122620776_740997409820929_9109553537495410146_n-36bc2eab

அத்தியாயம் 4

“ஒரு மாசம் இருப்பியா?”

“ஐ டோண்ட் நோ”

“அப்போ உனக்கும் வேணா எனக்கும் வேணா, மூனு வாரம்?”

“தெரியல”

“ரெண்டு வாரம்?”

“ம்ப்ச்”

“போடாங்! ஒரு வாரம், ஏழு நாளு, 168 மணி நேரம், 10080 மினிட்ஸ், 604800 செகண்ட்ஸாச்சும் என்னோட இருப்பியா? அதுக்கு மேல ஒரு நானோசெகண்ட் கூட நீ இருக்க வேணா! ப்ளீஸ், ப்ளீஸ்! ப்ளிஸ் சொல்லேன் ஜோனா! நீ கெளம்பறதுக்கு என்னை நான் தயார்படுத்திக்கனும்ல!”

வீட்டின் வெளியே பெரிய மரம் ஒன்று இருக்க, அதில் கட்டி இருந்த ஊஞ்சலில் வேகமாய் ஆடிக் கொண்டே இவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் ஜீவா.

இவனோ அந்த குட்டி வீட்டின் தாழ்வாரத்தில் சூரிய ஒளி ஊடுருவி வர, டீஷர்டைக் கழட்டி வைத்து விட்டு மல்லாக்கப் படுத்து சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் நாட்டவர்களுக்கு சன்டேன்(suntan) ஆவது நம்மூர் மக்கள் அல்வாவை சுவைப்பது போல மிக விருப்பமான விஷயமாகும். வெளேரென இருக்கும் உடலை சூரிய ஒளியில் தீய வைத்து(காய வைத்து என சொல்ல வேண்டுமோ!) ப்ரௌன் நிறமாக மாற்றிக் கொள்வது அவர்கள் வழக்கம். அவர்கள் நம் வண்ணத்துக்கு வர விரும்ப, நாம் அவர்கள் வண்ணத்துக்குப் போக விரும்புகிறோம். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை! அக்கரை கவ்வுக்கு(மாடு) இக்கரை கிரீனு(கிரீன்)!

ஜோனா இங்கே வந்து முழுதாக இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. ஜீவா அவனைக் கடத்தி வந்திருந்த இடம் பாண்டிச்சேரியில், ஒரு கடற்கரையை ஒட்டி இருந்தது. ஒற்றை அறை, குட்டி ஹால், சமயலறை, பாத்ரூம் என சின்ன காட்டேஜ் வகை வீடு அது. அக்கம் பக்கம் வேறு வீடுகள் எதுவும் இல்லாமல் தன்னந்தனியாக நின்றிருந்தது.

ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலில் இருந்து படக்கென குதித்தவள், அவன் அருகே வந்து குத்துக்காலிட்டு அமர்ந்தாள்.

கண் மூடி படுத்திருந்தவனைப் பார்த்து,

“ஜோனா!” என அழைத்தாள்.

“ஹ்ம்ம்”

“என் கேள்விக்கு பதில் சொல்லு!”

“ஹ்ம்ம்”

என்ன வெறும் ஹ்ம்ம் மட்டும் வருகிறது என உற்றுப் பார்க்க, சுவாசம் சீராய் வந்துக் கொண்டிருந்தது அவனுக்கு.

“தூங்கிட்டானா? கடத்திக் கொண்டு வந்து வச்சிருக்கேனேன்னு ஒரு பயம் இருக்கா! என்னமோ வேகேஷன் வந்த மாதிரி ரிலேக்‌ஷா இருக்கான்” என முனகியவாறே, எழுந்ததும் அவனுக்கு சாப்பிட கொடுக்க எதாவது செய்யலாம் என வீட்டின் உள்ளே நுழைந்தாள் ஜீவா.

அவள் உள்ளே நுழைந்ததும் புன்னகைத்துக் கொண்டவன், பின்னால் திரும்பி முதுகில் சூரிய ஒளி படுமாறு படுத்துக் கொண்டான். இன்சொம்னியாவால் பாதிக்கப்பட்டிருந்தவனுக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது கைக்குக் கிட்டாத வரமாய் இருந்தது. தன் வீட்டில் தூக்கம் வருவதற்காகவென ஸ்பெஷலாக டிசைன் செய்த மெத்தையில் படுத்தால் கூட கிட்டே வராத தூக்கம், இங்கே கட்டாந்தரையில் அவனைக் கட்டித் தழுவியது.

அன்று மயங்கிக் கிடந்தவளை பாத்ரூமில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து எழுப்பி அமர்த்துவதற்குள் திண்டாடி விட்டான் ஜோனா. மயக்கத்தில் இருந்து விழித்தவள் டெம்ப்ரவரி அம்னீசியா வந்தது போல, வேறு பேச்சுக்குத் தாவி இருந்தாள்.

“நீ இன்னும் ஒன்னுமே சாப்பிடல ஜோனா! எப்போ எழுவன்னு நானும் காத்துக்கிட்டே இருந்தேன். தோ உன்னோட திங்ஸ்லாம் அங்க வச்சிருக்கேன். போய் ப்ரேஷ் ஆகிட்டு வா! சாப்பாடு செஞ்சு வைக்கிறேன்” என பாத்ரூம் கதவைக் காட்டியவள், முகத்தில் அவன் தெளித்திருந்த தண்ணீரை டீஷெர்டைத் தூக்கித் துடைத்தப்படியே ரூமில் இருந்து விடுவிடுவென வெளியேறிவிட்டாள்.

எக்ஸர்சைஸ் செய்து முறுக்கேறி இருந்த வயிற்று தசைகளை, அவள் டீஷர்டைத் தூக்கிய சில விநாடி கேப்பில் தரிசித்த ஜோனாவுக்கு மெல்லிய விசில் வந்தது.

“நைஸ் ஏப்ஸ்(abs)” என முணுமுணுத்தப்படியே குளிக்க சென்றான்.

குளித்து விட்டு பசி காதடைக்க வந்தவனை வரவேற்றது கமகமவென்ற சாப்பாட்டு வாசனை. வட்டமான குட்டி டைனிங் டேபிளில் வீற்றிருந்தது உணவு வகைகள்.

“எனக்கு சிம்பிளாத்தான் சமைக்கத் தெரியும் ஜோனா! அது கூட இந்த பீச் ஹவுச வாங்கனதுக்கு அப்புறம் தான் கத்துக்கிட்டேன். தனிமையா இருக்கனும்னா லீவ் போட்டுட்டு ஒரு வாரம் இங்க வந்துடுவேன்! போனை அடைச்சுப் போட்டுட்டு சுதந்திரமா நான் நானா இருப்பேன்” என பேசியபடியே அவனுக்கு தட்டை வைத்துப் பரிமாறினாள்.

முட்டையில் பட்டைத்தூள், உப்பு, பால் எல்லாவற்றையும் நன்றாக கலந்தடித்து, ரொட்டி துண்டுகளை அதில் நனைத்து வாட்டி ப்ரேஞ் டோஸ்ட் செய்திருந்தாள். வாட்டிய ரொட்டியின் மேல் தேனையும், பட்டரையும் தடவி இருந்தாள். அந்த இடமே கலவையான வாசனைகளில் நிறைந்திருந்தது. திராட்சை, பச்சை மற்றும் சிவப்பு ஆப்பிளையும் சின்னதாக நறுக்கி, மயோனிஸ் சேர்த்து சாலட் செய்திருந்தாள். குடிக்க ஏர்ள் கிரே டீ சுட சுட ஜக்கில் ஊற்றி வைத்திருந்தாள்.

“ஐம் ஸ்டார்விங்!” என்றபடியே வந்து அமர்ந்தான் ஜோனா.

தாம் எதற்கு கடத்தப்பட்டிருக்கிறோம் என அறிந்துக் கொள்ளக் கூட அவனுக்கு அவகாசம் வழங்கியிருக்கவில்லை ஜீவா. சண்டை, மயக்க நாடகம் என போயிருக்க, இப்பொழுது பசியில் காந்திய வயிற்றை முதலில் கவனிப்போம் என முடிவெடுத்திருந்தான் ஜோனா.

உணவை அவசர அவசரமாக வாயில் வைக்கப் போனவன், சற்று நிதானித்து பக்கத்தில் நின்றிருந்தவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான். திகைத்துப் போய் ஆட்சேபிக்க வாய் திறந்தவளுக்கு பேச வாய்ப்பளிக்காமல் ரொட்டியை ஊட்டி விட ஆரம்பித்தான்.

“விடு ஜோனா! என்ன செய்யற நீ!” என மறுக்க மறுக்க வாயில் ரொட்டித் துண்டுகளை திணித்தான்.

“எங்க ஊருல எல்லாம் ஹோஸ்ட் சாப்பிட்ட பிறகுதான் கெஸ்ட் சாப்பிடுவோம்! அது தான் மரியாதை” என்றவன் ஒரு கரண்டி சேலட்டையும் எடுத்து அவள் வாயில் திணித்தான்.

மடியில் இருத்தி, அவள் நகராமல் இருக்க வயிற்றை சுற்றி ஒரு கையால் அவன் வளைத்துப் பிடித்திருக்க, இவள் நெளிய ஆரம்பித்தாள்.

அவன் கையைப் பிரித்தெடுத்துக் கொண்டு எழுந்தவள், ஜோனாவை முறைத்துப் பார்த்தாள்.

“இப்ப என்ன? இந்த சாப்பாட்டுல நான் எதாச்சும் கலந்துருக்கனானு டெஸ்ட் பண்ணறியா?” என கோபமாக கேட்டவள், மேசையில் அடுக்கி இருந்த எல்லா ரொட்டிகளைளைம் பாதி பாதி கடித்து விழுங்கி விட்டு மீதியை அவன் தட்டில் போட்டாள்.

“ஹேப்பியா? சாப்புடு!” என்றவள், டீயை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள்.

அவள் கடித்து வைத்தது எனவெல்லாம் நாசுக்கு பார்க்க அவன் பசி அனுமதிக்கவில்லை. தட்டில் அவள் வைத்த எல்லாவற்றையும் முடித்து விட்டுத்தான் நிமிர்ந்துப் பார்த்தான். அவள் பாதி குடித்திருந்த டீயைப் பிடிங்கி குடித்தவனுக்கு அதன் பிறகு தான் பேசுவதற்கு கூட தெம்பு வந்தது.

“தேங்க்ஸ் மூலான்” என்றவனை முறைத்தாள் ஜீவா.

“என்ன, என்ன முறைப்பு? நீ பார்த்து வச்ச வேலைக்கு, உன்னை அப்படியே நம்பிடுவாங்களா? என்னை இங்கயே இருக்க வைக்க, நான் சுயநினைவ இழக்கற மாதிரி எதையாச்சும் சாப்பாட்டுல கலந்துருக்க மாட்டேன்னு எப்படி நம்பறது?” என கடுமையாக கேட்டான் ஜோனா!

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள், எழுந்து ஹாலுக்குப் போனாள். அங்கே ஹால், கிச்சன், எல்லாம் திறந்தவெளி கான்சேப்ட் தான். பதில் சொல்லாமல் செல்லும் அவளையே கோபமாகப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் ஜோனா. திரும்பி அவனிடம் வந்தவள், மொத்தமான ஆல்பம் ஒன்றை அவன் கையில் திணித்தாள்.

“என்ன?”

“பாரேன்!” என்றவளின் கண்களை ஆழ்ந்துப் பார்த்தான் ஜோனா. அந்த பெரிய கண்கள் அவனை என்னவோ செய்வது போல இருந்தன.

“என்னைப் பார்க்க சொல்லல! ஆல்பத்தப் பாரு”

பார்வையை விலக்கிக் கொண்டவன், ஆல்பத்தைத் திறந்துப் பார்த்தான். முன் பக்கத்தில் அலேக்‌சாண்டர் ஜோனா என எழுதி அவனின் பிறந்த தேதியையும் அழகான கெர்சிவ் ரைட்டிங்கில் எழுதி இருந்தாள். ஒவ்வொரு பக்கமாக திறந்துப் பார்த்தவனுக்கு உதட்டில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது. அவன் எஸ்டிடியே அதாங்க வரலாறே அந்த ஆல்பத்தில் இருந்தது. சிறு வயது படங்கள் முதல் லேட்டஸ்ட் படங்கள் வரை, அவனைப் பற்றிய குறிப்புகள், அவன் பாடிய முதல் பாடலில் இருந்து போன வருடம் பாடிய பாடலின் லிரிக்ஸ் வரை, அவன் வண்டவாளங்களை தண்டவாளமேற்றிய மீடியாவின் கோசிப்ஸ் வரை நிறைய சேகரித்து வைத்திருந்தாள்.

“இது ஒன்னுதான் இங்க இருக்கு! மத்த ஆல்பம்லாம் வீட்டுல இருக்கு. உன்னோட ஃபுல் கலேக்‌ஷன் ஆப் சீடிஸ் வச்சிருக்கேன். எப்போ உன் ஆல்பம் வந்தாலும் லீகலா காசு கட்டித்தான் பாட்டு டவுன்லோட் செய்வேன்! உன்னோட ப்ராண்ட்ல வெளிய வர டீஷர்ட்ஸ்ல இருந்து காபி மக் வரை வாங்கி வச்சிருக்கேன்! உன்னோட மிக பெரிய ரசிகை நான்”

ஆல்பத்தை முழுதாய் பார்த்து முடித்தவன், நிமிர்ந்து அவள் கண்களை ஊடுருவினான். விழியின் அமைப்பும் புருவமும் ஜெய்க்குமாரைப் போல இருந்தாலும், அவன் கண்ணின் மணிகள் இரண்டும் சூசனைப் போல லைட் கிரீன் கலரில் இருக்கும். பச்சை நிறம் காயங்களை ஆற்றிட உதவுமாம், உணர்ச்சி வசப்படும்போது ஆறுதல் அளித்து அமைதி நிலவ செய்யுமாம். அவனின் ஊடுறுவும் பார்வையோ இவள் வாயில் இருந்து எல்லா உண்மைகளையும் கடகடவென வரவழைத்தது.

“நான் உன்னை கடத்திட்டு வரனும்னுலாம் ப்ளான் பண்ணல! என் வாழ்க்கையில மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய காலகட்டத்துல நான் இருக்கேன்! அதுக்கு முன்ன, ஜஸ்ட் ஓன் டே, ஒரே ஒரு நாள் உன் கூட டைம் ஸ்பேண்ட் பண்ணனும்னு நெனைச்சேன். என்னை நம்பு ஜோனா!”

எந்த பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான். அவன் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் தலை குனிந்தவள், மீண்டும் நிமிர்ந்து அவன் பார்வையை தயங்காமல் எதிர்கொண்டாள். பெண்ணாய் தடுமாறி தலை குனிந்தவள், ஆணாய் தலை நிமிர்த்தி எதிர் பார்வைப் பார்த்தாள். ஆண் பாதி பெண் பாதி என கலந்து செய்த கலவையல்லவா அவள்!

அவள் முகம் காட்டிய உணர்ச்சிகளின் மாயாஜாலத்தில் கட்டுண்டிருந்தவன், தலையை உலுக்கி தன்னை சரிப்படுத்திக் கொண்டான். ஜக்கில் இருந்து டீயை கப்பில் ஊற்றி உறிஞ்சியவன்,

“ஐம் வெய்ட்டிங்!” என்றான்.

“அப்பா செக்குயூரிட்டி ஃபிர்ம் வச்சிருக்காரு. சினிமா நடிகர்கள், பெரிய தொழிலதிபர்களுக்கெல்லாம் நாங்கதான் பாடிகார்ட்ஸ் அரேஞ் செய்வோம். சாதாரண உடையில அசிஸ்டேண்ட் மாதிரி அவங்க நிழலா தொடர்வாங்க எங்க ஆளுங்க. உன் அப்பாவும் எங்க சர்விஸ்தான் யூஸ் பண்ணறாரு”

“வேய்ட் வேய்ட்! அவர் என் அப்பான்னு உனக்குத் தெரியுமா?” என அதிர்ச்சியாக கேட்டான் ஜோனா.

இவனது லாஸ்ட் நேம், அதாவது குடும்ப பெயர் சூசனின் குடும்பப் பெயரான லீ எனத்தான் இருந்தது. அதாவது ஜோனாவின் முழுப்பெயர் அலெக்சாண்டர் ஜோனா லீ. சூசன் ஒரு சிங்கிள் பேரண்ட் என்பது மட்டுமே அவனது ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தப் பட்டிருந்தது. அங்கேதான் சிங்கிள் பேரண்ட் கலாச்சாரம் சர்வசாதாரணமாயிற்றே! அப்படியும் சிலர் தோண்டி துருவி இருந்தார்கள். அதை அவனது பி.ஆர்.ஓ ரகசியமாக ஹேண்டில் செய்திருந்தார்.

தப்பு செய்தது போல உதட்டைக் கடித்துக் கொண்டவள், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.  

“டெல் மீ டேம்மிட்!” சுருசுருவென கோபம் ஏறியிருக்க, அவள் முகத்தைத் தன் புறம் பிடித்துத் திருப்பினான் ஜோனா.

“ஒருத்தரோட நிழலா தொடருற பாடிகார்ட்டுக்கு தெரியாத எந்த ரகசியமும் இருக்க முடியாது ஜோனா! உன் அப்பாவோட பாடிகார்ட் என்னோட மோஸ்ட் பேவரேட் பெர்சன். உன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயமும் உடனுக்குடன் எனக்கு வந்துடும்! அப்படித்தான் நீ இந்தியா வரதையும் தெரிஞ்சுக்கிட்டேன்! உன்னை ரிசீவ் செய்ய உங்கப்பாவோட அசிஸ்டெண்ட் தீரன் வரதையும் தெரிஞ்சுக்கிட்டேன்.”

“தீரன் எங்க இப்போ?”

“உன்னைக் காணோம்னு ரோடு ரோடா தேடிட்டு இருப்பான்!”

தலையை இடம் வலமாக ஆட்டியவன்,

“அவனையும் தூங்க வச்சிட்டியா?” என கேட்டான். குரலில் கோபம் இருந்தாலும் லேசாய் சிரிப்பும் இருந்தது.

“ஃப்ரீயா குடுத்தா பினாயிலே குடிக்கறவன் கிட்ட, பிட்சா குடுத்தா என்னவாகும்! நைட்ல டெலிவரி மேன் மாதிரி அவன் அபார்ட்மேன்ட்கு பிட்சா எடுத்துட்டுப் போய், சார் நீங்க ஆர்டர் செஞ்ச பிட்சான்னு நின்னேன். நான் ஆர்டர் பண்ணலியேன்னான். இந்த அட்ரஸ் தான் சார், காசு கூட குடுத்துட்டாங்க! உங்க பேர் சங்கர்தானேன்னு கேட்டேன். காசு குடுத்துட்டாங்கன்னு சொன்னதும், ஐயாக்கு அப்படி ஒரு இளிப்பு. ஆமா நான் தான் சங்கர்னு எலி தானாவே வலையில வந்து சிக்கிடுச்சு. இருந்தாலும் பிட்சாவ சாப்பிடுவானா இல்லையான்னு ஒரு சந்தேகம் தான். கரேக்டான பிட்சாவான்னு பாருங்க சார்னு சொல்ல, என் கண்ணு முன்னுக்கே தொறந்து, ஆமான்னு சொல்லி, பெரிய பீஸா எடுத்து வாயில திணிச்சுக்கிட்டான். முடிஞ்சது ஜோலின்னு கெளம்பி வந்துட்டேன்.”

இவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒருத்தனுக்கு பிட்சாவில் மருந்து போட்டு கட்டாயத் தூக்கம் கொடுத்ததை கதை போல சொன்னவளைப் பார்த்து கோபத்துக்கு பதில் ஆச்சரியம் தான் வந்தது.

“அப்புறம் உன்னை வந்து ரிசீவ் பண்ணேன். கண்டிப்பா ஜெட்லேக் இருக்கும், டயர்ட்டா வேற இருக்கும்னு நீ ரெஸ்ட் எடுக்க, முதல் நாளே ஃபேக் ஐடி கார்ட் வச்சு ரூம் புக் பண்ணி கீ கார்ட் எடுத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு நடந்தது தான் உனக்கு எல்லாம் தெரியுமே! அந்த டைம்ல யாரும் உன்னைக் காண்டேக்ட் பண்ணிட்டா என் குட்டு உடஞ்சிடும்னுதான் உன் போனையும் அடைச்சுப் போட்டேன். பீச் போய்ட்டு, உனக்கு டின்னர் வாங்கி குடுத்துட்டு ரூம்ல விட்டுட்டுப் போறதுதான் என்னோட ப்ளான். ஆனா முடியல ஜோனா!”

குரலை செறுமிக் கொண்டவள்,

“நீ ரொம்ப சோகமா பேசனியா, நிம்மதி வேணும்னு சொன்னியா, என்னால தாங்கிக்கவே முடியல! இத்தனை விஷயங்களயும் பல முறை யோசிச்சு சாதக பாதகங்கள அலசி செஞ்சவ, உன்னைக் கடத்தனத மட்டும் ஆன் தெ ஸ்பர் ஆப் தெ மேமெண்ட்னு சொல்வாங்களே, ஒன்னும் யோசிக்காம சட்டுன்னு செஞ்சிடறது, அப்படி செஞ்சிட்டேன். இது க்ரைம்னு எனக்கும் புரியுது ஜோனா! என்னை மன்னிச்சிடு! உன்னை சந்திச்சுட்டேன், பேசிட்டேன், பாடறத கேட்டுட்டேன், தூங்கறத பார்த்துட்டேன்! போதும், போதும்!

“இது போதும் எனக்கு

இது போதுமே!

வேறென்ன வேணும் நீ போதுமே!” என சட்டென எழுந்து நின்று பாடியவள்,

“இன்னிக்கு நைட் மட்டும் இங்க தங்கிக்க! நாளைக்கு உன்னை சென்னையிலேயே மறுபடி விட்டுடறேன்” என்றாள்.

“நீ கடத்தனா உன் கூட வரதுக்கும், கொண்டு போய் விட்டா போயிடறதுக்கும் நான் என்ன உன் வீட்டு நாயா?”

“ஆமா!”

“வாட்!!!”

“அது..என் டாக் பேர் கூட ஜோனாதான்! அததான் சொன்னேன்!”

“ஓ காட்! எத்தனையோ பைத்தியக்கார ஃபேன்ஸ் பார்த்துருக்கேன் நான். ஸ்டேஜ்ல பாடிட்டு இருக்கறப்போ போட்டுருக்கற ப்ரா, பேண்டிஸ்லாம் என் மேல தூக்கி வீசறவங்க (இதெல்லாம் நெஜமா நடக்கும் அங்க), பப்ளிக்ல பார்த்துட்டா பாஞ்சி வந்து கட்டிப்புடிச்சு கிஸ் அடிக்க ட்ரை பண்ணறவங்க, எசகு பிசகான எடத்துல தடவி வைக்கிறவங்க இப்படி நெறைய பேர பார்த்துருக்கேன். என்னைக் கடத்திட்டு வந்து அவங்க எல்லார விட நீதான் பைத்தியத்துக்கு எல்லாம் பைத்தியம்னு நிரூபிச்சுட்ட!” என கத்தினான் ஜோனா!

“ஆமா பைத்தியம்தான். ஏன் இப்படி பைத்தியம் ஆனேன்? எல்லாம் உன்னால தான்! நீ ஏன் அன்ப காட்டுன, நீ ஏன் பாசமா பேசன, நீ ஏன் தலையைத் தடவிக் குடுத்த? எல்லாம் உன் தப்புத்தான் ஜோனா!”

“இப்படிலாம் என்னை நினைச்சு கனவு கண்டு வச்சிருக்கியா? நல்ல வேளை நீ ஏன் என்னை கிஸ் பண்ண, நீ ஏன் என்னை கட்டிப் புடிச்ச, நீ ஏன் என்னை படுக்கையில தள்ளினன்னு கேக்காம போயிட்ட! கற்பனையில கூட இன்னசென்டா இருக்கியே மூலான்!” என நக்கலடித்தான் ஜோனா.

கண்ணை சிமிட்டி அழுகையை அடக்கியவளைப் பார்த்தவன்,

“உன் போனைக் குடு” என கேட்டான்.

லாக் திறந்து அவனிடம் நீட்டினாள். அதில் வால்பேப்பராய் கூட அவன் தான் இருந்தான். அவள் சொல்லிய செக்கியூரிட்டி ஃபிர்ம், அப்பாவின் பெயர் எல்லாவற்றையும் கூகளில் செக் செய்து உண்மை என தெரிந்துக் கொண்டவன் போனை திருப்பிக் கொடுத்தான். அமைதியாக அவளையேப் பார்த்தப்படி மனதில் சில பல திட்டங்களை வகுத்தான்.

சூசனின் வற்புறுத்தலால் வந்திருந்தாலும் அவனுக்கு படம் நடிப்பதில் இஸ்டம் இருக்கவில்லை. இத்தனை வருடம் கண்டுக் கொள்ளாமல், தான் பாசத்துக்கு ஏங்கிய போது அவமானப்படுத்தியவரை நேரில் பார்த்து நறுக்கென நாலு வார்த்தை கேட்க வேண்டும் என தான் வந்தான். தன்னை வைத்துப் புகழ் சம்பாதிக்க பார்க்கும் நேரத்தில் கூட தன் வாரிசு என வெளியே சொல்லிக் கொள்ளாத மனிதருக்கு தன்னால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என நேராக சொல்லி அவரை நிலைகுலைய வைக்க வேண்டும் என தான் வந்தான். தன் வாழ்க்கையில் அவரின் அத்தியாயத்தை முடித்து வைக்க வேண்டும் என எண்ணி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான் ஜோனா. ஆனால் அதற்குள் ஒருத்தி உள்ளே நுழைந்து குட்டையைக் குழப்பி இருந்தாள்.

‘தேடட்டும்! ப்ளைட்டில் இருந்து இறங்கியவன் எங்கே காணாமல் போனான் என தேடட்டும்! அப்பொழுதாவது பெற்ற மகன் என துடிக்கிறதா என பார்ப்போம்’ என திருப்தியாக எண்ணிக் கொண்டான் ஜோனா. அதோடு அசால்ட்டாக தன்னைக் கடத்தி வந்தவளையும் வம்பிழுத்து ஒரு வழியாக்க வேண்டும் என திட்டம் போட்டவன் அவள் ஆரம்பித்த கேமை இவன் விளையாட முடிவு செய்தான்.

அதன் பிறகே இங்கேயே சில நாட்கள் இருப்பதாக அவளிடம் சொன்னான் ஜோனா. அவன் முடிவில் மகிழ்ந்துப் போனவள், எத்தனை நாட்கள் என ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்தாள் அவனை!   

சுகமாய் குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்தவன்,

“ஜோனா, ஹேல்ப்!” எனும் கூக்குரலில் அடித்துப் பிடித்து எழுந்தான்.

கதவைத் திறந்து உள்ளே ஓடியவன், கண்ட காட்சி…………

 

{மயங்குவா(ன்/ள்)}

 

(போன எபிக்கு லைக்ஸ், கமேண்ட், மீம் அண்ட் ஹீரோ ஹிரோயின் போட்டோ வேட்டை நடத்தன அனைவருக்கும் இனிய நன்றி! என்னடா எபி அடிக்கடி வருதுனு பார்க்கறீங்களா! அம்மா வீட்டுக்கு வந்துருக்காங்க! எனக்கு சமைக்கற வேலைத் தவிர வேற வேலை இல்ல! அடுத்த வாரம் இந்த நிலை மாறலாம் ? சரி கதைக்கு வருவோம்! இந்தக் கதைல நெறைய கேரெக்டர்ஸ் இல்ல! எப்ப பாரு என் கதைல எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்ற மாதிரி நெறைய கதாபாத்திரம் இருக்கும். இதுல ரெண்டு பேர மட்டும் வச்சு விஷப்பரிட்சை எடுத்துப் பார்ப்போம்! உங்கள நம்பித்தான் இந்த டெஸ்டிங்! நன்றி டியர்ஸ்..லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!