MMM–EPI 8

122620776_740997409820929_9109553537495410146_n-91f2cf8c

அத்தியாயம் 8

 

அதே ஆளரவமற்ற ஸ்டேஜ். அதே இருட்டு, அவன் மேல் மட்டும் ஸ்போட் லைட்! குரல் வெளி வரவில்லையே எனும் பயம் மனதைக் கவ்வ, முகம் வெளிறிப் போய் கிடக்க, நெற்றியில் முத்து முத்தாய் வேர்த்திருக்க, பேனிக் அட்டாக்கில் இருதயம் பட படவென அடிக்க, மயங்கி விழும் நிலையில் இருந்தான் ஜோனா. கண்களை சிமிட்டி, கைக்கால்களை மெல்ல ஆட்டி தன்னை தழுவ வரும் மயக்கத்தில் இருந்து விடுபட போராடினான். அவன் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிக் போக, கண்கள் மெல்ல சொறுகி உடல் துவண்டு விழும் நிலைக்கு செல்ல ஆரம்பித்தது.

 

அந்த நேரத்தில் தேவகானமாய் க்ரீச் எனும் சத்தம் காதில் விழ, கண்களை அகலமாக விரித்துப் பார்த்தான் ஜோனா. ஸ்டேஜின் மேய்ன் கதவைத் திறந்து வெள்ளை உடை அணிந்த உருவம் ஒன்று அவனை நோக்கி ஒயிலாய் நடந்து வந்தது. யாரென கண்களை சுருக்கிப் பார்த்தான் இவன். இருட்டில் அவ்வுருவத்தின் முகம் சரியாய் தெரியவில்லை. மெல்ல நடந்து வந்த அவ்வுருவம், முன் வரிசையில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டது. அது அமர்ந்த நொடி, ஸ்போட் லைட் இவனிடம் இருந்து விலகி அவ்வுருவத்தின் மேல் பாய்ந்தது.

 

வெள்ளை உடை உருவத்தின் முகம் கண்ணுக்குப் புலப்பட்ட நொடி, இவன் உடல் அப்படியே சிலிர்த்து அடங்கியது. வார்த்தைகளை வெளி அனுப்பாமல் சத்தியாகிரகம் செய்த தொண்டையில் இருந்து,

 

“ஏஞ்சல்!” எனும் சொல் பூஞ்சிதறலாய் வெளிப்பட்டது.

 

தனக்கு குரல் வந்து விட்டதை பெரும் அதிசயத்துடன் உணர்ந்தவன் முகம் முழுக்க புன்னகையுடன்,

 

“ஏஞ்சல்!!!” என அந்த அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தி அழைத்தான்.

 

படக்கென கண்கள் திறந்துக் கொள்ள, இவ்வளவு நேரம் அதி வேகமாய் துடித்துக் கொண்டிருந்த நெஞ்சை வலது கரத்தால் மெல்ல நீவி விட்டான் ஜோனா. மெல்லிய இருட்டில் மூழ்கி இருந்த அறையை பார்வையால் அலசியவன், நெற்றியில் பூத்திருந்த வேர்வையைத் துடைக்க இடது கையைத் தூக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. மெல்ல திரும்பி இடது பக்கம் பார்க்க, அவன் கை மேல் கன்னத்தை வைத்து அழகாய் உறங்கிக் கொண்டிருந்தாள் ஜீவா.

 

“ஏஞ்சல்!” என அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

 

மல்லாக்கப் படுத்திருந்தவன் கொஞ்சமாய் அவள் புறம் திரும்பி, தன் வலக்கரம் கொண்டு அவள் தலையை மெல்ல தடவிக் கொடுத்தான்.

 

“மை ஏஞ்சல்!” சத்தமில்லாமல் வந்து விழுந்தன வார்த்தைகள்.

 

குழந்தைப் போல தூங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தைப் பல நிமிடங்கள் பார்த்தப்படியே படுத்திருந்தான் ஜோனா. கட்டிலின் அருகே நாற்காலியைப் போட்டு, சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளின் மெல்லிய மூச்சு விடும் சத்தம் கூட சங்கீதமாய் இசைத்தது அவன் செவிகளில். கண் மூடி, அவள் மூச்சின் ரிதத்துக்கு ஏற்ப, ஆர்கேஸ்ட்ராவின் மியூசிக் கண்டெக்டர் போல வலது கையை மெல்ல அசைத்தான் ஜோனா. ‘பியூட்டிபுள் ஏஞ்சலுக்கு’ அழகான டியூன் வந்து அவன் மனதில் அமர்ந்துக் கொண்டது. முகம் மலர்ந்து விகசிக்க, கண்களைத் திறந்து தூங்குபவளையே மீண்டும் புன்னகையுடன் பார்த்திருந்தான் இந்தப் பாடகன்.

 

அவள் கன்னத்துக்கு கீழிருந்த கையை மெல்ல உருவிக் கொண்டவன், சத்தமில்லாமல் எழுந்து அமர்ந்தான். பின் கட்டிலில் இருந்து இறங்கியவன், முதுகை வளைத்துப் படுத்திருந்தவளை கைகளில் அள்ளிக் கொண்டான். உடல் அலுத்துக் களைத்திருந்தும், கஸ்டப்பட்டு கண்ணிமைகளைப் பிரித்தாள் ஜீவா.

 

“ஜோனா!” என கரகரத்த குரலில், அவன் தூக்கியதை ஆட்சேபித்தாள் மங்கை.

 

“ஷ்!!! மூலான்! கோ பேக் டு ஸ்லீப்!” என்றவன் அவளை கட்டிலில் வசதியாகப் படுக்க வைத்தான்.

 

தலை தலையணையைத் தொட்டதும், இரு கைகளையும் நெஞ்சுக்கடியில் வைத்து, ஒற்றைக் காலை சற்று மேலுயர்த்தி குப்புறப் படுத்துக் கொண்டவள், மீண்டும் உறங்கிப் போனாள். அவள் ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லும் வரை காத்திருந்தவன், மறுபக்கம் வந்து அவளை மென்மையாக அணைத்துப் படுத்துக் கொண்டான்.

 

தூக்கத்தில் கூட மெல்லிய குரலில்,

 

“ஹ்ம்ம், விடு!”  என அவள் சொன்னதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டவன்,

 

“இனி விடவே மாட்டேன் மூலான்!” என அவள் காதின் அருகே முணுமுணுத்தான்.  

 

அதற்கு மேல் தூக்கம் வராமல், உறங்கிக் கொண்டிருந்தவளின் முதுகை மெல்ல வருடியவாறே அப்படியே படுத்துக் கிடந்தான் ஜோனா.

 

அன்று பகலில், இருந்த கொஞ்ச க்ரோஷரியை வைத்து ஜோனாவுக்காக ஸ்பெகெட்டி செய்திருந்தாள் ஜீவா. அவளுக்காக கொஞ்சமாக ப்ரெட்டைப் பிய்த்துக் போட்டு, உறைப்பு நிறையவே சேர்த்து, முட்டை கலந்து ப்ரேட் மசாலா செய்திருந்தாள். உணவு மேசையில் அமர்ந்தவன், தனது தட்டை அவளுக்கு நகர்த்தி வைத்து விட்டு, அவளது தட்டை இவன் எடுத்துக் கொண்டான்.

 

“ஏன் ஜோனா?”

 

“சாப்பிடு! ரெண்டு நாளா நீ சரியாகவே சாப்பிடல! பெரிய செய்ண்ட்னு(saint) நினைப்பா உனக்கு! எப்பவுமே முதல்ல நம்ம வயித்தத்தான் பார்க்கனும்! அப்புறம்தான் மத்தவங்கள நெனைக்கனும்! நாம தெம்பா இல்லைனா நம்ம சார்ந்தவங்கள எப்படி பார்த்துக்க முடியும்? டைம் பாஸீக்கு உன்னை வேற லவ் பண்ணலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். நீ மயங்கி வச்சா, அப்புறம் நான் யார கிஸ் பண்ண? யார கட்டிப்புடிக்க?”

 

அப்பொழுதும் அடமாக இவள் சாப்பிடாமல் இருக்க,

 

“இப்போ நீ சாப்பிடலனா, எனக்கும் சாப்பாடு வேணா!” என நாற்காலியில் இருந்து எழுந்துக் கொண்டான் ஜோனா.

 

சட்டென அவன் கையைப் பற்றிக் கொண்டவள்,

 

“சாப்பிடறேன் ஜோனா! நீ உட்காரு ப்ளிஸ்” என சொல்லி அந்த ஸ்பேகட்டியை சாப்பிட ஆரம்பித்தாள்.

 

மீண்டும் நாற்காலியில் அமர்ந்தவன் அவள் சாப்பிடுவதையே கைக்கட்டிப் பார்த்திருந்தான். பாதியில் நிறுத்தியவள்,

 

“இது போதும் ஜோனா எனக்கு! நீ சாப்பிடு” என தட்டை அவனருகே நகர்த்தினாள்.

 

“என்னது? நீ எச்சிப் பண்ணத இந்த கிரேட் ஜோனா சாப்பிடனுமா? நோ வே லெடி, நோ வே! இந்த ஜோனா கூட எச்சில் பண்டமாற்று செஞ்சுக்கனும்னா அது உதட்டு முத்தமா மட்டும்தான் இருக்கனும்! மத்தப்படி ஃபூட் ஷேரிங்லாம் எனக்கு ரொம்பவே அலர்ஜி! சோ, இத நீயே சாப்பிட்டு முடி”

 

முத்தமிடுவதை பண்டமாற்று முறை என ஒப்பீடு செய்தவனை புன்னகையுடன் நோக்கியவள்,

 

“ஒரே பொருள(எச்சில்) ஒருத்தொருக்கொருத்தர் கொடுத்து மாத்திக்கிறது பண்டமாற்று முறையில வராது ஜோனா. நான் உப்பு வித்தா, நீ சீனி விக்கனும்! அது தான் பண்டமாற்று சிஸ்டம்!” என ஆர்கியூ செய்தாள்.

 

“மிஸ் என்சைக்கிளோப்பீடியா! கிஸ் செய்யறப்ப ஆண்களின் எச்சில்ல டெஸ்டொஸ்டெரென்ற (testosterone) ஹோர்மோன் வெளியாகுமாம். அது பெண்களோட எச்சில்ல மிஸ்ஸிங். சோ ஓரே பொருளா இருந்தாலும், அதுல உள்ள எலெமென்ட்ஸ் வேறங்கறதுனால, கிஸ்ஸிங் இஸ் எ பார்ட்டர் சிஸ்டம் தான் (பண்டமாற்று முறை)!  நீ நம்பலைனா, இப்போவே நாம ரெண்டு பேரும் டெஸ்ட் செஞ்சுப் பார்த்திடலாமா?” என முத்தமிடுவது போல நெருங்கியவன் கையை சிரித்தப்படியே விளையாட்டாக அடித்தாள் ஜீவா.     

 

“யூ ஆர் க்ரேசி!”

 

“யா, ஐ க்நோ! இன்னொரு விஷயம் தெரியுமா மூலான்? ஒரு அவரேஜ் கிஸ்ல நம்ம பார்ட்னரோட எச்சில்ல இருந்து 9 மில்லிகிராம் தண்ணீரும், 0.7 மில்லிகிராம் கொழுப்பு சத்தும், ப்ரோட்டினும் நமக்குக் கிடைக்குதாம்! அதனால என்ன சொல்ல வரேன்னா, கிஸ்ஸிங் இஸ் எ ப்ளெஸ்ஸிங்!” என மிதப்பாக சொன்னவன், அவள் உண்டு முடித்ததும் தான் ப்ரேட் மசாலாவை இவன் சாப்பிட ஆரம்பித்தான்.

 

“இது உறைக்கும் ஜோனா! நான் வேற எதாவது செஞ்சு குடுக்கவா?” என எழுந்தாள் ஜீவா.

 

“எங்க ஊர்ல நண்டோஸ் சிக்கனை, எக்ஸ்ட்ரா ஹாட்னு ஆர்டர் செஞ்சு சாப்பிடுவேன் நான். இந்த உறைப்பெல்லாம் என்னை ஒன்னும் செய்யாது” என பந்தாவாக சொன்னவன், சாப்பிட ஆரம்பித்தான்.

 

முதல் வாய் வைத்ததுமே, அதன் காரம் நெஞ்சுக் குழி வரை எரிய ஆரம்பித்தது. ஆனாலும் அவளிடம் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், முழுதும் உண்டு முடித்தவன்,

 

“என்னோட போனை சார்ஜர்ல போடு மூலான்” என அவளிடம் நீட்டினான்.

 

தொன்னூறு சதவீதம் சார்ஜ் இருந்தது அதில். ஒன்றும் பேசாமல், வாங்கிக் கொண்டு ரூமுக்குள் போனாள் அவள். ஜீவா அகன்றதும், ஜக்கில் இருந்த தண்ணீரை அப்படியே வாய்க்குள் சரித்துக் கொண்டான் இவன்.

 

“ப்ளேடி ஹேல்! சோ ஸ்பைசி! எப்படித்தான் இப்படி சாப்பிடறாங்களோ. இந்த வெட்டி பந்தாலாம் நமக்குத் தேவையா! மூலான் வேற ஃபூட் வேணுமான்னு கேட்டப்பவே சரின்னு சொல்லிருக்கனும். ஆ!!!!!!” என முனகியவன், சிங்க் அருகே போய் இன்னும் தண்ணீர் எடுத்துக் குடித்தான். கண்கள் கலங்கி சிவந்துப் போனது.  

 

அவ்வளவு நீரை பருகியும் வயிற்றின் எரிச்சல் மட்டுப் படவேயில்லை. எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாக வலியாக மாறியது. மாலை தேநீரையும் இரவு உணவையும் அவள் வற்புறுத்தியும் வேண்டாம் என மறுத்தவன், ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன செய்யுது ஜோனா? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என பலமுறை கேட்டு விட்டாள் ஜீவா.

 

“நத்திங்!” என்பதே அவன் பதிலாய் இருந்தது.

 

வயிற்றைத் தடவி, ஏப்பம் விட முயன்று என இவன் செய்த எதுவும் பலனளிக்காமல் போக, சற்று நேரத்துக்கெல்லாம்  விடுவிடுவென பாத்ரூம் நோக்கி ஓடினான் ஜோனா.

 

இவளும் அவன் பின்னாலேயே ஓடினாள். அவள் உள் நுழைவதற்குள் பாத்ரூம் கதவை சாத்திக் கொண்டவன், குடலே வெளி வந்து விடுவதைப் போல வாந்தி எடுத்தான்.

 

“ஜோனா, ஓப்பன் தெ டோர்! ஜோனா” என கத்திக் கொண்டே கதவைத் தட்டியபடி இருந்தாள் ஜீவா.

 

மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது.

 

“டேய், கதவ திறடா! ஜோனா ப்ளிஸ்”

 

இவளது கெஞ்சல் எதுவும் அவன் காதில் விழவில்லை. ஏற்கனவே சென்சிட்டிப்பான டைஜெஷன் சிஸ்டத்தைக் கொண்டவன், உறைப்பு சாப்பிட்டது மட்டுமில்லாது, அதற்கு மேல் ஒன்றும் சாப்பிடாமல் வயிற்றைக் காயப் போட்டதும் நன்றாக காற்று ஏறி வயிறு உப்புசமாகி இருந்தது. விடாமல் வாந்தி எடுத்து மயங்கும் நிலைக்குப் போனவனின் காதில், ஜீவாவின் அழுகை சத்தம் கேட்க. கஸ்டப்பட்டு நகர்ந்து கதவின் தாள்ப்பாளை நீக்கினான்.

 

சட்டென உள்ளே நுழைந்தவளின் மேல் இவன் சரிய, அவனோடு கீழே சரிந்தாள் ஜீவா. தன் மேல் விழுந்துக் கிடந்தவனை மெல்ல அணைத்துக் கொண்டாள் இவள். அவன் முதுகை வருடி,

 

“ஒன்னும் இல்ல! நல்லா போயிடும் ஜோனா! யூ வில் பீ ஆல்ரைட்!” என திரும்ப திரும்ப சொன்னளை மெல்ல கண் திறந்துப் பார்த்தான் ஜோனா!

 

அவளின் தவிப்பு, கண்களில் வழிந்த கண்ணீர், முகத்தில் இருந்த பதட்டம் எல்லாம் இவனை என்னவோ செய்தது. ஆனாலும் பேசவோ, அவள் மேல் இருந்து எழும்பவோ உடம்பில் தெம்பில்லாமல் அப்படியே கிடந்தான் ஜோனா.

 

அவன் சட்டையெல்லாம் வாந்தியாய் இருக்க, தன் மேலேயும் அதையெல்லாம் அப்பி இருந்தவனைப் பார்த்து கொஞ்சம் கூட அருவருப்பு வரவில்லை ஜீவாவுக்கு. மெல்ல அவனைத் திருப்பி பாத்ரூம் தரையிலேயே படுக்க வைத்தவள், எழுந்துக் கொண்டாள். அவன் மேலே வந்து விழுந்ததில், இடுப்பும் முதுகும் வலி பின்னி எடுத்தது. தனது வலியைக் கண்டுக் கொள்ளாமல்,

டவலை நனைத்து எடுத்து வந்தவள் அவன் முகத்தை மென்மையாக துடைத்து விட்டாள்.  சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்டியவள், அவனை மெல்ல மேலே தூக்கி சட்டையை அகற்றினாள். தன் மேல் சாய வைத்து அவன் உடம்பின் முன் பாகத்தைத் துடைத்தவள், நெஞ்சை மெல்ல நீவி விட்டாள்.

 

“எத்தனை தடவ கேட்டேன், என்ன செய்யுது ஜோனான்னு? ஒரு வார்த்தை வயித்த வலிக்கிதுன்னு சொன்னியா? இடியட்” என கலங்கிய குரலில்  திட்டியப்படியே அவனை சுத்தப்படுத்தினாள்.

 

அவன் உடம்பில் மெல்ல சூடு ஏற ஆரம்பிப்பது போல இருந்தது.

 

“காய்ச்சல் வரப் போகுது போல! நான் ஒரு முட்டாள்! இன்னும் ரிக்கவரி மோட்ல இருக்கறவன கடத்திட்டு வந்தது என் தப்பு! ஜீவா இஸ் எ செல்பிஷ் பிட்ச்!” என தன்னைத் தானே திட்டிக் கொண்டே அவனது ஷார்ட்சை மாற்ற முயன்றாள்.

 

அவள் கையைப் பற்றித் தடுத்தவன்,

 

“ஐ கென் மேனேஜ்!” என மெல்லிய குரலில் சொன்னான்.

 

“இப்படியே இரு ஜோனா! நான் மாத்துத் துணி எடுத்துட்டு வரேன்! நாம சீக்கிரம் கிளினிக் போகலாம்!” என்றவள் ரூமுக்கு ஓடினாள்.

 

திரும்பி வரும் போது அவளுமே வேறு டீஷர்ட்டுக்கு மாறி இருந்தாள். அவள் உதவியுடன் உடை மாற்றியவன், அவள் கைப்பிடித்து பாத்ரூமில் இருந்து மெல்ல வெளியே வந்தான். உடம்பில் சூடு கொஞ்சம் கொஞ்சமாக ஏற, உடல் நடுங்க ஆரம்பித்தது அவனுக்கு.

 

அவனை சோபாவில் அமர்த்தியவள், ஓடிப்போய் காரை ஸ்டார்ட் செய்தாள். பின் உள்ளே வந்து அவனை எழுப்பி கைத்தாங்கலாக அழைத்துப் போய் காரில் அமர்த்தினாள். பின் மீண்டும் ஓடிப் போய் வீட்டுக் கதவைப் பூட்டியவள், டேஸ்போர்டில் இருந்து ப்ளாஸ்டிக் பையை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

 

“வாந்தி வந்தா இதுல எடு ஜோனா! கீழ சிந்திட்டாக் கூட பரவாயில்ல. நான் கழுவிக்கறேன்” என்றவள் காரை பறக்க விட்டாள்.

 

கார் சீட்டில் சாய்ந்தப்படி, அவளையேப் பார்த்தவாறு வந்தான் ஜோனா. ஒரு கை ஆதரவாய் அவன் தொடையை வருடிக் கொடுக்க, ஒற்றைக் கையால் காரை செலுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

 

கண்களை மூடிக் கொண்டவன், தனக்காக இப்படி வேறு யாரெல்லாம் துடித்திருக்கிறார்கள் என ஞாபக இடுக்கில் தேடிப்பார்த்தான். ஒரு ஆறு ஏழு வயது வரை உடம்பு சரி இல்லாமல் போனால் அவன் அம்மா அருகே அமர்ந்து மருந்துக் கொடுத்துப் பார்த்துக் கொண்டது லேசாய் நினைவில் வந்தது. அதன் பிறகு இவனுக்குக் கீழ் தம்பி தங்கைகள் என ஆகிவிட, உடம்பு முடியாத போது செல்லம் கொஞ்ச அவருக்கும் நேரமில்லை, இவனுக்கும் தன்னிடம் அவரைப் பிடித்து வைக்க இஸ்டமிருந்ததில்லை. காய்ச்சல், வயிற்று வலி என்றால் அம்மாவிடம் மருந்து வாங்கிக் குடித்து விட்டு தானாய் போய் சுருண்டுப் படுத்துக் கொள்வான்.

 

பதினாறு வயதுக்குப் பிறகு, தந்தை தாய் பாசம் என்பது கானல் நீர் என புரிந்ததும் அவனுக்கு என இருந்தது அவன் மட்டுமே! நண்பர்களிடம் கூட சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்துக் கொள்பவன், உடல் உபாதைகளை பெரிதாகக் காட்டிக் கொள்ள மாட்டான். இன்று இவள் தனக்காகத் துடித்து, அழுதது, தன்னைத் தானே திட்டிக் கொண்டது எல்லாம் இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. பாறையாய் இறுகிக் கிடந்த இதயம், பனிக்கட்டியாய் உருகி கரைந்துப் போனது அவளன்பில். தன்னலமற்ற அந்த அன்பு இன்றும், இனி என்றும் தனக்கே தனக்காய் வேண்டும் என அவன் மனது அடம் பிடிக்க ஆரம்பித்தது. மெல்லிய புன்னகை முகத்தில் பரவ, அவள் தோளில் சாய்ந்துக் கொண்டான் ஜோனா.

 

“இதோ! கிட்ட வந்துட்டோம் ஜோனா! யூ வில் பீ ஆல்ரைட்!” என அவனை சாமாதானப்படுத்திக் கொண்டே இடது கையை மடக்கி அவன் கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள் ஜீவா.    

 

பாண்டிச்சேரியில் அந்த நேரத்துக்கு திறந்திருந்த கிளினிக்குக்கு அவனை அழைத்துப் போனாள் இவள். அவசரத்தில் அவன் ஐடெண்டியை மறைக்கும் படி தொப்பியோ, கூலர்சோ எதுவும் எடுத்து வந்திருக்கவில்லை. அவர்களின் நல்ல நேரம், ஒன்றிரண்டு ஆட்களே இருந்தார்கள் அங்கே. அவர்களுக்கும் இவனைத் தெரிந்திருக்கவில்லை. பதிவு எல்லாம் முடித்து, டாக்டரின் அறைக்குள் நுழையும் வரை உடலைக் குறுக்கி அவள் தோளில் சாய்ந்தப்படித்தான் அமர்ந்திருந்தான் இவன். இவளும் மெல்லியக் குரலில் தாய் குழந்தையை சமாதானப்படுத்துவது போல,

 

“நல்லாயிடும் ஜோனா! யூ ஆர் எ ஸ்ட்ரோங் மேன்! இன்னும் கொஞ்ச நேரம்தான்” என சொல்லிக் கொண்டே இருந்தாள்.  

 

உள்ளே நுழைந்தவனைப் பார்த்த அந்த பெண் டாக்டரின் கண்கள் பெரிதாய் விரிந்தன.

 

“ஓ மை காட்! ஓ மை காட்! ஜோனா!!!!!” என அழைத்தப்ப்படியே தனது இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டாள் அவள்.

 

“என்னால நம்பவே முடியலை! தே பேமஸ் சிங்கர் ஜோனா இன் அவர் கிளினிக்” என ஆர்ப்பாட்டமாய் வரவேற்றாள்.

 

“டாக்டர், அவர பேஷண்டா முதல்லா பார்க்கறீங்களா? அப்புறமா சிங்கரா பார்க்கலாம்” என பொறுமையை கை விட்டு குரலை உயர்த்தினாள் ஜீவா.

 

அவளது இரிட்டேட்டிங்கான குரல் தொனியில் இவனுக்கு மெல்லிய புன்னகைப் பூத்தது.

 

ஜீவாவின் குரலில் தன் நிலை அடைந்த டாக்டருக்கு, முக மலர்ச்சியை அடக்கவே முடியவில்லை. அவனைப் பரிசோதித்து, வயிற்று உப்புசத்துக்கும், கேஸ்ட்ரிக் வலிக்கும், காய்ச்சலுக்கும் மருந்து எழுதிக் கொடுத்தவள், ஒரு ஊசியையும் போட்டு விட்டாள்.

 

“ஓ மை காட்! உங்களுக்கு ஊசி போடற பாக்கியத்தை கொடுத்தக் கடவுளுக்கு எனது மனமார்ந்த நன்றிய சொல்லிக்கறேன்! ஐம் எ பிக் ஃபேன் ஆப் யூ ஜோனா!” என வளவளத்தப்படியே அடிக்கடி ஓ மை காட்டையும் சொல்லி சிகிச்சையை முடித்தாள் அந்த டாக்டர்.

 

இவர்கள் கிளம்பும் முன்,

“இந்த நிலையில கேக்கறது தப்புத்தான்! ஆனாலும் இப்படி ஒரு சான்ஸ் இனி எப்போ வருமோ! இப் யூ டோண்ட் மைண்ட், மே ஐ கெட் எ செல்பி ஜோனா?” என கேட்டாள் அந்த டாக்டர்.

 

“யெஸ்!” என இவனும்,

 

“நோ!” என ஜீவாவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

 

அவன் முகத்தோடு முகம் ஒட்டி செல்பி எடுத்துக் கொண்டே அனுப்பி வைத்தாள் அந்த பெண் டாக்டர்.

 

“உடம்பு முடியாத போது கூட செல்பிக்கு போஸ் குடுக்கனுமா?” என அவனைத் திட்டிக் கொண்டே காருக்கு அழைத்து வந்தாள் ஜீவா.

 

காரில் ஏறி அமர்ந்துக் கொண்டவன், சீட்டைப் பின்னால் சாய்த்து நன்றாக படுத்துக் கொண்டான். ட்ரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்த ஜீவா காரை ஸ்டார்ட் செய்தாள்.

 

“பொண்ணுங்க செல்பி கேட்டா, மறுக்கக் கூடாது மூலான்! பெண் பாவம் பொல்லாதது! சோ அவங்க எது கேட்டாலும் நோ சொல்லாம குடுத்துடனும்! இப்போ கிஸ் கேட்டுப் பாரேன், நீ போதும் போதும்ங்கற அளவுக்குக் குடுப்பேன்!” என மெல்லிய குரலில் அவளை வம்பிழுத்தான் ஜோனா.

 

“ஐயாவுக்கு வலி குறைஞ்சிருச்சு போல! ஜோக்லாம் வருது!” என திட்டிக் கொண்டே காரை செலுத்தினாள் ஜீவா.

 

காட்டேஜை அடைவதற்குள் உறங்கி இருந்தவனை, கெஞ்சி மிஞ்சி எழுப்பி உள்ளே கொண்டு வந்துப் படுக்க வைத்தவள், களைப்பில் உட்கார்ந்தபடியே தூங்கி இருந்தாள்.

  

அங்கே சென்னையில், குளிரூட்டப்பட்ட ஒரு புகழ் பெற்ற பிரியாணி கடையில் அந்த பெண் போலிஸ் ஆபிசருடன் அமர்ந்திருந்தான் தீரன். இவனுக்கு வயிறு சரியில்லை என சொல்லி ஐஸ் மோரை மட்டும் குடித்தவன், ஆபிசருக்கு கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான். நன்றாக சாப்பிட்டு முடித்தவர்,

 

“தீரா, அந்த கார் நம்பரைக் கண்டுப் புடிச்சிட்டோம்” என நிறுத்தி,

 

“நாலு மட்டன் பிரியாணி பார்சல் சொல்லேன்” என முடித்தார்.

 

‘சிக்கிருச்சா நம்பரு! தோ வரேன்டா பிட்சாக்காரா! உன்னால நான் சேர்த்து வச்ச காசெல்லாம் இவளுக்கு தீனி வாங்கிக் குடுத்தே கரைஞ்சுப் போச்சுடா! உன்னை மட்டும் கண்டுப்புடிச்சேன், கனல் கண்ணன் ஸ்டைல்ல ஒரு குத்து, சூப்பர் சுப்பராயன் ஸ்டைல்ல ஒரு எத்து, ஜகுவர் தங்கம் ஸ்டைல்ல ஒரு மொத்துன்னு உன் உடம்ப பார்ட் பார்ட்டா கலட்டி பாடையில ஏத்துறேன்டா’ என மனதிலேயே ஒரு ஆக்சன் படத்தை ஓட்டினான் தீரன்.

 

பார்சல் வாங்கிக் கொண்ட அந்த ஆபிசர்,

 

“ஆனா பாருங்க தீரன், அந்த நம்பர் ப்ளேட்டே ஒரு ஃபேக் நம்பர் ப்ளேட்! சோ நம்பர் கிடைச்சும் ஒரு புண்ணியமும் இல்ல! நாங்க இப்போ வேற கோணத்துல எங்க முயற்சிய தொடரனும்!” என பெரிய குண்டாக அவன் தலையில் போட்டு விட்டு கிளம்பிப் போய் விட்டார்.

 

“பிரியாணி(வடை) போச்சே!” என தலையில் கை வைத்தப்படி அமர்ந்து விட்டான் தீரன்.

 

அடுத்த நாளே அதிர்ஸ்டக் காற்று தீரனின் பக்கம் வீசியது!!!!

 

 

(இனி மயங்குவாள்…..) — அவன் தான் மயங்கிட்டானே!

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. நிறைய பேர் ஜீவாவின் மனநிலையை அழகா உள்வாங்கி இருந்தீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. இந்த எபில என்னால முடிஞ்ச அளவுக்கு எச்சில் ஆராய்ச்சி பண்ணிருக்கிறேன். இதனால நாட்டு மக்களுக்கு நாலு நல்லது நடந்தா எனக்கும் மகிழ்ச்சி!!!!! ஜஸ்ட் கிட்டிங்! இதோட அடுத்த எபில சந்திக்கலாம்! லவ் யூ ஆல் டியர்ஸ்)