“மாயவனின் மயிலிறகே”

அத்தியாயம் 1;

மணி காலை பதினொன்று முப்பது, புழல் மத்திய சிறைச்சாலை . சுற்றிலும் கோட்டையை போன்ற பிரமாண்டமான மதில் சுவர். அதற்கு உள்ளே வெள்ளை உடையில் கைதிகள் அவரவர்க்கு கொடுத்த வேலையில் ஈடுபட்டிருக்க, அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர் சில காக்கி உடுப்புகாரர்கள்.

தவறு செய்தவர்கள் மனம் திருந்த வேண்டியே இந்த தண்டனை, ஆனால் இங்குதான் பல குற்றங்கள் ஆரம்பமாகின்றன. “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” அது முற்றிலும் உண்மை. தானாய் தவறை உணர்ந்து மனம் திருந்தாதவரை இந்த தண்டனையெல்லாம் அடுத்த தவறுக்கான ஓய்வு காலங்களே. ஏன் தவறு செய்வதற்காக இங்கே வருவதும்கூட உண்டு.

சிலர் மண்வெட்டி கொண்டு குழிதோண்டி மரக் கன்றுகள், செடிகளை நட்டுக் கொண்டிருந்தனர். சிலர் கத்தரியால் செடிகளை அழகாக நறுக்கி கொண்டிருந்தனர் சிலர் சமையலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர் “ஏய் எல்லாம் ஒழுங்கா வேலை பாருங்க இன்னைக்கு கலெக்டர் ரவுண்ட்ஸ் வராரு போன தடவ மாதிரி இந்த தடவ மாட்னீங்க காலம் பூரா ஜெயில் வாழ்க்கைதான்”, என்றவர் “யோவ் கணேசு கொஞ்சம் பாத்துக்கயா நான் போய் சமையல் செய்ய போனவனுங்க என்ன பண்றானுங்கன்னு பாக்கறேன்.” என கூறி சென்றார்.

அதைக் கேட்ட மாரியும், பீட்டரும் ஒருவரை ஒருவர் பார்த்து சமிக்ஞை செய்து கொண்டு தங்களது வேலையை தொடர்ந்தனர். மாரி பிரபல ரௌடி ஒருவனின் வலது கை போன்றவன். பீட்டர் மாரிக்கு கீழ்நிலையில் இருப்பவன். இது வெளியில் யாருக்கும் தெரியாது. பீட்டருக்கு மாரியை தெரியும் அவ்வளவே. சொன்னதை செய்வான் பதிலுக்கு பணமாகவோ பொருளாகவோ பெற்றுக் கொள்வான். இதை தாண்டி வேறு ஒன்றும் அவனுக்கு தெரியாது. பீட்டர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கிற்காக சிறையில் இருக்க, மாரி ஒரு வாரத்திற்க்கு முன்பு ஒரு கட்டபஞ்சாயத்து வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பதினைந்து நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

அது வெறும் மேம்போக்கு காரணம் மட்டுமே உண்மையான காரணம், இங்குதான் அவனின் அடுத்த அசைன்மெண்ட் . இதோ அதற்கான நேரமும் நெருங்கிவிட்டது. திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன. இனி அதை செயல் படுத்த வேண்டும்.

மாரியின் மனதிலோ “அப்படி என்ன பெரிய ஆள் அவன், அவனை கொல்ல ஜெயில் வரைக்கும் வந்து இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா? கேள்விபட்டவரை ஆளும் சின்ன வயசுன்னுதான் சொன்னாங்க, யாருக்கு என்ன பண்ணானோ? அல்பாயுசுல போகபோறான்.” என்பதுதான்.

அவனை பொறுத்தவரை அவ்வளவுதான் ஒரு உயிருக்கு உண்டான மதிப்பு. ஆள் யார்?அவன் யாருக்கு என்ன செய்தான்? இதுபோன்ற காரணங்கள் மாரிக்கு அவசியமற்றவை. தலைவன் கூறியதை தலையை வெட்டி வந்தாவது நிறைவேற்றுவான்.

இப்போது அந்த இடமே சற்று பரபரப்பானது. மாரி பீட்டருக்கு கண்காட்ட, அவனும் புரிந்தது என்ற தலையாட்டலுடன் வேறு பக்கம் பார்த்தான். அங்கு அவனது அழைப்புக்காக காத்திருந்தவர்கள் நான்காம் ஐந்தாம் கட்ட அடியாட்கள். அவர்களுக்கு பீட்டரை தெரியும், அவனை மட்டுமே தெரியும். மாரியை தெரியாது. மாரியையே தெரியாது எனும்போது, அவனது தலைவனையும் தெரியபோவதில்லை, அவனுக்கு வேலை சொன்ன பெரும்புள்ளியையும் தெரியபோவதில்லை. வேலை முடிந்தவுடன் பணம் யார் முலமாகவோ அவர்கள் குடும்பத்தை சென்றடையும்.

அப்போதுமுன்னும் பின்னும் சில காவலர்கள் , கூடவே அவனுடைய உதவியாளர் சகிதம் தன் அசாத்திய உயரத்தில் கம்பீரமான நடையுடன் அங்கிருப்பவர்கள் மீது கூர்பார்வையை பதித்தவாறே வந்து கொண்டிருந்தான் “அபிஜித் ஐ. ஏ.எஸ். ” திருவள்ளூர் மாவட்டத்தின் கலெக்டர்.

இருபதுகளின் முடிவில் இருக்கும் துடிப்பான இளைஞன். ஆகாய நீல நிற முழுக்கை சட்டை, பால் நிறத்தில் பேண்ட் அனிந்திருந்தான். சன் கிளாஸ் கண்களை மறைக்க, இடது கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரம், வலது கையில் வெள்ளி காப்பு அணிந்திருக்க, கழுத்தில்”ஏ” என பொறிக்கப்பட்ட டாலர் கொண்ட தங்கசங்கிலி கழுத்தை அலங்கரித்தது. ஆஜானுபாகுவான உடலமைப்பு அவன் ஜிம்மில் கொட்டும் உழைப்பை வஞ்சனமில்லாமல் காட்டியது. முகமோ நீ சிரித்தால் நானும் சிரிப்பேன், நீ முறைத்தால் நானும் முறைப்பேன் என்னும் ரகம். ஆளும் அரசனும் அவன் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தால் அடிபணிய வேண்டும் என்னும் குணம். அதுவே பல எதிரிகளை வாரிக்கொடுக்க அதை பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை படமாட்டேன் என்னும் அலட்சியம் அவன் கண்களில் தொக்கி நிற்கும்.

இதுவரை பணிக்கு சேர்ந்த நான்கு வருடத்தில் பல இடையூறுகள், பல இடமாற்றங்கள். இதோ இப்போது கூட திருவள்ளூர் ஆட்சியராகி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் கொல்லும் அளவுக்கு வெறிபிடித்த எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளான். திட்டமிட்ட சிறுநரிகூட்டம் சிங்கத்தை சாய்க்குமா?

“மிஸ்டர். கதிரவன்”

“சார்” அந்த ஜெயில் அதிகாரி ஓடி வந்தார். தொப்பையும் தொந்தியுமாக அவர் ஓடி வர அவரை ஒரு பார்வை பார்த்தவன் தன் நடையை தேக்கினான்.

அவர் அவன் முகத்தையே பார்க்க “உங்க வீட்ல குழந்தைங்க இருக்கா” என சம்மந்தமில்லாமல் கேட்க, எதற்கு என்ற கேள்வி எழுந்தாலும் வாய் தானாக விடையளித்தது “பேத்தி பொறந்து இப்ப ஒன்பது மாசம் சார்”

“ஓ..அப்ப உங்க பேத்திக்கு விளையாட நல்ல இடம்” என அவர் வயிற்றை தட்டியவாறு கூறியவன் முன்னே சென்று விட அவர்தான் கிண்டல் செய்தானா? இல்லை சாதாரனமாக சொன்னானா? என யோசித்து அங்கேயே நின்றிருந்தார். மீண்டும் அவன் குரல் ஓங்கி ஒலித்தது,

“மிஸ்டர்.கதிரவன் இன்னும் ஜெயிலுக்குள்ள செல்போன், கஞ்சா, சிகரெட்லாம் புழங்குதா? ஏனெனில் போன மாதம் இவன் வந்திருந்த போது அதிரடியாக சோதனை செய்ததில் கைதிகளிடம் இருந்து இவற்றையெல்லாம் பறிமுதல் செய்திருந்தான். அவனது கேள்வியில் பதறியடித்து மீண்டும் அவனை நோக்கி ஓடியவர் “நோ சார் ” இப்போது அவரை கூர்ந்து பார்த்தவன்
“ஆர் யு சுஅர்”
“எஸ் சார்”
“ம்”
அத்தோடு அதை விட்டவன் ,அங்கு வேலை செய்து கொண்டிருந்த வயதான கைதியிடம் உடல் நிலையை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கைதிகளுக்கிடையே கைகலப்பாகி இரண்டு பிரிவாய் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்கள் பீட்டரின் ஆட்கள்.

“இங்க பாருங்க அந்த கலெக்டர் உங்களுக்கு கொஞ்சம் தூரத்துல இருக்கப்பவே உங்களுக்குள்ள சண்டை வந்த மாதிரி சீன போடுங்க, எப்படியும் உங்க சண்டைய விலக்க ஜெயிலர், வார்டனெல்லாம் கலெக்டர விட்டு நகருவாங்க அப்ப சமயம் பாத்து என் வேலைய நான் முடிச்சிருவேன் . இதுல எந்த தப்பும், மத்தவங்களுக்கு உங்க எந்த சந்தேகமும் வந்துடகூடாது. என்ன புரிஞ்சுதா” என பீட்டர் சொல்லி வைத்திருந்தான்,

“ன்னா பீட்டரு நம்மள பத்தி தெரியாதா அதெல்லாம் பக்காவா ஸ்கெட்ச்சு போட்டு பண்ணிருவோம் மிஸ்ஸே ஆகாது போதுமா” என திட்டம் தீட்டியிருந்தனர்.
கைதிகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டிருப்பதை கண்ட அபிஜித் காவலர்களை என்னவென்று பார்க்க சொல்ல அவர்களும் அங்கு விரைந்தனர்.

கைதிகளை விலக்கி அவர்களை அவரவர் அறைக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர். இது அவ்வப்போது நடப்பது என்பதால் அவர்களுக்கு வித்தியாசமாய் தெரியவில்லை. இது நடக்கும் போதே மாரி கண்காட்ட பீட்டர் கையில் செடி வெட்ட வைத்திருந்த கத்தரி கோலை இறுக்கி பிடித்தவாறு பின்னிருந்து அபிஜித்தை நெருங்கியிருந்தான். அனைவரும் சண்டையை பார்க்க இவனை கவனிப்பார் யாருமில்லை.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என உறுதி செய்து கொண்டு மெதுவாக அவனை நெருங்கியிருந்தான் பீட்டர். கையை ஓங்கி கத்திரியை முதுகில் தாக்கும் கண பொழுதில் விலகியிருந்தான் அபிஜித்.

அவன் விலகவும் அதே வேகத்தில் முன்னே சென்று விழுந்தான் பீட்டர். இதை பார்த்த மாரிக்கோ “அச்சோ! ச்சே நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டானே, நானே இறங்கிருக்கனும். தப்பு பண்ணிட்டேன், அண்ணன் கேட்டா என்ன சொல்ல. இனி இப்படியொரு சான்ஸ் இங்க கிடைக்காது வெளிலதான் வேற வழி பாக்கனும்” என தலையில் அடிக்காத குறையாக நின்றிருந்தான் மாரி. அதை தவிர மாட்டி கொண்டானே என எந்த பதற்றமும் அவனிடத்தில் இல்லை. அவனுக்கு தெரியும் உயிரே போனாலும் மாரியின் பெயரை கூற மாட்டான் என்று.

பீட்டர் கீழே விழவும்தான் தன் திட்டம் தோல்வியடைந்த கோபத்தில் சிவந்த பீட்டரின் முகத்தையும், கையில் இருந்த கத்தரியையும், இடுப்பில் கைவைத்தவாறு தெனாவட்டாக நின்றிருந்த அபிஜித்தையும் கண்ட அபிஜித்தின் உதவியாளர் ரகு என்ன நடந்தது என யூகித்து , புரிந்ததும் “சார் ” என பதறியவாறு அவனருகில் வர, கைதிகளை விலக்கி கொண்டிருந்த அதிகாரிகளும் ரகுவின் சத்தத்தில் பதறி அவனருகில் வந்தனர். வந்தவர்களை கைகாட்டி நிறுத்தியவன், மெதுவாக இன்னமும் கீழே கிடந்த பீட்டரை நெருங்கினான்.

அவன் கண்களை கூர்ந்து நோக்கியவன் தன் சன் க்ளாஸை கண்ணில் இருந்து அகற்றி , மெல்லிய புன்னகையை உதட்டோரம் நெளியவிட்டவாறே “இந்த தடவ மிஸ் ஆயிடுச்சு, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றவாறு மீண்டும் கிளாஸை அணிந்து கொண்டு அவனை கடந்து சென்றுவிட்டான்.

அபிஜித் முன்னே சென்றுவிட ரகு கூறியதை கேட்ட ஜெயிலர் பீட்டரை தனி அறையில் அடைக்குமாறும் , பிறகு வந்து கவனித்து கொள்வதாக வார்டனிடம் கூறிவிட்டு அபிஜித்தின் பின் சென்றார்.

அனைவருக்கும் ஆச்சர்யம் ஏன் அப்படியே விட்டுவிட்டான் என்று ஏன் மாரிக்கும் பீட்டருக்குமே அவனது நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களது முகமே வெளிப்படையாக காட்டியது.

பீட்டர் நெருங்கவுமே அவனை கண்டுகொண்ட அபிஜித் கடைசி நொடியில் விலகியிருந்தான். நான்கு வருட அனுபவத்தில் இதைபோலவே சில சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அவனுக்கு தெரியும் இவன் வெறும் அம்பு மட்டுமே, எய்தவன் யாரென்பது இவனுக்கே தெரியுமோ என்னவோ அதனாலேயே அவர்களை சீண்டி விடும் விதமாக அடுத்த முறை முயற்சி பலிக்கட்டும் என சொல்லி வந்திருந்தான். எப்படியும் மீண்டும் முயற்சி செய்வார்கள் என்பது திண்ணம்.

இவன் பின்னால் யார் இருக்க கூடும் என்பதையும் ஒரளவு யூகித்து விட்டிருந்தான். அந்த நபரை எண்ணி இகழ்ச்சி புன்னகையில் ஒருபக்கம் உதடு லேசாய் வளைந்தது. “கூடிய சிக்கிரமே உனக்கு செக் வைக்கறேன்டா” என மனதில் எண்ணியவன், வந்த வேலையை முடித்து சிறையில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை கூறிவிட்டு தன் அலுவலகம் சென்றான்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். மக்கள் சிலர் அங்கிருந்த மர நிழல்களில் அமர்ந்து மனு கொடுப்பதற்காக வேண்டி கலெக்டருக்காக காத்திருந்தனர். அபிஜித் அலுவலகத்திற்க்கு வந்த போது மணி இரண்டு.

கலெக்டர் கார் வந்ததை அறிந்ததும் ப்யூன் நாகேந்திரன் ஓடி வந்து கதவை திறக்க, இறங்கியவன் மனு கொடுக்க காத்திருந்தவர்களை கண்டதும்

“என்ன நாகா அவங்களை ஏன் காக்க வைக்கற மனு வாங்கிட்டு அனுப்பிருக்க வேண்டியதுதான”என கடிய

“சார் நான் சொன்னேன் சார் ஆனா உங்கள பாக்காம போக மாட்டோம்னு சொல்றாங்க” என அவன் புலம்பினான்.

“உனக்கு அவங்ககிட்ட சரியா பேச தெரியலன்னு சொல்லு , போ அவங்களை உள்ள கூட்டிட்டுவா” என கட்டளையிட்டவன் அவனறைக்கு சென்று விட்டான். “அபிஜித் ஐ.ஏ.எஸ்.” என பெயர்பலகை டேபிளின் ஓரம் இருக்க, முக்கிய கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவன் இருக்கைக்கு பின் இருந்த சுவற்றில் காந்தி படமும், நேதாஜி படமும் மாட்டியிருந்தது. மற்றபடி அறை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

தன் இருக்கையில் அமர்ந்தவன் அழைப்பு மணியை அழுத்த ப்யூன் நாகா மனு கொடுக்க வந்தவர்களை அழைத்து வந்திருந்தான். அவர்களின் குறைகளை கேட்டு மனுவை வாங்கியவன் இனி தான் இல்லையென்றால் நாகாவிடம் மனுக்களை கொடுக்க சொல்ல, “சார் போன தடவ இந்த ப்யூன்கிட்ட கொடுக்க வந்தப்ப வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாரு சார் அதனாலதான் உங்ககிட்ட கொடுக்க காத்திருந்தோம்” என போட்டு கொடுத்தனர். அபிஜித் முறைத்த முறைப்பில் நாகா தலையை குனிந்து கொண்டான்.

“இனி அந்த மாதிரி நடக்காது , அப்படி மனு வாங்கலனா இனி சாருக்கு இங்க வேலை இல்ல, அதனால கவலைபடாம இப்ப போய்ட்டு வாங்க” என அவர்களை அனுப்பிவிட்டு

“என்ன நாகா இதெல்லாம் இது எத்தன நாளா நடக்குது” என காரமாக வினவ,

“ஐயோ சார் இது நீங்க வரதுக்கு முன்னாடி,இப்ப இல்ல நம்புங்க சார்” அழாத குறையாக கூறினான்.

“சரி போ” என அனுப்பிவிட்டு ரகு எடுத்து வைத்த கோப்புகளை பார்வையிட தொடங்கினான். அப்பொது படீரென்று கதவு திறக்கப்பட்டு ஒருவர் உள்ளே நுழைந்தார்.

error: Content is protected !!