MM15
MM15
மயங்காதே மனமே 15
விழாக் கொண்டாடிய அயர்வில் வீடே அமைதியாக இருந்தது. எல்லோரும் வீடு வந்து சேர்ந்த போது பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது. தூக்கத்திற்கு தருண் அடித்த கூத்தில் அத்தனை பேரும் ஓய்ந்து போனார்கள்.
ரஞ்சனியை விரைவாகவே வீட்டிற்கு அனுப்பி விட்டு மற்ற எல்லோரும் சற்று முன்னர்தான் வந்து சேர்ந்திருந்தார்கள். தங்கள் ரூமில் கீதாஞ்சலி தலை அலங்காரத்தை களைந்து கொண்டிருக்கவும், குளியலை முடித்த அபி தோட்டத்திற்கு வந்திருந்தான்.
மனம் அலைப்புறுவதைத் தடுக்க முடியவில்லை அபியால். மனதை வருடும் மெல்லிசை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அபஸ்வரம் தட்டியது போல இருந்தது மித்ரனின் வரவு.
மித்ரனின் மனவோட்டத்தை சற்றே கணிக்க முடிந்தது அவனால். ‘பப்‘ இல் அவனை அதிகம் காண்பதில்லை என இவன் நண்பர்கள் வட்டம் தகவல் சொல்லி இருந்தது. ஸோனாவையும் முழுமையாகத் தவிர்த்திருந்தான்.
பயலுக்குள் சில மாற்றங்கள் வந்திருப்பது புரிந்தாலும், அது யாரால் வந்த மாற்றம் என்பதை அபியால் கிஞ்சித்தேனும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை ரசிக்கவும் அவன் தயாராக இல்லை.
ஒரு மூன்றாம் நபராக அவனுக்காக மனம் பரிதாபப் பட்டாலும், தன்னால் யாருக்கும், எதையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று அதே மனம் அடம்பிடித்தது.
சுற்றிவர இருந்த குளுமை அவன் வெப்பத்தைத் தணிக்க சக்தியற்றுப் போனது. வெதும்பிய மனதோடு அன்றைய நிகழ்வை மீட்டிப் பார்த்தான் அபி. தேடி வந்து சண்டை போடுபவன் நிச்சயம் சும்மா இருக்க மாட்டான்.
அதுவும் கோபத்தின் உச்சிக்குப் போனவன், சட்டென்று தன்னை நிதானப் படுத்திக் கொண்டது அபிக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது. அவன் எதற்கோ ஆழமாகத் திட்டம் போட்டுவிட்டது மட்டும் அபிக்கு உறுதி. ஆனால் அது என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.
தனக்குத் தெரிந்த அத்தனை கோணத்திலும் சிந்தித்துப் பார்த்தான் அபி. தொழிலில் இன்னல்கள் கொடுப்பதால் மித்ரனுக்கு எந்த லாபமும் இல்லை. கீதாஞ்சலியை வருத்திப் பார்க்கவும் அவனால் முடியாது. மீதமிருக்கும் ஒரே ஒரு துருப்புச்சீட்டு ‘அவன்‘ தான் என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
“அபி.” யோசனையோடு நின்றிருந்தவன் அந்தக் குரலில் அனைத்தையும் மறந்து திரும்பிப் பார்த்தான். வெள்ளை நிற கவுனில், தூக்கிக் கட்டிய கொண்டையோடு படு காஷுவலாக, அதிலும் அத்தனை அழகாக நின்றிருந்தாள் கீதாஞ்சலி. ஒப்பனைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக களைந்திருந்தாள்.
அவளை வருடிச் சென்ற அவன் பார்வை கடைசியில் கண்களில் முடிவடைய அன்பாகப் புன்னகைத்தான் அபி. அவளை நோக்கி நீண்ட அவன் கரத்தைப் பற்றிக் கொண்டவள் தானும் மெல்லச் சிரித்தாள். தன்னருகே அவளைச் சேர்த்துக் கொண்டவன்,
“ஃபங்ஷன் ரொம்ப நல்லா நடந்துதில்லை அஞ்சலி?” என்றான்.
“ம்… ரொம்பவே நல்லா இருந்துது. எவ்வளவு ஆட்கள்! அடேங்கப்பா, எனக்குக் கண்ணைக் கட்டிருச்சு.” குழந்தையாகச் சொன்னவளைப் பார்த்துச் சிரித்தான்.
“இதுக்கே மலைச்சுட்டா எப்பிடிடா? நாளையில இருந்து கன்ஸ்ட்ரக்ஷ்னுக்கு, எக்ஸ்போர்ட் ஃபாக்டரிக்கு எல்லாம் கூட்டிட்டுப் போறேன். ஒவ்வொன்னா கத்துக்கனும். என்னோட லைஃப் பார்ட்னர் மட்டுமில்லை, பிஸினஸ் பார்ட்னரும் தான், புரியுதா?”
“அப்போ என்னோட நர்சரி?” கேட்டவளின் முகத்தில் கவலை தெரிந்தது.
“மார்னிங் செஷனுக்கு மட்டும் போற மாதிரி ஏற்பாடு பண்ணிக்கலாம். நான் மிஸஸ். ஜான்ஸன் கிட்ட பேசுறேன். லன்ச்சுக்கு வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, நான் போகும் போது எங்கூடவே வரனும், சரியா?”
“ம்… பிஸினஸ் பாத்துக்கத்தான் நீங்க இருக்கீங்களே அபி, நான் எதுக்கு?” ஒரு சிணுங்கலோடு லேசாக மறுத்தாள் கீதாஞ்சலி.
“நோ வே, பொண்ணுங்கன்னா பிஸினஸ் பாக்கக் கூடாதுன்னு யாரு சொன்னது? அம்மாவும் மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ரஞ்சனியும் அதே மாதிரிதான். பட் என்னோட வைஃப் அப்பிடி இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். ஒரு எக்ஸ்கியூஸும் சொல்லக்கூடாது அஞ்சலி.” கறாராகச் சொன்னவனை தீர்க்கமாகப் பார்த்தாள்.
“அபி…” அந்தப் பார்வையில் கவரப்பட்டவன், அவள் கண்களையே பார்த்தான். வாய் தன்போக்கில்,
“ம்…” என்றது.
“இன்னைக்கு என்ன ப்ராப்ளம்?” அவள் கேள்வியில் தன்னிலைக்கு மீண்டவன், ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.
“ப்ராப்ளமா?”
“ம்… மித்ரன் சார் கூட… என்னாச்சு?” மனைவியின் பேச்சில் அபி கொஞ்சம் நிதானித்தான். ‘ஒன்றுமில்லை‘ என்று இலகுவாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டு பொய் சொல்ல அபிக்கு வாய் வரவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள் கீதாஞ்சலி.
“நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா?”
“இல்லை அஞ்சலி. அபி சம்பந்தப்பட்ட எதையும் கேக்குறதுக்கு உனக்கு ரைட்ஸ் இருக்குடா. நான் அதுக்காகத் தயங்கலை…”
“இன்னைக்கு… மித்ரன் சாரோட நீங்க சண்டை போட்டதை நான் பாத்தேன்.” தயங்கித் தயங்கிச் சொன்னாள் கீதாஞ்சலி.
“உங்களுக்கும், அவருக்கும் இடையில ஏதோ பிஸினஸ் தகராறுன்னு தான் நான் இதுநாள் வரை நினைச்சிருந்தேன். ஆனா…” சட்டென்று மனைவியைத் திரும்பிப் பார்த்தான் அபி.
“என்ன சொல்ல வர்ர அஞ்சலி?”
“ஏதோ ஒரு கோபத்துல உங்க ஃபோட்டோவை பேப்பர்ல போட்டாங்க. அதுல ஒரு நியாயம் இருந்துது.”
“அதுல என்னடா நியாயம் இருக்கு?”
“நான் அந்த அர்த்தத்துல சொல்லலை அபி. பண்ணினது தப்பான காரியமா இருந்தாலும், அதுக்கு ஒரு காரணம் இருந்துது.”
“ம்…”
“ஆனா எதுக்கு நம்ம ஃபோட்டோவை பேப்பர்ல போடனும்? அன்னைக்கு எங்கிட்ட அவ்வளவு மரியாதையா நடந்துக்கிட்டாங்க. அவங்க இப்பிடிப் பண்ணி இருப்பாங்கன்னு என்னால நம்ப முடியலை அபி.” அவளின் ஆதங்கம் அவனை அசைத்துப் பார்த்தது. தான் பற்றியிருந்த அந்தக் கைகளில் முத்தம் வைத்தான்.
“அதை அவன் பண்ணலைடா.” அந்தப் பதில் கீதாஞ்சலியை ஆச்சரியப் படுத்தியது.
“என்ன சொல்றீங்க? அப்போ யார் பண்ணினா? ஊர் முழுக்க உங்களுக்கு எதிரிங்களா அபி?”
“ஹா… ஹா… அம்மாடி, உம் புருஷன் தொழில் பண்ணுறவன்மா. நாலு நல்லவங்க இருக்கிற இடத்துல ரெண்டு கெட்டவங்களும் இருப்பாங்க. அவங்க ஏதாவது பண்ணினா நீ என்னை முறைப்பியா?”
“அப்பிடி…” ஏதோ சொல்ல வந்தவளை இழுத்தணைத்தான் அபி. அந்தத் திடீர் தாக்குதலில் திகைத்து நின்றவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்,
“ஊர்ல இருக்கிறவங்க நியாயம் எல்லாம் பேசத் தெரியுது. பக்கத்துல இருக்கிற இந்தக் கிறுக்கனோட மனசு மட்டும் புரியமாட்டேங்குது.” என்றான்.
“அபி…” தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள் மெதுவாக அழைத்தாள். அந்தக் குரல் அத்தனை மிருதுவாக இருந்தது.
“ம்…”
“நீங்க எங்கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா?” அவளிடமிருந்து மெதுவாக விடுபட்டு அந்தக் கண்களை இமைக்காமல் பார்த்தான் அபிமன்யு.
“எதையும் மறைக்கலைம்மா, ஒரு சில விஷயங்கள் என்னோட அஞ்சலி காது வரைக்கும் வர வேணாம்னு நினைக்குறேன். அது அவளுக்கு அனாவசியம்ன்னும் நினைக்குறேன்.”
“ஓ…! எனக்கு எது அவசியம்ன்னு நான் தானே அபி முடிவு பண்ணனும்?”
“கண்டிப்பா, இல்லேங்கலை. ஆனா ஒரு சில விஷயங்கள் உன் காது வரைக்கும் வர தகுதி இல்லாம போகுதே, அதை நான் என்ன பண்ண?”
“ஓ…! அதுல ஒன்னு மித்ரன் சார் சம்பந்தப்பட்டதோ?” நிதானமாக மனைவி கேட்ட கேள்விக்கு முகத்தை திருப்பிக் கொண்ட அபி, ஆமென்று தலை அசைத்தான். கீதாஞ்சலிக்கு எதுவோ லேசாகப் புரிந்தது. திரும்பியிருந்த அவன் முகத்தை தன் புறமாகத் திருப்பினாள்.
“அஞ்சலி இஸ் மைன், ஷி இஸ் மை கேர்ள்.” என்றான் குழந்தை போல. கீதாஞ்சலிக்கு நர்சரியில் பொம்மைக்காக அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஞாபகத்திற்கு வந்தது. லேசாகப் புன்னகைத்தவள், சுணங்கியிருந்த அந்த முகத்தை தன்னை நோக்கி இழுத்து அந்த முரட்டுக் கன்னத்தில் மெலிதாக ஒரு முத்தம் வைத்தாள். அபி மலைத்துப் போனான்.
“இதுக்கு என்ன அர்த்தம் அஞ்சலி?”
“எதுக்கு?”
“இப்போ என்னமோ பண்ணினயே, அதுக்கு.” வெட்கத்தோடு லேசாகப் புன்னகைத்தாள் பெண்.
“உண்மையை சொல்லட்டுமா?”
“ம்…”
“எங்கண் முன்னால நிக்குறது அபியா? தருணா? ன்னு எனக்குப் புரியலை. தருணா இருந்திருந்தா என்ன பண்ணுவனோ அதேதான் அபிக்கும் பண்ணினேன்.”
“ஓஹோ! இதை வெச்சு நீயா வீணா எதையாவது கற்பனை பண்ணிக்காத, எங்கண்ணுக்கு நீ தருணாத்தான் தெரியுறன்னு சொல்லாம சொல்லுறியா?” அபியின் வார்த்தைகளில் இதழ் விரித்துப் புன்னகைத்தாள் கீதாஞ்சலி.
“நான் அப்பிடிச் சொல்லலையே.” சொல்லியபடியே திரும்பி நடந்தவளின் கை பிடித்துத் தடுத்தவன்…
“எனக்கு நீ இன்னும் பதில் சொல்லலை அஞ்சலி.” என்றான் விடாப்பிடியாக. தன் கரம் பற்றியிருந்த அவன் கையைத் திரும்பிப் பார்த்தவள், நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அந்தக் கண்களில் காதல் வழிந்தது.
அவள் கண்கள் சொன்ன சேதி அவனை கட்டிப் போட, ஸ்மரணை தப்பியவன் போல அசைவின்றி நின்றான். அந்தக் கண்களின் பாவத்தை அவனால் உணர முடிந்தது. இருந்தாலும் அவள் வாய்ச்சொல் வேண்டி நின்றான்.
“எம்பாடு திண்டாட்டம் தான். எல்லாம் சொன்னாத்தான் புரியு…” வார்த்தைகள் முடியுமுன்னமே அபியின் அணைப்பில் இருந்தாள் கீதாஞ்சலி. இத்தனை நாள் சேமித்து வைத்த அவன் ஒட்டுமொத்தக் காதலையும் கட்டவிழ்த்தவன், திகட்டத் திகட்ட அவள் மேல் கொட்டிக் குவித்தான். கனம் தாங்காமல் மெல்ல விலகியவள் உள்ளே போக, அவளைத் தொடர்ந்தான் அபி. இவை அனைத்திற்கும் இத்தனை நேரம் சாட்சியாக இருந்த நிலவும் மெல்ல நகர்ந்தது.
* * * * * * *
நேரம் நள்ளிரவையும் தாண்டி இருந்தது. காரிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கதிர், தொலைபேசி சிணுங்கவும் சட்டென்று கண்விழித்தான்.
“ஹலோ.”
“கதிர், ரொம்பவே ஓவரா போய்க்கிட்டு இருக்கு. சொன்னா கேக்க மாட்டேங்குறாங்க. நீங்க கொஞ்சம் வர்ரீங்களா?” அந்தக் குரலில் முழுதாகத் தூக்கம் கலைந்தவன், காரை விட்டிறங்கினான். ‘பப்‘ இல் வேலை செய்யும் பையன் தான் அழைத்திருந்தான்.
“இதோ, வந்துக்கிட்டே இருக்கேன்.” சொல்லியபடியே செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே போனான் கதிர்.
அந்த அர்த்த ஜாமத்திலும் உயிர்ப்போடு இருந்தது அந்த ‘பப்‘.
உள்ளே போனவன் கண்களால் ஒரு அலசு அலசி மித்ரன் இருந்த டேபிளைக் கண்டு பிடித்தான். தனிமையில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு கிண்ணமாக காலி பண்ணிக் கொண்டிருந்தான். நேராக அவனிடம் போன கதிர் அவன் எதிரே அமர்ந்தான்.
“நீ இன்னும் வீட்டுக்கு போகலையா கதிர்? நான் உன்னை அப்பவே போகச் சொல்லிட்டேனே.” எந்தக் குழறலும் இல்லாமல் நிதானமாக வந்தது பேச்சு.
அபியை சந்தித்து விட்டு, வீட்டிற்குப் போகாமல் நேராக இங்கே காரை விடச் சொன்னான் மித்ரன். ஆட்சேபித்த கதிரின் குரல் அங்கே எடுபடவில்லை. அவன் பிடித்த பிடியிலேயே நின்றவன், காரிலிருந்து இறங்கிக் கொண்டு கதிரைப் போகச் சொல்லி விட்டான். தன் முதலாளியின் தற்போதைய நிலையை நன்கறிந்தவன் மனது கேட்காமல் அங்கேயே காத்திருந்தான்.
“வீட்டுக்கு போகலாம் சார்.” கெஞ்சினான் கதிர்.
“ம்… ஆறுதலா போகலாம் கதிர்.”
“சார், இப்போவே மணி ஒன்னாகப் போகுது. போகலாம் சார்.” லேசாக வற்புறுத்தினான்.
“ஓ… ஒரு மணியாகுதா? சாரி கதிர். உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறேன் இல்லை?”
“என்ன பேச்சு சார் இது? நீங்க எனக்கு டிஸ்டேர்ப்ன்னு நான் நினைப்பனா? எந்திரிங்க சார்.”
மித்ரன் மனதில் என்ன நினைத்தானோ, கதிரின் பேச்சுக்கு உடனேயே கட்டுப்பட்டான். இரண்டு பேரும் காரிற்கு வந்து சேர்ந்தார்கள். எதுவுமே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த மித்ரன் கதிருக்கு புதிதாகத் தெரிந்தான்.
எப்போதும் ஆர்ப்பாட்டங்களின் உறைவிடம் தான் மித்ரன். சின்ன விஷயத்திற்கும் சட்டென்று உணர்ச்சி வசப்படுவான். அபியை சந்திக்கச் சென்ற போது கூட பெரியதொரு பிரளயத்தை எதிர்பார்த்த கதிரை ஏமாற்றினான் மித்ரன். பொங்கி வெடித்தவன், திடீரென்று மௌனியானது கதிருக்கு அத்தனை தூரம் நல்லதாகப் படவில்லை.
ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தவன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்தபடி இருந்தான் மித்ரன். பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அவன் மனம் கொதித்துக் கொண்டிருப்பது கதிரிற்குப் புரிந்தது.
ஃப்ளைட் ஏறுமுன்னமே கதிரைத் தொடர்பு கொண்டவன், அவனை ஒரு வழி பண்ணி இருந்தான். ஆனால் கதிருக்குமே ஒன்றும் தெரியாத போது அவன் எப்படி இவனுக்குத் தகவல் சொல்ல முடியும்.
எரிமலையாக வந்து காருக்குள் ஏறியவனைப் பார்த்த போது கதிருக்கு லேசாகக் குளிரெடுத்தது. எவ்வளவு சொல்லியும் கேட்காதவன் ஒரே பிடியாக அபியைச் சந்தித்தே தீருவேன் என்று நின்றான். அவன் கொந்தளிப்பைப் பார்த்த பிறகும் அவனை உள்ளே அனுப்புவது உசிதமில்லை என்பதால் தான் அபியை வெளியே அழைத்தான் கதிர்.
அத்தனை தூரம் உணர்ச்சி வசப்பட்டவன், இப்போது அமைதியாக இருப்பது அத்தனை நல்லதாகப் படவில்லை கதிருக்கு. காரை வீட்டு வாசலில் நிறுத்தியவன்,
“சார்.” என்றான்.
“ம்…” கண்விழித்த மித்ரன் வீடு வந்து விட்டதை உணர்ந்து மெதுவாக இறங்கினான்.
“திங்ஸை உள்ள அனுப்பிட்டு நீ கிளம்பு கதிர்.”
“சரி சார்.” தளர்வான நடையோடு உள்ளே போனவனையே பார்த்திருந்தான் கதிர். அவனுக்காகப் பாவப்படுவதா? இல்லை ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்ட அந்தப் பெண்ணுக்காக சந்தோஷப் படுவதா? ஒன்றுமே புரியவில்லை. ஒரு பெருமூச்சுடன் கிளம்பினான் கதிர்.
வீடே அமைதியாக இருந்தது. அன்று அவன் வருவது யாருக்கும் தெரியாததால் அத்தனை பேரும் உறக்கத்தில் இருந்தார்கள். மாடியேறப் போன மித்ரனைத் தடுத்தது அந்தக் குரல்.
“மித்ரா.” அந்தக் குரலில் நிதானித்தவன், திரும்பிப் பார்த்தான். சோஃபாவில் ராஜேந்திரன் அமர்ந்திருந்தார். இத்தனை நேரத்திற்கு மேல் உறங்காமல் உட்கார்ந்திருக்கிறார் என்றால் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று தோன்றவும் மித்ரனும் வந்து அமர்ந்தான்.
“ஃப்ளைட் லான்ட் ஆகி ரொம்ப நேரமாச்சு மித்ரா. நேரா வீட்டுக்கு வராம, அழையா விருந்தாளியா எதுக்கு அங்க போனே?” அவரின் கேள்விக்கு பதில் சொல்லத் தோன்றாமல் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான் மித்ரன்.
விஷயம் அப்பா காதுவரை வந்திருக்கிறது என்று புரிந்தது. ஆனாலும் எதையும் பேசப் பிரியப்படாமல் அமைதியாகவே இருந்தான்.
“நர்சரி, ஸ்பான்சர்ஷிப் ன்னு நீ ஆரம்பிச்சப்போவே நான் யோசிச்சேன். இருந்தாலும் ஒரு எல்லைக்கு மேல தலையிடக் கூடாதுன்னு தான் நான் எதுவும் பேசலை. ஆனா பேசியிருக்கனுமோன்னு இப்போ தோனுது.” அதுவரை மௌனமாக இருந்தவன் இப்போது வாய் திறந்தான்.
“எல்லாம் கரெக்டா தான் போய்கிட்டு இருந்துது. அத்தனையையும் மகேந்திரன் நாறடிச்சுட்டான்பா.” மித்ரனின் குரலில் தெரிந்த கவலை ராஜேந்திரனை என்னமோ பண்ணியது. மிகவும் செல்லமாக வளர்த்த ஒற்றைப் பிள்ளை. அவன் வாடுவதைப் பார்க்க அவருக்குப் பொறுக்கவில்லை.
“அதுக்காக அவங்கிட்ட போய் சண்டை போட்டியா? அதுவும், ஆஃப்டர் ஆல் ஒரு பொண்ணுக்காக.” இதைச் சொல்லும்போது ராஜேந்திரனின் முகம் அருவருப்பைக் காட்டியது.
“இல்லைப்பா, அவன் என்னைப் பழி வாங்கத்தான் இப்பிடிப் பண்ணி இருக்கான்னு நினைச்சேன். ஆனா அங்க போனதும் தான் தெரிஞ்சது, பயலோடது தெய்வீகக் காதல்ன்னு.” மித்ரனின் ஏளனக் குரலில் புன்னகைத்தார் ராஜேந்திரன்.
“சரி, தூக்கித் தூரப் போட்டுட்டு உன் வேலையைப் பாரு மித்ரா.” சொன்ன அப்பாவைப் பார்த்து ஒரு தினுசாகச் சிரித்தான் மித்ரன்.
“அப்பிடி விட்டுட்டா அது மித்ரன் இல்லையேப்பா.”
“சாதாரண ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணுக்காக நீ ரிஸ்க் எடுக்க வேணாம்னு தோனுது மித்ரா.”
“இப்போ பிரச்சினை அந்தப் பொண்ணு இல்லைப்பா. அந்த சாப்டர் முடிஞ்சு போச்சு.”
“ம்…”
“என்னை தோக்க வெச்சுட்டான் இல்லையா? அவனுக்கும் அந்த வலி தெரியனும். அவனுக்கு வலிக்கிறதை நான் பாக்கனும்.” சொன்ன மகனைத் தீர்க்கமாகப் பார்த்தார் ராஜேந்திரன்.
“ம்… இந்த வம்பெல்லாம் எதுக்கு? பேசாம ஆளையே தூக்கிடலாமா?” சாதாரணமாகச் சொன்ன தந்தையை கேள்வியாகப் பார்த்தான் மித்ரன். அவன் கண்களில் தெரிந்த பாவம் சம்மதம் என்றே தோன்றியது ராஜேந்திரனுக்கு.