mm12

mm12

மயங்காதே மனமே 12

மித்ரனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. மகேந்திரனின் சின்னத்தனமான இந்த வேலையில், கீதாஞ்சலியின் குடும்பம் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. அதுவும் கதிர் சொல்வதைப் பார்த்தால், மிடில் க்ளாஸ் மக்கள் மானம், மரியாதையை உயிராக நினைப்பார்களாமே!

மகேந்திரனை வெளுத்து வாங்கிய கையோடு கீதாஞ்சலி வீட்டிற்குத் தான் வந்திருந்தான். ஏனோ அவளைப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தோன்றியது. வீடு பூட்டியிருக்கவும், கதிரை விட்டு அக்கம் பக்கம் விசாரிக்கச் சொன்னான். யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. எங்கே போயிருப்பார்கள் என்று ஒன்றும் புரியவில்லை.

சர்வ நிச்சயமாக அபிமன்யுவை எந்த இடத்திலும் அவன் கீதாஞ்சலியோடு இணைத்துப் பார்க்கவில்லை. அந்தக் கோணத்தில் அவன் சிறிதும் சிந்திக்காததால், கீதாஞ்சலி அபி வீட்டில் இருப்பதை அவனால் யூகிக்க முடியவில்லை. அவன் சிந்தனையைக் கலைத்தபடி வந்து சேர்ந்தான் கதிர்.

சார், மகேந்திரனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.” கலவரத்துடன் சொன்னான் கதிர்.

அதுக்கு நீ ஏன் கதிர் இவ்வளவு டென்ஷன் ஆகுற?” புன்னகையுடன் கேட்டான் மித்ரன்.

என்ன சார் இவ்வளவு சாதாரணமா சொல்லுறீங்க? அந்த மனுஷனுக்கு ஒன்னு ஆச்சுதுன்னா அந்த அம்மா நம்மைத் தானே கை காட்டுவாங்க?”

ம்காட்டுவாங்க எங்கிற நீ?”

மாட்டாங்களா சார்?”

அதெல்லாம் மாட்டாங்க. அதை விடு கதிர், கீதாஞ்சலி பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா?”

இல்லை சார். ஃபோனும் ஸ்விச்ட் ஆஃப் ன்னு தான் வருது. நிறையத் தரம் முயற்சி பண்ணி பாத்துட்டேன்.”

ம்…” தாடையைத் தடவிய படி யோசித்தான் மித்ரன்.

சரி காரை எடு, இன்னொரு தரம் அவங்க வீட்டுக்குப் போய் பாத்துடலாம்.” சொல்லியபடி காரின் கீயைத் தூக்கி கதிரிடம் போட்டான் மித்ரன்

கதிரிற்கும் அதுதான் சரியென்று பட்டது. தங்களைப் போல ஒரு சாதாரண குடும்பம். இந்த விஷயத்தைப் பார்த்ததும் எத்தனை தூரம் ஆடிப் போயிருப்பார்கள் என்று கதிருக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. அவனால் அதனை தெட்டத் தெளிவாக உணர முடிந்தது.

ஆனால் மாயமாக மறைந்து போன அந்தப் பெண் அவனுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணினாள். படித்த குடும்பம். அதனால் எந்தத் தவறான முடிவிற்கும் போயிருப்பார்கள் என்று அவனால் நினைக்க முடியவில்லை.

கார் கீதாஞ்சலியின் வீட்டை அடைந்திருந்தது. மித்ரனும் சிந்தனையோடே அமர்ந்திருந்தான். எதுவும் பேசவில்லை. காரை நிறுத்திய கதிர் ஓரளவு உயரமாக இருந்த சுற்று மதிலின் மேலாக எட்டிப் பார்த்தான். வீட்டிற்குள் நடமாட்டம் தெரிந்தது.

சார், வீட்டுக்குள்ள நடமாட்டம் தெரியுது சார்.” என்றான். அவன் குரலில் உற்சாகம் தெரிந்தது.

உள்ள போய் பாத்திடலாமா கதிர்? எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்களே?” மித்ரனின் கேள்வியில் ஆச்சரியப் பட்டான் கதிர். பேசுவது தன் முதலாளி தானா? இவர் என்றைக்காவது மற்றவர்களின் உணர்ச்சிகளைப் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறாரா?

இல்லை சார். இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? ஒரு ஃப்ரெண்ட்டா நீங்க அக்கறையோட விசாரிக்குறீங்க. இதுல என்ன தப்பிருக்கு?”

நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.” சொல்லியபடி மித்ரன் காரை விட்டிறங்க, இரண்டு பேரும் உள்ளே போனார்கள். வீட்டின் முன் கதவு திறந்தே இருந்தது. அறிவழகன் உள்ளே அமர்ந்திருந்தார்.

சார்…” கதிரின் குரல் அவரைக் கலைத்தது. எழுந்து வந்தவர்,

சொல்லுங்க தம்பி, யார் வேணும் உங்களுக்கு?” என்றார்.

சார், நாங்க மேடமை பாக்க வந்தோம்.”

எந்த மேடம்?”

கீதாஞ்சலி மேடம்…” கதிர் இழுக்கவும், அவனை கேள்வியாகப் பார்த்தார் அறிவழகன்.

நீங்க யாரு? நீங்க எதுக்கு எம்பொண்ணைப் பாக்கனும்?” அவர் சந்தேகமாகக் கேட்கவும், அதுவரை மௌனமாக நின்ற மித்ரன் முன்னே வந்தான்.

சார், ஐம் மித்ரன். ஓனர் ஒஃப் மித்ரன் க்ரூப்ஸ். உங்க பொண்ணோட நர்சரிக்கு இந்த வருஷம் ஸ்பான்ஸர் பண்ணுறது நாங்கதான். அந்த வகையில மிஸ். கீதாஞ்சலி எங்களுக்குப் பழக்கம். இன்னைக்கு காலைல பேப்பரைப் பாத்ததும் ஷாக் ஆகிடுச்சு. அதுதான் மிஸ். கீதாஞ்சலியைப் பாத்துப் பேசிட்டுப் போகலாமேன்னு வந்தோம்.” கோர்வையாகச் சொல்லி முடித்தான் மித்ரன்.

…! அவ இப்போ இங்க இல்லை சார். பெங்களுர்ல இருக்கிற அவங்க பெரியப்பா வீட்டுக்கு போயிருக்கா.”

அப்பிடியா? ஃபோன்லயும் கான்டாக்ட் பண்ண முடியலை…”

இப்பிடியொரு விஷயம் வந்ததுக்கு அப்புறம் வேற என்ன சார் பண்ண முடியும்?” காட்டமாகக் கேட்டவரை அனுதாபமாகப் பார்த்தான் மித்ரன். இதற்காகவே மகேந்திரனை இன்னுமொரு முறை அறையலாம் போல இருந்தது

நாங்க கிளம்புறோம் சார்.” சொல்லிவிட்டு வெளியேறினார்கள் இருவரும். கதிரிற்கும் மனம் பாரமாக இருந்தது. எத்தனை அருமையான பெண். அவளுக்கு இப்படி நடந்து விட்டதே என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது. இப்போது மித்ரன் ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தான்.

உண்மையாவே கீதாஞ்சலி பெங்களூர் போயிருப்பாங்களா கதிர்?” மித்ரனின் கேள்வியில் கொஞ்சம் யோசித்தான் கதிர்.

வாய்ப்பு இருக்கு சார். இங்க இருந்தா நிறையப் பேரை சமாளிக்கனும். இப்போ பாத்தீங்கல்லை, நாமளே கிளம்பி போய்ட்டோம். அதனால தான் ஃபோனையும் ஆஃப் பண்ணி இருப்பாங்களாயிருக்கும்.”

ம்…” சற்று நேரம் அங்கு மௌனம் நிலவியது.

சார், இந்தப் பொண்ணு எதுக்கு அபி சாரை மீட் பண்ணி இருக்கும்?” திடீரெனக் கேட்டான் கதிர். மித்ரன் முகத்தில் ஒரு புன்னகை அமர்ந்து கொண்டது.

ஸோனா அபியை மீட் பண்ணினாளா என்ன?” இப்போது கதிர் புன்னகைத்தான்.

ஆமாமில்லைஇருந்தாலும் எனக்கு அது கொஞ்சம் யோசனையாத்தான் இருக்கு சார்.”

வாய்ப்பில்லை கதிர். அந்த அபி ரொம்ப திமிர் புடிச்சவன். பப்புல கூட நிறைய பொண்ணுங்க ட்றை பண்ணுவாங்க. இவன் கண்டுக்க மாட்டான். ரொம்பவே ஸ்டேட்டஸ் பாப்பான்.” சொல்லியபடியே காரை ஓட்டிய மித்ரனுக்கு, தன்னை நிறம் மாற்றிய காதல், அபியையும் மாற்றி இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை.

அதே நேரம், கீதாஞ்சலி வீட்டில் தலையைக் கையால் தாங்கிய படி அமர்ந்திருந்தார் அறிவழகன். பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சுளாவின் முகத்தில் அத்தனை அதிர்ச்சி தெரிந்தது.

என்னங்க சொல்லுறீங்க? மித்ரன் எங்குறீங்க, மகேந்திரன் எங்குறீங்க. யாருங்க இவங்கெல்லாம்?”

மாப்பிள்ளை சொன்னப்போ ஆடிப்போயிட்டேன் மஞ்சு. பக்காப் பொறுக்கியாம். கீதா மேல ஒரு கண்ணு விழப்போய்த் தானாம் நர்சரிக்கு உதவி பண்ணுற மாதிரி போயிருக்கானாம்.” கவலையோடே சொன்னார் அறிவழகன்.

அது எப்பிடிங்க இவருக்கு அவ்வளவு உறுதியாத் தெரியும்?”

முன்னாடி ஒரு ஃபோட்டோ இப்பிடி பேப்பர்ல வந்துதில்லை. அது இவனோட வேலை தானாம். அந்தப் படத்துல இருந்த பொண்ணு இவனுக்கு வேண்டப்பட்டது தானாம். அந்தப் பொண்ணை இப்போ கழட்டி விட்டுட்டு, நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன், அந்தப் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லி இருக்கானாம்.”

அப்போ அந்தப் பொண்ணை காதலிக்காமத் தான் அவ கூட திரிஞ்சானாமா?”

அந்தக் கன்றாவி எல்லாம் எனக்குத் தெரியாது. கொஞ்சம் ஃபோட்டோ காமிச்சாரு. அந்தப் பொண்ணோட இவன் இருக்கிற மாதிரி. கண் கொண்டு பாக்க முடியலை. ஆண்டவா, இந்த உலகம் எங்க போகுதுன்னு தெரியலையே!” அங்கலாய்த்த கணவரை பரிதாபமாகப் பார்த்தார் மஞ்சுளா.

நிறைய விஷயங்கள் பேசினார் மஞ்சு. உண்மையா பேசினார். அது எனக்குப் பிடிச்சிருந்துது. குடும்பமும் அத்தனை பண்பா நடந்துக்கிட்டாங்க. பாத்தே இல்லையாம்மா? அதான், உங்கிட்ட கூட ஒரு வார்த்தை கேக்காம சட்டுன்னு சரி சொல்லிட்டேன்.”

புரிஞ்சுதுங்க. நீங்க தனியா முடிவெடுத்தப்போவே நான் நினைச்சேன். ஏதோ நடந்திருக்குன்னு.”

ஒன்னுமில்லைன்னா இப்பிடி வீடு வரைக்கும் தேடி வருவானா அந்த ராஸ்கல்?”

அதானே! நல்ல காலம், நீங்க அப்பிடிச் சொல்லிட்டீங்க. கல்யாணத்துல ஏதாவது பிரச்சினை பண்ணுவானோ?”

மாப்பிள்ளை இல்லேங்குறாரு. அவனுக்கு இவர் மேல சந்தேகம் வராதுன்னு சொல்றார். கீதா இங்கேயே இருக்கட்டும், கல்யாணத்தை சிம்பிளா முடிச்சிடலாம்னு சொன்னார்மா. அதுதான் எனக்கும் சரின்னு பட்டுது. கீதா இப்போ அங்க இருக்கிறது தான் பாதுகாப்பு.”

ம்…”

இது எதுவும் ஆதிக்குத் தெரிய வேணாம். சின்னப் பையன். கோபத்துல அந்தப் பொறுக்கியை ஏதாவது பண்ணுறேன்னு கிளம்பிருவான்.”

ம்அதுவும் சரிதான்.” சொல்லியபடி எழுந்து போனார் மஞ்சுளா.

                                             *     *     *     *     *     *     *     *     *     *     *

அந்த ரூமிற்குள் அமைதியாக அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி. நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. விடிந்தது முதல் நடந்த நிகழ்வுகள் அவளைப் புரட்டிப் போட்டிருந்தன.

அபியோடு பேசிய பிறகு அவனை அவள் காணவில்லை. ரஞ்சனியும், தருணுமே அவளை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டார்கள். டாக்டரும் இரண்டொரு வார்த்தைகள் பேசினார்

எல்லோரும் ஏதோ ஒரு குற்ற உணர்வில் சிக்கிக் கொண்டு தவிப்பது அவளுக்குப் புரிந்தது. தன்னைப் புறக்கணிக்காமல், தனக்குத் தீங்கிழைத்து விட்டது போல அவர்கள் வருந்துவது, சங்கடமாக இருந்தாலும், மனதுக்குக் கொஞ்சம் இதமாக இருந்தது.

அதிலும் அபியின் அம்மாஅந்தப் பெண்மணியின் பார்வைக்கு அர்த்தம் சத்தியமாக கீதாஞ்சலிக்குப் புரியவில்லை. அவரை அணைத்து ஆறுதல் சொல்லலாம் போல தோன்றியது அவளுக்கு. அபியை நினைத்த மாத்திரத்தில் அந்த எண்ணம் காணாமல் போனது.

அவனை நினைத்த மாத்திரத்தில் கோபம் சட்டென்று ஏறியது. எத்தனை தைரியம் இருந்தால் ஒரு வார்த்தை கேளாமல் தாலி கட்டுவான்.

அத்தனை சொல்லியும் அவன் இஷ்டத்துக்கே நடந்தால், என் வார்த்தைக்கு என்ன மரியாதை. நான் என்ன இவன் வீட்டு வேலைக்காரியா? வேலைக்காரி கூட இதையெல்லாம் இந்தக் காலத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டாள். பொங்கிய மனதைத் தணித்தது கதவின் ஓசை

எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அபிதான் நின்று கொண்டிருந்தான். கையில் ஃபோன் இருந்தது. அவன் நீட்டவும் கேள்வியாகப் பார்த்தாள்.

அப்பா லைன்ல இருக்கார் அஞ்சலி.” அவன் சொன்னதுதான் தாமதம், சட்டென்று ஃபோனை வாங்கிக் கொண்டாள். அவள் பேசத் தனிமை கொடுத்து விட்டு, வெளியே காத்திருந்தான் அபிமன்யு.

ஹலோ, அப்பா.”

கீதா, எப்பிடிம்மா இருக்கே?”

ம்…” கண்ணீர்க் குரலில் பதில் வந்தது.

உன் திங்ஸ் எல்லாத்தையும் பாக் பண்ணி அனுப்பி இருக்கோம். ஃபோனை இப்போதைக்கு பாவிக்காதம்மா. கொஞ்ச நாள் கழிச்சு பாவிக்கலாம்.”

ஏம்பா?”

அப்பா சொல்றதை கேளுடா தங்கம். நாங்க உன்னோட நன்மைக்குத் தானே சொல்லுவோம்.”

சரிப்பா.”

எல்லாரும் உங்கூட நல்லா நடந்துக்குறாங்களா?”

ம்அதுல எந்தக் குறையும் இல்லைப்பா.”

நல்லது. நீயும் அதே மாதிரி நடந்துக்கம்மா. அப்பா உனக்கு சொல்லத் தேவையில்லை. நீ ரொம்ப பொறுப்பான பொண்ணு.”

சரிப்பா.”

எதைப் பத்தியும் கவலைப்படாம நீ சந்தோஷமா இருக்கனும் என்ன?”

ம்சரிப்பா.” பேசி முடித்தவள் ரூமை விட்டு வெளியே வந்தாள். அபி ஹாலில் நின்றிருந்தான். மாடியில் இருந்த ரூம் ஒன்றை அவளுக்குக் கொடுத்திருந்தார்கள். அவள் வீடும் சகல வசதிகளும் கொண்டது தான் என்றாலும், இங்கு எல்லா இடத்திலும் ஒரு நேர்த்தி தெரிந்தது. ஒவ்வொரு மூலையிலும் அழகு தெரிந்தது

மேலேயிருந்த ரூம்களில் ஒன்று அபிக்கும், இன்னொன்று ரஞ்சனிக்குமாம். ரஞ்சனி இங்கு வரும் போதெல்லாம் அந்த ரூமில் தான் தங்குவாளாம். இத்தனையும் ரஞ்சனி சொன்ன தகவல். ஓயாது பேசிக் கொண்டிருந்தவளை கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் டாக்டர் அழைத்துப் போயிருந்தார்.

ஹாலில் நின்றபடி ஏதோ ஒரு ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு. பக்கத்தில் வந்தவள், ஃபோனை அவன் புறமாக நீட்டினாள். கவனம் கலைந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அந்த முகத்தில் எந்தவொரு இணக்கமும் இருக்கவில்லை.

இன்னும் கோபம் போகல்லையா அஞ்சலி?” அவன் கேட்டதை சட்டை செய்யாமல் திரும்பினாள் கீதாஞ்சலி. அவள் கை பிடித்து அவளைத் தடுத்தவன்,

எங்கூட பேசமாட்டியா?” என்றான். குரல் கொஞ்சம் கெஞ்சியது.

கையை விடுங்க.”

நீ எங்கூட பேசு, அப்புறமா நான் விடுறேன்.” 

எதுக்கு நான் பேசனும்? என்னை மதிக்காதவங்க கிட்ட எனக்கு என்ன பேச்சு.” சொல்லியபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மதிக்கலைன்னு உனக்குத் தெரியுமா அஞ்சலி?”

அப்போ இங்க நடக்குறதுக்குப் பேர் என்ன?”

உங்கப்பாவும் தான் உங்கிட்ட எதுவும் சொல்லலை. அவர் சொன்னதை நீ ஏத்துக்கிட்ட இல்லை? அப்பிடி என்னையும் ஏத்துக்க முடியாதா? உங்கப்பா மட்டும்தான் உனக்கு நல்லது நினைப்பாரா? நான் நினைக்க மாட்டனா அஞ்சலி?”

அப்பிடி நினைக்கிறவரா இருந்தா எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டுப் பண்ணி இருக்கலாமே?”

சொல்லியிருந்தா சம்மதிச்சிருப்பியா?”

மாட்டேன்னு புரியுதில்லை. அப்போ ஏன் அப்பிடிப் பண்ணினீங்க.” கேட்டவளின் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தான் அபி. அவள் சொன்னமாட்டேன்என்ற வார்த்தை அவனை உஷ்ணப் படுத்தியது.

ஏன்னா, நீ எனக்கு வேணும்டி. உன்னோட முட்டாள்த் தனமான கொள்கைகளுக்காக உன்னை இன்னொருத்தனுக்கு தூக்கிக் கொடுக்கச் சொல்லுறயா? அதுக்கு வேற ஆளைப் பாரு.” காட்டமாகச் சொன்னவன் ஃபோனைக் கூட வாங்காமல் கிளம்பிப் போய்விட்டான்.

கீதாஞ்சலி அப்படியே நின்றிருந்தாள். அவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் கோபத்தை அதிகரித்தது. இவனை வேண்டாம் என்றுதானே சொன்னேன். வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவதாக நான் சொல்லவே இல்லையே?

சிந்தித்தபடியே ஃபோனைப் பாத்தாள். ‘ஸ்க்ரீன் ஸேவர்இல் அன்றைய தினம் பத்திரிகையில் வந்த ஃபோட்டோ இருந்தது. அருகருகே நின்றிருந்தார்கள் இருவரும். ஒரு கையால் அபி அவளைத் தாங்கி நிற்க, அவன் முகத்தை அண்ணார்ந்து பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள் கீதா. அத்தனை அழகாக இருந்தது படம்

காலையில் நடந்த களேபரத்தில் படத்தை அவள் சரியாகப் பார்க்கவில்லை. இப்போது பார்க்கும் போது, அந்த ஃபோட்டோ க்ராஃபரிடம் ஒரிஜினலை வாங்கினால் தேவலை, என்று தோன்றியது. தன் கையிலிருப்பது அவன் ஃபோன் என்பதை அவள் மறந்து போனாள்.

யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள் கீதாஞ்சலி. சீமா வந்து கொண்டிருந்தார்

சாப்பாடு ரெடியாகிடுச்சு. சாப்பிடலாமா கீதா?”

ம்…” அந்த ஒற்றைச் சொல்லில் அவர் முகம் சுணங்கியது.

என்னை அத்தைன்னு கூப்பிட மாட்டியா?” அவர் கேள்வியில் சட்டென்று இறங்கினாள் இளையவள்.

சரிங்கத்தை.”

ம்இதுதான் கேக்க நல்லா இருக்கு.” அவர் முகம் மலர்ந்து போனது.

உங்க வீட்டு சமையல் எப்பிடின்னு எனக்குத் தெரியாது. இன்னைக்கு ஏதாவது பிடிக்கலைன்னா எங்கிட்ட தாராளமா சொல்லலாம். நான் மாத்திக்குவேன், சரியா?”

சரிங்கத்தை.”

நான் சொல்லிட்டேன்னு அந்த ஒரு வார்த்தையை மட்டும் சொல்லாம, வேற ஏதாவது பேசு கீதா.”

சரிங்கத்…” சொல்லியவள் பாதியில் நிறுத்திவிட்டு மாமியாரைப் பார்க்க, அவரும் மருமகளைக் குறும்பாகப் பார்த்தார். வாய்விட்டுச் சிரித்தபடி இரண்டு பேரும் கீழிறங்கி வந்தார்கள்.

டைனிங் டேபிளில் தாத்தாவும், பாட்டியும் அமர்ந்திருந்தார்கள். கீதாஞ்சலிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதுவரை அவர்கள் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்பதை மூளை அவசரமாக நினைவு படுத்தியது.

வாம்மா.” பாட்டி சொல்லவும் மையமாகப் புன்னகைத்தாள் கீதாஞ்சலி. ரஞ்சனி குடும்பமும் வந்தமர்ந்து கொண்டது. நாராயணனும், அபியும் ஏதோ பேசியபடியே வந்தமர்ந்தார்கள். சீமாவும் கீதாஞ்சலியின் அருகே அமர்ந்து கொள்ள எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பாட்டி, கல்யாணத்துக்குரிய புடவை, நகையெல்லாம் எப்போ வாங்கப் போறோம்?” ரஞ்சனி கேட்கவும், சீமா பதில் சொன்னார்.

இனித்தான் வாங்கனுமா என்ன? அதெல்லாம் நான் ஏற்கனவே வாங்கி வச்சிருக்கேன்.”

என்னத்தை, இப்பிடி ரஞ்சனியை ஏமாத்திட்டீங்க? இதை சாக்கா வெச்சு அவளுக்கு ரெண்டு பட்டுப்புடவை வாங்கியிருப்பா இல்லை?” ஈஷ்வரன் சொல்லவும், எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். ரஞ்சனியின் முகம் சிவந்து போனது.

அண்ணா, பாத்தியாண்ணா. எல்லாரும் சேந்துக்கிட்டு என்னைக் கேலி பண்ணுறாங்க.” சிணுங்கினாள் ரஞ்சனி. அபியும் சேர்ந்து சிரித்தான்

அபியின் ஃபோன் சட்டென்று ஒலிக்கவும் எல்லோரும் அமைதியானார்கள். சிணுங்கியது அபியின் ஃபோன் என்றாலும், சத்தம் வந்ததென்னவோ கீதாஞ்சலியிடமிருந்து

ரிங் டோனின் பேதத்தில் கவனம் கலைந்தவளுக்கு, தான் வைத்திருப்பது அபியின் ஃபோன் என்பது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. ரஞ்சனியும், ஈஷ்வரனும் கேலியாகப் புன்னகைக்கவும், சட்டென்று எதிரிலிருந்த அபியிடம் ஃபோனை நீட்டினாள். குறும்பாகப் புன்னகைத்தபடி வாங்கியவன், அதைக் காதுக்குக் கொடுத்தபடி எழுந்து போய்விட்டான். கீதாஞ்சலிக்கு வெட்கமாகிப் போனது.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவும், சீமா, கீதாஞ்சலியை அவரின் ரூமிற்கு அழைத்துச் சென்றார். கீழ்த்தளத்திலேயே இருந்தது அந்த ரூம். அங்கிருந்த பெரிய கட்டிலில் அவளை உட்காரச் சொன்னவர், அலமாரியைத் திறந்து சில பெட்டிகளை எடுத்தார். சொல்லாமலேயே புரிந்தது, பட்டுப் புடவைகள் என்று.

பிரிச்சுப் பாரு கீதா. பிடிக்கலைன்னா வேற வாங்கிக்கலாம்.”

அத்தைஅதுவந்து…” தயங்கியவளை கேள்வியாகப் பார்த்தார்.

என்னம்மா? ஏன் தயங்குற?”

உங்களுக்குப் பிடிச்சா சரி அத்தை. எனக்கு இதப்பத்தி எல்லாம் தெரியாது.”

நல்ல பொண்ணு போ. பட்டுப்புடவை வேணாம்னு எந்தப் பொண்ணாவது சொல்லுவாளா?” சொல்லியபடி பெட்டிகளைத் திறந்தார் சீமா. அழகழகான புடவைகள். பார்த்துப் பார்த்து தெரிவு செய்திருந்தார். கீதாஞ்சலிக்கு இப்போது குற்ற உணர்ச்சியாக இருந்தது.

அத்தை…”

என்னம்மா?”

நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

இல்லையே, நீ என்ன வேணா கேக்கலாம் கீதா.”

எம்மேல உங்களுக்கு கோபம் வரலையா?” இந்தக் கேள்வியில் ஆச்சரிப்பட்டார் சீமா.

எதுக்கும்மா கோபப் படனும்?”

இல்லை, நீங்க உங்க தகுதிக்கு ஏத்தாமாதிரி ஒரு பொண்ணை மருமகளா எதிர்பாத்திருப்பீங்க…” அவள் முடிக்காமல் பாதியில் நிறுத்தவும், சீமா சிரித்தார்.

எங்க தகுதிக்கு ஏத்த பொண்ணுதான் இந்த வீட்டுக்கு மருமகள்னா, அவ எப்போவோ வந்திருப்பாளே. அப்பிடி இல்லைம்மா. அபி மனசுக்குப் பிடிச்சவதான் இந்த வீட்டு மருமகள். அவ இப்போதான் வந்திருக்கா.” அந்தப் பதிலில் விக்கித்துப் போனாள் கீதாஞ்சலி.

இரவின் தனிமையில், அமைதியாக அந்த மலர்களின் அழகை ரசித்திருந்தாள் கீதாஞ்சலி. நிலவின் மெல்லிய ஒளி அந்த இடத்தை நிரப்பியிருந்தது. அத்தனை பேரும் உறங்கியிருந்தார்கள். தூக்கம் வராமல் புரண்டவள், பூக்களைத் தஞ்சம் அடைந்திருந்தாள்.

என் மகனின் மனதிற்குப் பிடித்தவள் தான் இந்த வீட்டு மருமகள்என்று சீமா சொன்னது அவள் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது

அவன் மனதிற்கு என்னைத் தானே பிடித்திருக்கிறது? அந்த நினைவே அவளுக்கு இனித்தது. அன்று அவன்பிடிச்சிருக்காஎன்று கேட்டதும், அதற்குத் தான் பிடி கொடுக்காமல் பதில் சொன்னதும் இப்போது ஞாபகம் வந்தது.

காஃபி ஷாப்பில் கல்யாணம் பண்ண சம்மதம் கேட்டவன், இன்று தடாலடியாக காரியத்தில் இறங்கியதுதான் அவளால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது.

சிந்தித்தபடி இருந்தவளை பின்னாலிருந்து இரு கைகள் அணைக்கவும், ‘வீல்என்று கத்தியபடி திடுக்கிட்டுத் திரும்பினாள் கீதாஞ்சலி. அவள் வாயை இறுக மூடிய அபி,

ஏய் அஞ்சலி! நான் தான்டா. பயந்துட்டயா என்ன?” சொன்ன படியே அவள் வாயிலிருந்து கையை எடுத்தான். நிதானமாக மூச்சுவிட்டவள் தொய்ந்து போனாள்.

நான் பயந்தே போயிட்டேன். யாராவது திருடனோன்னு.” அவள் பதிலில் சிரித்தான் அபிமன்யு.

ம்அதுவும் ஒரு வகையில சரிதான். நான் திருடன் தானே அஞ்சலி?” அந்த வார்த்தைகளில் சிக்கியவள், அவனிடமிருந்து விலக முயன்றாள், முடியவில்லை. அவளைத் தன் கை வளைவிலேயே வைத்திருந்தவன்,

இன்னைக்கும் நிலா இருக்கு அஞ்சலி.” என்றான். அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தாள் பெண். ஆனால், எதுவும் பேசவில்லை. அவள் கன்னத்தில் கன்னம் வைத்து உரசியவன்,

ஆனா, அன்னைக்கு தூரமா நின்ன நிலா, இன்னைக்கு பக்கத்துல வந்திடுச்சு இல்லை.” என்றான். அந்தக் குரல் அவளை ஏதோ செய்யவும் மெதுவாக விலகிக் கொண்டாள். விலக அனுமதித்தாலும், அவள் விரல் பிடித்து நின்றிருந்தான்.

ஃபோனை எடுத்து எதையோ தட்ட, பாடும் நிலா உருகிக் கரைந்தார்.

கண்ணம்மா கனவில்லையா

கண்தனில் சுகமில்லையா

பாட்டின் அர்த்தத்தில் நிலைகுலைந்து போனாள் கீதாஞ்சலி. கண்களில் எதிர்பார்ப்போடு தன்னையே பார்த்திருந்தவனை நிமிர்ந்து பார்க்கத் தைரியமில்லாமல் மௌனமாக ரூமை நோக்கிப் போனாள்.

இள மஞ்சள் நிற நைட்டியில், அழகோவியமாக நடந்து போனவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு. கண்களைப் பெண் நிறைத்திருக்க, காதைப் பாடல் நிறைத்திருந்தது. தலையைக் கோதிக் கொண்டான். அந்த இரவுப் பொழுது கல்வெட்டாக நெஞ்சில் பதிந்து போனது.

 

error: Content is protected !!