MM8

MM8

மயங்காதே மனமே 8

இரவு நேரத்து அமைதியை அனுபவித்த படி அமைதியாக தோட்டத்தில் உட்கார்ந்திருந்தார் ஜெயந்தி. டின்னரை முடித்து விட்டு கணவன் மனைவி இரண்டு பேரும் இப்படி உட்காருவது வழக்கம். ராஜேந்திரன் இன்று ஏதோ பிஸினஸ் சம்பந்தமாக பேசவேண்டும் என்று சொன்னதால், மதுராந்தகன் வீட்டின் உள்ளே அவரோடு பேசிக் கொண்டிருந்தார்.

இரவின் குளுமையும், பக்கத்தில் படர்ந்திருந்த முல்லையின் வாசனையும், வானில் காய்ந்த நிலாவும், என அத்தனையும் ஜெயந்தியைக் கொள்ளை கொண்டன. நிறைவான அந்த நிமிடத்தில் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டார்

மதுராந்தகனைக் கைப்பிடித்த நாள் முதல், இன்று வரை அவருக்கு ஒரு நிறைவான வாழ்க்கையையே ஆண்டவன் கொடுத்திருக்கிறான். ஒற்றைப் பிள்ளையாக ராஜேந்திரன் நின்று போன போது கூட அவர் கவலைப்படவில்லை. மதுராந்தகனின் அன்பும், ஆதரவும் அவரை எதற்கும் ஏங்க வைக்கவில்லை.

மகனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டால், பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் தீர்ந்து போய்விடும் என்று தான் எண்ணியிருந்தார். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை.

சுலோச்சனாவையும் குறை சொல்ல முடியாது. நல்ல பெண்தான். என்றைக்கும் மாமியாரோடு சண்டை, சச்சரவுகள் என எதுவும் வைத்துக் கொள்ள மாட்டார். அதேபோல, பாசம், அக்கறை என்று எதையும் எதிர்பார்க்கவும் முடியாது

புருஷன், பிள்ளை என்று அக்கறையெடுத்து என்றைக்கும் அவர் எதுவும் செய்தது கிடையாது. அவர் உலகமே வேறு. கணிசமான அளவு டொனேஷன் கொடுத்து தன் பெயரை லேடீஸ் க்ளப்பில் நிலைநாட்ட அவருக்கு தன் கணவன் முக்கியம். ஸ்டைலாக அமெரிக்கா, லண்டன் என்று பறக்கும் மகன் அவருக்கு முக்கியம். அவ்வளவுதான். மற்றதையெல்லாம், எந்த வகையிலும் தனக்குத் தொந்தரவு கொடுக்காத, கேள்விகள் கேட்காத மாமனார் மாமியார் பார்த்துக் கொள்வார்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். என்ன, மித்ரனின் நிறை, குறைகளில் யாராவது, ஏதாவது தலையிட்டால் சட்டென்று ஒரு எதிர்ப்பு வரும். மனதில் தோன்றுவதை எந்தப் பூச்சும் இல்லாமல் நேரடியாகச் சொல்லி விடுவார்.

ஒரு பெருமூச்சொன்று கிளம்பியது ஜெயந்தியிடமிருந்து. மகன், மருமகள் வாழ்க்கைதான் ஒரு தினுசு என்றால், பேரன் அதற்கும் மேலாக இருந்தான். அவனைப் பற்றிக் கேள்விப்படும் செய்திகள், தாத்தா பாட்டிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தன.

இன்றைய இளம் சமுதாயம் எதை நோக்கிப் போகின்றதென்று ஜெயந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ புதிது புதிதாக நாகரிகங்கள். ஆண் பிள்ளைகள் தான் தறிகெட்டு அலைகின்றார்கள் என்றால், பெண் பிள்ளைகளும் அதற்குக் குறையாமல் இருப்பது, அந்தப் பழங்காலப் பெண்மணிக்கு ஆச்சரியமாக இருந்தது. தலைக்கு மேல் வளர்ந்து நிற்கும் பேரனை எங்கனம் திருத்துவதென்று அவர்களுக்குப் புரியவில்லை

ஒரு வயது எல்லை வரை தங்கள் கைக்குள் அடங்கி நின்ற பேரன், வியாபாரம், பணப்புழக்கம் என்று ஆரம்பித்த பிறகு முற்றாக மாறிப் போனான். புதிதாக முளைத்த நண்பர்கள், வெளிநாட்டுப் பயணங்கள், பெற்றோரின் கண்மூடித்தனமான சுதந்திரம் அவனை மாற்றப் போதுமானதாக இருந்ததன.

எல்லாம் கைமீறிப் போயிருந்தது. எதையும், யாரிடமும் தட்டிக் கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும், வீட்டிலிருக்கும் நிம்மதி பறிபோகும் என்பதால் இப்போதெல்லாம் கடவுளிடம் மட்டுமே முறையிட முடிந்தது

சிந்தனைகளின் வசமிருந்த ஜெயந்தியைக் கலைத்தான் மித்ரன். ஜெயந்தி அமர்ந்திருந்த பென்ச்சில் அவருக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன், அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். பேரனின் செய்கை புன்னகையை வரவழைக்க, அவன் தலைமுடியைக் கோதிக் கொடுத்தார் பாட்டி.

பாட்டி…”

என்னப்பா?”

நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” பேரனின் பேச்சில் ஆச்சரியப்பட்டாலும், அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தார் ஜெயந்தி. பாட்டியின் மௌனத்தில் கொஞ்சம் சங்கடப்பட்டவன், அவர் முகத்தை அண்ணார்ந்து பார்த்தான்.

என்ன பாட்டி? எதுவும் பேசமாட்டேங்கிறீங்க?”

பாட்டி என்னைக்கு உன்னை தப்பா நினைச்சிருக்கேன்? நீ சொல்ல வந்ததை சொல்லுப்பா.”

பாட்டிஉங்களை மாதிரியே ஒரு பொண்ணைப் பாத்தேன்.” மித்ரனின் பேச்சில் ஜெயந்தியின் முகம் கவலையைக் காட்டியது. சட்டென்று நிதானப் படுத்திக் கொண்டார்

அப்பிடியா! ஒரே மாதிரி ஏழு பேர் உலகத்துல இருப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன் மித்ரா. அப்பிடியா இருக்குமாக்கும்.”

ஐயையோ! அப்பிடி இல்லை பாட்டி. உங்களை மாதிரின்னாஎப்பிடி சொல்லுறது…?” மடியில் படுத்துக் கொண்டு, வானத்தை அண்ணாந்து பார்த்த படி அபிநயம் பிடித்த பேரன் ஜெயந்திக்கு புதுமையாகத் தெரிந்தான்.

உங்களை மாதிரின்னாஇந்தகுடும்பப் பெண்அப்பிடின்னு சொல்லுவாங்களே, அந்த கட்டகரி.” அவன் விளக்கத்தில் சிரிப்பு வந்தாலும், ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். இப்படியெல்லாம் சட்டென்று பேசுபவனல்ல. ஏதோ நடந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.

எங்க பாத்தே மித்ரா?”

நம்ம பிஸ்கட் ஃபாக்டரியில பாட்டி.”

அங்க வேலை பாக்குற பொண்ணா?”

இல்லையில்லை. அவங்க ஒரு நர்சரி டீச்சர் பாட்டி. பசங்களைக் கூட்டிக்கிட்டு நம்ம ஃபாக்டரிக்கு வந்திருந்தாங்க.” இத்தனை மரியாதையாக மித்ரன் பேசும் முதல் பெண் இவள்தான் என்று ஜெயந்தியின் மனம் குறித்துக் கொண்டது.

பாபாட்டிஎனக்குஅந்தப் பொண்ணைரொம்பப் பிடிச்சிருந்துது.” மென்னு, முழுங்கி ஒருவாறாக சொல்லி முடித்தான் மித்ரன்.

வேணாம் மித்ரா, விட்டுரு. அது உனக்கு சரிப்பட்டு வராது.” சட்டென்று சொன்னார் ஜெயந்தி. பேரனின் தலையைக் கோதிக் கொண்டிருந்த கைகள், வேலை நிறுத்தம் செய்திருந்தன.

ஏன் பாட்டி?” அவன் குரல் நலிந்திருந்தது. இதற்கு என்னெவென்று பதில் சொல்வது? கண்களை இறுக மூடி, ஆழ்ந்து சுவாசித்தார் ஜெயந்தி.

மித்ரா, நீ சின்னப் பையன் கிடையாது. உனக்கும் உலகம் தெரியும். பாட்டி இப்படியெல்லாம் பேசக் கூடாது தான். இருந்தாலும் ஒரு பொண்ணு விஷயத்துல நான் சுயநலமா நடந்துக்கக் கூடாது இல்லையா?” பாட்டியின் பீடிகையில் கொஞ்சம் தடுமாறினான் மித்ரன்.

நீங்க சொல்ல நினைக்கிறதை சொல்லுங்க பாட்டி.”

உனக்கு அந்தப் பொண்ணை பிடிச்சிருக்குங்கிறது நல்ல விஷயம்தான், இல்லேங்கலை. பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறயா?” பாட்டி கேட்கவும் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் பேரன்.

கல்யாணமா?” பேரனின் அளவுக்கு மீறிய ஆச்சரியத்தில் கசப்பாகப் புன்னகைத்தார் ஜெயந்தி.

பாட்டி மாதிரி பொண்ணுன்னா கல்யாணம் தான் பண்ணிக்கனும் மித்ரா. ஸோனா மாதிரிப் பொண்ணுன்னா நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவா.” சூனியத்தை வெறித்தபடி சொன்னார் ஜெயந்தி. பாட்டியின் பதிலில் இப்போது திடுக்கிட்டுப் போனான் பேரன்.

பாட்டி!” 

வீட்டுக்குள்ளேயே உக்காந்து இருக்கிற பாட்டிக்கு, ஸோனாவைப் பத்தி எப்பிடித் தெரியும்னு பாக்குறயா மித்ரா?” ஜெயந்தியின் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை தோன்றியது. அந்த முகத்தைப் பார்க்க தைரியம் இல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான் மித்ரன். பேரனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே அவனைத் திரும்பிப் பார்த்தார் ஜெயந்தி

அதனாலதான் சொல்லுறேன் மித்ரா, அந்தப் பொண்ணு உனக்கு வேணாம்.” நிதானமாகச் சொன்னார் ஜெயந்தி.

மித்ரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இந்தப் பேச்சை எடுத்த மாத்திரத்தில் கதிரும் இதுபோலவே சட்டென்று மறுத்தது ஞாபகம் வந்தது. இவர்களை எல்லாம் பொறுத்தவரை, மித்ரன் அந்தப் பெண்ணிற்கு லாயக்கில்லை என்று நினைப்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

தான் எங்கேயோ தவறியிருப்பது காலந் தாழ்ந்து அவனுக்குத் தட்டுப்பட்டது. அது எங்கே, எப்படி என்றெல்லாம் அவனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட, முயற்சிக்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அத்தோடு, கடந்து போனதை நினைத்து வருத்தப் படுவதால் எந்த லாபம் இருப்பதாகவும் அவனுக்குத் தோனவில்லை. எதிர்காலம் மட்டுமே அவன் இலக்காக இருந்தது. அதுவரை மௌனமாக இருந்தவன்,

வேணும் பாட்டி, எனக்கு அந்தப் பொண்ணு வேணும்.” என்றான். அவன் பதிலில் இப்போது பாட்டி ஆச்சரியப்பட்டுப் போனார். ஏதோ மிட்டாய் கேட்கும் சிறுபிள்ளை போல் இருந்தது அவன் செய்கை

மித்ரா, நான் என்ன சொல்ல வர்றேங்கிறதை புரிஞ்சுக்கோ.” மேலே ஏதோ பேசப்போன ஜெயந்தியை கை உயர்த்தித் தடுத்தான் மித்ரன்.

புரியுது பாட்டி, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நல்லாவே புரியுது.” சொன்ன பேரனின் தலையை வருடிக் கொடுத்தார் ஜெயந்தி.

விளையாட்டு இல்லை கண்ணா, ஒரு பொண்ணோட வாழ்க்கைப்பா.” பாட்டியின் குரலில் கவலை கொட்டிக் கிடந்தது.

ம்தெரியும் பாட்டி. அதுவும் மிடில் க்ளாஸ் பொண்ணு, இன்னும் கொஞ்சம் அதிகமாவே போராட வேண்டி இருக்கும்னும் தெரியும்.” அந்தப் பதிலில் ஒரு சில நொடிகள் மித்ரனை ஆழ்ந்து பார்த்தார் ஜெயந்தி.

மித்ரா, அந்தப் பொண்ணை நீ லவ் பண்றியா?” அந்தக் கேள்வியில் சற்று நிதானித்தான் மித்ரன்.

அது தெரியாது பாட்டி. அந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்குத் தெரியாது. ஆனா அந்தப் பொண்ணு இல்லைன்னா ஒன்னுமே இல்லைன்னு தோனுது. அந்தப் பொண்ணுக்கு ஒன்னுன்னா மனசு கிடந்து தவிக்குது. அந்தப் பொண்ணை யாராவது தப்பாப் பாத்தா, பேசினா அடிச்சு நொறுக்கனும் போல தோனுது. இது எல்லாம் தான்லவ்னா, யெஸ், லவ் ஹர் பாட்டி.” 

மித்ரா…!” தன் கண்களை நேருக்கு நேராக பார்த்த பேரனை அதிசயமாகப் பார்த்தார் ஜெயந்தி. அந்தக் கண்களில் பொய் இல்லை என்று நன்றாகப் புரிந்தது அவருக்கு.

இருந்தாலும் மனதுக்குள் ஒரு சஞ்சலம். லீலைகளின் மொத்த இருப்பிடமான தன் பேரனை, அந்தப் பெண் ஏற்றுக் கொள்வாளா? அவள் மனதில் என்ன இருக்கின்றது என்று தெரியாமல் இவன் பாட்டிற்கு ஆசை வளர்க்கிறானே!

ஆனால் அதை மித்ரனிடம் சொல்லும் தைரியம் ஜெயந்திக்கு இருக்கவில்லை. நிதானமாக பேரனைப் பார்த்தவர்

மித்ரா, உன் மனசு என்னன்னு உனக்கே சரியாத் தெரியாதப்போ அவசரப்படாதப்பா. இது உன்னோட வாழ்க்கை. நிதானமா யோசிச்சு முடிவெடுப்பா.”

ம்…”

ஒரு வாரம் பிஸினஸ் விஷயமா ஜப்பான் போகனும்னு சொன்ன இல்லையா? அது எப்போ?”

இந்த மன்த் என்ட்ல வரும் பாட்டி. ஏன் கேக்குறீங்க?”

அந்த ஒரு வாரமும் நல்லா யோசிச்சுப் பாரு மித்ரா. ஒரு பொருள் நம்ம எதுத்தாப்ல இருக்கும் போது, அது பின்னாடி நாம போறோம்னா சில சமயம் அது வெறும் கவர்ச்சியாக் கூட இருக்கும். அதே பொருள் நம்மை கண்ணை விட்டு மறைஞ்ச பிறகும் நம்மளை ஆட்டுவிக்குதுன்னா, அப்போ அது நமக்கு எவ்வளவு முக்கியம்னு நம்மால புரிஞ்சுக்க முடியும்.” சொன்ன பாட்டியை மலைத்துப் போய் பார்த்தான் மித்ரன்

சரி பாட்டி.” அவனை அறியாமலேயே சம்மதம் சொன்னான். இந்தக் கால தாமதம் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போவதை அவன் அறியவில்லை. மனைவியைத் தேடிக்கொண்டு வந்த மதுராந்தகன் அங்கு நடந்த பேச்சுவார்த்தையை கேட்டபடி மௌனமாக நின்றிருந்தார். முகம் யோசனையைக் காட்டினாலும், கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது.

                                            *     *     *     *     *     *     *     *     *     *     *

டின்னரை முடித்துவிட்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரஞ்சனியும், ஈஷ்வரனும் கூட தருணை அழைத்துக்கொண்டு போவதற்காக வந்தவர்கள், சீமா வற்புறுத்தவும் அங்கேயே தங்கிக் கொண்டார்கள்

நாராயணனின் உடல் நிலை இப்போது நன்றாகத் தேறியிருந்தது. பேரனோடு உட்கார்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தார். தாத்தா மிஸ் பண்ணிய அத்தனை நர்சரி நிகழ்வுகளையும், ஆதியோடு அந்தமாக சொல்லிக் கொண்டிருந்தான் பேரன்.

ரஞ்சி, புது ஃபோன் மாத்திருக்கிறதா சொன்னே. காட்டவே இல்லையே?” அண்ணனின் பேச்சில் தனது புது ஃபோன் பெருமையாக நீட்டினாள் ரஞ்சனி.

சூப்பரா இருக்கில்லை அண்ணா?” 

ம்அட்டகாசமா இருக்கு. ஃபிங்கர் ப்ரிண்ட் குடுத்திருக்கயா என்ன?” அண்ணனின் வில்லங்கம் புரியாமல் ஃபோனை வாங்கி அன்லாக் பண்ணிக் கொடுத்தாள் தங்கை. ஃபோனைப் பார்ப்பது போல் பாவனை பண்ணிக்கொண்டு, தனக்குத் தேவையான நம்பர் ஒன்றை, தனது ஃபோனுக்கு இடமாற்றிக் கொண்டான் அபிமன்யு.

அதேவேளை

பால்கனியில் நின்றபடி இருளை ரசித்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. வானில் நிலவு பால் போல பொழிந்து கொண்டிருந்தது. சிலுசிலுத்த மெல்லிய பூங்காற்று அவள் காதில் சொருகியிருந்த கூந்தல்க் கற்றையை கலைத்துவிட்டது.

கீழேயுள்ள அம்மா அப்பாவின் அறையிலிருந்து வந்த கண்ணதாசன் பாடல்கள் அந்தச் சூழ்நிலையை ரம்மியமாக்க, மெய்மறந்து நின்றிருந்தாள். அந்த மோன நிலையைக் கலைத்தது அவள் ஃபோன்

யாரோ புது நம்பராக இருந்தது. இந்நேரத்தில், அதுவும் புது நம்பராக இருக்கவும் எடுக்கத் தயங்கினாள் கீதாஞ்சலி. ஒரு முறை அடித்து ஓய்ந்த ஃபோன் சற்று இடைவெளி விட்டு மீண்டும் அவளை அழைத்தது

ஹலோ.” அதற்கு மேலும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றாள்.

அஞ்சலி.” 

“………”

அஞ்சலி.” அந்தக் குரல் அவள் உயிரின் ஆழம் வரை சென்றது.

அஞ்சலி, நான் அபி பேசுறேன். லைன்ல இருக்கீங்களா?”

சொல்லுங்க சார்.” தயங்கிய படி சொன்னாள் பெண்.

ஃப்ரீயா இருக்கீங்களா? பேச முடியுமா?”

ம்சும்மாதான் பால்கனியில நிக்குறேன், சொல்லுங்க சார்.”

இயற்கையை ரசிக்குறீங்களா? அப்போ நல்ல மூட்ல தான் இருக்கீங்க இல்லையா?”

“…….”

நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை.” மொட்டை மாடியில் நின்றபடி, வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு கேட்டான் அபிமன்யு. நிலா அழகாக இருந்தது.

சார்…!”

தருணை வைச்சுக்கிட்டு ரொம்ப நேரம் பேச முடியலை. அதனாலதான் கிளம்பி வந்துட்டேன். சொல்லுங்க, என்ன ஆச்சு?”

ஒன்னுமில்லை சார்.”

ஒன்னுமில்லாமத்தான் உங்க கண்ணு கலங்கிச்சா?”

நான் என்ன சொல்லனும்னு எதிர்பாக்குறீங்க சார்?”

முதல்ல அந்தசார் கட் பண்ணுறீங்களா? ப்ளீஸ், இரிட்டேட்டிங் இருக்கு.”

அது மரியாதையா இருக்காது சார்.” மனதை மறைத்து வந்தது பதில்.

அஞ்சலி, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நான் உங்களை விடப்போறது இல்லை. ஏதாவது சொல்லி இப்போவும் சமாளிக்க நினைச்சீங்கன்னா, காலைல நான் உங்க வீட்டுக்கே வருவேன்.” அவன் குரலில் இருந்த உறுதியில் கீதாஞ்சலியின் கண்கள் இப்போதும் கலங்கியது.

நிலா ரொம்ப அழகா இருக்கில்லை சார்?”

ம்…”

ஆனா, ரொம்பவே உயரத்துல இருக்கே சார்.” நிதானமாகச் சொன்னாள்.

…!”சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.

ரஞ்சனி உங்களைப் பத்திப் பேசும் போதெல்லாம், ரொம்ப பாராட்டிப் பேசுவாளே! ஆனா நீங்க என்னடான்னா நிலாவோட தூரத்தைப் பாத்து பயப்பிடுறீங்க?”

எவ்வளவு பலசாலியா இருந்தாலும், அவங்க பலவீனப்பட்டு நிக்குற இடமும் உண்டு சார்.”

குட், இந்த ஸ்டேட்மெண்ட் எனக்குப் பிடிச்சிருக்கு. ஸோ, அந்த நிலா உங்களைப் பலவீனப்படுத்துதா அஞ்சலி?”

“……”

விடியிற பொழுது காஃபி உங்க வீட்டுல தான்னா எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் கிடையாதும்மா. ‘காஃபி வித் அஞ்சலி‘.” சிரித்தபடி சொன்னான் அபி. அதற்கு மேல் கீதாஞ்சலியின் பொறுமை பறந்தது

அபி…! நீங்க ரொம்ப எல்லை மீறிப் போறீங்க. சில விஷயங்களை நாகரீகமா மறுத்தா உங்களுக்குப் புரியாதா? என்னோட அமைதியில இருக்கிற அர்த்தம் உங்களுக்கு புரியலையா? இல்லை, என்னோட கஷ்டம் உங்களுக்கு ரசிக்கக் கூடியதா இருக்கா?”

அஞ்சலி வார்த்தையை விடாத. அன்னைக்குலிபர்ட்டி ப்ளாஸாவில நாம சந்திக்காம இருந்திருக்கனும். அன்னைக்குப் பாத்த பொண்ணை நான் தேடுறேன், அது என் தப்பு இல்லை.”

நல்லாத் தேடுங்க, அவளை உங்களால எங்கேயும் கண்டுபிடிக்க முடியாது.”

அவளைக் கண்டுபிடிக்கிறது என் சாமர்த்தியம், அதை நான் பாத்துக்கிறேன். மேடம் நிலா மேட்டருக்கு வாறீங்களா?” அவன் குரலில் குறும்பிருந்தது.

“……”

அந்த நிலா அழகா இருக்கா அஞ்சலி?”

ம்…”

உனக்குப் பிடிச்சிருக்கா?” காது மடல்களை உரசிச் சென்ற அந்தக் குரலில் மேனி சிலிர்த்தது கீதாஞ்சலிக்கு. இருந்தாலும், கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

பிடிச்சு என்ன பண்ண சார்? அதான் தொட முடியாத தூரத்தில இருக்குன்னு நல்லாப் புரியுதே?”

ம் கே, நிலா அங்கேயே இருக்கட்டும். பை கீதாஞ்சலி.” அந்த அஞ்சலி காணாமல் போயிருந்தது. சட்டென்று லைனை டிஸ்கனெக்ட் பண்ணினான் அபிமன்யு. கீதாஞ்சலியின் கன்னத்தில் மீண்டும் கண்ணீர்க் கோடு.

ஃபோனை பாக்கெட்டில் போட்ட அபி சற்று நேரம் ஆழ இழுத்து மூச்சு விட்டான். மனது ஒரு நிலைப் பட்டது. தன் மனம் அந்தப் பெண்ணின் பின்னால் போவதை அவனால் அப்பட்டமாக உணர முடிந்தது.

இத்தனை காலமும் குடும்பம், பாரம்பரியம் என்று அவன் வைத்திருந்த கொள்கைகள் ஆட்டம் கண்டு கொண்டிருந்தன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அந்தப் பெண்ணைத் தன்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது

அம்மா, அப்பா எந்தத் தடையும் சொல்லப் போவதில்லை. ரஞ்சனியையும், ஈஷ்வரனையும் பற்றிக் கேட்கவே வேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆட்டுவார்கள். தாத்தா, பாட்டியைத் தான் கொஞ்சம் சமாளிக்க வேண்டும். மற்றப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை.

தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அந்தப் பெண்ணின் பிடிவாதத்தை நினைத்த போது, சிரிப்பாக வந்தது அபிக்கு. எவ்வளவு அழகாக ஒரு நிலாக்கதை சொல்லி தன்னைத் தள்ளி நிறுத்தி விட்டாள்

தருணுக்குக் கதை சொல்லுவது போல அபிக்கும் கதை சொல்ல நினைக்கிறாள் போலும். அவளுக்குப் புரியவில்லை, அவன்அபிமன்யுஎன்று.

அந்த இதமான இரவின் மடியினில், அவள் இப்போது தன் பக்கமிருந்தால் சுகமாக இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு. அவள் மனதில் தன்னைப் பற்றி இருக்கும் எண்ணம் தெளிவாகத் தெரிந்தாலும், அவளை கட்டாயப்படுத்த அவன் மனம் இடங்கொடுக்கவில்லை.

அவளாக அதை ஒப்புக் கொள்ளும் காலம் வரும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் அபி. மனதில் ஒரு சில திட்டங்களை வகுத்துக்கொண்டு ரூமிற்குப் போய்விட்டான். நிலா அழகாக காய்ந்து கொண்டிருந்தது.

 

error: Content is protected !!