MMM–EPI 7

122620776_740997409820929_9109553537495410146_n-555156b1

அத்தியாயம் 7

 

“ஏய் பிட்சாக்காரா (பிச்சக்காரன்னு படிச்சிராதீங்க)

கண்டுப்புடிச்சனா

உன்னை கைம்மா பண்ணிப்புடுவன்டா!!” என ஏய் சண்டைக்காரா பாட்டை மாற்றி பாடியபடியே போலிஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்தான் தீரன்.

 

ஜோனாவின் கடத்தல் திட்டமிட்டு நடந்திருக்கிறது என புரிந்துப் போனது அவனுக்கு. தனக்கு பிட்சாவில் எதையோ கலந்துக் கொடுத்து ஏர்போர்ட் போக முடியாத அளவுக்கு தூங்க வைத்திருக்கிறார்கள் என புரிந்துக் கொண்டவன் வாயைப் பசைப் போட்டது போல இறுக மூடி வைத்திருந்தான். ஆன் டைம்முக்கு போயும் ஜோனாவை மிஸ் செய்து விட்டேன் என அவன் சொல்லி இருந்தது பொய் என தெரிந்தால், நெருப்பில்லாமலே தன்னை வாட்டி வறுத்து மசாலா தடவி விடுவார் ஜெய் என பயந்து வந்தது அவனுக்கு. அவரின் கோபம் இவனை திரை உலகத்தை விட்டே துரத்திவிடும் அபாயம் இருந்தது. ஒரு படமாவது எஸ்.ஜே. சூர்யா லெவலுக்கு எடுத்து தானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என அவன் கண்டுக் கொண்டிருக்கும் கனவு, கனவாகவே போய்விடுமோ என அஞ்சினான் தீரன்.

 

சீசீடீவி புட்டேஜில் ஜோனா யாரோ ஒரு பையனுடன் செல்வது போலத்தான் இருந்தது. போலிசார், ஜோனாவே தெரிந்த யாருடனோ இஸ்டப்பட்டுத்தான் சென்றிருக்கிறான் எனும் கோணத்தில் தான் தேட தொடங்கி இருந்தார்கள். இந்த கேசை ரகசியமாக துப்புத் துலக்கி வரும் போலிஸ் குழுவில் இருந்த ஒரு பெண் ஆபிசரை, தனது ஒட்டு மொத்த ஸ்கில்லையும் உபயோகித்து கைக்குள் போட்டு வைத்திருந்தான் தீரன். அந்தப் பெண்ணை சந்திக்கவே போலிஸ் ஸ்டேஷன் வந்திருந்தான்.

 

“தீரா! சீசீடிவி புட்டேஜ்ல இருந்து அந்தப் பையனோட படம் எடுத்து எல்லா போலிஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பிருக்காங்க. அதோட வெளிய வந்து கார் ஏறுன வரைக்கும் புட்டேஜ் சிக்கியிருக்கு. ஆனா கார் நம்பர் அவ்ளோ விசிபளா இல்ல. க்ரைம் ப்ரான்ச் ஐ.டி டிபார்ட்மேண்ட் கிட்ட ஹெல்ப் கேட்டிருக்கோம். அவங்க சாப்ட்வேர் வச்சு என்லார்ஜ் செஞ்சு நம்பர ட்ரேஸ் பண்ண முயற்சி செய்வாங்க. எப்படியும் இதெல்லாம் சில நாள் எடுத்துடும்”

 

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் விடுங்க! இன்னிக்கு டின்னருக்கு போகலாம்னு கேட்டிருந்தேனே, அடியேனுக்கு டைம் ஒதுக்க ஆபிசர் மனசு வைக்கனும்” என புன்னகைத்தான் தீரன்.

 

சின்ன மீனை போட்டுத்தானே பெரிய மீனை பிடிக்க வேண்டும். தடங்கல் இல்லாமல் இன்பார்மேஷன் கைக்கு வர வேண்டும் என்றால் செலவு செய்து தானே ஆக வேண்டும். அதுவும் அந்த ஆபிசர் கொடுக்கும் விவரங்கள் எல்லாம் தனக்கு ஒன்றுமே இல்லை, அவரோடு உணவு உண்பது ஒன்றே தனக்கு ஜென்ம சாபல்யத்தைக் கொடுக்கும் என்பது போல அவன் கொடுத்த பில்ட் அப்பில் மனமுருகித்தான் போனார் அந்த ஆபிசர்.

 

‘ஒத்த ஓசி பிட்சா சாப்பிட்டதுக்கு என்னை ஓட்டாண்டி ஆக்காம விட மாட்டாரு போல இந்தக் கடவுள். இனி வாழ்க்கையில் பிட்சாவே தொட்டுப் பார்க்க மாட்டேன்டா சாமி’ என மனதில் புலம்பியவன், வெளியே புன்னகையுடன் நின்றிருந்தான்.

ஜோனா எங்கிருக்கிறான் என்பதை மட்டும் அந்த ஆபிசர் சொல்லி விட்டால், போலிசுக்கு முன்னே ஓடிப் போய் அவனை பிடித்து விடுவான் தீரன். அதன் பிறகு கதை திரைக்கதை அமைத்து ஜெய்யை கவர் பண்ணி விடலாம் எனும் நம்பிக்கையில் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

“ஆண்டவா, நாங்க கண்டுப்புடிக்கற வரைக்கும் அந்த வெள்ளைக்காரப் பையனை உசுரோட வச்சிருப்பா!”

 

அங்கே காட்டேஜில்,  

“Make me your Aphrodite

Make me your one and only”

என மெல்லிய குரலில் பாடியவாறே துவைத்த துணிகளை வெளியே இருந்த கொடி கம்பத்தில் உலர்த்திக் கொண்டிருந்தாள் ஜீவா.

 

“ஏப்ரடைட்டீன்னா யாருன்னு தெரியுமா உனக்கு?”

 

அவ்வளவு நேரம் அவள் துணி காயப் போடுவதை அவளறியாமலே, வீட்டின் பின் சுவற்றில் ஒற்றைக் காலை முட்டுக் கொடுத்து சாய்ந்தப்படி பார்த்திருந்தவன் கேள்வி கேட்டான்.

 

குரல் வந்த திசையைப் பார்த்துப் புன்னகைத்தாள் ஜீவா.

 

“தெரியுமே! அவங்க கிரீக் பெண் கடவுள். ரொம்ப ரொம்ப அழகானவங்களாம். காதல், அழகு, குழந்தை பாக்கியம் இதுக்கெல்லாம் அவங்கதான் இன்சார்ஜ். அவங்க ஒரு பெல்ட் மாதிரி போட்டுருப்பாங்களாம். அந்த பெல்ட் போட்டுருக்கறவங்க மேல, யாரா இருந்தாலும் படக்குன்னு லவ்ல விழுந்துடுவாங்களாம்”

 

அவள் அருகே வந்தவன், பக்கேட்டில் இருந்த துணியை எடுத்துப் பிழிந்து அவளிடம் கொடுத்தான். இவளும் அதை வாங்கி காய வைத்தாள். சற்று நேரம் ஒன்றும் பேசாமல் இருவரும் ஒரு ரிதமாக துணியைக் காய வைக்கும் வேலையைப் பார்த்தார்கள்.

 

“எனக்கு அந்த பெல்ட் வேணும் மூலான்”

 

“உனக்கு எதுக்கு அது? அந்த மேஜிக் பெல்ட் இல்லாமலே எல்லோரும் உன் மேல லவ்வுல விழுந்துக் கிடக்காங்களே! அப்புறம் என்ன?”

 

“மத்தவங்கள விடு! ஆர் யூ இன் லவ் வித் மீ மூலான்?”

 

அமைதியாய் அவன் முகத்தை ஏறிட்டவள்,

“ஒருத்தர் எப்பொழுதும் நலமா ஆரோக்கியமா இருக்கனும்னு நெனைக்கிறது லவ்னா, யெஸ் ஐ லவ் யூ ஜோனா! ஒருத்தர் வாழ்க்கையில சக்சஸ்புல்லா இருக்கனும்னு வேண்டிக்கறது லவ்னா, யெஸ் நான் உன்னை காதலிக்கிறேன் ஜோனா. ஒருத்தர் எப்பொழுதும் சந்தோஷமா இருக்கனும்னு மனசு விரும்பறது லவ்னா, யெஸ் வோ ஐ நி(மேண்டரின்) ஜோனா. ஒருத்தர் குழந்தை குட்டின்னு மனசு நிறைஞ்ச வாழ்க்கை வாழனும்னு நாம ஆசைப்படறது லவ்னா, யெஸ் சாராங்ஹியோ(கொரியன்) ஜோனா” என சொன்னாள்.

 

“இதெல்லாம் லவ்னா, பார்க்கறப்பலாம் கட்டிப்புடிச்சிக்கறது கிஸ் அடிச்சிக்கறதுலாம் லவ் இல்லையா மூலான்?” என சின்ன சிரிப்புடன் கேட்டான் ஜோனா.

 

“அதுவும் லவ்வா இருக்கலாம். எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கு? அதுப்போல ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க இஸ்டத்துக்கு தக்க மாதிரி காதல அர்த்தம் பண்ணிப்பாங்க போல”

 

“உன்னோட காதல் டெபினெஷன் ரொம்ப போரிங்கா இருக்கு மூலான்! அத காதல்னு சொல்றத விட வொர்ஷிப்னு(ஆராதனை) சொல்லலாம். உன்னோட வொர்ஷிப்ப அப்படியே கடல்ல தூக்கிப் போட்டுட்டு, நாம வேணும்னா நான் சொன்ன ஸ்டைல்ல லவ் பண்ணலாமா?”

 

“தேவையில்ல!”

 

“அப்படிலாம் சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல மூலான். என்னை நீ கடத்தாம இருந்திருந்தா இன்னேரம் பார்ட்டி, நைட் லைப், பொண்ணுங்கன்னு என் டைம் பஞ்சா பறந்துருக்கும். இந்த இடத்துல வினாடிகள கூட நெட்டித் தள்ள வேண்டிய நிலையா இருக்கு. சோ, ஸ்டார்ட்டிங் டுடே டைம் பாஸுக்கு என் ஸ்டைல்ல நாம ரெண்டு பேரும் லவ் பண்ண போறோம்!”

 

போடா நீயும் உன் லவ்வும் என்பது போல பார்த்தவள், அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள். அவளது இடது கரத்தைப் பற்றி நிறுத்திய ஜோனா,

 

“பேட் மேனர்ஸ் மூலான்! பேசிட்டு இருக்கறப்பவே விட்டுட்டுப் போற நீ! சரி விடு! இந்த லவ்வுக்கு நீ புதுசுன்றதுனால உனக்கு கொஞ்சமா விட்டுத் தரேன். நாம ஒரு டீல் போட்டுக்குவோம்! பார்க்கறப்பலாம் கட்டிப் புடிச்சிக்க வேணா, கிஸ் பண்ணிக்க வேணா! அதுக்கு பதிலா நான் மூச்சு விடறப்பலாம் நீ என்னைக் கட்டிக்கோ, நீ மூச்சு விடறப்பலாம் நான் உன்னை கிஸ் அடிச்சுக்கறேன்! எஸ் சிம்பிள் எஸ் தட்! ஓகேவா?” என்றான்.

 

என்ன கேடித்தனமா டீலிங்டா இது என்பது போல அவள் அதிர்ச்சியாய் பார்த்தாள்.

 

இன்னும் கொஞ்சம் அவளருகே நெருங்கியவன், இரு கரங்களாலும் அவள் கன்னத்தைப் பற்றிக் கொண்டான். பட்டென மூச்சை அடக்கிக் கொண்டாள் ஜீவா. இவனுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். சில நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் தம் கட்டி நின்றவள், கடைசியில் தோற்று வேகவேகமாக ஆழ மூச்சு எடுத்து விட்டாள். முகத்தில் முறுவலுடனே அவளைப் பார்த்திருந்தான் ஜோனா.

 

“தோ, மூச்சு விட்டுட்ட! இப்போ உன்னை கிஸ் பண்ணப் போறேன் மூலான்”

 

பெரிதாய் விரிந்திருந்த அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன், மெல்ல அவள் உதடுகளை நோக்கிக் குனிந்தான்.

 

அவன் பச்சை நிற கண்களில் குறும்பைப் பார்த்தவள், பட்டென அவன் கையைத் தட்டி விட்டாள்.

 

“கிஸ் பண்ணறவன் சொல்லிட்டு செய்ய மாட்டான் ஜோனா. இத்தனை நாளு மிஸ்பிஹேவ் செய்யாதவன், இனிமேத்தான் செய்யப் போறியான்னு கூட யோசிக்காம மூச்சப் புடிச்சுட்டு நின்ன நான் ஒரு முட்டாள்! என்னை எப்போ பாரு டென்ஷன் படுத்தி சந்தோஷப்பட்டுக்கற நீ ஒரு இடியட்! நகரு நான் ஜாகிங் போகனும்” என சொல்லியவள் இவளே அவனை விட்டு நகர்ந்து ஸ்ட்ரேச்சிங் செய்ய ஆரம்பித்தாள்.

 

காலையும் கையையும் நீட்டி, கழுத்தை அசைத்து, இடுப்பை வளைத்து என அவள் ஸ்ட்ரெச்சிங் செய்வதை கைக்கட்டிப் பார்த்திருந்தான் ஜோனா.

 

இப்பொழுதெல்லாம் நன்றாக தூங்குபவன் எழுந்து வரவே காலை மணி பத்தாகி விடும். அதற்குள் சத்தமில்லாமல் இவனுக்கு காலை உணவை செய்து வைத்து விட்டு, கடற்கரை மணலில் கால் புதைய ஓடி விட்டு வருவாள் ஜீவா. இன்று என்னவோ அதிசயமாக சீக்கிரம் எழுந்து வந்திருந்தான் ஜோனா.    

 

“நானும் ஜாகிங் வரேன் மூலான். லேடிஸ் மத்தியில என் புகழ் குறையனும்னு நீ செஞ்சு குடுக்கற ஹை கலோரி சாப்பாட்டுனால கிலோ எறிட்ட மாதிரி இருக்கு” என அவளை சீண்டியவன், சட்டையைக் கலட்டிப் போட்டுவிட்டு ஒட்டி இறுகி இருந்த வயிற்று சதையை பிதுக்கிக் காட்டினான்.

 

“தோ பாரு, தொந்தி வச்சிருச்சு! யூ டெவில்! நீ எவ்வளவு முயற்சி பண்ணாலும் என்னை தொந்தியும் தொப்பையுமா ஆக்கற உன்னோட திட்டம் பலிக்கவே பலிக்காது! இனி நானும் ஜாகிங் வருவேன், ட்ரீம்மா இருப்பேன். ஒழுங்கா காலையில என்னையும் எழுப்பி எக்சர்சைஸ்க்கு கூட்டிட்டுப் போற!” என மிரட்டியவன், அவளை இடித்துக் கொண்டே ஸ்ட்ரெச்சிங் செய்ய ஆரம்பித்தான்.

 

இவள் இருக்கும் கொஞ்சம் க்ரோசரியை மேனேஜ் செய்து பார்த்து, பார்த்து ஹெல்த்தியாக சமைத்துக் கொடுத்தால்,

 

“சாலட் வேணா மூலான், ஹாட் டாக் போட்டு ஆம்லேட் செஞ்சு குடு. இந்த வெஜிடெபிள் சூப் வேணா மூலான். ப்ரோஷன் பிட்சாவ ஹீட் பண்ணி குடு” என வித விதமாக செய்ய சொல்லிக் கேட்பான்.

 

அவள் செய்து கொடுப்பதையும் நன்றாக மொக்கி விட்டு, டிப்பிக்கல் புருஷனைப் போல உப்பு உறைக்கவில்லை, ஹாட் டாக்(hotdog) குரைக்கவில்லை என்பான் ஜோனா.

 

அவ்வளவு இடம் இருந்தும் தன்னை இடித்துக் கொண்டு நின்றவனை முறைத்துக் கொண்டே தள்ளிப் போனாள் ஜீவா. இருவரும் ஸ்ட்ரெச்சிங்கை முடித்துக் கொண்டு காலை வெயில் இதமாய் மேனியை சுட, கடற்கரையில் ஓட ஆரம்பித்தார்கள். பாதி ஓட்டத்திலேயே மூச்சு வாங்க, குனிந்து தொடையைப் பிடித்தவாறு நின்று விட்டான் ஜோனா. இவள் நின்ற இடத்திலே ஓடிக் கொண்டே,

 

“என்னாச்சு ஜோனா?” என கேட்டாள்.

 

“ரொம்ப நாள் ஆச்சுல்ல ஓடி! அதான் உடம்புல ஸ்டமீனா இல்ல மூலான்” என மூச்சு வாங்கியவாறே பேசினான் ஜோனா.

 

“உடற்பயிற்சி செய்யறத விட்டுட்டா, மறுபடி தொடங்கறப்போ மெது மெதுவாத்தான் ஆரம்பிக்கனும் ஜோனா! ஒரேடியா ஸ்ட்ரேய்ன் பண்ணிக்கக் கூடாது!”

 

“தெரியும், தெரியும்! என் ட்ரைனர் ஏற்கனவே காசு வாங்கிட்டு சொல்லிக் குடுத்துருக்காரு. நீ ஃப்ரீயா ஜிம் லெஸ்ஸன்ஸ் ஆரம்பிக்க வேணா! தொடை பின்னால தசைலாம் இழுக்குது. என்னால நடக்க முடியாது மூலான். என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ” என்றவன் அவள் தோளில் தன் இரு கரங்களையும் போட்டு வளைத்துக் கொண்டு தன் பாரத்தை அவள் மேல் அழுத்தி, தலையை அவள் தோளில் சரித்துக் கொண்டான்.

 

முதலில் தடுமாறினாலும் தம் கட்டி அவன் பாரத்தை தாங்கி மெல்ல நடந்தாள் ஜீவா.

 

“ரொம்ப வலிக்குதா ஜோனா? வீட்டுல தைலம் இருக்கு, போட்டு விடறேன்! வலிக்கு இதமா இருக்கும்.”

 

அவளின் ஸ்டமீனாவை(உடல் ஆற்றல்), ஒரு பெண்ணுக்குள்ளே இவ்வளவு சக்தியா என ஆச்சரியமாக பார்த்திருந்தான் ஜோனா. கடத்தி வந்த அன்றும் எப்படி அவனை உள்ளே கொண்டு வந்திருப்பாள் என புரிந்தது அவனுக்கு. ஆண்களை தாங்கிக் கொள்வதே பெண்கள்தானே, உடலாலும் உணர்வாலும்! மெல்லினத்தில் கொஞ்சம் வல்லினத்தையும் ஒளித்து வைத்திருக்கிறானோ நம்மை படைத்தவன்! எல்லா பெண்ணுக்குள்ளும் ஓர் ஆண் உண்டு, எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு பெண் உண்டு என்பதை தான் அர்த்தநாரிஸ்வரராய் இருந்து உணர்த்துகிறானோ!

 

சற்று நேரத்திலேயே தன் பாரத்தை விலக்கிக் கொண்ட ஜோனா, ஒற்றைக் கரத்தை மட்டும் அவள் தோளில் போட்டவாறு நடக்க ஆரம்பித்தான். வீட்டை அடைந்ததும், முதல் வேலையாக தைலத்தை எடுத்து வந்தாள் ஜீவா.

 

“உட்காரு ஜோனா” என அவனை டைனிங் நாற்காலியில் அமர்த்தி கீழே அமர்ந்துக் கொண்டாள் இவள்.  

 

“இங்க வலிக்குதா? இல்ல இங்கயா?” என அவன் தொடையில் அங்கங்கே அழுத்திக் கொண்டே கேட்டாள் ஜீவா.

 

அவள் கைப்பட்ட இடமெல்லாம் ஷாக் அடித்தது போல இருந்தது இவனுக்கு. அவனிடம் பதில் இல்லாமல் போகவும்,

 

“சரி விடு! எல்லா இடத்துலயும் தடவி விடறேன்! கொஞ்ச நேரத்துல வலி ஓடியே போய்டும். தசை பிடிப்பு எதாச்சும் இருந்தாலும் சரியாகிடும்.” என சொல்லியவாறே தைலத்தை சூடு பறக்கத் தேய்த்து விட்டாள் ஜீவா.

 

ஒரு டாக்டர் நோயாளியை கவனிப்பது போல எந்த அட்டாச்மெண்டும் இல்லாமல், அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே தைலத்தைப் பூசிக் கொண்டிருந்தாள்.

 

‘இத தி கிரேட் ஜோனாவோட காலுன்னு நெனைச்சாளா இல்ல மரக்கட்டைன்னு நெனைச்சாளா! எந்த உணர்ச்சியுமே இல்லாம இவ பாட்டுக்கு வேலையைப் பார்க்கறா! எனக்கு மட்டும் ஏன் கீழ குனிஞ்சு தைலம் தடவறவளோடா தலையைத் தடவிக் கொடுக்கனும்னு தோணுது? அந்த முகத்த அப்படியே இழுத்து என் வயித்துல அழுத்திக் கட்டிக்கனும்னு ஏன் தோணுது?’ என நினைத்தவனின் கை சொன்ன பேச்சு கேட்காமல் மெல்ல அவள் தலை முடியை அளைவதற்கு நெருங்கியது. பட்டென கையை இழுத்துக் கொண்டவன், எழுந்து நின்றுக் கொண்டான்.

 

கீழே அமர்ந்தப்படியே அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

 

“வலி போயிடுச்சா ஜோனா?” என கேட்டாள்.

 

“யா, யா!” என முணுமுணுத்தவன் எழுந்து குளியலறைக்கு சென்று விட்டான்.

 

அவன் குளித்து முடித்து வந்ததும், இருவரும் காலை உணவு உண்ண அமர்ந்தார்கள். எப்பொழுதும் ஒன்றாக சாப்பிடும் பொழுது, அவளை வம்பிழுத்துக் கொண்டே சாப்பிடுபவன், அன்று அமைதியாக இருந்தான்.

 

அவனுக்கு ப்ரேட் டோஸ்டும், ஆம்லேட்டும் செய்திருந்தவள், இவளது காலை உணவாக டீயில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிட்டாள். அதை கவனித்தவன், தனது அமைதியைக் கை விட்டு,

 

“ஜாகிங் செஞ்சிட்டு வந்து, நல்லா சாப்பிடாம என்னதிது பிஸ்கட் சாப்பிட்டுட்டு இருக்க?” என கேட்டான்.

 

“இன்னிக்கு பிஸ்கட் சாப்பிடனும் போல இருக்கு ஜோனா” என்றவள் டீயை ரசித்துக் குடித்தாள்.

 

நேற்றும் அவள் காலை உணவுக்கு பிஸ்கட் சாப்பிட்டது போலத்தான் இருந்தது ஜோனாவுக்கு. மதியத்துக்குக் கூட அவனுக்கு நன்றாக சமைத்துக் கொடுத்தவள், வயிறு சரியில்லை என சொல்லி வெறும் சூப் மட்டும் அருந்தி இருந்தாள். சட்டென எழுந்தவன், கிச்சனில் இருந்த காபினேட் எல்லாவற்றையும் ஒன்றொன்றாக திறந்துப் பார்க்க ஆரம்பித்தான். உணவு பொருட்கள் கிட்டத்தட்ட காலியாகும் நிலையில் இருந்தன. இருப்பதை எல்லாம் அவனுக்குக் கொடுத்து விட்டு, இவள் அரை வயிறும் கால் வயிறும் உண்டிருக்கிறாள் என புரிந்துப் போனது ஜோனாவுக்கு.

 

அவள் அருகே வந்து இடுப்பில் கை வைத்தப்படி நின்றவன்,

 

“ஏன் மூலான்?” என கேட்டான்.

 

“க்ரோஷரி வாங்கனும்னா வெளிய போகனும்! அப்படி வெளிய போக வேண்டிய நிலமை வந்தா, ‘சரி வெளியத்தானே போற, அப்படியே என்னை சிட்டில விட்டுரு! நான் கெளம்பறேன்’னு நீ சொல்லிடுவியோன்னு பயமா இருந்தது ஜோனா! என் வாழ்க்கையில இந்த சில நாட்கள் தான் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! அந்த சந்தோஷம் இன்னும் கொஞ்ச நாள் நீடிக்கும்னா நான் முழுப்பட்டினியா இருக்கவும் தயார்” என்றவளை பார்த்தப்படியே நின்றிருந்தான் ஜோனா.

 

அவளை கிண்டல் செய்து, கேலி செய்து, உட்கார விடாமல் வேலை வாங்கி, கோபம் வரும் போது திட்டி தலையணையை விட்டடித்து என அவள் நாட்களை இவன் ரணகளமாக்கி இருந்தாலும், அதையும் நீட்டிக்க விரும்பும் ஜீவாவை நினைத்து இவனுக்கு நெஞ்சுக்குள் பிசைந்தது. இவள் காட்டும் அன்புக்கும், அக்கறைக்கும், பாசத்துக்கும், நேசத்துக்கும் தான் தகுதியானவனா என இவன் மனசாட்சி கேள்விக் கேட்டது!

 

தனக்கு ஒன்றும் இல்லை என்றாலும், பிள்ளை சாப்பிடட்டும் என நினைப்பாள் தாய். அதே போலத்தான், உணவு பத்தவில்லை என்றால் கணவனுக்கு மொத்தத்தையும் வைத்து விட்டு பழையதை உண்பாள் மனைவி. (எல்லாரும் இந்த கேட்டகரில வரமாட்டோம்! ஏன் நானுமே வர மாட்டேன். கொஞ்சமா இருந்தாலும் எனக்கும் பாதி வேணும்னு நிக்கற ஆள் நான். மக கிட்ட மட்டும்தான் இந்த விட்டுக் கொடுத்தல் எல்லாம்! மத்தப்படி எனக்கும் வயிறு இருக்கு மேன்! பசிக்கும்ல!) இவள் எனக்கு தாயா தாரமா என்பது போல பார்த்திருந்தான் ஜோனா.

 

“கிளம்பிடுவியா ஜோனா?” என அமர்ந்த வாக்கிலேயே அவனை நிமிர்ந்துப் பார்த்து கேட்டவளின் கண்கள் வெளியே சிந்தாத கண்ணீரால் பளபளத்தது.

 

சட்டென அவளை வயிற்றோடு இறுக்கிக் கட்டிக் கொண்டான் ஜோனா! கை ஆதரவாய் அவள் தலையை வருடிக் கொடுத்தது.

 

“இப்போதைக்கு போகல மூலான்! உன் கூடவே இருக்கேன்! ஆனா நீ பட்டினி கிடக்கறது எனக்குப் பிடிக்கல! நீ தெம்பா இருந்தாத்தானே எனக்கு வேலை செஞ்சுக் குடுக்க முடியும்! நாளைக்கு நியரெஸ்ட் சிட்டிக்குப் போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு, தேவையானத வாங்கிட்டு வரலாம். சரியா?”

 

அவன் பிடிக்குள் இருந்தவள், தலையை சரி என ஆட்டினாள்.

 

நாளைக்கு வெளியே போகலாம் என இவர்கள் திட்டம் போட, அன்றைய இரவே வெளியே போக வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்தது விதி.

 

{மயங்குவா(ன்/ள்)}

 

(எல்லோருக்கும் வணக்கம்! சாரி டியர்ஸ், ரொம்பவே லேட் ஆகிருச்சு. இன்னிக்கு எபி படிச்சுட்டு நீங்க ஜீவாவ பத்தி என்ன நினைக்கறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க.. அவளுக்கு லவ் இருக்கா இல்லையா, வருமா வராதா!! இப்படி எதாச்சும் சொல்லுங்க. அவ கேரெக்டர் ரொம்பவே சேலெஞ்சிங்கா இருக்கு. அதனாலதான் தெரிஞ்சிக்க கேக்கறேன். என்னைத் தேடி மீம் போட்ட மக்களே, நன்றிகள் பல. இன்பாக்ஸ் வந்தவங்களுக்கும் நன்றி. போன எபிக்கு லைக் காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த எபில பார்க்கற வரைக்கும், நன்றி நமக்கம். லவ் யூ ஆல்)