மயங்காதே மனமே 19

ஒரு வாரம் ஓடியே போயிருந்தது. கீதாஞ்சலியின் இடது கையில் லேசான முன்னேற்றம் தெரிந்தது. இருந்தாலும் ஸ்லிங்கை அகற்ற ஈஷ்வரன் அனுமதிக்கவில்லை.‌ அது தவிர அவள் முழுமையாக வழமைக்குத் திரும்பி இருந்தாள்.

அபியை ICU இல் இருந்து எமெர்ஜென்சி வார்டுக்கு மாற்றி இருந்தார்கள்.‌ இடது காலுக்கு பெரிய பேன்டேஜ் போட்டிருந்தார்கள். விலா எலும்பு முறிவிற்கு எந்த பேன்டேஜும் போட்டிருக்கவில்லை. அப்படிப் போடுவதால் மூச்சுத் திணறலுக்கு வாய்ப்பிருப்பதோடு, நிமோனியாவிற்கும் வழிவகுக்கும் என்று அதைத் தவிர்த்திருந்தார்கள்.

வலியையும் பொருட்படுத்தாது ஆழ்ந்த மூச்செடுப்பதற்கு அபிக்கு ஃபிஸியோதெரப்பிஸ்ட்கள் உதவி புரிந்தார்கள். அதிக அளவில் சேதாரம் இல்லாத விலா எலும்புகள் தானாகவே குணமாக வேண்டும் என்பதால் பெயின் கில்லரைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப் படவில்லை.

ஆரோக்கியமான உடம்பு என்பதால் அபியிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவே ஈஷ்வரன் சொல்லி இருந்தார். கை பழையபடி இயங்க ஆரம்பித்திருந்தது. பேனா பிடித்து தான் பேச நினைப்பதை எழுதிக்காட்டத் துவங்கி இருந்தான்.

அன்று விடியும் போதே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டாள் கீதாஞ்சலி. ஏனோ அபியை உடனேயே பார்க்க வேண்டும் போல ஒரு தவிப்பு. அடங்க மறுத்த மனதை அடக்கச் சக்தி இல்லாமல் நேரத்தையும் பார்க்காமல் கிளம்பி வந்திருந்தாள்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை தொந்தரவு பண்ணாமல் அவன் பெட்டுக்குப் பக்கத்தில் ஒரு செயாரைப் போட்டுக் கொண்டு அவனையே பார்த்தபடி இருந்தாள்

நிதமும் ஷேவ் பண்ணாத அந்த முகம் காந்தம் போல அவளை இழுத்தது. வைத்த கண் வாங்காமல் அந்த முகத்தையே பார்த்திருந்தாள். அத்தனை அழகாக, ஆண்மையின் இலக்கணமாக இருந்தான் அவள் கணவன். இவனைச் சுற்றி எத்தனை பெண்கள் வட்டமிட்டிருப்பார்கள்

எண்ணத்தின் போக்கு கொஞ்சம் கசந்தாலும், நிதர்சனம் அதுதான் என உள்மனதிற்குத் தெரிந்திருந்தது. அவன் கம்பீரத்திற்கும், ஆளுமைக்கும், பணத்திற்கும் பெண்கள் இவனை அத்தனை சுலபத்தில் விட்டிருக்க மாட்டார்கள். அத்தனையையும் தாண்டி எது அவனைத் தன் பால் ஈர்த்தது?

உலகத்தின் உச்சியில் நிற்பது போல அத்தனை கர்வமாய் உணர்ந்தாள் கீதாஞ்சலி. இத்தனை தகுதிகளும் கொண்டவன் தனக்கே தனக்கானவன் என்று எண்ணிய போது நெஞ்சம் விம்மியது

அவன் கட்டில் ஓரத்தில் மெதுவாக அமர்ந்தவள், அந்த இதழ்களில் முத்தம் வைத்தாள். அந்த ஈர ஸ்பரிசத்தில் கண் விழித்தான் அபி. முகத்திற்கு வெகு அருகில் முழு நிலவாக அவள் முகம் தெரிந்தது

குட் மார்னிங் அபி.” அந்தக் காலை வணக்கத்தில் அத்தனை காதல் இருந்தது. ஆச்சரியத்தைக் காட்டிய அவன் விழிகள் ஒரு தரம் மூடித் திறந்தது

அபி, நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா?” சம்பந்தமே இல்லாமல் அவள் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டவன், பக்கத்தில் இருந்த நோட்பேட் எடுத்து எழுத ஆரம்பித்தான்.

என்ன ஆச்சுடா?” அவன் எழுதிக் கேட்ட கேள்வியில் திருப்தி அடையாதவள் லேசாகச் சிணுங்கினாள்.

ம்பேச்சை மாத்தாதீங்க அபி. நிஜமா சொல்லுங்க, நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா? இல்லையா?” அவள் பிடிவாதத்தில் அவன் கண்கள் சிரித்தது. அவள் முகத்தில் பொங்கி வழியும் காதல் அவனுக்கு விந்தையாக இருந்தது

பண்ணி இருக்கேன்.” மீண்டும் அவன் கை பேசியது.

ம்யாரை…?” லேசாகக் கசங்கிய முகத்தோடு கேட்டாள் மனைவி.

மழலையோடு மழலையாகிப்போன ஒரு மங்கையை.” கவிதையாக வந்தது பதில். அந்தப் பதிலில் அவள் திருப்தி அடையவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

நீங்க சும்மா சொல்லுறீங்க.” சிணுங்கிய மனைவியின் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான் அபி. அவள் தலையில் கை வைத்துசத்தியம்என்பது போல சைகை செய்தான். அதிலும் அவள் திருப்தி அடையாமல் போகவே, தன் தலையில் கையை வைத்தான். பதறிப் போனவள் அவன் கையை எடுத்து விட்டாள்.

என்ன பண்ணுறீங்க அபி? இதுக்கு போய் எதுக்கு இப்போ உங்க தலையில சத்தியம் பண்ணுறீங்க?”

நீ நம்பலையே அம்மாடி.” மீண்டும் எழுதிக் காண்பித்தான்.

அதுவந்துநீங்க இவ்வளவு ஹேன்ட்ஸம்மா இருக்கீங்களாஅப்போ பொண்ணுங்க உங்களை…” பெட்ஷீட்டை நீவியபடி தடுமாறிய மனைவியை விழி எடுக்காமல் பார்த்தான் அபி. அந்தப் பார்வையில் சிக்கியவள்,

இப்போ எதுக்கு இப்பிடிப் பாக்குறீங்க?” என்றாள்.

என்னால இப்போதைக்கு பாக்க மட்டும் தான் முடியும் அம்மாடி.” அந்த வார்த்தைகள் அவளுக்கு வலித்தாலும், அதைத் தட்டிக்கழித்தாள்.

அபிஅப்பிடி எங்கிட்டஎன்ன இருக்கு?” தயங்கியபடியே கேட்டவளை தன்னருகில் இழுத்தான். அவள் முகத்தை தன் முகத்தின் மீது வைத்துக் கொண்டவன் அமைதியாக இருந்தான். அந்த அன்பில் நெகிழ்ந்தவள் பிதற்றினாள்.

அபிஇந்த அன்புக்கு நான் எந்த வகையில தகுதி அபி? அப்பிடி எங்கிட்ட என்ன இருக்கு அபி? வீட்டுல அத்தனை பேரும் என்னை அவ்வளவு தாங்குறாங்க. ஃபாக்டரிக்குப் போனா அவ்வளவு மரியாதையா நடத்துறாங்க. உங்க வைஃப்னு சொன்னா பொண்ணுங்க பொறாமையா பாக்குறாங்க. இதுக்கெல்லாம் நான் தகுதியானவள் தானா அபி? இந்த அன்புக்கு நான் உங்களுக்கு என்ன திருப்பிக் குடுக்க முடியும் அபி? உங்க அன்புக்கு முன்னால நான் ரொம்பவே சின்னதா போயிடுறேன் அபி. ஒன்னுமில்லாம போயிடுறேன் அபி.” 

அவனுக்கு வலிக்காதபடி அவனோடு ஒட்டிக் கொண்டாள் பெண். அவளை மெதுவாக வருடிக் கொடுத்தான் அபிமன்யு. அந்த விடியல் அவர்கள் இரண்டு பேருக்கும் அத்தனை அழகாக விடிந்திருந்தது

லேசாகக் கவலை தோன்றினாலும், அபி மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.‌ அந்த அதிகாலைப் பொழுதில் தன்னைப் பார்க்க வந்திருக்கும் தன் மனைவியின் மனம் அவனுக்குப் புரிந்தது. தனக்கான அவளின் தேடல் இது என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. மகிழ்ச்சியாக உணர்ந்தான். அவள் தோளில் லேசாகத் தட்டவும், தலை நிமிர்ந்து பார்த்தாள் கீதாஞ்சலி.

என்ன வேணும் அபி?”

எப்போ வீட்டுக்குப் போகலாம்? சீஃப் டாக்டர் ஏதாவது சொன்னாங்களா?” மீண்டும் எழுதிக் காண்பித்தான்.

ஒன்னும் சொல்லலை அபி. நான் இன்னைக்கு பேசட்டுமா? டெய்லி வேணும்னா நாம செக்கப்புக்கு வந்திரலாம். எனக்கும் நீங்க வீட்டுக்கு வந்தாதான் நல்லா இருக்கும்னு தோணுது அபி.” கணவனை தன்னருகிலேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டது அவள் மனம். அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்தான் அபி. அந்தக் கையைப் பிடித்தவள் அதில் மென்மையாக முத்தமிட்டாள்.

                    ***   ***   ***   ***   ***   ***   ***   ***   ***   ***   ***

ஃபாக்டரி வளாகத்தில் அத்தனை பேரும் கூடியிருந்தார்கள். தொழிலாளர்களை கீதாஞ்சலி சந்திப்பதற்காக நாராயணன் அந்த ஏற்பாட்டைப் பண்ணி இருந்தார்.

இந்த ஒரு வார காலத்தில் தினமும் ஃபாக்டரிக்கு வந்திருந்தாள் கீதாஞ்சலி. நாராயணனும் கூடவே இருந்து அத்தனையும் கற்றுக் கொடுத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தின் நெளிவு சுளிவுகள் புரிய ஆரம்பித்திருந்தன

ஃபாக்டரிக்கு வந்து அத்தனையையும் கற்றுக் கொண்டாலும், தொழிலாளர்களை இதுவரை அவள் சந்திக்க அனுமதிக்கவில்லை. கொஞ்சம் தன்னைத் திடப்படுத்திக் கொள்ள கால அவகாசம் எடுத்துக் கொண்டாள்

நேர்த்தியாக பின் செய்து உடுத்தியிருந்த காட்டன் புடவையில் அத்தனை கம்பீரமாக இருந்தாள் கீதாஞ்சலி. தொழிலாளர்கள் அனைவருக்கும் காஃபி, சிற்றுண்டி ஏற்பாடு பண்ணப் பட்டிருந்தது. அவர்கள் அதை உண்டு முடிக்கவும், எழுந்து நின்றாள் கீதாஞ்சலி. சலசலப்பு அடங்கி அங்கு அமைதி சூழ்ந்தது.

இங்க கூடி இருக்கிற உங்க எல்லாருக்கும் எங்க குடும்பத்தின் சார்பா நான் நன்றியை முதல்ல தெரிவிச்சுக்கிறேன். எவ்வளவு ஒரு இக்கட்டான சூழ்நிலையில நீங்க எல்லாரும் எங்க கூட நின்னுருக்கீங்கன்னு நான் சொல்லி நீங்க தெரிய வேண்டியதில்லை.” சற்று நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தாள் கீதாஞ்சலி.

உங்க சாருக்கு இப்பிடியொரு ஆக்சிடென்ட் நடந்திருக்கிற இந்த நேரத்துல, இனித் தொழில் என்ன ஆகுமோன்னு சுயநலமா யோசிக்காம, எது நடந்தாலும் நாங்க கூடவே நிப்போம்னு நின்ன உங்களை நான்…” மேலே பேச முடியாமல் நாத் தழுதழுத்தது கீதாஞ்சலிக்கு.

கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சூழ்நிலை கனமாக இருந்தது. வயதில் மூத்த பெண்மணி ஒருவர் எழுந்து நின்றார்.

அம்மா கீதாஞ்சலி, உங்களை ஒரு தரம் எங்க சாரோட பாத்திருக்கோம். அவ்வளவுதான், மத்தப்படி உங்களைப் பத்தி எங்களுக்கு ரொம்பத் தெரியாதும்மா. ஆனா உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் இங்க நிறைய இருக்கும்மா.” அதற்குள் தன்னை நிதானப் படுத்திக் கொண்ட கீதாஞ்சலி அந்தப் பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

சொல்லுங்கம்மா.” 

புருஷனும் இல்லாம, வாழ வழியும் தெரியாம நின்னப்போ, எங்களுக்கு எல்லாமா நின்னது சார் தான். இங்க நூறு பேர் வேலை பாக்குறோம்னா அதுல குறைஞ்சது ஒரு இருபத்தைஞ்சு பேருக்காவது இப்பிடித் தனிப்பட்ட கதை இருக்கும். நாங்க உங்களை விட்டு எங்கம்மா போகப் போறோம்சொன்னவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் கீதாஞ்சலி

ரொம்பவே நன்றிம்மா.” அவள் சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு இளைஞன் எழுந்து நின்றான். வயது முப்பதிற்குள் இருக்கும் தோற்றம் தெரிந்தது.

அக்கா, நான் பெருசாப் படிக்கலைக்கா. ஆனா இன்னைக்கு நானும் கவுரவமா ஒரு தொழில் பாக்குறேன், சம்பாதிக்குறேன். சார் என் தகுதியைப் பாக்கலைக்கா, நாணயத்தைத் தான் பாத்தாங்க. அவங்களை விட்டு நான் எங்கக்கா போவேன்?” கேட்டவனை விழி விரித்துப் பார்த்தாள் கீதாஞ்சலி. அபி வெறும் தொழிலாளர்களைச் சேர்க்கவில்லை, ஒரு குடும்பத்தையே சேர்த்து வைத்திருக்கிறான் என்று புரிந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

நன்றின்னு சொல்லி உங்களை அன்னியப் படுத்த நான் விரும்பலை. உங்க கடமையை நீங்க செஞ்சிருக்கீங்க, அவ்வளவுதான். அடுத்ததா சார் விலை பேசிக்கிட்டு இருந்த பக்கத்து நிலத்தை வாங்கி, பதிவு பண்ணி முடிச்சாச்சு. இப்போ அது நமக்கு சொந்தமான நிலம்.” அவள் சொல்லி முடிக்கவும் பலத்த கரகோஷம் எழுந்தது. சற்று நிதானித்து அதை அனுமதித்தாள்.

அதுல சாரோட ஐடியாப்படி கூடிய சீக்கிரமே ப்ரோண் ஃபார்ம் ஒன்னு ஆரம்பிக்கப் போறோம். அந்தத் தகவலை உங்ககிட்ட இந்த நேரத்துல நான் சந்தோஷமா பகிந்துக்கறேன்.” புன்னகையோடு பேசும் தங்கள் முதலாளியின் இளம் மனைவியை அத்தனை பேரும் ஒரு வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சார் இன்னும் கொஞ்சம் தயாரானதும் ஃபார்மை உடனடியா ஆரம்பிக்கிற ஐடியாலதான் இருக்காங்க. அதுல இன்னொரு விஷயம் என்னன்னா, அந்த ஃபார்முக்கான தொழிலாளர்களை தெரிவு செய்யுற பொறுப்பை சார் உங்ககிட்ட ஒப்படைச்சிருக்கார். அது உங்க சொந்தக் காரங்களா இருந்தாலும் சரி, நண்பர்களா இருந்தாலும் சரி. நம்பிக்கையானவங்களை கொண்டு வரவேண்டியது உங்க பொறுப்பு.”

இதைக் கேட்டதும் அங்கிருந்த அத்தனை பேர் முகங்களிலும் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. தங்களுக்கு அறிந்தவர், தெரிந்தவர் என்று அத்தனை பேரையும் மனதுக்குள் பட்டியலிட ஆரம்பித்திருந்தார்கள்.

அனைத்தையும் மௌனமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் நாராயணன். கூட்டத்திற்கு முன் பேச சற்றுத் தயங்கிய மருமகளை வலுக்கட்டாயமாக பேச வைத்திருந்தார்

வியாபார உலகத்துல இதெல்லாம் சகஜம்மா. இதுக்கெல்லாம் உன்னை நீ தயார் படுத்திக்கனும். தயக்கத்தையெல்லாம் தூக்கித் தூரப்போடும்மா.” என்று ஏதேதோ சொல்லி கீதாஞ்சலியைத் தயார் பண்ணி இருந்தார்

சற்றுத் தொலைவில் நின்ற வெற்றி நடப்பது அனைத்தையும் தன் கைபேசியில் பதிவு பண்ணிக் கொண்டான். அது அவன் முதலாளியின் கட்டளை. தன் மனைவியின் விஸ்வரூபத்தை அப்பா வாயிலாக அறிந்த அபி, அதை நேரடியாகப் பார்க்க ஆசைப்பட்டு வெற்றியைக் கேட்டிருந்தான்

இன்னும் கொஞ்ச நேரம் அனைவரோடும் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு அபியின் ரூமிற்கு வந்தாள் கீதாஞ்சலி. கொஞ்சம் அயர்வாக உணர்ந்தாள். அந்த நாற்காலியில் உட்காரும் போது ஏதோ அபியின் மடியில் உட்காரும் சுகம். கண்களை மூடி சுகமாகச் சாய்ந்து கொண்டாள்.

ரூமிற்குள் வந்த நாராயணன் மருமகளின் கோலத்தில் சட்டென்று வெளியேறப் போனார். அரவத்தில் கண்விழித்த கீதாஞ்சலி,

மாமா…” என்றாள்.

டயர்டா இருந்தா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா, நாம அப்புறமா பேசிக்கலாம்.”

இல்லை மாமாடயர்டெல்லாம் ஒன்னுமில்லை. நான் சும்மா தான்அபியை பத்தி யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.” அந்தப் பதிலில் நாராயணனின் மனம் வேதனைப்பட்டது

கல்யாண மணம் கூடக் கலையாத புதுப் பெண். கணவன், இல்லறம் என்று ஒரு சுகமான வாழ்க்கை வாழ வேண்டிய நேரத்தில் ஹாஸ்பிடல், பிஸினஸ் என்று அலைகிறாள். மனதிற்குள் ஒரு பாறாங்கல் ஏறி அமர்ந்து கொண்டது. மருமகளின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

கீதாம்மா…”

சொல்லுங்க மாமா.”

ரைஸ் மில் ரெண்டு விலைக்கு வந்திருக்கும்மா. கொஞ்ச நாளாவே கேட்டுட்டு இருக்காங்க. நான் பெருசா இன்ட்ரஸ்ட் காட்டல்லை. ஆனா இப்போ வாங்கினா நல்லதுன்னு தோனுதும்மா.”

ஏற்கனவே இருக்கிற மில்லோட இதையும் சேத்து சமாளிக்க முடியுமா மாமா?”

அதனால தான் நான் இத்தனை நாளும் தயங்கிக்கிட்டே இருந்தேன். ஆனா இப்போ வாங்கலாம்னு மனசு சொல்லுது.” யோசனையோடு பேசிய மாமனாரைக் கேள்வியாகப் பார்த்தாள் கீதாஞ்சலி.

ரெண்டு மில்லையும் உம் பேர்ல வாங்கப் போறேன்மா. அபி வந்ததுக்கு அப்புறமா நீ அந்த பிஸினஸை பாத்துக்கிட்டா நான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்குவேன்.”

…! எனக்குஎனக்கு என்ன சொல்லுறதுன்னு புரியலை மாமா.” 

இதுல தயங்க ஒன்னுமே இல்லைம்மா. என்னால இந்த விஷயங்களை வீட்டுல வச்சுப் பேச முடியாது. ஏன்னா, அபியோட தாத்தாவுக்கும், அந்த ராஜேந்திரனோட அப்பாக்கும் நல்ல உறவு இருக்கு. அந்தக் குடும்பம்பத்துக்கு எதிரா நான் எது பண்ணினாலும் அது இவங்களை வருத்தப்படுத்தும்.” அவர் பேசுவதை அமைதியாகக் கேட்டபடி இருந்தாள் கீதாஞ்சலி.

ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல அழகான உறவுதான் இருந்திருக்கு. எங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லாம் மாறிப்போச்சு.” அந்தப் பேச்சில் ஆச்சரியமாகப் பார்த்தாள் கீதாஞ்சலி. ஆனால் எதுவும் குறுக்கிடவில்லை. நாராயணனே தொடர்ந்தார்.

வெளியூர்க்காரன் உள்ளூர்ல வந்து தொழில் பண்ணி நிமிர்ந்து நின்னதை அந்த ராஜேந்திரனால தாங்கிக்க முடியலை. அந்த வீட்டுல இருக்கிற பெரியவங்க ரொம்பவே நல்ல மாதிரித்தான்.” கொஞ்சம் நிறுத்தியவர்மீண்டும் ஆரம்பித்தார்.

இப்போ அப்பனுக்குப் புள்ளை தப்பாம பொறந்திருக்கான். ஏதோ அவனோட ரொம்ப நாளைய கஸ்டமர் நம்ம பக்கம் சாஞ்சுட்டாங்கிற கோபத்துல பத்திரிகை வரைக்கும் போய் எம் புள்ளையை கேவலப் படுத்திட்டானுங்கன்னுதான் இத்தனை நாளும் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா என்னைக்கு எம்புள்ளை மேலயே கை வைக்க துணிஞ்சானுங்களோ, இதுக்கு மேலயும் நான் அமைதியா இருந்தேன்னா…” மேலே பேச முடியாமல் நிறுத்தினார் நாராயணன். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று புரிந்தது கீதாஞ்சலிக்கு.

நீங்க மில்லை வாங்குறதுக்குரிய ஏற்பாட்டை பண்ணுங்க மாமா.” சட்டென்று முடிவு சொன்னாள் கீதாஞ்சலி. அபியின் பெயரை நாராயணன் சொன்ன போது, வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை

ராஜேந்திரன் கிட்ட தொழில் சுத்தம் இல்லைம்மா. அவனோட அப்பாக்கு நேர் எதிரானவன். அவன் கஸ்டமர்ஸை நம்ம பக்கம் திருப்புறது ரொம்ப சுலபம்மா.” சொன்னவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் கீதாஞ்சலி.

மாமாஅது தப்பில்லையா?” அவள் கேள்வியில் புன்னகைத்தார் நாராயணன்.

சும்மா போன கார்ல லாரியால மோதினாங்களே, அது தப்பில்லையாம்மா?” அவர் பதிலில் விக்கித்துப் போனாள் கீதாஞ்சலி.

மாமா…”

நான் இத்தனை நாளும் ரொம்பவே பொறுத்துப் போனேன்மா. ஆனா இதுக்கப்புறமும் நான் பொறுமையா இருந்தேன்னா எங் குடும்பத்தையே அப்பனும், புள்ளையும் முழுங்கி ஏப்பம் விட்டுருவானுங்க.” நாற்காலியில் சாய்ந்து கொண்டார் நாராயணன்.

நான் யாரையும் தேடிப் போய் எதுவும் செய்யலை. எனக்கு அடிச்சானுங்க, வலிக்குதுநான் இனித் திரும்ப அடிக்கப்போறேன். அவ்வளவுதான்.” நிதானமாகச் சொன்னார்.

நீங்க எது செஞ்சாலும் அது நியாயமாத்தான் இருக்கும் மாமா. நான் என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க.” கீதாஞ்சலியின் குரலில் இப்போது உறுதி தெரிந்தது.

விலைக்கு வந்திருக்கிற மில் ரெண்டையும் வாங்கலாம்மா. நம்மகிட்ட சரக்கு அதிகமாக ஆட்டோமெட்டிக்கா கஸ்டமர்ஸ் தேடி வருவாங்க. அந்த ராஜேந்திரனோட ரைஸ் மில்லை நான் மூட வைக்கலேன்னாஇந்த நாராயணன் கோயம்புத்தூர்க் காரன்னு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லைம்மா.” சொல்லிவிட்டு எழுந்து போனார் நாராயணன்.

சத்தமின்றி, ரத்தமின்றி கழுத்தறுப்பது எப்படியென்று சுலபமாகச் சொல்லி விட்டுப் போகும் மாமனாரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. எத்தனை இனிமையான மனிதர். அவரையே இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டார்களே. பெருமூச்சொன்று கிளம்பியது அவளிடம் இருந்து

 

 

error: Content is protected !!