிக்க , பெண்களிடம் ஆணாதிக்கத்தை காட்ட கூடாது என்று நினைத்திருந்த வெற்றியே அடுத்து நடந்த இருவரது பேச்சு வழக்கில் அவளை அறைந்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!