122620776_740997409820929_9109553537495410146_n-75b87d4d

ப்ரோலோக் (முன்னுரை)

2010, உதகமண்டலம்

“சட்டையைக் கழட்டி காமிச்சாத்தான் நீ பொண்ணுன்னு ஒத்துக்குவோம். இல்லைனா எங்க கேங்குல அசைண்ட்மேண்ட் செய்ய நீ சேர முடியாது” என சொல்லி சிரித்த பெண்களை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்தாள் இவள்.

கண்கள் கலங்கும் போல இருந்தது அந்த பதினைந்து வயது மடந்தைக்கு. கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கீழே இறங்கினாலும் கன்னம் பழுக்கும் அளவுக்கு அறைந்தே தள்ளி விடுவார் இவள் அப்பா. அடிக்குப் பயந்தே பழகிய பழக்கம், அப்பா பக்கத்தில் இல்லாத போதும் தொடர்ந்தது. கண்ணை சிமிட்டி அழுகையை அடக்கியவள், அந்தப் பெண்களை புறக்கணித்து விட்டு வீட்டுக்கு நடையை எட்டிப் போட்டாள்.

அது உதகமண்டலம் என அழைக்கப்படும் ஊட்டி. ஒத்தக்கல் மந்து(ஒற்றைக்கல் மந்தை) என அழைக்கப்பட்ட இடம் ஆங்கிலேயர்களால் உதகமண்ட் என மறுவி இப்பொழுது உதகமண்டலமாகி இருந்தது.

இவள் ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் கோஎட் பள்ளியில் தான் படித்து வருகிறாள். ஆண் பையனைப் போல ஒட்ட வெட்டிய தலை முடி, கூரான மூக்கு, சின்னதாய் உதடு, வில்லாய் வளையாமல் நேர் கோட்டில் இருந்த புருவம், ஒல்லியான உடல்வாகு. தினம் செய்யும் கடுமையான உடற்பயிற்சியால் அந்த ஒல்லி உடம்பு கூட முறுக்கேறி தெரிந்தது. அவள் வயது பெண்களை விடவும் நெடு நெடு வளர்த்தி. இவள் பெண்ணாக இருப்பாளோ என நம்மை யோசிக்க வைக்கக் கூடியது அவளின் பெரிய கண்கள் மட்டுமே! பெண்கள் உடைக்குள் இருக்கும் ஓர் ஆண்மகன் என்பது போலத்தான் அவள் நடை உடை பாவனைகள் இருக்கும். பள்ளிக்கு பெண்கள் பாவாடை மற்றும் ஓவர்கோட் அணிய வேண்டும் எனும் கட்டாயம் இருந்ததினால் தான் அதை உடுத்தி வருகிறாள். வீட்டில் இருக்கும் நேரம் டீஷெர்ட், ஜீன்ஸ், ஷோர்ட்ஸ், ஸ்வெட்டர் என எல்லாம் ஆண்கள் அணியும் வகையிலேயே இருக்கும்.

பள்ளியின் கராத்தே டீமில் இருக்கிறாள் இவள். அதோடு ஹோக்கி டீமிலும் டீபென்ஸாக விளையாடுகிறாள். விழுந்து வாரி ரத்தக் காயம் ஆனாலும் துடைத்துப் போட்டு விட்டு மீண்டும் போய் ஃபீல்டில் நிற்பாள் இவள். படிப்பிலும் மிக மிக கெட்டிக்காரி.

இப்படி பல திறமைகள் கொண்டிருந்தால், கண்டிப்பாக பல எதிரிகளையும் சில துரோகிகளையும் சந்தித்துத்தானே ஆக வேண்டும். மற்ற விஷயங்களில் அவளை சாய்க்க முடியாது என்பதால், அவளின் பாலினத்தை கைகளில் எடுத்துக் கொண்டார்கள் இவர்கள்.

எதாவது ஒரு போட்டியில் வென்று வந்தால்,

“இது பொம்பள சட்டைப் போட்ட ஆம்பள! மத்த பொண்ணுங்கள ஜெயிச்சு கப்பு வாங்கறது பெருசா என்ன?” என அவள் காது படவே பேசி செல்வார்கள்.

“இது பாய்ப்ரெண்ட் தேடுமா, இல்ல கேர்ள்ப்ரேண்ட் தேடுமா? எதுக்கும் நாம, பொண்ணுங்களாம் கொஞ்சம் கவனமா இருக்கனும்டி! உரசி கிரசி வச்சிடப் போகுது நம்மள” என கேலி பேசி சிரிப்பார்கள் பெண் பிள்ளைகள்.

ஆண் பிள்ளைகளோ,

“உன்னை நான் மச்சின்னு கூப்பிடவா, மச்சினினு கூப்பிடவா? ஒரே கன்பீயூசனா இருக்கே!” என சொல்லி இவள் தோள் மேல் கைப்போடுவார்கள்.

தோளில் விழுந்த கையைப் பிடித்து முறுக்கி,

“மேல கைய வச்ச, செத்துருவடா!” என மிரட்டி விட்டு அசால்டாக கிளம்பிப் போய் விடுவாள் சின்னவள்.

இதனால் ஆண்கள் பக்கமும் அவளுக்கு நல்ல நண்பர்கள் இல்லை. பெண்கள் பக்கமும் நல்ல நட்புக்கள் இல்லை.

இப்பொழுது கூட குரூப்பாக அசைமேண்ட் செய்ய வேண்டும் என ஆசிரியர் சொல்லி இருந்ததனால் தான் அந்தப் பெண்களிடம் பேசப் போய் அவமானப்பட்டு வந்தாள்.

நடந்தே வீட்டை அடைந்தவள், கேட்டைத் திறந்து உள்ளே போனாள். போட்டிருந்த நீல ஸ்வேட்டரையும் மீறி குளிர் உடலை விறைக்க வைத்தது. வீட்டுக் கதவைத் திறக்கும் முன்னே, ஓடி வந்தது அவளது நாய் ஜோனா! ஜோனா, பார்டர் கூலி வகையை சேர்ந்த கருப்பு வெள்ளை நிறத்து நாய். கீழே அமர்ந்து, அதன் கழுத்தை சொரிந்து கொடுத்தவள்,

“ஐ மிஸ்ட் யூ ஜோனா! மிஸ்ட் யூ சோ மச்” என்றாள்.

அதுவும் லொல் லொல் என குரைத்து தனது மகிழ்ச்சியைக் காட்டியது.

“ராசா, டீ குடிக்க வாங்க! குளிருக்கு இதமா இருக்கும்” என சமையல் அறையில் இருந்து அழைத்தார் அவர்கள் வீட்டின் வேலைக்காரி மீனாக்குமாரி.

“வரேன் மீனம்மா!” என பதில் அளித்தவள்,

“ஜோனா, லெட் மீ வாஷ் அப் அண்ட் கம்” என தன் நாயிடமும் சொல்லி விட்டு குளியலறைக்கு சென்றாள்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, உடை மாற்றி சமையல் அறைக்கு வந்தாள். இனிப்பில்லாத டீ, காய்கறி சாலட், மற்றும் அவித்து பெப்பர் போட்ட சிக்கன் ப்ரேஸ்ட் அவளுக்காக காத்திருந்தது. நாற்காலியில் அமர்ந்தவள்,

“மீனம்மா, டாடிதான் இல்லையே! கொஞ்சமா காரசாரமா எதாச்சும் கண்ணுக்குக் காட்டக் கூடாதா?” என பாவமாய் கேட்டாள்.

“ஐயாவுக்கு தெரிஞ்சது, எனக்கு வேலை காலி ராசா!” என்றவருக்கு மனது கேட்கவில்லை.

தனக்கென வைத்திருக்கும் இஞ்சி ஊறுகாயை ஒரு கரண்டி அள்ளி அவள் தட்டில் வைத்தார் மீனம்மா. பட்டென வழித்து அதை வாயில் போட்டுக் கொண்டவள், கண் மூடி அதன் ருசியை அனுபவித்தாள்.

“என்னத்த பணம் இருந்து என்னத்த செய்ய! பெத்தப் புள்ளைக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு போட மனசு வரலியே இந்த ஐயாவுக்கு. எப்போ பாரு வெந்ததும் வேகாததுமா போட்டு வாட்டறாரே! என்ன டயட்டோ, என்ன கருமமோ!” என முணுமுணுத்தவாறே வேலையைப் பார்க்கப் போனார் அவர்.

உணவு உண்டதும், ஸ்டடி ரூமுக்குப் போய் நோட்பேட்டை எடுத்துப் பார்த்தாள் சின்னவள். அன்றைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என அவளுடைய தந்தையால் பட்டியலிடப்பட்டிருந்தது அதில்.

  1. என்சைக்ளோப்பீடியா பேஜ் நம்பர் 118ல் உள்ள எல்லாவற்றையும் மனனம் செய்ய வேண்டும்.
  2. டைம்ஸ் டேபிள் 66யை மனனம் செய்ய வேண்டும்.
  3. டிக்சனரியில் நேற்று எங்கு நிறுத்தினாயே அங்கிருந்து அடுத்த பக்கம் முழுவதும் மனனம் செய்ய வேண்டும்.

“அப்பாடா! இன்னிக்கு மூனு டாஸ்க் தான்! நேத்து மாதிரி அஞ்சு இல்ல!” என சந்தோசப்பட்டுக் கொண்டவள், கடகடவென படித்து மனனம் செய்ய ஆரம்பித்தாள்.  

தந்தைக் கொடுத்த வேலையை முடித்தவள், அதன் பிறகே பள்ளிப் பாடங்களை செய்ய ஆரம்பித்தாள். அதையெல்லம் முடிப்பதற்குள் வீட்டிற்கு வந்திருந்தார் அவள் டாடி. உணவை முடித்துக் கொண்டவர் அவளது ஸ்டடி ரூமுக்கு வந்தார்.

“குட் ஈவ்னிங் டாடி”

“குட் ஈவ்னிங்” என்றவாறே, என்சைக்ளோபேடியாவைக் கையில் எடுத்தவர்,

“டெல் மீ அபாவ்ட் ரெய்ன்போ!” என்றார்.

“சன்லைட் தூறல் போடற மழைத்துளி மேல பாஸ் ஆகறப்போ ரெய்ன்போ வருது டாடி!”

“குட்!” என்றவர் மற்ற மற்ற கேள்விகளையும் மிஷின் கன்னில் இருந்து தெறிக்கும் தோட்டா போல தெறிக்க விட்டார். இவளும் படபடவென பதிலளித்தாள்.

“குட் குட்! லவ் யூ சன்(son)”

தந்தையின் பாராட்டில் மலர்ந்த முகம், சன் எனும் அழைப்பில் கூம்பிப் போனது.

“லெட்ஸ் டூ சம் சபார்ரிங் சன்(sparring—பலமாக தாக்கிக் கொள்ளாமல், சண்டை போடுவது).”

நாற்காலியில் இருந்து எழுந்தவள், இரு கைகளையும் சண்டைப் போடுவது போல முகத்துக்கு முன்னே நீட்டிக் கொண்டாள். அவள் தகப்பனும் அப்படியே நின்றார். முதலில் அவர் தாக்க, இவள் கையைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு தடுத்துக் கொண்டே வந்தவள், அவர் அசந்த நேரம் பார்த்து அவர் முகத்துக்கு ஒரு குத்து விட, மூக்கில் பட்டு ரத்தம் கொட்டியது அவள் தந்தைக்கு.

ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக் கொண்டவரின் முகமெல்லாம் மலர்ந்து விகசித்தது.

“ஐம் சோ ப்ரவுட் ஆப் யூ மை சன்!” என்றவர் அவளைக் கட்டிக் கொண்டார்.

இந்த மாதிரி அணைப்பு எல்லாம் அத்திப் பூத்தாற் போலத்தான் கிடைக்கும் இவளுக்கு. தன் தந்தையின் அருகாமை கொடுத்த இதத்தை ஆழந்து அனுபவித்தாள் அந்தக் குட்டிப் பெண்.

வீட்டுப் பாடங்களை முடித்து, படுக்க தனது அறைக்கு வந்தாள். கதவை சாற்றி பூட்டிவிட்டு, ஜன்னல்களையும் பூட்டிவிட்டு திரைச்சீலையை இழுத்து மூடினாள். போன முறை கராத்தே போட்டியில் தங்கம் வென்றிருக்க, அவள் தந்தை புத்தம் புதிய சம்சோங் கேலக்சி போன் ஒன்று வாங்கித் தந்திருந்தார். அவளுக்கு நண்பர்களா இருக்கிறார்கள் போன் செய்ய! அந்த போனை பாட்டு கேட்பதற்காக மட்டுமே பயன்படுத்துவாள்.

மெல்லிய சத்தத்தில் அவளது கனவு கண்ணன், பேவரேட் சிங்கர் ஜோனாவின் பாடல்களை ஒலிக்க விட்டாள். டீஷர்டை இடுப்புக்கு மேலே ஏற்றி ஒரு முடிச்சு போட்டு, வயிற்றை கொஞ்சம் காட்டியவள், பைஜாமா பேண்டையும் கொஞ்சம் கீழே இறக்கி விட்டாள். தந்தைக்குத் தெரியாமல் வாங்கி மறைத்து வைத்திருக்கும் செக்க சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டுக்கு தடவியவள், பவுடரை எடுத்து முகத்தில் அப்பிக் கொண்டாள். கட்டிலின் மேல் ஏறி நின்றவள், மெல்லிய குரலில் பாடிக் கொண்டே உடலை வளைத்து நெளித்து நளினத்துடன் ஜோனாவின் ஆங்கில பாடல்களுக்கு ஆட ஆரம்பித்தாள்.

ஜோனாவின் பாடல்கள் தான் அவளது இருட்டடித்த வாழ்க்கைக்கு ஒரு விடிவெள்ளி. அவனின் பாடல்கள் தான் நொந்து போன அவள் இதயத்துக்கு மருந்து. ஜோனாவைத்தான் தனது குட்டி இதயத்தில் பூட்டி பூஜித்து வந்தாள் சின்னவள். இது காதலில்லை, ஒருவரின் திறமையைப் பார்த்து ஏற்படும் விடலைப் பருவத்து பெண்ணின் ஈர்ப்பு!

அவள் வாழ்க்கை ஜோனா, பள்ளி, படிப்பு, உடற்பயிற்சி, தந்தை, மீனம்மா என எப்பொழுதும் போல போய் கொண்டிருந்தது. இதெல்லாம் ஆணாக வளர்ந்து வரப்பட்டவள் பூப்பெய்தி தான் பெண்தான் என நிரூபிக்கும் வரைதான்!!!!!

 

{மயங்குவா(ன்/ள்)}

 

இது ப்ரோலோக். அப்படி என்றால் முன்னுரை என அர்த்தப்படும். அதாவது இதில் சொல்லப்படும் விஷயம் கதை எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும். It will give us insight of the story. அடுத்த எபி 1 எப்பொழுது வரும் என தெரியாது..ஆனால் கண்டிப்பாக வந்துவிடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!