MMM–EPI 10

122620776_740997409820929_9109553537495410146_n-6edce41d

அத்தியாயம் 10

 

“மாதம் மும்மாரி பொழியுதோ இல்லையோ, இந்தாளுக்கிட்ட தெனம் நான் வசைமாரி வாங்கறது மட்டும் கரேக்டா நடந்துருது! எல்லாருக்கும் மிஸ்டர் சட்டர்டே வாடகை சைக்கிளில மெதுவா வந்தா எனக்கு மட்டும் ப்ளைட் எடுத்து பறந்து வந்துருக்கு. என்ன வந்துருக்கு!!! வந்துருக்கான். ஜோனா டேய், எங்கடா இருக்க?”

 

ஜெய்யிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான் தீரன். எதிர்த்துப் பேசி, நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் என நடையைக் கட்ட சொல்லி தன்மானம் தகித்தது. டைரக்டராகும் ஆசையும், இரண்டு நாயகிகளோடு போடப் போகும் பூசையும் தன்மானத்தை தரையில் மிதித்து தரைமட்டமாக்கி இருந்தது.

 

ஜெய்யும் என்னதான் செய்வார், சூசன் ப்ளைட் எடுத்து சென்னைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தாரே! அவர் இங்கே வந்திறங்கியதும் கண்டிப்பாக பூகம்பம் வெடிக்கப் போகிறது என புரிந்துப் போனது இவருக்கு. இவ்வளவு நாட்களாய் லீலைகளின் மன்னனாக இருந்தாலும், எல்லாமே நான்கு சுவற்றுக்குள் இருந்ததால் சூர்யாவும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. இப்பொழுது சூசனின் மூலமாக ஜோனா தனது மகன் என்று வெளி உலகுக்கு தெரிய வந்தால், சூர்யா முன்னும் பெற்று வைத்திருக்கும் இன்னும் இரண்டு வாரிசுகளின் முன்னும் எப்படி தலை நிமிர்ந்து நிற்பார்! என்ன நடக்கப் போகிறதோ என எண்ணி தலை சுற்றியது ஜெய்க்கு. போலிஸ்காரர்களோ பல வகையில் முயற்சித்துக் கொண்டுதான் இருந்தார்கள். பலன் தான் பூஜ்யமாக இருந்தது. இவரது ஆத்திரம் முழுவதும் மகனை ஒழுங்காகக் கொண்டு வந்து சேர்க்காத தீரனின் மேல் தான் விடிந்தது.

 

வீட்டுக்கு வந்த தீரன், தனது கோபத்தை எல்லாம் பாத்ரூமுக்குப் போய் ஓவென கத்திக் கதறித் தீர்த்துக் கொண்டான். பின் முகத்தைக் கழுவி விட்டு வெளியே வந்தவன், ப்ரிட்ஜைத் திறந்துப் பார்த்தான். முந்தைய நாள் குடித்து விட்டு மீதம் வைத்திருந்த பீர் பாட்டில் இருந்தது.

 

“ஊருக்கே பிரியாணி வாங்கிக் குடுத்துட்டு ஒரு பாட்டில் பீரைக் கூட மூனு நாள் வச்சிக் குடிக்கற நிலையில நிக்கறியே தீரா!” என சத்தமாய் முனகியவன், கொஞ்சமாய் பீரை வாய்க்குள் சரித்துக் கொண்டான். சைட் டிஷ்க்காக ஊறுகாய் பாட்டிலைத் திறக்க, அதில் இண்டு இடுக்கெல்லாம் ஏற்கனவே வழித்து நக்கி முடித்திருந்ததால் ஒன்றும் தேறவில்லை.

 

ஒரு பெருமூச்சுடன்,

 

“தன் கையே தனக்குதவி!” என சொல்லிக் கொண்டே ஒரு மொடக்கு பீரையும் ஊறுகாய்க்கு பதில் தன் விரலையும் கடித்துக் கொண்டான்.

 

“ஊத்திக்கினு கடிச்சிக்கவா

கடிச்சிக்கினு ஊத்திக்கவா!!!!!!” என பாடியவன்,

 

“என்னம்மா எனக்கு ஏத்த மாதிரியே சிட்டுவேஷன் சாங் எழுதிருக்கானுங்க! சூப்பரப்பு” என கட்டிலில் சரிந்தான்.

 

போனை எடுத்து முகபுத்தகத்தை வலம் வந்தவன், தனது லேடி ப்ரேண்டுகளின் போட்டோக்களுக்கு மட்டும் ஹார்ட்டுகளை தட்டிவிட்டான். சில அழகான செல்பிகளுக்கு, அங்கங்கே சுட்டு ஒரு போல்டரில் சேகரித்து வைத்திருந்த கவிதைகளை கமேண்ட்டாக போட்டான். ஒரு மணி நேரத்தை அதில் செலவிட்டவன், பின் இன்ஸ்டாகிரமில் நுழைந்தான். அங்கேயும் ஹார்ட்களை பறக்கவிட்டவன், ஒரு படத்தில் ஆணி அடித்ததுப் போல நின்றான் .

 

“அடங்கொப்புறானே!!!!!!”

 

தன் கண்கள்தான் எதாவது ட்ரீக் செய்கிறதா என பயந்தவன், நன்றாக கண்களைத் தேய்த்து விட்டு மீண்டும் படத்தைப் பார்த்தான். ஜோனாவேதான், அவன் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் இவன் கலட்டி விட்ட சுருதி. டாக்டர் சுருதி!!

 

“என் வாழ்க்கையில உன்னை மட்டும் நான் மறுபடியும் பார்க்கவே கூடாதுன்னு வேண்டிக்க தீரா! பார்த்தேன்னு வை, அன்னிக்கு என் கையாலத்தான்டா உனக்கு விஷ ஊசி!” அசரீரியாய் ஒலித்தது அவள் குரல்.

 

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி!” முனகிக் கொண்டான் தீரன்.

 

அங்கே காட்டேஜில், உலர வைத்திருந்த துணிகளை அவசரமாக சேகரித்துக் கொண்டிருந்தாள் ஜீவா. மேகம் கருத்திருந்தது, காற்றும் பலமாய் வீசியது. கண்டிப்பாக இன்னும் சில மணி நேரங்களில் மழை அடித்து ஊற்றும் என தோன்றியது அவளுக்கு. துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு பின் வாசல் வழியே உள்ளே நுழைந்தாள் இவள்.

 

அங்கே கிச்சனில் கரண்டியை மைக்காய் பாவித்துப் பாடிக் கொண்டிருந்தான் ஜோனா.

 

“her lips, her lips

I could kiss them all day if she’d let me

Her laugh, her laugh

She hates but I think it’s so sexy

She’s so beautiful, and I tell her everyday”

 

புன்னகையுடன் ஜோனாவையே ரசித்தப்படி நின்றிருந்தாள் ஜீவா. என்னவோ தெரியவில்லை, அவனைப் பார்த்தாலே உதட்டில் புன்னகை அமர்ந்துக் கொள்கிறது இவளுக்கு.

 

அவள் வருகையை உணர்ந்தவன், திரும்பிப் பார்த்து முறுவலித்தான்.

 

“பேப், வீ ஷூட் கோ பிக்னிக் டுடே!”

 

“இல்ல, மழை வர மா…”திரி இருக்கிறது என சொல்ல வந்தவள், அவன் பார்வை தன் உதட்டில் நிலைப்பதைப் பார்த்து,

 

“போலாம்!” என பதிலளித்து விட்டு ரூமினுள் சென்று விட்டாள்.

 

அன்று முழுக்க முடிந்த அளவு அவனை தவிர்க்க முயன்றாள் ஜீவா. அந்த சின்ன வீட்டில் எவ்வளவு நேரம் தான் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது. ஒரு முத்தத்திற்கே தன்னை காண சங்கோஜப்படும் ஜீவாவை பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை இவனுக்கு. இன்னும் நெருங்கி அவளை சங்கடப்படத்த விரும்பாதவன், அவள் போக்கிலேயே விட்டு விட்டான். ஆனாலும் மாலை ஆகியும் தன்னைத் தவிர்ப்பவளை சகஜமாக்கவே பிக்னிக் செல்லலாம் என அழைத்திருந்தான் ஜோனா.

 

ரெடி செய்திருந்த ச்சீஸ் சாண்ட்வீச், ஆப்பிள், ஆரஞ்சு ஜீஸ், இரண்டு கண்ணாடி கிளாஸ்கள், சிப்ஸ் எல்லாவற்றையும் எடுத்து பிக்னிக் பாஸ்கேட்டில் அடுக்கினான். கீழே விரித்து உட்கார பெரிய துண்டையும் எடுத்து மடித்து கூடையில் வைத்தான்.

 

“மூலான், என்னோட கிட்டார் எடுத்துக்கோ ப்ளிஸ்” என கிச்சனில் இருந்து குரல் கொடுத்தான் இவன்.

 

கிட்டாரை எடுத்தவள், ஜோனா என எங்க்ரேவ் செய்திருந்த எழுத்தை ஆசையாய்  தடவிக் கொடுத்தாள். ஆரம்பகாலத்தில் பாடி சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து, தனக்காய் அவன் செய்து வாங்கிய கிட்டார் அது என பல ஆர்ட்டிக்களில் படித்திருக்கிறாள் ஜீவா. அந்த கிட்டார் அவன் போற்றி பாதுகாக்கும் பொக்கிஷம் எனவும் அறிந்து வைத்திருந்தாள்.

 

அவள் கிட்டாரை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர, இவன் பிக்னிக் கூடையோடு வந்தான். தனது கிட்டாரை அணைத்துப் பிடித்திருப்பவளை புன்னகையுடன் பார்த்தவன், கூடையைக் கீழே வைத்து விட்டு போனை கையில் எடுத்தான். அவள் அருகே வந்து, கிட்டாரை அவள் வாசிப்பது போல பிடிக்க செய்தவன்,

 

“ஸ்மைல் மூலான்” என சொல்லி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டான்.

 

எடுத்தப் போட்டோவை முத்தமிட்டு,

 

“மை ப்ரிஷியஸ் கிப்ட் ப்ரம் காட்” என சொன்னான் ஜோனா.  

 

இவள் வேறு புறம் திரும்பிக் கொள்ள, புன்னகையுடன் கூடையை ஒரு கையிலும் இவளை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு கடற்கரை நோக்கி நடையிட்டான் பாடகன்.

 

மணலில் துண்டை விரித்தவர்கள், பொருட்களை அதன் மேல் அடுக்கி வைத்து விட்டு அமர்ந்தார்கள். வேகமாய் வீசிய கடல் காற்று வீசியாய் இவள் உடலைக் குத்த மெல்ல நடுங்கினாள் ஜீவா. இரு கரங்களையும் கொண்டு கையையும் காலையும் தேய்த்து சூடேற்ற முயன்றாள். அவள் முயற்சிகளை சற்று தள்ளி அமர்ந்துப் பார்த்திருந்தவன், பட்டென தன்னருகே இழுத்தான் அவளை. அவள் எதிப்பார்க்காத வேளையில் இழுத்ததால் படக்கென அவன் மேல் மோதி விழுந்தாள் ஜீவா. அப்படியே அவளையும் இழுத்துக் கொண்டு மணலில் சரிந்தான் ஜோனா. எழ முயன்றவளை,

 

“இப்படியே என் கை வளைவில கொஞ்ச நேரம் படுத்திருந்தா, உனக்கே உனக்காக கிட்டார் வாசிச்சிட்டே ஒரு பாட்டு பாடுவேன்! எழுந்துட்டனா இங்கிருந்து நான் கிளம்பி போகற வரைக்கும் இனி ஒரு வரி கூட பாட மாட்டேன் மூலான். நவ் தெ சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என உறுதியான குரலில் சொன்னான் ஜோனா.

 

ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து விட்டவள், அவன் வலது கைவளைவில் வாகாகப் படுத்துக் கொண்டாள்.

 

வெற்றிப் புன்னகை முகத்தில் தவழ, ஆகாயத்தையே பார்த்திருந்தான் ஜோனா. உடலை சுகமாய் தழுவும் கடல் காற்று, ஓவென அலைகளின் இரைச்சல், கார்மேகக் கூட்டம், பக்கத்தில் படுத்திருக்கும் பெண்ணவளின் சுகந்தமான மணம் எல்லாம் சேர்ந்து இதுதான் சொர்க்கலோகமோ என எண்ண வைத்தது அவனை.  

 

“ஏன் இந்த அமைதி மூலான்? எதாச்சும் பேசேன்” என குழைந்து வந்த குரலில் ஆசையாக கேட்டான் ஜோனா.

 

“நம்ம பூமியில 70 பர்செண்ட் இடம் கடல்தானாம்! அதோட பூமியில வாழற மொத்த உயிரினங்களில 94 பர்செண்ட் கடல் சார்ந்த உயிரனங்களாம். உலக மியூசியத்துல சேர்த்து வச்சிருக்கற பொக்கிஷங்கள விட இன்னும் அதிகமா கடலுக்கடியில புதைஞ்சு கிடக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லறாங்க! செம்ம இண்ட்டேரெஸ்டிங்கா இருக்குல்ல ஜோனா!” என கேட்டாள் ஜீவா.

 

ஜீவாவைப் பார்ப்பது போல திரும்பிப் படுத்து,

 

“மை கியூட் என்சைக்ளோபேடியா” என செல்லமாக அழைத்து அவள் கன்னம் கிள்ளியவனுக்கு சிரிப்பும் வந்தது.

 

“சிரிக்கற மாதிரி நான் என்ன சொல்லிட்டேன்?” என கேட்டவளுக்கு லேசாய் கோபம் எட்டிப் பார்த்தது.

 

“இந்த ஜோனா மேல கோபம் கூட வருமா உனக்கு?”

 

“கொஞ்சமா வரும்! வந்த நிமிஷமே ஓடியும் போயிடும்” என்றவள்,

 

“ஏன் சிரிச்சே?” என கேட்டாள்.

 

“இவ்ளோ ரொமேண்டிக்கான சிச்சுவேஷன்ல கடலப் பத்தி ஆராய்ச்சி செஞ்சிட்டு இருந்தியா, அதான் சிரிப்பு வந்துடுச்சு”

 

“நான் அப்படித்தான் ஜோனா! மண்டையில பேக்ட்ஸ் அண்ட் பிகர்ஸ்(facts and figures) தான் ஓடிட்டு இருக்கும். உன்னை மாதிரி கவித்துவமா ஒன்னும் ஓடாது!” என சொல்லி முறுவலித்தாள் ஜீவா.

 

“யின் அண்ட் யேங் தெரியும்ல! ஒருத்தர் இரவா இருந்தா, இன்னொருத்தர் பகலா இருக்கனும். ஒருத்தர் நிலவா இருந்தா மற்றொருத்தர் சூரியனா இருக்கனும். ஒருத்தர் பூமியா இருந்தா தி அதர் பெர்சன் வானமா இருக்கனும்! நீ நெர்டி(படிப்ஸ்) நான் ஆர்ட்ஸி(பாடகர், ஓவியர் இப்படி கலை சம்பந்தப்பட்டவங்க இதுல வருவாங்க). நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் கச்சிதமா பொருந்திப் போவோம்! உன் கிட்ட இல்லாதத என் கிட்ட இருந்து நீ எடுத்துக்கலாம். என் கிட்ட இல்லாதத உன் கிட்ட இருந்து நான் எடுத்துப்பேன்” என அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்து சொன்னான் ஜோனா.

 

அவன் விழி வீச்சில் கட்டுண்டு கிடந்தவள், சட்டென எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

 

“பசிக்குது, எதாச்சும் சாப்பிடலாம் ஜோனா” என்றபடியே கூடையை ஆராய ஆரம்பித்தாள் ஜீவா.

 

இவனும் எழுந்து அமர்ந்துக் கொண்டான். சாண்ட்வீச்சை பேப்பர் நாப்கினில் வைத்து அவனுக்குக் கொடுத்தவள், தானும் எடுத்துக் கொண்டாள். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டனர். அவன் உண்டு முடித்ததும் ஆப்பிள் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தவள், தனதை கடித்து உண்ண ஆரம்பித்தாள்.

 

அவளைப் பார்த்தப்படியே தனது ஆப்பிளை மணலில் போட்டவன்,

 

“ம்ப்ச்! விழுந்துடுச்சு மூலான்” என சொல்லி அவள் கடித்த பழத்தைப் பிடுங்கிக் கொண்டான்.

 

“ஏய், என்னது அது!” என இவள் ஆட்சேபிக்க,

 

“எனக்கு ஆப்பிள் சாப்பிட்டாத்தான் பாட வரும்! உனக்கு பாட்டு வேணுமா வேணாமா?” என கேட்டு அவள் எச்சில் செய்ததை முழுதாக சாப்பிட்டு முடித்தான்.

 

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவள், கிட்டாரை எடுத்து நீட்டினாள். வாங்கிக் கொண்டவன்,

 

“சேர்ந்து பாடலாமா?” என கேட்டான்.

 

“சரி!” என சட்டென ஒத்துக் கொண்டாள் ஜீவா.

 

இருவரும் போனில் இருந்த ஸ்போட்டிபை(spotify) ஆப்பில் ஒரு பாடலைத் தேடி பாடல் வரிகளோடு ரெடியாகினர்.

 

“நான் ஓன் டைம் கேட்டுடறேன் மூலான்.” என்றவன், பாடலைக் கேட்டு கிட்டாரை டியூன் செய்ய ஆரம்பித்தான்.

 

அதன் பிறகே அங்கு பாடல் கச்சேரி ஆரம்பித்தது.

 

“லோலிட்டா ஹே லோலிட்டா

உன் கரை இல்லாத கண்கள்

வெட்டித் தள்ளுதே

உண்மையை நான் சொல்லட்டா

உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே”

 

ஆங்கில ஸ்லாங்கில் முகம் முழுக்க புன்னகையோடு, கிட்டாரை வாசித்துக் கொண்டே போனில் இருந்த லிரிக்ஸ் பார்த்து அவன் பாட, இவள் மெய் மறந்து அவனையேப் பார்த்திருந்தாள். அவன் வாயில் இருந்து உதிரும் ஒவ்வொரு லோலிட்டாவிலும் இவள் உள்ளம் உருகிக் கரைந்தது.

 

“ஹே மூலான், யுவர் டர்ன்!” எனும் குரலில் பூலோகம் அடைந்தவள், திக்கித் திணறிப் பாட ஆரம்பித்து பின் அழகாய் இணைந்துக் கொண்டாள்.  

 

சிரிப்புடனே பாடி முடித்தனர் இருவரும்.

 

“ஓன்ஸ் மோர்” என இவள் கேட்க, கிட்டாரை வைத்து விட்டு போனில் சத்தமாக பாடலை ஒலிக்க விட்டு, அவளை எழுப்பி நிறுத்தினான்.

 

போனோடு சேர்ந்துப் பாடிக் கொண்டே, அவள் கரம் கோர்த்து ஆட ஆரம்பித்தான் ஜோனா. முதலில் தயங்கியவள், பின் அவனோடு இணைந்து அசைய ஆரம்பித்தாள். உதட்டில் புன்னகை வழிய கண்கள் மின்னலைப் பாய்ச்ச அழகாய் ஆடியவளை பார்வையால் பருகியபடியே ஆடினான் ஜோனா.

 

பாடல் முடியும் நேரம் லேசாய் தூரல் போட ஆரம்பித்து, சடசடவென கொட்ட ஆரம்பித்தது மழை. கொண்டு வந்தப் பொருட்களையும், கிட்டாரையும் அள்ளிக் கொண்டு இருவரும் எடுத்தனர் ஓட்டம். வீட்டை நெருங்கி மழை படாத இடத்தில் ஜோனாவின் கிட்டாரை வைத்த பிறகே, நிம்மதியாய் உணர்ந்தாள் ஜீவா. அதன் பிறகே ஜோனாவை நிமிர்ந்துப் பார்த்தவள்,

 

“மழையில வெளாடலாமா ஜோனா?” என கேட்டாள்.

 

அந்த வார்த்தைகளும் பார்வையும் இவனை ஏதோ செய்தது. என்ன என யோசிக்கும் முன்னே, இவள் கீழே இறங்கி இருந்தாள். மழை அடித்து ஊற்ற, அதில் சுகமாய் கை கால்களை நடனமாடுவது போல அசைத்து நனைய ஆரம்பித்தாள் ஜீவா. அவள் ஆட்டத்தையே கண் எடுக்காமல் பார்த்திருந்தவன், மெல்ல கீழே இறங்கி அவளோடு சேர்ந்துக் கொண்டான். மழையில் தொப்பலாய் நனைந்திருந்தவளின் உடல் நடுங்க ஆரம்பிக்க, அவளை இறுக்க அணைத்துக் கொண்டான் ஜீவா.

 

“போதும் மூலான்! உள்ள போகலாம்” என இவன் சொல்ல, அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் ஜீவா.

 

மழை நீர் முகத்தில் வழிய, ஒவ்வொரு துளியும் அவள் நடுங்கும் உதட்டை தொட்டுத் தடவி கீழிறங்கியது.

 

“டெம்ப்ட்ரேஸ்!” (மயக்கும் பெண்/மோகினி) என முனகியவன், அவள் உதடுகளைத் தன் உதடுகளால் பற்றிக் கொண்டான்.

 

இந்த முறை அவள் மறுக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை. உதட்டில் ஆரம்பித்த முத்தம், கன்னம், காது, கழுத்து என பயணப்பட்டப் போதும் சரி, முத்தத்தைக் கொடுத்தவன் மொத்தத்தையும் களவாடிய போதும் சரி, அவளிடம் இருந்து எந்த வித மறுப்பும் வரவில்லை. முதன் முறை பள்ளி அறை வந்திருக்கும் பாவைக்கு சுயநலமற்ற ஆசானாய், கலவிப் பாடத்தை அழகாய் கற்றுத் தந்தான் ஜோனா. கடமையுணர்ச்சி மிக்க குருவாய் கற்றுக் கொடுத்தப் பாடத்தைக் கிரகித்துக் கொண்டாளா என அறிந்துக் கொள்ள விடிய விடிய தேர்வு நடத்திக் கொண்டே இருந்தவன், அதிகாலை வேளையில் தான் கண் அயர்ந்தான்.

 

மழை ஓய்ந்து சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க முயல, தன்னை இறுக்க அணைத்தப்படி தூங்கிக் கொண்டிருக்கும் ஜோனாவையேப் பார்த்தப்படி விழித்திருந்தாள் ஜீவா. கழுத்தில் கிடந்த ஜே பெண்டனை வருடியபடியே, விழிகள் இரண்டிலும் அவன் பிம்பத்தை நிரப்பி இதயத்தின் மூலையில் அவனை சேமித்து வைத்துக் கொண்டாள்.

 

மெல்ல உறக்கம் களைய, எழுந்து அமர்ந்தான் ஜோனா. சுகவலியில் உடல் களைத்திருக்க, முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது. பக்கத்தில் ஜீவாவைக் காணாமல்,

 

“இன்னைக்கும் ஜாகிங் போயிட்டாளா? ம்ப்ச்! ஐ நீட் டூ ஹக் ஹேர் பேட்லி” என முனகிக் கொண்டே எழுந்தான் அவன்.

 

“ஜீவ்!!! ஜீவா!! மூலான்” என கூப்பிட்டப்படியே ரூமில் இருந்து வெளியே வந்தான் ஜோனா.

 

உணவு வாசனை வர, கிச்சனுக்குள் நுழைந்தான். அங்கே உணவு பதார்த்தங்கள் மூடி வைக்கப் பட்டிருந்தன. வாசனையில் பசி வயிற்றைக் கிள்ளியது. அவளோடுத்தான் சாப்பிட வேண்டும் எனும் எண்ணத்தில், முகம் கழுவி வர போனான் ஜோனா.

 

மேலும் அரை மணி நேரம் கடந்தும் அவளைக் காணவில்லை. சரி, பீச்சில் சென்று தேடலாம் என வெளியே வந்தவன், ஒரு கணம் திகைத்து நின்றான். வீட்டு முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காரை காணவில்லை. நெஞ்சுக்குள் திக் திக்கென அடிக்க,

 

“மூலான்” என கத்தியபடியே ரூமுக்குள் ஓடினான். அவள் துணி அடுக்கி வைக்கும் கபோர்ட்டைத் திறந்துப் பார்தால், காலியாக இருந்தது.

 

“ஓ மை காட்!”

 

வாசலுக்கு ஓடி வந்து செருப்பை விடும் இடத்தில் பார்த்தால், அவளது காலணிகளைக் காணவில்லை.

“ஷிட்”

 

பைத்தியக்காரனைப் போல வீடு முழுவதும் தேடினான். அவளது பொருட்கள் ஒன்றையும் காணோம்.

 

“வாட் தெ ஹெல்! வேர் ஆர் யூ ஜீவா? எங்கடி போன மூலான்? என்னை விட்டுட்டுப் போயிடுவியான்னு ஆயிரம் தடவை கேட்டியே! இப்போ நீ என்னை விட்டுட்டுப் போயிட்டல! எனக்கு மட்டும் உறவுன்னு ஒன்னு நிலைக்கக் கூடாதுன்னு தலையில எழுதி வச்சிட்டானா கடவுள்? வேர் ஆர் யூ மூலான்? கம் பேக் டூ மீ! ஐ நீட் யூ இன் மை மிசரபெல் லைப் ஜீவா! ப்ளிஸ் கம் பேக் டூ மீ!” என குரல் எடுத்துக் கத்தினான் ஜோனா.

 

வருவாளா???????

 

(மயங்குவாள்…)

 

(வணக்கம் டியர்ஸ்..எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். போன எபிக்கு லைக், காமேன்ட், மீம் போட்ட அனைவருக்கு நன்றி. இன்னைக்கு எபில எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். நடந்த சம்பவம் ஜோனாவுக்கு வேணும்னா காதலின் வெளிப்பாடா இருக்கலாம். அவங்களாம் காதல இப்படித்தான் காட்டிப்பாங்க. அதுக்கு பேரே அவங்க ஊருல மேக்கிங் லவ்! ஆனா ஜீவா ஏன் ஜோனாவ தடுக்கல? ப்ரீவியஸ் எபிய போய் ஒரு தடவைப் படிச்சுட்டு வாங்க..அதுலயே இதுக்கான க்ளூ இருக்கு. கமேண்ட்ல உங்க கண்டுப்பிடிப்பை ஷேர் பண்ணிக்குங்க டியர்ஸ். நான் வேய்ட் பண்ணுவேன். அடுத்த எபில சந்திக்கலாம். லவ் யூ ஆல்)