MMM–EPI 16

122620776_740997409820929_9109553537495410146_n-61bd4543

அத்தியாயம் 16

 

“ஜோனா,

 

ஐ லவ் யூ!!!! இதத்தான் நைட் முழுக்க ஜபம் மாதிரி சொல்லிட்டே இருந்த நீ! லவ்!!!! நீ சொன்னது எந்த ஊர் லவ்? எங்க ஊரு லவ்வா இல்ல உங்க ஊரு லவ்வா?

இதுல என்னடா டிப்ரண்ஸ்னு கேக்கறியா? உங்க ஊர்ல மோஸ்ட்லி உடம்பு வரைக்கும் தான் லவ்! ஆனா எங்க ஊர்ல உடலும், உணர்வும், உசுரும் இணைஞ்சி ஒரே கோட்டுல பயணிக்கறது தான் லவ்! இங்க கூட சிலர் உங்க ஸ்டைல்ல லவ் பண்ணாலும், எங்க பாரம்பரியமான லவ் இன்னும் அழியாமத்தான் இருக்கு!

நீ அமெரிக்கன்றதுனால நீ சொன்னத நான் அமெரிக்கன் லவ்வாவே எடுத்துக்கறேன்! அதாவது தேவை இருக்கறப்போ சொல்லிட்டு தேவை தீர்ந்ததும் மறந்து மறைஞ்சி போகிற அமெரிக்கன் லவ்! ராத்திரி முழுக்க உனக்கு என் தேவை இருந்துச்சு! இப்போ விடிஞ்சதும் கண்டிப்பா அந்த லவ் தீர்ந்துருக்கும்! நீயே போடின்னு சொல்லறதுக்கு முன்ன நானே போய்டறேன் ஜோனா!

பெரிய இவ மாதிரி பேசறியே, நான் அமெரிக்கன் லவ்ல அப்ரோச் பண்ணறப்போ நீ ஏன் இந்திய லவ் வேறன்னு சொல்லி என்னை மறுக்கலன்னு நினைப்ப! கண்டிப்பா நினைப்ப! எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசா இருந்துச்சு ஜோனா! நீ எனக்கு கொடுத்த அட்டென்ஷன், எனக்காக நீ கண்ணுல காட்டன மயக்கம், இது பூலோகமான்னு என்னை சந்தேகப்பட வச்ச உன்னோட முத்தம், உடம்புல ஹார்மோன எக்குத்தப்பா எகிற வச்ச உன்னோட தொடுகை, நீ ஹஸ்க்கி வாய்ஸ்ல சொன்ன அந்த ‘டெம்ப்ட்ரெஸ்’ எல்லாம் என்னை அடிச்சு வீழ்த்திடுச்சு! அந்த நேரம் மைண்ட் வேலை நிறுத்தம் செஞ்சிட்ட உணர்வு. பல சமயம் படம் பார்க்கறப்போ, ஹீரோயின கல்யாணம் பண்ணாமலே, நல்லவன் மாதிரி நடிக்கற வில்லன் எப்படி மயக்கி தன் இச்சைக்கு யூஸ் செஞ்சுக்கறான்னு காட்டுவாங்க. அவன் தொட்டதும், அவ அப்படியே மயங்கி கிறங்கி நிப்பா! படத்த பார்க்கற எனக்கு இதெல்லாம் ஓவர் சீனுன்னு தோணும்! ஆனா அத நானே அனுபவிச்சப்ப, என்னால அந்த மாய சுழல்ல இருந்து வெளி வர முடியல ஜோனா! உன்னை மறுக்கவே முடியல.

எனக்கு உன் மேல லவ் இல்ல ஜோனா! லவ் இல்லாம நான் இப்படி நடந்துகிட்டது ரொம்ப கில்ட்டியா இருக்கு. இரவின் தனிமையில, நிலவின் குளுமையில காமத்தின் பிடியில நாம செய்யறது எதுவும் தப்பா தோணாது ஜோனா! அதுவே விடியல் வேளையிலே, ஆதவனின் ஒளிச் சிதறலுல ராத்திரி செஞ்சது எல்லாமே தப்புன்னு தோண ஆரம்பிக்கும். எனக்கு இது, இப்போ ரொம்பவே தப்பாத் தெரியுது! யாரும் குடுக்காத பாசத்த நீ எனக்கு கொடுத்த! யாரும் கொடுக்காத நேசத்த நீ எனக்கு கொடுத்த! யாரும் காட்டாத அக்கறைய நீ எனக்கு காட்டுனா! யாரும் நீட்டாத நட்புக்கரத்த நீ நீட்டுன! இதெல்லாம் என் கண்ணை மறைச்சிடுச்சு ஜோனா! அதனாலத்தான் ஈசியா என்னையே உனக்குக் குடுத்துட்டேன்!

திரும்பவும் நீ, மூலான் ஐ நீட் யூன்னு சொன்னா என்னால மறுக்க முடியுமான்னு தெரியல ஜோனா! இங்க என்னைத் தவிர யாரும் இல்லாதனால, உனக்கு நானே பெட்டர்னு தோணிருக்கலாம். எங்க ஊர்ல சொல்லுவாங்க ஆலை இல்லாத ஊர்ல இலுப்பைப்பூ சர்க்கரையாம்னு! என் ஜோனாவா இருந்தாலும் அவனுக்கு நான் இலுப்பைப்பூவா இருக்க விரும்பல!

சோ நான் போறேன்! என்னைத் தேட வேணாம்! இதுக்கு மேல நாம சந்திச்சுக்கிட்டா கூட எனக்கு நீ வெறும் சிங்கர் ஜோனா மட்டும் தான். இனிமே ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ லாம் நமக்குள்ள வரவே வேணாம்.

தயவு செஞ்சு அமெரிக்காவுக்கே போய்டு ஜோனா! உன் ஸ்கின்லாம் எங்க ஊர் வெயில் பட்டு பொசுங்கி போன மாதிரி இருக்கு. ரொம்ப ஸ்வேட் ஆகுது வேற! வியர்வைல தலை முடி எப்பவும் ஈரமா இருக்கறதுனால, தலைய சொறிஞ்சிட்டே இருக்க நீ! இங்க சாப்பாடும் உனக்கு சரிப்படல. சோ போய்டு ஜோனா.

உடம்ப பார்த்துக்கோ ஜோனா. எக்சர்சைஸ் செய்! சத்தான உணவ சாப்பிடு! எப்பவும் ஹேப்பியா இரு.

 

நான் போறேன்!

 

பாய்!

 

இப்படிக்கு,

 

மூலான்

ஜீவா”

 

எண்ணிலடங்கா முறைகள் படித்திருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த ஜோனா நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றினான். ஆங்கிலத்தில் அழகாய் தனது மன உணர்வுகளை வடித்து அவள் தந்து போயிருந்த கடிதத்துக்கு ஒரு முத்தம் வைத்தவன் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

கடிதத்தை முதல் முறை காட்டேஜில் படித்தப் போது அப்படி ஒரு கோபம் வந்தது அவனுக்கு. அன்பைக் காட்டி, பாசத்தைக் காட்டி அவள் உடலை அடைந்து விட்டான் இவன் என்பது போல தான் தோன்றியது கடிதத்தின் சாராம்சம். ஆத்திரத்தில் கடிதத்தைத் தூக்கி எறிந்தவன், அவர்கள் கூடி களித்த கட்டிலையே வெறித்தப் படி நின்றிருந்தான். பின் கட்டிலில் அமர்ந்து அவள் தலையணையை எடுத்து அணைத்துக் கொண்டான் ஜோனா.  

‘அமெரிக்கன் லவ், ஆப்பிரிக்கன் லவ்னு, இதுல என்ன கம்பேரிஷன்! லவ் இஸ் யூனிவெர்சல் ஃபீல். அப்போ எங்க ஊர்ல காதலோட மரணம் வந்து பிரிக்கும் வரை ஒன்னா வாழ்ந்த ஜோடி இல்லவே இல்லைன்னு சொல்றாளா? ஏன் இவ ஊர்ல லிவிங் டுகேதர் கலாச்சாரம் இல்லைன்னு சொல்ல முடியுமா? சில்லி!’ என ஆத்திரத்தில் கொதித்தவன் தலையணையை தூக்கி எறிந்தான். யாருக்கும் காட்டாத காதலை அவளுக்கு மட்டுமே காட்டி இருக்க, அதை அலட்சியம் செய்துவிட்டாள் ஜீவா என மனம் கிடந்து மறுகியது அவனுக்கு. தலையை இரு கரங்களால் தாங்கிக் கொண்டவன்,

“இது உடம்ப பார்த்து வந்த அமெரிக்கன் லவ் இல்லடி இடியட்! திஸ் இஸ் பியூர் லவ்! மனச பார்த்து வந்த பியூர் லவ்” என கத்தியவன் படக்கென எழுந்து நின்றான்.

“ஓ மை காட்! ஐம் ட்ரூலி, டீப்லி ஃபோல்லன் இன் லவ்! ஓ காட்!”

இவ்வளவு நாள் ஜீவாவின் மேல் காதல் ஊற்றெடுத்தாலும், அது எத்தனை நாளுக்கு என மனதின் ஓர் ஓரத்தில் பயம் இருந்துக் கொண்டே இருந்தது இவனுக்கு. ஒன்றோடு ஒன்று கலந்த பின், அவள் மேல் இருக்கும் காதல் காணாமல் போய் விடுமோ எனும் கேள்விக்குறி அவன் மனதைக் குடைந்துக் கொண்டே இருந்தது.  அதற்கான விடையை தெள்ளத் தெளிவாக இப்பொழுது உணர்ந்துக் கொண்டவனுக்கு, மனம் பஞ்சாய் பறந்தது. பட்டென கட்டிலில் அமர்ந்தவன் மூச்சை இழுத்து இழுத்து விட்டான்.

“மூலான், ஐ லவ் யூ! லவ் யூ சோ மச்” என முணுமுணுத்தவன் எழுந்துப் போய் அந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை அமைதியாக படித்தான்.

 

ஜோனா என ஆரம்பித்திருந்த இடத்தில் எழுத்து கொஞ்சம் கலங்கலாய் இருந்தது.

 

“புவர் பேபி! அழுதிருக்கா போல”

 

முதல் வரியே ஐ லவ் யூ என இருந்தது.

 

“என் பேபி லவ்வோடத்தான் லெட்டர ஆரம்பிச்சிருக்கா. நானே உன்னை போடின்னு சொல்லிடுவனா பேபி? இது ட்ரூ லவ்னு தெரியாம புரியாம இருந்தப்போ கூட உன்னை என் கூடவே காலம் முழுக்க வச்சிக்கனும்னு நெனைச்சேனே! உன்னை எப்போதும் என்னை விட்டு விலக்கனும்னு நான் நினைக்கவே இல்லை மூலான்.”

‘எனக்கு உன் மேல லவ் இல்ல ஜோனா’ என்ற வரியில் இருந்த எழுத்துக்கள் மட்டும் அவசரமாய் எழுதியது போல ஒட்டிக் கிடந்தன.

“லவ் இல்லைன்னு எழுத்துல கூட சொல்ல முடியல உன்னால! கசப்ப விழுங்கற மாதிரி வேகமா எழுதி விட்ருக்க நீ! உன்னை வம்பிழுக்கறேன்ற பேர்ல நான் செபலசில இருக்கேன், ஐ நீட் யூ, கிஸ் பண்ண போறேன் இப்படிலாம் சொல்லி உன்னை ரொம்பத்தான் டார்ச்சர் செஞ்சிருக்கேன் மூலான். அதனாலத்தானே வேற பொண்ணு எதுவும் கிடைக்காம உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சிட்ட நீ! அப்போ இப்படிலாம் உன் மேல க்ரேஸ் ஆவேன்னு தெரியலையே மூலான். தெரிஞ்சிருந்தா வால சுருட்டிட்டு இருந்துருப்பேன்! விட்டுட்டுப் போறப்ப கூட ஸ்கின் இப்படியாச்சு, தலை அரிக்குது, உடம்ப பார்த்துக்கன்னு ஆயிரம் கவனம் சொல்லிருக்க! இந்த அக்கறைய உன்னைத் தவிர வேற யார் எனக்கு காட்டுவாங்க? என்ன சொன்ன? வெளிய பார்த்தா இனிமே நான் வெறும் சிங்கர் ஜோனாதானா? மறுபடி என் ஊருக்கே போயிடனுமா? மாட்டேன்! மாட்டவே மாட்டேன்! நீ இல்லாம எங்கயும் போக மாட்டேன் மூலான்! இவ்ளோ லவ்வ என் மேல வச்சிக்கிட்டு விலகிப் போன உன்னை என் கிட்டவே வரவழைக்கிறேன்! நீ சொன்ன மாதிரி உடலால பண்ணற அமெரிக்கன் லவ்வ தூக்கிப் போட்டுட்டு மனசால நெருங்கற இந்திய லவ்வ காட்டி உன்னை திணறடிக்கறேன்! வேய்ட் ஃபோர் மீ மூலான்” என சபதம் எடுத்தவன், தீரனின் உதவியால் பொய்யான அட்டாக்கை ஏற்படுத்தி ஜீவாவை தனது பாடிகார்ட்டாக வர வைத்திருந்தான்.

 

கதவு தட்டும் சத்தமும்,

“பாஸ், ரெடியாகிட்டீங்களா?” எனும் தீரனின் அழைப்பும் தான் ஜோனாவை தரையிறக்கியது. லெட்டரை மடித்து பெட் சைட் டேபிள் ட்ராவரில் வைத்தவன்,

 

“கிவ் மீ டென் மினிட்ஸ்” என பதில் அளித்தான்.

இன்று அவர்கள் ஆவலாய் எதிர்ப்பார்த்திருந்த பட பூஜை விழா இண்டோர் ஸ்டேடியம் ஒன்றில் ஏற்பாடாகியிருந்தது. முக்கிய திரைத் துறை பிரமுகர்களுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. மாலை நான்கு மணிக்குத்தான் நல்ல நேரம் என குறித்துக் கொடுக்கப்பட்டிருக்க, இரண்டரை மணிக்கே தீரன் எல்லோரையும் கிளம்பும்படி அலப்பரை செய்துக் கொண்டிருந்தான்.

 

ஜீவாவும் வீட்டுக்கு வந்திருக்க,

“தங்காய்! இன்றைக்காவது அழகாய் அம்சமாய் ஆரவாரமாய் உடை அணியக் கூடாதா? இதே கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் விறைப்பாக வந்து நிற்க வேண்டுமா?” என கேட்டு அவளது முறைப்பையும் பரிசாய் வாங்கிக் கொண்டான்.

 

“சேலையையும், சுடிதாரையும் போட்டுக்கிட்டு, துப்பாக்கிய எங்க சொருக? உன் மூக்கிலயா?” என கடுப்பாக கேட்டவளின் குரல் மெல்ல நின்றுப் போக, அவள் பார்வைப் போன இடத்தைப் பார்த்தான் தீரன்.

 

அங்கே ஜோனா பச்சை ஷெர்வாணியில் ஆணழகனாய் படி இறங்கிக் கொண்டிருந்தான். முடியை ஜெல் போட்டு அழகாய் வாரி இருக்க, அது பளபளவென டாலடித்தது. அங்கே அவன் வரும் போதே அவனது பாடி ஸ்ப்ரேயின் வாசனை இங்கே வந்து இவர்களுக்கு ஹாய் சொன்னது. கண்ணை சிமிட்டாமல் இவள் பார்த்திருக்க,

“உன்னைப் பார்த்த பின்பு நான்

நானாக இல்லையே!!!” என மெல்லிய குரலில் ஜீவாவை நக்கல் செய்து பாடினான் தீரன்.

சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டவள்,

“அவர பார்த்ததுல இருந்து நீ நீயா இல்லைத்தான். ஓசி பிட்சாக்கு உசுர விட பார்த்த ஆளுங்கலாம் இப்ப ஓசிபீசி பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்காங்க! கால கொடுமைடா சரவணா!” என திருப்பிக் கொடுத்தாள்.

“தோ பாருமா தங்காச்சி! அக்கவுண்ட்ல காசு இருக்கறது மட்டும்தான் உங்க எல்லாருக்கும் கண்ணுல தெரியுது! உழைச்சி களைச்சி அக்கக்கா பிஞ்சி போய் கிடக்கற இந்த தீரன் நெலமை யார் கண்ணுக்கும் தெரியல! சிஸ்டரு, முட்டை போடற கோழிக்குத்தான்மா அதோட வலி தெரியும்! வலிக்குதுமா” என இவன் அலுத்துக் கொண்டான்.

“விடு தீர்! உன் கஸ்டம் எல்லாருக்கும் புரியாது” என இவர்களை நெருங்கி இருந்த ஜோனா சொல்ல,

“பாரு பாரு! என் தளபதிய பாரு!” என தீரன் சந்தோஷப்பட்டு முடிப்பதற்குள்,

“இனிமே இவ்ளோ வலிப்பட்டு முட்டைப் போட வேணா! பேசாம ஸ்ட்ரேய்ட்டா கோழியே போட்டுரு” என முடித்து வைத்தான் ஜோனா.

 

“எதே கோழி போடறதா?” என அவன் அதிர்ச்சியாக, ஜீவா சிரிப்பை அடக்கப் படாத பாடுபட்டாள்.

 

“ஜீவா!” என அழைத்தான் ஜோனா.

 

என்ன என்பது போல இவள் பார்க்க, உடை எப்படி இருக்கிறது என கண்களாலேயே கேட்டான் ஜோனா.

 

நன்றாக இருக்கிறது என கண்களாலேயே பதிலளித்தவள், விறு விறுவென காருக்கு நடந்து விட்டாள்.

 

புன்னகையுடனே பாடிகார்ட்ஸ், தீரன் புடை சூழ விழா நடக்கும் ஸ்டேடியத்துக்கு கிளம்பினான் ஜோனா.

 

பொது மக்களுக்கு முகநூல் வழி லைவ்வாக நிகழ்ச்சி காட்டப்படுவதால், சினிமா மக்களும் பத்திரிக்கை நண்பர்களும், கொஞ்சமாய் ரசிக பெருமக்களும் மட்டுமே அழைக்கப்படிருந்தனர். பிரபலமான டைரக்டர் ப்ளஸ் நடிகர் சங்கத் துணைத் தலைவருமாக இருந்த ஜெய்க்குமாரும் விழாவுக்கு வந்திருந்தார்.

 

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தும் ஸ்டேடியத்தின் வெளியே ஜோனாவின் ரசிகர்கள் நூற்றுக் கணக்கானோர் குவிந்திருந்தனர். போலிஸ் மற்றும் ஜீவாவின் செக்யூரிட்டி ஆட்கள் என படையே குவிக்கப்பட்டிருந்தது அங்கே. காரில் இருந்து ஜோனா இறங்க,

 

“ஜோனா, ஜோனா, ஜோனா!!!” என கோஷம் வானைப் பிளந்தது.

 

மக்களைப் பார்த்து அழகாய் புன்னகைத்து இந்திய ஸ்டைலில் கரம் குவித்து வணக்கம் வைத்தான் ஜோனா. அவன் செய்கை கூட்டத்தை இன்னும் அசரடித்தது. அவன் ஸ்டேடியத்தின் உள்ளே நுழையும் வரை கோஷம் ஓயவில்லை.

 

ஜீவா பக்கத்தில் வர மற்ற கார்ட்ஸ் சூழ உள்ளே நுழைந்தான் ஜோனா. ஏற்கனவே மக்களும் விஐபிகளும் வந்திருந்தனர். அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஜோனா அமர வைக்கப்பட, தீரனும் அவன் அருகே அமர்ந்தான். அவர்கள் இருவரின் பின்னால் நின்றுக் கொண்டாள் ஜீவா. அவளையும் ஜோனா அமர சொல்ல, நிற்பதுதான் கண்காணிக்க வசதி என மறுத்து விட்டாள் இவள்.

 

மந்திரி ஒருவர் வருவதற்காகத்தான் எல்லோரும் காத்திருந்தார்கள். அவர் தான் விழாவை தொடக்கி வைப்பதாக இருந்தது. பெரிய ஸ்க்ரீனில் போட்டோ ஷூட் போது எடுத்தப் படங்கள் ஸ்லைடாக ஓடிக் கொண்டிருக்க, நிகழ்ச்சி தொகுப்பாளினி நேரத்தைக் கடத்துவதற்காக மக்களிடம் மொக்கைப் போட்டுக் கொண்டிருந்தார்.

 

ஜோனாவின் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த ஜெய்க்குமார், மெல்ல குனிந்து அவன் காதில்,

 

“என்னப்பா, சொந்த காசுல சூனியம் வச்சிக்கப் போறியா? அந்த வெளங்கா வெட்டிய நம்பி இவ்ளோ நாள் கத்திப் பாடி சேர்த்த பணத்த எல்லாம் வேஸ்ட் பண்ண போறியா நீ? உங்கம்மாவ அதையும் இதையும் சொல்லி சமாதானம் பண்ணி ஊருக்கே நீ அனுப்பிட்டாலும், உன்னைப் பார்த்துக்க சொல்லி என் கிட்ட சொல்லிட்டுப் போயிருக்காப்பா! அந்த அக்கறையிலத்தான் சொல்லறேன். இது வேணா! என் கிட்ட வந்துடு ஜோனா” என முணுமுணுத்தார்.

 

“இத்தனை நாளு நீங்க குடுத்த டார்ச்சரையும், முட்டுக்கட்டையையும் பூ பூன்னு ஊதி தள்ளி பட பூஜை வரைக்கும் வந்தவனையா வெட்டி மட்டின்னு சொல்றீங்க! நீங்க அவன ரொம்ப குறைவா எடைப் போட்டுட்டீங்க மிஸ்டர் ஜெய்க்குமார்! ஆளுங்கள ஒழுங்கா கணிக்கத் தெரியாத நீங்க எடுக்கற படம் மட்டும் எங்கிருந்து உருப்படியா வரும்? அப்படிப்பட்ட குப்பை படத்துக்கு என்னை வந்து நடி, நடின்னு டார்ச்சர் வேற பண்ணறீங்க. சாரி மிஸ்டர் டாடி! பதினாறு வயசுல என்னை சீப்போன்னு தூக்கி வீசினது வீசனதுதான். துப்புன எச்சில் துப்பனதுதான். என் டைம்ம வேஸ்ட் பண்ணாம, வேற யாருக்காச்சும் இன்னொரு மகன் பொறந்திருந்தா அவன நடிக்கக் கொண்டு வாங்க!” என்றவன் அப்பொழுதுதான் மேடை ஏறிய படத்தின் கதாநாயகியைப் பார்த்து முகம் மலர புன்னகைத்து, அவளை லேசாக அணைத்து தனது இடத்தையும் உட்கார கொடுத்தான்.

 

தீரன் எழுந்து அவன் இடத்தை ஜோனாவுக்கு கொடுத்து விட்டு, ஜெய்க்குமாரின் இன்னொரு பக்கம் போய் அமர்ந்துக் கொண்டான். மேடைக்கு வந்த இசை எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு, பின்னால் நின்றிருந்த ஜீவாவை லேசாக அணைத்து ஜொள்ளி விட்டு வந்து தனதிடத்தில் அமர்ந்தது.

 

“இந்த கொசுத்தொல்லைத் தாங்கலடா” என முணுமுணுத்தான் ஜோனா.

 

மந்திரி வர அவருக்கு மாலை மரியாதை எல்லாம் நடந்தது. தீரன் முதலில் பேசி படத்தைப் பற்றியும் நடிப்பவர்களைப் பற்றியும் க்ரூவைப் பற்றியும் அறிமுகம் செய்து வைத்தான். படத்தின் ப்ரோடியூசரான ஜோனாவுக்கும் மாலை மரியாதை நடந்தது. ஜோனாவின் பட நிறுவனமான ஜே.ஜே ப்ரோடக்‌ஷனை அவனையே திறந்து வைக்க சொல்லி அழைத்தான் தீரன். அதன் பிறகே படத்தின் அறிமுகப் பாடலையும், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடுவார் மந்திரி.

 

ஜோனா எழுந்து போக, அவன் பின்னாலேயே ஜீவாவைப் பாதுக்காப்புக்கு போக சொன்னான் தீரன். ஜோனா போய் ஸ்டேஜ் நடுவே நிற்க, அவன் பின்னால் நின்றாள் ஜீவா. ரிமோட்டில் இருக்கும் பட்டனை தட்டினால் அவர்களின் ப்ரோடக்‌ஷன் லோகோ இருந்த ப்ரேம் அழகாய் திறப்பது போல செட் செய்திருந்தார்கள். மந்திரி ரிமோட்டை ஜோனாவின் கையில் கொடுக்க, அதை புன்னகையுடன் வாங்கினான் ஜோனா. பட்டனை தட்டும் முன் ரிமோட்டை இவன் தவற விட, கீழே விழுவதற்குள் பட்டென பிடித்துக் கொண்டாள் ஜீவா. ரிமோட்டை அவனிடம் நீட்ட, அவள் கையைப் பற்றி வாங்குவது போல பட்டனை தட்டி இருந்தான் ஜோனா. இவள் விழி விரித்து இவனைப் பார்க்க, அழகாய் ஜே.ஜே என மிளிர்ந்தது இரண்டு எழுத்தும். அவர்கள் இருவரின் ப்ராடக்‌ஷனை அவர்கள் இருவருமே தங்கள் கையால் திறந்து வைப்பது போல கச்சிதமாக காய் நகர்த்தி முடித்திருந்தான் ஜோனா.     

 

அதன் பிறகு எந்த தங்குத் தடையுமின்றி விழா சிறப்பாக நடைப்பெற்றது. வந்தவர்களுக்கு உணவும் ஏற்பாடாகி இருந்தது. போட்டோ செஷன் எல்லாம் முடித்து வந்தவர்கள் சாப்பிட செல்ல, மந்திரி கிளம்பி விட்டார். ஜோனாவும் கிளம்ப முனைய, தீரன் நாயகியை அனுப்பி விட்டு, இருந்து எல்லாவற்றையும் முடித்து விட்டு வருவதாக சொல்லி நின்றுக் கொண்டான். மந்திரி கிளம்பியதும், பாதுகாப்புக்கு வந்த போலிசில் பாதி கிளம்பி இருந்தது.

 

ஜோனா ஜீவா இருவரும் ஸ்டேஜுக்கு கீழே இறங்க, எங்கிருந்தோ பறந்து வந்த தோட்டா ஒன்று ஜோனாவின் காதோர முடியை உரசிப் போய் பின்னால் இருந்த மலர் அலங்காரத்தைத் துளைத்து வீழ்த்தியது. சட்டென அலர்டான ஜீவா ஜோனாவின் முன்னே வந்து அவனை மறைத்து நிற்க, மற்ற கார்ட்டுகளும் அவனை சூழ்ந்து கவசம் போல நிற்க, அந்த இடமே அல்லோல கல்லோல பட்டது. தோட்டா சத்தம் கேட்ட மக்கள் இங்கும் அங்கும் ஓட, போலிஸ் கூட்டத்தைப் பாதுகாக்க ஓட என அந்த இடமே கூச்சலும் கத்தலுமாக இருந்தது.

 

ஜீவாவை அப்படியே இழுத்துத் தனக்குப் பின்னால் நிறுத்தி ஒரு கையை அவள் இடுப்புக்குக் கொடுத்து நகர முடியாத மாதிரி இறுக்கிக் கொண்டான் ஜோனா.

“ஹே ஜோனா, விடுடா என்னை! உன்னை சுட்டுட போறாங்க! விடு, விடு நான் உன்னைப் பாதுகாக்கனும்” என கத்தினாள் ஜீவா.

 

“உன் சேப்டித்தான் எனக்கு முக்கியம் மூலான்!” என அவளது தள்ளலையும் துள்ளலையும் அடக்க முனைந்தவனுக்கு, முடியவில்லை. ஆணாய் இவன் பலம் பொருந்தி இருந்தாலும், பல வகை தற்காப்புக் கலை கற்றவளிடம் செல்லுபடியாகுமா அவன் பலம்! அவனை மீறிக் கொண்டு முன்னே வந்து நின்றவளின் கண்கள் கூட்டத்தை அலசுவதற்குள் அடுத்த குண்டு பாய்ந்து வந்தது. இந்த முறை குண்டு ஜீவாவின் தோளை பதம் பார்த்து செல்ல,

 

“ஜீவா” என கத்தி விட்டான் ஜோனா.

இவர்களின் பாடிகார்ட்ஸ் தோட்டா வந்த திசையை நோக்கி சுட, இன்னொரு பக்கம் இருந்து பாய்ந்து வந்த குண்டு ஜீவாவைத் தாக்குவதற்கு முன் அவளை அணைத்துக் கொண்ட ஜோனாவின் கையை துளைத்ததுப் போனது.

“ஜோனா! ஜோனா! ஐயோ ஜோனா ரத்தம்” என தன் வலியையும் மீறி கத்தியவள், கோபத்தோடு தோட்டா வந்த திக்கில் சரமாரியாக சுட ஆரம்பித்தாள். அதற்குள் போலிசும் இவர்களை சூழ்ந்து பாதுகாப்பு அரணை அமைத்திருந்தனர். ஜீவாவின் தாக்குதலில் ஒருத்தன் கீழே விழுந்திருக்க, ஓடப் பார்த்த இன்னொருவனை போலிஸ் வளைத்திருந்தது.

 

ஓடி வந்த தீரன், மற்றவர்களின் உதவியோடு இருவரையும் காரில் ஏற்றி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றான். முதலில் எமெர்ஜென்சி அறையில் இருவரையும் அருகருகே படுக்க வைத்து பரிசோதித்தார்கள் டாக்டர்கள். இவள் அவன் எப்படி இருக்கிறான் என பார்க்க, அவனின் பார்வையோ இவள் மேலேயேத்தான் இருந்தது.

  

இருவர் காயங்களையும் ஆராய்ந்த டாக்டர், உடனடி அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அதற்கு முன் ஜீவாவுக்கு அனேஸ்டேசியா போட முயல, இல்லை வேண்டாம் என மறுத்தாள் அவள்.

 

“ஜீவா டோண்ட் பீ சில்லி! ப்ளிஸ் கோ ஆபரேட் வித் தெம்!” என ஆத்திரத்தில் கத்தினான் ஜோனா.

 

“நோ ஜோனா!”

 

“ஏய், என்னடி! எதுக்கு ட்ரீட்மேண்ட் செய்ய விடாம பிடிவாதம் பிடிக்கற!” என்றவன் தனது கட்டிலில் இருந்து இறங்க முற்பட,

 

“இரு இரு! இறங்காதே” என்றவள் கண்களில் கண்ணீர் வழிய வயிற்றில் கை வைத்து,

 

“ஐம் ப்ரேக்னேன்ட் ஜோனா” என்றாள்.

 

 

(மயங்குவாள்…)

 

(வணக்கம் டியர்ஸ்! போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. சைலண்ட் ரீடர்ஸ்க்கும் நன்றி! இந்த ப்ரேக்னேண்ட் விஷயத்த ஏற்கனவே ஒரு ரீடர் கெஸ் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு வாழ்த்துக்கள். சண்டே எபி போட்டா லைக் அண்ட் கமேண்ட் வரது ரொம்பவே குறைவுதான். இருந்தாலும் நாளைக்கு போடலாம்னு நினைக்க முடியல. சோ போட்டுட்டேன். அடுத்த அப்டேட்டில் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்!  லவ் யூ ஆல்!)