MMM–EPi 14

122620776_740997409820929_9109553537495410146_n-f491fc06

 

தமிழ் ராக்கர்ஸில், டெலிகிராமில் டவுன்லோடி இரண்டரை மணி நேரம் அமர்ந்துப் பார்த்து விட்டு,

 

“படம் மொக்கை மச்சி! டைரக்டர் சொதப்பி வச்சிருக்கான். ஆரம்பிச்சதுல இருந்து படம் முடியற வரைக்கும் ஹீரோ கண்ணீரைப் புழிஞ்சி விடறான். அவன் விட்ட கண்ணீர வயலு பக்கம் திருப்பி விட்ருந்தா முப்போகம் விளைஞ்சிருக்கும். ஹீரோயின் நடிச்சிருக்காளா, இல்ல அவ இடுப்பு நடிச்சிருக்கான்னு நமக்கே சந்தேகமா இருக்கு. அவ மூஞ்ச விட்டுட்டு இடுப்ப மட்டும் தான் போக்கஸ் பண்ணிருக்காங்க. மியூசிக் காதுல ஈயத்தைக் காச்சி ஊத்துன மாதிரி டண்டணக்க, டொண்டனக்கான்னு கன்றாவியா இருக்கு. சினிமாட்டாகிராப்பி படு கேவலம்! மொத்தத்துல இந்தப் படம் பார்த்ததுக்கு பதிலா சரக்கடிச்சுட்டு கவுந்துப் படுத்துருக்கலாம். டோட்டல் வேஸ்ட்!” என சொல்லி கடந்துப் போய் விடுவர் பலர்.

நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட டைரக்டரை நினைத்து விட்டால் என பொங்கி எழுந்து அக்கு வேறு ஆணி வேறாக பேஸ்புக், ட்வீட்டர், என பார்த்தப் படத்தை சும்மா கிழியென கிழித்து தொங்க விட்டு மனதை ஆற்றிக் கொள்வார்கள் சிலர்.  

 

அந்த இரண்டரை மணி நேரத்துக்கு திரைத்துறையினர் எவ்வளவு உழைப்பைப் போடுகிறார்கள் என கூட இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. படத்தில் பணியாற்றப் போகும் கேமராமேனில் இருந்து க்ளாப் அடிக்கும் ஆள் வரை தேர்ந்தெடுப்பது, கதை டிஸ்கஷன், பாடல் தெரிவு, கதை வசனம், பப்ளிசிட்டி, மக்கள் தொடர்பு, பட்ஜேட், லோகேஷன் பார்ப்பது, காஸ்டியூம், மேக்கப், பிண்ணனி குரல், காஸ்டிங், கேட்டரிங் என அனுமார் வால் போல் நீண்டுக் கொண்டே போனது லிஸ்ட்.

 

இந்த வேலையெல்லாம் முடித்தப் பிறகே படத்துக்கு பூஜை போட்டு, நாயகன் நாயகியை அறிமுகப் படுத்தலாம் என முடிவெடுத்திருந்தான் தீரன். தனக்காக எழுதி இருந்த கதையை டோட்டலாக மாற்றி ஜோனாவுக்கு ஏற்றது போல எழுதி முடித்திருந்தான் அவன்.

 

தினமும் நிறைய தமிழ் படங்களைப் பார்த்து, ரெபரேன்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஜோனா, அதில் வரும் வசனங்களை தங்கள் பட வசனம் என சொல்லி ஜீவாவை வம்பிழுத்து வைத்திருக்க, தனிமையில் தீரனைப் பிடித்தவள் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டாள்.

 

“என்ன நினைச்சிருக்க உன் மனசுல? ஜோனாவுக்கு நம்ம ஊரப்பத்தி, மக்களப் பத்தி, கல்ச்சரப் பத்தி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது! அத அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு அவர திரையில மொக்கை பீஸா காட்டுன, என் கையாலத்தான் உனக்கு கருமாதி! ஜோனாவ வச்சி ஒழுங்கு மரியாதையா டீசண்டா ஒரு படம் எடுக்கற! ஒரே படம்தான். அதுக்கு அப்புறம் அவருக்கே இங்க சலிச்சிடும். கிளம்பி போய்டுவாரு, இல்ல நாம போக வைக்கனும்! அத விட்டுட்டு அவர அட்டையா ஒட்டிட்டு திரியலாம்னு நெனைச்ச, ‘டைரக்டர் தீரனுக்கு துப்பாக்கி சூடு, கலங்கிப் போனது தமிழ்நாடு’ன்னு தலைப்பு செய்தியா ஆகிடுவா பார்த்துக்கோ!”

 

“பார்டா! வசனம்லாம் நல்லா இருக்கே! பேசாம நம்ம படத்துக்கு வசனகர்த்தாவா வந்துடுறீங்களா மேடம்?” என நக்கலடித்தவனை இவள் கோபத்துடன் நெருங்க, ஓடிப்போய் சோபாவின் பின்னால் நின்று கொண்டான் தீரன்.

 

“பேச்சு பேச்சா இருக்கும் போது வன்முறை கூடாது சிஸ்டர்! உங்கள தங்கச்சி போஸ்ட்டுக்கு ப்ரோமோட் பண்ணலாம்னு தீவிர சிந்தனையில இருக்கேன் நான். இப்படி சில்லியா நடந்து அந்த போஸ்டிங்க தவற விட்டுறாதீங்க! போனா வராது பொழுது போனா கிடைக்காது! இந்த தீரன் ஒரு பொண்ண தங்கச்சியா பார்க்கறான்னா, அந்த பொண்ணு அசாதாரணமானவளா மட்டும் இல்ல அவதாரமாவும் இருக்கனும்! இன்னைல இருந்து இந்த தீரா பாய்க்கு நீ தான் பெஹேன்! எல்லாருக்கும் சட்டுன்னு இந்தப் பதவி கிடைச்சிறாது! நீ ரொம்ப குடுத்து..” வச்சவ என முடிப்பதற்குள் சோபாவில் கிடக்கும் குட்டித் தலையணை அவன் முகத்தில் மோதி கீழே விழுந்தது.

“சீரியசா பேசிட்டு இருக்கறப்போ காமெடி பண்ணாதே!” என எரிச்சலாக சொன்னாள் ஜீவா.

 

“என் வாழ்க்கையில இப்பத்தான் நான் சீரியசாவே இருக்கேன் சிஸ்டர். கேவலமா தூக்கிப் போட்டு பந்தாடனவங்க முன்னுக்கு, எனக்குன்னு ஒரு அங்கீகாரம் குடுத்துருக்காரு பாஸ். அப்படிப் பட்டவர உச்சம் தொட வைக்கற வரைக்கும் ஓய மாட்டான் இந்த தீரன். அவர் அறிமுகமாகுற இந்தப் படத்த எப்பாடு பட்டாச்சும் ஹிட் அடிக்க வைக்கனும்னு வெறியில ராப்பகலா உழைக்கிறேன் நான்” என்றவனின் குரல் கரகரத்திருந்தது.

 

“நீ அழிக்கறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்துருக்கற ஈஸ்வரன்டா” என ஸ்லாங்காக கேட்ட சத்தத்தில் இவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, கையை ஸ்டைலாக ஆட்டியப்படியே வந்துக் கொண்டிருந்தான் ஜோனா.

 

“அது வேற ஒன்னும் இல்ல, நம்ம ‘வைட்டு ஸ்டார்’ நேத்து முழுக்க ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ படம் பார்த்த எபெக்டு” என ஜீவாவுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தான் தீரன்.

 

அவர்களை நெருங்கியவன் முகம், ஜீவாவைப் பார்த்ததும் மலர்ந்துப் போனது. அன்று ஸ்பாவில் ஒட்டித் தூங்கிய சம்பவத்துக்குப் பிறகு, ஜோனாவின் அருகிலேயே இருந்தாலும், அவளது செயல்கள் எல்லாம் அவனை தூரமாக்கி நிறுத்தி வைத்தன.

 

“சார், ரெடியாகிட்டீங்கனா வெளிய வாங்க! நான் கார்ல வெய்ட் பண்ணறேன்!” என்றவள் விடுவிடுவென நடந்து விட்டாள்.

 

“இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்டா! அவங்களுக்கு எதுனால பிடிக்கும் எதுனால பிடிக்காதுன்னு யாருக்குமே தெரியாது. ஆம்பளைங்களாம் பாவம்டா!” என வாசலுக்கு நடந்து விட்டவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான் ஜோனா.

 

“பாஸ், நான் எடுத்துக் குடுத்த சிம்பு படமெல்லாம் பார்த்து முடிச்சிட்டீங்க போல! வசனமெல்லாம் இந்த கலக்கு கலக்கறீங்க!”

 

தலையை ஆமோதிப்பாக ஆட்டியவன்,

 

“ஜீவாவுக்கும் முகத்துல மூக்கிருக்கு! எனக்கும் முகத்துல மூக்கிருக்கு! அப்போ இது லவ் தானே ஜெஸ்ஸி?” என நெஞ்சைக் வலது கையால் குத்தியபடியே கேட்டான்.

 

“உங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் மூஞ்சில மூக்கிருக்கா! அப்போ மத்த பயலுங்களுக்கு எல்லாம் மூஞ்சில வெத்தலைப் பாக்கா இருக்கு? கடுப்ப கிளப்பாம வாங்க பாஸ்!” என ஜோனாவைக் கைப்பிடித்து வெளியே அழைத்துப் போனான் தீரன்.

இன்று மியூசிக் டைரக்டரைப் பார்க்க அவரது ஸ்டூடியோ செல்கிறார்கள். பட பூஜையின் போது, ஒரு பாடலை மட்டும் சிங்கிள் ட்ராக்காக வெளியிட முடிவு எடுத்திருந்தார்கள். இப்பொழுது திரை உலகை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் இசை அமைப்பாளரை இந்தப் படத்துக்காக புக் செய்திருந்தான் தீரன். ஹீரோ எண்ட்ரி சாங்கை ஜோனாவையும் அந்த இசை அமைப்பாளரையும் பாட வைத்து, அதை ரெக்கார்ட் செய்து பட பூசையின் போது உலகுக்கு காட்ட திட்டமிட்டிருந்தான். அதற்கான ஆயத்தப் பணிக்குத்தான் இப்பொழுது கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

 

பாடிகார்ட்டுகள் அவர்கள் இருக்கையில் அமர்ந்திருக்க ஜோனாவின் வலப்புறம் ஜீவாவும், இடப்புறம் தீரனும் அமர்ந்திருந்தார்கள். சாலையின் குறுக்கே வந்து விட்ட ஒரு ஸ்கூட்டியால் திடீரென ப்ரேக் அடித்தார் ஓட்டுனர். தன் வலது கையை அவள் தோள் சுற்றிப் போட்டு பாதுகாப்பாய் பிடித்துக் கொண்டான் ஜோனா. ஜீவா ஒரு குலுங்கு குலுங்கி பட்டென ஜோனாவின் இடது கையைப் பற்றிக் கொண்டாள். மீண்டும் சுமூகமாக கார் நகர, தன் கையை இழுத்துக் கொண்டாள் இவள். அவள் இவ்வளவு நேரம் பிடித்திருந்த கையை மேலே தூக்கி இப்படி அப்படி ஆட்டி,

 

“எனைத் தீண்டி விட்டாய்

திரி தூண்டி விட்டாய்

என்னை நானே தொலைத்து விட்டேன்” என கண்ணில் சிரிப்புடன் அவன் பாட, இவளுக்கும் சிரிப்பு வந்து தொலைத்தது. சிரிப்பை அவனுக்குக் காட்டாமல் மறு புறம் திரும்பிக் கொண்டாள் ஜீவா. பயணம் முழுக்க அவள் முகத்தையே பார்த்தப்படி வந்தான் ஜோனா.

 

மியூசிக் ஸ்டூடியோ வாசலில் முன்னும் பின்னும் பாடிகார்ட் வர அவன் பக்கத்திலேயே நடந்து வந்தாள் ஜீவா. ஸ்டூடியோ வெளியில் இருந்த சில இளசுகள் இவர்களைப் பார்த்து தங்களுக்குள்ளாக பேசிக் கொள்வதை கவனித்தப்படித்தான் உள்ளே நுழைந்தாள் ஜீவா. ரெக்கார்டிங் தியேட்டர் வெளியேவே மற்ற கார்ட்டுகளுடன் நின்று கொண்டவளை,

 

“உள்ள வாங்க ஜீவா” என அழைத்தான் ஜோனா.

 

“ஏற்கனவே உள்ள வந்துப் பார்த்துட்டேன் சார்! எந்தப் பிரச்சனையும் இல்ல! நாங்க வெளிய வேய்ட் செய்யறோம்” என மறுத்தாள் இவள்.

 

“பிரச்சனை எதுவும் வராதுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? அந்த மியூசிக் டைரக்டர் போடற மியூசிக் எனக்குப் பிடிக்காம போகலாம். இப்படி வேணா அப்படி போடுங்கன்னு நான் சொல்லலாம். அதுக்கு உங்க ஊர்ல நீ பெரிய இவன்னா, எங்க ஊர்ல நான் பெரிய இவன்னு அந்த ஆளு என் கூட சண்டைக்கு வரலாம். எனக்கு வேற கோபம் சட்டுன்னு வந்துடும்! நான் மைக்க எடுத்து அவர் மேல வீசலாம். அவரும் கடுப்புல கீ போர்ட்ட என் மேல தூக்கி அடிக்கலாம். இதெல்லாம் நடக்காம என்னை பாதுகாக்கத் தானே நீங்க பாடிகார்ட்டா இருக்கீங்க. இப்ப உள்ள வர முடியாதுன்னா எப்படி?” என கேள்வி கேட்டவனை எல்லோர் முன்னும் முறைக்கக் கூட முடியவில்லை இவளால்.

“வாங்க” என பல்லைக் கடித்து சொன்னவள், ரெக்கார்டிங் ஸ்டூடியோ உள்ளே நுழைந்தாள்.

புத்தம் புதிய டெக்னோலோஜியால் நிறைந்திருந்தது அந்த இடம். கம்ப்யூட்டர்ஸ், பெரிய மீயூசிக் சிஸ்டம்ஸ், எலெக்ட்ரிக் கீபோர்ட், உட்கார வசதியான சோபா என அழகாய் இருந்தது. தீரனோடு பேசிக் கொண்டிருந்த மியூசிக் டைரக்டர், உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்தார். சின்னப் பையனாக இருப்பதால் பார்த்தான் என சொல்ல வேண்டுமோ!

 

ஜோனாவை நெருங்கி கட்டிக் கொண்டவன்,

 

“டியூட்! உங்களோட பிக் ஃபேன் நானு. நீங்கத்தான் இந்தப் படத்துக்கு ஹீரோன்னு சொல்லவும் உடனே மியூசிக் போட ஒத்துக்கிட்டேன். ஐம் சோ ஹெப்பி டூ வோர்க் வித் யூ” என சந்தோஷமாக சொன்னான்.

 

ஜோனாவும் சிரித்த முகமாக அவனைக் கட்டிக் கொண்டான். பக்கத்தில் நின்றிருந்தவளை கேள்வியாக பார்க்க,

 

“மை பாடிகார்ட், மிஸ் ஜீவா” என அறிமுகப்படுத்தினான் ஜோனா.

 

“ஓ, வாவ்! பொண்ணா!” என அவளை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தவனின் கண்கள் ஒளிர்ந்தன.

 

“நைஸ் டூ மீட் யூ!” என ஜீவாவை அணைக்கப் போனவனை, மீண்டும் ஜோனாவே அணைத்துக் கொண்டான்.

 

“படி(buddy), இவங்க என்னோட தீவிரவாத ஃபேன்! என் பாட்டத் தவிர மத்த யாரோட மியூசிக்கும் கேக்க மாட்டாங்க. அதோட யாரும் தொட்டுப் பேசனா பிடிக்காது அவங்களுக்கு! சோ கொஞ்சம் சோசியல் டிஸ்டன்ஸ் மேய்ண்டேய்ன் பண்ணுங்க! இடுப்பு பின்னாடி துப்பாக்கி வேற வச்சிருக்காங்க! எதுக்கு நமக்கு தேவையில்லாத ரிஸ்க்!” என அவன் காதில் மட்டும் கேட்கும்படி சொன்னான் ஜோனா.  

 

“ஓகே, ஓகே!” என கையைத் தூக்கி சரண்டர் என்பது போல காட்டியவன், தனது நாற்காலியில் போய் அமர்ந்துக் கொண்டான்.

ஜீவாவை அங்கிருந்த ஒரு சோபாவில் அமர வைத்த ஜோனா, அதன் பிறகு தீரனுடனும் மியூசிக் டைரக்டருடனும் ஐக்கியமாகி விட்டான்.

 

இந்தப் பாடலுக்கான வரிகளை ஏற்கனவே பிரபலமான பாடலாசிரியர் ஒருவர் எழுதி தந்திருந்தார். அதற்கான மியூசிக் போட்டு, பாடி, ரெக்கார்ட் செய்வதுதான் அன்றைய நிகழ்ச்சி நிரல். இடை இடையே காபி, ஜீஸ், பலகாரம் என வரும் போது நிறுத்தி ஓய்வெடுத்து விட்டு மறுபடியும் வேலையைத் தொடர்ந்தார்கள்.

 

ஜீவாவின் பார்வை அவள் கட்டுப்பாட்டையும் மீறி ஜோனாவின் மேலேயே போய் நிலைத்தது. அவனது தமிழ் உச்சரிப்பைத் தீரன் திருத்தியபடி இருக்க, மெல்லிய சிரிப்புடன் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவனை கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் இவள். கையில் இருந்த லிரிக்ஸ் பேப்பரை பேனாவால் தட்டியபடி, ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, உதட்டை ஈரப்படுத்தி, காலை அசைத்தப்படி தனது வேலையில் மூழ்கி இருந்தவனை கீழ்கண்ணால் பார்த்து ரசித்திருந்தாள் மங்கை.

 

எல்லோருக்கும் திருப்தி ஆனதும், பாடலை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தார்கள். அந்த இளம் இசை அமைப்பாளரும், ஜோனாவும் மாற்றி மாற்றிப் பாட அதை வீடியோவும் எடுத்தார்கள். இதெல்லாம் முடிய கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆனது. அதன் பிறகும் அடுத்து எடுக்க வேண்டிய பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

“சார், இன்னும் நாலு பாட்டு இருக்கு. ஏற்கனவே நாம பேசனப்படி அதுல ஒரு பாட்ட நம்ம ஜோனா சாரே லிரிக் எழுதி, டியூன் போட்டு, பாடவும் செய்வாரு! மத்ததெல்லாம் நாம பூஜை முடிஞ்சதும் பார்த்துக்கலாம். இப்போ நாங்க கிளம்பறோம்” என எழுந்தான் தீரன்.

 

“பாய் படி!” என ஜோனாவும் இளம் இசையைக் கட்டிப் பிடித்து விடைப் பெற்றான்.

 

“லெட்ஸ் கோ!” என ஜீவாவை அழைக்க அவளோ தயங்கி நின்றாள்.

 

“என்னாச்சு ஜீவா?”

 

“ஆட்டோகிராப் வேணும்!”

 

“வீட்டுக்குப் போய் போட்டுத் தரேன்” என ஜோனா சொல்ல,

 

“உங்களது இல்ல! சாரோட ஆட்டோகிராப்” என மியூசிக் டைரக்டரை காட்டினாள் ஜீவா.

 

“அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்!” என முணுமுணுத்தான் தீரன்.

 

“ஓ, சுயூர்!” என சந்தோஷமாக தனது சிடி ஒன்றில் சைன் செய்து, ஜோனாவின் கண் முன்னே, ஜீவாவை மெல்ல அணைத்து சிடியைக் கொடுத்தான் இளம் இசையமைப்பாளன்.

 

கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு வெளியேறினான் ஜோனா! அவன் அருகே நடந்த ஜீவாவைப் பார்த்து,

 

“என்னோட தீவிர ஃபேன்னு சொன்ன!” என பல்லைக் கடித்தப்படி கேட்டான் ஜோனா.

 

“உங்களோட தீவிர ஃபேன் தான். ஆனா உங்களுக்கு மட்டுமே தீவிர ஃபேன் இல்ல!” என்றாள் ஜீவா.

 

“அதாவது பாஸ், உங்களுக்கு ஹார்ட் போட்டா, மத்தவங்களுக்கு லைக், ஹாஹா, கேர், வாவ் இப்படிலாம் போட கூடாதுன்னு எந்த சட்டத்துல இருக்குன்னு கேக்கறாங்க நம்ம மேடம்!”

“ஷட் அப் தீர்!”

 

பேசியபடியே ஸ்டூடியோவை விட்டு வெளியேறும் இடத்துக்கு வந்திருந்தார்கள்.

 

“ஒரு ஆள் முன்னுக்கு வாங்க. இன்னொருத்தர் எங்க பின்னால வாங்க. தீரான் நீங்க ரைட்ல வாங்க! நான் லெப்ட்ல நிக்கறேன்! நாம் உள்ள போன போதே, சிலர் ஜோனா சாரை கவனிச்சிட்டாங்க. இந்நேரம் கூட்டம் கூடி இருக்கும். நான் ட்ரைவர கார எடுத்துட்டு கிட்ட வர சொல்லி மேசேஜ் போட்டுட்டேன். பேக் டோர் வேற இல்ல இந்த இடத்துல. இல்லைனா பின்னாடி வழியா போயிருக்கலாம்” என்றவள் பாடிகார்ட் அவதாரம் எடுத்திருந்தாள்.

 

ஜோனாவை நடுவே விட்டு அவனுக்கு அரணைப் போல நால்வரும் சுற்றிக் கொண்டார்கள். கதவைத் திறக்க, பத்து பதினைந்து இளையர்கள் போனோடு ஆஜராகி இருந்தனர். அவர்கள் நெருங்கி வர, வேகமாக நடையை எட்டிப் போட்டார்கள் இவர்கள்.

 

“ஜோனா! ஜோனா! ஓன் செல்பி ப்ளீஸ்! ஓன் ஆட்டோகிராப்” என கூச்சல் போட்டனர் அவர்கள்.

 

சுற்றி மூன்று திடகாத்திரமான ஆண்கள் இருக்க, சின்னதாக இருந்த ஜீவாவைத் தள்ளி விட்டு விட்டு அவனை நெருங்கலாம் என சிலர் இவள் புறம் வந்தனர். பட்டென ஜீவாவை இழுத்து தனக்கு முன் நிறுத்திக் கொண்டான் ஜோனா.

 

“ஓகே, ஓகே ஒன்லி ஓன்!” என சொன்ன ஜோனா, தன் நடையை நிறுத்தினான்.

 

“ஆர் யூ க்ரேஷி? போலாம் ஜோனா! ரிஸ்க் வேணா” என்றாள் ஜீவா.

 

“ஸ்மால் கிட்ஸ் ஜீவா! ஒரு செல்பிதானே, நோ ஹார்ம்!” என்றவன் அங்கிருந்த ஒருவனின் போனை வாங்கி சற்று தள்ளி எல்லோரையும் நிற்க சொல்லி, தானே ஒரு செல்பியைக் கிளிக்கிக் கொடுத்தான்.

 

“பாய் படிஸ்” என்றவன் பறக்கும் முத்தம் ஒன்றையும் கொடுத்து விட்டு வேகமாய் நடந்தான்.

 

“ஏய் போட்டோவ எனக்கு வாட்ஸாப் பண்ணு! எனக்கும்! எனக்கும்!” என போனின் உரிமையாளனை அவர்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்ள இவர்கள் காரில் வேகமாக ஏறிக் கொண்டார்கள்.

 

அமர்ந்ததும் ஜீவாவின் இடது புற இடுப்பைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான் ஜோனா.

 

“என்ன செய்யற நீ? கைய எடு!” என சின்னக் குரலில் கண்டித்தாள் ஜீவா.

 

“பேசாம இரு!” என இவனும் சின்னக் குரலிலே கடிந்துக் கொண்டான்.

 

“கைய எடு ஜோனா!” என கோபமான குரலில் இவள் சொல்ல, கையை விலக்கிக் கொண்டவன்,

 

“ஹாஸ்பிட்டல் போகலாம்!” என்றான்.

“நோ! வீட்டுக்குப் போகலாம்! உங்கள விட்டுட்டு ஆபிசுக்கு போகனும்! வேலை நிறைய பெண்டிங்ல இருக்கு”

 

“ஜீவா ப்ளிஸ்!”

 

“நோ” என சொன்னவள் ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.

 

அதன் பிறகு அமைதியாக வந்தாலும், அவன் முகம் இறுக்கமாகவே இருந்தது. வீட்டை அடைந்ததும் இவள் கிளம்பப் போக,

 

“உங்களோட செக்கியூரிட்டி சர்விஸோட இம்ப்ரூவ்மெண்ட் பத்தி கொஞ்சம் பேசனும் மிஸ் ஜீவா! என்னோட மியூசிக் ரூமுக்கு வாங்க!” என எல்லோர் முன்னும் சொல்லி விட்டு விடுவிடுவென படியேறினான் இவன்.

 

“இசை அழைக்கிறது! செல்லுங்கள் தமக்கையே!” என கிண்டல் செய்தான் தீரன்.

 

“செறுப்பு!” என தீரனைத் திட்டியபடியே மாடி ஏறினாள் ஜீவா.

 

ரூம் கதவைத் திறந்து இவள் உள்ளே வர, பட்டென இழுத்து அவள் ஷேர்டைத் தூக்கிப் பார்த்தான் ஜோனா. இடது புற இடுப்புப் பகுதியில் சிவந்துப் போய் இருந்தது.

 

இவர்களை நெருங்கிய குரூப்பில் இருந்த ஒருத்தியின் கை முட்டி ஜீவாவின் இடுப்பைப் பதம் பார்த்திருந்தது. அதைப் பார்த்தவன் சட்டென ஜீவாவைத் தன் முன் புறம் இழுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் கேட்டது கிடைக்காத வரை சின்னவர்கள் இன்னும் இன்னும் முயலுவார்கள் என்றுதான் செல்பி எடுத்துக் கொடுத்தான் ஜோனா. இளங்கன்று பயம் அறியாது அல்லவா!

 

“வலிக்குதா ஜீவா?” என கேட்டவன், சிவந்திருந்த இடத்தை மென்மையாக தடவிக் கொடுத்தான்.

 

பட்டென அவன் கையைத் தட்டி விட்டவள்,

 

“லேசான அடி தான். ரெண்டு நாளுல சிவப்பு மறைஞ்சிடும். வேற எதுவும் இல்லைனா, நான் கெளம்பறேன் ஜோனா சார்” என்றாள்.

 

“என்னை விட்டு கிளம்பறதுலேயே குறியா இருக்க நீ ஜீவா! ஃபைன். போ! கிளம்பிப் போ! இனிமே என் பக்கமே வராத நீ!” என்றவன் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

 

தன்னைக் கடந்துப் போனவனை இமைக்காது பார்த்திருந்தாள் ஜீவா. ரூமில் இருந்து வெளியே சென்றவன், மீண்டும் வேக நடையுடன் உள்ளே வந்தான். அவள் அருகே வந்து, இடுப்பைத் தடவிக் கொடுத்தவன்,

 

“வலிக்குதா?” என மறுபடியும் கேட்டான்.

 

“என்னை யாரோ கிளம்பிப் போக சொன்னதா ஞாபகம்!”

 

“அது நான் இல்ல, அலெக்‌சாண்டர் தெ மடையன்” என சொன்னவனின் கை இன்னும் அவள் இடுப்பில் தான் இருந்தது.

 

“ஜோனா!”

 

“ஹ்ம்ம்!” என்றவன் அவள் தலையைத் தன் நெஞ்சில் வைத்து அழுத்தி இருந்தான்.

 

அசையாது அப்படியே இருந்தவள்,

“உனக்கு நெறைய கேர்ல்ப்ரேண்ட் இருக்காங்க தானே?”

 

“இருந்தாங்க!”

 

“சரி இருந்தாங்க! ஒவ்வொருத்தர் கூடவும் பழகி அவங்க சலிச்சதும் நெக்ஸ்ட் நெக்ஸ்ட்னு போய் கிட்டேத்தானே இருந்த?”

 

எங்கே வருகிறாள் என புரியாமல்,

 

“ஹ்ம்ம்!” என்றான் ஜோனா.

 

“நானும் சலிச்சிட்டா, நெக்ஸ்ட்னு போய்டுவத்தானே? நான் உன் கூடவே கொஞ்ச நாள் இருக்கேன்! என் மேல உள்ள ஆசைப் போனதும் கிளம்பி போய்டறியா?” என அவனை நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டாள் ஜீவா.

 

கண்களை மூடித் திறந்தவன், மெல்ல அவளைத் தன் பிடியில் இருந்து விலக்கினான்.

 

“ஒரு பொண்ணு குடுக்கற உடல் சுகம் சலிச்சுப் போயிடலாம் ஜீவா! அம்மா குடுக்கற உயிர் பாசம் என்னைக்கும் சலிச்சுப் போயிடாது! நீ எனக்கு அம்மா ஜீவா!” என்றவன் பாராங்கல்லாய் கணத்த கால்களை எட்டிப் போட்டு அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

 

“நீ எனக்கு அம்மா ஜீவா!!!!!!!!!!!!” என அவன் உதிர்த்த வார்த்தைகள் ஜீவாவின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

 

 

(மயங்குவாள்….)  

 

(போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ்.. அடுத்த எபியில் சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்)