MMM–EPI 21

122620776_740997409820929_9109553537495410146_n-c0d2714d

அத்தியாயம் 21

 

பிரசித்திப் பெற்ற அந்த முருகன் கோயிலில் ஓர் ஈ காக்காய் கூட நுழைய முடியாதபடி பலத்தக் காவல் போடப்பட்டிருந்தது. வாசலில் வாழை மரம் தோரணம் தொங்க, நாதஸ்வர ஒலி மங்களமாய் காதை நிறைத்தது.

 

தீரன் வேட்டி சட்டையில் ஆணழகனாய்(ஹீரோ ஆக சான்ஸ் இருக்கோ????) அங்குமிங்கும் ஓடியாடி ஐயர் ஏவிய வேலைகளை செய்தபடி இருந்தான். ஜீவானந்தம் எப்பொழுதும் போல விறைப்பாய் நின்றப்படி நடந்துக் கொண்டிருக்கும் சாங்கியங்களை கவனித்துக் கொண்டிருந்தார். சூசன் அழகாய் பட்டுச் சேலை கட்டி, அது தடுக்கி தடுக்கி விட, நடக்கப் பயந்து அப்படியே ஒரு நாற்காலியில் அசையாமல் அமர்ந்திருந்தார். அவர் அருகே அவரது கணவர் கோயில் சிற்பங்களையும் அதன் கலை நயங்களையும் கண்டு வியந்தப்படி நின்றிருந்தார். பிள்ளைகள் இருவரும் வரப் பிரியப்படாததால் அவர்களை அழைத்து வரவில்லை இவர்கள். மேளதாளம் வாசிப்பவர்கள், ஐயர், குடும்பத்தினர் என வெகு சிலரே அழைக்கப்பட்டிருந்தனர் இந்த ரகசிய திருமணத்துக்கு.

 

என்ன ரகசியத் திருமணமா? ஏன் இந்த ரகசியத் திருமணம்? திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கப் போகும் இந்த அழகிய பாடகன் எலிஜிபள் பேச்சிலராய் இருந்தால் தானே படம் ஓடுவதற்கு அட்வாண்டேஜாய் இருக்கும்! கன்னியரின் கடைக்கண் பார்வை எல்லாம் அவன் மேல் விழுந்தால் தானே படம் வெற்றி நடைப் போடும்! படம் முடித்து திரையிட்டு நல்ல வரவேற்படைந்த பின்னே பெரிதாய் வரவேற்பு வைத்துக் கொள்ளலாம் என படத்தின் டைரக்டரான தீரன் அபிப்பிராயப்பட, ஜோனா ஒத்துக் கொள்ளவேயில்லை. ஜீவானந்தமும் இந்த ஒரு விஷயத்தில் மருமகனை ஒட்டியேப் பேசினார்.

 

 

ஜீவாவோ இந்த விஷயத்தில் தீரனின் பக்கம் நின்றாள். அவளுக்கு என்றுமே ஜோனா எடுத்தக் காரியத்தில் வெற்றிப் பெற வேண்டும் என்பதுதான் முக்கியம். அவனது ஒவ்வொரு ஆல்பமும் வெளி வரும் போது அவன் பதட்டப்படுவானோ இல்லையோ, அது ஹிட்டடிக்க வேண்டும் என இவள் எல்லா தெய்வத்தையும் வேண்டிக் கொள்வாள்! அவன் காலடி எடுத்து வைத்திருக்கும் திரைத்துறையில் தனது தடத்தை ஆழமாய் பதிப்பதற்கு இந்தத் திருமணம் தடையாய் இருக்குமென்றால் தான் திரை மறைவிலே இருந்துக் கொள்வதாக சொல்லிவிட்டாள் ஜீவா. எவ்வளவோ இரு ஆண்களும் போராடிப் பார்த்தும், இந்த விஷயத்தில் அவளை அசைக்க முடியவில்லை. அவள் ஆசைப்படியே நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்துத் திருமணம் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.

 

பூக்களைக் கொண்டு அழகாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அலெக்சாண்டர் ஜோனா பட்டு வேட்டி பட்டு சட்டையில் அம்சமாய் அமர்ந்திருந்தான். ஒரு கை இன்னும் தொட்டிலில் தான் இருந்தது. ஒற்றைக் கையால் ஐயர் சொல்லிய சாங்கியங்களை செய்துக் கொண்டிருந்தவனின் கண்கள் எங்கே இன்னும் ஜீவாவைக் காணோம் என தேடியபடி இருந்தது.  

 

கடைசியாய் ஐயர் மணமகளைக் கூப்பிட, அழகான பச்சைப் பட்டில் கொஞ்சமாய் நகைகள் அணிந்து, லேசாய் ஒப்பனை செய்து, ஜடைப் போட்டுப் பூ வைக்க முடி இல்லாததால் சின்னதாய் கிரீடம் வைத்த தலை அலங்காரத்தில் நேர் கொண்ட பார்வையுடன் நடந்து வந்தாள் ஜீவா. ஒற்றைப் பிள்ளையாய் போய் விட்டவளை, அண்ணன் ஸ்தானத்தில் கைப் பிடித்து அழைத்து வந்தான் தீரன். அவளைப் பார்த்த ஜோனாவின் கண்களில் காதல் கரையுடைத்து வழிந்தது என்றால், ஜீவானந்தத்தின் கண்களில் பாசம் பெருகி வழிந்தது. என்ன கண்டான் தன் மகன் இவளிடம் என அறிமுகப்படுத்தப்பட்ட நாளன்று உற்றுப் பார்த்தது போல இன்றும் தனக்கு மருமகளாய் வரப் போகிறவளை பார்வையால் அளந்தார் சூசன்.

 

ஜோனாவின் அருகே அமர்ந்தவள்,

 

“கை எங்கயாச்சும் வலிக்குதா ஜோனா?” எனதான் முதலில் கேட்டாள்.

 

“ஐம் குட்! உனக்கு பேய்ன் இருக்கா ஜீவா?” என இவன் கேட்டு, இல்லையெனும் பதிலையும் பெற்றுக் கொண்டான்.

 

‘மணமேடையில உட்கார்ந்துக்கிட்டு கை வலிக்குதா கால் வலிக்குதான்னு கேள்வி ரெண்டுக்கும். கல்யாணம்னு ஒன்னு ஆனாலே நிம்மதி பேக் டோர்ல நடையைக் கட்டிரும், விதி ப்ரண்ட் டோர்ல எண்ட்டராகி பொரட்டிப் போட்டு அடிப் பின்னி எடுக்கும்னு யார் சொல்லுவா இவங்களுக்கு! இதெல்லாம் வெளிய சொன்னா என்னைப் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க! ஃபன்னி பீப்பிள்’ என எண்ணிக் கொண்டான் தீரன்.

 

ஐயர் கெட்டிமேளம் சொல்ல, வாத்தியக்காரர்கள் மங்கள இசை முழங்க, தொட்டிலில் இருந்த ஒரு கையையும் இன்னொரு கையையும் ஒன்று சேர்த்து, இவள் அவனுக்கு வாகாய் குனிந்துக் கொடுக்க, மங்கள நாணை ஜீவாவின் கழுத்தில் கட்டினான் ஜோனா. ஜீவானந்தம் ஆனந்தக் கண்ணீருடன் மஞ்சள் அரிசித் தூவி வாழ்த்தினார் அவர்களை.

 

கண்கள் கலங்கிப் போக, அதை அழுத்தித் துடைத்தாள் ஜீவா. கண் மை ஈஷிக் கொண்டது கூட அவளுக்குக் கவலையில்லை. கண்ணீர் தன்னவன் முகத்தைக் காண விடாமல் மறைப்பதுதான் இம்சையாய் இருந்தது.

 

‘என் தோழன், என் ரட்சகன், என் நலன்விரும்பி, என் காதலன் இன்று என் கணவன்’

 

உள்ளமெல்லாம் உவகைப் பீரிட, உடல் நடுங்க அவனை நெருங்கி தோள் சாய்ந்துக் கொண்டாள் ஜீவா. ஒற்றைக் கையால் அவள் தோளை வளைத்துக் கொண்டவன்,

 

“ஆர் யூ ஓகே?” என பதட்டமாய் கேட்டான்.

 

ஆமென அவள் தலையாட்டினாலும், மற்ற சடங்குகளை சீக்கிரம் முடிக்க சொல்லி உடனே வீட்டுக்குக் கிளம்பி விட்டான் தன்னவளுடன். தீரன் கோயிலில் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வருவதாக சொல்லி விட, இன்னொரு காரில் ஜீவானந்தத்துடன் சூசனும் அவர் கணவரும் இவர்களைத் தொடந்தார்கள். காரில் பாடிகார்ட் சூழ தன்னருகே அமர்ந்தவளை, தோளில் சாய்த்துக் கொண்டான் ஜோனா.

 

“சாஞ்சிக்கோ! யூ லுக் சோ டையர்ட்! உங்க டாடி உன்னை நல்லா ரெஸ்ட் எடுக்க விட்டாரா இல்லையா? ஒரு சுத்து இளைச்சுப் போன மாதிரி இருக்க மூலான்” என அவன் சொல்ல, இவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

 

ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்ச்சார்ஜ் ஆனதும், இவளைத் தன்னோடு அழைத்துப் போக இவன் முனைய, திருமணம் முடியும் வரைக்கும் ஜீவா தன் மகள்தான் என ஜீவானந்தம் அழைத்துப் போய்விட்டார். தன் வீட்டுக்குத்தானே அவளை அனுப்ப மாட்டார், தான் அங்கே வருவதை யார் தடுப்பது என நாள் முழுக்க ஜீவானந்தத்தின் வீட்டில் ஜீவாவோடுதான் இருப்பான் ஜோனா. நைட் மட்டும் தீரன் வந்து அழைத்துப் போவான்.

 

“நைட்டாச்சு கிளம்பலியா? மணி பதினொன்னு ஆச்சுக் கிளம்பலியா?“ என நொடிக்கொரு தடவை ஜீவானந்தம் ஜீவாவுக்குப் போன் போடுவதில்,

 

“ப்ளிஸ் கிளம்பு ஜோனா” என இவள் கெஞ்சவே ஆரம்பித்துவிடுவாள்.

 

அதற்கும் கூட,

 

“உனக்கு என்னை விட உன் டாடியத்தான் ரொம்பப் பிடிக்குது” என குறைப்பட்டுக் கொண்டே கிளம்புவான்.

 

மறுநாள் காலை இவன் தான் காலிங் பெல் அடித்து மிலிட்டரியை கரேக்ட் டைமுக்கு எழுப்பி விடுவான். இந்த மூவரின் அக்கப்போரில் தீரன் தான் காரோட்டியாய், சமாதானப் புறாவாய், பன்ச்சிங் பேக்காய் இத்து இடியப்பமானான்.(அதாங்க நொந்து நூசுல்ஸ்சானான்)

 

அவன் தோளில் சாய்ந்துக் கொண்டவள் அப்படியே கண்ணயர, அவள் விழுந்து விடாதபடி பிடித்துக் கொண்டான் ஜோனா. அவனுக்கும் களைப்பாய்தான் இருந்தது. ஆனாலும் மனதில் நிறைந்திருந்த சந்தோஷம் தூங்க விடவில்லை அவனை. கெஞ்சல், கொஞ்சல், சிணுங்கல், செல்லக் கோபம், குழந்தைப் குறும்பு, சுட்டித்தனம், பிடிவாதம் என இந்தக் கொஞ்ச நாட்களாய் தன்னை சுழட்டி அடிக்கும் தன் மூலானை வாஞ்சையாய் பார்த்தப்படி அன்று அவள் மனதைத் திறந்த நாளை அசைப் போட்டான் ஜோனா.  

 

“உன் மேல நான் ரொம்ப கோபமா இருக்கேன் ஜோனா”

 

“கோபப்படு மூலான்! நெறைய கோபப்படு! கோபத்துல ரெண்டு அடி கூட அடி! நான் சந்தோஷமா வாங்கிப்பேன்! எனக்கு இந்த மாதிரி கோபப்பட்டு என் கூட சண்டை போடற மூலான் தான் வேணும். நான் செய்யறத எல்லாமே ஏத்துக்கிட்டு என்னை தெய்வமா பார்க்கற ஜீவா வேணாம்! ஐ வாண்ட் யுவர் லவ் டார்லிங்! நாட் யுவர் வொர்ஷிப்” என சொன்னவனின் குரலில் அவ்வளவு ஆதங்கம்.

 

அவன் கழுத்தில் இன்னும் ஆழமாய் முகத்தைப் புதைத்துக் கொண்டவள்,

 

“அடிக்க மாட்டேன் என் ஜோனாவ! ஆனா அவன துன்பப்படுத்திப் பார்க்கறவங்கள சும்மா விடமாட்டேன்” என்றாள்.

தன்னிடமிருந்து அவளைப் பிரித்தெடுத்தவன்,

 

“இப்போத்தான் சொன்னேன் என்னைக் காதலி, ஆராதனை செய்யாதேன்னு! என் மனசு என்ன பாடுபடுது தெரியுமா ஜீவா? லெட்டர் எழுதி வச்சிட்டு என்னை காட்டேஜ்ல அப்படியே விட்டுட்டுப் போயிட்ட! உங்க அப்பா சொன்ன மாதிரி என் மேல பைத்தியமா இருந்த ஒரு இன்னேஷண்ட் ரசிகையை என் ஆசைக்கு யூஸ் பண்ணிட்டனோன்னு எத்தனை நாள் துடிச்சுப் போயிருப்பேன் தெரியுமா! வலிக்குது ஜீவா, மனசு ரொம்ப வலிக்குது!”

 

என்றவன் குரலை செறுமி,

 

“உன்னை என்னோட தேவதையாப் பார்த்தேன்! உன்னாலத்தான் திரும்பவும் எழுத ஆரம்பிச்சேன், நல்லா சாப்பிட ஆரம்பிச்சேன், நிம்மதியா தூங்க ஆரம்பிச்சேன். மொத்தத்துல மனுஷனா வாழ ஆரம்பிச்சேன்! உன்னோட அக்கறை, அன்பு, பாசம் எல்லாமே என்னோட செத்துக் கிடந்த ஒவ்வொரு செல்லுக்கும் உயிர் கொடுத்துச்சு. எனக்கே எனக்கான ஒரு சொந்தத்த கண்டுப்புடிச்சிட்டேன்னு அவ்ளோ ஹேப்பியா இருந்தேன். அந்த சந்தோஷத்த, அன்ப, காதல எனக்குக் காட்டத் தெரிஞ்ச விதத்துல காட்டினேன். என்னை உனக்குக் கொடுத்து, உன்னை எனக்காக எடுத்துக்கிட்டேன். உன் கிட்ட இருந்து மறுப்பு வந்திருந்தா கண்டிப்பா நான் நிறுத்திருப்பேன் ஜீவா. ஆனா என்னை நீ மறுக்கல! காலங்கடந்துதான் யோசிச்சேன், நீ குடுத்த சம்மதம் எனக்கான காணிக்கையா இல்ல காதலான்னு!” என கலங்கியவனின் வாயை சட்டென பொத்தினாள் ஜீவா.

 

“நான் சொல்லறத எல்லாம் கேட்க உனக்குத் தெம்பு வேணும் ஜோனா! முதல்ல சாப்பிடுவியாம், அப்புறமா நாம பேசுவோமாம்!” என்றவள் கட்டிலில் இருந்து மெல்ல இறங்கினாள்.

 

தீரன் ஹாட் கண்டேய்னரில் மூடி வைத்திருந்த உணவை எடுத்தவள், அவன் அருகே வந்து நின்றாள். அதில் கரண்டியிட்டு, அவன் வாயருகே கொண்டு போனாள் ஜீவா.

 

“முதல் வாய் என் பேபிக்கும், நம்ம பேபிக்கும்!” என்றவன் ஒரு கையால் கரண்டியை வாங்கி அவளுக்கு ஊட்டி விட்டான்.

 

அதன் பிறகு அமைதியாய் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டு முடித்தனர். பாத்திரங்களை ஓரம் கட்டி வைத்தவள், அவனுக்கு ஈர டவல் கொண்டு வாயையும் துடைத்து விட்டாள். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் அருகே போய் அமர்ந்துக் கொண்டவள், குண்டடி படாத கரத்தைத் தன் கரத்துக்குள் பிணைத்துக் கொண்டாள்.

 

“உன்னை நான் முதன் முதலா சந்திச்சது காதல் கத்திரிக்காய்லாம் என்னன்னே தெரியாத வயசு ஜோனா! எனக்குன்னு ஒரு ப்ரேண்ட் கிடைக்காதா, என்னையும் யாராவது விளையாட்டுல சேர்த்துக்க மாட்டாங்களா, என் கூட சேர்ந்துப் படிக்க மாட்டாங்களான்னு ஏங்கிக் கிடந்த வயசு அது. ஒன்பது வயசு ஜீவாவுக்கு வெள்ளைக்காரனான உன்னைப் பார்த்தது ஒரு அதிசய நிகழ்வு. இப்போ திடீர்னு ஒரு டைனசோர பார்த்தா நாம எப்படி அதிர்ச்சியாகிப் போவோம்! அந்த மாதிரி ஒரு ஆனந்த அதிர்ச்சி”

 

தன்னை டைனசோரோடு ஒப்பிட்டுப் பேசியதில் புன்னகை வந்தது ஜோனாவுக்கு.

 

“அப்படி அதிர்ச்சியாகி நின்னவ தோள் மேல நீ கையைப் போட்டு அந்த பயங்கர மலை ஓரத்தில இருந்து இழுத்துட்டுப் போன. ஏதோ தைரியத்துல சாக வந்துட்டாலும் ரொம்ப பயந்துப் போய் அழுதுட்டு இருந்தேன். நீ அங்கிருந்து என்னை இழுத்த நொடி, என் கண்ணுக்கு என்னைக் காக்க வந்த எங்க ஊரு சூப்பர் ஹீரோ சக்திமானா தெரிஞ்ச நீ! என் கிட்ட சிரிச்சுப் பேசுனப்போ, என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னப்போ, எனக்காக பாட்டுப் பாடி என்னைக் கியூட்டி பைன்னு புகழ்ந்தப்போ, நான் சொன்ன மொக்க ஜோக்குக்கு சிரிச்சப்போ எனக்கும் ப்ரண்ட் கிடைச்சிருச்சுன்னு இந்த உலகுக்கே கத்திச் சொல்லனும்னு தோணுச்சு! என் கேப் பிடிச்சு ஆட்டி தலையைத் தடவனப்ப, நம்ம அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படித்தானே பாசமா தலை கோதிருப்பாங்கன்னு தோணுச்சு! என் கூட ஸ்பேண்ட் பண்ண அரை மணி நேரத்துல எனக்கு ஒரு நண்பனா, அம்மாவா, அப்பாவா, ஆசானா, பாதுகாவலனா எல்லாமுமா தெரிஞ்ச நீ! உன் பிம்பம் என மனசுல பச்சக்குன்னு பதிஞ்சுப் போயிடுச்சு ஜோனா!”       

 

அவள் மனதில் உள்ளதைத் தெரிந்துக் கொள்வதற்காக  பேசவிட்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் இவன்.

 

“சின்னப் புள்ளைங்க எல்லோரும் தினம் அவங்க வாழ்க்கையில நடக்கறத பெத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிப்பாங்க! இல்ல கூடப் பிறந்தவங்க, நண்பர்கள் கிட்ட ஷேர் பண்ணிப்பாங்க. என்னால அப்பா கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்க முடியாது! நெருங்கிய நட்புன்னும் யாரும் இல்ல. அதனால என்னோட வாழ்க்கையில நடக்கறத எல்லாம் நீ பக்கத்துல இருக்கற மாதிரி உருவகப்படுத்தி உன் கிட்ட ஷேர் செஞ்சிக்க ஆரம்பிச்சேன். ஜோனா இன்னிக்கு ஓட்டப்பந்தயத்துல நான் கோல்ட் மெடல் அடிச்சேன், இன்னிக்கு மேத்ஸ் டெஸ்ட்ல எனக்குத்தான் ஹையஸ்ட் மார்க், நம்ம ஜோனா(நாய்—இப்பொழுது உயிரோடு இல்லை) இன்னைக்கு பச்சையா வாந்தி எடுத்தான். இப்படி என்னோட தனிமைக்குத் துணையா நீதான் இருந்த!”

 

“அமெரிக்காவுல நான் இருக்கேன்னு தான் அங்க படிக்க வந்தியா ஜீவா?”

 

“ஆமா, உனக்காகத்தான் வந்தேன்! என்னோட நிழலா இருந்த உன்னை நிஜத்துல மறுபடி ஒரு முறையாவது பார்த்திடனும்னு ஆசை! ஹ்ம்ம் வெறின்னு கூட சொல்லலாம். அந்த டைம்ல எல்லாம் நீ டாப் சிங்கர் ஆகிட்ட! உன்னைத் தனியா சந்திக்க முயற்சி செஞ்சேன், ஆனா முடியல. உன்னோட ஒவ்வொரு கான்சேர்ட்டுக்கும் கண்டிப்பா டிக்கட் வாங்கி வந்துப் பார்ப்பேன்! மேடையில பாடறது என் நண்பன் ஜோனான்னு அவ்ளோ பெருமையா இருக்கும். ஒரு தடவை உனக்காக திருட்டுத்தனமா பேக் ஸ்டேஜ்ல காத்திருந்தேன். ஒரே தடவை உன் கிட்ட பேசிடனும், நான் தான் உன்னோட டேய் பையான்னு சொல்லனும்னு ஆசையா வேய்ட் பண்ணேன். நீயும் கான்சேர்ட் முடிச்சுட்டு கிளம்பி வந்த! நான் உன் முன்னுக்கு வந்து நிக்க, என்னை மாதிரியே சந்து பொந்துல ஒளிஞ்சிருந்த இன்னும் சில பொண்ணுங்களும் உன்னை சூழ்ந்துகிட்டாங்க! அவங்க சத்தத்துல, ஜோனா நாந்தான் உன்னோட டேய் பையான்னு நான் கத்தனது உனக்குக் கேக்கவேயில்ல! உன்னோட கார்ட்ஸ் எங்க எல்லாரையும் புடிச்சு தள்ளி விட்டுட்டு உன்னைக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க! அவங்க தள்ளனதுல நான் கீழ விழுந்துட்டேன்! உன்னோட ரசிகைங்க என்னை ஏறி மிதிச்சிட்டு உன் பின்னால ஓடி வந்தாங்க! கண்ணுல கண்ணீர் வழிய, கைல ரத்தம் வழிய, கார்ல ஏறுன உன்னையேத்தான் பார்த்திருந்தேன். அப்போ நல்லா புரிஞ்சது இந்த மரமண்டைக்கு, நீ என் நண்பன் ஜோனா இல்ல, ஹாட் சிங்கர் ஜோனான்னு” என்றவள் அவன் தோள் சாய்ந்து குலுங்கி அழுதாள்.  

 

இது போலெல்லாம் அடிக்கடி அவன் வாழ்க்கையில் நடப்பதுதானே! ஆனால் அப்போது அவன் அறிந்திருக்கவில்லையே கீழே தள்ளப்பட்ட பல நூறு பெண்களில் தன் உயிருக்கு மேலானவளும் இருந்திருப்பாள் என! இவனுக்குமே தொண்டை அடைத்தது. அவள் தோளணைத்துக் கொண்டவன், அன்று நடந்த சம்பவத்துக்கு இன்று மன்னிப்புக் கோரினான்.

 

“சாரி ஜீவா! சாரிடா!” என அவன் வாய் ஓயாமல் முணுமுணுத்தது.

 

“அப்போ முடிவு பண்ணேன், இனி எப்பவுமே நான் தான் டேய் பையான்னு உன் கிட்ட சொல்லவேக் கூடாதுன்னு. அதுக்கு பிறகும் உன் கான்சேர்ட்டு வருவேன், தூரத்துல இருந்து உன்னை ரசிப்பேன்! ஆனா உன்னை நெருங்கனும்னு நினைக்கல! எனக்குத்தான் நீ என் ஜோனா! உனக்கு நான் யாரோத்தானேன்னு மனச தேத்திப்பேன்! அப்புறம் படிப்பு முடிஞ்சு இந்தியாவுக்கே வந்துட்டேன்! வேலை வேலைன்னு என்னை பிசியா வச்சிக்கிட்ட வேளையில தான் அப்பாக்கிட்ட இருந்து கல்யாணத்துக்கு நெருக்கடி வந்தது! நீ சொல்லிட்டுப் போனதுல இருந்து, அவர் எது சொன்னாலும் கேப்பேனே! அது போலத்தான் இதுக்கும் சம்மதம் சொல்லனும்னு நெனைச்சி வச்சிருந்தேன்! இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் உடனே ஒத்துக்கக் கூடாதே! என்னதான் ஆம்பள மாதிரி எங்கப்பா வளர்த்திருந்தாலும், நான் பொண்ணுதானே! உள்ளுக்குள்ள கொஞ்சம் வெக்கம், கூச்சம் எல்லாம் ஒட்டிக்கிட்டுத்தான் இருந்துச்சு! யோசிச்சு சொல்றேன்னு லீவுக்குக் கிளம்பிட்டேன்!”

 

“அந்த டைம்லதான் உன் ஸ்பை கிட்ட இருந்து நான் வரத தெரிஞ்சுக்கிட்ட! கரேக்டா?”

 

“ஆமா! திரும்பவும் முனுமுனுன்னு உன்னைப் பார்த்து பேசனும்ங்கற ஆசை மனச அரிக்க ஆரம்பிச்சது! இங்க நடந்தது எல்லாத்தையும் மறக்கனும், புது வாழ்வு வாழனும்னு சொன்ன நீ, மறுபடி இங்க ஏன் வரேன்னு ஒரு குறுகுறுப்பு வேற! உடம்புக்கு முடியாம இருந்தியே, நலமாகிட்டயான்னு நேருல பார்க்கனும்னு மனசெல்லாம் அடிச்சிக்கிச்சு! கல்யாணம் செஞ்சிக்க முடிவெடுத்துட்டோம், நண்பனா நெனைச்சாலும் உன்னை மனசு முழுக்க பச்சைக் குத்தி வச்சிருக்கறது எனக்கு வரப் போகிற கணவருக்கு நான் செய்யற துரோகமா தோணுச்சு! ஐ நீட் எ க்ளோஷர்! என் வாழ்க்கை எனும் புத்தகத்துல உன்னுடைய சாப்டரா க்ளோஸ் செய்ய இந்தக் கடைசி சந்திப்பு உதவும்னு தோணுச்சு! அதான் தீரனா வந்தேன்! எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா ஜோனா! தீரனா என்னை அறிமுகப் படுத்திக்கிட்டாலும் என்னைப் பார்த்ததும் உனக்கு ஞாபகம் வந்து, டேய் பையான்னு கூப்டுவியான்னு பேராசையோட நின்னிருந்தேன் உன் முன்ன! ஆனா நீ கூப்பிடல! அதோட உன் பாடி லாங்குவேஜ்ல ஒரு அலட்சியம். மனசு ரொம்ப வலிச்சது தெரியுமா! எனக்குத்தான் நீ சகலமும், ஆனா உனக்கு என் நினைவு கூட இல்லைன்னு ஒரு கோபம் உன் மேல! அதுக்குப் பிறகு நாம வெளிய போனோம், சாப்டோம், கடத்தனோம்! ஐ மீன் கடத்தனேன்! அதெல்லாம் தான் நெறைய தடவைப் பேசிட்டோமே!”

 

“ஊட்டில உன்னை சந்திச்சப்போ நீ ரொம்ப சின்னப் பையனா இருந்த! எனக்கு இருந்த மன உளைச்சல்ல உன்னை நான் சரியாக் கூட பார்க்கல ஜீவா! அழுது கலங்கி நின்ன கண்ண மட்டும்தான் பார்த்தேன்! அடிக்கடி காட்டேஜ்ல நீ என்னை நேருக்கு நேர் பார்க்கறப்போ, உள்ளுக்குள்ள என்னமோ பண்ணும்! உன் கண்ணுல என்னவோ இருக்குன்னு அடிக்கடி நினைப்பேன்! ஆனா டேய் பையாவையும் உன்னையும் நான் சம்பந்தப்படுத்திப் பார்க்கல ஜீவா! ஊட்டி எனக்குக் கொடுத்தது ஆறாத வடு மட்டும்தான். அதை நெனைச்சுப் பார்க்கவே விரும்பனது இல்லை நான்! அந்த சம்பவத்தோட இந்த அழகான குட்டிப் பையனையும் மறந்துப் போனது என் தப்புதான் ஜீவா! என் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய தப்பு இது! என்னை மன்னிச்சிடு ஜீவா”

 

“பைத்தியமா உனக்கு? எதுக்கு இப்ப மன்னிப்புலாம் கேக்கற? அந்த வயசுல புரியலைனாலும் வளர வளர உன்னோட மனசு பட்டப்பாடு எனக்கு நல்லாவே புரிஞ்சது ஜோனா! மிஸ்டர் ஜெய்க்குமார் பேசுன பேச்சோட என்னையும் சேர்த்து நீ மறந்ததுல தப்பே இல்ல! சின்னப்புள்ளைத்தனமா இதுக்கெல்லாம் உன் கிட்ட கோச்சிக்கிட்டது என் தப்புத்தான்” என அவன் குற்ற உணர்ச்சியைக் குறைக்க முயன்றாள் ஜீவா.

 

தலையை இடம் வலமாக ஆட்டியவன், அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

“என்னோட தப்ப ஒத்துக்க விட மாட்டர, என்னை உள்ளங்கையில வச்சித் தாங்கற, எனக்குன்னு ஒன்னுனா துடிச்சுப் போகிற, என் உயிர காக்க உன் உயிர குடுக்க முன் வர, ஏன்டி ஏன்? உனக்குன்னு நான் என்ன செஞ்சிட்டேன்னு இப்படிலாம் என்னை உசுரா நினைக்கற?” என கண் கலங்கினான் ஜோனா.

 

“இந்த உசுரே நீ காப்பாத்திக் குடுத்ததுதான் ஜோனா! என் உடம்புல இந்த உயிர் இருக்கற வரைக்கும் அது இந்த ஜோனாவ ஆராதனை செஞ்சிட்டே இருக்கும்” என சிம்பிளாக முடித்து விட்டாள் ஜீவா.

 

“அப்போ உன் காதல் எனக்குக் கிடைக்காதா மூலான்?”

 

“காதல்னா என்ன ஜோனா? ஒருத்தர் எப்பொழுதும் நலமா ஆரோக்கியமா இருக்கனும்னு நெனைக்கிறது லவ்னா, யெஸ் ஐ லவ் யூ ஜோனா! ஒருத்தர் வாழ்க்கையில சக்சஸ்புல்லா இருக்கனும்னு வேண்டிக்கறது லவ்னா, யெஸ் நான் உன்னை காதலிக்கிறேன் ஜோனா. ஒருத்தர் எப்பொழுதும் சந்தோஷமா இருக்கனும்னு மனசு விரும்பறது லவ்னா, யெஸ் வோ ஐ நி(மேண்டரின்) ஜோனா. ஒருத்தர் குழந்தை குட்டின்னு மனசு நிறைஞ்ச வாழ்க்கை வாழனும்னு நாம ஆசைப்படறது லவ்னா, யெஸ் சாராங்ஹியோ(கொரியன்) ஜோனா.”

 

இதே வார்த்தைகளை காட்டேஜில் ஒரு முறை சொல்லி இருந்தாள் ஜீவா. மறுபடியும் அதைக் கேட்ட ஜோனாவுக்கு கண்கள் இரண்டும் கலங்கி சிவந்தன. இவள் இப்படித்தான் என புரிந்துக் கொண்டான் பாடகன். அவளது ஜோனா பக்தியென்பது அன்பு, பாசம், நேசம், காதல், காமம், நட்பு எல்லாம் கலந்துக் கட்டி ஒரு பேக்கேஜாக வருவது! அவளுக்கு காதலும் ஜோனாவிடம் காட்டும் பக்திதான், நேசமும் அவனிடம் காட்டும் பக்திதான், காதலில் விளைந்த காமமும் அவனிடம் காட்டும் பக்திதான்!

 

“நீ என்னைக் காதலிக்க வேண்டாம்! உன் விருப்பப்படியே வொர்ஷிப் பண்ணு! ஆனா நான் என் ஜீவாவ, என் மூலான காதலிச்சுத் தள்ளுவேன்! லவ் டார்ச்சர் பண்ணுவேன்! ஐ லவ் யூ மூலான்! லவ் யூ டூ தெ மூன் அண்ட் பேக்” என்றவன் அவளை மூச்சு முட்ட முத்தமிட்டான்.

 

கலகலத்து சிரித்தவளை ஆசையாய் கட்டிக் கொண்டான் ஜோனா.

 

“என் மேல இவ்ளோ பக்தி வச்சிருந்தவ ஏன்டி என்னை விட்டுட்டுப் போன?”

 

“உனக்காகத்தான் உன்னை விட்டுட்டுப் போனேன் ஜோனா! பாண்டில உனக்கு என் மேல ஒரு வித அட்டாச்மெண்ட் வர ஆரம்பிச்சது! அது உன்னை நான் நல்லா பார்த்துக்கிட்டதனால வந்த உணர்வோன்னு எனக்குத் தோணுச்சு! ஓர் ஆணையும் பெண்ணையும் தனியாப் பூட்டி வச்சா, ஒன்னு வெறுப்புல அடிச்சிக்கிட்டு செத்துடுவாங்க! இல்லை ஈர்ப்புல ஒன்னா சேர்ந்து வாழ்ந்திடுவாங்க. அப்படித்தான் என் மேல உனக்கு ஈர்ப்பு வந்துடுச்சோன்னு நெனைச்சேன். தினம் முகத்தைக் கண்ணாடில பார்க்கறேனே என் அழகு என்ன லெவல்னு எனக்குத் தெரியாதா ஜோனா! உன்னை மாதிரி ஒருத்தன் என்னைத் திரும்பிப் பார்த்தா, அதுக்கு தனிமையின் கொடுமையைத் தவிர வேற என்ன காரணமாயிருக்கும்னு தோணுச்சு! ஆனா அந்தக் கடைசி நாள் நீ காட்டுன காதல்ல நெஜமாலுமே என்னை ரொம்ப டீப்பா லவ் பண்ணறன்னு புரிஞ்சுக்கிட்டேன்! அதான் விலகி வந்தேன்”

“பைத்தியம்டி உனக்கு! தெ கிரேட் ஜோனாவோட டீப் லவ் உனக்கு சீப் லவ்வா போச்சு! பொசுக்குன்னு விட்டுட்டுப் போயிட்ட!” என்றவன் அவள் கன்னத்தை மெலிதாக கடித்து வைத்தான்.

 

“வலிக்குது ஜோனா! என சிணுங்கியவள்,

 

“நான் ஒரு கேள்வி கேக்கறேன்! ஹாணஸ்டா பதில் சொல்லனும்! சரியா?” என கேட்டாள்.

 

“கேளு!”

 

“நீ ஒருத்திய லவ் பண்ணுற, ஹ்ம்ம் சரி, என்னையே வச்சிப்போம் இந்த சிட்டுவேஷன்ல! நீ என்னை லவ் பண்ணற! எனக்கு கிப்ட் வாங்கனும்னு கடைக்குப் போற! அங்க தங்க நகையும் இருக்கு, வைர நகையும் இருக்கு! எது எனக்கு வாங்கித் தருவ நீ?”

 

“என் செல்லத்துக்கு தங்கத்தப் பூட்டி அழகு பார்க்கறத விட வைரத்தப் பூட்டித்தான் அழகுப் பார்ப்பேன்”

 

“அதே போலத்தான் என் செல்லத்துக்கு நானும் வைரத்தப் பூட்டி அழகு பார்க்கனும்னு நெனைச்சேன்! இந்தத் தங்கத்த விட உன் வாழ்க்கையில வைரமா ஒருத்தி இணைஞ்சா நீ இன்னும் பிரகாசிப்பன்னு நெனைச்சேன்! அதான் விட்டுட்டுப் போனேன். தோற்றத்துலயோ, திறமையிலயோ, பணத்துலயோ எதுலயும் நான் உனக்கு இணையில்ல! அது என்னை உறுத்திட்டே இருந்துச்சு, இப்பவும் உறுத்திட்டேத்தான் இருக்கு! உன் கூட டேட் பண்ண லேடிஸ் மாதிரி நான் இல்லவே இல்ல! காட்டேஜ்ல நீ சொன்ன மாதிரி கையில சுருட்டிப் பிடிச்சிக்க நீள முடி இல்ல, உன்னைத் தாங்கிக்க மெத்து மெத்துன்னு பஞ்சு போல உடம்பு இல்ல, நீ வழுக்கி விழுந்துடாம இருக்க தேவையான இடங்கள்ல மேடு பள்ளங்கள் இல்ல! மொத்ததுல நான் பார்க்க பொண்ணு மாதிரியே இல்ல!

 

இவளுக்கு எப்படி புரிய வைப்பது என மலைத்துப் போனான் ஜோனா. கண்டதையும் பேசி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது நன்றாகப் புரிந்தது அவனுக்கு.

 

“வைரம் தங்கம்னு நல்லா பேசற மூலான். பண மதிப்புப்படி பார்த்தா வைரம் பெருசுதான். ஆனா அன்பின் அடிப்படையில ஆசையா வாங்கிக் குடுக்கப்படற தங்கம், விலை மதிப்பில்லாதது. பளபளன்னு என் பக்கத்துல நிக்கிற வைரத்தோட, பாசமா, பாந்தமா எனக்குள்ள அடங்கிப் போகிற இந்த தங்கம்தான் எனக்கு வேணும்! இந்தத் தங்கம் குடுக்குற அன்பும், அரவணைப்பும் போதும் எனக்கு! ஒரு காலத்துல நீ சொல்லற புற அழகுல மயங்கிக் கிடந்தவன் தான் நான்! ஆனா இப்போ அக அழகுத்தான் என்னைக் கட்டி இழுக்குது மூலான்! எந்த அழகி கூடவும் கட்டிலில் விழுந்துப் புரளலாம்! ஆனா எனக்கு இந்த அழகி கூடத்தான் கூடி முடிச்சப் பின்னும் கட்டிப் பிடிச்சு, காதல் மொழி பேசி, தட்டிக் குடுத்து தாலாட்டுப் பாடனும்னு தோணுது! எத்தனையோ பேர கடந்து வந்த நான் முதன் முதலா, முழுசா மயங்கி நின்னது உன் கிட்ட மட்டும்தான் ஜீவா(தலைப்பு வந்திடுச்சுடா சாமி)!”

 

“ஐ லவ் யூ ஜோனா”

 

“எது????? அந்த வொர்ஷிப் தானே! சரி பண்ணு பண்ணு!”

 

காதல் பல ரகம். அதில் இவள் காதலும் ஒரு ரகம்!  

“உன்னை மாதிரியே மூனு குழந்தைங்க வேணும் ஜோனா! அவங்களயும் நான் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கனும்”

 

“அது சரி! நான் கடவுள், நம்ம பிள்ளைங்க தெய்வக் குழந்தைங்க, நம்ம வீடு ஒரு கோயில், உங்க டாடி கோயிலுக்கு வரப் புள்ளைங்கள பயங்காட்டுற கோயில் யானை, நீ இந்த தெய்வத்துக்கு பூஜை செய்யற பக்தை! மொத்தத்துல நம்ம குடும்பம் ஒரு டிவைன் குடும்பம்”

 

“ஏன் எங்க டாடி மட்டும் கோயில் யானை?” என்றவள் கோபமாய் அவன் அடிப்படாத கையில் அடித்தாள்.

 

“அடி இன்னும் அடி! என்னை விட உன் டாடி மேலத்தான் பாசம் உனக்கு” என ஆரம்பித்தவன், அவள் கோப முகத்தைப் பார்க்க ஆசை வரும் போதெல்லாம் தன் மாமனாரை வம்பிழுத்து வாங்கிக் கட்டிக் கொள்வதை வழக்கமாக்கி இருந்தான்.

 

தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவன், வீடு வந்ததும் தன்னை மீட்டுக் கொண்டான். இன்னும் உறங்கியபடி இருந்த ஜீவாவை,

 

“பேபி வேக் அப்! இப்போ கை மட்டும் எனக்கு நல்லா இருந்தது, மணப் பெண்ணான உன்னை என் கைகளில ஏந்தி அலுங்காம உள்ளத் தூக்கிட்டுப் போயிருப்பேன்” என பெருமூச்சு விட்டான்.

 

மெல்ல கண் விழித்துக் கொண்டவள்,

 

“பரவாயில்ல விடு ஜோனா! ட்ரடிஷன மாத்தி நான் வேணா உன்னை உள்ளத் தூக்கிட்டுப் போகவா?” என கேட்டாள்.

 

“நீ செஞ்சாலும் செய்வ மூலான்!“ என்றவன் சிரிப்புடனே அவளை அழைத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.

 

அங்கே மிலிட்டரியின் ஆர்டர் படி ஆரத்தித் தட்டைப் பிடித்தப்படி நின்றிருந்தார் சூசன். சேலை ஒரு பக்கம் நழுவவா என வம்பிழுக்க, தட்டில் வெற்றிலையின் மேல் இருந்த சூடத்தில் ஆரத்தித் தண்ணீர் பட்டு அணைந்து விடாமல் பேலன்ஸ் செய்யவென ஒரு டான்சே ஆடிவிட்டார் அவர். ஜீவாவுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வரப்பார்த்தது.

 

பாடகன் பாடிகார்டாய் இருந்தவர்கள் ஒரு வழியாக கணவன் மனைவியாய் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தனர்.   

 

தனக்குத் தெரிந்த வகையில் மற்ற சாங்கியங்களை செய்ய வைத்தார் ஜீவானந்தம். மாப்பிள்ளை பெண்ணுக்குப் பால் பழம் கொடுத்து, இந்த பேச்சிலர்கள் பூஜை அறை வைத்திருக்காததால் தன் பர்சில் வைத்திருக்கும் மனைவியின் படத்தையே தெய்வமாய் வணங்க வைத்து தன் மகள் மங்களகரமாக வாழ்க்கையைத் துவக்க ஆவன செய்தார் அவர்.

 

எல்லாம் முடித்ததும் களைத்துப் போயிருந்த ஜீவாவை சோபாவில் அமர்த்தினான் ஜோனா.

 

“உட்காரு! சும்மா அங்கயும் இங்கயும் நடக்காத! செய்ய வேண்டியத எல்லாம் உன் டாடி கோயில் யானை செய்வாரு” என சொல்லி தலையணை அடியையும் பரிசாகப் பெற்றுக் கொண்டான் ஜீவாவிடம்.

அந்த நேரம் செக்கியூரிட்டி உள்ளே வந்து,

 

“சார் உங்களப் பார்க்க சூர்யான்னு ஒரு அம்மா வந்திருக்காங்க!” என்றான்.

 

ஜீவாவும் ஜீவானந்தமும் விறைப்பாய் ஜோனாவின் இரு பக்கம் வந்து நின்றார்கள். மனைவியாய் இருந்தவளும் மாமனாராய் இருந்தவரும் நொடியில் பாடிகார்டாய் மாறிப் போனார்கள்.

 

 

(மயங்கிவிட்டார்கள்)

 

 

(வணக்கம் டியர்ஸ். போன எபிக்கு லைக் கமேண்ட், மீம் போட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இதோடு அடுத்த எபியில் சந்திக்கலாம்! லவ் யூ ஆல்)