MM6
MM6
மயங்காதே மனமே 6
தன் மனநிலை குறித்து தானே ஆச்சரியப்பட்டுக் கொண்டான் மித்ரன். எப்போதும் இப்படியெல்லாம் அவன் யார் பின்னோடும் அலைந்தது கிடையாது. இத்தனை நாளும் தன்னை நோக்கியே மற்றவர்களை ஈர்த்துக் கொண்டிருந்தவனுக்கு, முதல் முறையாக தான் ஈர்க்கப்படுவது சுகமாக இருந்தது. அந்த உணர்வை மிகவும் ரசித்தான் மித்ரன்.
எல்லாவற்றிலும் ஒரு அலட்சிய பாவம் கொண்டவனை, முதல் முறையாக நிதானிக்கச் செய்திருந்தாள் அந்தப் பெண். காட்டுப் பறவைகளோடு சல்லாபித்தவனுக்கு இந்த வீட்டுப் புறா ஏனோ வித்தியாசமாகத் தெரிந்தது.
ஒற்றைப் பார்வையில் ஸோனாவையே ஓரங்கட்டிய அந்தப் பெண்ணை அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. இந்த ஒரு வார காலமாகத் தன்னை அணுகிய யாரையும் அவன் அணுகவில்லை. அதுவே அவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். காலங்காலமாக அவன் பாட்டன் முப்பாட்டன் ரத்தத்தில் ஓடும் நெறிமுறை அதுவென்று, பாவம் அந்தக் காளைக்குப் புரியவில்லை.
மேல்தட்டு வர்க்கத்து வாரிசுகள் எல்லாம் அந்த நர்சரிக்குப் போவதால் மிஸஸ். ஜான்ஸனை இலகுவாக அவனால் அணுக முடிந்தது.
அந்தப் பெண்மணியின் பலமும், பலவீனமும் அந்த நர்சரிதான் என்பதைக் கண்டு பிடித்தவன், மிக இலேசாக தன் நண்பர்களை வைத்து அவரை தன் வட்டத்திற்குள் கொண்டு வந்திருந்தான். வேறு எதற்கும் அவர் வளைந்து கொடுக்க மாட்டார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அவர் பலவீனத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். கீதாஞ்சலியை அணுக இலகுவாக வழி கிடைத்தது.
‘கீதாஞ்சலி‘… அடேங்கப்பா! பெயரே அவனை மயக்கியது. போதாததற்கு அந்தக் கண்கள். எங்கோ சுழலுக்குள் அவனை இழுப்பது போல் இருந்தது. அத்தனை தூரத்தில் பார்த்ததற்கே இப்படியென்றால்… அருகமர்ந்து அந்தக் கண்களை அணு அணுவாக ரசித்தால் எப்படி இருக்கும்? பப்புக்குப் போகாமலேயே போதை ஏறியது மித்ரனுக்கு.
இன்று காலையில் ரெடியாகும் போது, வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்காக தான் அக்கறையெடுத்து உடுத்திக் கொள்வதை நினைத்துச் சிரித்துக் கொண்டான். ஆனாலும், தான் நினைப்பதைப் போல அத்தனை சுலபத்தில் அந்தப் பெண்ணை தன் பக்கம் சாய்க்க முடியாது என்பதுவும் அவனுக்குப் புரிந்தது. கதிர் சொன்ன மிடில் கிளாஸ் கோட்பாடுகள் அவளிடம் நிறையவே இருக்கும் என்றுதான் தோன்றியது.
அந்தக் காலைப்பொழுது முழுவதும் கொஞ்சம் படபடப்பாகவே உணர்ந்தான். ஏதோ விடலைப் பையனைப் போல தான் நடந்து கொள்வது சிரிப்பாக இருந்தாலும், உணர்ச்சிக் குவியலாகத் தான் அமர்ந்திருந்தான். எத்தனை பெரிய வியாபார ஒப்பந்தத்திற்கும் தான் இத்தனை தூரம் பதட்டப்பட்டதில்லை என அவன் உள்மனது இடித்துக் கூறியது.
சரியாகப் பத்தடிக்க பத்து நிமிடங்கள் இருக்க, உள்ளே நுழைந்த அந்த பைக்கைப் பார்த்த போது ‘ஹூர்ரே‘ என்று மனது சந்தோஷப்பட்டது. செக்யூரிட்டியிடம் சொல்லி அவர்களை விசிட்டரஸ் அறையில் உட்கார வைத்துவிட்டு கதிரை அழைத்திருந்தான்.
இந்த ஒரு வருட காலமாக அவன் நடவடிக்கைகள் அத்தனையும் கதிருக்குத் தெரியும். முதல்தடவையாக அவன் தலையீடு இல்லாமல் நடந்திருக்கும் இந்தக் காரியத்திற்கு அவனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று பார்க்க மித்ரனுக்கு அத்தனை ஆவலாக இருந்தது.
திடு திடுப்பென்று வந்து அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்த கதிர் இமைக்க மறந்து நின்றபோது, மித்ரனுக்கு எதையோ சாதித்த கர்வம் தோன்றியது. ஆனால் கதிரின் நிதானமும், அவன் பதிலும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவே வாய் விட்டுச் சிரித்தான்.
“கதிர், கூட வந்திருக்கிறது தம்பின்னு நினைக்கிறேன். அந்தப் பையன் அங்கேயே இருக்கட்டும். நீ பொண்ணை மட்டும் கூட்டிக்கிட்டு வா.” மித்ரனின் உத்தரவில் திடுக்கிட்டுப் போனான் கதிர்.
“சார்!”
“சொன்னதைச் செய் கதிர்.” தன்னை வில்லனைப் போல பார்க்கும் கதிரைப் பார்த்தபோது தோன்றிய புன்னகையை அடக்கிக் கொண்டவன் கட்டளையிட்டான். சற்று நேரத்திற்குள் கதிரோடு அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள்.
“குட் மார்னிங் சார்.” குரலோடு, கண்களும் சேர்ந்து சிரித்த போதும், அந்தப் பெண்ணிடம் ஒரு நிதானம் தெரிந்தது. முழுதாக அந்தக் கணத்தை அனுபவித்தான் மித்ரன்.
“குட் மார்னிங் மிஸ்.கீதாஞ்சலி.” அவன் கை காட்டவும், இருக்கையில் அமர்ந்து கொண்டாள். எந்தத் தயக்கமும் இல்லாமல், நேருக்கு நேராக அவன் கண்களைப் பார்த்து அந்தப் பெண் பேசத் தொடங்கிய போது, இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடியது மித்ரனுக்கு.
“முதல்ல நான் உங்களுக்கு நன்றி சொல்லனும் சார்.”
“எதுக்கு மேடம்?”
“ஒவ்வொரு தடவையும் ஸ்பான்ஸருக்காக நாங்க நேரம் செலவழிப்போம். இந்தத் தடவை அந்தக் கஷ்டத்தை நீங்க எங்களுக்கு தவிர்த்திருக்கீங்க சார்.” குரலில் உண்மையான நன்றி தெரிந்தது, ஏற்றுக் கொண்டான்.
“முழுக்க முழுக்க சேவை மனப்பான்மைன்னு சொல்ல முடியாதும்மா. கொஞ்சம் சுயநலமும் இருக்கு.” இந்தப் பதிலில் கதிரின் தலை சட்டென்று நிமிர்ந்தது. மித்ரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
“புரியலை சார்.”
“இல்லைம்மா, ‘அட்வர்டைசிங்‘ ஐ சொன்னேன்.”
“ஓ… இருந்தாலும் எங்களைப் பொறுத்த வரை இது பெரிய விஷயம் சார்.” வாடாத புன்னகை முகத்திலிருந்தது. மித்திரன் கொஞ்சம் கொஞ்சமாக தன்வசமிழந்து கொண்டிருந்தான். ஒரு சில கணங்கள் அங்கு அமைதி நிலவியது.
“புரியுதும்மா. சொல்லுங்க, எங்கிட்ட இருந்து என்ன எதிர்பாக்கிறீங்க?” கேட்ட அவன் குரலில் கொஞ்சம் நிதானம் வந்திருந்தது. இது அவன் தொழில் சார்ந்த பேச்சுவார்த்தைக்குரிய குரல் என்று கதிருக்கு நன்றாகவே புரிந்தது. சிக்கிக் கொண்டிருந்த மூச்சை இப்போது சுலபமாக விட்டான் கதிர்.
அவன் கேட்டதும் தங்கள் திட்டம் முழுவதையும் அவனுக்கு சொல்லி முடித்தாள் கீதாஞ்சலி. அத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டவன், தனக்கென சில குறிப்புகளும் எடுத்துக் கொண்டான். சில கணங்கள் தனக்குள் திட்டங்களை வகுத்துக்கொண்டு, கதிருக்கு ஆணைகள் பிறந்தது.
“கதிர், ‘க்ரௌன் ப்ளாஸா‘ ஹோட்டல்ல மேடம்கிட்ட டேட் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு ஒரு ஹால் புக் பண்ணிடு. அதுக்கப்புறம், அவங்களுக்குத் தேவையான அமௌன்ட்டை செக்கா பே பண்ணிடு. அது என்னோட அக்கவுண்டுக்கு வரட்டும்.”
“ஓ கே சார்.”
“வேற ஏதாவது எதிர்பாக்குறீங்களா மேடம்?” அவன் கேள்வியில் அவள் தலை இடம் வலமாகத் தானாகவே அசைந்தது.
“சார்! ஒரு சின்ன ஹாலே போதுமே…” அவள் தயங்கவும், லேசாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் மித்ரன்.
“இல்லைம்மா, அது நல்லா இருக்காது. எல்லாமே பெரிய இடத்துப் பசங்க. சொல்லப் போனா என்னோட ஃப்ரெண்ட்ஸ் பசங்க கூட உங்க நர்சரியில இருக்காங்க. கொஞ்சம் க்ரான்டா பண்ணினா தப்பில்லை. ஆனா அங்கங்க எங்க பானர்ஸ் வைக்குறதுக்கு நீங்க அனுமதி கொடுக்கனும்.” அவன் சொன்ன விதத்தில் அவள் சிரித்தாள்.
“நீங்க எதுக்கு சார் பானர் வைக்கனும்? நாங்களே பின்னிடமாட்டோம்.” அந்தக் கலகலப்பான குரல் மித்ரனை என்னவோ பண்ணியது. நிமிர்ந்து கதிரைப் பார்த்தவன்,
“காஃபி சொல்லு கதிர். அப்பிடியே மேடமோட தம்பிக்கும் அனுப்பச் சொல்லு.” என்றான். சட்டென்று கதிர் வெளியேற, மறுக்க முடியாமல் அமைதியாக இருந்தாள் கீதாஞ்சலி.
“அப்புறம், சொல்லுங்க மேடம்? வீட்டுல அம்மா அப்பா தவிர வேற யாரெல்லாம் இருக்காங்க?” பேச்சை லாவகமாகத் திருப்பினான் மித்ரன்.
ஓர் ஐந்து நிமிடங்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். கண்களைப் பார்த்து, கோடு தாண்டாமல் பேசும் அந்த மனிதனிடம் தவறு இருப்பதாக கீதாஞ்சலிக்குத் தோன்றவில்லை. இருந்தாலும் அபியின் எச்சரிக்கையை மனதில் வைத்தே பேசிக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் காஃபி வரவும் அருந்தி முடித்தவள், மீண்டும் ஒரு முறை மித்ரனுக்கு நன்றி சொல்லிவிட்டு கதிரோடு வெளியே வந்தாள். அவனது காபினுக்கு அழைத்துச் சென்ற கதிர் அவள் சொன்ன தொகைக்கு செக்கை எழுதியவன், அதனோடு சேர்த்து தனது விசிட்டிங் கார்டையும் கொடுத்தான்.
“இங்க வரும்போது எனக்கு ஒரு கால் பண்ணிட்டு வாங்கம்மா.” அந்தக் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தவள்,
“சரி அண்ணா.” என்றாள். கதிரின் மனதிற்குள் ஆயிரம் நிம்மதிப் பூக்கள் பூத்தன. வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்பி வைத்தான். கண்ணியம் தவறாமல், ஒழுக்கத்தின் மொத்த உருவமாக இன்று காட்சியளித்த தன் முதலாளி அவனுக்குப் புதிது. தனது அறைக்குள் நுழைந்த கதிரைப் பார்த்துச் சிரித்தான் மித்ரன்.
“பாசமலரை வழியனுப்பி வைச்சாச்சா?” அந்தக் குரலில் இருந்த கேலி புரிந்தாலும் புன்னகைத்தான் கதிர்.
“உங்களுக்கும் ஒரு தங்கை இருந்திருந்தா நீங்களும் இப்பிடித்தான் நடந்துக்குவீங்க சார்.”
“ஆண்டவன் காத்தான். நல்ல காலம் நமக்கு எந்தப் பாசமலரும் இல்லைப்பா.” குறும்பாகச் சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்து போனான் மித்ரன்.
* * * * * * * * * * *
ரஞ்சனியின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. நடந்தவை எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தார் ஈஷ்வரன். மேற்கொண்டு என்ன பேசுவதென்று அவருக்கும் புரியவில்லை.
“நான் ரொம்பவே எதிர்பாத்தேங்க. நல்ல குடும்பம், பொண்ணு வேற டாக்டர். பாக்க அவ்வளவு லட்சணமா இருக்கா. இன்னும் என்ன வேணுமாம்?”
“புரியலையேம்மா. பிடிக்கலைன்னு சொல்லும்போது என்ன பண்ண முடியும் சொல்லு?”
“ஏற்கனவே வயசு ஏறிடுச்சு. இதுல இன்னும் தெரிஞ்சு தெரிஞ்சு இருந்தா எப்பிடிங்க?”
“அதுக்காக பிடிக்காம கல்யாணம் பண்ணிக்க முடியுமா ரஞ்சி?”
“யாரைத்தான் பிடிக்குமாம்? இனி ஆர்டர் குடுத்துத்தான் செய்யனும்.” அங்கலாய்த்த மனைவியை யோசனையாகப் பார்த்தார் ஈஷ்வரன். டீச்சரைப் பற்றி இவளிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது அவருக்கு. அபி உறுதியாக ஒரு முடிவிற்கு வராமல் யாரிடமும் இதைச் சொல்வது சரியில்லை தான். ஆனால் நல்ல பெண் ஒன்று கைவிட்டுப் போவதுவும் அவருக்கு அத்தனை பிரியமாக இருக்கவில்லை.
“என்ன? யோசனை பலமா இருக்கு?” மனைவியின் குரலில் கலைந்தார் ஈஷ்வரன்.
“இல்லை ரஞ்சி, இன்னைக்கு உங்கண்ணாவோட பேசிக்கிட்டு இருக்கும் போது மிஸ். கீதாஞ்சலியைப் பார்த்தேன். ரெண்டு பேருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கும் போல இருக்கு.”
“தருணை கூட்டிட்டு போகும் போது பாத்திருப்பாங்களா இருக்கும்.”
“ம்… எனக்கு அதுல ஆச்சரியம் என்னன்னா, பேப்பர் மாட்டர் வரை ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்கம்மா.” ஈஷ்வரன் பேச்சில் இப்போது ரஞ்சனி ஆச்சரியப்பட்டாள்.
“என்னங்க சொல்றீங்க?”
“ரெண்டு பேரோட கண்ணும், முகமும் தருணையும் தாண்டி வேற கதை பேசிச்சுதும்மா.”
“அப்பிடியா சொல்லுறீங்க? என்னால நம்ப முடியலிங்க?”
“எனக்கும் கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்துது.” அபியின் எண்ணங்களும், செய்கைகளும் எப்போதும் கொஞ்சம் தராதரம் பார்க்கும் என்று ஈஷ்வரனுக்கும் தெரியும்.
“கீதாஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணுதான்… ஆனா சொல்லிக்கிற மாதிரி பெரிய குடும்பம் கிடையாதுங்க. அண்ணா அதெல்லாம் கொஞ்சம் பாப்பானே…” மனைவியின் பேச்சில் கொஞ்சம் ஆத்திரப்பட்டார் ஈஷ்வரன்.
“எந்தக் காலத்துல இருக்கே ரஞ்சனி? இன்னமும் குடும்பம், பாரம்பரியம் எல்லாம் பாத்துக்கிட்டு. அப்பிடிப் பாக்குறவர் டாக்டர் பொண்ணுக்கு சம்மதம் சொல்ல வேண்டியது தானே?”
“அதுவும் சரிதான். அப்போ அந்தப் பொண்ணு ஓ கே ன்னு சொல்லுறீங்களா?”
“ஓ கே வா இல்லையான்னு உங்கண்ணா தான் சொல்லனும். ஆனா, டாக்டர் பொண்ணைப் பாத்தப்போ பேசாத உங்கண்ணன் கண்ணு, டீச்சரைப் பாத்தப்போ பேசிச்சு பாரு. அடேங்கப்பா! அங்க ஒரு காவியமே அரங்கேறிச்சுன்னா பாத்துக்கோயேன்.”
“ஹா… ஹா… நிஜமாத்தான் சொல்லுறீங்களா? என்னால நம்பவே முடியலை?”
“ஆமா, உங்கண்ணன் சின்னப் பாப்பா. இவளால நம்ப முடியலியாம். காலா காலத்துல கல்யாணத்தைப் பண்ணியிருந்தா இந்நேரத்துக்கு ரெண்டு…” வாய்க்குள் முணுமுணுத்தபடி நகர்ந்து போனார் ஈஷ்வரன். ரஞ்சனி சிரித்துக் கொண்டாலும், மனம் சிந்தனை செய்த படியே இருந்தது.
இது எத்தனை தூரம் சாத்தியப்படும்? தாத்தா, பாட்டி இதற்கு ஒத்துக் கொள்வார்களா? சாதாரண குடும்பங்களில் சம்பந்தம் பண்ணுவது என்பது இவர்களுக்குப் புதிது. தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது ஈஷ்வரன் குடும்பத்தை எத்தனை தூரம் ஆராய்ந்தார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அது போல தானே இப்போதும் யோசிப்பார்கள்? இவர்கள் எல்லோரின் எதிர்பார்ப்பையும் அந்தப் பெண் பூர்த்தி செய்வாளா? மனதில் எழுந்த கேள்வியோடு வேலைகளில் மூழ்கினாள் ரஞ்சனி.
* * * * * * * * * * * *
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள் கீதாஞ்சலி. உடம்பின் ஒவ்வொரு பாகமும் ஓய்விற்காக ஏங்கியது. காலையிலிருந்து ஓயாத ஓட்டம். ஆனால் செக்கைக் கொண்டு போய் கொடுத்த போது மிஸஸ். ஜான்ஸன் அவ்வளவு மகிழ்ந்து போனார். அதுவும் இம்முறை பெரிய ஸ்டார் ஹோட்டலில் அவர்களது ஃபங்ஷன் நடக்க இருப்பதைக் கேள்விப்பட்ட போது சக ஆசிரியர்களும் அத்தனை சந்தோஷப் பட்டார்கள்.
அவளுக்குமே பெரிதாக ஏதோ சாதித்த உணர்வு. இந்த வருடம் இன்னும் கொஞ்சம் அதிக கவனம் எடுத்து குழந்தைகளை தயார் பண்ண வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அபியின் எச்சரிக்கையை மனதில் ஏற்றிக் கொண்டு போனதாலோ என்னவோ, கொஞ்சம் படபடப்பாகவே உணர்ந்தாள் கீதாஞ்சலி. ஆனால் அதற்கு அவசியமே இல்லை எனும் வகையில் நடந்து கொண்ட மித்ரன், அவளுக்கு ஆச்சரியம் தான். மற்றவர்களுக்கு அவன் எப்படியோ? ஆனால் அவளைப் பொறுத்தவரை அவன் நடவடிக்கைகள் அனைத்தும் கண்ணியமாகத் தான் இருந்தது.
வேலை செய்ய ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறாள். அதனால் ஓரளவிற்கு மனிதர்களை எடை போடத் தெரிந்திருந்தது. யாரை, எங்கே நிறுத்த வேண்டும் என்ற தெளிவு வந்திருந்தது.
போதாததற்கு அந்த கதிர் வேறு. ஏனோ அவரைப் பார்க்கும் போது ஒரு சகோதர பாசம் தோன்றவே அவளையும் அறியாமல் அண்ணா என்று அழைத்திருந்தாள். அவன் கண்களில் தெரிந்த அந்த பாவம் அவளுக்குத் தன் அப்பாவை ஞாபகப் படுத்தியது. அறிவழகனும் அப்படித்தான். எங்கே குடும்பமாகப் போனாலும் அவர் பார்வை வட்டத்திற்குள் மனைவியையும், மகளையும் வைத்திருப்பார். அது அவரது அக்கறை. தன் வீட்டுப் பெண்டுகளை காக்க நினைக்கும் ஆண்மையின் கரிசனம்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல இருந்தது அபிமன்யுவின் செய்கை. கதிரிடம் விடை பெற்றுக் கொண்டு, அக்காவும், தம்பியும் எப்போதும் போல வள வளவென்று பேசிக்கொண்டே வந்தார்கள். பிஸ்கட் ஃபாக்டரியைத் தாண்டும் போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரை ஆதி காட்டவும் திரும்பிப் பார்த்தாள் கீதாஞ்சலி.
“அக்கா காரைப் பாத்தியா? சூப்பரா இல்லை? 2018 ரெஜிஸ்ட்ரேஷன்கா. புதுக் கார். சும்மா குதிரை மாதிரி இருக்கில்லை. ஹெட் லைட்டைப் பாருக்கா. சும்மா புலியோட கண்ணு மாதிரி இல்லை? வாங்கினா இப்பிடி வாங்கனும்க்கா.” தம்பியின் கார்ப் பைத்தியம் அவள் நன்கு அறிந்தது தான் என்பதால் சிரித்தபடியே அவன் சொன்ன காரை திரும்பிப் பார்த்தாள் கீதாஞ்சலி. வீட்டில் அப்பாவும், ஆதியும் காரிற்கு அடிமைகள். ஃபோமியுலா வன் அத்தனையையும் ஒன்று விடாமல் பார்ப்பவர்கள். ‘ஹாமில்டன்‘ இன் மெர்சிடிஸூக்கு உயிரைக் கேட்டாலும் கொடுப்பான் ஆதி.
முதலில் தம்பிக்காகத் திரும்பிப் பார்த்தவளுக்கு, இந்தக் கார் தனக்கு ஏற்கனவே பரிட்சயமானது என்பது ஒரு சில செக்கன்கள் தாண்டித்தான் உறைத்தது. ‘இது தருண் வீட்டுக் கார் இல்லை?’ மனதிற்குள் நினைத்தவள், நன்றாக ஊன்றிப் பார்த்தாள். கறுப்பு ‘டின்டட் க்ளாஸ்‘ ஆளை ஓரளவிற்கு மறைத்தாலும், அந்த உருவத்தை அவளால் இலகுவாக இனங்காண முடிந்தது.
கறுப்பு நிற கூலிங் கிளாஸ் முகத்தை இன்னும் கொஞ்சம் மறைத்திருந்தாலும், உள்ளே உட்கார்ந்திருந்தது அபிமன்யு தான். அதில் அவளுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
‘ஆனால் ஏன்?’ அந்தக் கேள்வியில் அவள் மண்டை குழம்பியது.
மித்ரனைப் பத்தி எச்சரித்தது மனிதாபிமானம். அதோடு நிறுத்தாமல் எதற்கு பின்னோடு வரவேண்டும். இவன் சொல்வதைப் பார்த்தால் அபிக்கும், மித்ரனுக்கும் ஏற்கனவே பகைமை உணர்வு இருப்பதைப் போல்தான் தோன்றியது கீதாஞ்சலிக்கு. இல்லாவிட்டால் பத்திரிகை ரேஞ்சிற்கு மித்ரன் போய் பழி தீர்த்துக் கொள்வானா? அவ்வளவு பகை இருக்கும் போது எதற்காக அவன் ஏரியாவிற்கு இவன் வரவேண்டும்? தனக்காகவா? அந்த நினைப்பே கீதாஞ்சலியை ஏதோ பண்ணியது.
கீதாஞ்சலி எப்போதுமே ப்ராக்டிக்கலான பெண். எது தனக்குப் பொருந்தும் என்பதில் அதிக கவனம் செலுத்துவாள். படிப்பிலும் அப்படித்தான். கூடப்படித்தவர்கள் அத்தனை பேரும் டாக்டர், என்ஜினியர் என்று கனவு கண்ட போதெல்லாம், தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றாள். தனக்கான பாதையை தெளிவாக வகுத்துக் கொண்டவள், அதன் பிறகு பின் வாங்கவில்லை. இன்று அவள் வாங்கும் சம்பளம் தன் தோழிகள் வாங்குவார்களா? என்பது அவளுக்குச் சந்தேகம்தான்.
ஆனால் இன்று, அவள் இத்தனை காலமும் வகுத்து வைத்திருந்த வாழ்க்கை முறையை இலகுவாக அசைத்துப் பார்த்தான் அபிமன்யு. பார்த்தாலே புரிந்தது பெரிய இடமென்று. தனக்கும், அவனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்த பின்னும், மனம் அடங்க மறுத்தது. இந்த ஆசைக்கு எதிர்காலம் இல்லையென்று புத்திக்குத் தெரிந்தாலும், மனம் அதை ஏற்க மறுத்தது.
கண்களை மூடினால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நிற்கும் நாய்க்குட்டியைப் போல, தோன்றும் அந்த பிம்பத்தை எதைக் கொண்டு அழிப்பது என்று அவளுக்கு விளங்கவில்லை. மனதிற்கும், புத்திக்குமான போட்டியில் மனமே வெற்றிபெற, தன் இயலாமையின் உச்சக் கட்டத்தில் கண்ணீர் வடித்தாள் பெண். அழுவது கூட ஒரு சுகமென்று அப்போதுதான் புரிந்தது அவளுக்கு.
சற்று நேரம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் வலி தீர அழுது முடித்தாள். மனம் ஒரு வசப்பட்டது. தன்னைத் தானே ஒழுங்கு படுத்திக் கொண்டாள். என்றைக்குமே நிறைவேறாத இந்த ஆசையை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டாள்.
தன் ஒருத்தியின் ஆசை, தன் ஒட்டுமொத்த குடும்பத்தையே தலைகீழாக புரட்டிப் போடும் என்று அளுக்குப் புரிந்தது. காலம் தனக்குச் சாதமாக வைத்திருக்கும் கோலத்தைப் புரிய சக்தியற்றவள், வலிகளோடே உறங்கிப் போனாள்.