MMM–EPI 15

122620776_740997409820929_9109553537495410146_n-61fac6ac

அத்தியாயம் 15

 

“இந்தா ஜீவா, டேக் இட்!” என தன் கையில் இருந்த ஓர் அழகான என்வலப்பை ஜீவாவிடம் நீட்டினான் ஜோனா.

 

“என்னதிது?”

 

“லவ் லெட்டர்”

 

“வாட்???”

 

“கடிதம்…காதல் கடிதம்!”

 

கண்கள் ஒளிர முகம் மலர வாங்கிக் கொண்டவள்,

“சில்லியா பிஹேவ் பண்ணாதிங்க மிஸ்டர் ஜோனா!” என அதட்டவும் செய்தாள்.

 

“எக்ஸ்கியூஸ் மீ! என்ன சில்லியா பிஹேவ் பண்ணறாங்க? இது படத்துல என் ஹீரோயினுக்கு நான் குடுக்கப் போற காதல் கடிதம். அந்த லெட்டர ஹீரோயின் திறக்கும் போது..”

 

“வெய்ட்டோ ஜீ! இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது! இந்த படத்துக்கு நான் தான் டைரக்டரு! எந்த சீனா இருந்தாலும் நான் தான் சொல்லுவேன்!” என வந்து நின்றான் தீரன்.

 

அப்பொழுதுதான் அவர்கள் படத்துக்கு ஹீரோவுக்காக பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரபலமான காஸ்டியூம் டிசைனைரைப் பார்த்து ஃபிட்டிங் எல்லாம் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். பாடிகார்ட் கடமையை முடித்து, தனது ஆபிசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளை நிறுத்தி வைத்து இந்த அக்கப்போர் போய் கொண்டிருந்தது. இதற்கு மேல் வீட்டில் தான் அவனது நேரம் என்பதால் மற்ற இரு கார்ட்களும் வீட்டை சுற்றி நடந்தபடி இருக்க, வாசலிலே விடை பெற முயன்ற ஜீவாவை உள்ளே அழைத்து வந்து லெட்டரை நீட்டி இருந்தான் ஜோனா.

தீரனைப் பார்த்து முறைத்தவள்,

“எனக்கு இந்தப் படத்தப் பத்தியோ அதுல வர மொக்க சீனைப் பத்தியோ எதுவும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல. நான் கிளம்பறேன்” என்றாள்.

“வேணாம்னாலும் நான் சொல்லித்தான் ஆவேன் தங்காய்! படத்துல உள்ள சீன்லயே இது தான் க்ளாப்ஸ் அள்ளித் தர போற சீன். மத்தவங்க தியேட்டர்ல பார்க்கற முன்னமே லைவ்வா என் வாய் வழியா தெரிஞ்சுக்க நீ குடுத்து வச்சிருக்கனும்” என்றவன், பாரதிராஜாவை மாதிரி கையை கேமரா ப்ரேமில் பார்ப்பது போல வைத்து,

 

“என் இனிய தமிழ் மக்களே! நான் உங்கள் நேசத்திற்குரிய தீரன் பேசுகிறேன்!” என ஆரம்பித்தான் தீரன்.

 

“அடைச்சை, சகிக்கல! பாரதிராஜா டயலோக்கா ஒரு பரதேசி ராஜா சொல்லற மாதிரி படு கேவலமா இருக்கு. ஒழுங்கா சொல்றதுனா சொல்லு! இல்லைனா நான் கெளம்பிப் போய்ட்டே இருப்பேன்” என குரலை உயர்த்தினாள் ஜீவா.

 

“ப்ளீஸ் தீரா! நார்மல் மோட்ல கதை சொல்லு! என் கிட்ட காட்டற குரங்கு வித்தைலாம் ஜீவா மேடம் கிட்ட கட்டாதே! கடுப்பாகி காட்டு காட்டுன்னு காட்டிட போறாங்க!” என தீரனை ஜீவாவோடு சேர்ந்து டேமேஜ் ஆக்கினான் ஜோனா.

 

“எதே குரங்கு வித்தையா? உசுர குடுத்து இமோஷனோட கதை சொல்றவனை குரளி வித்தை காட்டறவன் கணக்கா கலாய்க்கறது கடவுளுக்கே அடுக்காது பாஸ்! அதெப்படி என்னை கலாய்க்கறதுன்னா மட்டும் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்திடுறீங்க! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்!”

 

ஜீவாவும் ஜோனாவும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். தன்னை மீறி புன்னகைத்து விட்டவள், சட்டென முகத்தை தீரன் புறம் திருப்பினாள்.

 

“சீக்கிரம் சொல்லுங்க” என்றவள் கையில் கட்டி இருந்த கடிகாரத்தைக் காட்டி,

 

“டென் மினிட்ஸ் தான் டைம் குடுப்பேன்!” என முடித்தாள்.

 

குரலை கணைத்து சரி செய்தவன்,

 

“அது ஒரு அழகான கிராமம்! பச்சை பசேல்னு வயல்வெளி இல்லைனாலும், காஞ்சு கருவாடா போன புல்வெளி இருந்துச்சு. சலசலன்னு ஓடற அருவி இல்லைனாலும், ஊருக்கு வரப்பயலுங்க மேல கழிஞ்சு விடற குருவிங்க இருந்துச்சு. வாசத்த அள்ளித் தரும் சந்தனக் கட்டை இல்லைனாலும், பாசத்த அள்ளி தர நாலு நாட்டுக்கட்டைங்க இருந்துச்சு. இளசுங்க ஜோடியா ஒதுங்க       பெரிய பெரிய கற்பாறை இல்லைனாலும்..”

 

“உன் மண்டைய பொளக்க கடப்பாரை இருந்துச்சு” என முடித்து வைத்தவள், வாசலை நோக்கி நடையை எட்டிப் போட்டாள்.

 

ஜோனாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்கள் பளபளக்க, கோபமாய் செல்லும் ஜீவாவையே பார்த்திருந்தான். என்ன கோபமாக இருந்தாலும் கையில் அவன் கொடுத்த என்வலப்பை பத்திரமாக வைத்திருந்தாள்.

 

குடுகுடுவென ஓடி அவள் கையைப் பற்றிக் கொண்ட தீரன்,

 

“இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு நீ குடுத்த டைம் முடிய” என அழைத்து வந்தான்.

 

அவளை தீரன் சோபாவில் அமர வைக்க, அதற்காகவே காத்திருந்தது போல அவள் பக்கத்தில் நெருங்கி அமர்ந்துக் கொண்டான் ஜோனா.  

 

மீண்டும் ஆரம்பித்தது கதை (சொ/கொ)ல்லும் படலம்.

 

“அந்த ஊருல ஆடி மாச திருவிழா. அதுக்கு வெளிநாட்டுல இருந்து வராரு நம்ம ஹீரோ சார். சின்ன வயசுல பாத்துப் பழகன மூக்கொழுகி, இப்ப மூக்குல ஒழுகுறது நின்னுட்டாலும் ஹீரோவுக்கு அதெல்லாம் இன்னும் தெரியாது! சொத்து விஷயத்துல குடும்பம் பகையாகிப் போச்சு. ஹீரோவும் அவள பார்த்து வருஷம் பல ஆச்சு. அந்த அத்தை மகளுக்காக ஹீரோ நெஞ்சுகுள்ள காதல் கோட்டை கட்டி வச்சி, அதை அப்படியே லெட்டருல மடிச்சு வச்சு எடுத்துட்டு வராரு. ‘எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா’ன்னு மனசுல பாடிக்கிட்டே அந்த திருவிழா கூட்டத்த அலச, தூரமா அழகு மயில் ஒன்னு ஆடி அசைஞ்சி நடந்து வருது! மஞ்ச தாவணி காத்துல அசைய, ரெத்த சிகப்புல பாவாடை சட்டை போட்டு தேவதையா வரா அந்த அத்தை பொண்ணு! ஹீரோ அவ அழகுல ஸ்தம்பிச்சு நிக்க, சுத்தி நடக்கற ஆக்டிவிட்டிஸ் எல்லாம் அப்படியே ஸ்தம்பிச்சு நிக்கிது! அதான்மா ராட்டினம் சுத்தாம நிக்கிது, வளையல் கடைக்காரன் பொண்ணு கையைப் புடிச்சுட்டு அசையாம நிக்கறான், நடந்து போற மக்கள் எல்லாம் தூக்குன காலோட அப்படியே நிக்கறாங்க. அத்த பொண்ணும் ஹீரோவும் மட்டும் தான் அசையறாங்க. ஹீரோ மெல்ல நடந்துப் போய் விழி விரிச்சுப் பார்க்கற அவ கையில லெட்டர குடுத்துட்டு,

 

“‘ஒரு கடிதம் எழுதினேன், என் உயிர அனுப்பினேன், காதலி என்னைக் காதலி’ன்னு சொல்லி நெத்தியில கபால்னு கிஸ் அடிச்சிடறான். அடிக்கற கத்திரி வெயிலுல ஹீரோ வச்ச எச்சி முத்தம் ஹீரோயின் மனச உருக்கிடுது! இந்த இடத்துல டி.ஆர் டைரக்டரா இருந்திருதா,

“எச்சி, எச்சி, எச்சி…

நெத்தியில

வச்சி, வச்சி, வச்சி

என் மனசுக்குள்ள

கிச்சி, கிச்சி, கிச்சி

போட்றா டண்டணக்கா

மச்சி, மச்சி, மச்சி!!!!!’ ன்னு ஒரு டயலாக் போட்டிருப்பாரு. இது தீரன் டைரக்‌ஷனால மக்கள் தப்பிச்சிட்டாங்க”

எவ்வளவு அடக்கியும் ஜீவாவுக்கு சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது. கலகலவென நகைக்க, அவள் சிரித்த முகத்தையே ஆசையாய் பார்த்திருந்தான் ஜோனா. நீ எனக்கு அம்மாவைப் போல என சொல்லிய தினத்தில் இருந்து, அவன் அருகில் வாயை இறுக மூடி, இறுக்கமான முகத்துடன் வளைய வந்தவள் இன்றுதான் கலகலத்து சிரிக்கிறாள்.

“ஹீரோயின் திகைச்சுப் போய் அவன் முகத்தையேப் பார்த்தப்படி நின்னுடறா! இங்க அப்படியே மூனு செக்கன் காட்சிய ப்ரீஷ் பண்ணறோம்! அப்புறம் அவ லெட்டர பிரிச்சுப் படிக்க, அங்க ஒரு சாங் வருது. கட் பண்ணி அப்படியே ஸ்வீஸ்ல வைக்கறோம் ஷூட்டிங்க! தாவணி போட்ட கிராமத்துக் குயிலு மேல ஒரு துண்டு துணி கீழ ஒரு துண்டு துணின்னு பனிப்பிரதேசத்துல டான்ஸ் ஆட, ஹீரோ சாருக்கு மட்டும் கனமான விண்ட்டர் வேர் போட்டு கழுத்துக்கு காதல் தோல்வி சீனுக்கு மோகன் யூஸ் பண்ண சால்வையும் தரோம்! சத்தியமா சொல்லுறேன் சிஸ்டரு, தியேட்டர்ல இந்த காட்சிக்கு க்ளாப்ஸ் பிச்சிக்கும்!” என கதை சொல்லி முடித்தான்.

 

“கதாநாயகின்னு வந்தா மட்டும் தான் உங்களுக்கு எல்லாம் பட்ஜெட்ல படம் எடுக்கறோம்னு ஞாபகம் வரும் போல!” என கருவினாள் ஜீவா.

 

“அந்த லெட்டர்ல வர பாட்டத்தான் நான் இங்கிலீஸ்ல எழுதி இருக்கேன்! அத நீ தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செஞ்சு குடுக்கனும்” என கேட்டுக் கொண்டான் ஜோனா.

 

“அத ஏன் நான் செய்யனும்? உங்க டீம்ல ஆள் இல்லையா?” என கேட்டாள் ஜீவா.

 

“ஏன் இல்ல! நம்ம டைரக்டர் சாரே ரொம்ப நல்லா………….. ட்ரான்ஸ்லேட் செய்வாரே! ‘லவ் மீ டெண்டர்’ங்கற வரிய ஒப்பந்தம் போட்டு காதலின்னு மாத்திக் குடுத்த பெரிய மேதாவி இவர்.”

 

“டெண்டர்னா எங்க பிரிட்டிஷ் இங்கீலீசுல ஒப்பந்தம்தான். உங்க அமெரிக்கன் இங்கீலீசுல மென்மைன்னு ஒரு அர்த்தம் இருக்குன்னு எனக்கு என்னா தெரியும்” என சமாளித்தான் தீரன்.

 

“இவங்க யாரயும் நம்பி குடுக்க முடியாது! வரிய கொன்னுப் போட்டுருவாங்க! ப்ளிஸ் ஜீவா, ஹெல்ப் மீ!” என அவள் கையைப் பற்றியபடி கேட்டான் ஜோனா.

 

ஜோனாவின் ப்ளீசுக்குப் பின்னால் மறுக்கவும் தான் மனம் வருமோ! சரி என ஒத்துக் கொண்டவள், கையை உருவிக் கொண்டு எழுந்தாள். போய் வருகிறேன் என்பது போல ஜோனாவைப் பார்த்து தலை அசைத்தவள், தீரனை முறைத்தப்படி வெளியேறினாள்.

 

அவள் கார் கிளம்பும் வரை வாசலிலேயே நின்றிருந்தான் ஜோனா. அவன் தோள் மேல் கைப்போட்ட தீரன்,

 

“எல்லா சரியாகிடும் பாஸ்! சீக்கிரம் உங்க கிட்ட வந்துடுவாங்க” என தைரியமூட்டினான்.

 

“வந்துடுவாளா? இல்ல நேத்துப் பார்த்த படத்துல ஹீரோ சொன்ன மாதிரி லவ்வுன்னா என்னான்னு தெரியாம செத்துப் போறத விட என்னான்னு தெரிஞ்சு தோத்துப் போறது எவ்வளவோ மேல்னு என்னை வசனம் பேச வச்சிட மாட்டால்ல(லவ் டுடே)? பயமா இருக்கு தீரா! அவளுக்காகத்தான் இங்க இருக்கேன்! அம்மாவோட நேசம், அப்பாவோட பாசம் எல்லாத்தையும் விட்டுக் குடுக்க முடிஞ்ச என்னால இவளோட காதல விட்டுக் குடுக்க முடியும்னு தோணல! ஷீ பேவிட்ச்ட்(bewitched) மீ! இத உங்க ஊர்ல எப்படி சொல்வாங்க தீர்?”

“ஹ்ம்ம்! பில்லி சூனியம் வச்சிட்டான்னு சொல்வாங்க! “என சொல்லி குபீர் என அவன் சிரிக்க, ஜோனாவுக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

 

“தேங்க்ஸ் தீர் அவள சிரிக்க வச்சதுக்கு!”

 

“பாஸ், மேடம் உங்களுக்கு லவ்வர்னா எனக்கு சிஸ்டர்! அவங்கள சிரிக்க வச்சதுல எனக்கும் சந்தோஷம்தான்”

 

தீரனை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ஜோனா.

 

அதன் பிறகு வந்து படுக்கையில் விழுந்தவனுக்கு தூக்கம் கிட்டே வர மாட்டேன் என ஜீவாவைப் போலவே அடம் பிடித்தது. கைப்பேசியை எடுத்து வாட்ஸாப் போனவன், எப்பொழுதும் போல ஜீவாவுக்கு குட் நைட் என மேசேஜை தட்டினான். போட்ட உடனேயே ப்ளு டிக் காட்டியது. ஆனால் அவள் எப்பொழுதும் போல ரிப்ளை போடவில்லை. டீ.பீ இல்லாமல் ப்ளாங்காக இருந்த அவளது எண்ணையே பார்த்தப்படி படுத்திருந்தான் ஜோனா. தான் ஆசைப்பட்டது எதுவுமே தனக்கு கிட்டாதோ என மனம் சோர்ந்துப் போய் கிடந்தது.

 

பகலில் பல வேலைகளுக்கு மத்தியில் தன்னை பிசியாகவே வைத்திருப்பவனுக்கு, இரவின் தனிமை கொடுமையாய் இருந்தது. ஏகாந்த இரவில் ஜீவாவின் பேச்சும், சிரிப்பும், அக்கறையும், அன்பும் மட்டுமில்லாமல் அவள் கொடுத்த காதல் சுகமும் நினைவுகளில் முட்டி மோதி அவனை நிலை இழக்க செய்யும். அன்று தன் கைகளில் அடங்கிக் போனவளின் கூசி சிலிர்த்த தேகமும், வாய் ஓயாத மெல்லிய பிதற்றல்களும், வெட்கப் புன்னகையும் நினைவில் வந்து இன்றும் அவள் தன் கையருகில் வேண்டுமென பித்தம் கொள்ள வைக்கும் அவனை. எதையும் அடக்கி பழக்கப் பட்டிருக்காதவனுக்கு இம்சையாய் கழியும் இரவு. பாடாய் படுத்தும் அவள் நினைவுகளை மறக்க மறுபடி மதுவை நாடலாமா எனும் எண்ணம் வரவும் பயந்துப் போனான் பாடகன்.

அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க, கிட்டாரை எடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான். பால்கனியில் போடப்பட்டிருந்த கூடை ஊஞ்சலில் எப்பொழுதும் போல அமர்ந்தவன், போனை வீடியோ ரெக்கார்டிங்கில் தட்டி மேசை மேல் வைத்து விட்டு வாசிக்க ஆரம்பித்தான்.

 

அவனுடைய பாடல்கள், மனதுக்குப் பிடித்த மற்றவர்களின் பாடல்கள் என கிட்டாரை வாசித்தப்படியே மெல்லிய குரலில் பாடினான். காலை எந்தி ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே, லயித்துப் போனான் பாடுவதில். உடலும் மனமும் களைத்துப் போக, தூக்கம் கண்களை சுழட்ட ஆரம்பிக்க ஊஞ்சலில் இருந்து எழுந்துக் கொண்டான் ஜோனா. வீடியோவை நிறுத்தியவன், அதை அப்படியே ஜீவாவுக்கு அனுப்பி வைத்தான். உடனே ப்ளூ டிக் வந்தது. மணியைப் பார்த்தான். விடியற்காலை மூன்று என காட்டியது.

 

“நீயும் தூங்கலையா இன்னும்? ஏன்டி தள்ளி நின்னு உன்னையும் வாட்டி என்னையும் இப்படி வாட்டற?” என முனகிக் கொண்டே போய் கட்டிலில் விழுந்தான். அதன் பிறகே நித்திரா தேவி பாவப்பட்டு வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

 

அங்கே தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்த ஜீவா, வீடியோவை உடனே ஓடவிட்டாள். பைஜாமா பேண்ட் மட்டும் அணிந்து வெற்று மார்புடன் கிட்டாரைப் பிடித்து அமர்ந்திருந்தவனைப் பார்த்து, மெல்லிய வெட்கம் வந்தது இவளுக்கு. வெட்கம், நாணம் போன்ற வஸ்துக்கள் தன்னிடமும் உண்டு என இவள் அறிந்துக் கொண்டதே ஜோனாவுடன் இரண்டற கலந்த பின்புதான். தனது ஜே பெண்டனை தடவிக் கொண்டவள், வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

குரல் குழைந்து உருக, அனுபவித்து பாடினான் ஜோனா. கடல் காற்று அவன் முடியைக் கலைத்து விளையாட, பால்கனி விளக்கின் மெல்லிய வெளிச்சம் அந்த இடத்தை ரொமேண்டிக்காக காட்ட, ஊஞ்சல் முன்னுக்கு வரும் போது முகம் வெளிச்சமாகவும், பின்னுக்கு போகும் போது இருட்டாகவும் காட்ட, இவள் அவனின் ஒவ்வொரு அசைவையும் கண்ணெடுக்காமல் ரசித்தாள். தன்னை சுகமாய் மீட்டிய விரல்கள் கிட்டாரை மீட்டுவதையும், ஓயாமல் முத்தமிட்ட உதடுகள் பாடல் பாடுவதையும் ஒரு கிறக்கத்துடன் பார்த்திருந்தாள். கடைசியாக அவன் பாடிய பாடல், இவளை அசைத்துப் பார்த்தது.

 

“And I….will always love you, oooh

Will always love you!!!” என பாடியவனின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவளுக்கும் கண்ணீர் தளும்பியது.

 

“எல்லாம் உன்னாலத்தான்! உன்னாலத்தான் உன்னை வேணாம்னு சொல்லறேன்! ஏன்டா என்னைப் புரிஞ்சுக்க மாட்டற! இங்கயே இருந்து நீயும் கலங்கி என்னையும் ஏன்டா ஜோனா கலங்கடிக்கற? இப்படி நமக்குள்ள எல்லாம் மாறிப்போகும்னு தெரிஞ்சிருந்தா சத்தியமா உன்னைக் கடத்திருக்க மாட்டேன்! உன்னை கொஞ்ச நாள் சந்தோஷமா வச்சிக்கனும்னு கடத்திட்டுப் போய் இப்படி ஓரேடியா சந்தோஷத்த பறிச்சிட்டேனே! எல்லா பொண்ணுங்களையும் போல என்னை மட்டும் ஏன்டா கடந்துப் போக மாட்டற! அப்படி நான் என்ன செஞ்சிட்டேன் உனக்குன்னு இப்படி என்னை சுத்தி வர? நான் உனக்கு அம்மான்னு சொன்னியே! ஒரு அம்மாவால தன் புள்ள கலங்கி நிக்கறத பார்த்துட்டு கையக் கட்டிட்டு சும்மா இருக்க முடியுமா? நான் இருக்கேனே! இந்தப் பாவி சும்மா இருக்கேனே! நான் உனக்கு வேணா ஜோனா! வேணவே வேணா! போய்டு ஜோனா! என்னை விட்டுப் போய்டு” என தேற்ற ஆளின்றி கதறி கண்ணீர் விட்டாள் ஜீவா.    

 

இருவருக்குமே நெஞ்சு முட்ட காதல் இருந்தாலும், ஒருத்தியின் பிடிவாதத்தால் சேர முடியாமல் தவித்தவர்களை கதி கலங்க வைக்கவென வந்தது படத்திற்கு பூஜை போடும் விழா. படத்தின் ஆரம்ப விழா இவர்கள் காதலுக்குப் போட்டது திறப்பு விழாவா? மூடு விழாவா?

 

(மயங்குவாள்…)

 

(ஹலோ டியர்ஸ்! போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த எபியில் சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்! கந்தனுக்கு அரோகரா!!!!!)