மயங்காதே மனமே 11

தன் கழுத்தில் தொங்கிய அந்த மஞ்சள் கயிற்றைக் குனிந்து பார்த்தாள் கீதாஞ்சலி. அதன் அர்த்தம் புரிய சில நொடிகள் தேவைப்பட்டன

அந்த ஒரு சில நொடிகளில் மட்டுமே அந்தக் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. அதன் பிறகு அந்தக் கண்களில் தெரிந்த உணர்ச்சியை வகை பிரித்தறிய அபிக்குத் தெரியவில்லை. என்ன விதமான பார்வை அது?

அத்தனை பேரும் அதிர்ந்து நின்றாலும், முதலில் சுதாகரித்துக் கொண்டவர் பாலகிருஷ்ணன் தான். பேரனை நோக்கி வந்தவர், ஆவேசமாக அவனை சட்டென்று அறைந்தார்.

ராஸ்கல், என்ன காரியம் பண்ணியிருக்க? யாருக்கிட்ட கேட்டு இப்பிடிப் பண்ணின? எங்களைத்தான் மதிக்க வேணாம், பொண்ணைப் பெத்தவன் மலை போல நிக்குறான் இல்லை. அவனை ஒரு வார்த்தை கேக்க வேணாம் நீ?” ஆத்திரத்தில் கொதித்தார் மனிதன்.

அபி எதுவும் பேசவில்லை. ஆனால், அவன் கண்கள் மட்டும் அவன் அஞ்சலியிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் சந்தோஷம் என்ற உணர்வின் கடுகளவைக் கூடக் காணாதவன், ஏமாற்றத்தோடு ஒரு பெருமூச்சு விட்டான்.

பூஜையறையை விட்டு வெளியே வந்ததான் அபி. எல்லோர் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு,

தப்புதான், ஆனா எனக்கு வேற வழி தெரியல்லை. பெரியவங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்.” என்றவன், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்

ஆனா நடந்து முடிஞ்ச நிகழ்வை யாரும் மாத்த நினைக்காதீங்க.” அந்த வார்த்தைகளை சொல்லும் போது அவன் கண்கள் கீதாஞ்சலியைத் தீண்டி, பின் மீண்டது.

அஞ்சலி எனக்குத் தான். அதுல என்னைக்கும், எப்போவும் மாத்தமில்லை.” சொல்லிவிட்டு அறிவழகனை நோக்கிப் போனவன்,

அங்கிள், நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.” என்றான். நகர மறுத்த மனிதரின் கையைப் பிடித்து பக்கத்தில் இருந்த ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்தவன், கதவை மூடிக்கொண்டான். அந்தக் கதவு திறக்க நெடுநேரம் ஆனது.

தங்கள் பூஜையறையில் நின்றிருந்த அந்தப் பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சீமா. அவரையும் அறியாமல் அவர் கால்கள் அங்கே அவரை அழைத்துச் சென்றன.

எந்த அலங்காரங்களும் இல்லாமல் மெல்லிய பின்க் கலர் டாப்பில் சாதாரணமாக இருக்கும் போதே அத்தனை அழகாக இருந்தாள் பெண். அன்றைய காலைப்பொழுது அவர்களுக்கு விடிந்த அழகில், ஒழுங்காக ஒரு பின்னல் போடக்கூட மறந்திருந்தாள் கீதாஞ்சலி

அருகே வந்த சீமா அவள் தலையைக் கோதிக் கொடுத்தார். தலையைக் கோதிய கை கன்னத்தைத் தடவிய போது, அவர் முகத்தில் அத்தனை பூரிப்பு இருந்தது. தன் மகனின் தேர்வை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை பார்த்து ரசித்தார்

உன்னோட முழுப்பெயர் கீதாஞ்சலியாம்மா?”

ம்…”

எங்க தருஇல்லையில்லை, நம்ம தருண் குட்டி உன்னைப் பத்தி ஓயாம பேசுவான். அதனால எங்களுக்கெல்லாம் உன்னை கீதான்னு தான் தெரியும்.” சொன்னவர் கொஞ்சம் இடைவெளி விட்டார்.

ஆனா அபி உன்னை அஞ்சலின்னு சொல்லும் போதுஅவன் மனசுல நீ எங்கே இருக்கேன்னு எனக்குப் புரியுதும்மா.” வார்த்தைகள் வர மறுத்தது அபியைப் பெற்றவளுக்கு.

நடந்து முடிஞ்சது எல்லாருக்கும் அதிர்ச்சி தான், இல்லேங்கலை. ஆனா, அதையும் தாண்டி எம் மனசு இப்போ நிறைஞ்சு போய்சொல்லத் தெரியலைம்மா. சந்தோஷமா இருக்கு. எப்பிடி எல்லாமோ கற்பனை பண்ணின எம் பையனோட கல்யாணம் இப்பிடி நடந்தது சங்கடமா இருந்தாலும், அதையும் தாண்டின சந்தோஷம்.” சொல்லியபடி கீதாஞ்சலியின் கைகளைப் பிடித்தவர்,

அந்த சந்தோஷம் துளிகூட உம் முகத்துல இல்லையேம்மா? உனக்கு எங்க அபியைப் பிடிக்காதா?” கண்களில் உயிரைத் தேக்கி அவனைப் பெற்றவள் கேட்ட போது, கீதாஞ்சலிக்கு என்னமோ பண்ணியது.

அவன் பண்ணினது தப்பு தான். ஆனா அவன் தப்பானவன் கிடையாதும்மா. ஒரு பொண்ணா உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, எம் பையனையும் என்னால விட்டுக் குடுக்க முடியலைம்மா. எந்த முடிவுக்கும் அவசரப்பட்டு வந்துராதம்மா.” அவர் குரலில் கீதாஞ்சலி சங்கடப்பட்டுப் போனாள். அவர் கைகளை இறுக்கிப் பிடித்தவள், லேசாகப் புன்னகைத்தாள். இருந்தாலும் அந்தப் புன்னகையில் ஜீவன் இருக்கவில்லை.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு மெல்ல நிதானத்திற்கு வந்திருந்தார் மஞ்சுளா. தன் பெண்ணின் வாழ்க்கை கேள்விக் குறியாகி நின்றதில் உருக்குலைந்து போயிருந்தவர், சற்றே நிதானமாக மூச்சு விட்டார். அந்த வீட்டு மனிதர்களைப் பார்த்தபோது நல்லதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை அவருக்கு.

நேற்று வழமைக்கு மாறாக லேட்டாக வந்த மகள், வீடு வந்த பிறகும் கூட சிந்தனை வயப்பட்டிருந்தவள், என கீதாஞ்சலி கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்ததிற்கும், இந்தப் பையன் இப்போது அஞ்சலி என்று அழைப்பபதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போல தோன்றியது அவருக்கு

இருந்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தார். அந்தப் பையன், தன் கணவரை உள்ளே அழைத்துக் கொண்டு போன போது மனது அடித்துக் கொண்டது

ஆனாலும், பையனின் அம்மா தன் பெண்ணோடு நடந்து கொண்ட முறை மனதிற்கு திருப்தியாக இருந்தது. ஆதியை திரும்பிப் பார்க்க, அவன் கண்களாலேயே அம்மாவிற்கு சமாதானம் சொன்னான்.

கதவு சட்டென திறக்கவும், எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஏதோ சொர்க்க வாசல் திறந்தது போல இருந்தது அனைவருக்கும். அபி என்ன மந்திரம் போட்டானோ, அறிவழகன் முற்றாக மாறிப்போயிருந்தார். பாலகிருஷ்ணனையும், நாராயணனையும் திரும்பிப் பார்த்தவர்,

ஐயா, நான் இப்போ என்ன செய்யனும்னு நீங்க எதிர்பாக்குறீங்க?” என்றார். அந்தக் குரலில் முந்தைய ஆதங்கம் இருக்கவில்லை. நாராயணன் எழுந்து வந்து அறிவழகனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்

நடந்த தவறுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க தொழில் சம்பந்தப்பட்ட எதிரி எங்களைப் பழிவாங்கப் போக, அதுல உங்க பொண்ணு பாதிக்கப் பட்டுட்டா. பாத்தா நாங்க தான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கனும்.”

இல்லையில்லை, மன்னிப்பெல்லாம் எதுக்கு? அது ரொம்பவே பெரிய வார்த்தை.”

இருந்தாலும் உங்க சம்மதம் இல்லாம, எம் பையன் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டினது பெரிய தப்பு. நீங்க எதையும் மனசுல வெச்சுக்காம மேல நடக்க வேண்டியதைப் பாக்க சம்மதிக்கனும்.” அந்த நயமான பேச்சில் நெகிழ்ந்து போனார் அறிவழகன். தன் மனைவியை ஒரு கணம் திரும்பிப் பார்த்தவர்,

சரிங்க, ஆக வேண்டியதைப் பாருங்கஎன்றார். அந்தப் பதிலில் அங்கிருந்த அத்தனை பேரின் முகமும் மலர்ந்து போனது. பெரியவர்கள் எல்லோரும் கூடிப் பேச ஆரம்பித்த போது, அபியின் ஃபோன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான், வெற்றி என்றது

சொல்லு வெற்றி, என்ன ஆச்சு?” பேசியபடியே தோட்டத்திற்கு வந்திருந்தான் அபிமன்யு.

சார், மித்ரனோட கார் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா மகேந்திரன் வீட்டிலிருந்துட்டு கொஞ்ச நேரம் முன்னாடி தான் கிளம்பிப் போயிருக்கு. அவங்க கிளம்பிப் போய் கொஞ்ச நேரத்துல மகேந்திரனோட ஃபாமிலி டாக்டர் அங்க வந்திருக்கார்.”

ம்…” 

அங்கயிருந்து கிளம்பின கார், நேரா மேடம் வீட்டுக்குத் தான் போயிருக்கு சார்.” 

ராஸ்கல்…” தன் பி வின் தகவலில் பல்லைக் கடித்தான் அபிமன்யு.

வீடு பூட்டியிருந்திருக்கும் போல. கதிரை விட்டு அக்கம் பக்கம் விசாரிச்சிருக்கான். ஆனா அவன் காரை விட்டு இறங்கலியாம்.”

பொறுக்கி நாய்வீடு வரைக்கும் போயிருக்கானா? அபி பொண்டாட்டி கேக்குதா அவனுக்கு…” அபியின் அந்த ஆக்ரோஷமான பேச்சில் குழம்பிப் போனான் வெற்றி

சார், மேடம் தான் அண்ணியா சார்?” ஆர்வமாகக் கேட்ட அந்தக் குரலில் கொஞ்சம் அடங்கினான் அபிமன்யு.

அண்ணியாகி அரை மணி நேரம் ஆச்சு வெற்றி.”

சார்! என்ன சார் சொல்லுறீங்க?”

எல்லாம் முறைப்படி நடக்கும். அப்போ நிச்சயமா உனக்கு தலைக்கு மேல வேலையிருக்கும், கவலைப்படாதே.” சொல்லியபடி அபி சிரிக்க,

அந்தத் தருணத்துக்காக எத்தனை பேர் காத்துக்கிட்டு இருக்காங்க தெரியுமா சார்.” என்றான்

வெற்றி, இப்போ யாருக்கும் எதுவும் தெரிய வேணாம் என்ன?”

இதை எனக்கு நீங்க சொல்லனுமா சார்?” 

ம்…” பேச்சை முடித்த அபி வீட்டிற்குள் வந்தான். ஆண்கள் எல்லோரும் பேசியபடி தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்க, பெண்கள் அனைவரும் கீதாஞ்சலியை நடுவிலமர்த்தி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இவை எதிலும் ஒட்டாதபடி அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி. அவள் முகத்தைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் ஆதித்தனைப் பார்த்துப் புன்னகைத்தான் அபி. அந்தப் புன்னகையில் சட்டென்று எழுந்து வந்தான் ஆதித்தன்

உங்களை நான் எங்கேயோ பாத்திருக்கேன்…” அபி இழுக்கவும், பரவசப்பட்டான் பையன்.

ஆதித்தன் சார்.” என்றான். அவன் தோள்களில் கையைப் போட்டு லேசாக அணைத்துக் கொண்டான் அபி.

சார் இல்லை, அத்தான்.” 

சாரி அத்தான், நான் ஏதோ ஒரு ஞாபகத்துல…”

பரவாயில்லை ஆதி. நாம எங்கேயாவது சந்திச்சிருக்கோமா?”

ஆமா அத்தான். எங்க காலேஜ்ல இருந்து ஒரு தரம் உங்க கன்ஸ்ட்ரக்ஷ்னுக்கு வந்திருந்தோம். அப்போ நீங்க எங்க எல்லார்கிட்டயும் பேசினீங்க.” ஆதித்தன் தன் கல்லூரி பெயரைச் சொல்லவும், அபி சட்டென்று புரிந்து கொண்டான்.

ம்இப்போ ஞாபகம் வருது.” சொன்ன அபி சற்று நிதானித்தான்

ஆதி, உங்களுக்கெல்லாம் எம் மேல வருத்தம் இருக்கலாம். ஆனா ஒரு சில விஷயங்கள் என்னையும் தாண்டி நடக்குதுப்பா. அதை நீங்க எல்லாரும் கொஞ்சம் புரிஞ்சுக்கனும்.”

என்ன நடக்குதுன்னு புரியலை அத்தான். ஆனா நீங்க பண்ணுறது அக்கா நன்மைக்காகன்னு மட்டும் புரியுது.” அந்தப் பதிலில் சந்தோஷப்பட்டான் அபி.

அக்காவோட நன்மை மட்டுமில்ல ஆதி. எங்க ஆசையும் அதுதான்.”

அக்காக்கு…!” ஆச்சரியமாக ஆதி பார்க்கவும் புன்னகைத்தான் அபி. ஆதியின் கண்களுக்கு தன் தோளை அணைத்திருப்பவன், தன் அக்காவிற்கு எத்தனை அழகான ஜோடி என்று தோன்றியது.

அவளுக்கும் பிடிச்சிருந்துது, ஆனா என்னென்னமோ காரணம் சொன்னா. ஒத்து வர மாட்டாதுன்னு மறுத்தா.”

அவ எப்பவும் அப்பிடித்தான் அத்தான். ரொம்ப ப்ராக்டிகல். சமயத்துக்கு நம்ம உயிரை வாங்கிருவா.” ஆதி சொல்லவும் வாய் விட்டுச் சிரித்தான் அபிமன்யு. அந்தச் சிரிப்புச் சத்தத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் கீதாஞ்சலி.

முறைக்குறா அத்தான்.”

ம்ரொம்பக் கோபம் வருமோ?”

லேசுல வராது, வந்தா கஷ்டம்தான்.”

…! அப்போ எம் பாடு திண்டாட்டம் தான்.” சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆதித்தன். அபியின் உயரம் அவனுக்குத் தெரியும். பார்வைக்கும் வாட்ட சாட்டமான ஆண்மகன். அவனுக்குப் பெண் கொடுக்க பல பேர் முன்வருவார்கள். இருந்தும் அவனுக்குத் தன் அக்காவைப் பிடித்திருக்கிறது என்றால், அவள் பாக்கியசாலி என்றுதான் தோன்றியது.

பெரியவர்கள், அடுத்த முகூர்த்தத்திலேயே கோவிலில் வைத்து சிம்பிளாக கல்யாணத்தை முடிக்க தீர்மானித்திருந்தார்கள். வீட்டளவில் திருமணத்தை முடித்துவிட்டு, க்ரான்டாக ஒரு ரிசப்ஷன் வைப்பதாக முடிவானது.

அபியின் கண்கள் கீதாஞ்சலியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். முகத்தை வைத்து எதையும் கணிக்க முடியவில்லை. பேச்சுவார்த்தை முடியவும் அறிவழகன் எழுந்து கொண்டார்.

அப்போ நாங்க கிளம்புறோங்க.” அவர் சொல்லவும், மஞ்சுளாவும், ஆதித்தனும் எழுந்து கொண்டார்கள். கீதாஞ்சலியும் எழுவதைப் பார்த்த அபிமன்யு,

அப்பா, அஞ்சலி இங்கேயே இருக்கட்டும்பா.” என்றான். எல்லோர் முகமும் அதிர்ச்சியைக் காட்ட

அது முறையில்லை அபி.” என்றார் நாராயணன். அபி, அறிவழகனின் முகத்தைப் பார்க்கவும்,

நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா, கீதா இங்கேயே இருக்கட்டும் சம்பந்தி.” என்றார் அறிவழகன். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. கீதாஞ்சலி திடுக்கிட்டுப் போனாள்

அப்பா, என்னப்பா சொல்லுறீங்க?” ஆதி கேட்கவும், அவனை சமாதானப் படுத்தியவர்,

மாப்பிள்ளை சொல்லுறது தான் எனக்கும் சரின்னு தோனுது. ஆனா, உங்களுக்கெல்லாம் ஆட்சேபனையா இருந்தா…” அவர் முடிக்காமல் சங்கடப்படவும்,

அப்பிடியெல்லாம் இல்லை அண்ணா. கீதா எங்க வீட்டுப் பொண்ணு. அவ இங்க இருக்கறதுல யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்றார் சீமா. கீதாஞ்சலியின் பக்கத்தில் வந்த அறிவழகன்,

அப்பா எது பண்ணினாலும் அது உன்னோட நன்மைக்காகத் தான் இருக்கும்மா.” என்றார்.

அப்பா, நான் எப்பிடிப்பாஇங்கே…?”

கல்யாணம் முறைப்படி நடந்திருந்தா நீ இங்க தானேம்மா இருக்கனும். இப்போவும் அப்பிடியே நினைச்சுக்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” சொன்னவர் குடும்பத்தோடு கிளம்பி விட்டார். கீதாஞ்சலிக்கு கண்கள் கலங்கியது.

அவள் நிலைமையைப் புரிந்து கொண்ட ரஞ்சனி அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அண்ணி, கவலைப் படாதீங்க. நாங்கெல்லாம் இருக்கோம்ல.” ஆதரவாகச் சொன்னவளை, ஆச்சரியமாகப் பார்த்தாள் கீதாஞ்சலி. இத்தனை நாள்மேடம்என்று அழைத்தவளை இனி எப்படி அழைப்பதென்று புரியவில்லை.

நான்உங்கண்ணா கிட்டபேசனும்.” தடுமாறிய படி சொன்னவளின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரஞ்சனி,

பாட்டி, அண்ணிக்கு நம்மை வீட்டை சுத்திக் காட்டுறேன்.” என்று சொன்னபடி கீதாஞ்சலியை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

அந்த ஏரியா முழுவதுமே அத்தனை அழகாக இருந்தது. ஒரு ஹாலும், அடுத்தடுத்தாற் போல ரூம்களும் இருக்க, வீட்டின் முடிவில் ஒரு கார்டன் இருந்தது. பத்துக்குப் பதினைந்து பரப்பில் இருந்த அந்த இடத்தைப் பூந்தோட்டம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கீதாஞ்சலிக்குத் தோன்றியது.

அண்ணாவோட தோட்டம், எப்பிடியிருக்கு அண்ணி.” கேட்டவளைப் பார்த்து லேசாகச் சிரித்து வைத்தாள். இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லையே.

கார்ட்டினிங் அண்ணாவோட ஃபேவரிட் ஹாபி. இருங்க, இதோ வந்திர்றேன்.” சொல்லிவிட்டுப் போனாள் ரஞ்சனி.

வண்ண வண்ண ரோஜாக்கள், இன்னும் பெயர் தெரியாத நிறையப் பூக்கள் அந்த இடத்தை அலங்கரித்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் நீர் பாய்ச்சி இருக்க வேண்டும். அந்த இடமே அத்தனை குளுமையாக இருந்தது

யாரோ நடந்து வரும் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள். அபி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவள் முகம் கடுகடுவென மாறிப் போனது. பூக்களுக்குப் பக்கத்தில் வந்தவன், பூவோடு பூவாக நின்றவளைப் பார்த்துப் புன்னகைத்தான். பதில் கிடைக்கவில்லை.

அஞ்சலி…”

என்ன சார் பண்ணியிருக்கீங்க?” காட்டமாக வந்தது கேள்வி.

சாரா…?” அவன் முகம் அஷ்ட கோணலாக மாறியது. அவன் கேள்வியில் கோபப்பட்டாள் கீதாஞ்சலி.

இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நான் என்ன கேக்குறேன்? நீங்க என்ன பேசுறீங்க?”

அஞ்சலி, நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளு.”

இனி எதைக் கேட்டு என்ன பிரயோஜனம். அதான் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணி முடிச்சுட்டீங்களே.”

அப்பிடி இல்லைம்மா…”

எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா? அப்போ எனக்கு என்ன மரியாதை?”

அஞ்சலி…”

நீங்க பாட்டுக்கு காரை அனுப்புறீங்க, வந்திறங்கினா உங்க இஷ்டத்துக்கு தாலியை கட்டுறீங்க, யாராவது தட்டிக் கேப்பாங்கன்னு பாத்தா எல்லாரும் உங்க ஆட்டத்துக்கு தாளம் போடுறாங்க.” அவனைப் பேச விடாமல் கத்திக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் கரை தாண்டி இருந்தது.

இப்போது அவளிடம் பேசிப் பயனேதும் இல்லையென்று மௌனமாக நின்றிருந்தான் அபிமன்யு. பதிலுக்குப் பதில் பேசினால் அவள் ஆத்திரம் இன்னும் அதிகரிக்கும் என்று புரிந்தது. கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு அமைதியாக நின்றது அந்தக் கட்டிளங் காளை.

என்ன மாதிரி ஒரு நிலமையை உருவாக்கி வச்சிருக்கீங்கன்னு உங்களுக்குப் புரியுதா? இப்போ என்ன நடந்து போச்சுன்னு இந்தக் கயித்தை எங்கழுத்துல கட்டினீங்க?”

“…….”

எவனோ ஒரு லூசுப் பய பேப்பர்ல என்னமோ போட்டா, எனக்கென்ன வந்துது? ஏன், உங்க ஃபோட்டோவும் தான் அன்னைக்கு பேப்பர்ல வந்துது. நீங்க தூக்கிப் போட்டுட்டு போகலை? அந்த ஃபோட்டோவுல இருந்த பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா என்ன? இல்லையில்லை.”

“…….”

அது மாதிரி இன்னைக்கும் போக வேண்டியதுதானே. என்னமோ இந்தப் பேப்பரால என் வாழ்க்கையே முடிஞ்சிட்ட மாதிரி நடந்துக்குறீங்க. எங்கப்பாகிட்ட என்ன சொன்னீங்க? மனுஷன் நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்டுறாரு.”

“………”

பெரியவங்க எல்லாம் இருந்ததால தான் நான் அமைதியா இருந்தேன். இல்லைன்னா, எனக்கு வந்த ஆத்திரத்துக்குநீங்க கட்டினதை கழட்டி வீசியிருப்பேன்.”

அஞ்சலி…!” அதுவரை அமைதியாக இருந்த அபி அவளை அடக்கினான். நிதானமாக நடந்து வந்தவன் ஒற்றைக் கையால் அவள் பிடரி முடியை அழுத்திப் பிடித்தான். அவள் முகத்தில் வலி தெரிந்தது.

அஞ்சலி, நீ என்னை என்ன வேணாப் பேசு, திட்டு. எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை, ஏன்னா அதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனா நான் உங்கழுத்துல கட்டின தாலி, கட்டினதுதான். அதுல எந்த மாற்றமும் இல்லை. சாகுற வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் தான். அதுலையும் எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு நடுவில யாரும் வரமுடியாது. வரவும் விடமாட்டேன். வந்தாங்கன்னா…” கோபத்தின் உச்சியில் நின்றான் அபிமன்யு. சத்தம் போடவில்லை, ஆழ்ந்து ஒலித்த அந்தக் குரலில் அத்தனை ரௌத்திரம் இருந்தது. அமைதியாக நின்றிருந்தாலும் அவள் பார்வையின் உக்கிரமும் தணியவில்லை. முறைத்த படியே நின்றாள் கீதாஞ்சலி.

 

error: Content is protected !!