mm26

மயங்காதே மனமே 26

அந்த பீச் ரிசார்ட்டில் உட்கார்ந்திருந்தார் ராஜேந்திரன். எதிரே தெரிந்த கடலைப் போல, மனம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. முன்னே தங்க நிறத்தில் இருந்த பானம், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கியது.

காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டவர், நேராக இங்கே தான் வந்திருந்தார். மில்லுக்கு ஃபோன் பண்ணி சில தகவல்கள் சொல்லிவிட்டு, இங்கே வந்து அமர்ந்து கொண்டார். 

நேரம் பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காலை நேரத்து வெயிலுக்கு, கடற்கரை மணல் பொன்னாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பொன் மணலின் மஞ்சள் நிறம், மஞ்சள் பூசி ஜொலித்த ஒரு முகத்தை, அவருக்கு ஞாபகப் படுத்தியது. கண்களை இறுக மூடி, நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

வைதேகி… 

மூடிய கண்களுக்குள் வந்து போனது அந்த முகம். இத்தனை நாட்களும் தன் நினைவிலேயே வராத முகம், கடந்த இரண்டு நாட்களாகத் தன்னை இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெண் மித்ரனின் காரிலிருந்து இறங்கும் போதே, ராஜேந்திரனுக்கு மின்சாரத்தைத் தொட்டாற் போல இருந்தது. அச்சு, அசல் வைதேகியின் அதே உருவம். ஒரு காலத்தில் தான் விரட்டி விரட்டிக் காதலித்த அதே உருவம். பக்கத்தில் நின்ற படி தன்னையே கவனித்துக் கொண்டிருந்த மனைவியின் பார்வையில், சட்டென்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டார் ராஜேந்திரன். 

தன் தந்தை, அந்தக் குடும்பத்திற்கு உதவிக் கொண்டிருக்கிறார் என்று ராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, சுலோச்சனாவிற்கும் நன்றாகத் தெரியும். மதுராந்தகன் எதையும் மறைக்கவில்லை. காதலித்த பெண்ணைக் கைவிட்டு விட்டு, எதற்கு சுலோச்சனாவை மகன் கரம் பிடித்திருக்கிறான் என்று குழம்பிப் போய் இருந்தார்கள் மதுராந்தகனும், ஜெயந்தியும். அதற்கு விடை, சில நாட்களிலேயே இருவருக்கும் கொஞ்சம் பிடிபட்டுப் போனது. 

சுலோச்சனா மிகவும் வசதியான வீட்டுப் பெண். தான் நினைத்ததை நடத்தியே பழக்கப்பட்டிருந்தவர், ராஜேந்திரன் விஷயத்திலும் அப்படியே நடந்து கொண்டார். 

கண்ணுக்கு லட்சணமாக, செல்வச் செழிப்போடு, இளமை கோலோச்ச இருந்த ராஜேந்திரன், சுலோச்சனாவைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை தான். ஆனால் ராஜேந்திரன் மனதில் இருந்த காதலை அறிந்த பின்னும், அந்தக் கவர்ச்சியைத் துடைத்துப் போடாமல், தான் ஆசைப்பட்டதையே தனதாக்கிக் கொண்டது தான் அவர் செய்த தவறு.

பெண்மையின் இலக்கணங்களோடு, ஒரு வார்த்தை கூட தன்னோடு பேச யோசிக்கும் வைதேகிக்கு முன்னே, சுலோச்சனாவின் தாராளங்கள் ராஜேந்திரனை ஆட்டங் காண வைத்தன. ஒரு கட்டத்திற்கு மேல், சுலோச்சனாவை தன்னால் இனிக் கைவிட முடியாது, என்ற கட்டத்திற்கு ராஜேந்திரன் தள்ளப்பட்டு விட்டார். 

நிலைமையின் விபரீதத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. சட்டென்று சுலோச்சனாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். கணவனின் மனம் தெரிந்த சுலோச்சனாவும், அவர் பார்வை அங்கே, இங்கே போகாதபடி திறமையாகப் பார்த்துக் கொண்டார். 

மகன், மருமகளது வாழ்க்கை முறையைப் பார்த்த மதுராந்தகன் தம்பதியினர், வாயை இறுக்கி மூடிக் கொண்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல், பேரனும் தங்கள் கையை மிஞ்சிப் போகவும், கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு அமைதியாகி விட்டார்கள்.

ஒட்டுதல் இல்லாவிட்டாலும், மோதல்களற்ற நிம்மதியோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான், யாரும் எதிர்பாரா விதமாக, மதுராந்தகன் வைதேகியின் குழந்தைகளைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

எப்போதும் போல, இப்போதும் அதைப் பெரிது படுத்தவில்லை ராஜேந்திரன். பணம் தானே, கொடுத்து விட்டுப் போகட்டும் என்று அமைதியாக இருந்து விட்டார். கணவனின் அசட்டைத் தனத்தைப் பார்த்த சுலோச்சனாவும், பேசாமல் போய்விட்டார். ஒரு வேளை, ராஜேந்திரன் அந்தக் குழந்தைகள் விஷயத்தில் அக்கறை காட்டி இருந்திருந்தால், நிலைமை இன்னும் விபரீதமாகப் போயிருந்திருக்குமோ என்னமோ? 

அத்தோடு, எதற்கும் பிடிவாதம் பிடிக்காத மதுராந்தகன், இந்த விஷயத்தில் கொஞ்சம் உறுதியாக இருக்கவும், எல்லோரும் கொஞ்சம் விட்டுப் பிடித்தார்கள்.

ஆனால், மித்ரன் அந்தப் பெண் தாமரையை கல்யாணமே பண்ணிக் கொள்வான் என்பது, யாரும் எதிர் பாராதது. இத்தனை காலமும் கண்ணில் படாமல், கருத்தை விட்டுத் தொலைந்து போயிருந்த முகம், தன் கண்ணெதிரே தோன்றவும் ஆடிப் போய் விட்டார் ராஜேந்திரன். 

இதில் கொடுமை என்னவென்றால், அவர் உணர்ச்சிகளை வெளிப்படையாக அவரால் காட்டக் கூட முடியவில்லை. சதா கண் கொத்திப் பாம்பாக தன்னையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் மனைவிக்கு முன்னால், முக மூடியோடே அலைந்து கொண்டிருந்தார். 

மகனின் செய்கையில் ஆத்திரப்பட்டவர் போல, மாமனார் வீட்டில் போய் இரண்டு நாள் தங்கி இருந்தார். எத்தனை நாளைக்குத் தான் அங்கேயே உட்கார்ந்திருக்க முடியும்? 

அத்தனை ஆத்திரமும் மித்ரன் மேல் தான் வந்தது. சொந்த வீட்டிலேயே அந்நியப் பட்டுப் போனார் ராஜேந்திரன். அதுவும், இன்று காலையில் நடந்த சம்பவம்…!

தாடைகள் இறுகியது ராஜேந்திரனுக்கு. சுலோச்சனாவின் வார்த்தைகள் முள் போல கீறியது. துரத்தித் துரத்திக் காதலித்திருந்தாலும், வைதேகி மேல் அவர் சுண்டு விரல் கூடப் பட்டிருக்காது. அப்படி இருக்கும் போது, அத்தனையும் தெரிந்த தன் மனைவியே இப்படிப் பேசியது, அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. 

அது போதாததற்கு, மித்ரனின் பதில்… மனதை ஏதோ ஒரு பாரம் அழுத்த, நாற்காலியிலேயே சாய்ந்த படி கண்மூடினார் ராஜேந்திரன். இடது கைப்பக்கம் சுள்ளென்று ஒரு வலி லேசாகத் தாக்கியது. உள்ளே இறங்கிய பானம், சற்றே தன் வேலையைக் காட்டத் துவங்கியது.

                                  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அபியும், கீதாஞ்சலியும் தயாராகிக் கொண்டு, கீழே இறங்கி வந்தார்கள். இரண்டு பேரும் சேர்ந்து வெளியே போய் நீண்ட நாட்கள் ஆகி இருந்ததால், உல்லாசமாகக் கிளம்பினார்கள்.

அபி, ஏதாவது நல்ல மூவிக்கும் போங்க.” சீமா சொல்லவும் புன்னகைத்தான் அபிமன்யு.

சரிம்மா.” வீடே சந்தோஷமாக வழியனுப்பி வைத்தது. அபி முதலில் கீதாஞ்சலியை, அவள் வீட்டிற்குத் தான் அழைத்துக் கொண்டு போனான். கொஞ்ச நேரம் அவர்களோடு நேரம் செலவழித்து விட்டு, இரண்டு பேரும் நேராக ‘லிபர்டி ப்ளாஸா’ போனார்கள். அதே காஃபி ஷாப்பிற்கு அபி அழைத்துக் கொண்டு போகவும், இப்போது கீதாஞ்சலி புன்னகைத்தாள்.

மலரும் நினைவுகள் அஞ்சலி.” சிரித்தபடியே காஃபி ஆர்டர் பண்ணினான். 

ஏன் அஞ்சலி?”

ம்…”

அன்னைக்கு எங்க இருந்தும்மா அந்த ஃபோட்டோவை எடுத்தாங்க?”

ம்… இப்போ அது ரொம்ப முக்கியம் உங்களுக்கு…?” அவள் குரலில் பொய்க் கோபம் இருந்தது.

இல்லையா பின்னே! அப்பிடி ஒன்னு நடக்காம போயிருந்தா, இந்நேரத்துக்கு நான் ரோமியோ மாதிரி இல்லை அலைஞ்சிருக்கணும். நீங்களும் இன்னும் நாலு நிலாக்கதை சொல்லி இருப்பீங்க.” அவன் சீரியஸாக சொல்லவும், சிணுங்கினாள் கீதாஞ்சலி.

சும்மா போங்க அபி. எப்ப பாத்தாலும் நிலாக்கதை, நிலாக்கதைன்னு கேலி பண்ணிக்கிட்டு.”

ஆனாலும் அநியாயம் சொல்லக் கூடாது அம்மாடி. கதை… நல்லாவே சொல்லுற.” சொல்லிவிட்டுத் திரும்பிய அபி, திடீரென மௌனமானான். கணவனின் மாற்றத்தில், அவன் கண்களைப் பின் தொடர்ந்தாள் கீதாஞ்சலி. கதிர் வந்து கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும் அவசரமாக இவர்களிடம் வந்தவன்,

அபி சார்… எப்பிடி இருக்கீங்க சார்? நல்லா இருக்கீங்களா?” அவன் குரலிலேயே அவன் அக்கறை தெரிந்தது. அபி தன் முகபாவத்தை திறமையாக சமாளித்துக் கொண்டான்.

ம்… நல்லா இருக்கேன் கதிர்.” குரல் கொஞ்சம் இறுக்கமாகவே வந்தது.

உக்காருங்க அண்ணா, காஃபி சாப்பிடலாம்.” 

இல்லை கீதாம்மா. நிறைய வேலை இருக்கு. அவசரமா போகணும். நான் உங்களைக் காணவும் தான் ஓடி வந்தேன்.” கதிரின் பதிலில் பொதுவாகச் சிரித்து வைத்தாள் கீதாஞ்சலி. அபியின் முகத்தைப் பார்க்கவே கொஞ்சம் பயமாக இருந்தது. இது வரை தன்னோடு இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த அபி இவன் இல்லை என்று பார்த்தாலே புரிந்தது. 

பிஸினஸ் எல்லாம் எப்பிடிப் போகுது கதிர்?” அபியின் கேள்வியில் கதிர் மட்டுமல்ல, கீதாஞ்சலியும் கொஞ்சம் ஆச்சரியப் பட்டாள். இப்படியொரு சகஜமான பேச்சை இருவருமே எதிர்பார்க்கவில்லை.

நல்லாப் போகுது சார்…”

இனி எதுவும் நல்லாப் போகாது கதிர்.” வெடி குண்டாக வந்தது பதில்.

சார்…?”

உக்காருப்பா…” அபியின் வற்புறுத்தலில் சட்டென்று அமர்ந்தான் கதிர். அபியிடம் இன்னும் கொஞ்சம் பேசினால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.

இல்லே… நல்லாப் போற எதுவும் இனி நல்லாப் போகாதுன்னு சொன்னேன்.” 

அபி சார்… நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. மித்ரன் சாருக்கும், நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…”

உனக்கும் அது சம்பவமா கதிர்…?” கதிரின் பேச்சை இடை மறித்தது அபியின் கேள்வி.

சார்… அ…து…”

என்னை விடு கதிர், இவ முகத்தைப் பாரு. இவளை உன் தங்கச்சி மாதிரி தானே நீ நேசிக்குறே? இவளுக்கு ஏதாவது ஆகி இருந்தா…?”

சார்…!” 

எவ்வளவு வேதனைப் பட்டான்னு உனக்குத் தெரியுமா கதிர்? கிட்டத்தட்ட ரெண்டு மாசமா, ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்திருக்கோம். சும்மா விடச் சொல்லுறயா? நீ சொல்லு… நான் பண்ணுறது நியாயமே இல்லைன்னு, உம் மனசைத் தொட்டு நீ சொல்லு… நான் அமைதியா போயிடுறேன்.” அபியின் பேச்சில் கதிரின் தலை தானாகக் குனிந்தது. 

நாங்க என்ன பண்ணினோம்னு இவ்வளவு வன்மம் கதிர்? எல்லாத்தையுமே ஆரம்பிச்சு வெச்சது உன்னோட முதலாளி. பிஸினஸ் ஆகட்டும், வாழ்க்கை ஆகட்டும்… எல்லா இடத்திலேயும் விளையாட நினைச்சது உம்முதலாளி…” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்ட அபி, கண்களைக் கொஞ்ச நேரம் அழுத்தமாக மூடித்திறந்தான். இப்போது கதிரைத் திரும்பிப் பார்த்தவன்,

அவன் என்னதான் கெடுதல் நினைச்சாலும், ஆண்டவன் எனக்கு அத்தனையையும் நல்லதாத்தான் மாத்திக் குடுத்திருக்கான். ஆனா, நான் சிலுவை சுமக்கணும்னு நினைச்சான் பாரு… அதுக்குத் திருப்பி அடிக்காம நான் விடமாட்டேன் கதிர். போய்ச்சொல்லு அத்தனை பேர்க்கிட்டயும். அபி இஸ் பேக்…” ஒரு கோடை கால இடியாக கதிரின் தலையில் இறங்கியது அபியின் பேச்சு. 

சார்…!” கதிருக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அபியின் நியாயமான பேச்சில், அவன் வாய் தானாகவே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டது. 

                                   ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ரொம்ப அவசரமா அத்தான்? காலையில இருந்து அந்த ஃபைலயே நோண்டிக்கிட்டு இருக்கீங்க?” மனைவியின் குரலில் நிமிர்ந்து பார்த்தான் மித்ரன். கையில் வடை, காஃபியோடு ரூமிற்குள் வந்தாள் தாமரை. 

அன்று ஞாயிற்றுக்கிழமையும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, வேலை பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன். சாப்பாட்டு வேளை தவிர, ரூமை விட்டு வெளியே வரவில்லை.

ம்… ஆடிட்டருக்கு அனுப்ப வேண்டிய முக்கியமான ஃபைல் பேபி. கதிர் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவான். அவன் கிட்ட குடுத்து அனுப்பணும்.” வேலையில் கவனமாக இருந்தபடியே பதில் சொன்னவன், மனைவியின் முகம் மலர்ந்து போனதைக் கவனிக்கவில்லை.

ஓ…! அண்ணா வருவானா அத்தான்? நான் அண்ணா கூட பேசட்டுமா?” தாமரையின் முகத்தை அண்ணாந்து பார்த்த மித்ரன், எதுவும் பேசவில்லை. ஃபைலை மூடி வைத்து விட்டு, காஃபியை வாங்கிக் கொண்டான்.

என்ன அத்தான்? ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிறீங்க?”

இங்கப் பாரு பேபி… கதிரோட நீ தாராளமா பேசலாம். ஆனா அவன் சரியா முகங்குடுக்கலைன்னா, நீ வருத்தப்படுவியேடா?”

அது பரவாயில்லை அத்தான். அண்ணா கூட பேச, நீங்க சரின்னு சொல்லுங்க அத்தான்.” மனைவியின் கெஞ்சல் கூட கொஞ்சலாகத் தான் தெரிந்தது மித்ரனுக்கு. அவள் கன்னத்தைத் தட்டியவன்,

கே பேபி, நீ பேசுடா. அதுக்கு எதுக்கு நான் சரின்னு சொல்லணும்? நான் அன்னைக்கே சொன்னேன் இல்லையா? இது உன்னோட வீடு. உனக்கு எது சரின்னு பட்டாலும் நீ தாராளமா பண்ணலாம்டா.” சொன்ன கணவனின் கன்னத்தில் முத்தம் வைத்தவள், குதித்துக் கொண்டு கீழே போனாள். மித்ரனுக்கு அவளைப் பார்த்துப் பாவமாக இருந்தது. தன்னால் தானே அவளுக்கு இந்த நிலைமை? தன்னைத் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், கதிர் எப்போதும் போல அவளுக்கு ஒரு நல்ல அண்ணனாகவே இருந்திருப்பான். இத்தனை பிரச்சினைகள் வந்திருக்காது.

ஆனால், இன்னொரு புறம் யோசிக்கும் போது, தன்னைத் தவிர்த்து வேறு யாரையும் தாமரை மணந்து கொண்டிருப்பாளா? என்ற கேள்வியே எழுந்து நின்றது. முகத்தில் புன்னகை உறைய, கட்டிலில் சாய்ந்து கொண்டான்.

தன்னைக் காதலித்தாளாமே! கதிர் தன்னைப் பற்றிப் பேசப் பேச, அவள் மனதில் அவனைப் பாராமலேயே ஒரு காதல் உருவானதாம். மனைவியைக் கையணைப்பில் வைத்துக் கொண்டு, அவள் வாய்மூலமாகவே அனைத்தையும் கேட்டிருந்தான் மித்ரன். இப்போது அவள் சொன்னதை நினைக்கும் போதும், ஏதோ பறப்பது போல இருந்தது. காதலிக்கப் படுதலும் ஒரு சுகம் தான் என்று, இப்போது புரிந்தது மித்ரனுக்கு.

அவனைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாள். தன் தாய், அவனிடம் தவற விட்டதை எல்லாம், மனைவி கொஞ்சமும் குறையாமல் நேர் பண்ணினாள். முழுதாக அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தான் மித்ரன். 

அவன் அணியும் ஆடைகள் முதற் கொண்டு, அவன் உண்ணும் உணவுகள் வரை, அவள் தெரிவாகத்தான் இருந்தது. மத்தியானம் ட்ரைவர் சாப்பாடு கொண்டு போவது நின்று போய், இப்போதெல்லாம் மித்ரனே வீடு வந்தான்.

மனைவி பரிமாற உண்டு விட்டு, அவளோடு கொஞ்சம் நேரம் செலவழித்து விட்டுத் தான், மீண்டும் கிளம்பிப் போவான். இரவிலும் ஏழு மணியோடு வீடு வரப் பழகியிருந்தான். 

மதுராந்தகனுக்கும், ஜெயந்திக்கும் அத்தனை மகிழ்ச்சி. இவன் தங்கள் பேரன் தானா? என்று வாய்பிளந்து போனார்கள். ஆக மொத்தம் வீடு, வீடாக இருந்தது.

அத்தான்…!” மித்ரனின் சிந்தனையைக் கலைத்தாள் மனைவி.

என்னடா?”

அண்ணா வந்துட்டான், ஃபைலக் குடுங்க அத்தான்.” அவள் ஆர்ப்பரிப்பில், முடித்து வைத்திருந்த ஃபைலை எடுத்து நீட்டினான் மித்ரன்.

வழமை போல உள்ளே வராமல், வாசலோடு நின்றிருந்தான் கதிர். ஜெயந்தி அழைத்தும் வரவில்லை. ஃபைலை மார்போடு அணைத்த படி ஓடி வந்த தாமரையைப் பார்த்ததும், ஜெயந்தி புன்னகைத்தபடி உள்ளே போய் விட்டார்.

உள்ள வாண்ணா.” கூப்பிட்ட தங்கையை ஒரு தினுசாகப் பார்த்த கதிர், ஃபைலுக்காகக் கையை நீட்டினான்.

எங்கூடப் பேச மாட்டியா? நான் நல்லா வாழணும்னு தானே நீ ஆசைப்பட்டே? நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு, உனக்குத் தெரியாது அண்ணா. இந்த வீட்டுல உனக்குப் பிடிக்காதவங்களைத் தவிர்த்து, நல்லவங்களும் இருக்காங்க. நீதான் அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற.” சொல்லிவிட்டு ஃபைலை அவளாகவே நீட்டினாள் தாமரை. 

வாங்கிக் கொண்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் திரும்பிப் போன கதிர், சட்டென்று நின்றான். தாமரையின் கண்கள் மின்னியது. அண்ணன் திரும்பி வர முன்னமே, அவனிடம் தானே ஓடினாள் தங்கை.

சொல்லுண்ணா… ஏதோ சொல்லணும்னு தானே நின்ன?” கேட்ட தங்கையை, யோசனையாகப் பார்த்தான் கதிர்.

எதுக்குண்ணா இவ்வளவு யோசிக்குறே? சொல்லு…” அதற்கு மேலும் யோசிக்காமல் ஆரம்பித்தான் கதிர்.

அபி சாரைப் பாத்தேன்… அவங்க யாருன்னு தெரியுமா உனக்கு?”

ம்… தெரியும். சொல்லி இருக்காங்க…”

அடிச்சுத் தூக்கப் பாத்தாங்க. கடவுள் புண்ணியம், அபி சாரும், கீதாம்மாவும் தப்பிச்சுட்டாங்க. இப்போ பழைய படி நார்மலுக்கு வந்துட்டாங்க. ஆனா… மனசுல பழி வெறி வந்திருக்கு.” அண்ணன் இதைச் சொல்லும் போது, தாமரையின் கண்களில் கிலி பரவியது.

தைரியமா எங்கிட்ட சொன்னாங்க… உன்னோட முதலாளி கிட்டப்போய், அபி திரும்ப வந்துட்டான்னு சொல்லுன்னு சொல்லுறாங்க. இது தான் இந்த வீட்டோட லட்சணம்.” கார சாரமாக வந்தது கதிரின் குரல்.

ஆனா… அதை அவங்க பண்ணலைண்ணா…” 

அது உனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். ஊருக்குத் தெரியாது. இந்த வீட்டோட அடையாளம் இதுதான்…” சொல்லிவிட்டு, சர சரவென வெளியே போய்விட்டான் கதிர். போகும் அண்ணனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் தாமரை.