MMM–EPI 19

122620776_740997409820929_9109553537495410146_n-dd703bdf

அத்தியாயம் 19

 

தன் கண் முன்னாலேயே ஜீவாவை அடிக்கப் பாய்ந்ததில் ஜீவானந்தம் மேல் கடும் கோபமாக இருந்தான் ஜோனா. கை கால் ஒத்துழைத்திருந்தால், அவரை அப்படியே கொண்டு போய் வெளியே தள்ளியிருப்பான் அவன்.

 

இவனால் ஜீவானந்தம் கீழே விழுந்ததில் ஜீவாவுக்கு அதிர்ச்சியோடு கோபமும் வந்திருந்தது. அப்பாத்தான் எல்லாம் என சொல்லித் தந்தவன், அந்த அப்பாவையே கீழே சாய்த்திருந்ததை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனை பார்த்து,

 

“விடு, விடு என்னை! இது எல்லாத்துக்குமே நீ தான் காரணம் ஜோனா! சாகப் போனவள அப்படியே விட்டிருந்தனா, இந்நேரம் நான் செத்த இடத்துல பெரிய மரமே முளைச்சிருக்கும். ஏன் என்னைக் காப்பாத்துன? ஏன், ஏன்? ஐ ஹேட் யூ ஜோனா! ஹேட் யூ சோ மச்” என கத்தியவள், தனது தகப்பனைத் தூக்கி விட அவசரமாகக் கட்டிலில் இருந்து இறங்க முற்பட்டாள்.

 

“நான் காப்பாத்துனனா? எங்கே, எப்போ?”

 

என அதிர்ச்சியாக கேட்டப்படியே அவளைக் கட்டிலில் இருந்து இறங்க முடியாதபடி தடுத்தவன், ஜீவானந்தம் மேல் கொலை காண்டிருந்தாலும் அவளுக்காக அவரைத் தூக்கி விட நெருங்கினான். அவனைப் பார்த்து முறைத்தவர், மெல்ல தானாகவே எழுந்துக் கொண்டார். உள்ளுக்குள்ளேயே அவரை அரித்தெடுக்கும் மனைவி மேல் கொண்ட நேசம், தாக்கிப் போயிருந்த ஹார்ட் அட்டாக், மகள் கொண்டிருந்த ஜோனா பைத்தியம் எல்லாம் அவர் உடம்பை ரொம்பவே பாதித்திருந்தது. இல்லையென்றால் ஜோனா தள்ளி கீழே விழுவாரா மிலிட்டரி!

 

மகளின் அருகே வந்து நின்றவர் அவள் முகம் தாங்கி,

 

“சாகப் போனியா?” என உயிர் உருக்கும் குரலில் கேட்டார்.

 

அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் கண்களை இருக மூடிக் கொண்டாள் அவள். அவளையும் மீறி கன்னத்தில் கண்ணீர் உருண்டு ஓடியது.

 

“ஜீவா!” எனும் ஜோனாவின் அழைப்பில் கண்ணைத் திறந்தவளை, எதிர் நோக்கியது அவனது பச்சை நிறக் கண்கள்.

 

அந்தக் கண்கள் கேட்ட கேள்விக்கு, தானாகவே வந்து விழுந்தன அவள் வாயில் இருந்து வார்த்தைகள். கடகடவென அவள் ஒப்பித்த விஷயங்களை இவன் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள் வாங்க, அவரோ நிலைக்குலைந்து நிம்மதி தொலைத்து நின்றார்.

 

கட்டிலின் நடுவே அமர்ந்திருந்த ஜீவாவின் அந்தப் பக்கக் கையை ஜோனா பிடித்திருக்க, இவர் இந்தப் பக்கக் கையைப் பிடித்திருந்தார். இருவரின் பார்வையும் முகம் சிவந்து, மூக்கு விடைக்க, கண்ணீரை அடக்கப் போராடும் பெண்ணவள் மேல் தான் நிலைக்குத்தி நின்றது.

 

ஜீவாவுக்கு இருவருமே தேவை. இருவர் மீதும் உயிரை வைத்திருந்தாள் அவள். சின்ன வயதில் அப்பாவின் மேல் கொண்டிருந்த கோபத்தை ஜோனாவின் அறிவுரையால் விட்டொழித்து அவர் சொல் பேச்சுக் கேட்டு நடக்க ஆரம்பித்தாள். அதன் பிறகே புரிந்தது பலாப்பழத்தைப் போல வெளியே கரடு முரடாக இருந்தாலும், உள்ளே தனது அப்பாவும் பாசக்காரர்தான் என. அத்திப் பூத்தாற் போல அவர் கொடுக்கும் அணைப்பு, இவள் பார்க்கவில்லை என நினைத்து அவர் பார்க்கும் பாசப் பார்வை, இனிப்பு பிடிக்கும் அவளுக்கு என மாதம் ஒரு முறை சாக்லேட் வாங்கி ப்ரிட்ஜில் வைப்பது, தனிமையே துணையாக இருக்கிறாளே என தோழனாய் இருக்க நாய் வாங்கித் தந்தது என நிறைய செய்தார். ஆனால் என் உயிரான உனக்காகத்தான் செய்கிறேன் என சொல்லாமல் செய்தார்.

 

வயது ஏற ஏற, இது தான் இவர், இந்தக் குணம்தான் அவர் குணம் என புரிந்துக் கொண்டவளுக்கு தந்தையின் மேல் பாசம் சுரக்கத்தான் செய்தது. வயதுக்கு வந்து விட்டாள் மகள் என அறிந்தப் பிறகு அவள் மேல் கை நீட்டுவதை அறவே விட்டிருந்தவர், அவள் முன்னேற்றத்திற்காகத்தான் தொழிலை சென்னைக்கு மாற்றிக் கொண்டு இடம் பெயர்ந்தார். மகளைப் படிக்க வைத்துத் தொழிலில் புகுத்தினார். ஜீவா சொந்தமாய் தன் காலில் நிற்க ஆவன செய்தார். தன் கைப்பிடிக்குள் போட்டு அழுத்தாமல் சுதந்திரமாய் சிந்திக்கவும் பழக்கினார்.

 

தனியாய் இருக்கிறேன் என மகள் கேட்க, மனதிற்குள் ஆயிரம் பயம் இருந்தாலும் அப்படி அவள் தைரியமாய் வளர வேண்டும் என தானே பாடுப்பட்டார், ஆகவே சரியென ஒத்துக் கொண்டார். வருடத்தில் ஒரு மாதம் லீவ் எடுத்துக் கொண்டு பாண்டிக்கோ, ஊட்டிக்கோ, அமெரிக்காவுக்கோ இவள் சென்று வருவதையும் மறுத்ததில்லை அவர். ஒரு மகனாய் இருந்தால் எப்படி நடத்துவாரோ அப்படித்தான் இவளையும் நடத்தினார். மொத்தத்தில் அவர் செய்த ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஜீவாவின் நலனே முதன்மையாக இருந்தது.   

 

“என் மக கிட்ட பேசனும்” என்றார் ஜீவானந்தம் ஜோனாவின் முகம் பார்க்காமல்.

 

“பேசுங்க” என்றான் அவனும் அவர் முகம் பார்க்காமல்.

 

“தனியா”

 

“முடியாது! எதுனாலும் என் முன்னாலயே பேசுங்க” என்றவன் இன்னும் ஜீவாவை நெருங்கி நின்றான்.

 

ப்ளிஸ் ஜோனா என்பது போல அவனைப் பாவமாய் நிமிர்ந்துப் பார்த்தாள் ஜீவா. உறுதியாய் தலையை இடம் வலம் முடியாது என்பது போல ஆட்டினான் அவன்.

 

“ஜீவா என் மக! அவ மேல எனக்குத்தான் எல்லா உரிமையும் இருக்கு! உன் அத்தியாயம் அவ வாழ்க்கையில ஒரு பாசிங் க்ளவுட் மாதிரிதான்! சோ ப்ளிஸ், கெட் அவுட்” என கடுமையாக சொன்னார் ஜீவானந்தம்.

 

“அப்பா!” என மறுப்பாய் என்னவோ சொல்ல வந்தவளை ஒற்றைக் கை நீட்டி நிறுத்து என்பது போல சைகை செய்தவர், ஜோனாவை உறுத்து விழித்தார்.

 

அவர் அப்படி பேசியதில் அவ்வளவு கோபம் வந்தது ஜோனாவுக்கு. தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவன், தனது உரிமையை நிலைநாட்டுவது போல ஜீவாவின் முகத்தைத் தன் ஒற்றைக் கையால் பிடித்து வயிற்றோடு அணைத்துக் கொண்டான்.

 

“என் ஜீவாவோட வாழ்க்கையில நான் பாசிங் க்ளவுட் இல்ல மிஸ்டர் ஜீவானந்தம். அவதான் என் உடம்புல ஓடிட்டு இருக்கற ப்ளட். அவ உடம்பு ரிக்கவர் ஆன அடுத்த நொடி எங்களுக்கு அவ இஸ்டப்பட்ட முறைப்படி வெடிங் நடக்கும். அது சர்ச் வெடிங்கா இருந்தாலும் சரி, டெம்பிள் வெடிங்கா இருந்தாலும் சரி, ஐம் இன். எங்க வெடிங்க லீகலா இங்கயும், எங்க நாட்டுலயும் கண்டிப்பா ரெஜிஸ்டர் செய்வேன். சோ எனக்கு அவ மேல எந்த உரிமையும் இல்லைன்னு இனி சொல்லாதீங்க” என்றவன் உடல் கோபத்தில் நடுங்கியது.

 

இந்த வார்த்தையைத்தானே அவரும் எதிர்ப்பார்த்தார். எந்த தந்தைதான் பெற்ற மகள் திருமண பந்தமில்லாமல் குழந்தை சுமப்பதை விரும்புவார்? உதட்டில் வெற்றிப் புன்னகை நெளியப் பார்க்க, சிரமப்பட்டு அதை அடக்கினார் ஜீவானந்தம்.

 

ஜோனாவின் அணைப்பில் நெளிந்த ஜீவா மெல்லியக் குரலில்,

 

“விடு ஜோனா!” என்றாள்.

 

மெல்லியப் பெருமூச்சுடன் அவளை தன் பிடியில் இருந்து விடுவித்தான் இவன்.

 

“கை வலிக்குதுதானே ஜோனா! போய் படு, ரெஸ்ட் எடு! ரொம்ப நேரமா நிக்கறே!” என அதையும் மெல்லிய குரலில் சொன்னவள் தகப்பனையும் திருப்பி திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

 

“சின்ன வயசுல ஆரம்பிச்ச இவன் கிறுக்கு இன்னும் உன்னை விட்டுப் போகல இல்லை” என தன் மகளைப் பார்த்துக் கேட்டார் ஜீவானந்தம்.

 

அவருக்கு என்னவென பதில் சொல்வாள் அவள்! ஜோனாவின் மேல் கிறுக்கா அவளுக்கு?

 

அவன் மேல் கொண்டதை நட்பென சொல்வாளா? இல்லை பக்தியென சொல்வாளா? தன் மன உணர்வுகளைக் கொட்டும் ரகசியக் கிடங்கென சொல்வாளா? காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தான் செய்யும் ஒவ்வொன்றையும் பகிர்ந்துக் கொள்ளும் தாய் மடி என சொல்வாளா? தன் தனிமையைப் போக்க வந்த வரமென சொல்வாளா? அருகில் இல்லாத போதே இவ்வளவுமாக இருந்தவன், நெருங்கி வந்ததும் தன் உயிரில் கலந்த மூச்சாய் ஆகிப்போனதை சொல்வாளா! என்னவென சொல்வாள் இவள்!

 

அவள் சொன்ன கதையைக் கேட்டதில் இருந்தே ஜோனாவுக்கு மனமெல்லாம் ரணமாய் வலித்தது. ஒன்பது வயதில் இருந்தே ஒருத்தி தன்னை வாழ்க்கையின் ஆதாரமாய் கொண்டு வாழ்ந்திருக்கிறாள் எனும் எண்ணமே மனதை என்னவோ செய்தது. ஏற்கனவே அவள் மேல் பித்தாய் இருந்தவன், இது தெரிந்த நொடி அவளை தன் நெஞ்சுக்குள் புதைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என ஏங்கினான். தான் நினைத்ததை செய்துப் பழக்கப்பட்டிருந்தவன், ஜீவாவின் மனநிலையை கருதியே அமைதியாய் நின்றான். அவளிடம் கேட்க ஆயிரம் விஷயங்கள் இருந்தன அவனுக்கு! தனிமை எப்பொழுது கிடைக்கும் என பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தான் ஜோனா.

 

அமைதியாய் இருவரையும் பார்த்தப்படி நின்றார் ஜீவானந்தம். அவன் அவள் கையைப் பற்றிக் கொள்வதும், இவள் விலக்கி விடுவதும், சற்று நேரம் சென்று மீண்டும் அவன் அவள் கையைப் பிடிப்பதும், இவள் விலக்குவதுமாக ஒரு குட்டிப் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது அவர் முன்னே. அவன் சோர்ந்துப் போவது இவருக்குமே நன்றாக தெரிந்தது. ஆனாலும் ஜீவாவை விட்டு நகர மாட்டேன் என பிடிவாதமாக அவள் அருகே நின்றிருந்தான்.

 

அங்கிருந்த நாற்காலியைக் கொண்டு வந்து அவன் அருகே போட்டவர்,

 

“உட்காரு” என்றார்.

 

வெளிநாட்டவன் என்றாலும் மாப்பிள்ளை முறுக்கு இல்லாமலா போய்விடும்! உட்கார மாட்டேன் என்பது போல நின்றாடியே இருந்தான் அவன். தன் ஜீவாவை சாவின் விளிம்புக்கு அனுப்பிய அவரை மனிதனாகவே மதிக்க விரும்பவில்லை ஜோனா.

 

“ப்ளிஸ் உட்காரு ஜோனா” என்ற ஜீவாவின் கெஞ்சலுக்குத்தான் செவி சாய்த்தான் அவன்.

 

மீண்டும் மகள் அருகே வந்தவர், அவள் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.

 

“நீ பொறந்து உன் முகத்த ஆசையாப் பார்த்துட்டு கண்ண மூடிட்டா உன் அம்மா! நர்ஸ் உன்னைத் தூக்கிட்டு வந்தப்ப, அம்மாவ முழுங்கனவ நீன்னு உன் அம்மாம்மா தூக்கக் கூட மாட்டேன்னு சொல்லிட்டாங்க! பொண்டாட்டி செத்த துக்கம் ஒருப் பக்கம், குட்டியாய் ரோஜாப்பூ மாதிரி இருந்த உன்னைப் பார்த்து இப்படி ஒரு சொல் சொல்லிட்டாங்களேன்னு கோபம் ஒரு பக்கம்னு துடிச்சுப் போயிட்டேன். என் மகளுக்கு இவங்க யாரும் வேணா! நான் மட்டும் போதும்னு உன்னை என் கையில வாங்கனேன்! குழந்தை வளர்ப்பப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது எனக்கு! எல்லாம் கத்துக்கிட்டேன். இம்மாம் பெருசு இருக்கேனே, நான் தூக்குனா புள்ளைக்கு வலிக்குமோ, எலும்பு கிலும்பு உடைஞ்சிடுமோன்னு பயமா இருக்கும். அழுதா எதுக்கு அழுகறன்னு தெரியாது! பசியா, நேப்கினை நனைச்சிட்டியா, கொசு கடிக்குதா, வயித்த வலிக்குதான்னு ஒன்னும் தெரியாது. கைக்குழந்தய ஒரு பொண்ணு நேச்சரலா வளர்த்துடுவா, அதே ஆம்பளைனா ஒன்னு ஒன்னா கத்துக்கனும். எங்களுக்கு மதர் இன்ஸ்டிங்க்ட் இல்லையே, பிள்ளைங்களோட சிணுங்கல வச்சி இது இதுக்குத்தான்னு கெஸ் பண்ண!” என்றவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். அந்த நாட்களை மீண்டும் வாழ்ந்துப் பார்த்தார் போல.

 

“அப்புறம்தான் உனக்கும் உங்கம்மா மாதிரியே ஹேர்ட் ப்ராப்லம் இருக்குன்னு கண்டுப்புடிச்சாங்க. ராத்திரி நீ தூங்கறப்ப அரை மணி நேரத்துக்கு ஒருக்க முழிச்சி, மூச்சு விடறியா இல்லையான்னு உத்து உத்துப் பார்ப்பேன். ராத்திரி தூங்கற என் குட்டிப் பொண்ணு காலையில உயிரோட எழுவாளான்னு பயமா இருக்கும். அந்த நாட்கள் எல்லாம் கொடுமையான நாட்கள் ஜீவா”

 

கேட்டிருந்த ஜீவாவுக்கு கண்ணில் பொல பொலவென கண்ணீர் கொட்டியது. அவர் மேல் வைத்திருந்த கோபம் கொஞ்சமாய் வடிய, ஜீவானந்தத்தை அப்பொழுதுதான் நேராகப் பார்த்தான் ஜோனா.

 

“அப்பா!” என குரல் நடுங்க அழைத்தவளின் கையைப் பற்றித் தட்டிக் கொடுத்தார் அவர். அந்த செய்கை கூட தடுமாற்றமாகத்தான் வந்தது அந்த முரட்டு மனிதருக்கு.

 

“ஆபரேஷன், மருந்து, மாத்திரைன்னு உன்னைத் தேத்தி எடுக்கறதுக்குள்ள படாத பாடுபட்டுட்டேன். நல்லா தேறி வந்தும், நீ எல்லாத்துக்கும் என்னையே எதிர்ப்பார்க்க ஆரம்பிச்ச! உங்க அம்மா மாதிரியே மத்தவங்கள சார்ந்து நிக்கப் பார்த்த!  எனக்குள்ள இருந்த மிலிட்டரி மேன் படக்குன்னு முழிச்சுக்கிட்டான். நான் இல்லைனாலும் என் மக தனிச்சு இந்த பூமியில தைரியமா இருக்கனும்னு முடிவெடுத்தேன். அதுக்காக உன்னை ட்ரைன் பண்ணேன். ஆனா நீ சுணங்கி சுணங்கி நின்ன! பாவமா பார்த்தே காரியம் சாதிக்க நெனைச்ச! அதனாலத்தான் கண்டிப்ப கையில எடுத்தேன். ஆனா அதுவே உன்னை இப்படிலாம் தற்கொலை அளவுக்கு சிந்திக்கத் தூண்டும்னு நான் நெனைச்சிப் பார்க்கல ஜீவா” என தொண்டையை செறுமி சொல்லி முடித்தார்.

 

“நீங்க போராடி ஜீவாவை வளத்தீங்க! யூ ஆர் க்ரேட், ஒத்துக்கறேன். ஆனா அவள அடிச்சு வளக்கற உரிமைய யார் உங்க கையில குடுத்தது? கண்டிப்ப காட்டனா மட்டும்தான் பிள்ளைங்க உருப்படுவாங்கன்னு யார் சொன்னது உங்களுக்கு? உங்கள பத்தி ஒன்னும் தெரியாம அப்பா செய்யறதுலாம் அவுட் ஆப் லவ்லன்னு இவளுக்கு அட்வைஸ் வேற செஞ்சிருக்கேன் நான்!” என காட்டமாக சொன்னான் ஜோனா.

 

“நான் கண்டிப்பக் காட்டி சுயமா சிந்திக்கறவளா வளர்த்தப்பவே நீ அவ மேல அட்வாண்டேஜ் எடுத்து ப்ரேக்னண்டா ஆக்கி வச்சிருக்க. இன்னும் அன்ப காட்டி என் கைக்குள்ள வச்சி வளர்த்திருந்தா உன்னை மாதிரி எத்தனை ஆம்பளைங்க என் பொண்ணு மேல கை வைக்கத் துணிஞ்சிருப்பாங்களோ!” என குறிப்பார்த்து அடித்தார் ஜோனாவை.

 

ஜீவானந்தத்தின் கூற்றில் முகம் கசங்கிப் போனான் ஜோனா. தன்னை நண்பனாய் பார்த்தவளை, தன்னருகில் அவளாகவே இருந்தவளை, தன்னை ஆராதனை செய்தவளை தாம் தான் காதல் எனும் வர்ணம் பூசி இந்த நிலைக்கு மாற்றி வைத்திருக்கிறோமோ எனும் எண்ணம் நெஞ்சைத் தீயாய் சுட்டது. இவ்வளவு நேரம் ஜீவாவின் கைப்பற்றியபடி இருந்தவனின் கை மெல்ல விலகியது. விலகிய அவன் கையை இறுக்கமாகப் பிடித்தாள் ஜீவா.

 

“அப்பா!”

 

என்ன என்பது போல மகளைப் பார்த்தார் ஜீவானந்தம்.

 

“ஐ லவ் ஜோனா!”

 

காதலித்தவனிடம் ஒத்துக் கொள்ளாததை தன் தகப்பனிடம் ஒத்துக் கொண்டாள் ஜோனாவின் ஜீவா.

 

(மயங்குவார்கள்…)

  

(வணக்கம் டியர்ஸ்..போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ்..லவ் யூ ஆல்)