MMM–EPI 11

122620776_740997409820929_9109553537495410146_n-a3883d84

அத்தியாயம் 11

 

“ஹலோ! இஸ் திஸ் தீரன்?”

 

“ஆமா, தீரன் தான்! அங்க யாரு? தொரைக்கு இங்கீலீசு மட்டும்தான் வாயில வருமா?” என கேட்டப்படியே அந்த காட்டேஜின் கதவைத் தட்ட ஆரம்பித்தான் தீரன்.

 

“ஓன் செக்!” என போனில் பேசிய தீரனிடம் சொல்லியபடியே கதவைத் திறந்தான் ஜோனா.

 

“யோ பரதேசி! யாரா இருந்தாலும் அப்புறம் போன் அடிய்யா! இப்போ நான் முக்கியமான வேலையா இருக்கேன்” என்றவன் தன் முன்னே நின்றிருந்த ஜோனாவைப் பார்த்து,

 

“ஜோனா! ஜோனாத்தானே நீங்க?” என கேட்க,

 

“இல்ல, நான் யோ பரதேசி!” என நக்கலாக சொன்ன ஜோனா போனை நிறுத்தி இருந்தான்.

 

நேரில் ஜோனா சொன்னதே போனின் வழியாக காதுக்கும் போக,

 

“தெய்வமே!” எனும் கோஷத்துடன் படாரென அவன் காலில் விழுந்தான் தீரன்.

 

சட்டென நகர்ந்து நின்ற ஜோனா,

 

“தரையை துடைச்சு முடிச்சதும், உள்ள வா! ஐ நீட் டூ டால்க் டூ யூ” என சொல்லியபடியே கிச்சனுக்குள் நுழைந்தான்.

 

“என்னாது!!! தரையைத் துடைக்கறனா? இது வரைக்கும் பொண்ணுங்க காலுல மட்டுமே விழுந்த நான், மொதோ தடவையா உன் காலுல விழுந்தேனடா!!! அதுக்கு மரியாதை இம்புட்டுத்தானா?” என முனகிக் கொண்டே எழுந்து ஜோனாவை தொடர்ந்து கிச்சனுக்குப் போனான்.

 

ஜீவா அவனுக்காக கடைசியாக சமைத்திருந்த உணவை வெறித்துப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் ஜோனா. உள்ளே நுழைந்த தீரனை,

 

“நான் போன் செய்யறதுக்குள்ள எப்படி என்னைத் தேடி வந்த?” என கேட்டான் ஜோனா.

 

“நீங்க செல்பி எடுத்த டாக்டர் என்னோட எக்ஸ் லவர்! நைட்டோட நைட்டா அவளத் தேடி பாண்டிக்கு வந்துட்டேன்! காலையில அவ ஜாகிங் போக கதவ திறக்கும் போது, அப்படியே அவள தள்ளிக்கிட்டு வீட்டு உள்ள புகுந்துட்டேன். என் கையில ஒத்தையில சிக்கனவள…” என பில்டப்போடு தீரன் நிறுத்த,

 

என்ன செய்தாய் என்பது போல பார்த்தான் ஜோனா.

 

“வேற என்ன செய்வேன்! படாருன்னு காலுல விழுந்துட்டேன். இறுக்கமா கால புடிச்சுக்கிட்டதால அவளால நகரவே முடியல. நல்லா வண்ணம் வண்ணமா கேட்டா! அப்போ கூட நான் கால விடல! வேற வழி இல்லாம கிளினிக்குக்கு போன் பண்ணி அட்ரெஸ் வாங்கி குடுத்தா! அட்ரஸ் கிடைச்ச உடனே இங்க ஓடி வந்துட்டேன்”

 

கிளினிக்கில் நிஜமான அட்ரஸ் தான் கொடுத்திருந்தாள் ஜீவா. மருந்தகங்களில் மட்டும் என்றுமே பொய் கூடாது. ஒரு வேளை மருந்தை மாற்றிக் கொடுத்திருந்தாலோ, தவறான சிகிச்சை அளித்திருந்தாளோ நம்மை தொடர்பு கொள்ள சரியான முகவரியும், தொலைபேசி எண்ணும் அவர்களுக்கு தேவைப்படும் என்பதை புரிந்து வைத்திருந்தவள், அங்கே எந்த கோல்மாலும் செய்திருக்கவில்லை. (இது என் மலாய் ப்ரேண்ட் லைப்ல நெஜமா நடந்தது. அவ குழந்தைக்கு தப்பான மருந்த குடுத்துட்டு, நைட் வீட்டு வாசல்ல வந்து நின்னாங்க கிளினிக்ல உள்ளவங்க! இவ நல்ல வேளை, குழந்தை தூங்குதே மருந்த காலையில குடுக்கலாம்னு இருந்திருக்கா.)

 

தீரனை கேவலமாக ஒரு லுக் விட்டவன், சாப்பிட ஆயத்தமானான். மஸ்ரூம் சூப், பேன்கேக், ஹாட்டோக் ஆமலேட் என செய்து சூடு ஆறாமல் இருக்க ஹாட் காண்டேய்னரில் மூடி வைத்திருந்தாள் ஜீவா. டீயும் ப்ளாஸ்க்கில் சுட சுட இருந்தது.

 

“ராத்திரில இருந்து செம்ம அலைச்சல். பசி வேற!” என்றபடியே பேன்கேக்கில் கை வைக்கப் போன தீரனை ஒற்றை விரல் நீட்டி நோவென சொன்னான் ஜோனா.

 

“இது எனக்கே எனக்கானது! உனக்கு வேற செஞ்சி தரேன்” என்றவன் ப்ரேட் டோஸ்ட்டும் ஆம்லேட்டும் செய்து, வேறு டீயும் கலந்து கொடுத்தான் தீரனுக்கு.

 

முதலில் உணவை தர மறுத்தவன், தானே இவனுக்கு சமைத்துக் கொடுக்கவும் ஆச்சரியமானான் தீரன். இது வரை அவன் அன்னையைத் தவிர யாரும் இப்படி அவனுக்கு உணவிட்டதில்லை. என்னவோ ஜோனாவை அப்படிப் பிடித்தது தீரனுக்கு.

 

“லெட்ஸ் ஈட் பிஃபோர் டால்க்” என்ற ஜோனா மெல்ல ரசித்து, ருசித்து தனது உணவை உண்டான்.

 

தேவைக்கு அதிகமாக அவள் செய்து வைத்து சென்றிருக்க, வயிறு போதும் போதும் என சொன்னாலும் முழுதும் முடித்து விட்டுத் தான் நிமிர்ந்தான் ஜோனா. வயிறு நிறைய, நெஞ்சாங்கூடு மட்டும்  காலியானதைப் போல ஒரு ஃபீல். கண்கள் கரித்துக் கொண்டு வர, பாக்கேட்டில் வைத்திருந்த அவள் விட்டுப் போன கடிதத்தை ஆறுதலுக்காக தடவிக் கொண்டான். அவள் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி அவனுக்குப் புரியும்படி ஆங்கிலத்தில் செதுக்கி இருந்தாள் அந்த மடலை. பெட் சைட் டேபிளில் வைத்திருந்த கடிதம் பறந்துவிடாமல் இருக்க, தவளை கிட்டார் வாசிப்பது போல இருந்த குட்டியான சிலையை அதற்கு மேல் வைத்திருந்தாள் ஜீவா. அவ்வளவு நேரம் பைத்தியக்காரன் போல கத்திக் கதறியவனின் முகத்தில் அந்த சிலையைப் பார்த்ததும் மெல்லியப் புன்னகை வந்தது.

 

ஆழப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், அமைதியாக அமர்ந்து அந்தக் கடித்தத்தைப் படித்து முடித்தான். மனதில் பாரம் ஏறிக் கொள்ள, முகம் பலவகையான உணர்வுகளைக் காட்டியது. கடிதத்தை மடித்து அதற்கு மென்மையாய் முத்தமிட்டவன்,

 

“ஐ வில் மேக் யூ கம் டு மீ மூலான்” என சொல்லிக் கொண்டான்.

அதன் பிறகே தெளிந்த மனத்துடன் தனது போனை கையில் எடுத்தான். காண்டேக்டில் தீரனின் நம்பரை மட்டும் சேவ் செய்திருந்தாள் ஜீவா. சந்தேகத்துடன் கேலரியைத் திறந்துப் பார்க்க, ரகசியமாகவும், அவள் அறியவும் எடுத்து வைத்திருந்த எல்லா படங்களையும் அழித்து வைத்திருந்தாள் ஜீவா.

 

மெல்லிய புன்னகையுடன்,

 

“கேடி!” என திட்டிக் கொண்டான் தன்னவளை.

 

போனுக்கு சிம் போட்டவுடனே தனது ஆப்பிள் ஐ க்ளாவுட்டை ஆன் செய்து வைத்த தனது புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டவன், அதனுள்ளே போய் மீண்டும் அவளது படங்கள் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்துக் கொண்டான்.

 

“மிஸ் ஸ்மார்ட்டி பேண்ட்ஸ்க்கு(smarty pants) அவங்க மட்டும் தான் புத்திசாலின்னு நினைப்பு.” என சொல்லிப் புன்னகைத்துக் கொண்டவன், அதற்கு பிறகே தீரனுக்கு போன் செய்ய முனைந்தான்.

 

சாப்பிட்டு முடிக்க, தீரனே எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்து விட்டு வந்தான். ஹாலில் அந்தக் குட்டி தவளை சிலையை தடவியபடி, முகத்தில் புன்னகை தவழ அமர்ந்திருந்தான் ஜோனா. அவன் எதிரே போய் அமர்ந்தான் தீரன்.

 

“சொல்லுங்க ஜோனா! நீங்க காணாம போயிட்டீங்கன்னு மட்டும்தான் மத்தவங்களுக்குத் தெரியும்! ஆனா கடத்திட்டுப் போயிட்டாங்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்! என்னாச்சு? எங்க உங்கள கடத்தன அந்த பரதேசி? இங்க வந்த கையோட, வீட்டுல கடத்தல்காரன் இருக்கானான்னு சுத்தி வந்து, ஜன்னல் வழியா நோட்டம்லாம் விட்டுட்டுத்தான் கதவ தட்டுனேன். அவன் மட்டும் உள்ளே இருந்திருந்தா கார்ல இருக்கற உருட்டுக் கட்டைய எடுத்துட்டு வந்து பொளந்துருப்பேன்.  அந்த நேரத்துல உங்க போன் வரவும் தான் டென்ஷன்ல கடுப்பா பேசிட்டேன்” என்றான் தீரன்.

 

மெலிதாக நகைத்த ஜோனா,

 

“நீ உருட்டுக் கட்டையத் தூக்குறதுக்குள்ள உன்னை தரையில தள்ளி தாக்குத் தாக்குன்னு தாக்கிருப்பா! நீ நினைக்கற மாதிரி உங்க ஊர் நிவார் புயல் இல்ல அவ! எங்க ஊரு கத்ரீனா சூறாவளி” என்றான்.

 

“என்னாது!!!! அவளா???? பிட்சாக்காரன் இல்லையா அது? பிட்சாக்காரியா?” என வாயைப் பிளந்தவனுக்கு சற்று நேரம் பேச்சே வரவில்லை.

 

பின் முகம் மெல்ல மலர,

 

“எத்தனை பொண்ணுங்களுக்கு நான் அல்வா குடுத்துருப்பேன்! எனக்கே ஒருத்தி பிட்சா குடுத்துட்டாளே! ஐ லைக் இட் அண்ட் ஐ லைக் ஹெர்” என ரசித்து சொன்னவனை முறைத்தான் ஜோனா.

 

“லிசன் டு மீ ப்ரோ! அந்த பிட்சாக்காரி என்னோட பிலவட் வீட்டுக்காரி! இனிமே அவள ரிபர் பண்ணறப்ப மேடம்னு மட்டும்தான் உன் வாயில இருந்து வரனும்” என கடுகடுத்தான்.

 

ஜோனாவைப் பார்த்து மெலிதாய் விசிலடித்தான் தீரன்.

 

“கடத்தனவங்கள எதிர்த்து உடம்ப புண்ணாக்கிக்காம, டோட்டல் சரணாகதி அடைஞ்சிட்டீங்க! ஐ லைக் திஸ் அமெரிக்கன் அப்ரோச்!” என நமுட்டு சிரிப்பு சிரித்தான் இவன்.

 

‘என்னைப் பார்த்து நக்கலா சிரிக்கறியா? கூடாதே!’ என நினைத்த ஜோனா,

 

“என்னைப் பத்திரமா கூட்டி வர வேண்டிய நீ, ப்ரீ பிட்சா சாப்பிட்டு கவுந்து கிடந்தது மிஸ்டர் ஜெய்க்கு தெரியுமா?” என மிதப்பாகக் கேட்டான்.

 

“ஐயோ தெய்வமே! டைரக்டருக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது! வேற என்னவெல்லாமோ சொல்லி அவர கரேக்ட் பண்ணி வச்சிருக்கேன்! தயவு செஞ்சு என் பொழப்புல மண்ணைப் போட்டுறாதீங்க ஜோனா சார்! இந்தக் கையை உங்க காலா நெனைச்சுக் கேக்கறேன், காத்துல ஆடி அசைஞ்சு எரிஞ்சுட்டு இருக்கற என் வாழ்க்கை எனும் விளக்க, ப்பூன்னு ஊதி அமிச்சிடாதீங்க! என்னை மட்டும் காப்பாத்தி விட்டிங்கன்னா உங்களுக்கும் மேடத்துக்கும் ஒவ்வொரு குழந்தைப் பொறக்கறப்பவும் எனக்கு மொட்டைப் போட்டுக்கிட்டு மருத மலைக்கு நடந்தேப் போய், ‘மருதமலை மாமணியே முருகைய்யா’ன்னு தொண்டைத் தண்ணி வத்தப் பாடிட்டி வரேன்”

 

அவன் சொல்லிய விதத்தில் சிரிப்பு வந்தாலும், தங்கள் பிள்ளைகள் என சொன்னது இதமாகவும் இருந்தது ஜோனாவுக்கு.

 

“அப்போ மூனு மொட்டைப் போட ரெடியாகிக்கோ” என புன் சிரிப்புடன் சொன்னான் ஜோனா.

 

“போட்டுடலாம் ஜோனா சார்!” என இவன் சொல்ல கதவு படபடவென தட்டப்பட்டது.

 

தீரன் எழுந்துப் போய் கதவைத் திறக்க, அங்கே ஜெய்யும் போலிஸ்காரர்களும் நின்றிருந்தார்கள்.

 

‘இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது இந்த இடம்?’ என இவன் முழிக்க, பளீரென ஓர் அறை விழுந்தது ஜெய்யிடம் இருந்து.

 

“ஜோனாவக் கண்டுப்புடிச்சிட்டத என் கிட்ட ஏன்டா சொல்லல?” என கேட்டப்படியே உள்ளே வந்தார் ஜெய்.

 

கன்னத்தை ஒரு கையால் தாங்கியபடியே போலிஸ்காரர்கள் பின் தொடர வந்தான் தீரன்.

 

“ஜோனா! ஆர் யூ ஓகே? இங்க எப்படி நீ?” என கேட்டப்படியே வந்த ஜெய், எழுந்து நின்றிருந்த ஜோனாவைத் தழுவிக் கொண்டார்.

 

அவர் அணைப்பில் உடல் விறைத்தவன், சட்டென விலகிக் கொண்டான்.

 

ஜோனா கிரேடிட் கார்ட் பயன்படுத்தி இருக்க, அதை வைத்து இவனை ட்ரேஸ் செய்திருக்கிறார்கள் போலிஸ்காரர்கள். மாலுக்கு வந்து அவர்கள் ஷோப்பிங் செய்த பூட்டிக் சீசீடிவி புட்டேஜை கை வசப்படுத்தி, கடை சிப்பந்திகளிடம் விசாரிக்க,

“சார், அந்த வெள்ளைக்காரர் ரொம்ப அழகா இருந்தாரு. அவர் கூட வந்தது ஆம்பளையா பொம்பளையான்னே தெரியலை. அதான் ஒரு ஆர்வத்துல நான் நோட்டம் விட்டுட்டே இருந்தேன். அவங்க xxx பீச் காட்டேஜ் போகற முன்ன க்ரோசரி வாங்கனும்னு பேசிட்டு இருந்தாங்க” என ஒருத்தி ஞாபகப்படுத்தி சொன்னாள்.

 

பீச் காட்டேஜ் பெயர் தெரிந்ததும் உடனே இங்கே வந்திருந்தார்கள். அதற்குள் அவர்களை தீரன் முந்தி இருந்தான்.

 

போலிஸ்காரர்களை நோக்கி,

 

“ஹலோ ஆபிசர்ஸ்!” என கைக்குலுக்கிய ஜோனா,

 

“நான் இந்தியாவுக்கு வந்தது மிஸ்டர் ஜெய் கேட்டுக்கிட்டதுனாலத்தான். பட் ஸ்டில் இங்க வந்து நான் என்ன செய்யறேன், எங்க போறேன்னு யாருக்கு இன்பார்ம் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லைன்னு நெனைக்கிறேன்! நான் ஒரு சுதந்திர மனுஷன். எல்லாத்தையும் எல்லோர்கிட்டயும் சொல்லிட்டு செய்யற ஊருல இருந்து நான் வரல! ஒரு க்ரேட் சிங்கர கிரிமினல் மாதிரி வலை வீசி தேடி வந்தது என் தனி மனித சுதந்திரத்துல தலையிட்ட மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது! எங்க ஊர் போலிஸ் கிட்ட இதப்பத்தி ரிப்போர்ட் பண்ண போறேன் நான்” என அலுங்காமல் குண்டைத் தூக்கிப் போட்டான் ஜோனா.

 

வந்த போலீஸ்காரர்களில் பெரிய ரேங்க் உள்ளவர், தங்களது செயலுக்கு மன்னிப்புக் கேட்டு பெரிய விஷயமாக்க வேண்டாம் இதை என சொல்லி அவனை சமாதானப்படுத்த முயன்றார். ஜெய்யோ ஆவென வாயைப் பிளந்து நின்றார். ஜெய் கொடுத்த அறையில் வாடிப் போய் நின்றிருந்த தீரனுக்கு அவரின் நிலை குதூகலமாய் இருந்தது.

 

போனால் போகிறது என்பது போல ஜோனா பேசி அவர்களை வழி அனுப்ப, ஜெய்யை வெளிய அழைத்துப் போய் நன்றாக மண்டகப்படி கொடுத்தனர் காவலாளிகள்.

 

“யோ! எங்க டி.ஐ.ஜி சொன்னாருன்னு உனக்காக இந்த விஷயத்துல இறங்குனா, எங்கள இண்டெர்நேஷனல் இஷூல சிக்க வைக்கப் பார்த்தல்ல! அவன் என்னடான்னா ட்ரம்ப்ப தெரியும், பைடன்ன தெரியும், கமலா ஹாரிச தெரியுங்கற லெவலுக்கு பேசறான்! தமிழ் நாட்டு போலிஸ் என்ன தக்காளி தொக்கா போச்சா உனக்கு! இனிமே பாட்டுக்காரன காணோம், ஆட்டக்காரன காணோம்னு ஸ்டேஷனுக்கு வா, லாடம் கட்டறோம் உன்னை!” என மிரட்ட, ஜெய் அவர்களுக்குப் பிடித்த வகையில் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

 

அவர்கள் போனதும் காட்டேஜின் உள்ளே வந்த ஜெய்,

 

“என்ன ஜோனா இது? என் படத்துல நடிக்க வரேன்னு சொல்லிட்டு, திடீர்னு காணாம போயிட்ட! உங்கம்மா போனை போட்டு என்னை தாளிச்சு எடுத்துட்டா. இப்போ கூட அவள சென்னையில ஹோட்டல்ல தங்க வச்சிட்டு ஓடி வரேன் உன்னைத் தேடி! ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ் அட்டிடியூட் ப்ரம் யூ!” என ஜோனாவிடம் சத்தம் போட்டார்.

 

“ஷ்!!!! சத்தம் போடாதீங்க! ராத்திரி எல்லாம் சரியா தூங்காதது தலையை வலிக்குது!” என்றவன் நெற்றியைத் தேய்த்தவாறே,

“என் கிட்ட சத்தம் போட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு டைரக்டர் சார்? நாம இன்னும் அக்ரீமெண்ட் கூட சைன் பண்ணலியே?” என கேட்டான்.

 

“என் உரிமையைப் பத்தியா கேக்கற? ஹவ் டேர் யூ? நான் உன்..” என ஆரம்பித்தவர் தீரனைப் பார்த்து அப்படியே பேச்சை நிறுத்திக் கொண்டார்.  

 

அவரை அலட்சியமாகப் பார்த்தவன்,

 

“என்னாச்சு? பேச்சு பாதியிலே சிக்கிக்கிச்சு! முடியலல்ல! சொல்ல முடியல இல்ல!” என சத்தமாக சிரித்தான்.

 

“நான் இங்க வந்ததே நடிக்க எனக்கு இஸ்டம் இல்லைன்னு உங்க முகத்துக்கு நேரா சொல்லிட்டு வந்த வழியே போறதுக்குத்தான். ஆனா இப்போ சொல்றேன் மிஸ்டர் ஜெய்க்குமார், நான் நடிக்கப் போறேன்”

 

அவன் கூற்றில் ஆனந்தமானவர், வேகமாய் அவனை நெருங்கி அணைத்துக் கொண்டார். அவன் காதருகில் தீரனுக்கு கேட்காத மிக மெல்லிய குரலில்,

 

“என் ரத்தம்டா நீ! எனக்கு ஒன்னுன்னா கண்டிப்பா உனக்குத் துடிக்கும்னு தெரியும்! இதான்டா அப்பன் மவன் உறவு மை சன்” என குதூகலமாக சொன்னார்.

 

அவரை தள்ளி நிறுத்தியவன்,

 

“நடிக்கப் போறேன்னு சொன்னேனே தவிர, உங்க டைரக்‌ஷன்ல நடிக்கப் போறேன்னு சொல்லலியே மிஸ்டர் ஜெய்க்குமார்!” என நக்கலாக சிரித்தவன், தீரனை நெருங்கி அவன் தோள் மேல் கைப்போட்டு,

 

“மீட் மிஸ்டர் தீரன்! நான் ப்ரோடியுஸ் செஞ்சு நடிக்கப் போற படத்தோட டைரக்டர்” என அறிமுகப்படுத்தினான்.

 

கேட்ட இரண்டு பேரில் யார் அதிக அதிர்ச்சி அடைந்திருப்பார் என உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.  

 

ஜோனாவைக் கட்டித் தழுவியவன்,

 

“பாஸ்! இந்த தீரன் இனி உங்க அடிமை பாஸ்! என்ன தூக்கி எறிஞ்சு பந்தாடனவங்க மத்தியில என்னையும் ஒரு மனுஷனா நிக்க வைக்கறீங்க பாருங்க, இந்த உயிர் உள்ள வரைக்கும் உங்க காலுக்கு செருப்பா இருப்பேன் பாஸ்! உங்கள நடிக்க வச்சு ஹிட் படம் குடுத்து, உங்க பணத்த பெருக்கிக் குடுப்பேன் பாஸ்! இது எங்காத்தா மேல சத்தியம்” என உணர்ச்சி வசப்பட்டான் தீரன்.

 

அவன் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்தவன்,

 

“அந்த ஆள கிளப்பி விடு! ஐ நீட் டு டேக் ரெஸ்ட்” என அபிசியலாக முதல் வேலையைக் கொடுத்தான் தீரனுக்கு.

 

தீரனின் முகம் அதிர்ச்சியில் இருந்து மெல்ல தெளிந்து, பூரிப்படைந்து, திமிரைப் பூசிக் கொண்டது. ஜெய்யை நக்கலாகப் பார்த்தவன்,

“சாரே! நீங்க இங்க நிக்கறது எங்க பாஸுக்கு செம்ம இரிட்டேடிங்கா இருக்காம்! அவர் என்ன சொல்றாருன்னா ஜரகண்டி, ஜரகண்டி!!! அதாவது கெளம்பு கெளம்பு குவீக்கா கெளம்புன்னு! பாரேன், தெலுங்கு படத்த அப்படியே சுட்டு தமிழ்ல குடுக்கற உங்களுக்கே அர்த்தம் சொல்றேன்!” என்றவன் கதவைப் பெரிதாகத் திறந்து வைத்தான்.

 

தீரனை முறைத்த ஜெய் ஜோனாவைத் திரும்பிப் பார்த்து,

 

“ஜோனா, இது கொஞ்சம் கூட சரியில்ல! என் கிட்டயே உன் வேலையைக் காட்டறியா? விதை போட்டவன் கிட்டயே விளையாடிப் பார்க்கறயா? என்னை பகைச்சிக்கறது உனக்கு நல்லது இல்லடா! ஒழுங்கா என் கூட வந்துடு!” என மிரட்டினார்.

 

“தீர்!!! ஐம் கோயிங் டூ டேக் எ நேப்! நான் எழுந்து வரப்போ என் டார்லிங்கோட வீட்டுல பாசிட்டிவ் வைப்ரேஷன் மட்டும்தான் இருக்கனும்!” என சொன்னவன், கொட்டாவி விட்டப்படியே படுக்கையறைக்குள் நுழைந்தான்.  

 

“ஜோனா, ஜோனா! நில்லு ஜோனா” என ஜெய் கத்த,

 

“சொய்க்குமாரு!!!! சத்தம் போடாம கெளம்பிடு சாமி! திட்டித் திட்டிப் போட்டாலும் உன் கையால சோறு தின்னுருக்கேன்! அந்த நன்றிக்கடன் தான் பொறுமையா போக சொல்லுது! என்னோட பொறுமை எருமையா ஆகறதுக்குள்ள கெளம்பிடறது நல்லது!” என கடுப்பான குரலில் தீரன் சொல்ல,

 

“இப்போ போறேன்டா! உங்க ரெண்டு பேரையும் என்ன செய்யறேன்னு மட்டும் பொருத்திருந்து பாருங்கடா! ஜெய்க்குமார் கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ் நவ்” என சொல்லியவர் விடுவிடுவென கிளம்பிப் போனார்.

 

கதவை சாற்றி விட்டு ஸ்டைலாக ஒற்றைக் கையைத் வளைத்து வளைத்து ஆட்டிக் கொண்டே பாடியபடி வந்தான் தீரன்.

 

“ஹே ரகிட ரகிட ரகிட …ஊ

ரகிட ரகிட ரகிட…ஊ

ஜோனாக்கு கூஜாவா நான் வாழுறேன்..

எதுவும் இல்லைனாலும் ஆளுறேன்!!!!!”

 

சென்னையில் புகழ் பெற்ற அந்த ஹாஸ்பிட்டல் வளாகத்துக்குள் நுழைந்தாள் ஜீவா. பெரிய மூச்சை எடுத்து தன்னை சமன் படுத்திக் கொண்டவள், அந்த அறையின் கதவை மெல்ல தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். அசந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த மனிதர் மெல்ல கண் விழித்தார். இவளைப் பார்த்ததும், கண்கள் ஒளிர்ந்து புன்னகை வரப் பார்க்க, முயன்று அதை அடக்கினார்.

 

அவர் அருகில் போய் அமர்ந்த ஜீவா,

 

“டாடி! எப்படி இருக்கீங்க?” என கேட்டாள்.

 

“நான் நல்லா இருக்கேன்! ஒரு மேசிவ் அட்டாக்லாம் என்னை ஒன்னும் செஞ்சிடாது! நீ சொல்லு, என்ன முடிவு எடுத்திருக்க?” என கேட்டார் அவர்.

 

“டாடி..”

 

“கமான் ஜீவா! ஸ்பீக் ஆப்! ஐ டேண்ட் லைக் டில்லி டேலியிங்(முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவது)! நீ கேட்ட அளவுக்கு உனக்கு டைம் குடுத்தாச்சு! சொல்லு” என குரலை உயர்த்தினார்.

 

“எனக்கு மேரேஜ் வேணாம் டாடி! கம்பெனிய நான் பொறுப்பெடுத்துக்கறேன்” என பிசிறில்லாத குரலில் தெளிவாக சொன்னாள் ஜீவா!

 

அவளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தவர்,

 

“வெல்கம் டு ஜீவானந்தம் செக்கியூரிட்டி செர்விஸ்!” என சொல்லி அவள் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

 

அவர் முன்னே சந்தோஷமாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டவள், சற்று நேரம் அங்கே இருந்து விட்டுக் கிளம்பினாள். தனது அபார்ட்மெண்டுக்கு வந்தவள், குளித்து விட்டு துண்டுடன் கண்ணாடி முன் வந்து நின்றாள்.

 

தோள் பகுதியில் சிவப்பாய் தெரிந்த தடத்தைத் தடவிப் பார்த்தவளுக்கு, கண்களில் கண்ணீர் மளுக்கென வழிந்தது.

 

“இனி நீ என் ஜீவா! எனக்கே எனக்கான மூலான்! மார்க் போட்டுட்டேன் உன் மேல!” என சொல்லி சிரித்தவன் முகம் கண் முன்னே வந்துப் போனது!

 

மழை மகள் ஆசீர்வதித்து, மங்கள மணி ஓசை முழங்க தன் கழுத்தில் அவன் போட்ட ஜே பெண்டன் வைத்த சங்கிலியைத் தடவிப் பார்த்தவள், அப்படியே தரையிலேயே குறுகிப் படுத்துக் கொண்டாள்.

 

“ஐ லவ் யூ ஜோனா! லவ் யூ சோ மச்!!!!”

 

மயங்குவாள்…..

 

(போன எபிக்கு லைக், காமேன்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ்! கேட்ட கேள்விக்கு முக்கால் வாசி பேர் கரேக்டா பதில் சொல்லி இருந்தீங்க. அந்த லாக்கேட்ட அவ தாலியாத்தான் நினைக்கறா! ஏன் பிரிஞ்சு வந்தான்றது இனி கொஞ்சம் கொஞ்சமா ரிவீல் ஆகும். அடுத்த எபில சந்திக்கற வரைக்கும் லவ் யூ ஆல் டியர்ஸ்)