MMM–EPi 12

122620776_740997409820929_9109553537495410146_n-4a03921c

அத்தியாயம் 12

 

“வட் தெ ஹெல்!!!! உங்க கிட்ட இப்படி ஒரு கெர்லெஸ்னெஸ்ச நான் எதிர்ப்பார்க்கவேயில்ல சீனியர். நம்ம டீம்லயே நீங்கதான் தி பெஸ்ட்! அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் உங்கள அவருக்கு பாடிகார்ட்டா போட்டேன். ஆனா என் நம்பிக்கைய பொடி பொடியாக்கிட்டீங்க நீங்க! உங்க வயச மறந்து நான் இன்னும் கடுமையாத் திட்ட ஆரம்பிக்கறதுக்குள்ள, ப்ளீஸ் வெளிய போங்க!” என கோபமாக சொன்னாள் ஜீவா.

 

எவ்வளவு முயன்றும் உடல் நடுங்கத் தொடங்கியது அவளுக்கு. முன்னால் நிற்பவரின் மேல் எதையாவது தூக்கி அடித்து விடுவோமோ என அச்சம் சூழ்ந்துக் கொண்டது. கைகளை அழுத்தமாக மேசை மேல் வைத்துக் கொண்டவள், கால்களை அழுத்தி தரையில் ஊன்றி நின்றாள்.

 

“ஜீவா!! நான் சொல்லறத கொஞ்சம்..”

 

அவரை முடிக்க விடாமல் கதவைச் சுட்டிக் காட்டியவள்,

 

“ப்ளீஸ்” என முயன்று சொன்னாள்.

 

அவரும் ஒரு பெருமூச்சுடன் வெளியேறிவிட்டார்.

 

வேகமாக சென்று கதவைப் பூட்டியவள், தனது இருக்கையில் வந்து பொத்தென அமர்ந்தாள். உடல் சூடாகி, முத்து முத்தாய் வியர்க்க ஆரம்பித்தது. ஆழ மூச்செடுத்து விட்டவள்,

 

“ஜோனாவுக்கு ஒன்னும் ஆகல! ஹீ இஸ் சேவ் ஜீவா! ஹீ இஸ் சேவ் நவ்! டோண்ட் ஓவர் ரியாக்ட் ஜீவா! கால்ம் டவுன்” என தன்னைத் தானே தேற்ற ஆரம்பித்தாள்.

 

பின் எழுந்துக் கொண்டவள், தனது காபினுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் நடையிட்டாள். போனைக் கையில் எடுத்து தற்பொழுது ஜோனா இருக்கும் ஹாஸ்பிட்டலில் பாடிகார்ட்டாக நியமித்திருப்பவருக்கு கால் செய்தாள் ஜீவா. ஜோனாவின் உடல்நிலையைப் பற்றி மீண்டும் இவள் விசாரிக்க, நலமாய் இருக்கிறான், சொற்ப காயம் மட்டுமே எனும் அதே பதிலில் காலை கட் செய்தாள்.

 

தனது மேசையை நெருங்கியவள், இழுப்பறையை நடுங்கும் கரத்தால் திறந்தாள். அதில் ப்ரேம் செய்து வைத்திருந்த அவர்கள் இருவரின் செல்பியை வெளியே எடுத்தவள், அதையே சிறிது நேரம் கண் கொட்டாமல் பார்த்திருந்தாள். கிளம்பி வருவதற்கு முன், ஜோனாவின் போனில் இருந்து அந்தப் படத்தைத் தன் போனிற்கு அனுப்பி இருந்தாள் ஜீவா. அதில் அவன் ஈயென எல்லாப் பல்லையும் காட்டி இருக்க, இவள் மெலிதாய் புன்னகைத்திருந்தாள். அவனின் பிம்பத்தைத் தடவிக் கொடுத்தவள்,

 

“நீ கிளம்பி அமெரிக்காவுக்கே போய்டுவன்னு நெனைச்சேனே! இங்கயே இருந்து ஏன்டா என் உயிர எடுக்கற! ஓ காட்! உன்னை போடான்னு ஒதுக்கித் தள்ளவும் முடியல, இருடான்னு கிட்ட சேர்த்துக்கவும் முடியல! இம்சைடா நீ! என் செல்ல இம்சை” என திட்டியவள், போட்டோவை எடுத்த இடத்திலேயே வைத்தாள்.

அறிவு போகாதே என எவ்வளவு தடுத்தும், மானங்கெட்ட மனம் அவனைப் பார்க்க போக சொல்லி விழுந்து புரண்டு கெஞ்சியது. மனமும் மதியும் போட்டியிட்டதில் மனம் ஜெயிக்க, ஜோனா அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பிப் போனாள் ஜீவா.

 

ஜேஜே ப்ரோடக்‌ஷன் என புதிதாக ஒரு பட நிறுவனம் தங்களது சேவையை நாடி இருக்கிறார்கள் என கேள்விப்பட்டப் போது அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டாள் இவள். கஸ்டமரைப் பார்த்துப் பேசுவது, அவர்களுக்கு ஏற்ற பாடிகார்ட்டுகளை நியமிப்பது எல்லாவற்றையும் ஆபரேஷன் டிபார்ட்மேண்ட் பார்த்துக் கொள்வார்கள். ஜீவானந்தம் செக்கியூரிட்டி சர்விஸின் முழு பொறுப்பும் இவளது என்றாலும், மனிதவள துறை மட்டும் இவளது நேரடிப் பார்வையின் கீழ் வரும். புதிதாக வேலைக்கு வருபவர்களை பேட்டி எடுத்து வேலைக்கு சேர்ப்பது, அவர்களின் அனுபவத்தைப் பார்த்து ஊதியத்தை நியமிப்பது எல்லாம் இவளது கண்காணிப்பில் தான் நடக்கும்.

 

ஜே.ஜே ப்ரோடக்ஷனின் பிரதிநிதி மட்டும் ஜீவாவையே நேரில் பார்த்து பேசித் திருப்தி அடைந்தால் மட்டுமே அவர்களின் சர்வீசை பயன்படுத்திக் கொள்வோம் என பிடிவாதம் பிடிக்க, விஷயம் இவள் காதுக்கு வந்தது. இதை கூட ஹேண்டில் செய்ய முடியாதா என ஆபரேஷன் டீமை காய்ச்சி எடுத்தவள், அந்நிறுவனத்தின் பைலை மேலோட்டமாகத்தான் பார்த்தாள். பார்த்தவளின் பார்வை அலேக்‌ஷாண்டர் ஜோனா எனும் பெயரில் ஆணி அடித்து நின்றது. பிறகு நுணுக்கமாக படித்துப் பார்த்தவள், அவர்களின் பிரதிநிதியை நேரில் சந்தித்தாள். இருவரும் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களுக்கு ஒத்துக் கொண்டதும், தனது டீமில் இருந்த மிகவும் அனுபவமிக்க ஒருத்தரையும், அவருக்கு உதவியாய் இன்னும் இருவரையும் தானே நியமித்தாள் ஜீவா. ஜோனாவின் பாதுகாப்புக்காக இவள் பார்த்து பார்த்து எல்லாம் செய்தும், இந்த தரமான சம்பவம் நடந்திருந்தது.

 

காரை செலுத்திக் கொண்டிருந்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தான் கடந்து வந்த வாழ்க்கையை அசைப் போட்டபடியே காரை ஓட்டினாள் ஜீவா.

 

இந்தியாவில் மேல்நிலைப் படிப்பை முடித்தக் கையோடு ஜீவானந்தம் இவளை வெளிநாட்டில் பாடிகார்ட் ட்ரைனிங் கோர்ஸில் சேர்த்து விட்டார். அதோடு ஃபயர் ஆர்ம்ஸ் உபயோகப்படுத்துவற்குறிய பயிற்சி, அதி வேக கார் ஓட்டப் பயிற்சி என இந்தத் தொழிலுக்கு சம்பந்தப்பட்டதை எல்லாம் படிக்க வைத்தார். இங்கிருக்கும் போதே கிக்பாக்ஸிங், க்ராவ்-மகா(ஒரு வகையான செல்ப் டிபேன்ஸ்), களரி, சிலம்பம் எல்லாம் இவரே மகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார். படிப்பை முடித்து வந்தவளை அவரே நேரிடையாக பயிற்சி கொடுத்து தனது நிறுவனத்தில் வேலைக்கும் வைத்துக் கொண்டார்.

 

ஆசை மனைவி பெண் வாரிசை தன் உயிரைக் கொடுத்து விட்டுப் போயிருக்க, இன்னொருத்தியை மணந்து ஆண் பிள்ளை பெற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை இவருக்கு. தான் பாடுபட்டு வளர்த்த தொழிலை மகள் கட்டிக் கொள்ளும் ரத்த சம்பந்தம் இல்லாத மருமகனுக்கு விட்டுப் போவதை விட, தன் வாரிசே அதை வழி நடத்தி சொந்தக் காலில் நிற்க வேண்டும் என விரும்பினார் ஜீவானந்தம். ஜீவாவை இந்தத் தொழிலுக்கு ஏற்றவளாய் வளர்த்து, வளைத்து தனது சாம்ராஜ்யத்தைக் கையில் கொடுத்திருந்தார் அவர். தந்தை சொல் வேதம் என வளர்க்கப்பட்டவள், ஒரு கட்டத்தில் மனம் வெம்பி வெதும்பிப் போய் தப்பான முடிவு எடுக்க முயன்ற போது, தொட்டபெட்டா சூசைட் பாயிண்டில் ஞானம் பெற்று மறுபடியும் தகப்பனே கதி என சரணடைந்திருந்தாள்.   

 

ஹாஸ்பிட்டல் போகும் வழியில் ஒரு ப்ளோரிஸ்டைப் பார்த்தவள், காரை நிறுத்தி இறங்கினாள். நட்புக் கரம் நீட்ட என்ன பொக்கே கொடுப்பார்கள் என கூகுளைப் பார்த்து, மஞ்சள் வர்ண ரோஜாக்களை வாங்கினாள் ஜீவா. அதோடு கெட் வெல் சூன் என எழுதியிருந்த குட்டி கார்ட் ஒன்றை வாங்கியவள்,

 

“உன்னை வேகமாய் காற்று மோதினால் கூட மனமுடைந்துப் போவேன் நான். ஆதவன் உன்னை லேசாய் எரித்தால் கூட சித்தம் கலங்கிப் போவேன் நான். மழை உன்னை நனைத்தால் கூட நடுநடுங்கிப் போவேன் நான். ப்ளீஸ் ஜோனா, ப்ளீஸ் ஸ்டே சேவ்! லவ் ஜீவா” என மனதில் மட்டும் எழுதி, கார்டில் வெறும் சைன் மட்டும் வைத்தாள். 

 

ஜோனா அனுமதிக்கப்பட்டிருக்கும் விஐபி அறையை நெருங்கியவள், தனது செக்கியூரிட்டி ஆட்களைப் பார்த்து தலை அசைத்தாள்.  பதிலுக்கு வணக்கம் வைத்தவர்கள் ரூமின் உள்ளே அவளை அனுமதித்தார்கள். ஆழ மூச்சை இழுத்து விட்டுத் தன்னை சமன் செய்தவள், கதவை மெல்ல தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.

 

அங்கே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான் ஜோனா. சத்தம் செய்யாமல் அவசரமாய் அவனை நெருங்கியவள், தலை முதல் கால் வரை அவனை ஸ்கேன் செய்தாள். மேல் சட்டை இல்லாமல் இருந்தவனின் இடது பக்க தோளில் பேண்டேஜ் போடப் பட்டிருந்தது. வலது காலில் சிராய்ப்புக் காயங்கள். அதற்கு கட்டுப் போடாமல் மருந்து மட்டும் பூசி இருந்தார்கள்.

 

ஜோனா படம் நடிக்கப் போவதை இன்னும் ரகசியமாக வைத்திருந்தாலும், எப்படியோ விஷயம் வெளியே கசிந்திருந்தது. போட்டோ ஷூட்டுக்காக ஸ்டூடியோ வந்திருந்தவனை சில ரசிகைகள் சூழ்ந்துக் கொள்ள, எவ்வளவு தடுத்தும் ஒருத்தி மேலே பாய்ந்து விட இருவரும் தரையில் உருண்டதில் தான் இந்தக் காயங்கள். ஆண்கள் என்றால் அடித்து விளாசி தள்ளி இருப்பார்கள் ஜீவா வைத்த பாடிகார்ட்டுகள். பெண்களாய் போய் விட, அதிக கடுமை காட்ட முடியாமல் அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.   

 

ஜீவாவுக்கு தன்னிச்சையாக கைகள் உயர்ந்தன அவன் தோளைத் தடவிக் கொடுக்க.

 

“டோண்ட் யூ டேர் டச் மீ! அந்நிய ஆட்கள் தொட்டா எனக்கு அறவே பிடிக்காது!” எனும் ஜோனாவின் குரலில் கையைப் பட்டென இறக்கிக் கொண்டாள் ஜீவா.

 

அவன் முகத்தை நோக்க, இன்னும் கண்கள் மூடித்தான் இருந்தன.

 

“எப்படி இருக்கீங்க ஜோனா சார்? ஐ எம் எக்ஸ்ட்ரீம்லி சாரி..” என அவள் சொல்லி முடிப்பதற்குள், கண்ணைத் திறந்து அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

 

“எதுக்கு சாரி மிஸ்? உங்கள நான் முன்னப் பின்னப் பார்த்தது கூட இல்லையே! என் கிட்ட எதுக்கு சாரி கேட்கறீங்க?” என ஆச்சரியமாகக் கேட்டான்.

 

சில நிமிடங்கள் அமைதி காத்தவள்,

 

“எங்க பாதுகாப்புல இருக்கும் போது உங்களுக்கு அடிப்பட்டதுல நாங்க ரொம்ப வருத்தப்படறோம். இனிமே…” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

“கையில வச்சிருக்கற பொக்கே எனக்கா?” என கேட்டான் ஜோனா.

 

ஆமென தலையசைத்தவள், அவனிடம் அந்த மஞ்சள் மலர்களை நீட்டினாள்.

 

கையில் வாங்கிக் கொண்டவன், நீர் கோர்த்திருந்த அதன் இதழ்களை மெல்லத் தடவிக் கொடுத்தான்.

 

“எனக்கு ரொம்ப புடிச்ச பெண்ணொருத்தியோட லிப்ஸூம் இந்த ரோஸ் பெட்டல் போலத்தான் ரொம்ப மென்மையா இருக்கும். என் உதடும் அவ உதடும் ஒட்டிக்கிட்டா பிரிச்சு எடுக்கவே மனசு வராது! அவ்வளவு மென்மையான அவ உதட்டுக்கு வலிமையான மெக்னேட்டோட பவர் இருக்கு. காந்தமா இழுத்துக்கும் என்னை. ம்ப்ச்! ஐ மிஸ் ஹேர் சோ மச் யூ க்நோ” என பேசிக் கொண்டே போனவனின் கைகள் தன்னிச்சையாக ரோஜா இதழ்களை உதிர்த்து மூலான் என அடுக்கியது பெட்டின் ஓரத்தில். 

 

வெள்ளை விரிப்பில் மஞ்சள் எழுத்துகள் மிக அழகாய் தெரிந்தன. மென்னகையுடன் அதைப் பார்த்திருந்தவனின் முகம் மெல்ல கோபமாய் மாற,

 

“ஐம் கோன சூ யூ! நான் போடற கேஸ்ல, எனக்கு கம்பென்செட் பண்ணறதுக்குள்ள உண்டு இல்லைன்னு ஆகிடுவீங்க நீங்க! கம்பேனிய இழுத்து மூடிட்டு போகற வரைக்கும் சும்மா விட மாட்டேன் நான்! இந்த ஜோனா அவ்ளோ ஈசியா போய்ட்டானா உங்களுக்கு? நீங்க அப்பாயிண்ட் செஞ்ச பாடிகார்ட்ஸோட அலட்சியப் போக்குனாலத்தான் நான் இங்க வந்துப் படுத்து கிடக்கேன். வாய்ஸ் என்னோட சைட் அசேட்னா இந்த முகம் தான் என்னோட மேய்ன் அசேட்! இந்த முகத்தப் பார்த்துத்தான், அதோட அழக பார்த்துத்தான் என் ஆல்பம் முக்கால் வாசி வித்துப் போகுது. தோளுல பட்ட காயம் முகத்துல பட்டிருந்தா என் கேரியரே ஸ்போயில் ஆகியிருக்கும் டாமிட்!  பாடிகார்ட்னா என்னான்னு தெரியுமா? இதோ”

 

ஒரு விரல் நீட்டி தன் உச்சி முதல் உள்ளங்கால் வரை மெதுவாய் சுட்டிக் காட்டியவன்,

 

“இந்த பாடிக்கு கார்ட்டா இருக்கனும்! சிறு கீறல் கூட இல்லாம இந்த உடம்ப பாதுகாத்துக் குடுக்கனும்! உங்களுக்கும் உங்க ஆளுங்களுக்கும் அதுல பேஸிக் நாலேட்ஜ் கூட இல்லை போலிருக்கே!” என சத்தமாக சொன்னவன்,

 

“பாஸ் மனச கீறி வேடிக்கைப் பார்த்தா, அவளோட எப்ம்ளாயிஸ் என் உடம்ப கீறி வேடிக்கைப் பார்க்கறானுங்க” என முணுமுணுத்தான்.

“ஜோனா சார்!” என இவள் பேச ஆரம்பிக்க,

 

“நீங்க வச்ச பாடிகார்ட் எல்லாரும் இர்ரேஸ்போன்சிபள் இடியட்ஸ்!” என இடைவெட்டினான் அவன்.

 

“ஜோனா சார்!” என இவள் மீண்டும் ஆரம்பிக்க,

 

“யூஸ்லெஸ் பஃபலோஸ்!”

 

“ஜோனா சார்!!!!”

 

“பார்பரிக் பைசன்ஸ்!”

 

“ஜோனா!!!!”

 

சார் காணாமல் போயிருக்க, இவனுக்கு புன்னகை வந்தது. கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன்,

 

“என்னா?” என கேட்டான்.

 

“இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்காது! அதுக்கு நான் காரேண்டி” என இவள் சொல்ல, ரூமின் கதவு திறந்தது.

 

இவளைப் பார்த்ததும் காச்மூச்சேன கத்த ஆரம்பித்தான் உள்ளே வந்த தீரன்.

 

“யார கேட்டு இங்க வந்தீங்க நீங்க? மேனேஜ்மேண்ட் ஒரு லேடி கையில மாறி போச்சுன்னு தெரியாம உங்க கம்பேனி சர்வீசுக்கு சைன் பண்ணிட்டேன் நான்! என்னோட மிஸ்டேக் இப்ப எங்க பாஸ படுக்க வச்சிருச்சு! போதும்! நீங்க செஞ்சது எல்லாம் போதும். நாங்க ஆம்பள வச்சு நடத்தற வேற செக்குரிட்டி கம்பேனி பார்த்துக்கறோம்! தயவு செஞ்சு வெளிய போங்க!” என அவள் முன்னே ஒற்றை விரல் நீட்டி படபடவென பொரிந்தான் அவன்.

 

பட்டென அவன் விரலைப் பிடித்து இழுத்து கையை மடக்கி அவன் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து அழுத்தியவள்,

 

“பொண்ணுன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா? ஏன் நாங்க ப்ளேன் ஓட்டலியா, நிலாவுக்குப் போகலியா இல்ல எவரேஸ்ட் ஏறலியா? அதென்னா ஆம்பள வச்சு நடத்தற கம்பேனிக்கு போறேன்னு ஏத்தமா சொல்லற! போன தடவை பிட்சால தூக்க மருந்து தான் வச்சேன். ஒரேடியா தூங்கற மருந்து வைக்கற அளவுக்கு என்னை காண்டாக்கிடாதே! பீ கேர்பூல்” என்றவள் தீரனை உதறித் தள்ளினாள்.

 

வலியில் கையை உதறிக் கொண்டவன்,

 

“இதென்னா வர்மக் கலையா? இந்தியன் தாத்தாவுக்கு இதெல்லாம் கத்துக் குடுத்ததே நான் தான்! யூ பீ கேர்பூல்!“ என்றவன், அவள் நெருங்கி வர, வேகமாய் ஓடி ஜோனாவின் அருகில் நின்றுக் கொண்டான்.

 

அவனுக்கு முறைப்பொன்றை பரிசாய் கொடுத்தவள், ஜோனாவின் புறம் திரும்பிய போது முகம் கனிந்திருந்தது. அவனிடம் பேச இவள் வாய் திறக்கும் முன்னே,

 

“இனிமே என் சேப்டிக்கு நீங்க கேரண்டின்னு சொன்னீங்க இல்ல மிஸ் ஜீவா?” என கேட்டான் ஜோனா.

 

“யெஸ்!” என ஆமோதித்தாள் ஜீவா.

 

முகத்தை சுருக்கி சற்று நேரம் யோசித்தவன்,

 

“கேரண்டின்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு? ஒரு பொருள் பழுதா போச்சுன்னா மேனுபேக்சரர் ரிப்பேர் செஞ்சு குடுப்பாங்க! அதுவும் முடியலனா புதுசா அதே பொருள ரிப்லேஸ் செஞ்சு குடுப்பாங்க! சோ எனக்கு நீங்க கேரண்டின்னா, இந்த ஜோனாவுக்கு எதாச்சும் ஆச்சுன்னா என்னை முழுசா சரியாக்கிக் குடுக்கனும். முடியலைனா இன்னொரு ஜோனாவ உருவாக்கிக் குடுக்கனும்! ஐ மீன் குட்டி ஜோனாவ பெத்துக் குடுக்கனும் எனக்கு ரிப்லேஸ்மென்டா! முடியுமா உங்களால?” என நக்கலாக கேட்டான் ஜோனா.

 

‘அடப்பாவி பாஸ்! கேரண்டின்னு மேடம் சொன்ன ஒரு வார்த்தைல குழந்தைக் குட்டி வரைக்கும் போயிட்டீங்களே! நான்லாம் இந்த பூமியில ரோமியோன்னு சொல்லிக்கறதுக்கு வெக்கப்படறேன், வேதனைப்படறேன், துக்கப்படறேன், துயரப்படறேன்! நீங்க நடத்துங்க!’ என மனதில் ஜோனாவுக்கு கோயிலே கட்டிக் கும்பிட்டான் தீரன்.  

 

‘குட்டி ஜோனாவா? நானா?’ என திகைத்தவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு மனம் இளகிப் போனது! குரலை செறுமியவன்,

 

“இனிமே பேசும் போது பார்த்துப் பேசுங்க மிஸ் ஜீவா! வார்த்தைய விட்டுட்டுப் பிறகு முழிச்சிட்டு நிக்காதீங்க! எல்லாரும் என்னை மாதிரி ரொம்ப நல்லவனா இருக்க மாட்டாங்க! ஜோனாவ பார்க்க வந்ததுக்கு நன்றி! உங்க யெல்லோ ரோஸசுக்கும் நன்றி. நம்ம காண்ட்ரக்ட்ட கான்சல் பண்ணிட்டோம்னு சீக்கிரம் எங்க வக்கில் கிட்ட இருந்து லெட்டர் வரும்! நீங்க எனக்கு குடுத்த சேவைக்கு ரொம்………ப நன்றி” என கடைசி வாக்கியத்தை இரட்டை அர்த்தத்தில் சொன்னவன், கதவை நோக்கிக் கையைக் காட்டினான்.

 

அவன் முகத்தில் தெரிந்த அந்நியத்தன்மையிலும் குரலில் காட்டிய கடுமையிலும் திகைத்தவள், அவன் முகத்தைப் பார்க்க விழைய அவனோ எழுந்து அவளுக்கு முதுகை காட்டி அமர்ந்துக் கொண்டான். ஜோனா தன்னை ஒதுக்கி வைக்க வேண்டும் என விரும்பியவளுக்கு, அது நிறைவேறும் தருணம் மனதை கசக்கிப் பிழிந்தது போல வலித்தது. அமைதியாக கதவை நோக்கிப் போனவள் காதில், அவர்களின் சம்பாஷணை விழுந்தது.

 

“கனல் கண்ணன் சார் ஒரு கம்பெனி சொன்னாரு! ஜீவானந்தத்தோட போட்டி கம்பெனியாம் அது! பாடிகார்ட் எடுக்க அங்க அக்ரீமேண்ட் போட்டுக்கலாம் பாஸ்!” என தீரன் சொல்ல,

 

“நீயே எதுனாலும் பார்த்து செய் தீர்! உடம்புலாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்குது! மயக்கம் வர மாதிரி இருக்கு! மண்டை வேற ஹெம்மர் வச்சு அடிக்கற மாதிரி பேய்ன்னா இருக்கு! ஹ்ம்ம்ம்!” என முனகிக் கொண்டே கட்டிலில் சாய்ந்தான் ஜோனா.

 

அவனின் வலி நிறைந்த குரல் இவளை அசையவிடாமல் கட்டிப் போட்டது! அவனுக்குத் தலையைத் தடவிக் கொடுத்து, உடம்பு வலி தீர பிடித்து விட சொல்லி மனம் கட்டளையிட, மூளையோ கிளம்பு கிளம்பு என எதிர் கட்டளையிட்டது.

 

“நாளைக்கே இவங்கள கட் பண்ணிட்டு அவங்கள செட் பண்ணிடறேன் பாஸ்” என பதில் சொல்லிக் கொண்டிருந்தான் தீரன்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போட்டி கம்பேனியின் லட்சணத்தை அறிவாள் இவள். பணம் மட்டுமே அவர்களுக்குப் பிரதாணம். அவர்கள் வேலைக்கு வைத்திருக்கும் ஆட்களும் ப்ரோபெஷனலானவர்கள் இல்லை. விடுவிடுவென அவனருகே திரும்பி வந்த ஜீவா,

 

“உங்களுக்கு இந்த நிலமை வந்ததே பெண் ரசிகைகளாலத்தான்!” என படபடவென சொன்னாள்.

 

கட்டிலில் சாய்ந்திருந்தவன் அவள் கண்களை ஊடுருவி,

 

“சோ?” என நக்கலாகக் கேட்டான்.

 

“அதே ஆம்பளைங்க நெருங்கி இருந்தா அடிச்சு துவம்சம் பண்ணிருப்பாங்க எங்க ஆளுங்க!”

 

“நான் ஒரு லேடிஸ் மேன்னு தெரிஞ்சும் அதுக்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாம போனது உங்க தப்பு! நவ், டோண்ட் வேஸ்ட் மை டைம்! ஐ நீட் டூ ஸ்லீப்” என்றவன்,

 

“லேடிஸ்னாலத்தான் எனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா மட்டும் இவங்களே எனக்கு பாடிகார்ட்டா வந்துட போறாங்களாக்கும்!” என சத்தமாகவே முனகினான்.

 

“வரேன்!”

 

“வாட்?”

 

“உங்களுக்கு நானே பாடிகார்ட்டா வரேன் ஜோனா சார்!!!!!”

 

 

(மயங்குவாள்…)

 

(போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. என் நிலைமைய புரிஞ்சுக்கிட்டு எனக்காக வேய்ட் பண்ண எல்லோருக்கும் ஸ்பேஷல் நன்றி..அடுத்த எபில சந்திக்கலாம். அது வரைக்கும் லவ் யூ ஆல் டியர்ஸ்)