MM-21

MM-21

மயங்காதே மனமே 21

செஞ்சந்தன நிற காட்டன் சில்க் புடவையில் கோல்ட்டும், அரக்கு வண்ணமுமாக சின்னதாக போடர் இருக்க, அதே அரக்கு நிறத்தில் ப்ளவுஸ் அணிந்து கனகச்சிதமாக காரிலிருந்து இறங்கினாள் கீதாஞ்சலி.

‘க்ரௌன் ப்ளாஸா’ ஹோட்டல்.

முதுகுவரை இருந்த ஒற்றைப் பின்னலில் குண்டு மல்லி வைத்து, சின்னதாக ஹீல் வைத்த ஸ்லிப்பர்ஸ் அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய ஒரு அட்டியல். கையில் கொஞ்சம் கனமில்லாத தங்க வளையல்கள்

இன்னும் கொஞ்சம் க்ரான்டா ட்ரெஸ் பண்ணலாமேம்மா?” வீட்டிலிருந்து கிளம்பும் போது கேட்ட மாமியாரைப் பார்த்து சிரித்தாள் கீதாஞ்சலி.

இதுவே போதும் அத்தை.” அந்த வார்த்தைக்கு மேல் சீமாவும் அவளை வற்புறுத்தவில்லை. அந்த எளிமையான கோலத்தில் கூட அத்தனை அழகாக இருந்த மருமகளுக்கு திருஷ்டி கழித்தார்.

ஐயோ அத்தை! எதுக்கு இதெல்லாம்?” சிரித்தபடி கேட்டவளை முறைத்துப் பார்த்தார் சீமா.

சிரிக்காத கீதா. ஊரு கண்ணு எல்லாம் எம் மருமக மேலதான். இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு தைரியம்னு போறது, வர்றது எல்லாம் கண்ணு வைக்குது.‌” பேசியபடியே கிச்சனுக்குள் போன அத்தையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது கீதாஞ்சலிக்கு. எத்தனை இனிமையான பெண்மணி. தனக்குக் கிடைத்திருக்கும் மாமியார் இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது என்றே தோன்றியது.

புன்னகை தோய்ந்த முகத்துடன் இறங்கியவளை சுற்றி வர நின்ற காமெராக்கள் பளிச், பளிச்சென்று உள்வாங்கிக் கொண்டன. அவளோடு நாராயணனும், வெற்றியும் கூட வந்திருந்தார்கள்

ஒவ்வொரு வருடமும் நடக்கும் தொழிலதிபர்களுக்கான கூட்டம். இந்த முறைக்ரௌன் ப்ளாசாஹோட்டலில் நடைபெற முடிவாகியிருந்தது. அந்த ஏரியாவில் இருக்கும் அத்தனை முக்கிய புள்ளிகளும் ஆஜராகி இருந்தார்கள்.

வியாபாரத்தில் மகனும் இணைந்து கொண்டதிலிருந்து நாராயணன் தவறாமல் இந்த விழாவில் மகனோடு கலந்து கொள்வது வழக்கம். இந்த வருடம் அபிக்குப் பதிலாக கீதாஞ்சலியை அழைத்து வந்திருந்தார். முதலில் வெகுவாகத் தயங்கினாள் பெண். இருந்தாலும் அபி அவளை ஏதேதோ பேசி, எப்படியோ சம்மதிக்க வைத்திருந்தான்

அபி வீட்டிற்கு வந்து மேலும் இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. கீதாஞ்சலியின் இடது கை முழுமையாக குணமாகி இருந்தது. அபியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது

வீட்டில் இருந்தபடியே லாப்டாப்பில் அவன் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தனது கன்ட்ரோலுக்குள் கொண்டு வந்திருந்தான். ப்ரோண் ஃபார்ம் சம்பந்தப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் அபி சார்பாக கீதாஞ்சலியே கலந்து கொண்டாள்.

இன்னும் இரண்டு வாரங்கள் கழித்தேநெக் ப்ரேஸிஸ் ரிமூவ் பண்ண முடியும் என்று ஈஷ்வரன் கண்டிப்பாக சொல்லிவிட்டதால் வெளி உலகத்தை இன்று வரை தவிர்த்திருந்தான். மிகவும் ஆவலாக அவனைப் பார்க்கப் பிரியப்பட்ட தொழிலாளர்களைக் கூட கொஞ்சம் பொறுமை காக்கும் படி கீதாஞ்சலி மூலம் தகவல் அனுப்பி வைத்தான்.

எல்லாவற்றையும் அசை போட்டபடி மாமனாருடன் ஹோட்டலின் கான்பரன்ஸ் ஹாலிற்கு நடந்து போனாள் கீதாஞ்சலி. இது போன்ற நிகழ்வுகளுக்காகவே அந்த ஹோட்டலில் பல ஹால்கள் இருந்தன

பழைய ஞாபகங்கள் நெஞ்சில் அலைமோதின. இதே ஹோட்டலில் கதிரோடுகிறிஸ்ட்மஸ் ப்ளேக்கான ஆயத்தங்கள் பண்ணியதும், எதிர் பாரா விதமாக மித்ரன் வந்து இணைந்து கொண்டதும், படம் போல மனக்கண்ணில் ஓடியது.

எத்தனை இனிமையாக ஆரம்பித்த டிஸெம்பர். அந்த வருட ஃபங்ஷனுக்காக எத்தனை ஆயத்தங்கள் செய்திருந்தாள். கடைசியில் அந்த ஃபங்ஷனுக்கே தன்னால் போக முடியவில்லையே

பிரபலங்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். நாராயணனும் அன்றைய நிகழ்வில் உரை நிகழ்த்துவதாக ஏற்பாடாகி இருந்தது

நிச்சயமாக இந்த ஃபங்ஷனுக்கு ராஜேந்திரனும் வருவார் என்பதால் பார்வையை அங்கே இங்கே திருப்பாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள் கீதாஞ்சலி. வெற்றி மட்டும் பார்வையை சுழல விட்ட படி கீதாஞ்சலியின் அருகே அமர்ந்திருந்தான்.

ஃபங்ஷனுக்குத் தலைமை தாங்கியவர் இனிதாக எல்லாவற்றையும் ஆரம்பித்து வைக்க, பேசுவதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தவர்கள் ஒவ்வொருவராகப் பேசி முடித்தார்கள்

நாராயணனின் முறை வரவும் எழுந்து போனவர், முதலில் முகமன் கூறி எல்லோரையும் வரவேற்றுவிட்டுவாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார். தனது வீட்டில் நடந்த எதிர்பாராத விபத்தின் போது தனக்குப் பக்க பலமாக நின்றவர்களுக்கும், தொல்லை தராமல் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டவர்களுக்கும் மனதார நன்றி சொன்னார்.

அடுத்து, தன் தொழில் பற்றிப் பேச ஆரம்பித்தவர், இனி வருங்காலங்களில் தன் தொழிலை தன் இடத்தில் இருந்து தன் மருமகள் கீதாஞ்சலியே நடத்த இருப்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

தாங்கள் புதிதாக இரண்டு மில்கள் வாங்கி இருப்பதையும், உற்பத்திப் பெருக்கத்தின் பிற்பாடு புதிய வாடிக்கையாளர்களை மிகவும் அன்புடன் வரவேற்பதாகவும் கூறி பேச்சை முடித்துக் கொண்டார். நாராயணன் பேசி முடிக்கவும் ராஜேந்திரன் சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டார். அதைக் கவனித்த வெற்றியின் முகத்தில் இகழ்ச்சிப் புன்னகை ஒன்று தோன்றியது. கீதாஞ்சலியிடம் அதை நாசூக்காகப் பகிர்ந்து கொண்டான்.

எல்லோரும் பேசி முடித்த பிற்பாடு புஃபே முறையில் உணவு பரிமாறப்பட்டது. நாராயணன் தன் நண்பர்களோடு நகர்ந்து விட வெற்றியும், கீதாஞ்சலியும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பரிமாறிக் கொண்டு ஒரு பக்கமாக வந்து அமர்ந்து கொண்டார்கள்.

சாரும் வந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் இல்லை மேடம்?” வெற்றியின் கேள்வியில் லேசாகப் புன்னகைத்தாள் கீதாஞ்சலி.

அதுக்கென்ன வெற்றி, கண்டிப்பா அடுத்த வருஷம் நாம எல்லாரும் இந்த ஃபங்ஷனுக்கு வரலாம்.” சொல்லிக் கொண்டிருந்த கீதாஞ்சலியைக் கலைத்தது அந்தக் குரல்.

கீதாம்மா.” திரும்பிப் பார்த்த கீதாஞ்சலி கதிரைக் காணவும் புன்னகைத்தாள். வெற்றியின் முகம் செந்தணலாகிப் போனது.

வாங்கண்ணா, எப்பிடி இருக்கீங்க?” 

நல்லா இருக்கேம்மா. நீங்க எப்பிடி இருக்கீங்க? அபி சார் எப்பிடி இருக்காங்க?” கதிர் கேட்டது என்னவோ கீதாஞ்சலியைத் தான். ஆனால் பதில் வந்தது வெற்றியிடமிருந்து.

எங்க சார் தானே? ரொம்பவே நல்லா இருக்காங்க. கொஞ்சப் பேருக்கு லாடங் கட்டுறதுக்காகவே சீக்கிரமா குணமாகணும்னு நாங்கெல்லாம் ஆண்டவனை வேண்டிக்கிட்டே இருக்கோம்.” அந்த இடக்குப் பேச்சை கதிர் கண்டு கொள்ளவே இல்லை.

கீதாம்மா, உங்க கூட நான் தனியா கொஞ்சம் பேசணும்.”

ஏன்? எங்க முன்னாடி சார் உங்க கூட பேச மாட்டாராமா மேடம்?” அந்தப் பதிலில் கதிர் கொஞ்சம் கடுப்பானான்.

வெற்றி, கொஞ்சம் சும்மா இருங்க.” வெற்றியை அடக்கிவிட்டு,

வாங்கண்ணா.” என்றாள். கையிலிருந்த ப்ளேட்டை அங்கிருந்த மேஜை மேல் வைத்து விட்டு இரண்டு பேரும் வெளியே வந்தார்கள். நடந்து போகையில் நர்சரிக்காக புக் பண்ணியிருந்த ஹால் வரவும் அங்கே தாமதித்தாள் கீதாஞ்சலி.

இந்த ஹால் தானே அண்ணா அது?” அவள் கேள்வியில் கொஞ்சம் திணறினான் கதிர்.

உங்களுக்கு ஒன்னு தெரியுமாண்ணா? அந்த ஃபங்ஷனுக்கு நான் போகவே இல்லை…” அந்தக் குரலில் இருந்த வலி கதிரை லேசாக அசைத்துப் பார்த்தது.

கீதாம்மா, இடையில என்னென்னமோ நடந்து போச்சு…”

அதுவா நடக்கலைண்ணா, நடத்திக்கிட்டாங்க.” கசப்பான ஒரு புன்னகையோடு பதில் சொன்னாள் பெண். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.

கீதாம்மா, நான் யாரையும் நியாயப் படுத்தலை. நடந்த விஷயங்கள்ல யாரு சரி, யாரு பிழை எதைப் பத்தியும் நான் பேசலை. ஆனா ஒன்னை மட்டும் நீங்க புரிஞ்சுக்கணும். அபி சாருக்கு நடந்த ஆக்சிடென்ட்டுக்கும், மித்ரன் சாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைம்மா.” ஒரு தவிப்போடு சொன்னான் கதிர். அவன் விளக்கத்தில் புன்னகைத்தாள் கீதாஞ்சலி.

இந்த விளக்கத்தால யாருக்கு என்ன லாபம் அண்ணா? நல்லா இருந்த மனுஷனை முறிச்சு பெட்ல போட்டு எதை சாதிச்சுட்டாங்க? வீண் பகையைத்தானே சம்பாதிச்சு வச்சிருக்காங்க.” அவள் விவாதம் நியாயமானதாக இருந்தாலும், கதிர் அத்தனை சுலபத்தில் அதை ஏற்கவில்லை.

நீங்க யாரைத் தப்பா நினைச்சாலும், மித்ரன் சாரை மட்டும் தப்பா நினைக்காதீங்கம்மா.” கதிரின் குரல் கெஞ்சியது.

ஏன் அண்ணா? உங்க சார் அவ்வளவு நல்லவங்களா? அவங்க மேல எந்தத் தப்புமே இல்லையா? எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன். எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டாங்களே. யாரு செஞ்ச புண்ணியமோ என் அபிக்கு ஒன்னும் ஆகல்லை. ஏதாவது ஆகியிருந்தா…?” கண்கள் கலங்க தன்னைப் பார்த்து கீதாஞ்சலி கேட்ட அந்தக் கேள்வியில் கதிர் கரைந்து போனான்.

கீதாம்மா, உங்களுக்கு எப்பிடிப் புரிய வைக்குறதுன்னு எனக்குப் தெரியலை. முதல் முதலா நீங்க பிஸ்கட் ஃபாக்டரிக்கு வந்தப்போ, உங்களை எச்சரிக்கை பண்ணி அனுப்பினவன் இந்த அண்ணன். அதே அண்ணன் தான் இப்பவும் சொல்லுறேன். மித்ரன் சாரை தப்பா நினைக்காதீங்கம்மா. அவரையும் தாண்டி சில விஷயங்கள் நடந்து போச்சு. அதுக்காக நீங்க அவரை நொந்துறாதீங்கம்மா. நீங்க மனம் நொந்து சபிச்சா, அது அவரை வாழ விடாதும்மா.”

யாரையும் நான் சபிக்கவும் இல்லை, யாரையும் நான் வாழ விடாமப் பண்ணப் போறதும் இல்லை. நான் இந்த நிமிஷம் படுற வேதனை வேற யாருக்கும், அது என் எதிரியா இருந்தாக் கூட வர வேணாம் அண்ணா.” கண்களை அழுந்தத் துடைத்தபடி வெற்றியை நோக்கிப் போனாள் கீதாஞ்சலி. கதிரைத் தேடி எப்போதோ வந்திருந்த மித்ரன், அசையாமல் அனைத்தையும் கேட்டபடி அப்படியே நின்றிருந்தான்.

ஃபங்ஷன் முடித்து வந்த கீதாஞ்சலி, மாடியிலிருந்த அவள் ரூமில் ஒரு வாஷ் எடுத்துவிட்டு நைட்டிக்கு மாறி இருந்தாள். கீழே அபி ஏதோ ஒரு புதிய ஆர்டரில் பிஸியாக லாப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் கார்டனில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

இரவும், நிலவும் ரம்மியமாக இருந்தது. கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டு அந்த நிசப்தத்தை ரசித்தாள்.

ஃபங்ஷனுக்குக் கிளம்பும் போது அபி பண்ணிய கலாட்டா இப்போது ஞாபகம் வரவும், முகத்தில் தானாகவே ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. விலா எலும்புகள் கிட்டத்தட்ட முழுமையாக குணமாகி இருந்ததால் இப்போதெல்லாம் லேசாக அணைக்க ஆரம்பித்திருந்தான்.

பேசமுடியவில்லையே என்ற ஒரு குறையைத் தவிர அவனது குறும்புகள் அத்தனையையும் ஆரம்பித்து இருந்தான். இன்றும் ஆயத்தமாகிக் கொண்டு அவனிடம் சொல்லிக் கொள்ளப் போனவளை வேண்டுமென்றே அருகமர்த்தி, அவள் கூந்தல்ப் பூவின் வாசம் பிடித்தான். முதுகிலிருந்த ஒற்றை ஜடையை அகற்றிவிட்டு ஏதேதோ சில்மிஷங்கள் பண்ணினான்

கீதாஞ்சலிக்குப் புடவையில் அத்தனை பரிட்சயம் கிடையாது. மிகவும் அபூர்வமாகத்தான் புடவை அணிவாள். முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டும் இப்போது புடவை கட்ட ஆரம்பித்திருந்தாள். சிந்தனையைக் கலைத்தபடி ஃபோன் சிணுங்கியது. புதிய நம்பர். யாராக இருக்கும் என்று எண்ணமிட்டபடியே,

ஹலோ.” என்றாள்.

கீதாஞ்சலி.” பரிட்சயமான குரல். ஓரிரு வினாடிகளின் பின், அது மித்ரனின் குரல் என்று மூளை அறிவுறுத்தியது.

டிஸ்கனெக்ட் பண்ணாதீங்க. மிஸஸ். அபி கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.” அந்த ஆழ்ந்த குரலின் கட்டளையில் சற்று நிதானித்தாள் கீதாஞ்சலி. மிஸஸ். அபி என்ற அவன் விழிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.

சொல்லுங்க.”

குட். உங்க ஹஸ்பென்ட்டுக்கு நடந்த ஆக்ஸிடெட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு இப்போ நான் சொன்னா, அது உங்களுக்கு ட்ராமா மாதிரி தோணும். இருந்தாலும் அது தான் உண்மை.”

இதை சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?” கறாராக வந்தது கீதாஞ்சலியின் கேள்வி.

கண்டிப்பா இல்லை. வாழ்க்கையில நிறைய பேரை பாக்குறோம், பழகுறோம். ஆனா ஒரு சில பேர் மட்டும் தான் நம்ம அடிமனசுல ஆழப்பதிஞ்சு போவாங்க, லைன்ல இருக்கீங்களா மிஸஸ்.அபி?”

ம்…”

அப்பிடி ஒரு பொண்ணு என் வாழ்க்கையிலும் வந்தா மேடம். எப்பிடியெல்லாமோ வாழ்ந்த என்னை, இப்பிடித்தான் வாழனும்னு மாத்தினா. ஆனா, அவ கூட வாழ எனக்குக் குடுத்து வைக்கலை.”

ஏன்? செத்துப் போயிட்டாங்களா?” இரக்கமில்லாமல் கேட்டாள் கீதாஞ்சலி.

அவங்களுக்கு அப்பிடி ஏதாவது ஒன்னு நடந்திருந்தாஇன்னைக்கு நீங்க என்னோட இப்பிடி பேசிக்கிட்டு இருந்திருக்க முடியாது.”

…! அவ்வளவு அமரக் காதலா? யாரு அவங்களை உங்ககிட்ட இருந்து பறிச்சுக்கிட்டுப் போனாங்க?” அந்த எள்ளல்க் குரலில் கண்களை ஒரு தரம் அழுந்த மூடினான் மித்ரன். வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தான்.

என்னோட வாழ்க்கையில நான் செஞ்ச மிகப் பெரிய தவறு ஒன்னு, என் வாழ்க்கையையே முழுசா விழுங்கி, ஏப்பம் விட்டுச்சுன்னா உங்களுக்குப் புரியாது மேடம்.” அவன் பேச்சில் மெலிதாகச் சிரித்தாள் கீதாஞ்சலி. அந்த மெல்லிய சத்தம் மித்ரன் காதுகளுக்கும் எட்டியது.

இப்போ எதுக்கு இந்தத் தன்னிலை விளக்கம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

என்னோட வாழ்க்கையில குறுக்க வந்தவங்களுக்கு வலியைக் குடுக்கணும்னு ஒரு கட்டத்துல நான் நினைச்சதென்னவோ உண்மைதான்…”

அதைத் தான் திட்டம் போட்டுக் குடுத்துட்டீங்களே. இன்னும் என்ன மிச்சம் இருக்கு?” அவனை முந்திக்கொண்டு பதில் சொன்னாள் பெண்.

இங்கப் பாருங்க மேடம், திரும்பவும் சொல்லுறேன். எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. மிஸ்டர்.அபியை அடிச்சுப் போடுறதுல எனக்கு என்ன லாபம் இருக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?”

யாருக்குத் தெரியும்? ஸீன்ல இருந்து அபியை முழுசா தூக்கணும்னு நீங்க நினைச்சீங்களோ என்னவோ?”

தூக்கணும்னு நினைச்சிருந்தா நான் எதுக்கு மேடம் வெட்டியா அபியைத் தூக்கணும். எனக்கு யாரு வேணுமோ, அவங்களை இல்லை தூக்கி இருப்பேன்.”

அதுக்கு முன்னாடி தான் எல்லாம் கை மீறிப் போச்சே.”

எது? நீங்க கல்யாணத்தை சொல்லுறீங்களா? தூக்கணும்னு முடிவெடுத்திருந்தா, எனக்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.” அசால்ட்டாகப் பதில் சொன்னான் மித்ரன்.

மிஸ்டர். மித்ரன் வார்த்தையை அளந்து பேசுங்க.” 

இதுவரைக்கும் நீங்க கூடத்தான் எதையும் அளந்து பேசலை மேடம். நான் பேசினா மட்டும் எதுக்கு எகிர்றீங்க?”

உங்களால பாதிக்கப்பட்டது நான். நான் அளந்து பேசணுமா? நான் எதுக்கு அளந்து பேசணும்?”

பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டன்னு சொல்லுறீங்களே? என்ன பாதிக்கப்பட்டுட்டீங்க? அபி நல்லாத்தானே இருக்காரு? சந்தோஷமாத்தானே இருக்கீங்க. அப்புறம் என்ன?”

…! உங்களுக்கு அவ்வளவு சிம்பிளா போச்சா? நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு நத்திங்கா? இவ்வளவு பேசுறீங்களே, நல்லதைப் போல ஒரு கெட்டது நடந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? அப்போ என்ன சொல்லி இருப்பீங்க?” இதைச் சொல்லும்போது கிட்டத்தட்ட கீதாஞ்சலி கத்தினாள். உடம்பு முழுவதும் லேசாக நடுங்கியது

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, அபியை ஸீன்ல இருந்து தூக்கத்தான் நான் இப்பிடியெல்லாம் பண்ணினேன்னு. அபியைத் தூக்கின கையோட, உங்களையும் தூக்கி இருப்பேன்.” மிகவும் நிதானமாகச் சொன்னான் மித்ரன்.

மித்ரன்…!” மரியாதை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.

இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல்லை மேடம், எதுக்கு இப்பிடியொரு வாழ்க்கை உங்களுக்கு? பேசாம வந்திடுங்க…” மித்ரனை முடிக்க விடாமல் கிறீச்சிட்டது கீதாஞ்சலியின் குரல்.

ஏய் மித்ரா…!” அதற்கு மேலும் இருக்க முடியாமல் தன்னிச்சையாக எழுந்து நின்றிருந்தாள் அபியின் மனைவி. ஒரு கை ஃபோனை அழுத்திப் பிடிக்க, மறு கை நைட்டியைக் கசக்கியபடி இறுகப் பிடித்திருந்தது.

என்ன தைரியம் இவனுக்கு? என்னவொரு திண்ணக்கம் இருந்திருந்தால் இப்படியொரு வார்த்தையை, அதுவும் அவளைப் பார்த்தே கேட்டிருப்பான். ஃபோனை அவள் அணைத்திருக்கவில்லை. ஆனால் அதுவாகவே நின்று போயிருந்தது.

இங்கே கீதாஞ்சலியின் நிலை இதுவென்றால், அங்கே மித்ரனின் நிலை அதை விட மோசமாக இருந்தது. அவனது புத்தம் புதிய ஃபோன் தோட்டத்திற்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த செங்கல் நடைபாதையில் சிதறிக் கிடந்தது.

பளார்.” பேரனை ஓங்கி ஒரு அறை விட்ட மதுராந்தகன், ருத்ர மூர்த்தியாக அவன் முன்னே நின்றிருந்தார். அவர் விசிறியடித்த ஃபோன் தான் அங்கு சிதறிப் போய்க் கிடந்தது.

கன்னத்தை லேசாகத் தடவிய மித்ரன் ஆச்சரியமாகத் தன் தாத்தாவைப் பார்த்தான். கண்டித்துப் பல முறை பேசியிருந்தாலும், இன்று வரை இப்படியெல்லாம் நடந்து கொள்ளாத தாத்தா

தாத்தா…!” 

பேசாதடா நாயே!” அவரின் கர்ச்சனையில் உள்ளேயிருந்த ஜெயந்தி ஓடி வந்திருந்தார். வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லை. ராஜேந்திரனும், மனைவியும் வழமை போல எங்கோ பார்ட்டிக்குப் போயிருந்தார்கள்.

அப்பனுக்குப் புள்ளை தப்பாமப் பொறந்திருக்கேன்னு காட்டுறியா?” அவரின் கேள்வியில் மித்ரனின் புருவங்கள் லேசாக வளைந்தது. ஜெயந்தி அங்கேயிருந்த பெஞ்சில் தொப்பென்று உட்கார்ந்தார். கண்களில் கண்ணீர் சர சர வென்று வழிந்தது.

அன்னைக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கையை உன் அப்பன் அழிச்சான். அந்தப் பாவத்தையே எங்க கொண்டு போய்க் கரைக்கிறதுன்னு தெரியாம நாங்க முழிச்சிக்கிட்டு நிக்குறோம். இதுல நீ வேற ஆரம்பிக்குறயா?” அனல் தெறித்தது மதுராந்தகன் பேச்சில். சொல்லி முடித்தவர் அத்தோடு நிறுத்திவிட்டு, மட மடவென்று வீட்டினுள்ளே போய் விட்டார்.

மித்ரன் பாட்டியைத் திரும்பிப் பார்த்தான். கண்கள் நிலைகுத்தி சூனியத்தை வெறித்தபடி இருக்க, ஆடாமல், அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார் ஜெயந்தி.

பாட்டி…” ஜெயந்தியின் தோள்களை உலுக்கினான் மித்ரன். மெதுவாக பேரனைத் திரும்பிப் பார்த்தார் பாட்டி.

தாத்தா என்ன சொல்லுறாங்க பாட்டி?”

நீ என்ன பண்ணின மித்ரா?” ஒரு கேவல் வெளிப்பட்டது அவரிடமிருந்து.

அதுவந்துசும்மா ஏதோ ஒரு கோபத்துல…”

கோபத்துல…?” பாட்டி விடாமல் துருவவும் கண்களை அழுந்த மூடினான் மித்ரன்.

என்னென்னமோ நடந்து போச்சு பாட்டி…” என்று தொடங்கியவன் பாட்டியிடம் அத்தனையையும் கொட்டித் தீர்த்தான். அமைதியாகக் கேட்டபடி இருந்தார் ஜெயந்தி.

அவனை கொன்னு புதைக்கணும்னு தான் முதல்ல நினைச்சேன் பாட்டி. ஆனா, அந்தப் பொண்ணு முகம் என்னை என்னமோ பண்ணிச்சு பாட்டி…” வலியோடு பேசிய பேரனை ஊன்றிப் பார்த்தார் பாட்டி.

அந்தளவுக்கு ஒதுங்கின நீ, இன்னைக்கு ஏன் அப்பிடிப் பேசின மித்ரா?”

தெரியலை பாட்டி. பேசணும்னு நினைச்சுப் பேசலை. அந்த எண்ணம் துளியளவு கூட எம்மனசுல இல்லை. ஏதோ ஒரு கோபத்துல வார்த்தை வந்து விழுந்திடுச்சு.”

ம்நீ சின்னப் பையன் கிடையாது. தொழில் பண்ணுறவன். எந்த இடத்திலயும் உன்னை கன்ட்ரோல் பண்ண பழகிக்க.” 

அதை விடுங்க பாட்டி, தாத்தா என்னமோ சொல்ல வந்தாரே? அது என்ன?” கேட்ட பேரனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டார் ஜெயந்தி.

சொல்லுங்க பாட்டி.” மித்ரன் விடவில்லை.

மித்ராஉங்கப்பா உங்கம்மாவைக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி காதல்ன்னு வந்து நின்னான்.”

…! யாரது?” 

தெரியலையாரோ ஒரு பொண்ணு. பாக்க அவ்வளவு அழகா இருந்தா. எங்கேயோ கொஞ்சம் தள்ளி இருக்கிற இடத்துப் பொண்ணாம். உங்க தாத்தாவுக்குத் தான் அதெல்லாம் தெரியும்.”

ம்அப்புறம்?”

நமக்கும், அவங்களுக்கும் அந்தஸ்துல ஏணி வைச்சாக் கூட எட்டாது.”

ஐயோ! இதுல என்ன பாட்டி இருக்கு? மனசுக்குப் புடிச்சிருந்தா கட்டி வைக்க வேண்டியது தானே?”

இதையே தான் உங்க தாத்தாவும் சொன்னாங்க. உங்கப்பா அவ்வளவு உறுதியா நின்னதால நாங்க எங்க மனசை மாத்திக்கிட்டோம்.”

அப்புறம் ஏன் அந்தக் கல்யாணம் நடக்கலை பாட்டி?” 

இன்னைக்கு வரைக்கும் அது ஏன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு ஒரு நாள் உங்கம்மாவைக் காட்டி, இவளைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னான். எங்களுக்கும்அப்பாடா’ன்னு இருந்திச்சு. உங்கப்பன் காதலிச்ச பொண்ணைக் கட்டினா, கேக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு முழி பிதுங்கின எங்களுக்கு அப்போ எதையும் யோசிக்கத் தோனலைப்பா.” நிறுத்திய ஜெயந்தி ஒரு பெருமூச்சு விட்டார்.

என்ன நடந்துது பாட்டி?”

உங்கப்பன் கல்யாணம் முடிஞ்சு நீயும் பொறந்தே. உனக்கு ஒரு பதினைஞ்சு வயசு இருக்கிறப்போஅபியோட தாத்தா இருக்கிறாரு இல்லை, அவரு எங்களை ஒரு தரம் கூப்பிட்டு அனுப்பி இருந்தார். அபியோட தாத்தாவும், உன்னோட தாத்தாவும் ரொம்ப நெருக்கம், அது உனக்குத் தெரியுமில்லை?” பாட்டியின் கேள்வியில் ஆமெனத் தலையாட்டினான் மித்ரன்.

நாங்க போனதும் அந்தப் பொண்ணைப் பத்தித் தான் பேசினாங்க. அவங்க காதுக்கு அந்த செய்தி எப்பிடியோ வந்திருந்துது. உங்கப்பா அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னதால அவங்க வீட்டுல அந்தப் பொண்ணுக்கு வேற கல்யாணம் பண்ணி வைச்சிருந்திருக்காங்க.”

ம்…” 

கல்யாணம் பண்ணினவன் அவ்வளவு குணசாலி இல்லை போல. ரெண்டு குழந்தைங்களும் பொறந்திருக்கு. அந்தப் பொண்ணு மேல வஞ்சகம் இருந்த யாரோ உங்கப்பா பத்தி அந்தப் பொண்ணோட புருஷன் கிட்ட போட்டுக் குடுத்திருக்காங்க.”

பாட்டி…!”

ம்அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்திருக்கு. புருஷனோட இம்சைகளை தாங்க முடியாம நிறையக் கஷ்டப் பட்டிருக்கா. நாங்க அவளைப் பாக்கப் போனப்போ…” நெஞ்சு கனக்க பேச்சை நிறுத்தினார் ஜெயந்தி

பாட்டி…! பாத்தீங்களா பாட்டி? அவங்களைப் பாத்தீங்களா பாட்டி?” ஆவலாகக் கேட்டான் மித்ரன்.

ம்அவ புருஷனுக்குத் தெரியாம ஹாஸ்பிடல்ல போய்ப் பாத்தோம். அந்த நிலையில கூட அவ்வளவு அழகா இருந்தா…”

இப்போ எங்க இருக்காங்க பாட்டி?”

நாங்க போய் பாத்த ரெண்டாவது நாள்லயே மகராசி போய்ச் சேந்துட்டாப்பா…”

பாட்டி…! என்ன சொல்லுறீங்க பாட்டி?” மித்ரனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

ஒரு குடும்பத்தைக் கெடுத்த பாவத்தைத் தோள்ல சுமந்துக்கிட்டு ஊர் வந்து சேந்தோம்.” எங்கோ கனவில் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தார் ஜெயந்தி

அதுக்கப்புறம் என்ன ஆச்சுதாம்? அந்தப் பசங்க என்ன ஆனாங்க?”

அந்தப் பொண்ணு போனதுக்கப்புறம் அவ புருஷன் என்ன ஆனான்னே தெரியாது. அனாதைங்களா நின்ன குழந்தைங்களை, உங்க தாத்தா பொறுப்பெடுத்துக் கிட்டாரு. ரெண்டு பேரையும் நல்ல ஹாஸ்டல்ல போட்டு நல்லா படிப்பிச்சாரு. காலம் ஓடிருச்சு மித்ரா.”

யாரு பாட்டி அவங்க? நான் அவங்களைப் பாக்கணும், இப்போ எங்க இருக்காங்க பாட்டி?” ஆர்வமாகக் கேட்ட பேரனை கருணையோடு பார்த்தார் பாட்டி.

அதான் தினமும் அவனைப் பாத்துக்கிட்டிருக்கியே மித்ரா.” பாட்டியின் பதிலில் ஆச்சரியப் பட்டான் மித்ரன்.

என்ன சொல்லுறீங்க பாட்டி? நானா…?! தினமும் பாக்குறேனா…?! யாரை…?”

கதிர்…!” பாட்டி சொன்ன பதிலில் உறைந்து போனான் மித்ரன்.

 

error: Content is protected !!