MMM–EPI 18

122620776_740997409820929_9109553537495410146_n-ff6ab6ff

 

அத்தியாயம் 18

 

2004, உதகமண்டலம்

 

கட்டிலில் தலையணைக் கொண்டு தலையை மறைத்துக் கொண்டு குப்புறப் படுத்திருக்கும் ஒன்பது வயது ஜீவாவைப் பாவமாகப் பார்த்தப்படி நின்றிருந்தார் மீனம்மா.

 

“ராசா! சாப்பிட வாங்க”

 

“எனக்கு ஒன்னும் வேணா! நீங்க உங்க வேலையப் பார்த்துட்டுப் போங்க!” என பெருங்குரலெடுத்து கத்தினாள் குட்டி ஜீவா.

 

“என்ன சத்தம் இங்க?” என ரூமின் கதவருகே வந்து நின்றார் அவள் அப்பா ஜீவானந்தம்.

 

அவர் குரலில் படக்கென கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டாலும், கையைக் நெஞ்சின் முன் கட்டிக் கொண்டு அவரை நேராய் முறைக்காமல், ஓரக்கண்ணால் முறைத்தாள் சின்னவள். அவள் செயலில் பூக்கப் பார்த்த புன்னகையை அடக்கியவர்,

 

“எழுந்துப் போய் சாப்பிடு ஜீவா! சாப்பிட்டதும் நான் வாங்கிக் கொடுத்த 500 பீசஸ் ஜிக்சாவ் பஸில உட்கார்ந்து செய்” என கட்டளையிட்டார்.

 

கட்டளையிடாமல் சாந்தமாக சொல்லி இருந்தால், வயதின் துருதுருப்பில் அவளே ஒடிப் போய் செய்திருப்பாள். ஆனால் அவருக்கு எல்லாமே கட்டளையாகத்தான் வரும். அவர் சொன்னதைக் கேட்கா விட்டால் வாய் பேசும் முன் கைப் பேசிவிடும். அப்படித்தான் காலையில் எக்ஸர்சைஸ் செய்ய வரமாட்டேன் என கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்தவளுக்கு கையில் சுளீரென ஒன்று வைத்திருந்தார் ஜீவானந்தம். அடியை வாங்கிக் கொண்டு பிடிவாதமாய் நின்றவளின் செய்கையில் அவர் தன்னையேப் பார்த்தார்.

 

‘அவ அம்மா மாதிரி உருவத்துல குட்டியா இருந்தாலும், அடம், பிடிவாதமெல்லாம் அப்படியே என்னை மாதிரியே இருக்கு’ என மகளை மனதில் மெச்சிக் கொண்டார் அவர்.

 

ஆனாலும் அவளுக்கு விட்டுக் கொடுத்தால் இத்தனை நாள் போட்ட உழைப்புக்கு பலன் இல்லாமல் போய்விடுமே! மகளை அப்படியே கையில் அள்ளிக் கொண்டவர், வற்புறுத்தி உடற்பயிற்சி செய்ய வைத்தே விட்டார். அந்தக் கோபம் தான் உணவு வேண்டாம் என சொல்ல வைத்திருந்தது அவளை. இப்பொழுதெல்லாம் அட்டேன்ஷன் கிரேபிங் மோட்டில் இருந்தாள் சின்னவள்.

மற்ற தந்தைகள் போல தனது தந்தை இல்லை என்பதை உணர ஆரம்பித்திருந்த வயது அது. தன் அப்பாவும் தன்னோடு சேர்ந்து சிரித்து சாப்பிட வேண்டும், எக்சர்சைஸ் சொல்லிக் கொடுக்கும் போது கடுமையாக இல்லாமல் கனிவாக இருக்க வேண்டும், ஜீன்ஸ் டீசர்ட் தவிர்த்து மற்ற பெண் குழந்தைகள் அணிவது போல பிரின்சஸ் ட்ரேஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும், தன் வகுப்பு மாணவிகளை அழைத்துச் செல்ல வரும் அவர்கள் தந்தைமாரைப் போல அணைத்துத் தூக்கிக் கொள்ள வேண்டும், முடியை குட்டையாக வெட்டாமல் ரபுன்ஷேல் போல வளர்க்க விட வேண்டும் என அந்த சின்ன இதயத்துக்குள் குட்டி குட்டி ஆசைகள் ஏராளமாய் முளைத்து நின்றன. அதெல்லாம் நடக்காதப் போது, கோபம் வந்தது குட்டி ஜீவாவுக்கு. தகப்பன் சொன்னதை எல்லாம் எதிர்க்க வேண்டும் எனும் மனோபாவமும் வந்தது.

 

“வர வர ரொம்ப பிடிவாதம் பிடிக்கற ஜீவா நீ! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! பிரம்ப எடுக்க வச்சிடாதே!” என்றவரின் பார்வை அவள் ரூமில் தொங்கிக் கொண்டிருக்கும் பிரம்பில் பதிந்து மீண்டது.

 

அதை அவர் பயன்படுத்தியதே இல்லை. பிரம்பைக் காட்டி மிரட்டும் போதே அவர் பேச்சுக்கு அடி பணிந்து விடுவாள் மகள். அவளுக்கு அதைப் பார்த்தால் அவ்வளவு பயம். அன்று அந்த பயத்தையும் மீறி கண்களில் எதிர்ப்பு தெரிய, கோபம் வந்து விட்டது ஜீவானந்தத்திற்கு. பிரம்பை கையில் எடுத்தவர், அவள் காலில் இரண்டு அடி வைத்தார். வலியில் அழ ஆரம்பித்தவள், அவர் முறைப்பில் வாயைப் பொத்திக் கொண்டாள்.

 

பெரிய கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க, தேம்பலை அடக்கியவளைப் பார்த்தவர் பிரம்பை ஒரு மூலையில் விட்டெறிந்தார். அப்பாவையும் மகளையும் கண் கலங்க பார்த்திருந்தார் மீனம்மா. அவரால் முதலாளியை எதிர்த்து நடுவே வர முடியாதே!

 

“போ, போய் சாப்பிடு” மீண்டும் கட்டளையாக சொன்னார் ஜீவானந்தம்.

 

காலை பொத் பொத்தென வைத்து நடந்துப் போனாள் சின்னவள்.

 

“அடங்குதா பாரேன்!” என முணுமுணுத்தப்படியே தனது ஸ்டடி ரூமுக்குப் போனார் அவர்.

 

கதவைப் பூட்டிக் கொண்டவர்,

 

“அடிச்சிட்டேன் நம்ம மகள! வேற என்ன செய்ய நான்? ஹார்ட்ல பிரச்சனைன்னு என் தாய் மாமனும் அத்தையும் உன்னைப் பொத்தி பொத்தி வளத்து என் கையில குடுத்தாங்க! நானும் உன்னை பூ மாதிரிதான் பார்த்துக்கிட்டேன். நான் தொட்டா கூட துவண்டு போயிடறியேன்னு என் ஆசையெல்லாம் அடக்கி வச்சு, பொன்னாட்டம் பார்த்துக்கிட்டேன் உன்னை. டாக்டர், புள்ள பெக்கறதுக்கு உன் உடம்புல சக்தி இல்லைன்னு சொல்லவும், எவ்ளோ கவனமா இருந்தேன் நம்ம உறவுல. ஆனாலும் என்னை ஏய்ச்சிட்டியேடி! ஊரைக் காக்க பார்டர்ல பாடுபட்டுட்டு இருந்தவன் கிட்ட கர்ப்பத்தை மறைச்சு, எனக்கு வாரிசா ஒரு உசுர குடுக்கனும்னு உன் உசுர பணயம் வச்சிட்டியேம்மா! போனதுதான் போன, உன்னை மாதிரியே ஹார்ட்ல பிரச்சனை உள்ள புள்ளய என் கையில குடுத்துட்டுப் போயிட்டியே! சின்னதுலயே அவளுக்கு ஆபரேஷன் செஞ்சு ஹார்ட்ட சரியாக்கி, உன்னை வளத்த மாதிரி பொத்தி பொத்தி வளக்காம, என் மனச கல்லாக்கிட்டு நம்ம மகள ஆம்பளப் பையன் மாதிரி வளக்கறேன்டி. நீ இல்லாத இந்த உலகத்துல எனக்கு அவதான்டி எல்லாம். நம்ம ஜீவாவ வளக்கனும்னு நான் உசுரா நேசிச்ச பட்டாளத்து வேலையை விட்டுட்டேன். என் புள்ள வளர்ப்புல தலையிட்ட எல்லோரையும் ஒதுக்கிட்டு இவள இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டேன்! நம்ம ஜீவாவுக்காகத்தான் உன் கிட்ட வரத் துடிக்கிற இந்த ஜீவன இன்னும் புடிச்சு வச்சிருக்கேன்டி.” என மனைவியின் படத்தின் முன்னே கண்ணீர் உகுத்தார் ஜீவானந்தம்.

 

“என்னால முடியலடி! உன்னை மாதிரியே அந்த பெரிய கண்ண வச்சுப் பாவமா பார்க்கிறப்போ அள்ளி அணைச்சுப் பக்கத்துல வச்சிக்கனும்னு தோணுது! பாசத்தக் காட்டி அவள வீக்கா ஆக்கிடக் கூடாதுடி! தைரியமா வளரனும் என் மக! வயசுக்கு வராத பச்சைக் குருத்துங்கள கூட ஆபாசமா பார்க்கற ஆம்பளைங்க இருக்கற உலகம்டி இது! என் பொண்ணு இவனுங்கள எல்லாம் எதிர்த்து நின்னு வாழ பழகனும். நான் எவ்ளோ நாள் அவளுக்கு துணை வருவேன் சொல்லு! அவள அவளே பார்த்துக்கற மாதிரி வளக்கறேன்டி. என் பாசம் அவள பலவீனப்படுத்தக் கூடாது! என் கண்டிப்பு அவள பலமாக்கட்டும்!” என புலம்பியவர், அலமாரியின் கீழ் ஒளித்து வைத்திருக்கும் ஸ்காட்ச் பாட்டிலை  எடுத்துத் திறந்து கிளாசில் ஊற்றி அப்படியே ராவாக குடித்தார்.

 

தன் மனைவியின் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அப்படியே அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டார் ஜீவானந்தம். கண்களில் கண்ணீர் பாட்டுக்கு வழிந்தபடி இருந்தது.

 

குழந்தை வளர்ப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்த வரைமுறையோ ரூல்ஸ் புத்தகமோ இல்லாத ஒரு கலை. பிள்ளையை பாசமாக வளர்ப்பது, கண்டிப்பாக வளர்ப்பது, அடித்து வளர்ப்பது, கேட்டதெல்லாம் கொடுத்து வளர்ப்பது, படி படியென வளர்ப்பது, பிள்ளைக்கு அடிமையாய் இருப்பது, பிள்ளையை அடிமையாய் வளர்ப்பது என அவரவர் வளர்ந்த சூழ்நிலைக்கேற்ப தங்கள் வாரிசையும் வளர்க்கிறார்கள். அவர்கள் குடும்ப சூழலுக்கு சில முறைகள் பொருந்தி வரும். நம் குடும்ப சூழலுக்கு சிலது பொருந்தி வராது. இதில் நான் தான் சரி, நீ பிழை எனும் வாதம் எங்கிருந்து வருகிறது? தன் பிள்ளையைத் தன் வழியில் நன்றாகத்தான் வளர்ப்பதாய் நினைக்கும் ஜீவானந்தத்தை கேள்வி கேட்க நான் யார்? (எப்பொழுதும் போல நடுநிலையாய் இருந்து அவர் பக்க வாதத்தை எடுத்து சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான் ? அதற்காக அவரை சப்போர்ட் செய்கிறேன் என தப்பாக நினைக்க வேண்டாம் டியர்ஸ்) 

 

சாப்பாட்டு மேசைக்கு வந்த ஜீவா, மீனம்மா பரிமாறிய உணவை கஸ்டப்பட்டு முழுங்கினாள். சிவந்திருந்த அவள் முகத்தையும், கண்களையும் பார்த்த மீனம்மாவுக்கு மனதே கேட்கவில்லை.

 

“போன மகராசி நிம்மதியா பெத்துப் போட்டுட்டு போயிட்டா! இந்தப் புள்ளப் படற பாட்ட பார்க்க முடியலையே” என புலம்பினார்.

 

“மீனம்மா!”

 

“என்னடா ராசா?”

 

“அம்மா மேலோகத்துல நிம்மதியா இருப்பாங்களா?”

 

“கண்டிப்பாடா குட்டி! செத்துப் போயிட்டா கஸ்டம், வலி, சோகம் எதுவும் தெரியாதும்மா! சாமி பக்கத்துல நிம்மதியா இருப்பாங்க”

 

“செத்துப் போயிட்டா நெஜமா ஒரு வலியும் தெரியாதா?” என தந்தை அடித்த இடத்தை நீவி விட்டப்படியே கேட்டாள் சின்னவள்.

 

“சத்தியமா வலிக்காது! அதான் உசுரு போயிடுமே அப்புறம் எங்கிருந்து வலிக்கும்?” என அவள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார் அவர்.

 

“ஓஹோ!” என சற்று நேரம் சிந்தித்தவள்,

 

“மனுஷங்க எப்படி செத்துப் போவாங்க?” எனும் கேள்வியைக் கேட்டாள்.

 

“எமன் வந்து கூப்பிட்டா, செத்துப் போயிடுவாங்க ராசா” என தனக்குத் தெரிந்த விதத்தில் பதில் அளித்தார் மீனம்மா.

 

“எமன் எப்ப கூப்பிடுவாரு?”

 

“அது… உங்க அம்மா மாதிரி, அவங்க காலம் முடிஞ்சா வந்து கூட்டிட்டுப் போயிடுவாரு.”

 

“காலம் எப்போ முடியும்?”

 

“அது யாருக்குத் தெரியும்! அந்த எமன் ஒருத்தனுக்கு மட்டும்தான் தெரியும்” என சொல்லிக் கொண்டிருக்க, ரேடியோவில் உள்ளூர் சேதியாக தொட்டபெட்டா மலையில் காதலர்கள் குதித்துத் தற்கொலை என செய்தி வாசித்தார்கள்.

 

அதை கேட்ட சின்னவள்,

 

“தற்கொலைன்னா என்ன மீனம்மா?” என கேட்டாள்.

 

“அது எமன் தானா வரதுக்கு முன்ன, இவங்களே எமன பார்க்க டிக்கட் வாங்கறது! அந்தப் பேச்சு எதுக்கு நமக்கு! நீங்க சாப்பிடுங்க”

 

மெல்ல உணவை மென்றவள்,

 

“அந்த நீயூஸ்ல சொன்ன மாதிரி, தற்கொலை பண்ணாலும் செத்துப் போயிடுவாங்களா?” என இன்னும் நோண்டிக் கேட்டாள் இவள்.

 

கடுப்பாகிப் போனார் மீனம்மா!

 

“ராசா, தற்கொலைப் பண்ணாலும் சாவுதான், தானா செத்தாலும் சாவுதான். இதுக்கு மேல இதப்பத்தி பேச வேணாம். போங்க போய் அப்பா சொன்ன வேலையை பாருங்க” என சொல்லி விட்டு பாத்திரம் தேய்க்க சென்று விட்டார்.

 

“மலையில இருந்து குதிக்கறது இஸ் ஈக்குவல் டூ தற்கொலை. தற்கொலை இஸ் ஈக்குவல் டூ செத்துப் போறது! செத்துப் போறது இஸ் ஈக்குவல் டூ நோ பேய்ன்! சோ நான் மலையில இருந்து குதிச்சு தற்கொலை செஞ்சிக்கப் போறேன். இனிமே டாடி அடிச்சா வலிக்காது! ஜாலி, ஜாலி” என சொல்லிக் கொண்டவள், உடனே தனது ஜீன்சையும், ஸ்வெட்டரையும், தொப்பியையும் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

 

“தொட்டபெட்டா மலை, தோ ஜீவா உன்னைத் தேடி வரேன்”

 

இந்திய மண்ணில் முதன் முதலாய் கால் தடம் பதித்திருந்தான் பதினாறு வயது ஜோனா. அவன் அம்மா சூசன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தன் தந்தையை நேரில் பார்த்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடித்து வந்திருந்தான் அவன்.

 

சூசன் இன்னொரு மணம் புரிந்திருக்க, இவனது ஸ்டேப் டாட் தனது குழந்தைகளை அப்படித்தான் பாசமாய் பார்த்துக் கொள்வார். சூசனும் சின்னக் குழந்தைகளான அவர்கள் மேல் அன்பைப் பொழிவார். கண்டும் காணாதது போல பார்த்திருக்கும் இவனுக்கும் இப்படி தந்தையும் தாயுமாய் தன்னை சீராட்ட மாட்டார்களா என ஏக்கமாக இருக்கும். தாயின் கவனம் சின்னவர்கள் மேல் இருக்க, இந்தியாவில் இருக்கும் தந்தையாவது தன்னை ஆசையாக ஏற்றுக் கொள்வாரா எனும் ஏக்கம் அரிக்க ஆரம்பித்திருந்தது குழந்தையில் இருந்து விடலைப் பையனாக மாறி இருக்கும் அவன் நெஞ்சில். ஸ்டேப் டாட் இவன் வீட்டில் இருக்க அனுமதித்திருந்தாலும், ஒரு வகை ஒதுக்கம் எப்பொழுதுமே வெளிப்படும் அவரிடம்.

 

ஜெய்க்குமாரைப் இவன் நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகி இருந்தன. சூசனை படுத்தி எடுத்து அவரது நம்பரை வாங்கி வைத்திருந்தான் ஜோனா. வாரம் ஒரு முறை இவன் அழைத்தாலும் மாதம் ஒரு முறைதான் அவன் காலை அட்டேண்ட் செய்து பேசுவார். ஹாய், பாய் என தான் இருக்கும் அவரின் பேச்சுக்கள். அதுவே பேரானந்தமாக இருக்கும் ஜோனாவுக்கு. அவர் தன்னிடம் இம்ப்ரேஸ் ஆக வேண்டும் என தமிழ் மொழியை ஆசையாக கற்றுக் கொண்டான். மழலை போல அவரிடம் பேசிக் காட்ட, அதை கேட்க கூட பொறுமை இருந்தது இல்லை அவரிடம்.

 

என்னவோ மனது வெறுமையாய் இருந்தது அவனுக்கு. தாய்க்கு அவரின் குழந்தைகள் போதும், தான் வேண்டாமென இவனே முடிவு எடுத்துக் கொண்டான். தந்தையாவது தன்னை ஏற்றுக் கொள்வாரா என அறிந்துக் கொள்ள வேண்டும் என மனம் கூக்குரலிட, சூசனிடம் பிடிவாதமாய் இந்தியா போவது என ஒற்றைக் காலில் நின்றான்.

 

“லிசன் அலேக்ஸ்! அங்க போனா உனக்கு தேவையில்லாத ஏமாற்றம் தான் கிடைக்கும். நீ எதிர்ப்பார்க்கற மாதிரி அவர் ஃபாதர் மெட்டீரியல் இல்ல அலேக்ஸ்! யூ ஆர் எ ஜஸ்ட் ஆக்சிடேண்ட் ஃபோர் ஹிம்” என வயது வந்த மகனிடம் மென்று விழுங்கினார்.

 

“நானே பார்த்துப் பேசி அவர் என்னைப் பத்தி என்ன நினைக்கறார்னு தெரிஞ்சுக்கறேன் மாம்! ப்ளிஸ்” என கெஞ்சியவனுக்கு நோ சொல்ல முடியவில்லை அவரால்.

 

ஜெய்க்குமாருக்கு போன் செய்ய அவர் அட்டேண்ட் செய்யவேயில்லை. ஒரு பெருமூச்சுடன் எமெர்ஜென்சி என்றால் மட்டும் பயன்படுத்த சொல்லி இருந்த நம்பருக்கு போன் போட்டார் சூசன். எடுத்தது ஜெயின் எல்லா அந்தரங்கமும் தெரிந்த அவர் அசிஸ்டேண்ட். அவரிடம் ஜெய் ஷூட்டிங்கிற்காக ஊட்டி போயிருப்பதாக அறிந்துக் கொண்டு, மகன் அங்கே செல்ல ஏற்பாடுகள் செய்துக் கொடுத்தார் சூசன்.

 

“அலேக்ஸ்! டு ரிமேம்பர், ஐ எம் ஆல்வேய்ஸ் தேர் ஃபோர் யூ” என சொல்லி மகனை அனுப்பி வைத்தார்.

 

ஜெயின் அசிஸ்டெண்டால் ஹோட்டலில் தங்க வைக்கப் பட்டான் ஜோனா. ஜெய் பிறகு வந்துப் பார்ப்பார் என சொன்னவரிடம், தானும் ஷீட்டிங் பார்க்க வருகிறேன் என ஒட்டிக் கொண்டான் இவன். நெடு நெடு வளர்த்தியில், ஒல்லியாய், வெள்ளையாய் இருந்தவனை பார்த்தவருக்கு மனதே கேட்கவில்லை.

 

“இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அந்தக் கடவுள் கேட்காம புள்ள வரம் குடுக்கறான் பாரு!” என முனகிக் கொண்டவர், அவனை தன்னோடு அழைத்துப் போனார்.

 

தற்கொலை காட்சி ஒன்று படமாகிக் கொண்டிருந்தது தொட்டபெட்டாவில். ஷீட்டிங் பார்க்கவென கூட்டம் வேறு கூடி இருந்தது. பட நாயகன் செய்த சொதப்பலில் பல டேக்குகள் போய் கொண்டிருந்தன. கடுப்பில் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தாலும், வெளியே சிரித்த முகமாய் நின்றிருந்தார் ஜெய்க்குமார். அவர் அசிஸ்டேன்ட் அருகே போய், ஜோனாவைக் காட்டி குசுகுசுவென எதுவோ சொல்ல, அவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார். தந்தையின் பார்வையைத் தாங்கி நின்றவன், பளிச்சென புன்னகைத்தான்.

 

“இன்னிக்கு இவன முடிச்சு விட்ரனும்” என முனகியவர், அசிஸ்டெண்டிடம் ப்ரேக் விட சொன்னார்.

 

ஜோனாவை நோக்கிப் போனவர், மேலும் கீழும் அவனைப் பார்த்தார்.

 

“நல்லா அழகாத்தான் இருக்கான். நான் லீகலா பெத்ததுங்க ரெண்டும் இவன் அழகுக்கு கிட்டக் கூட வர முடியாது” என முனகிக் கொண்டே,

 

“வா” என ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு கேரவானை நோக்கிப் போனார்.

 

அந்த வெறும் வாவில் சோர்ந்துப் போனான் ஜோனா. அவ்வளவு தூரம் பயணித்து வந்தது ஜெட்லேக்காக இருந்தும் தந்தையைப் பார்க்க வேண்டுமெனும் ஆவலில் ஓடி வந்திருந்தவனுக்கு ரொம்பவே ஏமாற்றமாக இருந்தது.

 

சூசன் இந்த சந்திப்பை ஏற்படுத்த கிட்டத்தட்ட ஜெயை மிரட்டி இருந்தார். மகன் அவரைப் பார்க்கத் துடிக்கிறான், ஒரு முறையாவது பெற்ற கடனுக்கு அவனிடம் பேசி சூழ்நிலையை விளக்கிட சொல்லி இருந்தார். ஜெய் அதற்கெல்லாம் நேரம் இல்லையென மறுக்க, பிள்ளை விஷயத்தை பகிங்கிரப் படுத்தி விடுவேன் என மிரட்டித்தான் காரியம் சாதித்திருந்தார். இவரும் வரட்டும் அவன், உறவை அறுத்து எறிந்து இந்தத் தொல்லைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம் என முடிவெடுத்திருந்தார்.

 

காரவேனில் அவனை அமர சொன்னவர், கதவை அடைத்து சாற்றினார்.

 

“டாடி!” என ஆசையாய் அழைத்தான் ஜோனா.

 

“உன் பேரு ஜோவா தானே?”

 

“இல்ல, இல்ல ஜோனா”

 

“ஓகே, ஓகே ஜோனா! இங்க பாரு ஜோனா” என ஆரம்பித்தவர், கைக்குட்டையால் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

 

தான் டாடி, டாடி என உருப்போட்டுக் கொண்டிருக்க தனது பெயர் கூட இவருக்கு சரியாக தெரியவில்லையே என வாடிப் போனான் ஜோனா.

 

“எனக்கு சுத்தி வளைச்சுப் பேச நேரமில்ல ஜோனா! இந்த வயசுக்கு உங்க ஊருல ஆண் பெண் உறவு பத்தி எல்லாம் படிச்சுப் குடுத்துருப்பாங்க. அதுல காண்டோம் உபயோகிக்கிற முறை எல்லாம் சொல்லிக் கொடுத்துருப்பாங்கன்னு நம்பறேன். அந்த பாழா போனா காண்டோமை பாவிக்காம விட்ட என் தவறுனால வந்தவன்தான் நீ!”

 

அவரது பேச்சில் கண்கள் கலங்கிப் போனது ஜோனாவுக்கு. இரண்டு உள்ளங்கையையும் இறுக்கமாய் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டான்.

 

“யூ ஆர் எ மிஸ்டேக்! மை இல்லீகல் மிஸ்டேக். இத்தனை வருஷம் இந்த தப்புக்குத் தண்டனையா உன்ன வளர்க்க உங்க அம்மாவுக்கு நான் பணம் கொடுத்துட்டு இருக்கேன். இனி மேலும் குடுப்பேன்! அவ்ளோதான் நம்ம ரிலேஷன்சிப். அதுக்கும் மேல இந்த பாசம், டாடி செண்டிமென்ட்லாம் என் கிட்ட எதிர்ப்பார்க்காதே! டூ யூ அண்டேர்ஸ்டேண்ட்?”

 

பாசத்தை எதிர்ப்பார்த்து வந்தவனுக்கு தன்னை இல்லீகல் மிஸ்டேக் என்றதும், காண்டோம் போடாததால் வந்த பிழை என்றதையும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவமானத்தால் உடல் நடுங்கியது. அதற்கு மேல் அங்கே அமரவே முடியவில்லை அவனால். வேலைப் பளுவால் தன்னை வந்துப் பார்க்காமல் இருக்கும் தந்தை, தானே தேடிப் போனால் கண்டிப்பாக இரு கரம் நீட்டி வரவேற்பார் என கட்டியிருந்த கற்பனைக் கோட்டை சடசடவென சரிந்து விழுந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான் அவன். பட்டென எழுந்துக் கொண்டவன்,

 

“இந்த இல்லீகல் மிஸ்டேக்குக்காக இனி மேலும் நீங்க தெண்டமா பணம் செலுத்தத் தேவையில்ல மிஸ்டர் ஜெய்க்குமார். வாழ்க்கை ஒரு வட்டம். அன்பு வேணும்னு வந்த என்னை அவமானப்படுத்தி தூக்கி எறிஞ்ச நீங்களே ஒரு நாள் என்னைத் தேடி வருவீங்க! அப்போ காட்டறேன் இந்த ஜோனா யாருன்னு. குட் பாய்!” என சொன்னவன், கேரவானில் இருந்து இறங்கி விடுவிடுவென நடந்துப் போனான்.

 

ஓவேன மனம் ஓலமிட்டது. கண்கள் கண்ணீரைத் தாரை தாரையாகப் பொழிந்தது. சற்று தூரமாய் நடந்துப் போய் ஒரு கல்லில் அமர்ந்துக் கொண்டான் ஜோனா. குழந்தைகள், கணவன் என சந்தோஷமாக இருக்கும் தாய், தான் வேண்டாமென சொன்ன தந்தை இருவரையும் எண்ணி மனம் வெறுத்துப் போனது. தோள் குலுங்க, சோகத்தைக் கண்ணீர் விட்டு ஆற்றினான் அவன்.     

 

‘இவங்க ரெண்டு பேரையும் எதுக்கும் எதிர்ப்பார்க்காம நானே முன்னேறிக் காட்டுவேன்! ஊர் என்ன, உலகமே திரும்பிப் பார்க்கற ஒர் இடத்துல என்னை நிறுத்துவேன்! நீங்க யார்டா என்னை குப்பை மாதிரி தூக்கிப் போட! நான் தூக்கிப் போடறேன் உங்கள! எனக்கு அம்மாவும் வேணா அந்த ஸ்பேர்ம் டோனொரும் வேணா! இனி நான் ஒரு தனி மனுஷன்’ என அழுது ஓய்ந்து மனதில் பலவற்றையும் யோசித்துக் கொண்டே தூரத்தில் தெரிந்த வானத்தை வெறித்தப்படி அமர்ந்திருந்தான் ஜோனா.

அவன் கண் பார்வையில் பதுங்கிப் பதுங்கி மலை ஓரத்தில் நடந்துக் கொண்டிருந்த குட்டி உருவம் ஒன்று பட்டது.

 

“யார் இந்த குட்டிப் பையன்? எதுக்கு டேஞ்சரஸான அந்தப் பக்கம் போறான் இவன்!” என எண்ணியவன் எழுந்து அவன் அருகே போனான்.

 

“டேய் பையா!”

 

அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டுப் போனாள் ஜீவா. ஏற்கனவே அந்த மலையில் இருந்து கீழே எட்டிப் பார்த்து பயந்து நடுங்கி அழுதுக் கொண்டிருந்தாள் அவள். அந்த நேரத்தில் அருகில் கேட்ட குரலில் பயந்துப் போய் நெஞ்சில் கை வைத்தவள், திரும்பி நின்று அண்ணாந்துப் பார்த்தாள் அந்தப் புதியவனை.

 

“ஐ வெள்ளைக்காரன்!” என ஆச்சரியமாக அவள் சொல்ல, இவனுக்கு சிரிப்பு வந்தது.

 

அந்தப் பையனின் பெரிய கண்களில் அழுகையின் தடத்தைப் பார்த்த ஜோனாவுக்கு என்னவோ போல இருந்தது. அப்பொழுது தானே அவனும் அழுது தீர்த்திருந்தான். அவனைப் போலவே இன்னொரு அழுமூஞ்சியைப் பார்த்ததும் என்னவோ பரிவு வந்தது இவனுக்கு. குட்டிப் பையனின் தோளில் தன் கையைப் போட்டவன்,

 

“வாடா பையா! அங்க உட்காரலாம்” என அவனை தன்னோடு இழுத்துப் போனான்.

 

ஜீவாவுக்கோ ஒரே சந்தோஷம். பள்ளியில் படிக்கும் சக மாணவர்களே இவளது தோற்றத்தையும், அடாவடித்தனத்தையும் பார்த்து ஒதுக்கி வைத்துப் பேசாமல் இருக்க, இந்த வெள்ளைக்காரன் தன் தோள் மேல் நட்பாய் கைப் போட்டுக் கொண்டானே என மனதுக்குள் குதூகலித்தாள்.

 

எங்கே அவன் நினைத்து போல தான் பையன் இல்லை பெண் என சொன்னால் பேசாமல் போய் விடுவானோ என எண்ணியவள், டேய் பையா எனும் அழைப்பைக் கண்டுக் கொள்ளாமல் விட்டாள்.

 

இருவரும் அருகருகே அமர்ந்துக் கொண்டார்கள். அந்தக் குட்டிப் பையன் தலைக்கு கேப் அணிந்திருக்க, முகத்தை அது பாதி மறைத்துக் கொண்டது. சற்று முன் அவன் நிமிர்ந்துப் பார்த்தப் போது அவனின் கண்களை மட்டும்தான் நன்றாகப் பார்த்திருந்தான் ஜோனா.

 

“உன் பேரு என்னடா பையா?” என கேட்டான் ஜோனா.

 

‘பேரு சொன்னா பையன் இல்லன்னு தெரிஞ்சிடுமோ! வெள்ளைக்காரன் பேசாம போயிடுவானோ!’ என நினைத்தவள், வாயைத் திறக்கவேயில்லை.

 

எட்டி அவன்(ஜோனா குட்டியை ஆண் பையன் என தானே நினைக்கிறான். ஆகையால் அவன்) கையைப் பற்றிக் கொண்ட ஜோனா, அவனைப் பேச வைப்பதற்காக முதலில் தன்னைப் பற்றி பேசினான். அவனுக்கும் மனதைப் போட்டு பிசைந்ததை எல்லாம் தெரியாத யாரிடமாவது இறக்கி வைத்தால் நன்றாக இருக்குமோ என தோன்றியது.

 

“என் பேரு அலெக்‌சாண்டர் ஜோனா! தோ, அங்க தூரமா படம் ஷூட்டிங் செஞ்சிட்டு இருக்காரே அவர் தான் என் டாடி! அவரப் பார்க்கத்தான் ப்ளைட் எடுத்து நான் வந்தேன். ப்ளைட்னா என்னன்னு தெரியுமா உனக்கு?”

 

ஆமாமென தலையாட்டினான் குட்டி.

 

“ஆனா அவருக்கு நான் வேணாமாம்! ஏன்னா அவருக்கு நான் இல்லீகல் சைல்ட்! அப்படினா என்னான்னு புரியுதா உனக்கு?” என கேட்டான்.

 

இல்லையென தலையாட்டினாள் குட்டி ஜீவா!

 

“புரியலைனா பரவாயில்ல விடு! அடுத்த அவைளபில் ப்ளைட் எப்போ கிடைச்சாலும் நான் எங்க ஊர் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போயிடுவேன்! இங்க இருக்கற ஒவ்வொரு நொடியும் எனக்கு மூச்ச அடைக்குது! “ என சொல்லி ஆழ மூச்சேடுத்து விட்ட ஜோனா,

 

“நான் ரொம்ப நல்லா பாடுவேன் பையா. இவங்க காசுல இனி படிக்காம, நான் பாடி சம்பாதிக்கப் போறேன்! நீ வேணா பாரேன், நான் ஒரு பெரிய சிங்கர் ஆகப் போறேன்!” என்றான்.

 

“நல்லா பாடுவியா நீ? எங்க எனக்கு ஒரு பாட்டுப் பாடு” என ஆர்வமாக இவள் கேட்க,

 

“உன் லெவலுக்கு ஒரு பாட்டுப் பாடறேன். கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு” என பதிலளித்தான் ஜோனா.

 

ஒன்பது வயது ஆகியிருந்தாலும் ஜீவா ஆள் பார்க்க ஏழு வயது போல குட்டியாய் தான் இருப்பாள்.

 

“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்

ஜோனா இஸ் எ ஷைனிங் ஸ்டார்

ஆப் அபோவ் தெ வோர்ல்ட் சோ ஹை

பையா இஸ் எ கியூட்டி பை(pie)”

என கேப் அணிந்திருந்த குட்டி ஜோனாவின் தலையைத் தடவிக் கொடுத்தப்படி இவன் படிக்க, அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

 

“பையா சிரிச்சுட்டான்!” என இவனும் புன்னகைத்தான்.

 

“ஜோனாவ எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு” என சொன்னாள் ஜீவா.

 

“எனக்கும் இந்த குட்டிப் பையாவை ரொம்பப் புடிச்சிருக்கு” என்றவன்,

 

“உனக்கு அம்மா அப்பா இருக்காங்களா? இங்க தனியாவா வந்த?” என கேட்டான்.

 

“தனியாத்தான் வந்தேன். எனக்கு அம்மா இல்லை. அப்பா இருக்காரு! எனக்கு அவரப் புடிக்கவே புடிக்கல” என தனது கீச்சுக் குரலில் கோபமாய் சொன்னாள் ஜீவா.

 

“ஏன் பிடிக்கல?”

 

“படி படின்னு சொல்றாரு! படிக்கலைனா மெரட்டுவாரு! தெனம் எக்ஸர்சைஸ் செய்யனும்! செய்யலைனா அடி விழும்! அப்புறம் கரேக்டா சாப்பிடனும், கரேக்டான டைமுல தூங்கனும், அழக்கூடாது, நல்ல மார்க் வாங்கனும்! இதை செய் அதை செய்ன்னு எப்ப பாரு ஏசிட்டே இருக்காரு” என குரல் அடைக்க சொன்னாள் குட்டி.

 

“எதெல்லாம் உனக்குப் புடிக்கலன்னு சொல்லறியோ அதெல்லாம் எனக்கு என் அப்பா செய்யமாட்டாரான்னு ஏக்கமா இருக்குடா பையா” என அழுகை வரப் பார்த்த குரலில் சொன்னான் ஜோனா.

 

இவ்வளவு நேரம் சிரித்துப் பேசிய தனது வெள்ளைக்கார ப்ரண்டின் குரல் மாற்றம் அவளையும் பாதித்தது. தனது புது நண்பனை சிரிக்க வைக்க அவளுக்குத் தெரிந்த முறையில் முயன்றாள் ஜீவா.

 

“ஜோனா!”

 

“ஹ்ம்ம்”

 

“கோழிக்கு ரெக்கை இருந்தாலும், அதால ஏன் பறக்க முடியல?”

 

சோகத்தில் மூழ்கி இருந்தவன்,

 

“என்ன பையா?” என மீண்டும் சொல்ல சொல்லிக் கேட்டான்.

 

“கோழிக்கு விங்ஸ் இருந்தாலும் ஏன் பறக்க முடியல அதால?”

 

“ஹ்ம்ம்.. அது உடம்பு பாரமா இருக்கறதுனால இருக்குமோ?”

 

“இல்லல்ல! அது பறந்தா நாம எப்படிப் புடிச்சு கோழி குழம்பு வைக்கறது? அதனாலத்தான் கடவுள் அத பறக்க வைக்கல” என சொல்லி கெக்கேபெக்கேவென சிரித்தாள் சின்னவள்.(இது என் சொந்த ஜோக். காபிரைட் வச்சிருக்கேன் ?)

 

இவனுக்கு ஜோக்கைக் கேட்டு சிரிப்பு வராவிட்டாலும் அவள் சிரிப்பதைக் கேட்டு சிரிப்பு வந்தது. அந்தக் குட்டித் தலையில் வலிக்காமல் கொட்டியவன்,

 

“சேட்டைப் பையன் நீ” என்றான்.

 

தூரத்தில் இருந்து ஜெய்யின் அசிஸ்டெண்ட் இவனை வாவென கைக்காட்டி அழைக்க, கிளம்பும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தான் ஜோனா.

 

“பையா! நான் ஹோட்டேலுக்குக் கிளம்பனும் இப்போ! உன் கூட பேசனதுல எனக்கு ரொம்ப ஹேப்பி. உனக்குக் கிடைச்ச மாதிரி எனக்கு ஒரு அப்பா கிடைக்கலையேன்னு ரொம்ப பொறாமையா இருக்கு. அப்பா எது சொன்னாலும் அது நம்ம நல்லதுக்குத்தான் சொல்வாங்க! நம்மள ரொம்ப லவ் பண்ணறதுனாலத்தான் நாம எல்லாத்துலயும் பெஸ்டா இருக்கனும்னு கண்டிப்பா இருக்காங்க! தட் டஷண்ட் மீன் ஹீ ஹேட்ஸ் யூ! அவங்க சொல்லறபடி நடந்தீனா இன்னும் இன்னும் உன்னை லவ் பண்ணுவாங்க. புரியுதா பையா?”

 

ஆமென தலையாட்டினாள் குட்டி ஜீவா. எழுந்து இவன் நிற்க ஜீவாவும் எழுந்து நின்றாள். தன் இடுப்பளவு இருந்த சின்னவனை அணைத்துக் கொண்ட ஜோனா,

 

“இங்க நடந்த எல்லாத்தையும் நான் மறக்க நினைக்கறேன் பையா! ஐ வாண்ட் டூ ஸ்டார்ட் எ நியூ லைப்! நீயும் எப்போதும் சந்தோஷமா இருக்கனும் சரியா! பைடா! பத்திரமா வீட்டுக்குப் போ! இங்கலாம் தனியா சுத்தக் கூடாது.” என்றவன் தன்னையேப் பார்த்தப்படி நின்றிருக்கும் ஜீவாவை விட்டு விலகிப் போனான்.

 

“ஜோனா சொல்றான் என் அப்பா நல்ல அப்பாவாம்! என் மேல லவ் இருக்கவும்தான் அத செய் இத செய்ன்னு சொல்றாங்களாம். நான் அவர் சொல்லறத எல்லாம் செஞ்சா என்னை இன்னும் இன்னும் லவ் பண்ணுவாங்களாம். இப்போ செத்துப் போகலாமா வீட்டுக்குப் போகலாமா?” என முணுமுணுத்தப்படி நின்றிருந்தவளை, திரும்பிப் பார்த்த ஜோனா போ என்பது போல கையை ஆட்டிக் காட்டினான்.

 

“ஜோனா வீட்டுக்குப் போக சொல்றான்! நான் போறேன். அப்பா கிட்டயே போறேன். சொன்ன பேச்சு கேக்கலனாத்தானே அடிப்பாரு! இனிமே அவர் சொன்னது எல்லாத்தையும் கேப்பேன். மை ஓன் அண்ட் ஓன்லி ப்ரேண்ட் ஜோனா மேல சத்தியமா கேப்பேன்”

 

(மயங்குவாள்….)

 

(வணக்கம் டியர்ஸ். இந்தக் கதைக்கு ப்ளேஸ்பேக் வராதுன்னு சொன்னேன். ஆனா ஆரம்பிக்கறது தான் என் கையில இருக்கு. கதை போற விதம் கடவுள் கையிலத்தான் இருக்கு. இவங்க ரெண்டு பேர் ஏற்கனவே சந்திச்ச மாதிரி நீங்க சொல்லவே இல்லையேன்னு நெனைப்பீங்க. கதைய இன்னொரு தடவை வாசிச்சீங்கனா, அவனோட பதினாறு வயசுல நடந்த அவமானத்தையும், அவளோட கண்களப் பார்த்து அவன் தடுமாறரதையும், தொட்டபெட்டா மலையில கிடைச்ச ஞானத்தையும், ஏன் எனக்கு அன்பா தலையை தடவனன்னு அவ கேக்கறதையும், அவனோட அப்பா பத்தி தெரியுமான்னு கேட்டப்போ அவ உதட்ட கடிச்சு சமாளிச்சதையும் அங்கங்கே போகிற போக்குல தூவி விட்டிருப்பேன். ஜீவா, ஜோனா காதலால அவள மூழ்கடிக்கற வரைக்கும் அவன தன் வெள்ளைக்கார நண்பனாத்தான் பார்த்தா! இவ ஏன் ஜோனாக்கிட்டா தான் தான் அந்த டேய் பையான்னு சொல்லலைங்கறது அடுத்த எபில வரும்..

 

மூனு நாளா இந்த எபிய டைப் பண்ணறேன். இழுத்துட்டே போயிருச்சு! ரொம்ப பெருசா இருந்தா மன்னிக்கனும். கதை முடிவை நோக்கிப் பயணிக்குது..இனி அடுத்த எபில சந்திக்கலாம். லவ் யூ ஆல் டியர்ஸ். போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி)