MMM–EPI 20

122620776_740997409820929_9109553537495410146_n-db289b61

அத்தியாயம் 20

 

கதவைத் திறந்து உள்ளே வந்த தீரன் கண்டது முறைத்தப்படி நின்றிருந்த ஜோனாவையும் ஜீவானந்தத்தையும் கவலையாகப் பார்த்தப்படி இருந்த ஜீவாவைதான்.

 

“என்ன அக்கப்போருன்னு தெரியலையே மாமாவுக்கும் மருமகனுக்கும்!” என முணுமுணுத்தப்படியே வந்தான் தீரன்.

 

கையில் காபி ப்ளாஸ்கும் ஜோனாவுக்கான உணவும் இருந்தது. ஜீவானந்தத்தைப் பார்த்து,

 

“வாங்க சார்” என வரவேற்க,

 

அவரோ ஜோனாவை விட்டுவிட்டு இவனை முறைக்க ஆரம்பித்தார்.

 

‘ஓஹோ! அப்பாவும் மகளும் ஒரே டிசைன்ல முறைக்கப் பழகிருக்காங்க! முறைச்சே எதிரிய முக்காடு போட்டு ஓட வச்சிடுவாங்க போல இவங்க செக்குரிட்டி கம்பேனில!’ என மனதில் நினைத்தவன், வெளியே வெள்ளந்தியாக சிரித்து வைத்தான்.

 

தீரனின் பின்னாலேயே டாக்டரும், நர்சும் வந்தார்கள். படுக்காமல் சோர்ந்துப் போய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஜோனாவைப் பார்த்த டாக்டர்,

 

“சார், ரெஸ்ட் எடுக்காம என்ன செய்யறீங்க நீங்க! ரிக்கவர் ஆகனும்னா யூ நீட் ரெஸ்ட்! பேஷண்ட தூங்க விடாம நீங்க எல்லாம் இங்க என்ன செய்யறீங்க? ப்ளீஸ் கோ அவுட்” என மற்றவர்களையும் கடிந்துக் கொண்டார்.

 

“நான் படுக்கறேன்! இவங்க ரெண்டு பேரும் இருக்கட்டும். ஓக சொல்லாதீங்க” என்றவன் மெல்ல தள்ளாடி எழுந்தான்.

 

சட்டென அவனைத் தாங்கிப் பிடிக்க எழ முயன்றாள் ஜீவா. அவளை எழ விடாமல் ஜீவானந்தம் பிடித்துக் கொள்ள, தீரன் வந்து ஜோனாவைப் பிடித்துக் கொண்டான்.

 

என்னவோ, ஜீவா காதலை ஒத்துக் கொண்டது ஜோனாவுக்கு அப்படி ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தது. இவ்வளவு நாள் பிடிக்கிறதோ அவளுக்கு பிடிக்கவில்லையோ, காதலிக்கிறாளா, இல்லை ஆராதிக்க மட்டும் செய்கிறாளா என மண்டையைக் குடைந்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு அவள் வாய் வார்த்தையாய் வந்த பதிலில் உடம்பும் மனமும் பறப்பது போல இருந்தது அவனுக்கு. இது போதும் அவனுக்கு! அவளுடன் தனிமைக் கிடைக்கும் வரை அந்த வார்த்தைகள் போதும் அவனுக்கு.

 

கட்டிலில் அவன் ஜீவாவைப் பார்த்தப்படி படுத்துக் கொள்ள, டாக்டர் தனது பரிசோதனையை ஆரம்பித்தார். ப்ளட் ப்ரெஷர் அதிகரித்திருப்பதாக சொல்லியவர், கண்டிப்பாய் தூங்க வேண்டும் என வலியுறுத்தினார். ட்ரிப்ஸ் வழி அவர் பேய்ன் கில்லரை செலுத்த, தூக்கம் கண்ணை சுழட்டியது இவனுக்கு. ஜீவாவையும் செக் செய்தவர், அவளுக்கும் கொடுக்க வேண்டிய மருந்துகளை கொடுத்து விட்டுக் கிளம்பினார்.    

 

தான் கொண்டு வந்திருந்த உணவை, தீரன் ஜோனாவுக்கு சாப்பிட எடுத்து வைக்க, ஜீவானந்தத்தைக் கைக்காட்டிய அவர் மருமகன், ஜீவாவிடம் லவ் யூ என வாயசைத்தப்படியே கண்களை மூடிக் கொண்டான்.

 

‘பார்டா நம்ம பாஸ! முறைக்கறப்பவே மாமனார சாப்பிட சொல்லி உபசரிப்பு. கொஞ்சம் சிரிச்சுப் பேசிட்டா தலையில தூக்கி வச்சிப்பாரு போல’

 

தீரன் உணவை ஜீவானந்தத்திடம் கொண்டு வந்துக் கொடுக்க, அவர் வேண்டாமென மறுத்தார். ஜீவாவுக்கும் ரொம்பவே களைப்பாய் இருந்தது. ஆனாலும் தன் அப்பா பக்கத்தில் இருப்பதால் விழித்தே அமர்ந்திருந்தாள்.

 

“சாப்பிடுங்க டாடி!”

 

“நீ?”

 

“கொஞ்ச நேரம் முன்னதான் கஞ்சி சாப்பிட்டேன்”

 

ஜோனாவைக் காட்டி,

 

“அவர் எழுந்ததும் குடு! நான் காலையில வந்துப் பார்க்கறேன் உன்னை” என்றபடி எழுந்துக் கொண்டார்.

 

வரேன் என்பது போல தலையசைத்தவரின் கரங்கள் அவள் தலை கோதிக் கொடுக்க உயர்ந்தது. ஆனால் செயலால் பாசத்தைக் காட்டி பழக்கமில்லையே அவருக்கு. மெல்ல கை நடுங்க, அவள் நெற்றியில் கைப் பதித்து காய்ச்சல் இருக்கிறதா என செக் செய்வது போல பாவ்லா காட்டி கையை இழுத்துக் கொண்டார்.

 

“பாய்ப்பா”

 

“பாய்! டேக் ரெஸ்ட் ஜீவா” என்றவர் திரும்பி நடக்க, கால்கள் அவள் வயிற்றின் அருகே ப்ரேக் அடித்து நின்றது.

 

‘என் குழந்தைக்கு ஒரு குழந்தை வரப்போகுதா!’ என நினைத்தவரின் கண்கள் லேசாய் கலங்கியது. அதோடு அங்கே நிற்காமல் விடுவிடுவென வெளியேறி விட்டார் ஜீவானந்தம்.

 

அங்கே நின்றிருந்த தீரனைப் பார்த்து,

 

“எதாச்சும் நியூஸ் கிடைச்சதா ஷூட் அவுட் பத்தி?” என கேட்டாள் ஜீவா.

 

“இன்னும் விசாரிச்சிட்டுத்தான் இருக்காங்க சிஸ்டரு! வாயத் தொறக்க மாட்ரானாம் அந்த அக்கியூஸ்ட்! உங்க டாடி அவரோட இன்ப்ளுவன்ஸ் யூஸ் பண்ணிருக்காரு போல! அவருக்குத்தான் பெரிய இடமெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கே! கண்டிப்பா சீக்கிரம் கண்டுப்புடிச்சிருவாங்க!”

 

“ஹ்ம்ம் சரி”

 

“நீங்க ரெஸ்ட் எடுங்க! உங்கப்பா உங்க ரெண்டு பேர் பாதுகாப்புக்காக வெளிய செக்கியூரிட்டி அரேஞ் பண்ணிருக்காரு. நிம்மதியா ரிக்கவர் ஆகிற வேலைய மட்டும் பாருங்க. நானும் அப்பாவும் மத்தது எல்லாத்தையும் கவனிச்சிப்போம். எதாச்சும் வேணும்னா தீரான்னு சவுண்ட் குடுங்க. நானும் வெளியத்தான் இருப்பேன்” என்றவன் கதவை மூடி விட்டு வெளியேறினான்.

 

அவன் சென்றதும் மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினாள் ஜீவா. அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஜோனாவின் கட்டிலில் ஏறி அவன் அருகே படுக்க முயன்றாள். தூக்க மயக்கத்தில் மெல்ல கண் விழித்தவன், அவளுக்கு இடம் கொடுத்து கொஞ்சம் நகர்ந்துப் படுத்தான். கரகரப்பான குரலில்,

 

“ஸ்லீப் மூலான்!” என்றவன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.

 

அவனது அடிப்படாத கையில் தலையை வைத்து, முகத்தைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டாள் இவள்.

 

 

ஐ லவ் ஜோனா என தன் தகப்பனிடம் ஒத்துக் கொண்ட பின் நடந்த நிகழ்வுகளை அசைப் போட்டப்படியே உறங்க முயன்றாள் ஜீவா.

 

“ஐ லவ் ஜோனா”

 

இன்று நான் சாம்பார் சாதம் சாப்பிட்டேன் என்பது போல குரலில் எந்த வித இமோஷனும் இல்லாமல் முன்னால் தெரிந்த கதவை வெறித்தப்படி சொன்னாள் ஜீவா.

 

ஆனந்த அதிர்ச்சியில் இவன் நிற்க, ஜீவானந்தமோ அமைதியாய் மகளை ஊடுருவிப் பார்த்தார்.

 

“இவனோட போஸ்டர அலமாரி கதவு பின்னால ஒட்டி வச்சிருந்தது, உனக்கு விளையாட வாங்கிக் கொடுத்த நாய்க்கு ஜோனானு பேர் வச்சது, புது பேனா வாங்கக் கூட்டிப் போனா ஜோனானு எழுதி டெஸ்ட் செஞ்சது, இவனப் பத்தி எங்க நியூஸ் வந்தாலும் சேகரிச்சு ஸ்க்ரேப் புக் செஞ்சது, பாக்கேட் மணி குடுத்தா சாப்பிடாம சேர்த்து வச்சி இவன் சீடி வாங்கனதுன்னு இவனை சுத்தியே உன் உலகம் இருந்தது எனக்கும் தெரியும் ஜீவா! ஆனா அதெல்லாம் எல்லாருக்கும் வர க்ரஷ்தான்னு கண்டும் காணாம விட்டுட்டேன்! ஆஸ்திரேலியா போறியா படிக்கன்னு கேட்டப்போ அமெரிக்கா இஸ் பெட்டர் ஃபோர் திஸ் கோர்ஸ்னு அவ்ளோ டிடேயில்ஸ் கலேக்ட் செஞ்சு காட்டுன! சரி போகட்டும், அங்க போய் நேராவே இவன் வாழற லட்சணத்தப் பார்க்கட்டும். இந்த பைத்தியக்கார க்ரஷ் அப்பவாச்சும் உன்னை விட்டுப் போகுதான்னு பார்ப்போம்னு அனுப்பி வச்சேன்! திரும்பி வந்து கம்பெனில வேலைக்கு சேர்ந்ததும் தனியா வீடெடுத்துப் போய்ட்ட!” என்றவர் பெருமூச்சொன்றை இழுத்து விட்டார்.

 

“உனக்காக மாப்பிள்ளைப் பார்த்து வச்சிருந்தேன். அவங்க பேமிலியவே எனக்குத் தெரியும். ரொம்ப நல்ல மாதிரி. மாப்பிள்ளைப் பையனும்தான்”

 

மாப்பிள்ளை எனும் பதத்துக்கு தொண்டையை செருமி முறைப்பு ஒன்றைக் கொடுத்தான் ஜோனா. இவரும் திருப்பி முறைத்தார் அவனை.

 

“மேரேஜ் முடிச்சுட்டு கம்பேனி பொறுப்ப எடுத்துக்கறியா? இல்ல கம்பேனி பொறுப்ப எடுத்துட்டு மேரேஜ் பண்ணிக்கறியான்னு ஆப்ஷன் குடுத்தேன் உனக்கு. நீ யோசிக்கனும் டைம் குடுங்கன்னு லீவ் எடுத்துட்டுப் போன. அதுக்குள்ள எனக்கும் அட்டாக் வேற வந்துடுச்சு. திரும்பி வந்து கம்பேனி பொறுப்பு மட்டும் போதும் மேரேஜ் வேணாம்னு சொன்ன! உன் முகமும் சோகமா எதுவோ சரியில்லாத மாதிரி இருந்துச்சு! சரி, விட்டுப் பிடிப்போம்னு நெனைச்சேன். அப்புறம் பார்த்தா இவன் நம்ம ஊருல இருக்கான்! நீயும் அவனுக்கே பாடிகார்ட்டா வேற போன! என் மனசுக்கு எதுவும் சரியாப் படல. என் பொண்ணு விஷயமாச்சே, வெளி ஆள நம்பாம நானே இறங்கி விசாரிக்க ஆரம்பிச்சேன். ஏர்போர்ட்ல இவன பார்த்திருக்க! இவன் என்ன சொல்லி உன்னை கன்வீன்ஸ் பண்ணி உன் கூடவே பாண்டி வந்தான்னு தெரில. அவன் கூட ஒன்னா தங்கி இருந்தன்றதே எனக்குப் பெரிய அதிர்ச்சி! ஆனா உன்னை நம்பனேன்! என் பொண்ணு எந்தத் தப்பும் செஞ்சிருக்க மாட்டான்னு நம்புனேன்!” என சொல்லி கண்ணை இறுக மூடித் திறந்தவர்,

 

“இந்த ஷூட் அவுட்ல உனக்குக் காயம்னு கேள்விப்பட்டு ஓடி வந்தேன். இங்க வந்தாதான் தெரியுது, ப்ரேக்ணன்டா இருக்கன்னு! எந்த மான ரோஷம் உள்ள அப்பனுக்குத்தான் கோபம் வராது? ஜோனா ஜோனான்னு பைத்தியம் முத்திப் போய் அவன் அட்வாண்டேஜ் எடுத்துக்கற அளவுக்கு விட்டிருக்க நீ!” என ஜோனாவை முறைத்தப்படியே முடித்தார்.

 

“டாடி! எல்லாத்துக்கு ஜோனாவையே குற்றம் சொல்லாதீங்க! அவன நான் தான்..” கடத்தினேன் என சொல்ல வந்தவளின் கையைப் பிடித்து அழுத்தினான் ஜோனா.

 

தன் தகப்பனே ஆனாலும். ஜீவா தன்னைக் கடத்தியதை சொல்லி அவர் பார்வையில் தாழ்ந்துப் போவதை விரும்பவில்லை அவன்.

 

இவள் திரும்பி அவன் முகத்தைப் பார்க்க,

 

“நோ!” என வாயசைத்தான் அவன்.

 

“நான் சொல்வேன் ஜோனா! அவர் உன்னைத் தப்பா நினைக்கறாரு”

 

“பரவாயில்ல மூலான்! ஏற்கனவே அவருக்கு நான் தப்பாத்தான் தெரியறேன்! இதுவும் சேர்ந்துக்கறதுல ஒரு பிரச்சைனையும் இல்ல எனக்கு. உன் அப்பாவேயானாலும் நம்ம பெர்சனல் விஷயம் அவருக்குத் தெரியறதுல எனக்கு இஸ்டமில்ல!” என மெல்லிய குரலில் அவளைத் தடுத்தான் ஜோனா.

 

“ம்ப்ச்” என சலித்துக் கொண்டாள் அவள்.

 

இருவரும் மெல்லிய குரலில் மாற்றி மாற்றிப் பேசிக் கொள்வதை கவனித்தப்படித்தான் இருந்தார் ஜீவானந்தம். மகள் ஏதோ கோக்குமாக்காக செய்திருக்கிறாள், அதை அவள் வெளியே சொல்வதை மிஸ்டர் மருமகர்(மரியாதையாம்!) விரும்பவில்லை என நன்றாகப் புரிந்தது இவருக்கு.

 

தகப்பனை ஏறிட்டு நோக்கியவள்,

 

“எதுவும் என் இஸ்டமில்லாமல் நடக்கலை டாடி!” என்றவள் தனது ஜே பெண்டனைத் தடவியவாறே,

 

“என் மனசாட்சிக்கு சரியாப்படாத எதையும் நான் செய்யல! அதனால எல்லாத்துக்கும் ஜோனாவையே தப்பு சொல்லாதீங்க ப்ளிஸ். என்னால தாங்கிக்க முடியல! நீங்க எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஜோனாவும் எனக்கு முக்கியம் டாடி! தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சுக்கங்க” என்றவளுக்கு கண்ணில் நீர் தளும்பி நின்றது.

 

அவளது கண்ணீருக்கு காரணம் ஜோனாதான் என ஜீவானந்தம் அவனை முறைக்க, இவர்தான் காரணம் என ஜோனா தன் மாமனாரை முறைத்தான். அந்த நேரம் தான் தீரன் ரூமின் உள்ளே நுழைந்தது.

  

தூங்கிக் கொண்டிருந்த இருவரில் முதலில் விழித்தது ஜோனாதான். தன்னை ஒட்டிக் கொண்டு தூங்கும் பெண்ணவளை காதலாய் பார்த்தான் பாடகன். தனக்கே தனக்காய் யாரும் இல்லை இவ்வுலகில் என இத்தனை வருடங்கள் வாடிக் கிடந்தவனுக்கு, தன்னையே நினைத்தப்படி வாழ்ந்திருக்கிறாள் இவள் எனும் எண்ணமே உயிர்ப்பூவை மலர வைத்தது. கரைக் காணாத காதல் இவளிடம் கிடைப்பதற்காகத்தான் இத்தனை வருடங்கள் தன்னை அன்பில்லா பாலைவனத்தில் பரிதவிக்க விட்டானோ ஆண்டவன் என எண்ணினான் ஜோனா. தூங்குபவளையே பார்த்தப்படி அசையாமல் படுத்திருந்தான் அவன்.

 

இவன் முழித்து ஒரு மணி நேரம் சென்றுதான் விழித்தாள் ஜீவா. சோம்பலாய் கண்ணைத் திறக்க, பச்சை நிற கண்கள் இரண்டு இவளை அன்பாய் பார்த்தப்படி இருந்தன. மெல்ல புன்னகைத்தவள்,

 

“லவ் யூ ஜோனா!” என சொல்லி அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

 

அடுத்த நொடி அவுச்சென சொல்லி எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

 

“என்னம்மா?”

 

“தோள் வலிக்குது ஜோனா” என சலுகையாய் முறையிட்டாள் அவனிடம்.

 

தன் ஒற்றைக் கையைக் கொண்டு மெல்ல அவள் தோளைத் தடவிக் கொடுத்தான் இவன்.

 

“தடவிக் கொடுத்தா சரியா போயிடுமா ஜோனா?”

 

“டாக்டர கூப்பிடவா மூலான்?”

 

“ம்ப்ச்! ஒன்னும் வேணா! இப்ப நீ கை வலிக்குதுனு சொல்லேன்!”

 

“இல்லை, வலிக்கலியே! இன்னும் பேய்ன் கில்லர் வேர் ஆப் பண்ணல ஜீவா”

 

“வலிக்குதுன்னு சொல்லு ஜோனா!” என பிடிவாதம் பிடித்தாள் இவள்.

 

“ஓகே, ஓகே! எனக்கு கை வலிக்குது ஜீவா”

 

மெல்லக் குனிந்து அவன் கையில் மென்மையாய் முத்தமிட்டாள் இவள்.

 

இவனுக்கு குபீரென சிரிப்பு வந்தது.

 

“முத்தம் வேணும்னா, ஜோனா கிவ் மி எ கிஸ்னு கேளு! எந்த வேலையா இருந்தாலும் அப்படியே விட்டுட்டு வந்து குடுக்கறேன்! இப்படிலாம் இண்டைரக்டா கேக்காதே! எனக்குப் புரியாது மூலான்” என்றவன் அவள் தோளில் மெல்லிய முத்தமிட்டான்.

 

“வலி போயிடுச்சா?” என அவன் கேட்க, கன்னத்தைக் காட்டி,

 

“இப்ப இங்க வலிக்குது” என்றாள்.

 

அங்கேயும் மென் முத்தம் வைக்க, நெற்றியைக் காட்டினாள் ஜீவா. மெல்லிய சிரிப்புடன் நெற்றியில் முத்தமிட்டவன்,

 

“இங்கயும் கண்டிப்பா வலி இருக்கும் மூலான்! நீ கேக்கற முன்னமே நானே தரேன்” என உதட்டில் அழுந்த முத்தமிட்டான்.

 

இருவருக்குமே அந்த முத்தம் தேவையாய் இருந்தது. தன் காதலுக்கு இனி எந்தத் தடையும் இல்லை என சந்தோஷமாய் இவளும், தடையாய் இருந்த காதலி அதைத் தாண்டி தன்னை நோக்கி எட்டெடுத்து வைத்து விட்டாள் என ஆனந்தத்தில் இவனும் விடாமல் தேன் கொடுத்து தேனெடுத்துக் கொண்டிருந்தார்கள். மூச்சு வாங்க இருவரும் விலகிய நொடி,

 

“உன் மேல நான் ரொம்ப கோபமா இருக்கேன் ஜோனா” என அடுத்த சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தாள் ஜோனாவின் மூலான்.

 

(மயங்கிவிட்டார்கள்…)

 

 

(வணக்கம் டியர்ஸ்..வர வர என் கற்பனைக் குதிரை லீவுக்கு போய்டுச்சோன்னு நினைக்கற அளவுக்கு நிலமை மோசமா இருக்கு. காலையில 11 மணிக்கு டைப் பண்ண உட்கார்ந்தேன். இப்போ மணி 7. இன் பிட்வீன் அந்த வேலை இந்த வேலைன்னு பார்த்தேந்தான். ஆனா ரொம்ப பார்த்த வேலை, லாப்டோப்ப முறைக்கறதுதான். சரி அடுத்த எபில சந்திக்கலாம்! போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்)