MMM–EPI 13

122620776_740997409820929_9109553537495410146_n-777ebb41

அத்தியாயம் 13

 

கார் கண்ணாடியைக் கீழே இறக்கி கேட்டில் நின்றிருந்த செக்கியூரிட்டிக்குத் தனது முகத்தைக் காட்டினாள் ஜீவா. அவளைப் பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த அவளது நிறுவனத்தை சேர்ந்தவருக்கு நெற்றியில் இரு விரல் வைத்து சல்யூட் செய்வது போல அசைத்துக் காட்டினாள் இவள். அவர் கேட்டை அகலத் திறந்து விட, ஜீவாவின் கார் வழுக்கிக் கொண்டு உள்ளே போனது.

 

கண்ணாடியை மீண்டும் ஏற்றாமல் இவள் காரை செலுத்த, கடல் காற்று இவள் முகத்தில் மோதி விளையாடியது. காரை பார்க் செய்து விட்டு இறங்கியவள், அந்த பிரமாண்டமான மாளிகையை அண்ணாந்துப் பார்த்தாள். அதன் பிரமாண்டத்திலும், அழகிலும் அசந்துப் போய் நின்றாள் ஜீவா. கீழ் தளத்தைக் கல் வைத்துக் கட்டி, மேல் தளத்தைக் கண்ணாடியால் இழைத்திருந்தார்கள். வீட்டை சுற்றி தென்னை மரங்களும் பூந்தோட்டமும் கண்ணைக் கவர, வீட்டின் பக்கவாட்டில் பெரிய சைஸ் நீச்சல் குளம் கருத்தைக் கவர்ந்தது.

 

‘1 யூ.எஸ் டாலர் கிட்டத்தட்ட 70 ரூபாயாச்சே! நீ ஏன்டா இந்த ஆட்டம் ஆடமாட்ட! ஒத்த ஆளுக்கு இவ்ளோ பெரிய மாளிகைய ரெண்ட் எடுக்கறது எல்லாம் ரொம்பவே ஓவர்டா ஜோனா! இவன் கிட்ட போய் வரவு செலவு கணக்கு பேச முடியுமா! ஆன்னா ஊன்னா தெ கிராட் ஜோனான்னு நெஞ்சை நிமித்துவான்!’ என எண்ணிக் கொண்டே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அம்மாளிகையின் உள்ளே நுழைந்தாள் ஜீவா.

 

வெளியே இருந்ததை விட உள்ளே இன்னும் பிரமாண்டமாய் இருந்தது. அதையெல்லாம் வர்ணிக்க வேண்டும் என்றால், ஜீவா மூன்று மடங்கு சாப்பிட்டிருக்க வேண்டும்! அவளுக்குத்தான் அன்று காலைப் பொழுதே சோதனை பொழுதாய் விடிந்திருந்ததே! பின் எங்கிருந்து அவள் வயிற்றை நிரப்ப!

 

தகப்பனின் போன் சத்தத்தில் தான் அன்று அவள் விழித்ததே!

 

“குட் மார்னிங் ஜீவா”

 

“குட் மார்னிங் டாடி!”

 

“நம்ம கம்பெனி ரூல் புக்ல, அஞ்சாவது ரூல்ஸ் என்ன?”

 

போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்தவள், நெற்றியைத் தடவி விட்டுக் கொண்டே

 

“மேனேஜ்மேண்ட் ஸ்டாப்ஸ் பீல்ட் வோர்க் போக கூடாது!” என பதிலளித்தாள்.

 

அந்தப் பக்கம் எந்த வித சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இவளும் அமைதியாக இருந்தாள். அமைதி நீண்டுக் கொண்டே போக,

 

“ஐ எம் சாரி டாடி! இந்த கிளையண்டுக்கு லேடி பாடிகார்ட் தேவைப்படவும் நானே களத்துல இறங்க வேண்டியதாப் போச்சு! நம்ம கிட்ட இருக்கறது எல்லாம் மேல் பாடிகார்ட்ஸ் தானே! லேடிஸ் கிளையண்டுக்கு கூட ஆண்களைத்தானே பாடிகார்ட்டா போட்டிருக்கோம்! நான் லேடி கார்ட்ஸ் இண்டெர்வியூ செஞ்சிட்டு இருக்கேன்! பொருத்தமான ஆள் கிடைச்சதும், நான் விலகிடுவேன் டாடி” என்றவள் ஜோனாவுக்கு நடந்த அட்டாக்கை பற்றி விலாவாரியாக விளக்கி முடித்தாள்.  

 

அந்தப் பக்கம் பேச்சில்லாமல் மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டது.

 

“டாடி!”

 

“பாய் ஜீவா!” என்றதோடு அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

 

இன்னும் கூட தகப்பனின் மூச்சு சத்தம் காதில் கேட்பது போல இருக்க, தலையை உலுக்கிக் கொண்டாள் ஜீவா.

 

ஹாலில் அமர்ந்திருந்த ஜீவாவின் கார்ட்ஸ், அவளைப் பார்த்ததும் வணக்கம் வைத்தனர். ஏற்கனவே சொதப்பி இருந்தவர்களை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, வேறு திறமையான இருவரை நியமித்திருந்தாள் ஜீவா. அவர்களிடம் அமர்ந்து உரையாடியபடி இருந்தவளை பாட்டுச் சத்தம் கலைத்தது.

 

“யாருக்காக இது யாருக்காக?

இந்த மாளிகை வசந்த மாளிகை

காதல் ஓவியம் கலைந்த மாளிகை?”

 

என பாடிக் கொண்டே தலையைத் துவட்டியபடி படிகளில் இறங்கி வந்துக் கொண்டிருந்தான் ஜோனா.

 

அவன் ஸ்லாங்கில் அந்தப் பாடல்,

 

“யாருக்காக இடு யாருக்காக

இந்தே மாள்கை வசந்த் மாள்கை

காடல் ஓவ்யம் கலைந்த் மாள்கை” என கேட்க இவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

ஓவியங்களைப் பார்ப்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஜீவா. அவனுக்குப் பாடல் கற்பித்து கீழே அனுப்பிய தீரனோ,

 

“டி.எம்.எஸ் மட்டும் உசுரோட இருந்திருந்தா என்னை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருப்பாரு. ஜஸ்ட்டு மிஸ்! ஆனாலும் இந்தப் பாட்டுக் கூட எங்க பாஸ் வாய்ஸ்ல அதிர்வேட்டாத்தான் இருக்கு” என சிலாகித்துக் கொண்டான்.  

 

கேட்டில் நிற்பவரோடு சேர்த்து வீட்டில் ஜோனாவுடனே இருப்பது போல மூன்று கார்ட்களை அரேஞ் செய்திருந்தாள் ஜீவா. அவன் வெளியே செல்லும் போது மட்டுமே இவள் அவனுக்கு பாடிகார்ட்டாக வருவாள். அவனுடைய  காலேண்டர் இவளுக்கும் ஷேர் செய்யப் பட்டிருந்ததால், க்ரூமிங் என இன்றைய காலை அப்பாயிண்மேண்ட் குறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து தான் வந்திருந்தாள். காலையிலேயே கிளம்பி ஆபிசுக்குப் போய், அவள் மட்டும் பார்க்கக் கூடிய வேலைகளை முடித்துக் கொண்டு அரக்கப் பறக்க இங்கே வந்து சேர்ந்திருந்தாள்.

கீழே இறங்கியவன் இவளைக் கண்டுக் கொள்ளாமல், நேராக மற்ற கார்ட்களிடம் போய்,

 

“லெட்ஸ் ஈட்!” என அழைத்தான்.

 

ஜோனாவுடனே இருபத்து நான்கு மணி நேரமும் இருப்பதால், அவர்களின் உணவு, உறைவிடம் தங்களின் பொறுப்பு என ஏற்கனவே சொல்லி இருந்தான் தீரன்.

 

அவர்களும் பிகு பண்ணிக் கொள்ளாமல் டைனிங் ரூமுக்குப் போக, இவள் போனைப் பார்ப்பது போல குனிந்து அமர்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் பொத்தென அமர்ந்தான் ஜோனா. அவன் ஈரத்தலையிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த நீர் அவள் கன்னத்தில் தெறித்து நலம் விசாரித்துப் போனது.

 

தன் கன்னத்தைத் துடைக்க கை உயர்த்தியவள், அதை செய்யாமல் அப்படியே கையை இறக்கிக் கொண்டாள்.

 

“என் தலையில இருந்து விழுந்த தண்ணியக் கூட துடைச்சுக்க மனசு வராதவங்களுக்கு, என்னையே வேணாம்னு துடைச்சு போட்டுட்டு போறதுக்கு எப்படி மனசு வந்துச்சு?”

 

யாரோ யாரையோ கேட்கிறார்கள் என்பது போல அமர்ந்திருந்தவளை கடுப்புடன் பார்த்திருந்தான் ஜோனா. ஏற்கனவே அவள் கொஞ்சம் ஒல்லித்தான். முகத்தில் கண்கள் மட்டுமே பெரிதாக தெரியும். இப்பொழுது இன்னும் இளைத்து கன்னத்து எலும்புகள் துருத்தி நிற்பது போல தோன்றியது இவனுக்கு. என்னவோ பார்த்தது முதல் அவனை அலைக்கழித்த அந்தப் பெரிய கண்களின் கீழ் கருவளையத்தைக் காணவும் மனது வலித்தது இவனுக்கு.

 

“எஸ் ஸ்டபர்ன் எஸ் எ மியூல்(mule)”(அவர்கள் ஊர் பழமொழி. மிகுந்த பிடிவாதக்காரர்கள் என பொருள்படும்) என முனகியவன்,

 

“சாப்பிடலாம் வாங்க, மிஸ் ஜீவா!” என அழைத்தான்.

 

“இட்ஸ் ஓகே சார்! நான் சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன்! யூ கேரி ஆன்” என்றாள் அவள்.

 

“ஓகே” என்றவன் எழுந்து மீண்டும் மாடியில் இருக்கும் தனது அறைக்குப் போய்விட்டான்.

 

வெளியே போவதற்கு கிளம்பி கீழே வந்தவனுடன், தீரனும் வந்தான்.

 

“சாப்பிடலாம் பாஸ்” என அவன் அழைக்க,

 

“நான் சாப்டுட்டேன்!” என்றவன் ஜீவாவின் எதிர்புறம் வந்து சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கினான். ஏதேதோ தேடி ஒரு ஆங்கில மியூசிக் சேனலை வைத்தவன், அதிலேயே மூழ்கிப் போனான்.

 

தான் சாப்பிட வராததால் தான் இவனும் சாப்பிடாமல் அமர்ந்திருக்கிறான் என புரிந்தது இவளுக்கு. ஆனாலும் அவனது இமோஷனல் பிளாக்மேயிலுக்கு அடிப்பணியக் கூடாது என அமைதியாகவே அமர்ந்திருந்தாள் ஜீவா. கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்தபடி ஓடிக் கொண்டிருந்த பாடல்களோடு மெல்லிய குரலில் பாடிக் கொண்டு இருந்தவன், பின் வயிற்றை தடவிக் கொடுத்தான். ம்ப்ச் எனும் சலிப்புடன் எழுந்தவன், அந்த ஹாலிலேயே குறுக்கும் நெடுக்கும் நடைப் பயின்றான். மறுபடியும் சோபாவில் விழுந்தவன், மீண்டும் வயிற்றைத் தடவிக் கொண்டான்.

 

பார்க்காதது போல அவனின் ஒவ்வொரு அசைவையும் கீழ்க்கண்ணால் கவனித்தவளுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் பாவமாய் இருந்து தொலைத்தது.

 

‘பிடிவாதத்துக்குப் பொறந்தவன்’ என மனதிலேயே அவனைத் திட்டித் தீர்த்தவள், படக்கென எழுந்து டைனிங் ஹால் பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

 

எழுந்து செல்பவளையே புன் சிரிப்புடன் பார்த்திருந்தவன்,

 

“Girl, you’re my angel

You’re my darling angel”  என சத்தமாகப் பாடியபடியே பின் தொடர்ந்தான்.

 

இவன் போவதற்குள் மற்றவர்கள் சாப்பிட்டு முடித்திருக்க, ஜீவாவின் அருகே அமர்ந்துக் கொண்டான் ஜோனா.

 

“சாப்பிடுங்க, பயப்படாம சாப்பிடுங்க. நாங்கல்லாம் விருந்து சாப்பாடுத்தான் போடுவோம்! மருந்து சாப்பாடுலாம் போட மாட்டோம்!” என போகிற போக்கில் ஜீவாவை வம்பிழுத்து பறந்து வந்த கரண்டி அடியையும் வாங்கிக் கொண்டே போனான் தீரன்.

 

அவர்கள் இருவரின் அலப்பறையில், உதட்டில் புன்னகை உறைய ஜீவாவின் தட்டில் உணவைப் பரிமாறினான் ஜோனா. அவள் மெதுவாய் சாப்பிட, முடிய முடிய பரிமாறிக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் தட்டை தூரமாய் நகர்த்திக் கொண்டவள்,

 

“எனக்கு போதும் சார்! நீங்க சாப்பிடுங்க!” என்றாள்.

அவனுக்காக ஸ்பேஷலாக தயாரிக்கப் பட்டிருந்த சமச்சீரான உணவை சாப்பிட ஆரம்பித்தான் ஜோனா. அவன் தட்டில் இருந்த முட்டை, சாலட், பழங்கள், நட்ஸ் போன்ற உணவினைப் பார்த்தவளுக்கு லேசாய் புன்னகை அரும்பியது. ஆரோக்கியமாய் உண்ணாமல் ஹாட்டாக், பர்கர் என சாப்பிடுகிறானே என கவலைப்பட்டிருந்தவளுக்கு அவனின் இந்த உணவுப் பழக்கம் நிம்மதியைக் கொடுத்தது.

 

“நியூட்ரிஷன் கம் டயட்டிஷன் கம் பெர்சனல் ட்ரைனர் ஹையர் பண்ணிருக்கேன். உடம்ப பார்த்துக்கனும் இனி! நான் ஹெல்த்தியா ஸ்ட்ராங்கா இருந்தாத்தானே, குடும்ப பாரத்த சுமக்க முடியும்! இடையிலெ நான் கொஞ்சமே கொஞ்சம் வீக் ஆகவும் தானே, பட்டுன்னு கடத்தி என்னோட…ஹ்ம்ம்…” என சற்று நேரம் யோசித்தவன்,

“கடத்தி என் கற்ப களவாடிட்டாங்க” என முடித்து வைத்தான்.

 

அப்பொழுதுதான் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தளுக்கு, அவனின் வசனத்தைக் கேட்டு புரை ஏறி விட்டது. ஒரு பக்கம் சிரிப்புப் பொத்துக் கொள்ள, இன்னொரு பக்கம் இருமல் ஆளை கொல்ல பாடாய் பட்டு விட்டாள் ஜீவா.

 

“ஹே!!! கால்ம் டவ்ன்!” என்றவன் உண்பதை நிறுத்தி விட்டு பதட்டமாக அவளுக்கு முதுகைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். அவன் இன்னொரு கையைப் பிடித்துத் தன் தலையில் வைத்து தட்டிக் கொடுக்க வைத்தாள் ஜீவா. ஜோனா ஒரு ரிதமாய் தலையைத் தட்டி முதுகை நீவி விட, இருமல் மெல்ல மட்டுப்பட்டது அவளுக்கு.

 

 

“இந்த வார்த்தைலாம் யார் சொல்லிக் கொடுத்தா உனக்கு?” என இது வரை பயன்படுத்திய மரியாதைப்பன்மையை விடுத்து கேட்டாள் ஜீவா.

 

“தீர் தான். எங்க படத்துல இப்படி ஒரு டயலோக் வருது! அப்புறம் இன்னொரு இண்ட்ரெஸ்டிங் டயலாக் கூட இருக்கு! ஹீரோவோட பஞ்ச் டயலாக்காம்!” என்றவன், ஒற்றைக் கையைத் தலைக்கு மேல் தூக்கி அதில் நடு மூன்று விரல்களை மடக்கி ஆட்டிக் காட்டிக் கொண்டே,

 

“நான் பார்க்கத்தான் வைட்டுடா

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா! வெயிட்டுடா! வெயிட்டுடா!!!!” என சொன்னான்.

 

‘கதையத்தான் அங்க இங்க எடுத்துப் போட்டு படத்த எடுக்கறாங்கன்னு பார்த்தா, இந்தப் பக்கி தீரன் டயலாக்கையே திருடி போட்ருக்கானே! சிங்கம் அவன சின்னாபின்னமாக்காம இருந்தா சரி!’ என மனதில் நினைத்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

 

ஜோனாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என மனம் துடிக்க அவனை ஆழமாக ஒரு பார்வைப் பார்த்தவள்,

 

“உனக்கு இந்த வெதர், ஹீட், சாப்பாடு, இந்த ஆக்டிங் காரியர் எதுவும் சரிப்படாது! ப்ளீஸ், கிளம்பி உங்க ஊருக்கே போயிடேன்” என்றாள்.

 

“நான் கிளம்பனா, நீயும் வருவியா என் கூட?”

 

முடியாது என்பது போல தலையை ஆட்டினாள் இவள்.

 

“தென் ஜஸ்ட் ஷட் அப்! உன் கிட்ட எதாவது அட்வைஸ் கேட்டேனா என் லைப்ப எப்படி லீட் பண்ணறதுன்னு? இல்லல்ல! சோ இந்த பாடிக்கு கார்ட்டா இருக்கற வேலையை மட்டும் பாருங்க மிஸ் ஜீவா! என் வாழ்க்கைய கார்ட் பண்ணற வேலைலாம் வேணாம்!” என்றவன் பாதி சாப்பாட்டில் கிளம்பப் போனான்.

 

அவன் வலது கையை இறுக்கமாக இவள் பற்றிக் கொள்ள, திரும்பிப் பார்த்து முறைத்தான் ஜீவாவை.

 

“சாப்பிடு!”

 

“வேணா”

 

“ப்ளிஸ்”

 

“நோ”

 

“ஜோனா”

 

லட்சக்கணக்கான பேர் அந்தப் பெயரை ஜபம் போல சொல்லிக் கேட்ட பொழுதெல்லாம் சாதாரணமாய் கடந்துப் போனவன், இவள் வாயில் இருந்து வரும் போது மட்டும் மனம் கனிந்துப் போகிறான். அவளிடம் இருந்து கையை உருவிக் கொண்டவன், மீண்டும் அமர்ந்து கடகடவென உணவை உண்டு முடித்தான்.

 

தீரன் ஜோனாவுக்கு ஏற்பாடு செய்திருந்த எம்.பீ.வீயில் ட்ரைவர் அருகே ஒரு பாடிகார்ட்டும், ஆக கடைசி சீட்டில் ஒரு பாடிகார்ட்டும், ஜோனாவின் அருகில் ஜீவாவும் அமர க்ரூமிங் செஷனுக்கு கிளம்பினார்கள். தீரன் பட சம்பந்தப்பட்ட வேலை இருப்பதாக சொல்லி வீட்டிலேயே இருந்துக் கொண்டான்.

 

காலர் வைத்திருந்த முரட்டு போலோ டீஷர்ட் போட்டு ஜீன்ஸ் அணிந்திருந்தாள் ஜீவா. ரிலேக்‌ஷாக அமர்ந்திருப்பது போலிருந்தாலும் கண்கள் சுற்றுப்புறத்தை சுற்றி சுற்றி வந்தன. பாடிகார்ட்டாக இருப்பவர்களுக்கு உடம்பும் மூளையும் எந்நேரமும் அலர்ட்டாகவே இருக்க வேண்டுமே! அவள் அருகில் அமர்ந்திருந்தவனோ ஷார்ட்ஸும் மஞ்சள் வர்ணத்தில் ஆர்ம் கட் டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். சென்னையின் புகழ் பெற்ற ஒரு ஸ்பாவின் முன் கார் நின்றது.

 

“எல்லாரும் உள்ள போனா நாமளே தேவையில்லாம க்ரவுட கூட்டறது போல இருக்கும். நான் மட்டும் உள்ள போறேன். ஒருத்தர் ரிஷப்ஷன் கிட்டயும் இன்னொருத்தர் வெளியவும் வெய்ட் பண்ணுங்க!” என்றவள் கூலர்ஸ் தொப்பியோடு இறங்கிய ஜோனாவோடு உள்ளே நுழைந்தாள்.

 

ஏற்கனவே போன் செய்து அப்பாயிண்ட்மேண்ட் வாங்கி இருந்ததால் ஸ்ட்ரேய்ட்டாக ரூமுக்கு அழைத்துப் போய் விட்டார்கள் இருவரையும். ஹேர் க்ரூமிங் பகுதி அது. வெளிச்சமாகவும், வாசனை மெழுகுவர்த்திகள் கொளுத்தப்பட்டு வாசமாகவும் இருந்தது அந்த அறை. நாற்காலியில் ஜோனாவை அமர்த்தி, கொஞ்சம் தோளைத் தாண்டி வளர்ந்திருந்த முடியை வெட்டி, தலைக்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டுக் கழுவி செரும் எல்லாம் போட்டு பளபளக்க வைத்தனர் அவன் தலை முடியை. அமைதியாக எல்லாவற்றையும் பார்த்தப்படி நின்றிருந்தாள் ஜீவா.

 

அதன் பிறகு இன்னொரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டான் ஜோனா. அது நக பராமரிப்பு பகுதி. கைகளுக்கு ஒன்றும் வேண்டாம் என மறுத்தவன் கால்களுக்கு மட்டும் பெடிக்கியூர் செய்துக் கொண்டான். அருகில் நின்றிருந்தவளை கைப்பிடித்து பக்கத்து நாற்காலியில் அமர்த்தியவன்,

 

“இவங்களுக்கும் செஞ்சு விடுங்க” என்றான்.

 

“நோ, நோ! எனக்கு இதெல்லாம் வேணா” என எழ முயன்றவளை கையைப் பிடித்து அழுத்தியவன்,

 

“சிட்!” என்றான்.

 

ஏற்கனவே வீட்டில் ஒரு சண்டை! இங்கேயும் இவர்களுக்கு காட்சிப் பொருளாய் இருக்க வேண்டாமென அமர்ந்துக் கொண்டாள் ஜீவா. இதைப் போல் எல்லாம் அவள் வாழ் நாளில் செய்துக் கொண்டதேயில்லை.  

 

கால்களை சுத்தப்படுத்தி, நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி, அழகாய் நகத்தை வெட்டி, பாதத்தில் இருக்கும் டெட் செல்களை தேய்த்து எடுத்து, இதமாக லோஷன் பூசி மசாஜும் செய்து விட்டார்கள்.

 

“நம்ம உடம்புல கால் தான் ரொம்ப முக்கியமான பாகம். உடல் பாரத்தை சுமக்கற கால்களை நாமும் டேக் கேர் பண்ணிக்கனும்!” என சொல்லியவன் ரிலேக்‌ஷாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான். ஆனாலும் அவள் கையைப் பிடித்தப் பிடியை மட்டும் விடவில்லை அவன்.

 

ஜீவாவின் கண்கள் அடிக்கடி அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நகச் சாயங்களைத் தொட்டு தொட்டு மீள்வதைக் கண்டவனுக்கு மெல்லிய புன்னகை அரும்பியது.

 

“என்ன கலர் வேணும்?” என கேட்டான்.

 

ஒரு கணம் தயங்கியவள்,

 

“எல்லாமே நல்லாருக்கு” என சொன்னாள்.

 

“இவங்களுக்கு லாலிபாப் டிசைன் செஞ்சிடுங்க” என ஜீவாவுக்கு நியமிக்கப்பட்டப் பெண்ணிடம் கேட்டுக் கொண்டான் ஜோனா.

 

சுழலைப் போல நிறைய வர்ணக் கலவைக் கொண்டு லாலிபாப் டிசைனில் ஜீவாவின் கால் நகங்களுக்கு நெயில் பாலீஷ் பூசப்பட்டது. அவளையே கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது கண்களின் பளபளப்பும், உதட்டோரம் அரும்பிய சின்ன சிரிப்பும் அவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தன.

 

“என்னால முடிஞ்ச அளவுக்கு நீ மிஸ் பண்ணத எல்லாம் திரும்பக் குடுப்பேன் மூலான்” என முணுமுணுத்துக் கொண்டான் ஜோனா.

 

“கைக்கும் போட்டுக்கறியா ஜீவா?” என கேட்க வேண்டாமென மறுத்து விட்டாள் அவள்.

வேலை பாட்டிற்கு நடக்க, இவர்களுக்கு இஞ்சி போட்ட மூலிகை பாணமும் வழங்கப்பட்டது. ஜீவாவுக்கு காலில் போட்ட பாலீஷ் காய்வதற்கு ஒரு மிசினைத் தட்டி விட்டவர்கள், அரை மணி நேரம் கழித்து வருகிறோம் என இவர்களை தனிமையில் விட்டு விட்டுப் போனார்கள்.

 

பிண்ணனியில் ஒலித்த மைனஸ் ஓன்(குரல் இல்லாத பாட்டுக்களின் இசை வடிவம் மட்டும்) இசை இனிமையாய் தாலாட்ட, ஏசி இதமாய் குளிரூட்ட, ஜோனாவின் அருகாமை இதமாய் மனம் வருட, இத்தனை நாள் உறங்கியும் உறங்காமலும் தவித்த ஜீவா, நிம்மதியாய் தூங்கிப் போனாள். அருகே நெருங்கி அவள் தலையை தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டான் ஜோனா.

 

“நோ” என முணுமுணுத்தவளை,

 

“ஷ்!!!! கோ பேக் டூ ஸ்லீப் மூலான்” என சமாதானப்படுத்தினான்.

 

அரை மணி நேரம் கழித்து வந்தப் பெண்களை, இனி தான் அழைக்கும் போது மட்டும் வந்தால் போதும் என மெல்லிய குரலில் சொல்லி அனுப்பியவன், அவள் தலை மேல் தன் தலை வைத்து கண்களை மூடிக் கொண்டான்.

 

பிரிவு துயரில் உறக்கம் இன்றி தவித்த காதல் புறாக்கள் இரண்டும், இடம் பொருள் ஏவல் மறந்து, தன் ஜோடி கைக்கெட்டும் தூரம்தான் இருக்கிறது எனும் மன நிம்மதியோடு துயில் கொண்டன.   

 

 

(மயங்குவாள்….)

 

(ஹாய் டியர்ஸ்! போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த எபியுடன் சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்.தூக்கக் கலக்கத்தோட போடறேன். எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்)