MM4
MM4
மயங்காதே மனமே 4
நாராயணனைத் தவிர அத்தனை பேரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தார்கள். கணவனின் தேவைகளைக் கவனித்து விட்டு அப்போதுதான் வந்து உட்கார்ந்தார் சீமா. ரஞ்சனி குடும்பம் கிளம்பி இருந்தது. தாத்தா பாலகிருஷ்ணன் லேசாக தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“அபி, மாப்பிள்ளை இருக்கும் போது இந்தப் பேச்சை ஆரம்பிக்கிறது அவ்வளவு நல்லா இருக்காதுன்னு தான் நான் மௌனமா இருந்தேன்.” தாத்தாவின் பேச்சில் உணவைப் பிளேட்டில் பரிமாறிக் கொண்டிருந்த அபிமன்யு குழப்பமாக நிமிர்ந்து பார்த்தான்.
“எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே அபி?”
“தாத்தா!”
“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறே? நான் அப்பிடி என்னத்தைக் கேட்டுட்டேன்.”
“இல்லை தாத்தா…”
“இங்கப் பாரு அபி. ரஞ்சனி உன்னை விட நாலு வயசு சின்னவ. அவளுக்கு கல்யாணம் ஆகி மூணு வயசுல ஒரு குழந்தையும் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு உன் வயசுல இருக்குற எல்லாப் பசங்களும் குடும்பம், குட்டின்னு ஆகிட்டாங்க.” தாத்தாவின் பேச்சில் இருந்த நியாயம் அபிக்கும் புரிந்தது.
“அப்பா இப்போ இருக்கிற நிலமையில இதைப் பத்தி எல்லாம் என்னால யோசிக்க முடியலை தாத்தா.”
“அபி, பிரச்சினை யார் வீட்டுல இல்லை சொல்லு? பிரச்சினை தீந்தாத்தான் வாழ்க்கைன்னா இங்க எவனும் வாழ முடியாது.” தாத்தாவின் இந்தத் திடீர்த் தாக்குதலை அபி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது சொல்லி இந்தப் பேச்சை திசை திருப்பவே முயன்றான்.
“இப்ப தான் எக்ஸ்போர்ட் பிஸினஸை ஆரம்பிச்சிருக்கேன் தாத்தா. இப்ப போய்…”
“இது தான் அபி, உன்னோட இந்த எண்ணம் தான் உன்னை எந்தப் பக்கமும் நகர விடாமத் தடுக்குது. புதுசா பிஸினஸ் ஆரம்பிச்சா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு யாரு சொன்னா?” தாத்தாவின் கிடு கிடுப் பிடியில் வசமாக மாட்டிக் கொண்டான். இத்தனை நாளும் எதுவும் சொல்லாமல் இருந்த தாத்தா இப்போது பேசுகிறார் என்றால், அதன் முழுக் காரணமும் அந்தப் பத்திரிகை விஷயம் என்பதை அபியால் புரிந்து கொள்ள முடிந்தது. தாடை எலும்புகள் இறுக, கோபத்தை அடக்கிக் கொண்டான்.
“அபிக்கண்ணா, தாத்தா சொல்லுறதையும் கொஞ்சம் கேளேன்பா.”
“கேக்கக் கூடாதுன்னு இல்லை பாட்டி. பிஸினஸ்ஸுன்னு வர்றப்போ இல்லாத பயம், வாழ்க்கைன்னு வர்றப்போ வருதே பாட்டி. அதுதான் ரொம்ப யோசிக்குறேன்.” தன்மையாகவே தன்னிலையை பாட்டிக்கு விளக்கினான்.
“இதுல யோசிக்க ஒன்னும் இல்லைடா கண்ணா. உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு. இல்லையா தெரிஞ்ச பொண்ணுங்களைப் பாப்போம். அதுல ஒன்னை செலக்ட் பண்ணு.”
“முன்னைப் பின்னே தெரியாதவங்கன்னா… எப்பிடிப் பாட்டி.”
“சரி… அது உனக்குக் கஷ்டமா இருந்தா பொண்ணோட கொஞ்ச நாள் பேசு, பழகு. இப்போதான் இதெல்லாம் சகஜமாப் போச்சே.” இலகுவாக வழி சொன்னார் அந்தப் பழங்காலப் பெண்மணி.
“அதெல்லாம் இப்போ ரொம்பவே சாதாரணமா ஆகிப் போச்சு அபி. நம்மை வீட்டுப் பொடுசே டீச்சரை பெயர் சொல்லிக் கூப்பிடுது.” சொன்ன பாட்டியைக் குழப்பமாகப் பார்த்தான் அபிமன்யு. ‘டீச்சர்‘ என்று சொன்னவுடன் கண் சிமிட்டும் நேரத்திற்குள்ளாக ஒரு முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. சிந்தனைகளின் போக்கில் கொஞ்சம் கலவரம் அடைந்து போனான். அவனையும் மீறி சட்டென்று வாயில் வார்த்தைகள் வந்தது.
“உங்க இஷ்டம் போல பண்ணுங்க பாட்டி.” அவன் பதிலில் அங்கிருந்த அத்தனை பேரின் முகத்திலும் பல்ப் எரிந்தது.
“அபி நிஜமாத்தான் சொல்லுறியாப்பா?”
“ம்…”
“அப்போ பொண்ணு பாக்க ஆரம்பிக்கட்டுமா?”
“சரி பாட்டி.” சொன்ன பேரனை திருஷ்டி கழித்தார் அன்னலக்ஷ்மி. அதன் பிறகு எதுவுமே பேசாமல் உண்டு முடித்த பேரனை கண்டுகொள்ளவில்லை தாத்தா. அவன் முகத்தில் இருந்த குழப்பம் அவருக்கு கவலையைக் கொடுத்தாலும், இப்படியே விட்டால் இவனைப் பிடிக்க முடியாதென்று மௌனமாக இருந்து விட்டார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லோரும் கலைந்து போக, தோட்டத்தில் போய் அமர்ந்து கொண்டான் அபிமன்யு. அங்கிருந்த இரும்புக் கதிரை ஒன்றில் உட்கார்ந்தவன், இன்னொன்றில் காலை நீட்டிப் போட்டு வானம் பார்த்து அமர்ந்து கொண்டான்.
“ரஞ்சனி, அபி பொண்ணு பாக்க சம்மதிச்சிட்டான் தெரியுமா?” அம்மாவின் குதூகலக் குரல் சற்றுத் தள்ளிக் கேட்டது. புன்னகைத்துக் கொண்டான். இருந்தாலும் மனதின் மூலையில் ஏதோ ஒரு குழப்பம் தோன்றியது. தான் செய்வது சரியா, தவறா என்று உள்ளுக்குள் ஒரு பட்டி மன்றமே நடந்தது. கண்களை மூடிக்கொண்டான்.
மூடிய கண்களுக்குள் அந்தப் பெண்ணின் முகமே வந்து போனது. தன் முகத்தை குழப்பம் நிறைந்த கண்களோடு பார்த்த அவள் முகமும், தான் சொன்ன விஷயத்தில் தெளிவடைந்த அவள் முகமும் என மாறி மாறி விளையாட்டுக் காட்டியது.
இந்தப் பெண் எதற்காக தன்னை இப்போது தொல்லை பண்ணுகிறாள் என்று அவனுக்கு விளங்கவில்லை. தன் எதிர்பார்ப்புகளை அவள் பூர்த்தி செய்வாளா என்றும் அவனுக்குப் பிடிபடவில்லை. நாம் போடும் கணக்குகளை எல்லாம் தாண்டி காலத்தின் கணக்கென்று ஒன்று உண்டு என்பதை அபி அப்போது புரிந்து கொள்ளவில்லை.
தான் எதற்காக அந்தப் பெண்ணுக்கு கேட்கும் வகையில் அப்படிப் பேசினோம் என்று இப்போது நினைத்த போது அபிக்கு லேசாகத் தலை வலித்தது. எதையும் யோசிக்கும் தைரியம் இல்லாமல் மட மடவென தனது ரூமிற்குள் சென்றவன், கம்பியூட்டரின் முன் அமர்ந்து கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக கணக்கு வழக்கில் கரைந்தும் போனான்.
—————————————————————
ஒரு வாரம் ஓடியே போயிருந்தது. மித்ரனுக்கு தனக்குள் ஏதோ ஒன்று குறைந்தாற் போல ஒரு எண்ணம். பப்பிற்கும் அடிக்கடி போய்ப் பார்த்தான். நண்பர்கள் எல்லோரும் வழமையைப் போல் கலகலப்பாக இருந்த போதிலும், இவனால் எங்கேயும் ஒட்டமுடியவில்லை.
வீட்டிலும் இவன் அமைதியைப் பார்த்து விட்டு, ‘ஏதாவது ப்ராப்ளமா?’ என்று எல்லோரும் கேட்டார்கள். எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான்.
“ஏன் டல்லா இருக்கே மித்ரா? பிஸினஸ்ல ஏதாவது ப்ராப்ளமா?” கேட்ட அப்பாவையும் சிரித்தே சமாளித்தான். தனக்கே என்னவென்று புரியாத போது, மற்றவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல இருந்தது நேற்றைய ஸோனாவின் வரவு. ஸோனாவை இரண்டு வருடங்களாக மித்ரனுக்குத் தெரியும். பப்பில் தான் அறிமுகம் ஆகியிருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு அன்னியோன்யம் இருவருக்கும் இடையில் இருந்தது.
மித்ரனின் தேவைகள் அவளுக்கு அத்துப்படி. அவன் சொல்லாமலேயே அவன் தேவைகள் அவளுக்குப் புரியும். வாழ்க்கையின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் படாத காட்டுப் பறவை. அதன் இப்போதைய வேடந்தாங்கல், மித்ரன்.
அபியிடம், மித்ரன் பகைமை பாராட்ட நினைத்த போது கூட, எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவனுக்கு உதவ முன்வந்தாள். சன்மானம் கொடுத்தது மித்ரனின் பெருந்தன்மையே தவிர, அவள் எதிர்பார்ப்பு அதுவல்ல. பணப் பரிமாற்றம் இருந்திருக்கா விட்டாலும் மித்ரனுக்காக அவள் அதைச் செய்துதான் இருப்பாள். மித்ரனுக்காக எந்த எல்லைக்கும் அவள் போவாள். அது அவனுக்குமே நன்றாகத் தெரியும்.
நேற்று ரைஸ் மில்லுக்கு செல்லும் நாளென்பதால், அங்கே போயிருந்தான் மித்ரன். கணக்கு வழக்குகளை கதிருடன் சேர்ந்து சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஸோனா. இவளைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று வெளியேறினான் கதிர். கதிருக்கு எப்போதுமே அவளைப் பிடிக்காது.
ஓர் உரிமையோடு எதிரே அமர்ந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தான் மித்ரன். அந்தப் புன்னகையில் அத்தனை உயிரோட்டம் இருந்ததாகத் தெரியவில்லை அவள் கண்களுக்கு.
“என்னாச்சு மித்ரன்? வாட் இஸ் ஈட்டிங் யூ?” சட்டென்று அவள் கேட்கவும் கொஞ்சம் திணறிப் போனான்.
“நத்திங் பேப்.” ஸ்டைலாக மறுத்தான்.
“ம்ஹூம், நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் வர்றேன். சம்திங் மிஸ்ஸிங். எனிதிங் பர்சனல்?”
“ம்ஹூம்…” தலையை ஆட்டிவிட்டு, உதட்டைப் பிதுக்கினான்.
“வெளியே போகலாமா மித்? ஜஸ்ட் ஒரு லாங் ட்ரைவ்?” அவனைப் பழையபடி மாற்ற, தன்னாலான முயற்சிகளைச் செய்தாள் பெண்.
“இல்லை டார்லிங், நிறைய வேலை இருக்கு. இப்போதைக்கு என்னால முடியாது.” சொல்லிவிட்டு ஜன்னலோரம் போய் நின்று கொண்டான். பார்வை அந்தச் சூனியத்தை வெறித்தது.
ஸோனாவைத் தான் தவிர்ப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் அவள் அருகாமை என்பது அவன் விருப்பத்திற்குரிய விஷயம். எதுவோ தன்னிடம் மாறுபடுவதை அவனால் உணர முடிந்தது. ஆனால் அது என்னவென்று அவனுக்கே புரியவில்லை.
தன்னைப் பின்னோடு அணைத்த இரு கரங்களின் ஸ்பரிசத்தில் தன்னிலைக்கு வந்தான் மித்ரன். அவனைப் பொறுத்தவரை இதுபோன்ற அணைப்புகள் எப்போதும் நடக்கும் சாதாரண விஷயம்தான். ஆனால் இன்று ஏனோ அது அத்தனை விரும்பத்தக்கதாக இருக்கவில்லை.
தன்முதுகோடு சேர்ந்திருந்த அந்தப் பெண்ணை, மெதுவாக விலக்கி தன் முன்னே கொண்டுவந்தான் மித்ரன்.
எப்போதும் இயல்பாகத் தோன்றும் ஸோனாவின் முகத்தில் அன்று ஒரு செயற்கைத் தனம் இருப்பதாகத் தோன்றியது. அந்தக் கண்களில் அவன் எதிர்பார்த்த ஒரு நளினம் இருக்கவில்லை. தனக்கு அருகாமையில் தெரிந்த அந்த முகம் மெல்ல மெல்ல மறைந்து, ஒரு வாரத்திற்கு முன் குழந்தைகளோடு குழந்தையாக மாறிப்போன ஒரு முகம் தெரிந்தது அவனுக்கு.
கண்களை அழுந்தத் தேய்த்துக் கொண்டான். அவன் எண்ணங்களின் போக்கு அவனுக்கே அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. தலையை ஒரு முறை உலுக்கிக் கொண்டான். அவனின் அத்தனை செய்கைகளையும் ஒரு ஆச்சரியத்தோடு பார்த்திருந்தாள் ஸோனா.
“ஸோன், என்னைக் கொஞ்சம் தனியா விடுறியா? கொஞ்சம் டென்ஷன்ல இருக்கேன், ப்ளீஸ்?” அவன் சொல்லவும் அவளுக்கு என்ன புரிந்ததோ,
“டோன்ட் வொர்ரி மித், ஐ கான் அண்டஸ்ட்டான்ட்.” அவன் தோள்களை லேசாக வருடியவள், அந்த அறையை விட்டு வெளியேறிப் போனாள்.
கதிருக்கு ஆச்சரியம் பிடிபடவில்லை. இந்தப் பெண் வந்தாலே வேலையைப் பாதியில் விட்டு விட்டு, உல்லாசமாகக் கிளம்பிப் போய்விடும் மித்ரனையே பார்த்துப் பழகி இருந்தவன், இன்றைய நிகழ்வை நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டுப் போனான்.
நேற்று இரவு முழுவதும் மித்ரன் தூங்கவில்லை. அந்தப் பெண்ணே மூடிய கண்களுக்குள் வந்து தொல்லை பண்ணிக் கொண்டிருந்தாள். தனக்குள் இதுபோல உணர்வுகள் எல்லாம் வருமென்று என்றைக்குமே அவன் நினைத்ததில்லை. அப்படியே வந்தாலும், தன் வாழ்க்கை முறைக்கு இதுபோன்ற மிடில் க்ளாஸ் பெண் ஒருக்காலுமே சரிப்பட்டு வரமாட்டாள்.
இரவு முழுவதும் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கிவிட்டு, காலையிலேயே புறப்பட்டு வந்துவிட்டான். இன்று பிஸ்கட் ஃபாக்டரியை பார்வையிடும் நாள். ‘கடந்த வாரம் இதே போலொரு நாளில்தான் அவளை இங்கே பார்த்தோம்‘, என்ற எண்ணம் சொல்லாமல் கொள்ளாமல் மித்ரனுக்குள் வந்தமர்ந்து கொண்டது.
வழமை போல வேலைக்கு வந்த கதிர் மலைத்துப் போனான். தனக்கு முன்பே வந்து உட்கார்ந்திருக்கும் முதலாளியை வினோதமாகப் பார்த்தான். அந்தப் பார்வை மித்ரனுக்கு சிரிப்பையே வரவழைத்தது.
“கதிர், லாஸ்ட் வீக் ஒரு நர்சரி ஸ்கூல் நம்ம ஃபாக்டரிக்கு ஒரு ட்ரிப் வந்தாங்கல்லை?” அந்தக் கேள்வியில் கதிரின் பார்வை கூர்மை அடைந்தது. ஆனால் அதை மித்ரன் கவனிக்கவில்லை.
“எனக்கு அந்த ஸ்கூலோட டீடெய்ல்ஸ் வேணும்.” எந்தத் தங்கு தடங்கலும் இன்றி நேரடியாக வந்தது கேள்வி.
“எதுக்கு சார்?” சட்டென்று வந்தது கதிரின் எதிர்க் கேள்வி. அவன் கேட்ட பிறகே அந்தக் குரலின் பேதத்தை உணர்ந்தவன், அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“வாட்?” காட்டமாக வந்தது மித்ரனின் குரல்.
“கம் அகெய்ன்.”
“வேணாம் சார், அது உங்களுக்கு சரிப்பட்டு வராது. விட்ருங்க.” எந்த சம்பாஷனையும் இல்லாமல், மித்ரனின் மனதை அத்தனை துல்லியமாக கணக்கிட்டான் கதிர்.
“நான் என்ன கேட்டேன்னு உனக்குப் புரிஞ்சுதா கதிர்? நீ பாட்டுக்கு என்னென்னவோ சொல்லுறே?”
“நீங்க என்ன கேட்டீங்கன்னும் எனக்குப் புரியுது, உங்க மனசுல என்ன ஓடுதுன்னும் எனக்குப் புரியுது சார்.” கதிரின் பதிலில் மலைத்துப் போனான் மித்ரன். இதழ்களில் மெல்லிய புன்னகை ஒன்று வந்து உட்கார்ந்து கொண்டது.
“பெயர் கீதாஞ்சலி, அம்மா அப்பா ரெண்டு பேரும் இன்டர்னாஷனல் ஸ்கூல் டீச்சர்ஸ், ஒரு தம்பி இருக்கான். என்ஜினியரிங், ஃபைனல் இயர். சொந்த வீடு இருக்கு, அப்பர் மிடில் க்ளாஸ் லைஃப்.” அடுக்கிக் கொண்டு கதிர் போக, பேப்பர் வெயிட்டை சுழட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தான் மித்ரன். முகத்தில் ஒரு தீவிர பாவம் தெரிந்தது.
“என்னோட மனசு புரிஞ்சும் எதுக்கு சட்டுன்னு வேணாம்னு சொன்ன கதிர்?” கண்கள் பேப்பர் வெயிட்டிலேயே இருக்க, கேள்வி மட்டும் கதிரை நோக்கி வந்தது.
“மிடில் க்ளாஸ் பொண்ணு சார். வாழ்க்கையை ஒரு கொள்கையோட வாழுற ரகம். உங்களுக்கு அது சரிப்பட்டு வராது.” எந்தப் பயமும் இல்லாமல் வந்தது பதில்.
“நீ உன்னோட முதலாளி கிட்ட பேசிக்கிட்டு இருக்கே கதிர்.” சன்னச் சிரிப்புடன், எச்சரிக்கையாக வந்தது மித்ரனின் குரல். அதற்கெல்லாம் அசருபவனாகத் தெரியவில்லை அவன்.
“என்னோட முதலாளியும் ஒரு மனுஷன் தானே சார். எடுத்துச் சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவார்.”
“ஆஹா..! எதைப் புரிஞ்சுக்கனும் கதிர்?”
“மேல்தட்டு வாழ்க்கை வேறே, மிடில் க்ளாஸ் வாழ்க்கை வேறே சார். உங்களுக்கு இது சாதாரண விஷயம், ஆனா அந்தக் குடும்பத்துக்கு இது பெரிய விஷயம். ஒரு குடும்பத்தை அழிச்ச பாவம் உங்களுக்கு வேண்டாம் சார்.” அவன் வார்த்தைகளில் புருவங்கள் நெளிய உறுத்துப் பார்த்தான் மித்ரன்.
“கடந்த ஒரு வருஷமாத்தான் உங்களோட நான் இருக்கேன் சார். இருந்தாலும், உங்க செயற்பாடுகள் அத்தனையும் எனக்கு அத்துப்படி. நீங்க சொல்லுற வேலையை செஞ்சுட்டு, பாக்கெட்டை நிரப்புற ஜென்மம் நான் கிடையாது.” அவன் பேசுவதை ஒரு புன்னகையுடன், சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தான் மித்ரன்.
“என் முலாளியை நோக்கிப் பாயுற எந்த ஆயுதமும் என்னைத் தாண்டித்தான் அவர் கிட்டப் போகும். அதே மாதிரி என் முதலாளியால யாராவது காயப்பட்டாலும் அதுவும் என்னைத் தாண்டித் தான் போகும்.” கதிரின் குரலில் ஒரு வலி இருந்ததோ?
“ஹா… ஹா…” கதிரின் பேச்சில் வாய்விட்டுச் சிரித்தான் மித்ரன்.
“யோவ்! எங்கப்பாக்கு ஒரு ஃபோன் காலைப் போடுய்யா. மனுஷன் எங்கம்மாவைத் தவிர வேற யார் கூடவாவது குடும்பம் நடத்தியிருக்காரான்னு கேப்போம். பயபுள்ள நம்ம கூடப் பொறந்தது மாதிரியே பேசுதே!” முகம் மலர்ந்து சிரிக்கும் மித்ரனை ஒரு தினுசாகப் பார்த்தான் கதிர்.
“அதுக்குச் சான்ஸே இல்லை சார்.”
“அப்போ யாருப்பா நீ? உனக்குக் கொஞ்சமாவது பயம், அச்சம் ஏதாவது இருந்தா, சம்பளம் குடுக்கிறவன் கிட்டயே இப்பிடிப் பேசுவயா?” கேள்வி கூராக இருந்தாலும், மித்ரனின் முகத்திலும், குரலிலும் கேலி குறையவில்லை. கதிரை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“சொல்லிக்கிற மாதிரி பெருசா ஒன்னுமில்லை சார். அனாதை, அம்மா, அப்பா இறந்து போய்ட்டாங்க. ஒரே ஒரு தங்கை, ஹாஸ்டல்ல தங்கி படிக்குது.” சொன்னவனின் குரலில் என்ன இருந்ததோ தெரியவில்லை. ஆனால் அது மித்ரனைப் பாதித்தது.
“சீ… என்ன பேச்சுப் பேசுறே, அனாதை அது இதுன்னு. நாங்கல்லாம் இருக்கோம்பா உனக்கு.” அந்தப் பரிவில் லேசாகச் சிரித்தான் கதிர். யாரிடமும் தான் காட்டாத இந்தப் பரிவை தன்னிடம் சம்பளம் வாங்கும் ஒருத்தனிடம் காட்டுவதை மித்ரனும் உணர்ந்து கொள்ளவில்லை.
“தங்கையை எதுக்கு ஹாஸ்டல்ல விடனும்? இத்தனை ஃபீல் பண்ணுறவன் கூடவே வெச்சுக்க வேண்டியதுதானே?”
“என் வேலை எப்பிடின்னு உங்களுக்குத் தெரியாதது இல்லை சார். வயசுப் பொண்ணை அப்பிடியெல்லாம் நினைச்சா மாதிரி வீட்டுல விட்டுட்டு வர முடியாது சார்.”
“ஓ…!”
“யாரு என்னன்னு இதுவரைக்கும் எதுவும் தெரியாம எப்பிடி சார் என்னை நம்பி இத்தனையையயும் ஒப்படைச்சு இருக்கீங்க?” கேட்டவனைப் பார்த்துப் புன்னகைத்தான் மித்ரன்.
“ஏன்னா நீ என் தாத்தாவோட சிபாரிசு கதிர். அவர் கேட்டு மறுக்க எங்கிட்ட எதுவுமே இல்லை.” சொல்லியவனை ஆச்சரியமாகப் பார்த்தான் கதிர்.
“ஆனாலும், நீ இவ்வளவு பேசியும், உம்மேல துளி கூட ஆத்திரம் வரலை பாரு! அங்கதான் நீ நிக்குற.” சொல்லிவிட்டு மித்ரன் சிரிக்க, கதிரும் சேர்ந்து கொண்டான்.
“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.” சிரிப்போடு சொல்லிவிட்டு தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான் மித்ரன்.
“எனக்கு அந்தப் பொண்ணைப் பத்தி எல்லாம் தெரியனும் கதிர்.”
“சார்?”
“சொன்னதை செய் கதிர்.” அந்தக் குரலை மீறவில்லை கதிர்.
“ம்…” அதற்கு மேல் எதுவும் பேசாமல், மௌனமாகத் தனக்குத் தெரிந்த தகவல்களை டைப் பண்ணி ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து மித்ரனின் டேபிளில் வைத்தான். அவன் வேகத்தில் சிரித்த மித்ரன்,
“பாரதிக்கு ‘கண்ணன் என் சேவகன்‘, மித்ரனுக்கு ‘கதிர் என் சேவகன்‘.” என்றான். அவன் கண்களில் முதலாளி என்ற பாவத்தையும் தாண்டி ஒரு ஸ்நேகம் தெரிந்தது. கதிர் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.