MM3
MM3
மயங்காதே மனமே 3
அந்த பத்துக்குப் பத்து அறையை ‘ஹோம் கோர்னர்‘ ஆக வடிவமைத்திருந்தார்கள் அந்த நர்சரியில். ஒரு மூலையில் சின்னதாக ஒரு பர்னர், மைக்ரோ வேவ் ஒவன், வாஷிங் மெஷின், சின்க் எல்லாம் ‘மினியேச்சர்‘ வடிவில் குழந்தைகளுக்கு ஏற்ற சைசில் இருந்தது. சின்னதாக சமையலுக்குரிய பாத்திரங்கள் வேறு.
ஒரு மூலையில் சின்னதாக ‘ஷெல்ஃப்‘ கள் வடிவமைக்கப்பட்டு, அதில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவகையில் உட்கார்ந்து படிக்க, சின்னச் சின்ன குஷன்கள் நிலத்தில் போடப்பட்டிருந்தது.
குழந்தைகள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, அவர்களை வரவேற்கத் தயாரானாள் கீதாஞ்சலி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம்.
சிரித்த முகமாக பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ‘குட் மார்னிங்‘ சொல்லி, வரவேற்றபடி நின்றாள்.
“குட் மார்னிங் கீதா.” குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, தருண் வந்து கொண்டிருந்தான், கூடவே ரஞ்சனி.
“குட் மார்னிங் மை ஸ்வீட் போய்.” சொல்லிய கீதாஞ்சலியை முறைத்துப் பார்த்தான் சிறுவன்.
“கால் மீ ராஜா.” மாமனின் அறிவுரை நன்றாகவே வேலை செய்தது. ஆச்சரியமாக தருணைப் பார்த்துவிட்டு, ரஞ்சனியின் பக்கம் திரும்பினாள் கீதாஞ்சலி.
“அது ஒன்னுமில்லை கீதாஞ்சலி, நேத்து எங்க வீட்டுக்கு போயிருந்தோம். இங்க நடக்கிறது ஒன்னுவிடாம தருண் அவனோட மாமாக்கிட்ட சொல்லியாச்சு. அண்ணாவும் ஸ்வீட் சொல்லக்கூடாது, ராஜா சொல்லச் சொல்லுன்னு விளையாட்டுக்குச் சொன்னாங்க. அதை இந்த வாலு அப்பிடியே உங்ககிட்ட ஒப்பிக்குது.” சொல்லிவிட்டு ரஞ்சனி புன்னகைக்க, கீதாஞ்சலியும் புன்னகைத்தாள்.
“ஓ…! அப்பிடியா மேடம். கண்டிப்பா இனிமே மாத்திக்க ட்ரை பண்ணுறேன்.”
“ஐயையோ! நீங்க வேற, எங்க அண்ணா சும்மா தமாஷுக்கு சொன்னாங்க.” சொல்லிவிட்டு சற்றுத் தயக்கமாக கீதாஞ்சலியின் முகம் பார்த்தாள் ரஞ்சனி.
“சொல்லுங்க மேடம்.”
“கீதாஞ்சலி, பேரன்ட்ஸையும் இன்னைக்கு அலோவ் பண்ணலாமே. மனசுக்கு கொஞ்சம் பயமா இருக்கு.” சொன்ன ரஞ்சனியைப் பார்த்து வாஞ்சையாகப் புன்னகைத்தாள் கீதாஞ்சலி.
“நீங்க கவலையே படாதீங்க மேடம். நிறைய அசிஸ்டன்ட்ஸ் கூட வர்றாங்க. நாங்க பசங்களை பத்திரமா பாத்துக்குவோம்.” கீதாஞ்சலி சொல்லவும், மனமேயில்லாமல் சிரித்தாள் ரஞ்சனி.
“இருந்தாலும் மனசுக்குக் கொஞ்சம் பதட்டமா இருக்கும்மா. இதுவரைக்கும் எங்கேயும் தனியா அனுப்பினது கிடையாது.”
“புரியுது மேடம். ஃபர்ஸ்ட் டைம் எங்கிறதால நீங்க ரொம்பவே வொர்ரி பண்ணுறீங்க. ரெண்டு, மூணு தரம் இப்பிடிப் போனா அப்புறம் உங்களுக்கே பழகிடும்.” ஏதேதோ சொல்லி ரஞ்சனியை சமாளித்து அனுப்பி வைத்தாள் கீதாஞ்சலி.
உள்ளூரில் இருந்த ஒரு பிஸ்கட் ஃபாக்டரிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல ஒரு ட்ரிப் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். அதன் பொருட்டு அந்த ஃபாக்டரியின் மானேஜரிடம் பத்து மணிக்கு அனுமதியும் வாங்கி இருந்தார்கள்.
குழந்தைகளின் வயதை அடிப்படையாகக் கொண்டு மூன்று குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் அத்தனையும் தயாராகி இருந்தது. பிள்ளைகளுக்கான சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில், ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டார்கள்.
பிஞ்சு பிஞ்சாக சிறுவர்கள், அவர்களின் அளவிற்கு ஏற்ப பாதுகாப்பிற்கான வெயிஸ்ட் கோர்ட் அணிந்து வரிசையில் நின்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறும் முன்னர் அடென்டன்ஸை ஒரு முறை பார்த்துக் கொண்டாள் கீதாஞ்சலி. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது அவர்களது தலையாய கடமையாக போதிக்கப்பட்டிருந்தது.
தங்களை நம்பி பிள்ளைச் செல்வங்களை ஒப்படைத்து விட்டு, இதர வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெற்றோருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் நன்கறிவார்கள். அந்த ஊழியர் வரிசையில், நர்சரியின் உரிமையாளர் மிஸஸ். ஜான்ஸன் முதற்கொண்டு, கூட்டிப் பெருக்கும் ஆயா வரை அடக்கம்.
போக்குவரத்திற்கென அரேன்ஜ் பண்ணப்பட்டிருந்த அந்த கோச்சில் அனைவரும் உட்கார, நர்சரி ரைமோடு தொடங்கியது பயணம்.
‘The wheels on the bus go round and round…’
———————————————————-
ராஜேந்திரன் டைனிங் டேபிளில் மிகவும் மகிழ்ச்சியாக உட்கார்ந்து இருந்தார். முகத்தில் வாய்கொள்ளாப் புன்னகை இருந்தது. மகனின் வருகைக்காகக் காத்திருந்தார்.
நேரம் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மருமகள் சுலோச்சனா இன்னும் ரூமை விட்டு வெளியே வராததால், மகனுக்குப் பரிமாறும் பொறுப்பில் இருந்தார் ஜெயந்தி. இதுவே வழமையும் என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர்.
மித்ரன் அப்போதுதான் டைனிங் டேபிளிற்கு வந்தான். அவனைக் கண்ட மாத்திரத்தில் ராஜேந்திரன் மலர்ந்து போனார். அப்பாவும், பிள்ளையும் ‘ஹை ஃபைவ்‘ கொடுத்துக் கொண்டார்கள்.
“குட் மார்னிங் மித்ரன்“
“குட் மார்னிங் டாட், இந்த மார்னிங் எப்பிடி இருக்கு?” கண்சிமிட்டிக் கேட்ட மகனை அணைத்துக் கொண்டார் ராஜேந்திரன்.
“வண்டர்ஃபுல் மித்ரன். நீ சொல்லும்போது கூட நான் நம்பலைப்பா. பட் யூ டிட் இட்.”
“மகேந்திரன் ஆரம்பத்துல சம்மதிக்கலை டாட். கொஞ்சம் உருட்டி மிரட்டித்தான் காரியத்தை நடத்தினேன்.”
“ம்ஹூம்…” அம்மா பரிமாறிய குழாய்ப் புட்டும், கடலைக் கறியும் அன்று அமிர்தமாக இறங்கியது ராஜேந்திரனுக்கு.
“ஏதாவது ரியாக்ஷ்ன் இருந்துதாப்பா?”
“இன்னும் இல்லை டாட். மகேந்திரனுக்கு கால் பண்ணி அந்த அபி சத்தம் போட்டானாம். மகேந்திரனோட அசிஸ்டன்ட், கதிர்கிட்ட சொல்லி இருக்கான்.”
“ஹா… ஹா…! வெரி குட். ஐ ஆம் வெரி ஹாப்பி மை சன். என்னோட கஸ்டமரை அவனுங்க பக்கம் இழுத்தானுங்க இல்லை, அனுபவிக்கட்டும். நல்லா அனுபவிக்கட்டும்.” ராஜேந்திரனின் குரலில் அத்தனை வன்மம் இருந்தது.
இவர்கள் பேச்சு பேச்சாக இருக்க, மகனிற்கும், பேரனிற்கும் பரிமாறிய ஜெயந்தி, சோஃபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவரை திரும்பிப் பார்த்தார்.
மதுராந்தகன் அமைதியாக அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். மகனும், பேரனும் உண்டு முடித்துவிட்டுக் கிளம்பவும், கணவனின் அருகில் போய் அமர்ந்தார் ஜெயந்தி.
“என்னங்க ஆச்சு? அப்பாவும், புள்ளையும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.” மனைவி கேட்கவும், அவரைத் திரும்பிப் பார்த்த மதுராந்தகன், தனது கையிலிருந்த பேப்பரை அவரிடம் நீட்டினார். கணவரின் முகத்தில் இருந்த மூக்குக் கண்ணாடியை கழட்டி தனக்கு அணிந்து கொண்டு பேப்பரைப் பார்த்த ஜெயந்தி திடுக்கிட்டுப் போனார்.
“ஏங்க, இது நம்ம நாராயணன் பையன் இல்லை?”
“ம்…”
“எதுக்குங்க அந்தப் பையன் இப்பிடியெல்லாம் நடந்துக்கிறான்?”
“இல்லைம்மா, எனக்குத் தெரிஞ்சு பையன் இந்தளவுக்கு இறங்குறவன் கிடையாது.”
“அப்பிடின்னா எப்பிடிங்க இப்பிடி படம் வருது? அதுவும் பத்திரிகையில?”
“இவ்வளவு நேரமும் புரியாமத்தான் இருந்துது. ஆனா இப்போ அப்பனும், மகனும் பேசிக்கிட்டதைப் பாத்தா, இவனுங்க தான் ஏதோ தில்லுவாரித்தனம் பண்ணி இருப்பானுங்களோன்னு தோணுது.”
“என்னங்க சொல்லுறீங்க?” ஜெயந்தியின் குரலில் அத்தனை அதிர்ச்சி இருந்தது.
“சரக்கு போன லாரி ஒன்னு திரும்பி வந்திடுச்சு. ஏன்னு கேட்டதுக்கு சரக்கு குவாலிட்டி பத்தலைன்னு கஸ்டமர் சொல்லியிருக்கான். ஏற்கனவே இது சம்பந்தமா கம்ப்ளெயின்ட் பண்ணி இருக்கேன், ஆனா நீங்க எதையும் கண்டுக்கலைன்னு சொல்லியிருக்கான்.”
“அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்?”
“போனவன் சும்மா போகாம, இந்த முறை நாராயணன் கிட்ட சரக்கெடுத்திருக்கான்.” மீதியை மதுராந்தகன் முடிக்காமலேயே ஜெயந்திக்குப் புரிந்தது.
அந்தப் பிராந்தியத்தில் நெல் வேளாண்மையே பிரதான பயிர்ச்செய்கையாக இருந்தது. அறுபது விழுக்காடு நிலங்கள் நெல் சாகுபடிக்கே பயன்பட்டதால், ஊரிலுள்ள பெரிய புள்ளிகள் அத்தனை பேரிற்கும் ரைஸ் மில்லுகள் சொந்தமாக இருந்தது.
“பையன்தான் பணம் பணம்னு பறக்குறான்னு பாத்தா, பேரனும் பழி பாவத்துக்கு அஞ்சாதவனா இருக்கானே.” ஜெயந்தியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“யாருக்கோ, எங்கேயோ பெருசா பாவம் பண்ணி இருக்கோம் ஜெயந்தி. அதுதான் நம்மளை இந்த ஆட்டு ஆட்டுது.” சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சோடு நகர்ந்து போனார் மதுராந்தகன்.
——————————————————-
குழந்தைகள் அத்தனை பேரும் ஆச்சரியத்துடன் ஒவ்வொரு விஷயமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரிய ராட்சத அண்டாக்களில் கலக்கப்பட்ட மூலப்பொருட்கள் பேரிரைச்சலுடன் ‘மிக்ஸ்‘ பண்ணப்பட்டு மெஷின்கள் மூலம் நேர்த்தியாக்கப்பட்டது. வட்ட வடிவ அச்சுக்களால் வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பிஸ்கட்டுகள் பெல்ட்டில் ஓர் ஒழுங்குடன் ஓடிக்கொண்டிருந்தன.
ஒரு பக்கம் பச்சை மாவாக இருந்த பிஸ்கட்டுகள், ஒரு ரூமைக் கடந்து வரும் போது பொன்னிற பிஸ்கட்டுகளாக மாறியிருந்தன. பிள்ளைகள் மாத்திரமன்றி பெரியவர்களும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். சுடச்சுட ஒவனில் இருந்து வந்த பிஸ்கட்டுகளின் வாசம் மூக்கைத் துளைத்தது.
பாக்கிங் செக்ஷ்ன் வேறாக இருந்தது. ஓர் ஒழுங்கில் வந்த பிஸ்கட்டுகளை எண்ணிக்கை தவறாமல் தனக்குள் உள்வாங்கிய மெஷின், பாக்கெட்டாக வெளியே அனுப்பியது விந்தையிலும் விந்தையாக இருந்தது. ஆளுக்கொரு பிஸ்கட் பாக்கெட் அப்போதே கையில் கிடைக்க, குழந்தைகள் மகிழ்ந்து போனார்கள்.
ஃபாக்டரிக்கு வெளியே அழகுற அமைக்கப்பட்டிருந்த அந்தச் சின்னப் பூந்தோட்டத்தின் பென்ச்சுகளில் குழந்தைகளை அமர வைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை அடென்டன்ஸை சரிபார்த்துக் கொண்டாள் கீதாஞ்சலி. எந்த இடத்திலும் குழந்தைகளை தவற விடாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை எப்போதும் அவர்கள் மேற்கொள்வதுண்டு.
குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்த ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில்களை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் ஆரவாரத்தில் ஐக்கியமாகி இருந்த கீதாஞ்சலி, கண்ணாடித் தடுப்பின் வழியே தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் கண்களைக் கவனிக்கவில்லை.
தந்தையோடு காலை உணவை முடித்துவிட்டு அவர்களின் பிஸ்கட் ஃபாக்டரிக்கு நேரே வந்திருந்தான் மித்ரன். அவன் வருவதற்கு முன்னமே மித்ரனின் காரியதரிசி கதிர் அங்கே ஆஜராகி இருந்தான். இன்று பிஸ்கட் கம்பனியை மேற்பார்வை பார்க்கும் நாள்.
கம்பனியின் ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்தவன், வரவு செலவுக் கணக்கை சரிபார்த்துவிட்டு,
“கதிர், ஸோனாக்கு செக் அனுப்பிட்டியா?” என்றான். ஸோனா அபியோடு ஃபோட்டோவில் இருந்த பெண்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடியே அனுப்பிட்டேன் சார்.”
“ம்… குட். பேப்பர் நியூஸ் பக்கா இல்லை?” மித்ரனின் கண்களிலும், குரலிலும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. அந்த சந்தோஷம் கதிரின் கண்களை சென்றடையவில்லை. லேசாக சிரித்து வைத்தான். கதிரின் முகத்தைப் பார்த்த மித்ரன்,
“ஓ…! ஐயா நேர்மையின் முழுவடிவம் இல்லை? எனக்கு அது மறந்து போச்சு.” என்றான் கேலியாக.
கதிர் உண்மையிலேயே மித்ரனின் தூரத்துச் சொந்தம். யார்? என்ன? ஏது? என்றெல்லாம் இதுவரை மித்ரன் அறிந்து கொள்ளப் பிரியப்பட்டது இல்லை. அவனைப் பொறுத்தவரை கதிர் ஒரு நல்ல ஊழியன். தான் இட்ட பணியை சிரமேற் கொண்டு செய்யும் ஒரு நல்ல விசுவாசி.
தாத்தா மதுராந்தகன் தான் ஒரு நாள் இந்த கதிரை, மித்ரனுக்கு அறிமுகப்படுத்தினார். கொஞ்சம் வசதியில்லாத குடும்பம். தூரத்துச் சொந்தம். நல்லதாக ஒரு வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லிக் கேட்கவும், தன்னோடு வைத்துக் கொண்டான் மித்ரன். ஏனோ ஒரு இனம் புரியாத பாசம் அவன் மேல் உண்டானது. இன்று வரை அதற்கான காரணம் மித்ரனுக்குத் தெரியாது. ‘கதிரைப் பிடிக்கும்‘, அவ்வளவுதான்.
“ஸோனா ஏதாவது கால் பண்ணி இருந்தாளா?”
“இல்லை சார்.” இவர்களது சம்பாஷனையைக் கலைத்தது குழந்தைகளின் சத்தம். வெளியே திரும்பிப் பார்த்த மித்ரன் ஆச்சரியப்பட்டான்.
“இங்க என்ன நடக்குது கதிர்?” புன்னகையோடு கேட்டான்.
“அது ஒன்னும் இல்லை சார், நர்சரி ஸ்கூல் ஒன்னு ட்ரிப் வந்திருக்காங்க.” கதிரின் முகத்திலும் புன்னகை இருந்தது.
“ஓ…!” நாற்காலியை விட்டு எழுந்து வந்து அந்தக் கண்ணாடித் தடுப்பின் வழியாக அவர்களைப் பார்த்தான் மித்ரன். ஒரு பதினைந்து குழந்தைகளும், ஐந்து ஆசிரியைகளும் அவர்களது உலகத்தில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தனை பேரையும் வலம் வந்த அவன் கண்கள், ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது. கண்களை நகர்த்தாமல் அந்தப் பெண்ணையே பார்த்திருந்தான். பெரிதாக அழகி என்று சொல்லமுடியாது. ஆனால் ஏதோ ஒன்று அவனை அவள் பக்கம் ஈர்த்தது. அவன் பார்வையின் போக்கையுணர்ந்த கதிர்,
“சார், இன்னைக்கு லன்ச் முடிய, யூனியன் லீடரோட ஒரு மீட்டிங் இருக்கு.” என்றான்.
“யெஸ், ஞாபகம் இருக்கு கதிர்.” தன்னை மீட்டுக் கொண்டவன் நாற்காலியில் வந்து அமர்ந்தான். வேலைகள் முழுதாக அவனை ஈர்த்துக் கொண்டது.
—————————————————————
“சீக்கிரமா போ அண்ணா.” அபியை விரட்டிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. இண்டு பேரும் தருணை பிக் அப் பண்ண போய்க் கொண்டிருந்தார்கள்.
“இதுக்கு மேல ஃபாஸ்ட்டா போக முடியாது ரஞ்சி.” சொன்னபடியே புன்னகைத்தான் அபிமன்யு. அவன் புன்னகைக்கவும் வெகுண்டவள்,
“என்னைப் பாத்தா கேலியா இருக்கா உனக்கு?” என்றாள்.
“இல்லையா பின்னே? எதுக்கு இப்பிடிக் கிடந்து பதர்ற? ஒன்னு பிள்ளைய அனுப்பாம இருந்திருக்கனும், இல்லைன்னா நீயும் கூடவே போயிருக்கனும்.” அபி சொல்லவும், அவனை முறைத்துப் பார்த்தாள்.
“கீதாக்கிட்ட கேட்டேன், மாட்டேன்னு சொல்லிட்டாங்க.” கீதாஞ்சலியிடம் காட்ட முடியாத கோபத்தை அண்ணனிடம் காட்டினாள் ரஞ்சனி.
“அது யாரு கீதா?” ட்ரைவ் பண்ணிய படியே கேட்டான் அபிமன்யு.
“தருணோட மிஸ், ஸ்வீட் பாய் சொல்லுறவங்க அவங்கதான்.”
“ஓ…! மேடம் தான் சொன்னாங்களா? அது சொன்னா நீ எதுக்கு கேட்டுக்கிறே? மிஸஸ். ஜான்ஸன் கிட்ட பேச வேண்டியது தானே.”
“அது, இதுன்னு மரியாதை இல்லாம பேசாதேண்ணா. அவங்க ரொம்ப நல்ல மாதிரி. தருண் ப்ளே குரூப் ஆரம்பிச்சப்போ எவ்வளவு அக்கறையா பாத்துக்கிட்டாங்க தெரியுமா?”
“அப்போ கவலையை விடு, இப்போவும் நல்லாத்தான் பாத்துக்குவாங்க.” பேசியபடியே நர்சரியின் முன்னால் அந்த black Audi ஐ பார்க் பண்ணினான் அபிமன்யு. குழந்தைகள் இன்னும் வந்திருக்கவில்லை.
“என்ன பாடு பட்டே? பசங்க இன்னும் வரவேயில்லை.” குறைப்பட்ட அண்ணனை திரும்பிப் பார்த்தாள் ரஞ்சனி. நேற்று அப்பாவைப் பார்க்கவென வந்தவர்கள் நைட் அங்கேயே தங்கிவிட்டார்கள். ஈஷ்வரன் காலையில் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிப் போக, ரஞ்சனி அம்மா வீட்டிலேயே தங்கிவிட்டாள். தருண் அங்கிருந்துதான் நர்சரிக்கு வந்திருந்தான்.
“நாளைக்கு உனக்கும் ஒன்னு பொறக்கும் இல்லை, அப்போ என்னோட அண்ணியும் இப்பிடித்தான் பொலம்புவா. அன்னைக்கு உனக்கு புரியும்.” சொல்லிவிட்டு அபியை ஏக்கமாகப் பார்த்தாள் ரஞ்சனி.
“இதெல்லாம் எப்பண்ணா நடக்கும்?” ரஞ்சனியின் கேள்வியில் தலையில் கையை வைத்துக் கொண்டான் அபிமன்யு.
“ஆரம்பிச்சுட்டாய்யா… ஆரம்பிச்சுட்டா…!” வடிவேல் பாணியில் அவன் கலாய்க்கவும், கோச் வரவும் சரியாக இருந்தது. அத்தனையையும் மறந்து குழந்தையிடம் ஓடினாள் ரஞ்சனி.
வரிசையாக குழந்தைகளை கோச்சிலிருந்து இறக்கி, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. தருணின் முறை வரவும், அவனை ரஞ்சனியிடம் ஒப்படைத்துவிட்டு,
“சேஃபா உங்க பையனை கொண்டு வந்து சேத்துட்டேனா மேடம்?” என்றாள். குரலில் குறும்பு இருந்தது. ரஞ்சனி தான் இப்போது பல்லிளித்துக் கொண்டாள். அத்தனையையும் காரிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.
பையனை அண்ணாவின் வசம் விட்டு விட்டு, அங்கிருந்த பெண்களோடு அளவளாவப் போய் விட்டாள் ரஞ்சனி. பிள்ளைகள் அனைவரும் பெற்றோர் வசம் சென்றுவிட்டதால், ஆறுதலாக அந்த black Audi யின் பக்கம் வந்தாள் கீதாஞ்சலி.
தருணை ‘பூஸ்டர் ஸீட்‘ இல் இருத்தி சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டிருந்த அபியை அவள் முழுதாகக் காணவில்லை.
“ஹாய் டாக்டர் சார்.” நிற்பது ஈஷ்வரன் என்ற நினைப்பில் ‘ஹாய்‘ சொன்னாள். குனிந்து பெல்ட்டை மாட்டிக் கொண்டிருந்த அபிமன்யு தலையை மட்டும் திருப்பிப் பார்த்தான்.
“கீதா, ஹி இஸ் நாட் மை அப்பா, மை மாமா.” விளக்கம் சொன்னான் தருண்.
“ஓ…! சாரி.” சொன்னவளை தன் வேலையை முடித்தவன் நிமிர்ந்து பார்த்தான். அப்போதுதான் அவன் முகத்தை முழுதாகப் பார்த்தவள் ஒரு நிமிடம் மலைத்துப் போனாள்.
‘இது இன்று காலையில் பேப்பரில் பார்த்த முகம் அல்லவா?’
அவளின் வெறித்த பார்வையில் கடுப்பானான் அபிமன்யு. இன்று காலை முதல் போகும் இடமெல்லாம் இந்தப் பார்வைகளே தொடரவும், ஒரு எல்லைக்கு மேல் மிகவும் சோர்ந்து போனான்.
அந்த மித்ரனை அடித்து நொறுக்கும் ஆத்திரம் வந்தது. இப்போது இந்தப் பெண்ணும் அதே பார்வை பார்க்கவும், ஏதோ சொல்லத் தெரியாத கோபம் ஒன்று சட்டென மூண்டது.
“தருண், நாம கண்ணால பாக்குறது எல்லாமே நிஜமில்லைடா கண்ணா.” சத்தமாகச் சொன்னான் அபி. தருண் என்னவென்று புரியாமல் முழிக்க, கீதாஞ்சலியின் இதழோரம் சின்னதாக ஒரு புன்னகை விரிந்தது.
அவன் நின்ற தோரணையும், அந்தப் பார்வையும் இவனுக்கும், தீமைகளுக்கும் ரொம்பவே தூரம் என்று அவளுக்குச் சொல்லாமல் சொன்னது.
காலையிலிருந்து தன்னைத் தொடரும் பார்வைகளை கணக்கிலும் கொள்ளாதவன், இந்தப் பெண்ணின் பார்வைக்கு மட்டும் பதில் சொல்லி இருப்பதை உணராமல், அந்த black Audi ஐ ஸ்டார்ட் பண்ணினான்.