MMM–EPI 5

122620776_740997409820929_9109553537495410146_n-97517a23

அத்தியாயம் 5

“அவன் காணாம போகிற வரைக்கும் நீ என்ன ம… புடிங்கிட்டு இருந்தியா? ரொம்ப முக்கியமான வேலையை நம்பி குடுத்ததுக்கு உன்னால என்ன முடியுமோ அதை செஞ்சிட்டே! உன்னைலாம் இன்னும் என் யூனிட்ல வச்சி தெண்ட சம்பளம் அழுவறேன் பாரு, என்னை தேஞ்சிப் போன செருப்பால அடிக்கனும்! கண்ணு முன்னுக்கு மரம் மாதிரி நிக்காம போய் தொலை!” என எரிந்து விழுந்த ஜெய் கையில் வைத்திருந்த போனை கோபமாக தீரன் மேல் விட்டடித்தார்.

அவர் தூக்கிப் போட்ட போனை கேட்ச் பிடிக்க முயல, அந்தோ பரிதாபம் கையில் அகப்பட்ட போன் அவனை மீறி நழுவி கீழே விழுந்திருந்தது. க்ரேக் என ஸ்கிரின் உடைந்த சத்தம் கேட்க, பரிதாபமாய் விழித்தான் தீரன்.

“மலை மாடு, தண்ட வேஸ்ட்டு! மூஞ்சியும் முகரையும் பாரு! ஈன்னு ஹீரோயின் கிட்ட இளிச்சிக்கிட்டே டைலாக் சொல்லிக் குடுக்கற திறமை மட்டும் இல்லைன்னா இன்னேரம் தலை முழுகிருப்பேன். உன்னை மாதிரி அரை வேக்காட்ட எல்லாம் அசிஸ்டண்டா வச்சிகிட்டு நான் படற பாடு இருக்கே! ப்ளடி இடியட்” என ஆரம்பித்து பச்சை பச்சையாய் செந்தமிழில் திட்டித் தீர்த்தார் ஜெய்.

ஜெய்யின் தூரத்து உறவினன் இந்த தீரன். குடும்பத் தொழில் நொடித்துப் போக, மகனை இவரிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார் தீரனின் தகப்பனார். பத்தோடு பதினொன்றாய் இருந்து விட்டுப் போகட்டும் என சம்பளம் இல்லாத அசிஸ்டெண்டாய் வைத்திருந்தார் இவனை. பெண்களுடன் பேசியே அழகாய் வேலை வாங்கி விடும் அவன் திறமையும் அவர் குழுவில் தீரன் இன்னும் நீடிப்பதின் ரகசியம். படத்தின் நாயகியோ துணை நடிகைகளோ பிரச்சனை செய்தால், அழகாய் சிரித்துப் பேசி அவர்களை சரி செய்து நடிக்கவும் வைத்து விடுவான். மற்றபடி கொடுத்த வேலைகளையும் சொதப்பாமல் செய்து விடுவான். அதை நம்பித்தான் இவனிடம் ஜோனாவை அழைத்து வரும் பொறுப்பைக் கொடுத்திருந்தார்.

‘எவன்டா சொன்னான் டைரக்டரோட மோதிர விரலால் குட்டு வாங்கனா அதிர்ஷ்டம் பிச்சிக்கிட்டு கொட்டும்னு! இந்தாளு கிட்ட வண்ணம் வண்ணமாக வாங்கிப் பாருங்கடா தெரியும்! இவருக்கு ஜெய்க்குமாருன்னு பேரு வச்சதுக்கு பதிலா, வெளக்குமாறுன்னு பேரு வச்சிருக்கலாம். வாயாலே இந்த வெளு வெளுக்கறான்!’

முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டே,

“நான் போய் ரிசீவ் பண்ணறதுக்குள்ள ஆள் அட்ரஸ் இல்லாம மறைஞ்சிப் போய்ட்டாரு சார்! அவர் வர விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொன்னீங்களே, அதான் ரகசியமா தேடிட்டு இருக்கேன் சார்” என்றான் தீரன்.

ஜோனாவை ரகசியமாக அழைத்து வந்து, படம் நடிக்க ஒத்துக் கொள்ள வைத்த பிறகே மீடியாவிடம் தெரியப்படுத்தி பேட்டி கொடுக்கலாம் என நினைத்திருந்தார் ஜெய். அதற்கு முன்னே தெரிந்தால் ரசிகர்கள் படையெடுப்பு, மீடியாவின் தொல்லை என பலதையும் சமாளிக்க நேரிடும் என்பதால் தான் இந்த ரகசிய வருகை. அதோடு ஜோனாவும் கூட்டம் ஆர்ப்பாட்டம் எதுவும் கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லி இருந்தான்.

“அவன் வர நேரம், ப்ளைட் டீட்டேயில் எல்லாம் குடுத்தும் கூட எப்படிடா மிஸ் பண்ண! வந்து இறங்கன லிஸ்ட்ல அவன் பேரு இருக்கு ஆனா ஆள காணோம்! எப்படி, எப்படி இப்படியாச்சு?”

‘நல்லவேளை நாம தூங்கி எழுந்து லேட்டா போனத மறைச்சிட்டோம். கரெக்ட் டைமுக்கு போயும் ஆளை கண்டுப்புடிக்க முடியலைன்னு ஒரு பிட்ட போடவும் தான் இன்னும் பொழச்சிக் கிடக்கறேன். அவன கண்டுப்புடிக்கற வரைக்கும் இப்படியே மேய்ண்டேய்ன் பண்ணுவோம்’ என தன் புத்திசாலித்தனத்தை மனதிலே மெச்சிக் கொண்டான் தீரன்.

அன்று அலாரம் வைத்துப் படுத்தும் எப்படி அசந்து தூங்கினான் என அவனுக்கே புரியவில்லை. அலாரமாக அவன் செட் செய்திருந்த மன்னார்குடி கலகலக்க பாடல், அடித்த அடி மன்னார்குடிக்கே கேட்டிருக்கும்! ஆனால் இவனை அசைத்திருக்கவில்லை. பட்டப்பகலில் தூங்கி எழுந்து, அடித்துப் பிடித்து ஏர்போர்டுக்கு ஓடியவனுக்கு கிடைத்தது ஏமாற்றமே!

தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டார் ஜெய்க்குமார். சூசன் வேறு இவருக்கு போன் போட்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். தரை இறங்கிய மகன் இன்னும் அவருக்கு போன் செய்திருக்கவில்லை. மகன் வந்துவிட்டானா, என்ன நடக்கிறது, போன் போட்டாலும் ரிச் ஆகவில்லையே என பல கேள்விகளால் இவரை திணறடித்துக் கொண்டிருந்தார்.

வேறு வழி இல்லாமல் ஜோனாவை காணோம் என சொல்ல, சாமியாடிவிட்டார் சூசன். மகனை வரவைத்து ஏதோ செய்து விட்டார் ஜெய் என அவரையே குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்தவர் அப்பொழுதே கிளம்பி வருவதாக ஒற்றைக் காலில் நின்றார். சூசனிடம் ஒரு வாரம் டைம் கொடுக்க சொல்லி கெஞ்சியிருந்தார் ஜெய்க்குமார். ஒரு வாரத்துக்குள் ஜோனா கிடைக்காவிட்டால், இவர் மேல் கேஸ் போட போவதாக மிரட்டி விட்டே போனை வைத்திருந்தார் சூசன். இண்டெர்நேஷனல் சென்சேஷனல் சிங்கரை காணோம் என்றால், அவனை வரவழைத்த தன் நிலைமை என்னவாகும் என பயந்து வந்தது ஜெய்க்கு.

சிங்கரை காணோம் என துடித்ததே தவிர, தன் மகனை காணோமே என துடிக்கவில்லை அவருக்கு. ஒரு தாய் பிள்ளையை சுமந்து வலித்தும் பெற்றெடுப்பதால், குழந்தை மீது பாசம் சுரப்பது பால் சுரப்பது போல இயற்கையாகவே வந்து விடுகிறது. ஆனால் அப்பா என்பது, ஓர் ஆண் சுகம் பெற்றதுக்கு பரிசாய் கிடைக்கும் பதவியல்லவா! எந்த ஆணாலும் தகப்பனாக முடியும், ஒரு தாய் கருவில் சுமக்கும் குழந்தையை தன் மனதால் சுமப்பவன் மட்டுமே தகப்பன்சாமி ஆகமுடியும்! ஜெய், ஜோனாவைப் பொறுத்தவரை சுகம் அனுபவித்த ஒரு ஸ்பேர்ம் டோனெர் மட்டுமே!

“டி.ஐ.ஜிக்கு போன் போட்டு இந்த விசயத்தை காதும் காதும் வச்ச மாதிரி இன்வெஸ்டிகேட் செய்ய சொல்லறேன்! நீயும் அவங்க இன்வெஸ்டிகேஷன்ல ஜாய்ன் பண்ணிக்க. எனக்கு ஜோனா கிடைக்கனும் தீரா, அதுவும் சீக்கிரமா!”

‘படத்துல நடிக்க இந்த நாட்டுல ஆளுங்களுக்கா பஞ்சம்? துரத்தி துரத்தி ரேப் பண்ணற வில்லன் ரோலுனா நான்லாம் காசு வாங்காமலே நடிப்பேன். ஹ்ம்ம்! நம்ம தெறமைலாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதே! இங்கிலிஸ்காரன இந்திய படத்துல நடிக்க வச்சே ஆகனும்னு வெறியோட அலையறாங்க! கெரகம், மொழி தெரியாம இருந்தாதான் தமிழ் படத்துல ஜெயிக்க முடியும் போல!’ மனதிலேயே புலம்பிக் கொண்டவன்,

“கண்டிப்பா ஓன் வீக்ல அந்த ஜோனாவ உங்க முன்ன கொண்டு வந்து நிறுத்தறேன் சார்! அப்படி இல்லைனா, ஜோனாவ காணடிச்ச என்னை கானாவுக்கு நாடு கடத்துங்க சார்!” என சூழுரைத்தான்.

“பேச்செல்லாம் பேருக்கேத்த மாதிரி தீரமாத்தான் இருக்கு! ஆனா செய்யற காரியத்துல வீரியத்த காணோம்! போ, போ! நேரத்த கடத்தாம இந்த அட்ரஸ்ல டி.ஐ.ஜிய போய் பாரு.” என தீரனை விரட்டி விட்டார் ஜெய்.

அவன் போனதும், ஜோனாவுக்காகப் பார்த்து பார்த்து அலங்கரித்திருந்த அந்த விருந்தினர் மாளிகையை ஒரு பெருமூச்சுடன் பார்த்தார் ஜெய்.

“எங்கடா போய் தொலைஞ்ச என் வெள்ளை மவனே!”

 

 

“இந்தாங்க பிரின்சஸ் சீஸ் பர்கர்!” என்ற ஜோனா தட்டை அவள் புறம் நீட்டியபடி குனிந்து வணங்கினான்.

“தேங்க் யூ மை டியர் செர்வண்ட்” என்ற ஜீவா தட்டை வாங்கிக் கொண்டாள்.

ஹாலில் தொலைக்காட்சி முன்னே இருந்த சோபாவில் அவள் அமர்ந்திருக்க, தானே செய்திருந்த பர்கரை அவளிடம் கொடுத்து விட்டு அவள் அருகே தன்னுடைய தட்டுடன் அமர்ந்தான் ஜோனா.

“ஐ லவ் ஜங்க் ஃபூட்! ஆனாலும் அடிக்கடி சாப்பிட மாட்டேன்! என்னமோ தப்பு பண்ணற மாதிரி ஃபீல் ஆகும் சாப்பிடறப்பலாம்! சாப்பிட்டு முடிச்சதும் ட்ரேட்மில்லுல ரெண்டு ஹவர் ஓடுனாத்தான் அந்த குற்ற உணர்ச்சி போகும் எனக்கு. சின்ன வயசுல கத்துக் குடுத்த சில பழக்க வழக்கங்கள எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால மாத்திக்க முடியறது இல்லல ஜோனா” என சொல்லியபடியே பர்கரை ரசித்து ருசித்து உண்டாள் ஜீவா.

“பசின்னு வந்துட்டா பழக்கமாவது வழக்கமாவது, எல்லாம் தன்னால மாறிடும்! மாம் கூட இருந்த வரைக்கும் எனக்குப் பசின்னா என்னன்னு தெரிஞ்சது இல்ல! வயிறு நெறைஞ்சு இருந்தாத்தான் பாசம் எங்க, காதல் எங்க, அன்பு எங்கன்னு பைத்தியக்காரத்தனமா தேடத் தோணும்! மாம் என்னை விட என் ஸ்டெப் சிப்ளிங்ஸ் கிட்ட பாசமா இருக்காங்கன்னு தோணவும், வீம்புக்கு வீட்ட விட்டு வெளிய வந்தேன். பசியில மயங்கி விழுந்தப்பத்தான், இந்த வயித்துக்கு முன்ன பாசம், அன்பு எல்லாம் சும்மான்னு புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு கேரியர்ல ஒரு ப்ரேக் கிடைக்கற வரைக்கும் ஜங்க் ஃபூட்ல தான் உயிர் வாழ்ந்தேன்! எங்க ஊர்ல ஹெல்த்தி சாலட்டோட பர்கர் அண்ட் பிட்சாதான் விலை குறைவு! ஏழைங்களோட உணவு அது!”

“உங்க ஊர் ஏழைங்க சாப்பாடு தான் இப்ப எங்க ஊரோட ப்ரீஸ்டிஜியஸ் சாப்பாடா ஆகிப்போச்சு! இப்போலாம் பிட்சா பர்கர் சாப்படாதவன எல்லாம் ஆதிவாசிய பார்க்கற மாதிரி பார்க்கறாங்க” என்றவள் வாயின் ஓரத்தில் சீஸை ஒழுக விட்டு மொக்கிக் கொண்டிருந்தாள்.

“இயூ!!” என அவள் செய்கையைப் பார்த்து முகம் சுழித்த ஜோனா, காபி டேபிளின் மேல் இருந்த டிஷீ பேப்பரை எடுத்து அவள் முகத்துக்கு நேரே வீசினான். 

பர்கரை ஒரு கையால் பிடித்தப்படி இன்னொரு கையால் டிஷீ பேப்பரை கேட்ச் பிடித்தவள், அதை மறுபடியும் மேசை மேல் வைத்து விட்டு புறங்கையால் வாயைத் துடைத்தாள்.

“கை இருக்கறப்போ எதுக்கு பேப்பர வேஸ்ட் பண்ணனும்! சேவ் ட்ரீ, கோ பேப்பர்லஸ்னு போன விளம்பரத்துல பெரிய இவன் மாதிரி அட்வைஸ் பண்ண நீ! இப்போ டிஷீ பேப்பர இப்படி வீணடிக்கற! ஒரு வருஷத்துக்கு நாலு பில்லியன் மரத்த நம்மளோட பேப்பர் நீட்ஸ்க்காக வெட்டறாங்களாம்! செத்துப் போன மரமெல்லாம் உனக்கு சாபம் குடுக்கப் போகுது பாரேன்!”

துடைக்க, சுத்தம் செய்ய என க்ளீனிங் க்ளோத் இருந்தும், ஒரு பண்டல் பேப்பர் டவலை சமயல் செய்கிறேன் பேர்வழி என முடித்து வைத்திருந்தான் ஜோனா!

“மிஸ் என்சைக்ளோபேடியா, அப்படிலாம் விளம்பரத்துல நல்லவனா நடிச்சாத்தான் ஆல்பம் விக்கும்! பேங்குல பணமும் நிக்கும்! பணத்துக்காக, புகழுக்காக நாங்க என்ன வேணும்னாலும் சொல்லுவோம்! சொந்த அறிவு இருக்குத்தானே? நாங்க சொல்லறத எல்லாம் நீங்க நம்பி ஏன் அதன்படி நடக்கறீங்க? மத்தவங்களுக்கு அறிவு இருக்கோ இல்லையோ, உனக்கு சுத்தமா மேல்மாடி காலி. இல்லைனா பணத்துக்காக பாடறவன கடத்திட்டு வந்திருப்பியா?” என நக்கலாக கேட்டவன், பர்கரை ரசித்து உண்ண ஆரம்பித்தான்.

அவள் அமைதியாக சாப்பிட,

“என்ன சவுண்ட காணோம்! என்னமோ சொன்னியே மரம் சாபம் கொடுக்கும்னு, அப்படி பயந்தா மனுஷனா வாழவே முடியாது மூலான்! நாம சாப்பிடற சாப்பாட்டுல இருந்து, போட்டுக்கற துணி வரைக்கும் எதாவது ஒரு உயிர கொன்னுதான் கிடைக்குது. உன் பர்கர்ல ஒரு கோழி, ஒரு தக்காளி, ரெண்டு வெங்காயம் செத்துக் கிடக்கு! உன் சட்டையிலயும் ஜீன்ஸ்லயும் காட்டன் மரத்தோட விதை செத்துக் கிடக்கு. சாபத்துக்கு பயந்தவளா இருந்தா பர்கரா சாப்பிடாம அப்படியே வச்சிட்டு, துணி எல்லாத்தையும் ஒன்னொன்னா கழட்டிப் போடு பார்க்கலாம்! கமான் மூலான்!” என்றான்.

‘இதுக்குப் பேருதான் வாய குடுத்து வாங்கிக் கட்டிக்கறது! இந்த அவமானம் தேவையா உனக்கு!’ என தன்னைத்தானே நொந்துக் கொண்டாள் ஜீவா.

“எங்க கழட்டல? ஓ கையில தட்டு இருக்குல்ல! சரி விடு, நானே ஹெல்ப் பண்ணறேன்!” என்றவன் தனது தட்டை மேசையில் வைத்து விட்டு அவளை நெருங்கி டீ ஷெர்ட்டில் கையை வைத்தான்.

“ஏய் என்ன பண்ணற?”

“நீ அணிஞ்சிருக்கற பாவங்களை களையறேன் பேபி! ப்ளீஸ், கொஞ்சம் கோ ஆபரேட் செய்! இன்னும் சற்று நேரத்தில் பாவங்கள் களையப்பட்ட புண்ணிய ஆத்மாவா ஆகிடுவ!” என்றவன் அவள் அணிந்திருந்த டீ ஷேர்டை இன்னும் கொஞ்சம் மேலே தூக்க,

“ஹே விடு, விடு ஜோனா!” என அவன் கையைப் பிடித்துக் கொண்டவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்ன மூலான் நீ! நான் யாரு, எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சும் கடத்திட்டு வந்துட்டு டீ ஷேர்ட்ட கழட்ட கூட இப்படி பிகு பண்ணா எப்படி? டாப் டேன் ப்ளேபாய் ஆப் அமெரிக்கா லிஸ்ட்ல ஃபர்ஸ்ட்ல இருக்கறவன கொண்டு வந்து வச்சிக்கிட்டு என்னை விடு விடுன்னா எப்படி விடுவான்! நான் பாவம்ல, உன் ஜோனா பாவம்ல! செத்துப் பொழைச்சதுல இருந்து மருந்து, மாத்திரைன்னு செலபசில(celibacy—உடல் உறவு இல்லாமல் இருப்பது) இருக்கேன்! புரிஞ்சுக்கோ மூலான்” என சொல்லியபடியே முன்னேறியவனின் கன்னத்தில் பட்டென அறைந்திருந்தாள் ஜீவா!

“வை டிட் யூ ஸ்லேப் மீ? எதுக்கு அறைஞ்ச? சொல்லு மூலான்! ஒரு ஆம்பளய கடத்திட்டு வரப்போ அதோட பின் விளைவுகள் என்னன்னு தெரியாமலா இருந்திருக்கும் உனக்கு? அந்த மாதிரி, இந்த ஜோனா வேணும்னு தானே கடத்திட்டு வந்த! அப்புறம் ஏன் இந்த தயக்கம்? ஓ! நான் சொன்ன மேடு பள்ளம், லாங் ஹேர்லாம் இல்லைன்னு தயங்கறியா? இட்ஸ் ஓக்கே! கிடைச்சத வச்சு, ஐம் வில்லிங் டூ அட்ஜஸ்ட்!”

சட்டென நாற்காலியில் இருந்து எழுந்தவள்,

“ஆ!!” எனும் சத்தத்தோடு மடங்கி தரையில் அமர்ந்தாள்.

“ஏய் பார்த்து மூலான்!” என சொல்லியவன், கீழே அமர்ந்து அவள் காலை இழுத்து செக் செய்தான். போட்டிருந்த கட்டையும் மீறி ரத்தம் வந்தது.

“எழுந்து நடக்காதன்னு சொன்னேன் தானே! இடியட்” என காய்ந்தவன், கிச்சனில் இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்சை எடுத்து வந்தான். மீண்டும் கட்டைப் பிரித்து, அண்டிசெப்டிக் க்ரிமினால் காயத்தை துடைத்து மருந்திட்டு புதிய கட்டுப் போட்டு விட்டான் ஜோனா!

அன்று சமைக்கிறேன் என வீட்டின் உள்ளே சென்ற ஜீவா, கத்தி மற்றும் கரண்டிகள் இருக்கும் ட்ராவரை திறக்க அது கையோடு வந்திருந்தது. அதில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே சிதற, கத்தி இவள் காலை பதம் பார்த்திருந்தது. ரத்தக்காயம் ஒன்றும் இவளுக்கு புதிதில்லையே! துடைத்துப் போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய் விடுபவளுக்கு, அன்று அவளை அறியாமலே வாய் ஜோனா ஹேல்ப் என கத்தி இருந்தது.

அடித்துப் பிடித்து உள்ளே வந்த ஜோனாவின் கரங்களைப் பற்றிக் கொண்டவள்,

“வலிக்குது ஜோனா!” என வாய் திறந்து தனது வலியை சொல்லி இருந்தாள். அவன் அறைந்தப் பொழுது கூட இதே போலத்தான் வலி கொடுத்தவனிடமே வலிக்கிறது என சொல்லி இருந்தாள் ஜீவா.

மனதிற்கு பிடித்தவர்களிடம் பரிதாபத்தை சம்பாதிக்க விரும்பும் போது மட்டுமே வலிக்கிறது எனும் வார்த்தை பெண்களின் வாயில் இருந்து வரும். ஏதோ ஒரு தடவை உபயோகிக்கும் போது பாசத்தையும் அக்கறையையும் சம்பாதித்துத் தரும் இந்த வார்த்தை, அடிக்கடி வரும் போது உனக்கு வேறு வேலை இல்லை எனும் சலிப்பையே ஈன்று தரும்.

“ஓ காட்! அறிவில்ல உனக்கு! எவ்ளோ ரத்தம் போகுது பார்! கவனமா ஒரு வேலைய செய்ய மாட்டியா?” என கடிந்துக் கொண்டவன், அவளை அலேக்காக கையில் அள்ளி இருந்தான்.

டைனிங் நாற்காலியில் அவளை அமர்த்தி, அவள் காட்டிய இடத்தில் இருந்து முதலுதவி பெட்டியை எடுத்தவன், மிக மென்மையாக காயத்துக்கு மருந்திட்டிருந்தான். இவளை வைத்து செய்ய வேண்டும் என மனதில் நினைத்திருந்தவன், அன்று முழுவதும் அவளை அமர வைத்து தானே சமைத்து கவனித்துக் கொண்டான்.

காயம் பட்ட பொழுது, அந்த பெரிய கண்களால் பாவமாய் பார்த்த பாவம், ஜோனாவுக்கு அவள் பால் பரிதாபத்தையும் பரிவையும் ஒருங்கே தோற்றுவித்திருந்தது. அதெப்படி தன்னைக் கடத்தியவளின் மேல் பரிவு வரலாம் எனும் கோபம் தான் அவள் சட்டையைக் கழட்டுவது போல வம்பிழுக்க வைத்தது ஜோனாவை. தன் செயலால் மீண்டும் அந்தப் பெரிய கண்களில் வலியின் சாயலைப் பார்த்தவனுக்கு இப்பொழுது அவன் மேலேயே கோபம் வந்தது.

“திஸ் இஸ் ரிடிக்கிலஸ்!” என முனகிக் கொண்டவன், எழுந்து நின்றான். பின் கீழே குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டவன் ரூமுக்கு நடந்தான்.

“ஹேய் என்ன செய்யப் போற, விடு என்னை! ஒரு காலுல தான் அடி! கையெல்லாம் நல்லாத்தான் இருக்கு எனக்கு! ஒரு குத்து விட்டேன்னா உன்னோட அழகான மூக்கு அலங்கோலமா ஆகிடும்” என கத்தினாள் ஜீவா.

“சும்மா கத்தாதே மூலான்! ஆம்பளைங்க என்ன எந்நேரமும் அதே மூட்டுல தான் சுத்திட்டு இருப்பாங்களா! ரத்தத்தப் பார்த்ததும் எனக்கு மூட் ஆப் ஆகிருச்சு! நீயே வந்து கிஸ் மீன்னாலும் என்னால முடியாது இப்போ! என்னமோ பொண்ணுங்கள பெட்ல தூக்கிப் போடற வேலை மட்டும்தான் நாங்க பார்க்கறோம்ங்கற மாதிரி உங்க மைண்ட்லாம் யாரோ கொராப்ட் பண்ணி வச்சிருக்காங்க! இத தவிர எங்க மைண்ட்ல வேற பல விஷயமும் ஓடிட்டுத்தான் இருக்கு. ஸ்போர்ட்ஸ், அரசியல், அடுத்த வேளை சாப்பாடு, வேலை இடத்துப் பிரச்சனை, காருக்கு ஆயில் ஊத்தியாச்சா, ஏலியனுக்கும் மனுஷனுக்கும் கல்யாணம் ஆனா குழந்தைக்கு ஏலிசன்னு(ஏலியன்+மனுஷன்) பேர் வைப்பாங்களா இப்படி ஆயிரம் பிரச்சனை எங்க மண்டைக்குள்ள!” என்றவன் படுக்கையில் அவளை பொத்தென போட்டான்.

“படுத்து தூங்கு! தூங்கனாத்தான் எந்த காயமும் ஹீல் ஆகும். உடல் காயமா இருந்தாலும் சரி, மனக்காயமா இருந்தாலும் சரி! குட் நைட்! ஸ்வீட் ட்ரீம் மூலான்!” என்றவன் ரூமில் இருந்து வெளியேறிவிட்டான்.

“என் ஜோனாவாப் பத்தி எனக்குத் தெரியாதா! ஹீ இஸ் எ ஜெண்டில்மேன்! எ ஸ்வீட் பெர்சனாலிட்டி!” என மெல்ல முணுமுணுத்தவள் சுகமாய் தூங்கிப் போனாள்.

மறுநாள் அவன் பார்த்து வைத்த வேலைகளில்,

‘நீ ஸ்வீட் பெர்சனாலிட்டி இல்லடா, ஸ்பிலிட் பெர்சனாலிட்டி’ என நொந்துப் போனாள் ஜீவா.

{மயங்குவா(ன்/ள்)}

(போன எபிக்கு லைக், காமேண்ட், மீம்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. பலருக்கு போன எபில சைட் பிரச்சனையா இருந்தது. கண்ணுல பட்ட மேசேஜ்கெல்லாம் முடிஞ்ச அளவு மறுபடி ட்ரை செய்ங்கன்னு ரிப்ளை போட்டேன். அப்படி யாருக்காவது விட்டுப் போயிருந்தா மன்னிக்கவும். அடுத்த எபில சந்திக்கலாம். லவ் யூ ஆல்..)