MMM–EPI 23(EPILOGUE)

122620776_740997409820929_9109553537495410146_n-c2535cec

எபிலாக்

 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு.

 

கிழக்கு கடற்கரை சாலையில் அழகாய் அளவாய் அருமையாய் நின்றிருந்தது அந்த பங்களா. ஜே அண்ட் ஜே என தங்க முலாம் பூசப்பட்ட பெயர் பலகை வரவேற்க, வீட்டை சுற்றி மரங்களும், செடிகளும் அவ்விடத்தை ரம்மியமாய் காட்டின. வீட்டின் பக்கவாட்டில் கிட்டார் வடிவத்தில் பெரிய ஸ்வீம்மிங் ஃபூல் இருக்க, கூப்பிடு தூரத்தில் இருந்தது கடற்கரை. அந்த மாளிகையை சுற்றி பாதுகாவலர்கள் எப்பொழுதும் போல பணியில் இருந்தனர்.  

 

கிச்சனில் அமர்ந்து தனது பேத்திக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் ஜீவானந்தம். வாயைத் திறந்து உணவை வாங்கமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்த அந்தக் குட்டியின் பெயர் அலெக்‌ஷிஸ் ஜீவிகா. இந்நேரம் ஜீவா இப்படி அடம் பிடித்திருந்தால் பட்டென அடி விழுந்திருக்கும். ஆனால் பேத்தியின் அடம், மிலிட்ரிக்கு மனதில் கடம் வாசிப்பது போல இன்பமாக இருந்தது. பிள்ளை இன்பம் என்றால் பேரப்பிள்ளை பேரின்பம் அல்லவா!

 

வாரத்துக்கு இரண்டு தடவை தனது இல்லத்துக்கு சென்றுக் கொண்டிருந்த ஜீவானந்தம், பேத்தி பிறந்ததும் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஜோனாவும் எங்கள் வீட்டில் இப்படி பார்த்துக் கொள்வோம் அப்படி பார்த்துக் கொள்வோம் என வம்பிழுப்பானே தவிர, பெரியவராய் அவர் தங்களோடு இருப்பதில் அவனுக்குமே சந்தோஷம் தான்.

இந்த வீட்டை வாங்கிக் கொண்டு வாடகை வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர் ஜோனாவின் குடும்பம். கை குணமானதும், முழு மூச்சாக ஜோனாவும் தீரனும் பட வேலைகளில் இறங்கினர். அந்தப் படத்தை முடிக்கும் முன்னரே ஜோனாவுக்கு இன்னும் பல படங்களில் இருந்து அழைப்பு வந்தது. எல்லாவற்றையும் தட்டிக் கழித்து விட்டான் பாடகன்.

 

ஏனேன தீரன் கேட்க,

 

“சிங்கிங் இஸ் மை பேஷன்! மிஸ்டர் ஜெய்க்குமார வெறுப்பேத்தத்தான் நடிக்க வந்தேன், நடிச்சிட்டேன். அது போதும் எனக்கு தீரா! இனிமே என் கண்செண்ட்ரேஷன் முழுக்க பாடறதுல தான்” என தீர்க்கமாக சொல்லிவிட்டான்.

 

அவன் சொன்னதை அமைதியாக கேட்டிருந்த ஜீவா, தனியறையில் அவனைக் கொண்டாடி தீர்த்துவிட்டாள்.

 

“இந்த ஆக்டிங் கேரியர் உனக்கு எவ்ளோ கஸ்டமா இருந்ததுன்னு உன் கூடவே இருந்த எனக்கு நல்லாவே புரிஞ்சது ஜோனா! ரிவேஞ் எடுக்கறேன்னு இதுலயே மூழ்கிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன். நவ் ஐம் சோ ஹேப்பி” என அவனை விட இவள்தான் அகமகிழ்ந்துப் போனாள்.

 

ஜே. ஜே ப்ராடக்‌ஷனின் அடுத்த படத்தை தீரனை டைரக்டராக வைத்து ஜெய்க்குமாரின் இரண்டாவது மகனை கதாநாயகனாய் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் போய் கொண்டிருந்தன. சினிமாவில் வாரிசு அறிமுகம் என்பது சகஜம்தானே! பெரியவனோ, கேஸை இவர்கள் வாபஸ் வாங்குவதை அனுமதிக்காமல் செய்த தப்புக்குத் தண்டனையாய் இன்னும் ஜெயிலில் தான் இருக்கிறான். சில வருடங்களில் வெளி வந்துவிடுவான் அவனும். மிஸ்டர் ஜெய்க்குமாரோ, கால் இரண்டும் நசுங்கிப் போயிருக்க, படுத்தப் படுக்கையாய் கிடந்தார். அப்படி இருந்தும் உதவிக்கு இருந்த நர்ஸ் மேல் கை வைத்து, அடி இடியாய் வாங்கியது எல்லாம் வேற லெவல்!    

 

 

தீரன் இப்பொழுது தனி வீடு எடுத்துத் தங்கிக் கொண்டாலும், இந்த வீட்டில் அவனுக்கென்று தனியறை ஒன்று நிரந்தரமாக இருந்தது. நினைத்தப் பொழுது இங்கே வந்து இவர்களோடு அளவளாவி தங்கிவிட்டுப் போவான். ஜீவிகா பிறந்தப் போது, இவன் மருதமலைக்குப் போய் மொட்டைப் போட்டுக் கொண்டு வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

பேத்தியுடன் ஜீவானந்தம் போராடிக் கொண்டிருக்க, வீட்டின் உள்ளே நுழைந்தான் தீரன்.

 

“எங்க சார் நம்ம வீட்டு லவ் பேர்ட்ஸ்? இன்னும் கிளம்பலையா?”

 

“தீர்மா(தீர் மாமா), லவ், லவ், லவ்” என அவன் சொன்ன வாக்கியத்தில் இருந்த லவ்வை மட்டும் பிடித்துக் கொண்டாள் ஜீவிகா.

 

“சின்னப் புள்ளை முன்னுக்கு என்ன பேசறது, ஏது பேசறதுன்னு ஒரு விவஸ்த்தை வேணா! அவங்க கிளிப்பிள்ளைங்கன்னு உனக்குத் தெரியாது? நாம பேசறத அப்படியே பிடிச்சிக்கிட்டு, திரும்ப சொல்லுவாங்கன்னு தெரியாது? நீயெல்லாம் நூறு நாள் ஓடுன படம் குடுத்த டைரக்டருன்னு வெளிய சொல்லிடாதே!” என மெல்லியக் குரலில் திட்ட ஆரம்பித்தார் ஜீவானந்தம்.

 

 

‘ஐயயோ மிலிட்ரி ஆரம்பிச்சிட்டாரே! தெரியாம வாயைக் குடுத்து, பேக்சைட புண்ணாக்கிக்கற திறமை எல்லாம் என் ஒருத்தனுக்கு மட்டும் அள்ளிக் குடுத்துட்டாரு போல கடவுள்! சீனப் போட்டு தப்பிச்சிருடா தீரா!’

 

கால் வராத போனை காதுக்குக் கொடுத்து,

 

“ஹலோ. எஸ் டைரக்டர் தீரன் ஸ்பீக்கிங்! எதே! லியானார்டோ கப்புச்சினோ டைட்டானிக் பார்ட் 2 எடுக்க என்னோட கால் ஷீட் கேட்டாரா? நோ மேன் நோ! உடல் அலியா பாட்டுக்கு, உயிர் என் தாய் நாட்டுக்கு! இந்த நாட்ட விட்டு படம் எடுக்கறதுக்கு கூட வெளிநாடு போக மாட்டான் தீரன்” என பேசிக் கொண்டே நழுவி விட்டான் அவன்.

 

“கப்புச்சினோக்கும் காப்ரியோவுக்கும் வித்தியாசம் தெரியல, இவன ஹாலிவூட்ல கூப்டறாங்களாம்! ஃப்ராடு பையன்!” என முனகியபடியே பேத்தியை கவனித்தார் ஜீவானந்தம்.

 

ரூமில் ஜீவாவோடு போராடிக் கொண்டிருந்தான் ஜோனா.

 

“இன்னைக்காச்சும் எனக்கு பாடிகார்ட்டா இல்லாம என் ஜோடிகார்ட்டா வரக்கூடாதா மூலான்?”

 

“வீட்டுல மட்டும்தான் நான் உனக்கு ஜோடி ஜோனா! வெளிய போய்ட்டா இந்த ஜீவா என்னைக்குமே உன்னைப் பாதுகாக்கும் பாடிகார்ட் தான்! புரிஞ்சுக்கோயேன்! உன் கூட வெளிய வந்துட்டாலே எனக்கு லவ் செல் எல்லாம் வேலை நிறுத்தம் செஞ்சிடும் ஜோனா! எந்த நேரத்துல என்ன ஆபத்து வருமோ உனக்குன்னு என் ஃபுல் கவனமும் உன்னைக் காக்கறதுலத்தான் இருக்கும்”

 

இத்தனை வருடங்களில் ஜீவாவை நன்கு அறிந்து வைத்திருந்தவனுக்கு இதுதான் அவளின் பதிலாக இருக்கும் என நன்கு புரிந்துதான் இருந்தது. அவளது ஜோனா பக்தி நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர, துளி கூட குறையவேயில்லை! தங்களது தேவதையைப் பிரசவிக்கும் வரை இவனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவள், அதன் பிறகு மீண்டும் தனது பணிகளை ஆரம்பித்து விட்டாள். குழந்தையைக் கவனிப்பது, செக்கியூரிட்டி ஆபிசை கவனிப்பது, ஜோனா வெளியே போகும் போது அவனுக்கு பாதுகாப்பாய் போவது என அவள் நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது.

 

ஜோனாவும் தன் ஜீவாவை சுதந்திரமாகப் பறக்க விட்டான். பறந்து திரியும் பறவை பொழுது சாய்ந்ததும் தன் கூட்டை அடைந்து விடுவதைப் போல, அவளும் அந்தி சாய்ந்தால் தன் ஜோனா, தன் ஜீவி, தன் அப்பா, தன் வீடு என தன் கூட்டில் அடைந்துக் கொள்வாள். இரவு உணவை முடித்ததும் காதல் பறவைகள் இரண்டும் தங்கள் குட்டிப் பறவையோடு ஐக்கியமாகி விடுவார்கள். ஜோனாவின் பச்சை நிற கண்களோடு, அவன் மேனி நிறத்தையும் கொண்டிருந்த ஜீவிகாவுக்கு முக ஜாடை மட்டும் அச்சு அசல் ஜீவாவைப் போல இருந்தது.  

 

குட்டி ஜீவா என இவன் கொஞ்சினால், குட்டி ஜோனா என அவள் கொஞ்சுவாள்.

 

“ல்ல! நான் குட்டி ஜீவி” என மகள் இவர்கள் இருவருக்குமே பெரிய பல்பு கொடுப்பாள்.

 

தூங்கும் போது காலை எடுத்து வாயில் வைத்துக் கொள்வாள் குட்டி! ஜீவா அவளை நேராய் படுக்க வைத்து விட்டு,

 

“எங்க ஊர்ல, முதல் குழந்தை வாயில தன்னோட கால வச்சிக் கடிச்சாலோ சப்புனாலோ என்ன சொல்வோம் தெரியுமா ஜோனா?” என கேப்பாள்.

 

“ஹைஜீனிக் இல்லைன்னு சொல்வீங்களா மூலான்”

 

“இல்லைல! குழந்தையோட அம்மாவும் அப்பாவும் ஹைஜீனிக்க கை விடனும்னு சொல்வோம்”

 

“என்னடி சொல்லற? எனக்கு ஒன்னும் புரியல” என்பான் அவன்.

 

“நாம லிப் கிஸ் அடிக்கறப்போ 80 மில்லியன் பாக்டீரியா ஒருத்தங்க கிட்ட இருந்து இன்னொருத்தங்களுக்கு ட்ரான்ஸ்பர் ஆகுதாம்”

 

“ஓஹோ! அப்புறம்?” என புன்னகையுடன் கேட்பான் ஜோனா.

 

“அதத்தான் பெரியவங்க சொல்றாங்க, கூட விளையாட யாரும் இல்லாமத்தான் பிள்ளைங்க தன் காலை வாயில வச்சிக்கிட்டு விளையாடுதுங்க! இந்த அன்ஹைஜீனிக் பழக்கம் போகனும்னா, பெத்தவங்க சுத்தபத்தத்த கை விட்டுட்டு, 80 மில்லியன் பாக்டீரியாவ பகிர்ந்துக்கறது மட்டுமில்லாம, ஸ்வெட்டிங்கையும், இன்னும் சில பல ஊட்டச்சத்துகளையும் பகிர்ந்துக் கொண்டு இன்னொரு புள்ளைய அவங்களுக்கு விளையாட்டுத் தோழனா பெத்துக் குடுக்கனும்னு”

 

அவளது கில்லாடித்தனத்தில் வாய் விட்டு சிரிப்பான் ஜோனா.

  

“அடியே மை கியூட் என்சைக்ளோப்பீடியா! நீ எவ்ளோ சைன்டிபிக்கா பேசனாலும் ஜீவிக்கு மூனு வயசானாதான் ரெண்டாவது ஜீவனுக்கு அனுமதி. சீசர்னால டாக்டர் மூனு வருஷ கேப் விட சொல்லிருக்காங்க! சோ டோண்ட் ப்ளே ட்ரீக்ஸ் மூலான்” என சொல்லி காதல் கணவனாய் சுத்தபத்தத்தைக் கைவிட்டாலும், அதற்கான தகுந்த பாதுகாப்பும் செய்து கொள்வான் பாடகன்.

 

  

கருப்பு வர்ண கோர்ட்டில் ஆணழகனாய் கிளம்பி நின்றிருந்தவனின் அருகே வந்து கட்டிக் கொண்டாள் ஜீவா.

 

“பாடு ஜோனா”

 

“என் மூலானுக்கு என்ன பாட்டு வேணும்?”

 

“நைட்ல என் காதுல பாடுவியே, அதைப் பாடு”

 

“அந்த பாட்டு பெட்ல படுத்தாத்தான் பாட வரும்டி! இப்போ போய் படுத்துக்கலாமா?”

 

“கோர்ட் கசங்கிடும் ஜோனா”

 

“நீ தந்தால் கசங்கலும் காவியம் ஆகுமடி என் கண்மணி”

 

“இங்கிலீசுல அழகா பாடிட்டு இருந்தவன, படம் நடிக்க கொண்டு வந்து இப்படி மொக்க வசனம் பேச வச்சிட்டாங்களே!” என சலித்துக் கொண்டவளை கட்டிலுக்குத் தள்ளிக் கொண்டுப் போனான் ஜோனா. தன் நெஞ்சத்தில் அவளை மஞ்சம் கொள்ள வைத்தவன்,

 

“சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ

இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்

மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ

இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்” என அவன் பாடி முடிக்க, நீண்ட நேரம் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது அங்கே.

 

கட்டிக் கொள்வதும் உடல் முட்டிக் கொள்வதும், மண வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அருகிப் போய்விடுமல்லவா! அந்த இடைவெளியில் அங்கு காதலை இட்டு நிரப்புவது எது? கைப்பிடித்து அமைதியாய் அமர்ந்து மூச்சு விடும் சத்தத்தை ரசிப்பது, பேச்சில்லாமல் அமைதியாய் தேநீர் அருந்துவது, பிள்ளைகள் கத்தி விளையாடும் போது அவர்கள் குறும்பை ரசித்து ஒருவருக்கொருவர் பார்வை பரிமாற்றம் செய்து கொள்வது என அழகான நொடிகள் கொட்டிக் கிடக்கும் நம் வாழ்க்கையில். ஆனால் அதை உணரத்தான் முடியாது நம்மால். ஏனென்றால் நாம் காதல் வார்த்தைகளை எதிர்ப்பார்த்து, செயலால் காட்டப்படும் காதல் உணர்வுகளை கடந்துப் போய்விடுகிறோம். தினம் சொல்லப்படாத ஐ லவ் யூவில் கூட உயிர் காதல் கொட்டித்தான் கிடக்கிறது!

 

சென்னையின் மிக பிரமாண்டமான ஹோட்டலில் ஏற்பாடாகியிருந்தது அந்த விருது வழங்கும் விழா. ஜீவா மற்றும் அவளுடைய பாடிகார்ட் புடை சூழ உள்ளே வந்தான் ஜோனா. அவன் நடித்து வெளி வந்த படம் ‘காதல்காரா’ தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சக்கைப் போடுப் போட்டிருந்தது.

 

உள்ளே நுழைந்தவனைப் பார்த்து,

 

“ஜோனா, காதல்காரா, ஜோனா, ஜோனா, காதல்காரா” என ஒரே கூச்சல்.

 

சிரிப்புடன் அழகாய் கையசைத்தவன், மிடுக்காய் வணக்கம் வைத்தவாறே அரங்கத்துக்குள் நுழைந்தான். திமு திமுவென பத்திரிக்கை நண்பர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள் அவனை! ஜீவாவும் பாடிகார்ட்களும் அவர்களை தள்ளி நிறுத்தி, அதன் பிறகே கேள்விக் கேட்க அனுமதித்தனர்.

 

அவன் நடித்தப் படத்தைப் பற்றி, அதன் கதாநாயகியைப் பற்றி, அவன் இருக்கும் இசைத்துறையைப் பற்றி என பல கேள்விகள் முடித்து அவனின் பர்சனலில் வந்து நின்றது பேட்டி.

“ஜோனா சார்! உங்களுக்கு ரகசியமா கல்யாணம் ஆகிட்டதாகவும், ஒரு குழந்தை கூட இருக்குன்னும் வதந்தி உலவுதே! அது உண்மையா?” என ஒரு நிருபர் கேட்க, கண்கள் அங்கே இங்கே சுழல ஜோனாவுக்கு எங்கிருந்தாவது ஆபத்து வருகிறாதா என ஆராய்ந்துக் கொண்டிருந்த ஜீவாவின் மேல் இவன் பார்வை நிலைத்தது. அவளது பரிதவிப்பைக் கண்டு கண்கள் அப்படியே மிருதுவாகிப் போனது இவனுக்கு.

 

“இன்னிக்கு ஸ்டேஜ்ல தெரிஞ்சுக்குவீங்க” என புன்னகையோடு சொல்லியபடி நடந்துவிட்டான் அவன்.  

 

நிகழ்ச்சி ஆரம்பமாகி ஆடல் பாடல் என களைக்கட்டியது. ஆணும் பெண்ணுமாய் இரு அறிவிப்பாளர்களும் கலகலவென நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள். மேடைக்கு வந்த கலைஞர்களைப் பாட சொல்லி, வசனம் பேச சொல்லி என கலாட்டா செய்தனர் அறிவிப்பாளர்கள்.  ‘காதல்காரா’ படம் மீயூசிக், சினிமோட்டகிராபி, எடிட்டிங், பெஸ்ட் டைரக்டர் என பல கேட்டகரியில் விருதுகளை அள்ளியது.

 

பெஸ்ட் டைரக்டர் விருது வாங்க மேடையேறிய தீரன் கண் கலங்கிவிட்டான்.

 

“எத்தனையோ பேருக்கு நன்றி சொல்லனும் நான்! ஆனா இந்த நன்றி சொல்லற லெவலுக்கு என்னை உயர்த்தி விட்ட ஜோனாவுக்குத்தான் என் முழுமுதற் நன்றி. ஜோனா என்னை நம்பி வாய்ப்பு குடுக்கலைனா, இந்த தீரன் இன்னும் செட்ல டீ குடுத்துட்டுத்தான் இருந்துருப்பான். தேங்க்ஸ் ஜோனா!” எனும் அவன் பேச்சுக்கு கரகோஷம் அடங்க நேரமானது.

“பெஸ்ட் ப்ளேபேக் சிங்கர்- மேல்(male) அண்ட் ப்ரோமிசிங் ஸ்டார் ஆப் தி இயர் அவார்ட் கோஸ் டூ, ஜெங் ஜெங் ஜெங் ஜெங்!!!! அலெக்‌சாண்டர் ஜோனா” என அறிவிப்பு வர கரகோஷம் வானைப் பிளந்தது. ஜோனா அமர்ந்திருந்த வரிசையின் ஓரத்தில் நின்றிருந்த ஜீவாவுக்கு கண்கள் தன்னையும் மீறி கலங்கியது. ஸ்டைலாக எழுந்த ஜோனாவை தீரன் அணைத்துக் கொண்டான். இவன் பார்வையோ தன்னவளின் பார்வையை கௌவி நின்றது. அவள் கலங்கிய கண்களும் சிரித்த முகமுமாக தம்ப்ஸ் அப் காட்டினாள்.

 

அங்கங்கே சிலர் அணைத்து விடுவிக்க, மெல்ல நடந்து மேடை ஏறினான் ஜோனா! பிரபல வெட்டரன் டைரக்டர் ஒருவர் கையால் விருதை வாங்கிக் கொண்டவனை மேடையில் பிடித்து வைத்துக் கொண்டனர் அறிவிப்பாளர்கள்.

 

“காங்ராட்ஸ் ஜோனா! அப்படியே கெளம்பிட்டா எப்படி? உங்கள பார்த்து ரசிக்க, உங்க குரல கேட்டு ரசிக்க என்னை மாதிரி எத்தனை ரசிகைகள் காத்துட்டு இருக்காங்க தெரியுமா? ஆமாவா இல்லையா கேர்ல்ஸ்?” என கேட்க அரங்கமே,

 

“ஆமா ஆமா! வீ லவ் ஜோனா!” என அதிர்ந்தது.

 

புன்னகையோடு அனைவருக்கும் கை அசைத்தவன், மேடையின் பக்கவாட்டில் பார்த்து சமிக்ஞை செய்தான். அங்கிருந்து ஒருவன் உயரமான நாற்காலி ஒன்றையும், கிட்டாரையும் எடுத்து வந்து ஜோனாவிடம் கொடுத்தான். அதோடு அவன் முன்னே ஒரு மைக் செட் செய்யப்பட்டது. ஒரு காலை தரையில் ஊன்றி நாற்காலியில் அமர்ந்தவன், புன்னகையுடன் கிட்டாரை டியூன் செய்ய ஆரம்பித்தான். அதற்கே கைத்தட்டல் காதைப் பிளந்தது.

 

“திஸ் சாங் இஸ் டெடிகேட்டேட் டூ மை பியூட்டிபுள் ஏஞ்சல், மை வைப் ஜீவா! திசை தெரியாம தத்தளிச்சிட்டிருந்த என் வாழ்க்கையில் துடுப்பாய் வந்து என்னைக் கரை சேர்த்த என் மனைவி, என் பாடிகார்ட், என் மகளின் அம்மா ஜீவாவுக்கு சமர்ப்பணம் இந்தப் பாடல்!”

 

பாடிகார்ட் எனும் அவன் வார்த்தையில் ஸ்பாட்லைட் ஜீவாவின் மேல் போய் விழுந்தது. இவனும் மேடையில் இருந்து அவளைப் பார்த்து பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்து,

 

“டார்லிங்! திஸ் இஸ் ஃபோர் யூ” என ஆரம்பித்தான்.

 

வீட்டில் இருந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவானந்ததுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. ஜீவிகாவோ அம்மா, அம்மா என ஒரே ஆட்டம்.

 

 

ஜோனா எழுதி ஜீவா தமிழில் மொழிப் பெயர்த்திருந்த இப்பாடல், ஏற்கனவே ‘காதல்காரா’ படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டியெல்லாம் சக்கைப் போடு போட்டிருந்தது.

 

“கண்டேன் ஆயிரம் வானவில்லை

கண்மணி உன்னிரு விழிகளிலே

தந்தேன் என்னையும் மொத்தமுமாய்

பூவை உந்தன் பிடியினிலே

ஆயிரம் என ஆண்டானாலும்

எனையாளும் ஆண்டாள் நீயல்லவோ

 

காதல் ரதியே கண்மணியே

உன்னை காணத்தான்

கடல் கடந்து வந்தேனே

பித்தனும் நானானேன் உன்னாலே

சித்தனும் நானானேன் தன்னாலே

வா வா என் உயிரிசையே

வா வா என் முத்தமிழே

வா வா என் பைங்கிளியே

 

 

கண்டேன் ஆயிரம் வானவில்லை

கண்மணி உன்னிரு விழிகளிலே

தந்தேன் என்னையும் மொத்தமுமாய்

பூவை உந்தன் பிடியினிலே

ஆயிரம் என ஆண்டானாலும்

எனையாளும் ஆண்டாள் நீயல்லவோ

 

கட்டிலில் சரசம் புரிய

கன்னிகைகள் பலர் உண்டு

என் மனதின் வலி களைய

உனைப் போல் ஒருத்தி உண்டோ

மடிதாங்கி தாலேலோ பாடிய தாயே

கண்டிப்பாய் வழி நடத்திய தந்தையும் நீயே

வா வா என் உயிரிசையே

வா வா என் முத்தமிழே

வா வா என் பைங்கிளியே

 

கண்டேன் ஆயிரம் வானவில்லை

கண்மணி உன்னிரு விழிகளிலே

தந்தேன் என்னையும் மொத்தமுமாய்

பூவை உந்தன் பிடியினிலே

ஆயிரம் என ஆண்டானாலும்

எனையாளும் ஆண்டாள் நீயல்லவோ

ஓஓஓஓஓஓ என் ஜீவநாதமே நீ ஜீவா!!!!!!!!!”

 

என பாடிக் கொண்டே கீழே இறங்கி தன் மனைவியின் அருகே போய் அவளைக் கட்டிக் கொண்டான் ஜோனா.

 

ஜீவாவும் கண்ணில் கண்ணீருடன் தன்னவனின் அணைப்பில் அடங்கி நின்றாள். பாடிகார்டாய் நின்றவளை, பாருங்கள் இவள்தான் என் ஜோடிகார்ட் என உலகுக்கே அறிமுகம் செய்து வைத்தான் ஜோனா!

 

வாழட்டும் வளத்துடன், நல்ல நலத்துடன்!

 

 

முதன் முதலாய் மயங்குகிறேன்

கண்ணாடி போல தோன்றினாய்

என் முன்பு என்னைக் காட்டினாய்

கனா எங்கும் வினா!!!!!!!

 

(முற்றும்)

 

(இதுதான் பாடலோட ஒரிஜினல் வரிகள். எழுதிக் கொடுத்த கவிஞர் அபர்ணாவுக்கு எனது அன்பும் நன்றியும். இந்த அழகிய கவிதையத்தான் நான் பாடலைப் போல பட்டி டிக்கரிங் செஞ்சிருக்கேன். ஆல் க்ரேடிட் கோஸ் டூ ஹேர்)

 

 

கண்டேன் ஆயிரம் வானவில்லை

கண்மணி உன்னிரு விழிகளிலே

தந்தேன் என்னையும் மொத்தமுமாய்

பூவை உந்தன் அடியினிலே

 

ஆயிரம் என ஆண்டானாலும்

என்னை ஆளும் ஆண்டாள் நீயல்லவோ

காதல் ரதியே கண்மணியே

நல்முத்தே உன்னை காணத்தான்

கடல் கடந்து வந்தேனே

 

பித்தனும் நான் ஆனேன் உன்னாலே

சித்தனுமாகி உன்னை தொழுதேனே

வா வா என் உயிரிசையே

வா வா என் முத்தமிழே

முத்த மழை பொழிந்தே

என் தரிசான வாழ்வை உயிர்விக்க வந்தாய் என் ஆருயிரே

 

அன்புக்கொரு அரிச்சுவடியாய்

என்னை ஆலிங்கனம் செய்த நல்லுயிரே

இனியவளே என்னை ஈர்ப்பவளே

என்னுயிரே என் ஜீவநாதமே

 

கட்டில் சரசம் புரிய

கன்னிகைகள் பலர் உண்டு உலகில்

என் மனதின் வலி களைய

உன்னைப் போல் ஒருத்தி உண்டோ

மடிதாங்கி தாலேலோ பாடிய

தாயும் நீதானே

கண்டிப்புடன் வழி நடத்திய என் தந்தையும் நீதானே

என் பிறப்பை உயிர்ப்பிக்க வந்த

என் கண்மணியும் நீதானே

 

நீயே எந்தன் சகலுமுமாய்

நீயே எந்தன் உலகமுமாய்

 

காதலி என் கண்மணி

என் கட்டிக்கரும்பே

ஜோனாவின் ஜோடி கிளியே

வாந்தாயே வாழ்வை வசந்தமாக்க

 

நீ என் வரமாய் வந்த தேவதை

என்றும் உள்ளும் புறமும்

அன்பினால் மிளிரும் என் அழகு தேவதை

 

 

(போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்தக் கதை வழியா என்னோடு பயணித்த அனைவருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ். மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்! அது வரை அன்புடன் விடை பெறுவது வநிஷா! லவ் யூ ஆல் டியர்ஸ்)